@
இரண்டு
@
ஹெத்தே மனையின் பரம்பரைப் பூசாரி மாதாகவுடர் சொல்லத் தொடங்கினார் ''இது நம்ம கதெ. நம்ம வம்சம் வளர்ந்த கதெ. தெய்வம் நம்ம ஜனங்களெக் காப்பாத்துன கதெ''
@
மைசூரு ராஜ்ஜியம் தலைமலையில் படகஹள்ளியில் அவர்கள் ஏழு பேர் இருந்தார்கள். அந்தக் காலத்தில் மைசூரு ராஜ்ஜியத்தை எருமை நாடு என்று அழைத்து வந்தார்கள். ஏழு பேருக்கும் ஒரே பெயர்தான் இருந்தது. ஹெத்தப்பா. ஏழு ஹெத்தப்பரும் ஒரே தாயின் கர்ப்ப இருட்டில் குடியிருந்து பூமியின் வெளிச்சத்துக்கு வந்தவர்கள்.கர்ப்பவாசனை அவர்களை ஒன்றாகவே வசிக்க வைத்தது. ஏழு பேரும் தாயின் ஒரே முலைச்சுரப்பில் பசியாறி வளர்ந்தார்கள்.
அவர்களின் உதடுபடாத இன்னொரு முலையைப் பருக தாய்க்கு ஒரு பெண்மாது பிறந்தாள். அவளுக்கு ஏலிங்கி என்று சந்தோஷப் பெயர் விளங்கியது. அவள் மீதும் அதே கர்ப்ப வாசனை வீசியதனால் மாளாத பாசம் வைத்திருந்தார்கள். ஏழு சகோதரர்களுக்கும் கலியாணமாகியிருந்தது. ஆறாவது சகோதரனை மட்டும் காலம் வஞ்சனை செய்திருந்தது. அவனுடைய மனைவி இறந்து போயிருந்தாள்.
ஏழு சகோதரர்களும் ஆறு மனைவிமார்களும் கிருபையுள்ளவர்களாக இருந்தார்கள். வனங்களை செம்மைப் படுத்தி வருடம் முழுவதற்கும் தின்பதற்கான ஆகார வகைகளுக்காக தானியங்களை விதைத்தார்கள். வித்துக்களுடன் அவர்களுடைய வியர்வையும் மண்ணில் விழுந்திருந்தது. அது மண்ணை இளகச் செய்தது.அதனால் பயிர்கள் செழித்து வளர்ந்தன. அவர்களுடைய வாத்சல்யத்தை பார்த்துப் பூரித்து மரங்களும் செடிகளும் காய்களாகவும் கனிகளாகவும் அன்பைக் கொடுத்தன. ஏழு பேரும் ஆறு மனைவியரும் பாடுபட்டு விளைத்த தானியத்தை அளப்பதற்கு பொதுவான ராசிக் கூடையைத்தான் வைத்திருந்தார்கள்.
ஏழு பேர் பிரசாதம் உண்ணுவதற்கும் ஒரே ஒரு சத்து வட்டிலைத்தான் வைத்திருந்தார்கள்.
ஏழு பேரின் சகோதரியை தெய்வம் தன்னுடைய மிக அதிகமான சந்தோஷ முகூர்த்தத்தில் ஜனிக்கச் செய்திருந்தது. அவளுடைய தேகத்தில் பச்சிலைத்தளிர்களின் மிருது இருந்தது. மண்ணிலிருந்து பெருகிய ஊற்றின் முதல் தேக்கத்தில் சிலுசிலுக்கும் ஜலத்தில் பௌர்ணமி ராத்திரியில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பம்போல அவளுடைய முகம் இருந்தது. அவளுடைய கூந்தல் மழைக்கால மேகம்போல கருமையாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. அவளுடைய நிழலும் பிரகாசம் கொண்டதாக இருந்தது. வம்சத்திலேயே அதிரூப சுந்தரி அவள்தானென்று எல்லாரும் சம்மதித்திருந்தார்கள். அதனாலேயே ஏழு சகோதரர்களும் அவளைப் பிரியத்துடன் பாதுகாத்து வளர்த்தார்கள். மையெழுதும் கோல் தவறுதலாகப் பட்டு அவளுடைய கண்கள் கலங்கினால் கூட ஏழு சகோதர்களும் தின்னாமலும் குடிக்காமலும் அவளைச் சுற்றி நின்று பதறுவார்கள். அந்த மாதியான சந்தர்ப்பங்களிலெல்லாம் சகோதரிக்கு வேடிக்கையாகச் சிரிக்கத் தோன்றும்.அண்ணன்மார்களின் பாசம்தான் அதற்குக் காரணமென்று அறிந்து வைத்திருந்தாள். அதனால் சிரித்ததில்லை. சிரிப்பும் மனுஷரை சங்கடப்படுத்த ஏதுவானது என்றும் அவள் அறிந்து வைத்திருந்தாள்.
ஒரு அந்திப் பொழுதில் துர் நிமித்தம் சம்பவிக்கும் வரையிலும் அவர்களுடைய எல்லா நாட்களும் சுப தினங்களாகவே போய்க்கொண்டிருந்தன. ஏழு பேரின் சகோதரி நியமம்போல அன்றைக்கு மாலை பசுக்களைக் கறக்கப் போகாமலிருந்திருந்தால் அந்த சுப தினங்கள் இருள் மூடாமல் இருந்திருக்கும்.அப்படி இருந்தால் அதன் பெயர் ஜீவிதமா? துயரங்களோ கஷ்டங்களோ இல்லாமற் போனால் ஜீவிதத்தை நடத்தி வைப்பது தெய்வம் என்றாகாதே?
தொழுவத்தில் கட்டிப் போட்டிருந்த பசுக்கள் அவள் முற்றத்திலிறங்கியதும் கத்தத் தொடங்கின. மடியின் கனம் அந்தக் கத்தலில் புரிந்தது. கன்றுகளும் பால்குடித் தவிப்பில் 'ம்மா ' என்று கத்தின. சகோதரி ஆதுரமான குரலில் 'பர்த்தினு பர்த்தினு' என்று சொல்லிகொண்டே தொழுவத்தை நெருங்கினாள். முதல் முளையில் கட்டியிருந்த பசு உடம்பை வளைத்து அவளைப் பார்த்தது. வாலை ஒருமுறை சுழற்றி வீசி தலையைக் குலுக்கி தயாராக இருப்பதைத் தெரிவித்தது. சகோதரி மண்கலத்தை இடுப்பில் இடுக்கியபடி மூக்கு விடைக்கத் துள்ளிக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டாள்.அது 'ம்மா 'என்று தாவி தாய்ப்பசுவிடம் ஓடியது. அகிட்டில் முட்டி இழுத்து பால் குடிக்கத் தொடங்கியது. கன்று தாயின் மடிக்காம்புகளை உறிஞ்சுவதை கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சகோதரி. வயிறு நிரம்பியதும் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு நின்றது. சகோதரி குத்தவைத்து உட்கார்ந்து பால்கறக்க ஆயத்தமானாள். அந்த நேரம் பார்த்துக் கன்று முதுகை நெளித்து ஓடத் தொடங்கியது. பால் கறக்க உட்கார்ந்த சகோதரி கலத்தைக் கீழே வைத்துவிட்டு கன்றைப் பிடித்துக் கட்டக் கயிற்றைத் தேடி எழுந்தாள். அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டிருப்பது ஞாபகம் வந்தது. கயிற்றை அவிழ்த்தெடுக்க மரத்தடியை நோக்கிப் போவதற்குள் கன்று கைக்கெட்டாத தூரத்தில் நின்று துள்ளிகொண்டிருந்தது. ''ஆட்டா மாடுதியா காரு ?'' என்று செல்லமாகக் கேட்டுக்கொண்டு கூந்தலை உலுக்கினாள். மழைமேகம்போல கருநிறமும் சுருட்டை இல்லாத நீளமும் பளபளப்புமாக இருந்த அவளுடைய
கூந்தல் காற்றில் பறந்தது. மயிரிழைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து புரிகளாயின. புரிகள் ஒன்று சேர்ந்து கயிறாயின. அந்தக் கூந்தல் கயிறு கறுப்பு மின்னல்போல அந்தரத்தில் ஊர்ந்துபோய் கன்றின் கழுத்தில் சுற்றிக்கொண்டது. கன்று துள்ளலடங்கி நின்றது. சகோதரி தலையை அசைத்து கயிறை இழுத்தாள். அதில் இழுபட்டு கன்று அவளருகில் வந்தது. '' ஓடுதியா '' என்று கேட்டுக்கொண்டு அதன் கழுத்தை வருடிக் கொடுத்தாள்.மனைக்குள்ளிருந்து வாசலுக்கு வந்த மூத்த ஹெத்தப்பா இந்தக் காட்சியைப் பார்த்து அதிசயப்பட்டு நின்றார். ''அண்ணா, அந்தப் பசுவைக் கறந்து விடு. நான் இதைக் கட்டி ப்போடட்டும்'' என்றாள்
சகோதரி. சகோதரர் கலத்தை எடுத்து பசுவின் காலடியில் குந்தினார். சொற்ப நிமிஷங்களுக்கு முன்பு பார்த்த காட்சி அவரை வாயடைக்கப் பன்ணியிருந்தது.அதிசயமான அந்தக் காட்சி என்னவோ அபாயத்தையும் கொண்டுவரப் போகிறது என்று அவருக்குப் பட்டது.அவருடைய ஊகம் பொய்யானதல்ல.
இந்த அதிசய சம்பவத்தை தூரத்திலிருந்து இன்னொரு பிறவியும் பார்த்துக் கொண்டிருந்தது.
மாறுவேடத்தில் வனத்துக்குள்ளே குதியையில் சவாரி செய்துகொண்டிருந்த துருக்க ராஜாவின் கண்ணில் காட்சி விழுந்தது. அவர் வாயை பிளந்து இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவர் பார்க்கிறபோது கருங்கூந்தல் காற்றில் நெளிந்து கன்றின் கழுத்தில் விழுந்து கட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கூந்தல் புறப்பட்ட சிரசு மட்டுமே அவருடைய பார்வைக்குத் தெரிந்தது. திரும்பி நிற்கிற அந்த சிரசுக்குரியவள் எப்படி இருப்பாள் என்று யோசனை செய்தார். மழைத்தாரைபோல சுருளே இல்லாத கூந்தலின் உடைமைக்காரி ரூபவதியாகத்தான் இருக்கவேண்டுமென்று அவர் மனம் சொன்னது. அவளானால் தான் நிற்கும் திசைப் பக்கம் திரும்பாமலிருக்கிறாளே என்று உள்ளுக்குள் சிணுங்கிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் 'ஸ்த்ரீயே , முகங்காட்டு' என்று பிரார்த்தனைபோல முணுமுணுத்துக் கொண்டிருந்தன. விநாடிகள் விரயமாகிக் கொண்டிருந்தன. அவள் திரும்பவில்லை. முதுகைக் காட்டியபடியே
கன்றுக்குட்டியை இழுத்துப் போவதையும் அதை மரத்தில் கட்டுவதையும் தவிப்புடன் பார்த்தார். அவருடைய தத்தளிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தபோது அவருடைய வலது பாதம் ஆத்திரத்துடன் குதிரையின் விலாவில் மோதியது. குதிரை உடல் சிலிர்த்து முன்னங்கால்களைத் தூக்கி 'பிஹிஹீ..ஹீ' என்று கனைத்ததும் அவள் திரும்பியதும் ஒரே விநாடியில் சம்பவித்தன. துருக்க ராஜாவின் கண்கள் தெறித்து விழுந்து விடுவதுபோல அகன்றன. அவரால் நம்பமுடியவில்லை. கானகக் கிராமத்துக்குள்ளே இப்படி ஒரு சவுந்தரியவதியா என்று திகைத்தார். அவளுடைய தேகத்திலிருந்து வீசிய ஜோதி அவருடைய
விழிகளை இருட்டாக்கியது. 'இறைவனே, இது என்ன அற்புதம். யாரும் காணாமல் பூத்திருக்கும் காட்டு ரோஜாவுக்குத் துல்லியமானதாக இருக்கிறதே இவள்
அழகு ' என்று பரிதவித்தார். அவருடைய நாடிகளில் ரத்தம் வேட்கையுடன் ஓடியது. மோக ஜுரம்கொண்டு தேகம் நடுங்கியது.
குதிரையை முடுக்கி அவள் இருக்கும் முற்றத்தில் போய் நிறுத்தினார். ஏழு பேரின் சகோதரி அன்னிய புருஷனைப் பார்த்து வெலவெலப்புடன் ''அண்ணா''என்று உரக்கக் கத்தினாள். பசுவைக் கறந்து கொண்டிருந்த மூத்தவர் திரும்பிப் பார்த்ததும் பயந்தார். பால் கலத்தை தரையில் வைத்து விட்டு உடம்பை வளைத்து முன்னால் வந்தார். துருக்கராஜா தங்கள் மனையின் முன்னால் நிற்பது ஏனென்று கலங்கிக் கொண்டிருந்தார். ''தாயி, நீனு ஒளகே ஹோகு '' என்று சகோதரியிடம் சொன்னார். அவள் ஒரு நொடி நின்று மலங்க விழித்தாள். குதிரை மேல் உட்கார்ந்திருக்கும் புருஷனைப் பார்த்தாள். அந்த உடையலங்காரமும்
தோரணையும் அவளுக்குச் சிரிப்பூட்டின. சிரிப்பை அடக்கிக்கொண்டு வீட்டுக்குள்ளே போகலானாள். அவளுடைய தேகம் ஒசிந்து நகருவதைப் பார்த்தும் துருக்க ராஜாவின் மனதுக்குள் அக்கினி மூண்டது. மூத்தவரைப் பார்த்து துருக்க பாஷையில் '' இது யார்? நீங்கள் யார்?'' என்று கேட்டார்.
அவர் பேசிய பாஷையின் அர்த்தம் புரியாமல் பயத்துடன் '' என்ன ஹெசரு ஹெத்தப்பா'' என்றார். துருக்கராஜாவுக்கும் மூத்தவர் சொன்னது புரியவில்லை.மறுபடியும் துருக்க பாஷையில் என்னமோ கேட்டார். அதற்குள் வீட்டுக்குள்ளே போன சகோதரி சொன்னதைக் கேட்டு மற்ற சகோதரர்களும் அங்கே வந்தார்கள். நடப்பது என்னவென்று விளங்காமல் அவர்களும் நின்று விழித்தார்கள். ராஜாவுக்கு இவர்களிடம் என்ன சொல்லிப் புரியவைப்பது என்ற தர்மசங்கடம் வந்தது.சகோதரர்களுக்கும் ராஜா சொல்வது என்னவென்று புரியாமல் தடுமாற்றமாக இருந்தது. அதே சமயம் ராஜாவின் அங்க ரட்சகன் இன்னொரு குதிரையில்
அங்கே வந்து சேர்ந்தான்.ராஜா அவனிடம் அவர்கள் பாஷையில் உத்தரவிட்டார். அவன் வாய்பொத்திக் கேட்டிருந்து விட்டு சகோதரர்களைப் பார்த்து ''இதி நிம்ம ஹட்டியா?'' என்றான்.சகோதரர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களுடைய பாஷையை பிறத்தியான் ஒருவன் பேசுவதைக் கேட்க சந்தோஷமாகவும் இருந்தது. மூத்தவர் ''ஹா, இது நம்ம ஹட்டி'' என்று பதில் சொன்னார். ''ஈ ஹெண்ணு எவரு?'' என்று கேட்டான். '' நம்ம தங்கெ'' என்றார் .
அங்கரட்சகன் மறுபடியும் வாயைப் பொத்திக்கொண்டு ராஜாவிடம் பேசினான். ராஜா உத்தரவுபோடும் தோரணையில் அவனிடம் சில விநாடிகள் பேசினார்.''ஹாங் ஹுசூர் ,ஹாங் ஹுசூர் '' என்று மட்டுமே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் சகோதரர்கள் பக்கமாகத் திரும்பினான். அவன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். ஏழு பேரின் கண்களிலிருந்தும் நீர் வழிந்தது.ஏழுபேரும் ஒரே சமயத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து மன்றாடினார்கள். அவர்கள் கெஞ்சுவதைப் பொருட்படுத்தாமல் துருக்கராஜா அங்கரட்சகனிடம் முத்தாய்ப்பாக எதையோ சொல்லிவிட்டு குதிரையின்
விலாவில் உதைத்தார். ஹூங்காரம் எழுப்பிக்கொண்டு குதிரை வேகமாகப் பாய்ந்தது. அது கிளறி விட்ட புழுதிப்படலம் அந்திச் சூரியனின் கதிர்கள் பட்டு தரையில் மேகமாகப் புரண்டது. மரக்கிளைகளிலிருந்து சில கரியன் சிட்டாக்களும் காக்கைகளும் படபடத்துப் பறந்தன. அந்த சத்தத்தில் வெருண்ட பசுக்கள் கனைத்துக் கத்தின. குதிரை மேல் உட்கார்ந்த படியே '' சொன்னதை மறக்க வேண்டாம். மறந்தால் உயிர் பிழைக்க மாட்டீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தான். அவனுடைய குதிரையும் புழுதி மேகத்தை உண்டு பண்ணிக்கொண்டு ஓடியது.
துருக்க ராஜாவுக்கு ஏழுபேரின் சகோதரியைக் கண்டதும் இஷ்டமாகி விட்டது. அவளை விவாகம் செய்துகொள்ள விரும்புகிறார். அதுவும் உடனடியாகச் செய்து கொள்ள விரும்புகிறார். அதனால் நாளை பொழுது விடிந்ததும் சகோதரியை ஸ்நானம் செய்வித்து அலங்காரம் பண்ணி தயாராக வைக்கவேண்டும். ராஜாவின் சிப்பாய்கள் வந்து அவளை அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்கள். ராஜா அவளை ரோஜாப் பூவைப் போலப் பார்த்துக் கொள்ளுவார். தவிரவும் இவ்வளவு சுந்தராங்கியான பெண் ராஜாவைத் தவிர வேறு யாருக்குச் சொந்தமாக முடியும்? இது ராஜாவின் உத்தரவு. அதில் பிசகினால் உங்கள் வம்சமே
இல்லாமல் போய்விடும்.ஜாக்கிரதை.
இதுதான் அங்கரட்சகன் மூலமாகத் துருக்க ராஜா அவர்களிடம் தெரிவித்தது. கலக்கமடைந்த ஏழு சகோதரர்களும் ஆறு மனைவியரும் கூடியிருந்துஆலோசனை செய்தார்கள். ராஜாவின் இச்சை அநியாயமானதாக இருக்கிறதே?என்ன செய்வது? இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது? என்று யோசித்தார்கள். லிங்கத்தை ஆராதனை செய்யும் நாம் எப்படி துருக்க ராஜாவுக்கு நமது பெண்ணைக் கொடுப்பது? அது தெய்வ நிந்தனையாகுமே? என்று புலம்பினார்கள்.
தின்னாமலும் குடிக்காமலும் இப்படி உட்கார்ந்து யோசிப்பதில் பிரயோஜமில்லை என்றார் மூத்தவர். ராஜாவின் தண்டனையிலிருந்து தப்ப ஒரே ஒரு மார்க்கம்தான் அவர்கள் முன்னால் இருந்தது.குலத்துக்கு அழிவு வராத படிக் காப்பாற்ற வேண்டுமென்றால் இதைத் தவிர வேறு உபாயம் அவர்களுக்குப் புலப்படவில்லை.முடிவாக அன்றைக்கு ராத்திரியே நடு இருளில் புறப்பட்டு சோலைக்குள் புகுந்து ராஜாவின் கன்ணுக்கோ சேனையின் கண்ணுக்கோ எட்டாத தூரம் போய் விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஒரே கர்ப்பத்தின் கவிச்சையைப் பங்குபோட்டுக்கொண்டவர்கள் என்பதனால் அவர்களுக்கு மத்தியில் வேறே யோசனை இருக்கவில்லை.
வழக்கமாக நெருப்பு அணைந்து குளிரத் தொடங்குகிற அகாலத்தில் அவர்கள் வீட்டு அடுப்பு எரியத் தொடங்கியது. பெண்கள் மூன்று வேளைக்கு உண்பதற்கான கட்டுச் சாதத்தை சமைத்தார்கள். வன சஞ்சாரத்தில் அது தீர்ந்துபோனால் காய்கனிகளைத் தின்று ஜீவிக்கலாம் என்று மூத்தவர் சொன்னதை எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள்.அன்றைய இரவு நடு ஜாமத்திலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். புறப்படுகையில் குல தெய்வமான லிங்கத்தையும் ராசிக் கூடையையும் விசேஷ நாளில் பிரசாதம் உன்ணும் சத்து வட்டிலையும் மறக்காமல் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் வீட்டை விட்டிறங்கும்போது தொழுவத்தில் கட்டியிருந்த பசுக்களும் எருமைகளும் தீனமாகக் கதறின. அவற்றின் கன்றுகள் காதுகளை அசைக்க மறந்து ஏக்கத்துடன் பார்த்தன. சகோதரி ஓடிப்போய் அவை ஒவ்வொன்றின் கழுத்தையும் வருடிக் கொடுத்து விட்டு வந்தாள். அவளுடைய காலடிச் சத்தம் கேட்டு மரக் கூடுகளில் நித்திரை செய்து கொண்டிருந்த பட்சிகள் வெருண்டு விழித்து கீச்சிட்டன. அந்த வாசலில் தேங்கி நின்ற துக்கத்தைப் பார்க்கச் சகிக்காமல் நிலா மேகங்களுக்குப் பின்னால்
விலகியது.
அந்த துக்கத்தைத் தாள முடியாமலும் யாராவது அறிந்து விடுவார்கள் என்ற காப்ராவாலும் அவர்கள் காட்டு வழியில் ஒருவர் பின் ஒருவராக சத்தமின்றி நடந்தார்கள். சோலைகளுக்குள்ளாகவும் வனங்களைத் தாண்டியும் சுமார் நூறு மைல் நடந்த பிறகு எல்லாரும் களைப்படைந்து விட்டார்கள். செடிகளின் மறைவில் இளைப்பாற உட்கார்ந்தார்கள். கண்ணுக்கெட்டாத தூரம் வந்து விட்டோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது. ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் கவனப்பிசகாகச் செய்திருந்த புத்திகெட்ட காரியம் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தது. புறப்படுகிற அவசரத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு வந்திருந்தது உறைத்தது. குழந்தையின் தாய் அலற அவளுடன் சேர்ந்து பெண்கள் எல்லாரும் துக்கித்து அழுது புலம்பினார்கள்.
ஆண்கள் கலந்து யோசித்தார்கள். திரும்பப்போய் எடுத்துவரப் பார்த்தாலும் விடியற்காலை ஆகிவிடும். யாராவது கண்டுவிட்டால் அதுவும் ஆபத்து.வேறு வழியில்லை. நாமெல்லாருமே இன்றைக்கோ நாளைக்கோ காட்டுக்குள் விழுந்து மடியப் போகிறோம். அந்தச் சிறுபெண்ணாவது பிழைக்கட்டும். பொழுது விடிந்தால் எப்படியும் வீடு காலியாக இருப்பதை யாராவது பார்ப்பார்கள்.பக்கத்தில் வந்து பார்த்து குழந்தையை எடுப்பார்கள். கொண்டுபோய்
வளர்ப்பார்கள். இனி அந்தப் பெண் மாதை மறந்து விடுவோம் என்று தேற்றிக்கொண்டார்கள். மறந்து விடுவோம் என்று தீர்மானித்ததுபோலவே வேறு ஒரு முடிவையும் செய்தார்கள். இனி வம்சத்தில் பிறக்கிற எந்தக் குழந்தையையும் தொட்டிலில் கிடத்துவதில்லை என்பது அந்த முடிவு.
அப்படியாக அவர்கள் மூன்று இரவும் மூன்று பகலும் நடந்து வெகுதூரம் வந்திருந்தார்கள்.
இதற்கிடையில் துருக்க ராஜா தான் இச்சைப்பட்ட பெண்ணை அழைத்து வரும்படி சிப்பாய்களையும் பிரதானிகளையும் அனுப்பி வைத்தார். அவர்கள் ஹள்ளியில் வந்து பார்க்கும்போது வீடுகள் மூடிக்கிடந்தன. பாழ் வீடாகக் கிடக்கிறது என்று அவர்கள் வந்து சொன்ன சேதி ராஜாவை ஆத்திரமடையச் செய்தது.'அவர்கள் எங்கே இருந்தாலும் தேடிப்பிடித்து என் முன்னால் கொண்டுவரவேண்டும்' என்று கட்டளையிட்டார். சிப்பாய்கள் நாலாப் பக்கமும் அவர்களைத் தேடி அலைந்தார்கள். மலைப் பிரதேசத்தின் வடக்கே மோயார் ஆற்றின் அக்கரையில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருப்பது சிப்பாய்களின் கண்களில் பட்டது. கண்டுபிடித்து விட்டோம் என்ற ஆனந்தத்துடன் அதி வேகமாக ஆற்றை நெருங்கி வந்தார்கள். இக்கரையிலிருந்தவர்களும் காடு அசாதாரணமாக அசைவதைப் பார்த்து சிப்பாய்களின் நடமாட்டத்தைக் கண்டுகொண்டார்கள். 'மோசம் போனோமே' என்று திகிலடைந்தார்கள். என்ன செய்வது என்று ஏங்கினார்கள். ஏழு சகோதரர்களில் மூத்தவர் தோளின் மேல் வைத்திருந்த லிங்கத்தை நினைத்து உருகினார். 'எங்களுக்கு ஆபத்து வந்துவிட்டது. எங்களைக் காப்பது உமது கடமை. இந்த அத்துவானக் காட்டில் எங்களுக்கு உம்மையன்றி வேறு திக்கில்லை' என்று ஒரே மனதுடன் வேண்டினார். சகோதரர்களும் அவர்களது மனைவியரும் சகோதரியும் பீதியுடன் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
சிப்பாய்கள் ஆற்றங்கரையில் நின்று கும்மாளமாக சத்தம்போட்டுக்கொண்டு நீரில் கால்வைத்தார்கள். கரையைத் தாண்டி ஆற்றுக்குள் கால்வாசி தூரம் வந்திருப்பார்கள். அந்த விநாடியில் ஆறு சீற்றம் கொண்டு பொங்கியது. முழங்காலளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் வெள்ளம் பிரவாகமெடுத்துப் பாய்ந்தது. இக்கரையிலிருக்கிறவர்களுக்கு ஜலத்தைத் தவிர அந்தப் பக்கம் இருக்கிற எதுவும் தெரியவில்லை. யானைகள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்று நகர்வதுபோல தண்ணீர் உயரமாக ஓடிக்கொண்டிருந்தது. கங்கா தேவி ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக ஓடுவதை அவர்கள் பார்த்தார்கள். எல்லாரும் கல்லும் புல்லும் இறைந்து கிடந்த அந்த மண்ணிலேயே தெண்டனிட்டு கண்களில் நீர் வழிய தெய்வத்தைக் கும்பிட்டார்கள். அகதிகளான அவர்களை துரத்தி வந்த சிப்பாய்களில் அநேகம் பேரை வாரி எடுத்துக்கொண்டு போயிருந்தன கங்கா தேவியின் நீர்க்கரங்கள். மிஞ்சின ஒன்றிரண்டு சிப்பாய்கள் விசித்திர சம்பவத்தை துருக்க ராஜாவிடம் அறிக்கை செய்ய அச்சத்துடன் ஓடினார்கள்.
காடுகளிலும் மலைகளிலும் நாள்கணக்கில் அலைந்து திரிந்து காரை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் வனத்தை அடைந்தார்கள். சுமந்து வந்த சாமான்களை இறக்கி வைத்து காரை மரங்களின் நிழலில் இளைப்பாறினார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேர்முகமாக மலைத் தொடர்கள் நிமிர்ந்து நின்றிருந்தன. பூமிக்கு வேலிபோட்டது போல இருந்தன மலைகள். அதற்கு அப்பால் எதுவும் இருக்காது என்று சொல்லும்படியாக உயர்ந்து நின்றிருந்தன. தொடரின் ஒரு மலையைவிட இன்னொரு மலை உயரம். அடுத்தது அதைவிட உயரம். அடுத்தது இன்னும் உயரம்.அதற்கடுத்தது இன்னும் இன்னும் உயரம் என்று நீண்டிருந்த மலைகளின் மீது மேகங்கள் உரசிக் கலந்து போவதை அவர்கள் பார்த்தார்கள். மலையில் சரிவிலும் உச்சியிலும் மரங்களும் செடிகளும் தழைத்திருந்தன. வெயில் காங்கையால் அந்த மலைகள் நீல நிறமாகத் தோன்றின.சகோதரர்களில் மூத்தவர் சொன்னார் '' அதோ தெரிகிற நீலமலையில் ஏறி அந்த வனத்தில் ஜீவித்துவருவோம்''. எல்லாரும் ஒத்துக்கொண்டு மலையேறினார்கள்.
அவர்கள் வந்து சேர்ந்த இடம் மேட்டுசமவெளியாக இருந்தது. மலைகளுக்கு நடுவில் தானியமடிக்கும் களம்போல இருந்த அந்த இடத்தில் வசிக்கத்
தீர்மானித்தார்கள். அந்த இடத்துக்குப் பேட்டிலாடாஎன்று பெயரும் வைத்தார்கள்.
சில காலம் அங்கே வசித்ததில் அவர்களுடைய பயம் விலகியிருந்தது. இனி ராஜாவைப் பற்றிய பயம் இல்லை. அதனால் விவசாயம் செய்தும் மாடுகளையும் எருமைகளையும் வளர்த்தியும் ஜீவிக்கலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது. தனித்தனியாக ஹட்டிகள் கட்டி வாழலாம் என்று ஆசைப்பட்டார்கள். அப்படியான ஒரு நாள் வனத்தில் அகஸ்மாத்தாக ஒரு கலைமான் அவர்கள் கண்ணுக்குப் புலப்பட்டது. ஏழு சகோதரர்களில் ஐந்து பேர் அந்த மானைப்
பிடித்துக் கொள்வோம் என்று அதன் பின்னால் ஓடினார்கள்.இளையவர்களில் ஒருவன் மூத்தவர் கூடவே நின்றான். இருட்டுக்குள் வெளிச்சம் துளைத்துப் போகிற வேகத்தில் காட்டுக்குள்ளே மான் ஓடியது. அதைத் துரத்திக்கொண்டு ஓடிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் அதைப் பிடிக்க முடியாமல் களைத்துப் போய் நின்றார்கள். ஒவ்வொருவரும் வனத்தில் அவரவர் நின்ற இடங்களில் மயங்கி விழுந்து அப்படியே உறங்கிப் போனார்கள். மறுநாள் விழித்துப் பார்க்கையில்தான் ஒவ்வொருவருக்கும் சகோதரர்களைப் பிரிந்து தனியாகிப் போனது தெரியவந்தது. வனங்களில் தட்டுத் தடுமாறி தனித்தனியாக பேட்டிலாடாவுக்கு வந்து
சேர்ந்தார்கள். நான்கு பேரால் மட்டுந்தான் அப்படித் திரும்ப முடிந்தது. இரண்டு மூன்று நாட்களாகியும் ஒருவன் வரவேயில்லை. ஆறு பேரும் துக்கத்துடன் அவன் காணாமற் போனதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
ஒண்டியாக வனாந்தரத்தில் மானைத் துரத்திப் போனவர்கள் கலைத்து விழுந்தது தெய்வச் செயல் என்றார் மூத்தவர். அவர்கள் விழுந்த இடங்களை கடவுள் காண்பித்த இடமென்று பாவிக்க வேண்டுமென்றும் அந்த இடங்களிலேயே போய் அவர்கள் பிழைக்கலாமென்றும் சொன்னார். அவருடைய அனுமதி பெற்று ஒவ்வொருவனும் அந்தந்த இடங்களில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.முதலில் குடிசைகள் போட்டார்கள். பூமியில் பாடுபட்டதன் பலன் விளைந்து மனைகள் எழும்பின.ஹட்டிகள் உண்டாயின. ஹட்டிகள் பெருகி ஊர்களாயின. ஊர்கள் சேர்ந்து சீமைகளாயின. தோடநாடு சீமே.பொறங்காடு சீமே. மேக்குநாடு சீமே. குந்தே சீமே. மலைகளின் சரிவுகளிலும் மேட்டுச்சமவெளிகளிலும் ஆறுகளோடும் பள்ளத்தாக்குகளிலும் ஜனங்கள் பரவினார்கள்.அப்படியாக வம்சம் பல்கிப் பெருகியது.