செவ்வாய், 2 மார்ச், 2010
தடாகத்தின் காலண்டர்.
நான் ஒரு புனிதமான காயத்தில் வசிக்கிறேன்
நான் கற்பனை மூதாதையர்களில் வசிக்கிறேன்
நான் ஒரு புலப்படாத ஆசியில் வசிக்கிறேன்
நான் ஒரு நீண்ட மௌனத்தில் வசிக்கிறேன்
நான் தீர்க்க முடியாத தாகத்தில் வசிக்கிறேன்
நான் ஓராயிர வருடப் பயணத்தில் வசிக்கிறேன்
நான் முந்நூறாண்டுப் போரில் வசிக்கிறேன்
மின் விளக்குக்கும் புல்புல் பறவைக்கும் இடையில்
கைவிடப்பட்ட இனத்தில் நான் வசிக்கிறேன்
நான் எவராலும் கையகப்படுத்தப்படாத வெளியில் வசிக்கிறேன்
ஒரு கருங்கல்லின் நாளத்தில் அல்ல;
ஆனால் எல்லா மசூதிகளையும் எரித்துச் சாம்பலாக்கும் முழுவேகத்தில்
ஓடும் எரிமலைக் குழம்பில் உயரும் அலைகளில்
நான் வசிக்கிறேன்
சொர்க்கத்தின் அபத்தமாகப் பழுதுபார்க்கப்பட்ட வடிவத்தின்
- நரகத்தைவிடப் படுமோசம் அது -
இந்த அவதாரத்தில் மிக நேர்த்தியாகப் பொருத்திக் கொள்கிறேன்
அவ்வப்போது நான்
என்னுடைய காயங்கள் ஒவ்வொன்றிலும் வசிக்கிறேன்
என்னுடைய இருப்பிடத்தை நான் மாற்றும் ஒவ்வொரு நிமிடமும்
ஏதோ அமைதி என்னை அச்சுறுத்துகிறது.
எனது நன்னீர் அகங்களை உறிஞ்சியெடுத்து
சிதறுண்ட உலகங்களின் புழுதியைத்தவிர
வேறு எதையும் மிச்சம் வைக்காத
அமில நெருப்புச் சுழலும் எரிமலையில்
எனது சொற்த் துண்டங்களுடனும் மர்ம உலோகங்களுடனும் வசிக்கிறேன்.
அப்படியாக
ஒரு விரிந்த சிந்தனையில் நான் வசிக்கிறேன்
எனினும் பெரும்பான்மையான தருணங்களில்
எனது கருத்துக்களில் சின்னதாகச் சுருங்கிப் போகிறேன்
அல்லது
தொடக்க வார்த்தைகள் மட்டும் துலங்க
மற்றவை மறக்கப்பட்ட
ஒரு மந்திர சூத்திரத்தில் வசிக்கிறேன்
நான் பனிக்குழைவில் வசிக்கிறேன்
நான் உருகும் பனியில் வசிக்கிறேன்
நான் பேரழிவின் முகத்தில் வசிக்கிறேன்
நான் பெரும்பான்மையான தருணங்களில்
பால்மடியின் தோல் விளிம்பில் வசிக்கிறேன்
நான் காக்டசீசின் ஒளிவட்டத்தில் வசிக்கிறேன்
பெரும்பாலும் யாரும் சீண்டாத ஆர்கோன் மரத்தின்
முலைக்காம்புகளை இழுக்கும் ஆடுகளின் மந்தையில்
நான் வசிக்கிறேன்.
உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன் -
நீண்ட காலமாக எனது முகவரி
உச்சியிலா அல்லது ஆழத்திலா
எனக்கே தெரியாது.
நான் ஆக்டோபஸ் துளையில் வசிக்கிறேன்
நான் ஆக்டோபஸ் துளையில் வசித்தபடி ஆக்டோபசுடன் போராடுகிறேன்.
சகோதரா,
ஒட்டுண்ணித் தாவரங்கள் போலவோ அல்லது
சுருண்டு திரளும் தாவரங்கள்போலவோ என்னைக் கிடத்தி விடு.
எந்த அலை புரட்டினாலும் எந்த வெயில் அறைந்தாலும்
எந்தக் காற்று மோதினாலும்
எனது வெறுமை வட்டத்துக்குள்ளிருக்கும் சிற்பத்துக்கு
எல்லாம் ஒன்றுதான்.
சூழலின் அழுத்தமோ அல்லது
வரலாற்றின் அழுத்தமோ எதுவாயினும்
அது என் சொற்களை மதிப்புள்ளதாக்குகிறது,
எனது நிலையை அளவிட முடியாததாக்குகிறது.
@
அய்மே செஸய்ர்
சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு
அய்மே செஸய்ர் 2008 ஏப்ரல் மாதம் காலமானார். என்னைப் புதுப்பித்துக்கொள்ளும் நோக்கத்துடன் அவ்வப்போது நான் வாசிக்கும் கவிஞர்களில் ஒருவரல்ல செஸய்ர். எனினும் அவரது பெயரும் ஓரிரு கவிதை வரிகளும் நிரந்தர கவனத்தில் இருப்பவை. மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தாம் செஸய்ரின் பெயரைக் குறிப்பிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த அலெய்ன் மபான்கு என்ற பிரெஞ்சுக் கவிஞரிடம் விசாரித்திருந்தேன். அலெய்னுடனான சந்திப்புக்குபிரெஞ்சுக் கலாச்சாரமையமான அலியான்ஸ் பிரான்சேயின் திருவனந்தபுரம் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. அலெய்ன் பிரெஞ்சுக் காலனியாக இருந்த காங்கோவைச் சேர்ந்தவர். அவரது தாய்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லையென்பதால் பிரெஞ்சு மொழியில் எழுதுபவர்.
செஸய்ர் பற்றிக் குறிப்பிட்டபோது அலெய்ன் இரண்டு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அவை செஸய்ர் பற்றிய புதிய தலைமுறைக் கவிஞர்களின் பொதுக் கருத்தாக இருக்கக் கூடுமென்று தோன்றியது. செஸய்ரிடமிருந்து புதியகவிஞர்கள் விலகும் புள்ளியாகவும் தோன்றியது. அவர் சொன்னார். '' செஸய்ர் எங்களுடைய முன்னோடிகளில் ஒருவர். அவருக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமை இரண்டு பேரும் பிரெஞ்சு மொழியில் எழுதுகிறோம்.வேற்றுமை - அவர் தன்னை இன்னும் நீக்ரோவியக் கவிஞனாகக் கருதுகிறார். நான் என்னைப் பிரெஞ்சுக் கவிஞனாகவே நினைக்கிறேன். இதிலிருக்கும் அரசியல் இயல்பை நீங்கள் புரிந்து கொள்ள முடியுமென்று நம்புகிறேன். செஸய்ரின் தலைமுறை தங்களை தனிப்பட்ட தேசிய இனமாகக் கருதியது.நாங்கள் பிரெஞ்சு இலக்கிய மரபின் புதிய கிளையாகக் கருதுகிறோம்.அந்தத் தலைமு¨றையின் அடையாளம் நீக்ரோவியம். எங்கள் அடையாளம் பிரெஞ்சுப் பொதுமரபைச் சார்ந்தது. பொது மரபுக்குள் நீக்ரோவியமும் நிலைபெற்றிருக்கும் போக்கு எங்களுடையது''.
அலெய்ன் எளிமையாகச் சொன்னாலும் ஓர் பூர்வகுடி மரபு பொதுமரபாக ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய சூழல் உருவாவதற்கான போராட்டம் பற்றி ஓரளவு ஊகிக்க முடிந்தது. அதில் அய்மே செஸய்ரின் பங்கு கணிசம் என்பதையும் காண முடிந்தது.அதை உறுதிப் படுத்துகிற வகையில் பிரான்ஸ் ஃபானனின் மேற்கோள் ஒன்றையும் பொருத்தமாகக் குறிப்பிட்டார் அலெய்ன். ''செஸ்ய்ருக்கு முன்பு மேற்கிந்திய இலக்கியம் ஐரோப்பிய இலக்கியமாக இருந்தது''.
@
கரீபியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மார்ட்டினிக்கில் பிறந்தார் அய்மே செஸய்ர் (1913). தந்தை அரசு ஊழியர். தாய் தையல் தொழிலாளி. செஸய்ரின் இளமைப் பருவம் கொடும் தரித்திரத்தில் கழிந்தது.பதினெட்டாவது வயதில் கல்விக்கான உதவித் தொகை பெற்று பாரீசுக்கு வந்தார். செனகல் நாட்டிலிருந்து வந்த லியோபால்ட் செதோர் செங்கோர், பிரெஞ்சு கயானாவிலிருந்து வந்த லியான் தமாஸ் இருவரும் நண்பர்களானார்கள். மூன்று நண்பர்களும் இணைந்து ஓர் இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கினார்கள்.'கறுப்பு மாணவன்' என்று பெயர். அந்தப் பெயர் அவர்களின் சொந்த அடையாளமாகவும் எதிர்ப்பின்
சின்னமாகவும் இருந்தது. பத்திரிகையின் மூன்றாம் இதழில் அய்மே செஸய்ர் 'நீக்ரோவியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.கறுப்பின மக்களின் இலக்கிய பண்பாட்டுப் பிரகடனமாக இருந்தது அது. பிரெஞ்சுக் காலனியாதிக்கத்துக்கும் அதன் பண்பாட்டுச் சுரண்டலுக்கும் எதிரான போக்காகவும் இருந்தது.அதன் வீச்சு பரவலாகி கருப்பினத்தவரான பல இலக்கியவாதிகளையும் ஒருங்கிணைத்தது. ஏற்கனவே கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றிருந்த செங்கோரின் படைப்புகள் புதிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்பட்டன. அமெரிக்க நீக்ரோக் கவிஞர்களான லாங்ஸ்டன் ஹியூஸ், ரிச்சார்ட் ரைட் ஆகியோரின் கவிதைகளும் நீக்ரோவியத்துக்கு வலுச் சேர்த்தன. ஃபிரான்ஸ் ஃபானனின் சிந்தனைகள் அதற்கு ஒரு கருத்தியல் தளத்தை உருவாக்கின.
செஸய்ரின் 'தாய்நாடு திரும்புதலின் குறிப்புகள்' என்ற நெடுங்கவிதை உலகக் கவிதைச் சூழலில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. தனது கரீபிய அனுபவங்களையேஅந்தக் கவிதையில் செஸய்ர் பேசியிருந்தார். ஒரு கறுப்புப் பெருமிதமும் சரியலிசக் கவிதை மொழியும் இழைந்து உருவானது அந்தப் படைப்பு. அன்று பிரான்சில் செல்வாக்குச் செலுத்திய சரியலிசப் போக்கை செஸய்ர் தன்னுடைய பிரத்தியேகக் கண்ணோட்டத்தில் பயன்படுத்தியிருந்தார். அதற்கு அவருக்குத் தூண்டுதலாக இருந்தவர் சர் ரியலிசத்தின் முன்னோடியாகக் கருதப்பட்ட அந்திரே பிரதான்.'இந்த காலகட்டத்தின் ஆகச் சிறந்த தன்னுணர்வுக் கவிதை'என்று பாராட்டவும் செய்தார்.
செசய்ரின் கவிதையில் இடம்பெறும் சர்ரியலிசக் கூறுகளைக் குறித்து பெரும் விவாதங்கள் நடந்திருக்கின்றன. நண்பரான செங்கோர் கடும் கண்டனங்களை எழுப்பினார். பூர்வகுடிகளின் வாழ்க்கை உணர்ச்சிகரமானது, அதை அலசல் முரையில் முன்வைப்பதை விட உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துவதுதான் பொருத்தம் என்பது செங்கோரின் வாதம். கறுப்பனின் பண்பாட்டுச் சாரத்தைக் கண்டு [பிடிக்க வெள்ளையனின் உத்திகளைப் பயன்படுத்துவது அபத்தம் என்றும் கூறப்பட்டது. சர் ரியலிசம் என்ற ஐரோப்பியக் கவிதை இயக்கத்தை ஒரு கருப்பர் திருடி அதற்கு எதிராகப் பயன்படுத்தினார்' என்று குறிப்பிட்டார் சார்த்தர் .ஆனால்
இந்த வாதங்களை முறியடித்து காத்திரமான ஓர் இலக்கிய பண்பாட்டுப் போக்காக நீக்ரோவியம் நிலைபெற்றது.
வெள்ளை நிறத்தவரின் இலக்கியப் பண்பாட்டுச் செயல்பாடுகளே சிலாகிக்கத்தகுந்தவை என்ற கருத்து நிலவிய சூழலில் ஆப்பிரிக்க கறுப்பினத்தின் பண்பாட்டுக் கூறுகளை முன்னிருத்தினார் செஸய்ர். ஆப்பிரிக்க இனம், அதன் கிளைக்கள் ஆகியவற்றின் படைப்பாற்றலை உலகின் முன் வைத்ததில் செஸய்ர் முதன்மையான பங்காற்றினார். ஆனால் அவரது கவிதைகள் சொந்த இனமான கரீபிய இனத்தின் அடையாளங்களையே பெரிதும் கொண்டிருந்தன. குறிப்பாக அவர் பிறந்து வளர்ந்த மார்டினிக் பிரதேசம் அவரது கவிதைகளின் தீராப் பொருளாக இருந்தது. ஓர் இனத்தின் அடிமைத் துயர், எதிர்ப்பு, போராட்டம், விடுதலைக் கனவு, உயிரினங்கள் என்று பலவும் அவரது கவிதை இயலை நிர்ணயித்தன.
@
கவிஞன் என்பதோடு அரசியல் செயல்பாட்டாளராகவும் இருந்தார் செஸய்ர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு மார்டினிக் பிரதேசத்தின் பிரதிநிதியாக தேசிய அவையில் இடம் பெற்றார். இரண்டாம் உலகப் போரையொட்டிய காலத்தைச் சேர்ந்த எல்லா அறிவுஜீவிகளையும்போல அவரும் சோவியத் யூனியன் மீது காதல் கொண்டிருந்தார். மானுட முன்னேற்றத்தின் இலட்சிய பூமியாக அதைக் கண்டிருந்தார்.
1956 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஹங்கேரியை ஆக்கிரமித்தது. செஸய்ரின் கனவு சிதைந்தது. கட்சியிலிருந்து வெளியேறினார். எனினும் அவரது அரசியல் ஈடுபாடு குறையவில்லை. செயலாற்றலும் குன்றவில்லை. தன்னுடைய கட்சியை உருவாக்கினார், இடதுசாரிக் கண்ணோட்டமுள்ள செயல்பாட்டாளராகத் தொடர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அய்மே செஸய்ர் ஐரோப்பிய ஊடகங்களில் அதிகம் குறிப்பிடப்பட்ட நபராக இருந்தார். பிரான்சின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் படும் சாத்தியங் களுடனிருந்த நிக்கொலஸ் சர்கோசியை சந்திக்க மறுத்தார் என்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இருந்தது..காலனியாதிக்க நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளில் - குறிப்பாக வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிரெஞ்சுக்காரர்கள் அந்த நாட்டு மக்களுக்கு 'நல்ல விதமாக' சேவை செய்தார்கள் என்று பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்யும்படிக் கேட்கும் ஆணைக்கு ஆதரவளித்திருந்தார் சர்கோசி. இந்தத் திருத்தல்வாதத்தை தீவிரமாக எதிர்த்த செஸய்ர்
சர்கோசியைச் சந்திக்க மறுத்தார். அப்போதைய பிரான்சு அதிபர் ழாக்கோ ஷிராக் அந்த ஆணையைத் திரும்பப் பெற்றார்.
கடந்த ஏப்ரல் பதினேழாம் தேதி இதய நோய் முற்றிய நிலையில் அய்மே செஸய்ர் காலமானார். அரசு மரியாதைகளுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.அப்போது கூடியிருந்தவர்களிடையே பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும் இருந்தார். ஆனால் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவர் பேசவில்லை.செஸய்ரின் கீழ் நீண்ட காலம் துணை மேயராக இருந்த பியர் அலிகெர் உரையாற்றினார்.
@
அய்மே செஸ்ய்ரின் பெரும்பான்மையான கவிதைகளில் அவரது சொந்த மண்ணான மார்டினிக்கின் நிலக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 'சொர்க்கத்துக்கு இணையானது எங்களுடைய நிலம்' என்று அவர் குறிப்பிட்டுமிருக்கிறார். அதிலுள்ள பெலே எரிமலையைப் பல கவிதைகளிலும் விவரித்திருக்கிறார்.தானும் அந்த எரிமலையும் ஒன்று என்றும் ஒப்பிட்டிருக்கிறார்:
'சாதுவானது பெலெ. நானும் அப்படித்தான்.
அதற்குள் வெம்மையான எரிமலைக் குழம்பு
எனக்குள்ளே வார்த்தைகள்.'
@
துணை நூல்கள்:
1.The Vintage Book Of Contemporary Poetry - Ed. J D Mc Clatchy Vintage Books 1996
2. Aime Cesaire The Collected Poetry - University of California Press 1983
வார்த்தை இதழில் வெளியானது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)