வியாழன், 1 பிப்ரவரி, 2018

கமலா தாஸின் ‘ என் கதை’


கமலா தாஸின் படைப்புகளைக் கொண்டாடும் முகமாக கூகுள் அவரது உருவச் சித்திரத்தை நேற்று தனது தேடுபொறியின் முகப்பாக வெளியிட்டிருந்தது. ‘ என் கதை’ என்ற அவரது தன் வரலாற்று நூல் வெளிவந்த தினம் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. நண்பர் நிர்மால்யாவின் தமிழாக்கத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘என் கதை’ க்கு எழுதப்பட்ட முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.



உங்களுடையது அல்லாத சுகங்கள் எனக்கு இல்லை
உங்களுக்குத் தெரியாத வேதனைகள் எனக்கு இல்லை
நானும்
நான்என்ற பெயரால்
அறியப்படுகிறேன்.
                                                                  - கமலா தாஸ்

மிகைச் சொற்களில் விருப்பமில்லை; நம்பிக்கையுமில்லை. எனினும் இந்த முன்னுரைக்கான வரிகளை எழுதும்போது உணர்ச்சி மேலிடுவதைத் தடை செய்ய முடியவில்லை. 'என் கதை'க்கு முன்னுரை எழுத வாய்த்தது பாக்கியம் என்று நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவகையில் இது முன்னுரை அல்ல; நன்றி பாராட்டல். மாதவிக்குட்டிக்கு அல்லது கமலா தாஸுக்கு இரண்டு காரியங்களுக்காக மறைமுகமாகக் கடன்பட்டிருக்கிறேன்; மொழிசார்ந்தும் பார்வை சார்ந்தும்.

முதலாவது அவருடைய எளிமையும் சரளமுமான மொழிக்காக. அவர் பயன் படுத்திய மலையாளமும் ஆங்கிலமும் மிகக் குறைவான சொற்களைக் கொண்டிருந்தவை. பரந்த சொற்களஞ்சியம் கைவசமில்லாத  தொடக்கநிலை வாசகனான  அன்றைய எனக்கு அவரது மொழி இடைஞ்சலில்லாத வாசிப்புக்குத் துணையாக   இருந்தது. மலையாளம் நான் சுயமுயற்சியில் கற்ற மொழி. அதில் சந்தேகம் எழுமானால் பிற சகாயம் தேட வேண்டும்பள்ளிப் பாடத்துக்கு அப்பாற்பட்ட ஆங்கிலச் சொற்களுக்கு அகராதியை நாட வேண்டும். இவை வாசிப்பின் வேகத்துக்கும் சுவாரசியத்துக்கும் முட்டுக் கட்டையாக இருந்தன. இந்த இடையூறுகள் இல்லாமல் வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார் மாதவிக்குட்டியும் கமலா தாஸும். வைக்கம் முகம்மது பஷீரின் எளிய மலையாளத்தைப்போல நீரோட்டம் நிரம்பியதாக இருந்தது மாதவிக்குட்டியின் எழுத்து. ஆர்.கே.நாராயணின்  'ஆடம்பர எளிமை' தொனிக்கும் ஆங்கிலத்தை  விட எளிமை கொண்டவையாகத் தோன்றின  கமலா தாஸின் கவிதைகளும் அன்று அவர் அபூர்வமாக ஆங்கிலத்தில் எழுதிய கதைகளும். அவை முழுமையாகப் புரிந்தன.‘பட்சியின் மணம்' என்ற மாதவிக்குட்டியின் முதலாவது  தொகுப்பி லிருந்த  கதைகளை சிரமமில்லாமல் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. அதே சமயத்தில் அவரே  மொழிபெயர்த்தோ அல்லது ஆங்கிலத்திலேயே எழுதியோ  'இல்லஸ்டிரேட்டட் வீக்லி'யில் வெளியாகி யிருந்த  ' டால் ஃபார் சைல்ட் ப்ராஸ்டிட்டியூட்'  ( A Doll for the Child Prostitute ) என்ற கதையை அகராதியின் துணையில்லாமல்  ஒரே மூச்சில் படிக்க முடிந்தது. புரிந்துகொள்ளவும் முடிந்தது. வாசிப்பில் நிறைவையும் நம்பிக்கையையும் அளித்த சந்தர்ப்பங்களாக அவை இருந்தன. பிற்காலத்திய விரைவான வாசிப்புக்கு ஆரம்பப் பயிற்சிகளாகவும்  இருந்தன.

மாதவிக்குட்டியின் மலையாளமும் கமலா தாஸின் ஆங்கிலமும்  குறைந்த சொற்களால் ஆனவை. அந்தக் கையளவு சொற்கள் மூலமே தனது உலகை முழுவதுமாக வெளிப்படுத்த முடிந்தது என்பதில்தான் அவரது மேதைமை துலங்கியது. வார்த்தைகள் குறைவு என்பதால் கூறியது கூறல் என்ற இலக்கியப் பிழை ஒருபோதும் நிகழ்ந்திராத  மொழி நடையை உருவாக்கிக் கொண்டார். ஒரு சொல்லைத் திரும்பச் சொல்ல நேர்ந்தால் அதைக் கவிதையின் ஒத்திசை வுடன் பயன்படுத்தினார். ' நான் மலையாளத்தையோ  ஆங்கிலத்தையோ இலக்கண சுத்தமாகக் கற்றவள் அல்ல. அதனால் என் களஞ்சியத்தில் சொற்கள்குறைவு. எனவே அவற்றை மிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தினேன்; உலோபி நாணயங் களைச் செலவிடுவதுபோன்ற உணர்வுடன்' என்று பிற்கால  நேர் காணல் ஒன்றில் குறிப்பிட்டார். காலப்போக்கில்  மிகப் பெரும் சொற்களஞ்சியத்துக்கு உடைமை யாளரானார் என்பதற்குப்  பின்னாளில் இரு மொழிகளிலும் அவர் முன்வைத்த படைப்புகளே சான்று

தீவிரமான படைப்புகளை வாசக சௌக்கியத்துடன்  வெளிப்படுத்தியவர் என்பதே மாதவிக்குட்டியை அல்லது கமலா தாஸை இன்றும் வாசிப்புக்குரிய எழுத்தாளராக நிலைநிறுத்துகிறது. ஆரம்ப காலத்தில்  எனக்குக் கிடைத்த இந்த வாசக மதிப்புக்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதுதான் பின்னர் விரிவும் ஆழமுமான வாசிப்பனுபவங்களுக்கு இட்டுச் சென்றது என்பதை  நினைவு கூர்கிறேன்.

வாசகன் என்ற நிலையில் மட்டுமல்ல; எழுத்தாளன் என்ற நிலையிலும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள விஷயங்கள் இருந்தன. மொழியைக் கச்சிதமாகவும் செறிவாகவும் கையாளுவது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுத்த மறைமுக ஆசிரியர்கள் பலரில் அவரும் ஒருவர். மொழிசார்ந்து அவரிடமிருந்து பயின்ற பாடங்கள் இவை. இவற்றை விடவும் பார்வைசார்ந்து அவரது எழுத்தின் மூலம் பெற்ற பாதிப்பையே முதன்மையானதாகக் கருதுகிறேன்.

என் இளைய சகோதரனுக்கும் எனக்கும் ஏறத்தாழ இருபது வயது இடைவெளிதனது நாற்பதையொட்டிய வயதில் அம்மா அவனைப் பெற்றெடுத்தார். நான் அன்று விவரமான கல்லூரி மாணவன். வாழ்வின் ரகசியங்களை இலக்கியம் வாயிலாகப் புரிந்து கொண்டிருந்தவன். அந்தப் பேறு காலத்தில் அம்மாவைப் பார்க்கவே விரும்பவில்லை. உப்பிய வயிறும் அசந்தர்ப்பமான முதுமைக்குக் கட்டியக் கூறும் சோர்வுமாக இருந்த ஜீவனைப் பார்ப்பதே அருவெறுப்பையும் கூச்சத்தையும் கொடுத்ததுமகப்பேறு மருத்துவமனையில் நான்தான் பிறந்த குழந்தையை முதலில் பார்த்தேன். அப்புறம்தான் அப்பாவே தன் கடைசி வாரிசைப் பார்த்தார். எனினும் வீடு திரும்பிய பின்னர் அம்மாவுடன் பேசவோ அவரைப் பார்க்கவோ பிடிக்க வில்லை. மனம் குமட்டிக் கொண்டிருந்தது. அந்தக் குமட்டல் ஓராண்டுவரை  நீடித்தது. என் பாராமுகம் பற்றி வீட்டுக்கு வந்த எவரிடமோ அம்மா குரல் இடறக் குறைப்பட்டுக் கொண்டிருந்ததைத் தற்செயலாகக் கேட்ட பின்னரே குமட்டல் மட்டுப்பட்டது. அம்மாவிடம் ஓரிரு வார்த்தைகளில் பேச ஆரம்பித்தேன். அம்மாவுக்கும் எனக்கும் நடுவிலிருந்த  பள்ளத்தில் அப்போது வாசித்துக் கொண்டிருந்த  புத்தகத்தின் சில வரிகள் விழுந்து மேடுறுத்திச் சமப்படுத்தின. மலையாள வார இதழில் தொடராக வெளிவந்து  பக்கங்களைக் கிழித்துச் சேகரித்து வைத்திருந்த, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வாசித்திருந்த படைப்பின் இரண்டாம் பதிப்பு அது.
 ' எனக்கு அலறுவதற்குக் கூட சமயம் கிடைக்கவில்லை. சூரியனை நினைத்துக் கொண்டு படுத்திருக்கும் போது என்னுடைய இடது தொடையை உரசிக் கொண்டு என் மூன்றாவது மகன் பிறந்தான். அவன் உரக்க அழுதான்' என்பவை அந்த வரிகள்.

முந்தைய வாசிப்புகளில் எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து போன அந்த வரிகள் இப்போது வேறாகப் பொருள் தந்தன. அந்த வரிகளை  மிகுந்த நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் குற்ற உணர்வுடனும் நினைவு கூர்ந்தேன். மூன்று சகோதரிகளுடன் பிறந்தும் அதிகமும்  பெண்களின் தோழமையில் வளர்ந்தும் புலப்படாத பெண்ணின்   மர்மத்தை அந்த வரிகள் விளக்கின. அந்த வரிகளின்  வெம்மையை உதிரத்தில் உணர்ந்தபடி அம்மாவிடம் போனேன். ஓராண்டுக்குப் பின்பு எப்போதும் செல்லமாக அழைப்பதுபோல அம்மாவின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.  குழப்பச் சிரிப்புடன் அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மாதவிக்குட்டியை கொச்சியிlllல் அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சக ஊழியர் பென்ஸி நாங்கள் பணிபுரியும் தொலைக் காட்சிக்காக மாதவிக்குட்டியைப்  பற்றி  ஓர் ஆவணப்படத்தை எடுத்தார். அதையொட்டி அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மேதைமையையும் கிறுக்குத்தனத்தையும்  குழந்தைமை யையும் தாய்மையையும் ஒரே உருவில் கண்ட நாள் அது. பல மணிநேரம் நீண்டிருந்த சந்திப்பில், தயக்கங்கள் மறைந்து போயிருந்த தருணத்தில் 'என் கதை' வரிகள் என்னை அலைக் கழித்த விதத்தை அவரிடம் சொன்னேன். அன்று அவர் கமலா சுரய்யா ஆகியிருந்தார். பர்தா முகப்பைச் சரிசெய்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தவர் எதிர் இருக்கையில் உட்கார்ந்திருந்த என்னை அருகில் வரும்படி சைகை செய்தார். சென்றதும் என் இரு கைகளையும் பற்றி தனது இரு கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டார். 'நம்மள் எல்லாரும் மாலாகமாருதன்னே, செலப்போ செகுத்தான்மாராகுன்னு' என்றார். அதைச் சொல்லும்போது கைகளுக்குள்  அதிர்வை உணர்ந்தேன். அது எவர் கரங்களின் அதிர்வு என்று அப்போது தெரியவில்லை. இந்த வரிகளை எழுதும் போதும் அதே அதிர்வை உணர முடிகிறது. இப்போது அது  எவர் கரங்கள் ஏற்படுத்திய அதிர்வு என்பதை உணர முடிகிறது. பெண்ணின் சூக்கும உலகை அறிமுகப்படுத்திய ஆளுமை தந்த அதிர்வு  என்று  இனங்காண முடிகிறது.

இந்த அனுபவத்தின்  விளைவாக இன்னொன்றையும் சொல்லலாம். இலக்கியம் கற்பிக்கும் பாடம் வெளிப்படையானதோ, பருண்மையானதோ அல்ல; மறை முகமும் நுட்பமுமானது. அப்படி ஒரு பாடத்தை எனக்குக் கற்பித்த நூல்களில் ஒன்று 'என் கதை'.

மாதவிக்குட்டி அல்லது கமலா தாஸின் இலக்கிய வாழ்க்கையை 'என் கதை' வெளியீட்டையொட்டி இரண்டாகப் பிரிக்கலாம். அவர் எழுதிய இரு மொழிகளிலுமே இந்தப் பிரிவினை நேர்ந்திருக்கிறது.  'என் கதை'க்கு முன்னர் அவர் அந்தந்த மொழிகளில் முக்கியமான எழுத்தாளராகக் கருதப்பட்டார். தன் வரலாற்று நூலுக்குப்  பிறகு  பிரபலரானார்.

நவீன மலையாளச் சிறுகதையில் மாதவிக்குட்டி முக்கியமான ஆளுமை. தகழி சிவசங்கரப்பிள்ளை, பொன்குன்னம் வர்க்கி, வைக்கம் முகம்மது பஷீர், பி.கேசவதேவ், லலிதாம்பிகா அந்தர்ஜனம் ஆகிய மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் காலகட்டத்துக்குப் பின்னர் வந்த தன்னுணர்வுக் கதையாளர்களான எம்.டி. வாசுதேவன் நாயர், டி.பத்மநாபன் போன்றவர்களுக்கு நிகரான ஆளுமையாக மதிக்கப்பட்டவர் மாதவிக்குட்டி. எழுத்து வாழ்க்கையின்  ஆரம்பக் காலத்தில் எழுதிய சில கதைகளிலேயே தனித்துவத்தை வெளிப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்று என்ற வரிசையில் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாயின. ஒன்றுக்கு ( தணுப்பு ) கேரள சாகித்திய அக்காதெமி விருதும் அளிக்கப்பட்டது. மலையாள  இதழ்களில் அவரது கதைகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன.

ஏறத்தாழ இதே கால அளவில் கமலா தாஸாக ஆங்கிலக்  கவிதைகளும் எழுதினார். இந்திய ஆங்கிலக் கவிதையில் அன்று புகழ் பெற்றிருந்த நிஸிம் எசக்கியேல், .கே.ராமானுஜன், அடில் ஜெஸ்ஸவாலா, கேகி தாருவாலா, ஜீவ் பட்டேல், பிரித்தீஷ் நந்தி, அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா முதலானவர் களுடன் முக்கியக் கவிஞராகக் கவனம் பெற்றிருந்தார். இரண்டு தொகுப்புகளுக்கு சர்வதேசப் பரிசுகளும் வழங்கப் பட்டிருந்தன. கமலா தாஸ் இடம் பெறாத  இந்திய ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளே இல்லை. இல்லஸ் டிரேட்டட் வீக்லி க்கும்  அன்று வெளிவந்து நின்று போன யூத் டைம்ஸ்  மாத இதழுக்கும் கவிதைப் பகுதி ஆசிரியராகப் பங்களிப்புச் செய்து வந்தார்.

இவையெல்லாம் மாதவிக்குட்டி அல்லது கமலா தாஸை முக்கிய இலக்கிய ஆளுமையாகக் காட்டின. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் அவருக்குக் கணிசமான வாசகர்கள் இருந்தனர். 'என் கதை' சுயசரிதை எழுதப்பட்ட பின்பு இரு மொழிகளிலும் வாசகர் எண்ணிக்கை விரிவடைந்தது. எழுதியவரும் முக்கியமான இலக்கியவாதி என்ற நிலையிலிருந்து பிரபல இலக்கியவாதியாக ஆனார்.

'ன் கதை'யை மாதவிக்குட்டி முதலில் மலையாளத்தில்தான் எழுதினார். அன்று வெளிவந்து கொண்டிருந்த 'மலையாள நாடு' வார இதழில் தொடராக வெளி வந்தது. சுய சரிதையின் அறிமுக அத்தியாயம் ' ஒரு குருவியின் அவலம்' வெளி வந்த 1972ஆம் ஆண்டின் 'மலையாள நாடு - ஓணப் பதிப்பு' சூடப்பம்போல விற்றுத் தீர்ந்து மறு அச்சு செய்யப்பட்டது. தொடர் வெளி வந்துகொண்டிருந்த காலத்தில் இதழின் விற்பனை ஐம்பதாயிரம் பிரதிகள் கூடுதலாக  உயர்ந்தது. மாதவிக்குட்டி பிரபல எழுத்தாளராக அறியப்பட்டார். அதுவரை சீரிய இலக்கிய வாசகர்களின் கவனத்துக்கு மட்டுமே உரியவராக இருந்தவர் வெகுஜன வாசக வட்டத்திலும் தொடர்ந்து விவாதிக்கப்படுபவர் ஆனார். ஏறக்குறைய இலக்கியத் திருவுரு வாகவே  புகழப்பட்டார். இந்த நட்சத்திர மதிப்பு அவருக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் உதவின. அவரது கதைகள் புது வாசகர்களை எட்டவும் அதன் வாயிலாக அவர் முன்வைத்த பெண்ணுலகு விரிந்த பார்வைக்குச் செல்லவும் உதவியது. eeeஎதிர்மறையாகக்  கடும் அவதூறுகளுக்கும் பழிதூற்றல் களுக்கும் அவரை இலக்கு ஆக்கியது. ‘என் கதை’ வெளிவந்த காலம் முதல் மரணம்வரை – அதீதமான பாராட்டு, கேவலமான தூஷணை என்ற இரட்டை நிலை தொடர்ந்தது. மாதவிக்குட்டி அவ்வப்போது இதனால் பாதிக்கப்பட்டார். எனினும் ஒருபோதும் தளர்ந்து விடவில்லை. தனது நம்பிக்கைகளில் உறுதியாக நின்றார். படைப்பு எழுச்சி குன்றாமல் பார்த்துக் கொண்டார். நேர்ப் பேச்சில் இதைச் சொன்னபோது அவர் சொன்ன பதில் ‘ அக்கினி பர்வதத்தை ஈரத் துவாலையால் மூட முடியாது’.

மாதவிக்குட்டியின் வருகையின் மூலமே மலையாளப் புனைகதைகளில் பெண்ணுலகின் அழுத்தமும் ஆழமுமான சித்திரங்கள் துலங்கின. பெண்ணை அவளுடைய சுயத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கும் இந்த இயல்பை அவர் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த லலிதாம்பிகா அந்தர்ஜனத்திடமிருந்தும் கே.சரஸ்வதியம்மாவிடமிருந்தும் மறைமுகமாக பெற்றிருக்கலாம். நம்பூதிரிப் பெண்களின் ஒடுக்குமுறையை எழுதியவர் லலிதாம்பிகா. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சரஸ்வதியம்மா நடுத்தர வர்க்கப் பெண்களின் நிலையை வெளிப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகவே மாதவிக்குட்டியின் கதைகளைச் சொல்ல முடியும். முன்னவர்கள் இருவரும் பெண்ணின் இருப்பையும் வேட்கையையும் வெளிக்காட்டியபோது மாதவிக் குட்டி இந்த இரண்டுடன் அவளது கலகத்தையும் திறந்து காட்டினார். லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் பெண்ணுலகம் நம்பூதிரிப் பெண்களின் தறாவாட்டுச் சிறையில் ஒதுங்கியதாகச் சொல்லப்பட்டது. சரஸ்வதியம்மா வின் பெண்சார்பு எழுத்துக்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாயின. அந்த விமர்சனத்தால் கசந்துபோய் இலக்கியத்துறையை விட்டே விலகினார். வெளி உலகுக்குத் தெரியாமலே வாழ்ந்து மறைந்தார். தன் மீதான விமர்சனங்களைக் கண்டு நொந்துபோன சரஸ்வதியம்மா ஒரு கட்டத்தில் இப்படிச் சொன்னார்: ‘என்ன உலகம் இது? என்ன கேடுகெட்ட காரியத்தையும் செய்யலாம். ஆனால் அதைப் பற்றிச் சொல்லமட்டும் கூடாது என்று ஆட்கள் நினைக்கிறார்கள்’. அந்த நினைப்புக்கு எதிரான கலகமே மாதவிக்குட்டியின் எழுத்து. அந்த எழுத்தில் அவர் கடைபிடித்த அச்சமற்ற நிலைப்பாட்டின் சாட்சியமே  ’என் கதை’.

என் கதையில் முன்வைக்கும் விஷயங்களையே மாதவிக்குட்டி அதற்கு முந்தைய  சிறுகதைகளிலும் கையாண்டிருந்தார். அவை கதைகள் என்பதால் பூடகமாச் சொல்லப்பட்டிருந்தன. அவருடைய தனி வாழ்க்கை அனுபவங் களைக் கதாபாத்திரங்களுக்கு அளித்து எழுதப்பட்ட கதைகள் அவை. என் கதையில் அவரே பாத்திரம். அவரது வாழ்க்கையே களம். அதில் தன்னை, தனது உலகை, தனக்கு நேர்ந்த அனுபவங்களை, தனது உணர்ச்சிகளை, தனது குமுறலை அப்பட்டமாகக் காட்டினார். அதிலிருந்த வெளிப்படையான தனமையும் சுதந்திர உணர்வுமே அதிர்ச்சியை அளித்தன. ஒரு பெண் இப்படி எழுதலாமா என்று கொந்தளிக்கச் செய்தன. வாசிப்புப் பழக்கமுள்ள மலையாளிகள் நடுவே நாலப்பாட்டுத் தறவாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்படி எழுதலாமா? என்ற கேள்வியை ‘என் கதைஎழுப்பியது.

சாத்வீகக் கவிஞரான பாலாமணியம்மாவின் மகள். பெருமை மிக்க நாளிதழான மாத்ருபூமியின் நிர்வாக இயக்குநரான வி.எம். நாயரின் மகள். இலக்கிய ஆளுமையான நாலப்பாட்டு நாராயணமேனனின் மருமகள். இத்தனை தறவாட்டு மகிமை கொண்ட ஒருத்தி இத்தனை பகிரங்கமாகவா எழுதுவாள்? என்று உறவினர்களிடையே ஆற்றாமை. அந்தக் காலகட்டத்தில் மலையாளிகளின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட நாலப்பாட்டு தறவாட்டில் எழுந்த புகார் பெரும்பான்மையான கலாச்சாரக் காவலர்களிடமும் எதிரொலித்தது. என் உறவினர்கள் தர்மசங்கடப்பட்டார்கள். மகிமை நிறைந்த என் குடும்பத்தின் பெயருக்குக் களங்கம் கற்பித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார்கள்.எனக்குப் பிரியமான அநேக விஷயங்களை நான் இழக்க இந்தப் புத்தகம் காரணமாக இருந்தது. ஆனால் ஒரு நொடி கூட அதை எழுதியது பற்றி நான் வருந்தவில்லை என்று மாதவிக்குட்டி குறிப் பிட்டார்.

இலக்கிய, கலாச்சாரச் சூழலில் கொந்தளிப்பையும் இதழ் விற்பனையில் பரபரப்பையும் ஏற்படுத்திய ‘என் கதை’யின் வாராந்திர வெளியீடு பாதியில்  நின்றுவிட்டது ஒரு முரண். சன்மார்க்கர்களின் வற்புறுத்தலாலும் இலக்கியத் துக்குப் புறம்பான செயலாலும் மாதவிக்குட்டி தொடரைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். இந்த நடவடிக்கை அவரை மேலும் பழிச் சொல்லுக்கு ஆளாக்கியது. அவரை எழுதச் செய்து விற்பனையை அதிகரித்துக் கொண்ட மலையாளநாடு இதழ், அவரைப் பழிவாங்குவதற்காக வேறு உத்தியைக் கையாண்டது. நாவலாசிரியர் பம்மனின் கதையைத் தொடராக வெளியிட்ட்து. ‘பிராந்து’ (பைத்தியம்) என்ற அந்தக் கதையின் நாயகியாக மாதவிக்குட்டியை மறைமுகமாகச் சித்தரித்தது. ‘என் கதையில் அவர் பட்டவர்த்தனமாக எழுதியவற்றுக்கு பம்மனின் நாவல் மலிவான வியாக்கியானங்களைக் கொடுத்தது. முதலில் ஆத்திரமடைந்து வழக்குத் தொடர்வதாக நோட்டீஸ் அனுப்பிய மாதவிக்குட்டி பின்னர் பெருந்தன்மையுடன் விலகினார். அவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டபோது அவரது குறும்பு விளங்கியது. ‘ என் கதை மலையாளத்தில் இருக்கிறவரைக்கும் பம்மனின் சரக்கும் இருக்கும். ஆனால் அதை எப்படிச் சொல்வார்கள்?பஷீரின் பால்யகால சகி, மாதவிக் குட்டியின் என் கதைஎன்று சொல்வதுபோலச் சொல்ல முடியுமா?பம்மனின் பிராந்து என்றுதானே சொல்லப்படும்என்றார்.

ன் கதைதொடர் நிறுத்தப்படுவதற்கு சற்று முன்போ அல்லது நின்ற  உடனேயோ கமலா தாஸ் அதை மை ஸ்டோரியாக ஆங்கிலத்திலும் எழுதினார். எழுபதுகளில் வெளிவந்து கொண்டிருந்த தி கரண்ட்வார இதழில் தொடராக வெளியிடப்பட்டது. முன்னமே ஆங்கிலக் கவிஞராக அறியப் பட்டிருந்த கமலா தாஸை மேலும் பிரபலமாக்கியது. அன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்த தி பிளிட்ஸ்இதழுடன் போட்டியிட கரண்ட்இதழுக்கு ‘மை ஸ்டோரிபெரிதும் உதவியது. பிளிட்ஸ் இதழின் முக்கியப் பத்தியாக அதன் கடைசிப் பக்கத்தில் பிரபல ஆங்கில நாவலாசிரியரும் திரைக்கதையாளருமான கே.ஏ.அப்பாஸின் கடைசிப் பக்கம் வெளிவந்து கொண்டிருந்த்து. கமலா தாஸின் தொடர் அதை எதிர்கொண்டது. சில வாரங்களில் கரண்ட் இதழ்  விற்பனையில் ‘பிளிட்ஸ்ஐ மிஞ்சியது. என் கதைக்காக மலையாளத்தில் கேட்டதை விட அதிகமான வசவுகளை மை ஸ்டோரிஆங்கிலத்தில் வாங்கிக் கொடுத்த்து. ஆங்கிலம் பேசினாலும் மலையாளத்தில் பேசினாலும் மரபான இந்திய மனம் ஒரே மாதிரித்தான் இருந்தது இவை கமலா தாஸின் வாசகங்கள்.

இந்த வாசகங்கள் சரியானவைதாம். ஏனெனில் கமலா தாஸ் சம கால மதிப்பீடுகளுக்கு நேர் முரணாகத் தன்னை உருவாக்கிக் கொண்ட படைப்பாளி. அதற்கு ‘என் கதைஎடுத்துக் காட்டு.  ஒரு படைப்பாளி தனது கலைக்காகவும் ஒரு பெண் தனது இருப்புக்காகவும் தன்னையே ஆகுதி ஆக்கிய செயலுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல கமலா தாஸுக்கு நிகரான இன்னொரு ஆளுமை இல்லை என்றே தோன்றுகிறது. கலாச்சாரமும் ஒழுக்க நெறிகளும் பெண்மீது சுமத்திய எல்லாவற்றையும் அவர் ‘என் கதையில் கேள்விக்குரியவை யாக்கினார். பெண்ணின் இருப்பும் மனமும் அவளது வேட்கைகளும் கனவுகளும் என்னவென்று பகிரங்கப் படுத்தினார். அதுவரை பெண்ணின் இருப்பும் மனமும் மட்டுமே பேசப்பட்ட இலக்கியச் சூழலில் பெண்ணின் உடலையும் அதன் சஞ்சார வேட்கைகளையும் வெளியரங்க மாக்கினார். காதலுக்கும் காமத்துக்கும் புதிய விளக்கங்களை நிர்மாணம் செய்தார். உறவுகளின் பாசாங்கை திரை விலக்கிக் காட்டினார். அதற்குத் தன்னையே பலியிடவும் செய்தார். உறவுமுறையின் பெயரால் பதினைந்து வயதுக் கமலாவை அவரை விடப் பல வருடங்கள் மூத்தவரான மாதவ தாஸுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். தனது முதலிரவை ‘தோல்வியுற்ற வன்புணர்ச்சிஎன்றே அவரால் காண முடிகிறது. அது ஒரு சாட்சியம் என்றே தோன்றுகிறது. ஆண்மைய அமைப்பு பெண்ணின் உடலையும் உணர்வையும் நுகர் பண்டமாகவே கருதும் நிலைக்கு எதிரான சாட்சியம்.உடலால் அடிமைப் படுத்தப்பட்ட பெண் உடலையும் இருப்பையும் ஆன்மீகமான தேடலையும் இழக்க நேர்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்ன சாட்சியம். சரியான பார்வையில் என் கதையில் தொனிப்பது பெண்ணின் ஒப்புக் கொள்ளல் அல்ல; மாறாக தன்னைச் சிறை வைத்திருக்கும் சமூக, கலாச்சார, மத, ஒழுக்க நெறிகளைப் பற்றிய சாட்சியமே கமலா தாஸின் எழுத்தில் தொனிக்கிறது. பிற ஆடவருடனான காதல், ஓரின விழைவு ஆகியவற்றையும் இதே தொனியிலேயே ‘என் கதைமுன் வைக்கிறது. இந்த நூலின் மிக நுட்பமான வலுவும் இன்றும் இதை சமகாலப் பொருத்தப்பாடு கொண்டதாக நிலைநிறுத்துவதும் இதுவே. அரிதாக நூலின் பக்கங்களில் புலப்படும் இறைஞ்சலும்  சூழலைப் பற்றிய அழுத்தமான சாட்சியமாகவே உருப் பெறுகிறது. இழப்புகள், தனிமை, சமூக்க் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் நடுவிலிருந்து அன்பையும் மகிழ்ச்சியையும் தேடும் பெண்மையையே ‘என் கதைவெளிப்படுத்துகிறது. எல்லாத் தடைகளையும் கடந்து, விரிந்த வெளியுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் கருவியாகவே கமலா தாஸ் எழுத்தைக் காண்கிறார். அதனாலேயே தன்னை நேர்மையுடன் வெளிப் படுத்தவும் செய்கிறார். வேறு எந்த மதிப்பீட்டை விடவும் முற்றான அன்பை விரும்பும் பெண்ணுக்கு அது மறுக்கப்படும் நிலையே என் கதையில் சொல்லப்படுகிறது.

ங்கிலத்தில் என் கதைவெளிவந்து கொண்டிருந்த அதே கால அளவில் தமிழிலும் அதன் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. ஹேமா ஆனந்ததீர்த்தன் மொழிபெயர்ப்பில் குமுதம் இதழில் தொடராக வெளியிடப்பட்டது. நூல் வடிவில் மலையாளத்தில் 1973லும் ஆங்கிலத்தில் 1976லும் வெளியாயின. ‘என் கதையின் மும்மொழி வடிவங்களையும் ஒப்பிட்டு வாசிப்பது அன்று உற்சாகமூட்டும் விளையாட்டாக இருந்தது எனக்கு. தமிழ் மொழிபெயர்ப்பு வெகுஜன வாசகர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் வகையில் செய்யப்பட்டிருந்தது. படிமங்களும் உருவகங்களும் இலக்கிய விளக்கங்களும் கவித்துவமும் கொண்ட மூலப் பிரதி கிளுகிளுப்பூட்டும் எழுத்தாகக் குறுக்கப்பட்டிருந்தது. தமிழ் வாசகர்களின் ’கற்பு’க்கு ஊறு நேர்ந்திடாத வகையில் சொற்கள் இடக்கரடக்கலுடன் பயன்படுத்தப் பட்டிருந்தன.

ஒரு எழுத்தாளரே தன் சுயசரிதையை இரு மொழிகளில் வெவ்வேறாக எழுதியிருக்கிறார் என்ற புகழை அல்லது நிந்தனையைப் பெற்ற நூல் கமலா தாஸின் தன் வரலாறாகவே இருக்கக் கூடும். என்டெ கதையின் விரிவு என்று ‘மை ஸ்டோரியைச் சொல்ல வேண்டும். பக்க அளவிலும் விளக்கங்களிலும் இரண்டுக்கும் வேற்றுமைகள் இருக்கின்றன. மலையாளத்தில் இருபத்தியேழு அத்தியாயங்களில் இரு நூறு பக்கங்களில் எழுதப்பட்ட வரலாறு ஆங்கிலத்தில் ஐம்பத்துச் சொச்சம் அத்தியாயங்களுடன் முந்நூறு பக்கங்களாக விரிவடைந்திருக்கிறது. இரு மொழியிலும் உள்ள வாசகர்களை முன்வைத்து இது நிகழ்ந்திருக்கலாம். மலையாள வாசகருக்கு ‘நாலப்பாட்டுத் தறவாடுஎன்று கேட்டதும் விரியும் மனக் காட்சி ஆங்கில வாசகருக்குச் சாத்தியமில்லை. அவர்களது புரிந்துகொள்ளலுக்கு உதவியாகப் பல அத்தியாயங்கள் விரித்து எழுதிச் சேர்க்கப்பட்டன. சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டன. இன்னொரு பக்கம்  மலையாளத்தில் எழுதப்பட்ட பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் அதே பகுதிகள் ஆங்கிலத்தில் சர்வ சுதந்திரத் துடனும் எழுதப்பட்டிருக்கின்றன. மலையாளத்தில் தென்பட்ட ஒளிபுகாக் காட்சிகள் ஒளி அநாயாசமாக ஊடுருவித் துலங்கின ஆங்கிலத்தில்.இந்த மாற்றத்தை இப்படிச் சொல்லலாம்: மலையாளத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் இடம்பெறச் செய்யவில்லை. அல்லது ஆங்கிலத்தில் எழுத விருந்ததை மலையாளத்துக்குக்  கொண்டுவரவில்லை. இது நாவலுக்குப் பொருந்தும்; சுய சரிதைக்குப் பொருந்துமா? என்ற கேள்விக்குக் கமலா தாஸ் கேட்ட மறு கேள்வி யோசிக்க வைத்தது. ‘ ஏன் கூடாது? இது என்னுடைய கதைதானே, நடந்த உண்மைகளை நான் சொல்லியிருக்கிறேன். அதே போல நடந்திருக்க வேண்டிய உண்மைகளையும் நானேதானே சொல்லியிருக்கிறேன்? என்னுடைய உண்மையைபோலவே நான் சொன்ன பொய்களும் உண்மையானவை. அப்படிப் பொய் சொல்ல வைத்தது நானில்லையே?

ன் கதைஎழுதப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகளைக் கடந்த பின்னர் அதை ஓர் இலக்கியப் பிரதியாக முன்வைக்கும் இந்தத் தமிழாக்கம் வெளிவருகிறது. நண்பர் நிர்மால்யாவின் தமிழாக்கப் பிரதியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது மேற்சொன்ன எண்ணங்கள் திரண்டு வந்தன.அந்தச் செயல், எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. ‘என் கதை தொடர்பாக இவ்வளவு சங்கதிகள் மனதுக்குள்ளே மறைந்திருந்தனவா? என்ற வியப்பு. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கேள்விகளை எழுப்பக் கூடிய, வாசிப்பில் புதுமை குன்றாத பிரதியாக இருப்பது குறித்த மகிழ்ச்சி.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு மேற்கொள்ளும் நம்பிக்கைக்குரிய சிலரில் ஒருவர் நிர்மால்யா. நவீன மலையாள இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் சிலவற்றை நேர்த்தியாகவும் உண்மை யுணர்வுடனும் தமிழாக்கம் செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பைச் சடங்காக அல்லாமல் விருப்பத்துடன் செய்திருக்கிறார் என்பதற்குச் சில உதாரணங் களைச் சொல்லலாம். சாரா ஜோசப்பின் ‘ஆலாஹாவின் பெண் மக்கள், கோவிலனின் தட்டகம், எம்.சுகுமாரனின் ‘சிவப்புச் சின்னங்கள்கமலா தாஸின் ‘சந்தன மரங்கள்ஆகிய புனைவெழுத்துகளையும் வைக்கம் முகம்மது பஷீரைப் பற்றி எம்.கே.சானு எழுதிய ‘பஷீர் – தனிமையில் பயணிக்கும் துறவி என்ற திறனாய்வு நூலையும் இந்த உதாரண வரிசையில் சேர்க்க விரும்புகிறேன். என் கதை மொழிபெயர்ப்பு அந்த வரிசையை மேலும் மதிப்புள்ளதாக்குகிறது.

திருவனந்தபுரம்                                                                                             சுகுமாரன்
1 மே 2016