ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அக்காதெமி இந்திய மொழிப்படைப்புகளத் தேர்ந்தெடுத்து
விருதுகளை வழங்கி வருகிறது. படைப்புகளை முன் வைத்து வழங்கப்படும் விருதுகள் என்று சொல்லப்பட்டாலும் அவை வழங்கப்படுவது அந்தந்த
மொழியில் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிகளுக்குத்தான்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளுக்கு உரிய பெயர்கள் அறிவிக்கப் படும் போதும் ஒரு கதை எனக்கு
நினைவுக்கு வரும் .கி.ராஜநாராயணன் தொகுத்த தமிழக நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று.
ஒரு ராஜா இருந்தான். கவிஞர்கள் இவனைப் புகழ்ந்து கவிதை எழுதிக் கொண்டு வருவார்கள்.
ராஜாவுக்கோ அதைப் படித்துப் பார்த்துத் தரத்துக்கு ஏற்ற சன்மானம் கொடுக்கத் தெரியாது. அதனால் அப்படிக் கவிதை
எழுதிக் கொண்டு வந்த ஏட்டை ஒரு தட்டிலும் அதற்குச் சமமான பொன்னை
இன்னொரு தட்டிலும் வைத்து நிறுத்துக் கொடுத்து அனுப்பி விடுவான். கவிதைகளின் தரத்தை அனுபவித்து அறிந்து பரிசு வழங்காமல் சகட்டு மேனிக்கு நல்ல கவிதைக்கும் மட்டமான
கவிதைக்கும் ஒரே மாதிரியாகப் பரிசை நிறுத்துக் கொடுப்பதைக் கண்டு கவிஞர்கள் கலங்கினார்கள். ஒருநாள்,
ஒருவன் ராஜாவிடம் கவிதை எழுதிக் கொண்டு வந்திருப்ப தாகத் தெரிவித்தான். ராஜா மந்திரியைக் கூப்பிட்டு அதன் எடைக்குச் சமமான
பொன்னைக் கொடுத்து கவிஞனை அனுப்பிவைக்கும்படிச் சொன்னான். மந்திரி வந்தவனைப் பார்த்து 'அதைக் கொண்டு வாப்பா'
என்றான். 'அதை என் ஒருவனால் மட்டும் தூக்கிக் கொண்டு வரமுடியாது. வெளியில் வைத்தி ருக்கிறேன் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்
' என்றான். வெளியில்
வந்து பார்த்தால் ஒரு வண்டி. அதில் ஒரு பாறைக் கல். பாறை மேல் நாலு வரிகள் எதுகை மோனையோடு
உளியால் செதுக்கி வைத்தி ருந்தது. எத்தனையோ படை வீரர்கள், பயில்வான்கள் சேர்ந்து
அதைப் புரட்டிக் கொண்டு வந்து ஒரு பெரிய தராசில் வைத்தார்கள். ராஜாவின் பொக்கிஷத்திலுள்ள அத்தனை தங்கத்தையும் போட்டும் பாறாங்கள் அசையவில்லை. ராஜாவும் மந்திரியும்
என்ன செய்வது என்று தோன்றாமல் முழித்தார்கள். அதிலிருந்து ராஜா எடைபோட்டுப் பரிசு வழங்குவதை நிறுத்தினான். அப்புறந்தான் கவிஞர்களுக்கு உயிர் வந்தது.
சாகித்திய அக்காதெமி கிட்டத்தட்ட ஐம்பத்து நான்கு வருடங்களாக இலக்கியப் படைப்புகளுக்கு விருது
வழங்கி வருகிறது. இதில்
கணிசமானவை கதையில் வரும் ராஜா எடை பார்த்துக் கொடுத்தது போன்றவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஓலை
எடையுள்ளவையும் பாறாங்கல் எடையுள்ளவையும்தான் பரிசுக் குரியவையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன.
அபூர்வமான சில சந்தர்ப்பங்களில் தரமான படைப்பு களைத் தந்த படைப்பாளிகள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அப்படிக் கௌரவிக்கப்பட வேண்டுமானால் ஒன்று அந்தப் படைப்பாளி அமரராகி இருக்க வேண்டும். அல்லது படைப்புப்
பணியிலிருந்தே ஓய்வு
பெற்றிருக்க வேண்டும். சாகித்திய அக்காதெமி விருது இழப்பீடு அல்லது ஓய்வூதியம்.
தமிழில் பெரும் இலக்கிய ஆளுமைகளான பாரதிதாசனுக்கும் அழகிரிசாமிக்கும் சி.சு.செல்லப்பாவுக்கும் அளிக்கப்பட்ட விருதுகள்
இழப்பீடுகள். தங்களுடைய படைப்புகள் மூலம் இந்த மொழியில் சாதனைகளை நிகழ்த்திய தி.ஜானகி ராமன்,
நீல பத்மநாபன் போன்ற படைப்பாளிகள் அவர்களது எழுச்சி மிக்க காலத்துக்குப் பின்னர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஓய்வூதியச்
சலுகை.
இலக்கியத்தைப் போற்றிப் பரிசளிக்கும் தனியார் அமைப்புகள் உள்ளன. அவை வழங்கும் விருதுகள்
பற்றிப் பெரும் விவாதங்கள் முன்வைக்கப் படுவதில்லை. ஏனெனில் அவற்றின் தேர்வு முறை குறிப்பிட்ட நோக்கங்களையும்
விருப்பங்களையும் கொண்டவை.சாகித்திய அக்காதெமி விருது அவற்றிலிலிருந்து மாறுபட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஓர் அரசால் மக்களுக்கு உரிமையான பணத்திலிருந்து வழங்கப்படுவது. ஒரு மொழியில்
செயல்படும் படைப்பாளியைத் தரத்தின் அடிப்படையில் நிர்ணயித்து அந்த மொழிக்காக அவர் வழங்கிய
பங்களிப்பை முன்னிருத்தி வழங்கப்படுவது. அந்த விருதின் மூலம் பிற மொழிகளின் மத்தியில் நமது மொழியின் இலக்கியச் செழுமையை அறிமுகப்படுத்துவது. சாகித்திய அக்காதெமி விருதளிப்பின்
பின்னால் இந்த நோக்கங்கள்தாம் உள்ளன. எல்லா ஜனநாயக அமைப்பிலும் கோளாறு இருப்பதைபோலவே
இதிலும் ஓட்டைகள் இருக்கின்றன. அந்த ஓட்டைகள் வழியாக சிபாரிசுகளையும் செல்வாக்கையும்
அரசியல் தேவையையும் கணக்கிட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அப்படி எந்தக் குறுக்கீடும்
இல்லாமல் சரியான படைப்பாளிகளுக்கு அபூர்வமாக விருதுகள் வழங்கப்பட்டும் இருக்கின்றன. அப்படியான அபூர்வ சம்பவங்களில் ஒன்று இந்த ஆண்டின் விருது.
நாஞ்சில்நாடன் இன்றும் இலக்கியக் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சரியாகச் சொன்னால் அவரது
மிக முக்கியமான படைப்புகள் உருவான காலப் பகுதியில் எந்தத் தீவிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ
அதை விடவும் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து
எழுதிக் கொண்டிருக்கிறார். முன்னை விடவும் அதிக எண்ணிக்கையுள்ள வாசகர்களைப் பெற்றவராக
இருக்கிறார். ஆரோக்கியவானாகவும் இருக்கிறார். சாகித்திய அக்காதெமி விருதுக்குரிய பின்வாசல்
விதிகளை மீறி அவர் விருது பெற்றிருப்பதை அபூர்வமானது என்றே நினைக்கிறேன்.
இது ஓர் இலக்கிய வாசகனுக்கும் சக படைப்பாளிகளுக்கும் உற்சாகம் அளிக்கும் நிகழ்வு. இதுவரை
அக்காதெமி விருது பெற்ற எந்த எழுத்தாளருக்கும் இல்லாத வகையில் நாஞ்சில்நாடனுக்கு அளிக்கப்பட்ட
விருது பாராட்டப்படுவதன் காரணம் இதுதான் என்றும் தோன்றுகிறது. அவர் சொன்னது நினைவுக்கு
வருகிறது. 'இன்னும் ஆறு மாசத்துக்கு டேட் கிடையாது. கால்ஷீட் ஃபுல்'.
ஜீ. சுப்ரமணியம் இந்துக் கல்லூரி மாணவராகப் படித்துப் பட்டம் பெற்று நாற்பது வருடங்கள்
கழிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.இங்கே படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் நாஞ்சில்நாடனாக அவதாரம் எடுத்திருப்ப தற்கான
வாய்ப்பு இல்லை என்றும் எண்ணுகிறேன். தனது முன்னாள் மாணவரை அவரது இலக்கியம் சார்ந்த பெருமைக்காக ஒரு கல்லூரி
அழைத்துப் பாராட்டுவதும் அபூர்வமான நிகழ்வுதான். ஒரு கல்லூரி அதன் மாணவனால் உயர்வடைகிறது. மாணவரும் அந்தக்
கல்லூரியால் உயர்வடைகிறார். நாஞ்சில்நாடன் என்ற ஜீ.சுப்ரமணியத்தால் இந்துக் கல்லூரியின் பெருமைகளில் ஒரு மாற்றுக்
கூடுகிறது. இந்துக் கல்லூரியால் பாராட்டப்படுவதன் மூலம் நாஞ்சில்நாடனின் புகழுக்கு
இன்னும் மெருகு கூடுகிறது. வேறு அர்த்தத்தில் இலக்கியத்திலும் இதுதான் நடக்கிறது. படைப்பாளி வாசகனை உயர்த்துவதும் வாசகனால் படைப்பாளி உயர்வு பெறுவதுமான
ஓர் அம்சம் இலக்கியத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன். சமகால எழுத்தாளர்களில்
இந்த அம்சத்தை நான் அதிகம் காண்பது இருவரிடம் ஒருவர்- தமிழ்நாடு அரசின் கலைமாமணி நாஞ்சில்நாடன்.
மற்றொருவர் புதுவை அரசின் கலைமாமணி பிரபஞ்சன்.
தன்னுடைய படைப்புகள் மூலமாக மட்டுமல்லாமல் புனைவல்லாத கட்டுரைகள் மூலமாகவும் நாஞ்சில்
நாடன் இதைச் செய்கிறார். வாசித்திருக்கும் அவரது மூன்று கட்டுரை நூல்களை வைத்து
- நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று,நதியின் பிழையன்று நறும்புனலின்மை, தீதும் நன்றும் - இதைச் சொல்ல விரும்புகிறேன்.
படைப்புகளை மீறிய தொடர் உரையாடலை படைப்பாளி வாசகர்களிடம் இந்தக்
கட்டுரைகளில் நிகழ்த்துகிறார். தான் வாழும் காலத்தின் சிக்கல்களையும் அதற்கான காரணங் களையும் சக மனிதனிடம் பொருமித் தள்ளுகிற ஆற்றாமையை இந்தக் கட்டுரைகளில் காணலாம். நாஞ்சில்
நாடனின் எழுத்து களின் பொதுவான இயல்பே இந்த ஆற்றாமையும் பொருமலும் தான் என்றும் படுகிறது. அவரது படைப்புகளைப்
பொறுத்தவரை மனிதனின் பசியும் ருசியும்தான் ஆற்றாமையையும்
பொருமலையும் உருவாக்குபவை. பசி - இயற்கையான உணர்வு. ருசி - தேவை மூலம் எழும் உணர்வு. அவருடைய இரண்டு கதைகளை ஒப்பிட்டால்
இது விளங்கும்.
'விரதம்' என்ற கதையில் வரும் சின்னத்தம்பியா பிள்ளை எப்போதும் இரண்டு மணிக்குத்தான் 'தேரேகாலில் குளிப்பார். சாப்பாட்டுக்கு மூன்று மணி ஆகிவிடும். கதை நடக்கிற தினத்தன்று மனிதர் பதினோரு மணிக்கே
குளித்துத் தொலைக்கிறார். அன்றைக்கு அமாவாசை. ஜலக்கிரீடை செய்ததன் பலன்.வயிறு பசியால்
எரிகிறது. வீட்டில் மனைவிக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவளுக்குக் கஞ்சி. பழையது பானை
நிறையக் கிடக்கிறது. அமாவாசை நாளில் 'பழையதை எப்படி சாப்பிடுகது? 'என்பது அவருடைய பிரச்சனை. ஆறு பர்லாங்கு தூரத்தில்
இருக்கும் மகள் வீட்டுக்குப் போகிறார். 'இந்த வேணா வெயில்ல எதுக்கு ஓடி வாறே? சாப்பிட்டாச்சுன்னா படுத்து ஒறக்கம் போடுகது'
என்று கடிந்து கொள்கிறாள்.
அவளிடம் தன்னுடைய பசியைச் சொல்லக் கூச்சப்பட்டு இளைய மகள் வீட்டுக்குப் போகிறாள்.தான்
போய்ச் சேர்வதற்குள் அங்கே எல்லாரும் சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது என்று பதற்றப் படுகிறார். போய்ச் சேர்ந்த வேளையில்தான்
அங்கே இலை போடப்படுகிறது. 'அக்கா வீட்டுல சாப்பிட்டுட்டு இங்கே வாரே?' என்று சின்ன மகள் செல்லமாக
அதட்டுகிறாள். இங்கேயும் வயிற்றுக்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ஒன்றரை
மணி வெயிலில் இறங்கி நடக்கிறார். வீட்டுக்கு வந்து பானையிலிருந்த பழையதைப் பிழிந்துபோட்டு
ஊறுகாய்
பரணியைத் தேடுகிறார்.சின்னத்தம்பியாப் பிள்ளையை ஏமாற்றியது அவருடைய ஐம்பதாண்டுப்
பழக்கம். குளித்து விட்டுத் திருநீறுஅணிந்து விட்டுத்தான் சாப்பிடுவார். நெற்றியில்
நீறு துலங்கினால் பிள்ளைவாள் சாப்பிட்டாகி விட்டது என்று அர்த்தம்.
இந்தக் கதையில் வரும் இக்கட்டைத்தான் 'கனகக் குன்று கொட்டாரத்தில் கல்யாணம் ' கதையில் வரும் பண்டாரம்
பிள்ளையும் அனுபவிக்கிறார். ஒன்று விட்ட அக்காள் மகள் கல்யாணத்துக்காக திருவனந்தபுரம்
கனகக் குன்று கொட்டாரத்துக்குப்
போகிறார்.அவரை அங்கே யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை.ஒன்று விட்ட தாய் மாமனுக்கு அவ்வளவு தானே மதிப்பு.வெறும்
வயிற்றுடன் வந்த பண்டாரம் பிள்ளைக்கு அது ஆற்றாமையை ஏற்படுத்துகிறது. விறுவிறுவென வெளியேறுகிறார். 'நாஞ்சி நாட்டுக்கு
வரட்டு... காட்டித் தாறேன்' என்று பொருமிக் கொண்டே திரும்புகிறார்.
இந்தக் கதைகளில் கையாளப்படும் ஆற்றாமையும் பொருமலும் பசியை யையும் ருசியையும் மையமாகக்
கொண்டவை. இவையே அதிகாரத்துக் கான பசியாகவும் இருக்கிறோம் என்பதை அடையாளம் காட்டும் ருசியாக வும் அவரது பிற
படைப்புகளில் விரவிக் கிடப்பதாகத் தோன்றுகிறது.
நாஞ்சில்நாடனுடன் எனக்கு நெருக்கமான தொடர்பில்லை.ஆனால் இங்கே சொன்ன பசியையும் ருசியையும்
சார்ந்து அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அந்தரங்கக் கடன் எனக்கு இருக்கிறது.
எண்பத்தி ஐந்தாம் ஆண்டு வாக்கில் பல நாட்கள் நாஞ்சில்நாடன் உபயத்தால் என்னுடைய பசியைப் போக்கிக்கொண்டிருந்திருக்கிறேன்.
அப்போது ஒரு சிறு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சம்பளமும் சொற்பம்.
மூன்று வேளை தவறாமல் சாப்பிட்டு விட்டால்
மாதச் சம்பளம் பத்தாம் தேதியோடு கரைந்து போய்விடக் கூடிய சம்பளம். அந்தச் சந்தர்ப்பத்தில்
தொலைக்காட்சியில் சீரியல் களுக்கு கதை தேடிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் பலர்
அதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்துத் தேறிய அழகேசன் என்ற நண்பர் கொஞ்சம் வித்தியாசமாக
யோசித்தார். தமிழ்த் தொடர் களுக்குத்தான் எல்லாரும் மோதுகிறார்கள். அவர் மலையாள சீரியலுக்காக
முயற்சி செய்தார். அவருக்கு அனுமதியும் கிடைத்தது. ஒரு தமிழ்
நாவலை மலையாளத்தில்
தொடராக சமர்ப்பிக்கத் தீர்மானித்தார். இன்னொரு எழுத்தாள நண்பரான விமலாதித்த
மாமல்லன் வாயிலாக அதை மலையாளத்தில் திரைக்கதையாக்கும் வேலை எனக்குக் கிடைத்தது. தொலைக்காட்சி
நிலையத்துக்கு தொடரின் முதல் நான்கு எபிசோடுகளைப் படமாக்கிக் கொடுக்க வேண்டும். நான்கு பகுதிகளையும் மலையாளத்தில் திரைக்கதை
வடிவில் எழுதினேன். ஒரு பகுதிக்கு இத்தனை என்று கூலி பேசி எழுதிக் கொடுத்தேன். அதற்குக்
கிடைத்த தொகையில் இரண்டு மாதம் மூன்று வேளையும் ருசியுடன் பசியாற முடிந்தது. உதர நிமித்தம்
அன்று கட்டிய அந்த வேடத்துக்குக் காரணமாக இருந்தவர் நாஞ்சில்நாடன். அதை இருபத்தைந்து
ஆண்டுகளுக்குப் பின் இந்த மேடையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். எனது பசியைப் போக்கிய
அந்த நாவல் அவர் எழுதியது. தலைப்பு 'மிதவை'.
( நாஞ்சில்நாடன் சாகித்திய அக்காதெமி விருது
பெற்றதை யொட்டி நாகர்கோவில் இந்துக் கல்லூரி 2011 மார்ச் 3 ஆம் தேதி நடத்திய பாராட்டு விழாவில் ஆற்றிய உரை. )