புதன், 29 ஆகஸ்ட், 2018

ஸிண்ட்ஸி மண்டேலாவின் கவிதை





ஸொவேட்டோவில் அறியப்படாத ஒரு நதி இருக்கிறது

அதில் ஓடுவது ரத்தம் என்று சிலர் சொல்கிறார்கள்
அதில்  ஓடுவது கண்ணீர் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்
ஒரு தலைவர் சொல்கிறார்
அதில் ஓடுவது நலமும் வளமுமே என்று.

ஸொவேட்டோவில் யாரும் பருகாத தண்ணீர்


ஸொவேட்டோவில்  அறியப்படாத ஒரு மரம் இருக்கிறது

அதில் காய்ப்பது துக்கம் என்று சிலர் சொல்கிறார்கள்
அதில் காய்ப்பது மரணம் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்
ஒரு தலைவர் சொல்கிறார்
அதில் காய்ப்பது நலமும் வளமுமே என்று.

ஸொவேட்டோவில் யாரும் சுவைக்காத கனி

ஸொவேட்டோவில்  ஒரு அறியப்படாத  நதி இருக்கிறது
ஸொவேட்டோவில்  ஒரு அறியப்படாத  மரம் இருக்கிறது

அந்த உடல்
அந்த ரத்தம்
இரண்டுமே அறியப்படாதவை.

*

ஸிண்ட்ஸி மண்டேலா ( Zindzi Mandela ) , வின்னி - நெல்சன் மண்டேலா தம்பதியரின் இளைய மகள். 


என் பெயர் அருண் கோலாட்கர்





என் பெயர் அருண் கோலாட்கர்

என் பெயர் அருண் கோலாட்கர்
என்னிடம்
ஒரு சின்னத் தீப்பெட்டி இருந்தது

அதை நான் தொலைத்தேன்
பிறகு கண்டுபிடித்தேன்
அதை எனது
வலதுகைப் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்

அது இன்னும் இருக்கிறது அங்கேயே.

ச ரி த ம்



                                                                           சரிதம்



உதிர்ந்து கிடக்கும் சருகுகளைப்
புரட்டிப் புரட்டிக்
காற்று என்ன வாசிக்கிறது?


மரத்தின் நாட்களை.

வெள்ளப் பெருக்கில்...



    தகழி சிவசங்கரப் பிள்ளையின்  புகழ்பெற்ற கதைகளில் ஒன்று வெள்ளப் பொக்கத்தில் 
( வெள்ளப் பெருக்கில் ) . முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை. அந்தக் காலப் பகுதியில் குட்டநாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் அனுபவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. ஓர் ஆர்வத்தால் உந்தப்பட்டு கதையைத் தமிழாக்கம் செய்ய முயன்றேன். மொழிபெயர்க்கும் நோக்கத்துடன் கதையை மறுமுறை வாசித்தபோது ஆர்வம் குன்றிப் போனது. மிகப் பழைமையான மொழி. எதார்த்தமான கதைச் சூழலுக்குப் பொருந்தாத கற்பனாவாத நடை. மனிதாபிமான அக்கறை வெளிப்பட்டே ஆக வேண்டும் என்ற ஆசிரியரின் விருப்பம் காரணமாக உருவாகியிருக்கும் சன்மார்க்க போதனை - இவையெல்லாம் ஆர்வத்தைக் குறைத்து மொழி பெயர்ப்பைக் கைவிடச் செய்தன. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தகழியின் கதையாச்சே என்ற வாஞ்சையில் முழுவதுமாகத் தமிழாக்கி முடித்தேன். எனினும் மொழியாக்கம் நிறைவு தரவில்லை. அப்படியே கிடப்பில் போட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராம்ராஜ் ( தமிழ்த்துறை, பூசாகோ கலைக் கல்லூரி, கோவை ) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தகழியின் இந்தக் கதை பற்றிக் கேட்டார். கேரளத்தில் அண்மையில் நிகழ்ந்த பெருவெள்ளத்தைப் பின்புலமாக வைத்துத், தான் எழுதிக் கொண்டிருக்கும்  நாடகப் பிரதிக்காகக் கதையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். ஞாபகத்திலிருந்த கதையைத் தொட்டுக் காட்டுவதுபோலச் சொல்லிவிட்டுப்  பழைய குறிப்பேடுகளைத் தேடினேன். 94 ஆம் ஆண்டு வாக்கில் மொழியாக்கம் செய்து வைத்திருந்த கதையைக் கண்டுபிடித்து கணிணிப் பிரதியாக மாற்றினேன். அந்த வேளையில் முன்னர் நினைத்ததுபோலக் கதை சோடை போன பிரதியல்ல என்று தோன்றியது. சமீபத்திய வெள்ளக் கொடுமைக் காட்சிகளை விடாமல் பார்த்தது காரணமாக இருக்கலாம் - கதை இன்றைய சூழலுக்கும் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தெரிகிறது.

’வெள்ளப் பெருக்கில்...’ கதையை மறு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளத் தூண்டிய நண்பர் ராம்ராஜுக்கு மிக்க நன்றி.




                                                                                   வெள்ளப் பெருக்கில்...


ருக்குள் உயரமான இடமே  கோவில்தான். அங்கே கடவுளும் கழுத்தளவு வெள்ளத்தில் நிற்கிறார். வெள்ளம். எங்கும் வெள்ளம். ஊர்க்காரர்கள் எல்லாரும் கரையைத் தேடிப் போனார்கள். வள்ளம் இருக்கும் வீட்டில் காவலாள் நிறுத்தப்பட்டான். கோவிலின் மூன்று அறைகள் கொண்ட மாளிகைத் தளத்தில்  67 குழந்தைகள் இருந்தார்கள். 356 ஆட்களும் நாய், பூனை, ஆடு, கோழி முதலான வளர்ப்பு மிருகங்களும் ஒன்றாகக் கழிந்தார்கள்.ஒரு சச்சரவு இல்லை.

சேன்னப்பறயன் ஒரு இரவும் ஒரு பகலும் வெள்ளத்திலேயே நின்றான். அவனுடைய தம்புரான் மூன்னாயி உயிரைப் பிடித்துக் கொண்டு கரையேறிவிட்டார். குடிசைக்குள் முதலில் வெள்ளம் வரத் தொடங்கியதுமே ஓலையையும் கம்புகளையும் வைத்துப் பரண்கட்டியிருந்தார்கள். வெள்ளம் சட்டென்று வடிந்து விடும் என்று நினைத்து இரண்டு நாட்களை அதன்மேல் உட்கார்ந்து ஓட்டினார்கள். போதாக் குறைக்கு கொல்லை வாழை மரத்தில் நான்கைந்து குலைகள் இருக்கின்றன.  வைக்கோல் போரும் கிடக்கிறது.  அங்கிருந்து வெளியேறினால்  ஆம்பிள்ளைகள் அவற்றையெல்லாம் அடித்துக்  கொண்டு போய்விடலாம். குடிசையை வெள்ளம் மூழ்கடிக்க முப்பது நாழிகை கூட ஆகாது என்றும் தனக்கும் தன்னுடைய  குடும்பத்துக்கும் முடிவும் வந்து விட்டது என்றும் அவன் முடிவு கட்டியிருந்தான். பயங்கர மழை விட்டு முன்று நாட்கள் ஆயின. சேன்னன் கூரையின் ஓலையைப் பிரித்து எப்படியோ வெளியேறி நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தான். வடக்காக ஒரு கெட்டு வள்ளம் போகிறது. சேன்னப்பறயன்  உரக்கக் கூவி அவர்களை அழைத்தான். அதிர்ஷ்டவசமாக வள்ளக்காரர்களுக்கு காரியம் புரிந்த்து. வள்ளத்தை குடிசையை நோக்கித் திருப்பினார்கள். குழந்தைகளையும் பெண்டாட்டியையும் நாயையும் பூனையையும் குடிசையின் கூரை விட்டங்கள் வழியாக வெளியில் இழுத்துப் போட்டான். அதற்குள் வள்ளமும் அருகில் வந்த்து. பிள்ளைகள் வள்ளத்தில் ஏறிக் கொண்டிருந்தார்கள். ‘சேன்னச்சோ போறிங்களா?என்று மேற்கேயிருந்து யாரோ கேட்டார்கள். இந்தப் பக்கம் வா’. அது
மடியத்தறை குஞ்ஞேப்பன். அவனும் கூரைமேல் நின்றுதான் கூப்பிடுகிறான். அவசரமாகப் பெண்டாட்டியை வள்ளத்தில் ஏற்றி விட்டான். அந்த இடைவெளியில் பூனையும் வள்ளத்தில் தாவி ஏறியது. நாயின் நிலைமையை யாரும் யோசிக்கக வில்லை. அது குடிசையின் மேற்குச் சரிவில் அங்குமிங்குமாக மோப்பம் பிடித்துக் கொண்டு நடந்தது.



இப்போது பரணுக்கு மேலே முழங்கால்வரையும் வெள்ளம்.
மேற்கூரையின் இரண்டு வரிசை ஓலைகளும் வெள்ளத்துக்கு அடியில் இருந்தன. சேன்னன் உள்ளேயிருந்து  அழைத்தான். அழைப்பை யார் கேட்க? பக்கத்தில் யார் இருக்கிறார்கள்? கர்ப்பிணியான ஒரு பறைச்சி, நாலு குழந்தைகள், ஒரு பூனை, ஒரு நாய் இவ்வளவு ஜீவன்கள் அவனை நம்பி இருக்கிறார்கள்.

வள்ளம் நகர்ந்து தொலைவுக்குப் போனது..

நாய் கூரையின் உச்சிக்கு வந்தது. சேன்னனின் வள்ளம் தொலைதூரம் கடந்திருந்தது. அது பறந்து போகிறது. அந்த ஜந்து மரணவேதனையுடன் ஊளையிடத் தொடங்கியது. ஆதரவற்ற மனிதனின் குரலுடன் ஒப்பிடக் கூடிய ஒலித் தொடர்களை எழுப்பியது. யார் கேட்க? குடிசையின் நான்கு சுவர்கள் மீதும் ஓடியது. சில இடங்களை முகர்ந்த்து. ஊளையிட்டது..

குடிசைக் கூரைமேல் நிம்மதியாக உட்கார்ந்திருந்த ஒரு தவளை எதிர்பாராத இந்த ஆர்ப்பரிப்பைக் கேட்டு நாயின் முன்பாகவே ;தொபீர் என்று வெள்ளத்தில் குதித்தது. நாய் பயந்து திடுக்கிட்டுப் பின்னோக்கித் துள்ளி நீரில் ஏற்பட்ட அதிர்வைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த்து.

அந்த விலங்கு அங்கும் இங்குமாகப் போய் மோப்பம் பிடித்தது உணவைத் தேடியதாலாக இருக்கலாம். ஒரு தவளை அதன் நாசித்துவாரங்களுக்குள் மூத்திரம் பெய்துவிட்டு தண்ணீரில்  குதித்து ஓடியது. நாய் அசௌகரியமாகச் செருமியது தும்மியது தலையை உலுக்கிச் சீறியது முன்னங் கால்களில் ஒன்றால் முகத்தைத் துடைத்தது.

பயங்கரமான பேய் மழை மீண்டும் தொடங்கியது. ஒண்டி ஒடுங்கி உட்கார்ந்து அந்த நாய் அதைப் பொறுத்துக் கொண்ட்து.

அதன் எஜமானன் அம்பல்புழைக்குப் போய்ச் சேர்ந்திருந்தான்.

இரவு ஆனது. ஒரு மூர்க்கமான முதலை நீரில் பாதி மூழ்கிக் கிடக்கும் அந்தக் குடிசையை உரசிக் கொண்டு மெல்லமெல்ல நீந்திப் போனது. பயந்துபோய் வாலைத் தாழ்த்தியபடி நாய் குரைத்தது. எதுவும் தெரியாத பாவனையில் முதலை நீந்திப் போனது.

முகட்டில் உட்காந்திருந்த அந்த மிருகம், கார்மேகங்கள் திரண்ட, அந்தகாரத்தின் பீதிபடர்ந்த ஆகாயத்தைப் பார்த்து ஊளையிட்டது. நாயின் தீனக் குரல் வெகுதூரத்திலிருந்த இடங்களையும் எட்டியது. இரக்கமுள்ளவனான வாயு பகவான் அதைச் சுமந்து கொண்டு பாய்ந்தான். வீட்டைக் காவல் காக்க நின்றிருந்த சில இதயங்கள் ‘அய்யோ குடிசைமேல் உட்கார்ந்து நாய் ஊளையிடுகிறது என்று சொல்லியிருக்கலாம். அதன் எஜமான் இப்போது கடற்கரையில் இரவு உணவு அருந்திக் கொண்டிருக்கலாம். சாப்பிட்டு முடிக்கும்போது வழக்கம்போல இன்றும் அதற்கான ஒரு உருண்டைச் சோற்றை உருட்டிக் கொண்டிருக்கலாம்.


சிறிது நேரம் அதி உச்சமாக நாய் ஊளையிட்டது. பிறகு குரல் அடங்கி மௌனமானது. வடக்கே எங்கோ ஒரு வீட்டிலிருந்து காவலாளி ராமாயணம் வாசிக்கிறான்.அதைக் கவனிப்பதுபோல நாய் அமைதியாக வடக்குப் பார்த்து நின்றது. பின்னர் அந்த ஜீவன் தொண்டை கிழிவதுபோல மீண்டும் நெடுநேரம் ஊளையிட்டது.

அந்த இரவின் அமைதியில் செவிக்கினிய ராமாயண வாசிப்பு மீண்டும் எங்குப் பரவியது. நம்முடைய ஞமலியும் அந்த மனிதக் குரலுக்குச் செவிசாய்த்துச் சற்று நீண்ட நேரம் அசையாமலே நின்றது.

ஒரு குளிர் காற்றில் அந்த இனிய அமைதிப் பாடல் கரைந்தது.
காற்றின் ஓசையையும் அலைகளின் களக் களக் சத்தத்தையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

சேன்னனின் நாய் கூரை முகட்டில் படுத்திருந்தது. அது ஆழமாக மூச்சு விட்டது. இடையிடையே நிராசையுடன் எதையோ முணுமுணுத்த்து. அங்கே ஒரு மீன் துள்ளியது நாய் எழுந்து குரைத்தது. இன்னோரிட்த்தில் தவளை குதித்தது. நாய் அசௌகரியமாக முனகியது..


விடிந்த்து. அடங்கிய குரலில் அது ஊளையிட ஆரம்பித்த்து. இதயம் பிளந்த்துபோன்ற ஒரு ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தது. தவளைகள் அதை உற்றுப் பார்த்தன. நீரில் குதித்து தாவித் தாவி அவை மூழ்குவதை நாய் அசையாமல் பார்த்து நின்றது.


நீர்ப்பரப்புக்கு மேலாகத் தெரிந்த ஓலைக் கூரைகளை அது ஆசையுடன் பார்த்த்து. எல்லாம் வெறிச்சோடியிருந்தன. ஒரு இடத்திலும் நெருப்புப் புகை இல்லை. உடம்பைக் கடித்து சுகமடையும் ஈக்களைக் கடித்துக் கொரித்தது நாய். பின்னங் கால்களால் தாடையை சொறிந்து ஈக்களை விரட்டியது.

சூரியன் சிறிது நேரம் பிரகாசித்த்து. அந்த இளம் வெயிலில் கிடந்து அது மயங்கியது. மந்தமாக அசையும் வாழை இலையின் நிழல் கூரைமேல் நகர்ந்து கொண்டிருந்தது. அது எழுந்து நின்று குரைத்த்து.

கருமேகம் படர்ந்து சூரியன் மறைந்தது. ஊர் இருண்டது. காற்று அலைகளை உலுக்கிவிட்ட்து. நீர்ப்பரப்பின் மீது ஜந்துக்களின் சடலங்கள் மிதந்து போகின்றன. அலைகளில் அசைந்து தாவி மிதக்கின்றன. அவற்றையெல்லாம் அது ஆசையுடன் பார்த்தது. முனகியது.


அதோ தொலைவில் ஒரு சிறு வள்ளம் வேகமாகப் போகிறது. அது எழுந்து நின்று வாலை ஆட்டியது. அந்தப் படகின் திசையைக் கவனித்தது. அது தென்னங் கன்றுகளிடையில் மறைந்தது.

மழை பெய்யத் தொடங்கியது, பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை ஊன்றி உட்கார்ந்திருந்த நாய் நாலு பக்கமும் பார்த்த்து. அதன் கண்களில் யாரையும் அழவைக்கும் ஆதரவின்மை பிரதிபலித்த்து.


மழை விட்ட்து. வடக்கு வீட்டிலிருந்து ஒரு வள்ளம் வந்து தென்னை மரத்தடியை நெருங்கியது. நமது நாய் வாலை ஆட்டி வாய் விட்டு முனகியது. வள்ளக்காரன் தென்னை மரத்தில் ஏறி இளநீர்க் குலையைப் பறித்துக் கொண்டு இறங்கினான். வள்ளத்தில் உட்கார்ந்தே அதை ஓட்டை போட்டுக் குடித்து விட்டு துடுப்பால் துழாவிக் கொண்டு போனான்.


தூரத்து மரக் கிளையிலிருந்து ஒரு காகம் பறந்து வந்து மிதந்து செல்லும் எருமையின் அழுகிய உடல் மீது உட்கார்ந்தது. சேன்னனின் நாய் ஆசையுடன் குரைத்தபோது காகம் யாருக்கும் அஞ்சாமல் மாமிசத்தைக் கொத்தி இழுத்துத் தின்றது. திருப்தியானதும் அதுவும் பறந்து போனது.


ஒரு பச்சைக் கிளி குடிசையை ஒட்டி நிற்கும் வாழையின் இலைமேல் வந்து அமர்ந்து கீச்சிட்ட்து. நாய் பொறுமையிழந்து குரைத்தது. அந்தப் பறவையும் பறந்து போனது.

மலை வெள்ளத்தில் அகப்பட்டு மிதந்து வந்த எறும்புக் கூட்டமொன்று  குடிசையை ஒட்டி ஒதுங்கியது. உணவுப் பொருள் என்று நினைத்த நமது நாய் அதை முத்தமிட்ட்து. கமறித் தும்மி அதன் மென்மையான முகவாய் கன்றிச் சிவப்பானது.


நடுப் பகலுக்குப் பிறகு சிறு வள்ளத்தில் இரண்டு பேர் அந்த வழியாக வந்தார்கள், நாய் ந்ன்றியுடன் குரைத்தது. வாலாட்டியது. மனித மொழிக்கு நெருக்கமான மொழியில் என்னவெல்லாமோ சொன்னது. நீரில் இறங்கி வள்ளத்துக்குள் குதிக்கத் தயாராக நின்றது. ‘தோ, ஒரு நாய் நிக்கிதுஎன்றான் ஒருவன். அவனுடைய இரக்கத்தைப் புரிந்து கொண்டு,  நன்றிக்கு அடையாளமாக அது முனகியது. அது இங்கியே கிடக்கட்டும்என்றான் இன்னொருவன். எதையோ மென்று விழுங்குவதுபோல அது வாயைப் பிளந்து ஒலியெழுப்பியது. பிராத்தனை செய்தது. இரண்டு முறை குதிக்க முற்பட்டது.


வள்ளம் தூரமாகப் போனது. நாய் மீண்டும் ஊளையிட்ட்து. வள்ளக்கார்ர்களின் ஒருவன் திரும்பிப் பார்த்தான்.

அய்யோ

அது வள்ளக்காரனின் கூப்பாடு அல்ல. அந்த நாயின் குரல்தான்.

‘அய்யோ

சோர்வும் இதயத்தைத் தொடுவதுவுமான  தீனப் புலம்பலும் காற்றில் கரைந்தன. மீண்டும் அலைகளின் ஒடுங்காத ஓசை. அப்புறம் யாரும் அதைத் திரும்பிப் பார்க்கவில்லை. வள்ளம் மறையும்வரை நாய் நிலையாக நின்றது. உலகத்திடமிருந்து கடசியாக விடைபெற்றுக் கொள்வதுபோல முணுமுணுத்துக் கொண்டு கூரைமீது ஏறி நின்றது. இனி ஒருபோதும் மனிதர்களை நேசிப்பதில்லை என்று அது சொல்லுவதாக இருக்கலாம்.

நிறையத் தண்ணீரை நக்கிக் குடித்தது அந்த அப்பாவி விலங்கு. மேலே பறந்து செல்லும் பறவைகளைப் பார்த்தது. அலைகளுக்கு இடையில் நெளிந்து ஆடி ஒரு நீர்ப் பாம்பு நெருங்கியது. நாய் தாவி கூரை முகட்டுக்குப் போய் நின்றது. சேன்னனும் குடும்பமும் வெளியேறிய ஓட்டை வழியாக அந்த நீர்ப்பாம்பு குடிசைக்குள்ளே புகுந்தது.நாய் அந்த ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தது. கோபத்துடன் குரைக்கத் தொடங்கியது. பிறகு முணுமுணுத்த்து. உயிர்ப் பயமும் பசியும் அந்த முணுமுணுப்பில் இருந்தன. எந்த மொழிக்காரனுக்கும் எந்தச் செவ்வாய்க் கிரகவாசிக்கும் அதன் அர்த்தம்  புரியும். அந்த அளவுக்கு எங்கும் பரவிய மொழி அது.

இரவாயிற்று.பயங்கரமான சூறைக் காற்றும் மழையும் ஆரம்பித்தன.மேற்கூரை அலையின் மோதலில் ஆடிக் குலுங்கின. நாய் இரண்டு முறை வழுக்கி விழுந்தது. நீருக்கு மேலே ஒரு நீண்ட தலை உயர்ந்தது. அது ஒரு முதலை. நாய் பிராண வேதனையுடன் குரைக்கத் தொடங்கியது. அருகில் கோழிக் கூட்டம் கதறுவது கேட்டது.


நாய் எங்கேருந்து குரைக்குது? இங்கேருந்து ஆளுங்க போகலியா?வைக்கோலும் தேங்காயும் வாழைக்குலையும் நிரம்பிய வள்ளம் வாழை மரத்தடியை நெருங்கியது.

நாய் வள்ளக்காரனை நோக்கித் திரும்பி நின்று குரைத்தது. கோபத்துடன் வாலைத் நிமிர்த்திக் கொண்டு வெள்ளத்தின் அருகில் நின்று குரைத்தது. வள்ளக்காரர்களில் ஒருவன் வாழை மடலில் ஏறினான்.


கூவே, நாய் சாடும்போல இருக்கே


நாய் முன்நோக்கித் தாவியது. வாழை மடலில் ஏறியவன் உருண்டு வெள்ளத்தில் விழுந்தான். மற்றவன் அவைப் பிடித்து வள்ளத்தில் ஏற்றினான். இந்தச் சமயத்துக்குள் நாய் நீந்தி கூரைமேல் ஏறி நின்று உடலை உதறிக் கொண்டு கோபமாகக் குரைத்தது.

திருடர்கள் எல்லாக் குலைகளையும் வெட்டினார்கள். ‘உனக்கு வெச்சிருக்கோம்என்று குரைத்துக் கொண்டிருந்த நாயிடம் சொன்னார்கள். பிறகு வைக்கோல் முழுவதையும் வள்ளத்தில் ஏற்றினார்கள். கடைசியாக ஒருவன் கூரைமேல் ஏறினான். நாய் அவன் காலைக் கடித்தது. வாய்கொள்ளாத சதை அதற்குக் கிடைத்த்து. அவன் அய்யோ என்று அலறிக்கொண்டு வள்ளத்தில் குதித்து ஏறினான். வள்ளத்தில் நின்றிருந்தவன் ஒரு துரட்டியால் நாயின் விலாவில் ஓங்கி அடித்தான். ங்ஙைங்ய் ங்ஙைங்ய் ங்ஙைங்ய். கத்தல் படிப்படியாக்க் குறைந்து வலுவில்லாத முனகலாக ஓய்ந்தது.நாய்க் கடிபட்டவன் வள்ளத்தில் கிடந்து அழுதான். சும்மாருடா யாராவது... என்று அடுத்தவன் அமைதிப்படுத்தினான். அவர்கள் போனார்கள்.

நீண்ட நேரத்துகுப் பிறகு வள்ளம் போன வழியைப் பார்த்து நாய் உக்கிரமாக்க் குரைத்த்து.

நடுநிசி நெருங்கியது. செத்துப் போன பெரிய பசுவொன்று மிதந்து வந்தது.குடிசையருகில் ஒதுங்கியது.நாய் மேலேயிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த்து. கீழே இறங்கவில்லை. அந்த இறந்த உடல் மெல்லமெல்ல விலகுகிறது.நாய் முணு முணுத்தது.ஓலையைப் பிராண்டிக் கிழித்தது. வாலாட்டியது. அகப்பட்டு விடாமல் விலகுவதுபோல சடலம் நகரத் தொடங்கியதும் நாய் மெதுவாகக் கீழேயிறங்கி வந்து அதைக் கடித்துத் தன் பக்கமாக இழுத்துத் திருப்தியுடன் தின்னத் தொடங்கியது. கொடும் பசிக்கு வேண்டுமளவுக்கு உணவு.

படார் ஒரு அடி. நாயைக் காணவில்லை. ஒருமுறை எழும்பித் தாழ்ந்த பசு தொலைவில் மிதந்து போனது.

அப்போது முதல் புயல் காற்றின் அலறலையும் தவளைகளின்
கூச்சலையும் அலையின் ஓசையையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. அங்கே எல்லாம் நிசப்தம். இரக்கமுள்ள வீட்டுக் காவலாளிக்கு நாயின் ஆதவற்ற நிலையை வெளிப்படுத்திய விசும்பல் பிறகு கேட்கவில்லை. அந்த நீர்ப் பரப்பில் அங்கங்கே அழுகிய சடலங்கள் மிதந்து சென்றன. சிலவற்றின்மேல் காகம் உட்கார்ந்து கொத்தித் தின்றன. அதன் நிம்மதியான அமைதியை எந்த ஓசையும் குலைக்கவில்லை. திருடர்களுக்கும் அவர்களின் தொழிலுக்கும் எந்த்த் தொந்தரவும் நேரவில்லை. எல்லாம் சூனியம்.

சற்று நேரம் கழிந்தபோது அந்தக் குடிசை நிலத்தில் விழுந்தது. நீருக்குள் மூழ்கியது. முடிவில்லாத நீர்மட்டத்தை விட  உயரமாக எதுவும் தென்படவில்லை. எஜமானனின் வீட்டை அந்த விசுவாசமான விலங்கு சாகும்வரை காப்பாற்றியது. அதற்காகவே முதலை அதைக் கவ்வும்வரை  குடிசையும் நீர் மட்டதுக்கு மேலாக உயர்ந்து நின்றது. அதுவும் விழுந்தது. முழுவதுமாக நீரில் மூழ்கியது. 

நீரிறக்கம் தொடங்கியது, சேன்னன் தன்னுடைய நாயைத் தேடி நீந்தி வருகிறான். ஒரு தென்னை மரத்தின் அடியில் நாயின் இறந்த உடல் ஒதுங்கிக் கிடக்கிறது. அலைகள் அதை மெல்ல அசைக்கின்றன. கட்டை விரலால் அதைத் திருப்பியும் புரட்டியும் பார்த்தான். அவனுடைய நாய்தானா என்ற சந்தேகமும் தோன்றியது. ஒரு காது கிழிந்திருக்கிறது. தோல் அழுகிப் போயிருந்ததால் என்ன நிறம் என்றும் தெரியவில்லை.

@



செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

தேவி மகாத்மியம்


தெய்வமானாலும் பெண் என்பதால்
செங்ஙன்னூர் பகவதி
எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்

ஈரேழு உலகங்களையும் அடக்கும்
அவள் அடிவயிறு
வலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறது

விடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சு
யுகங்களாக வேரூன்றிய
விருட்சங்களை உலுக்குகிறது.

தொடைபிளக்கும் வேதனையில்
அவள் எழுப்பும் தீனக்குரலில்
திசைகள் எட்டும் அதிர்கின்றன

எரிமலைக் குழம்புபோலப் பொங்கி
யோனியிலிருந்து வழியும் குருதித் தாரையில்
நதிகள் சிவந்து புரள்கின்றன.

விலக்கப்பட்ட உதிரத்தை ஒற்றிய வெண்பட்டு
புனிதச் செம்பட்டாகிறது
அண்டமெங்கும் தெறித்த செந்நீர்த் துளிகள்
உலர்ந்து குங்குமமாகிறது

எந்தத் தேவி இந்தப் பூமியைப் புரக்கிறாளோ
அவளே ஆற்றல் என்று
விண் முழங்குகிறது. மண் எதிரொலிக்கிறது.

செங்ஙன்னூர் பகவதி தேவியானது
தெய்வம் என்பதால் அல்ல
பெண்ணாக இருந்ததால்.






திங்கள், 6 ஆகஸ்ட், 2018





திருவனந்தபுரம் நீலகண்ட சிவன் சங்கீத சபையில் நேற்று ( 5.08.2019 ) சஞ்சய் சுப்ரமணியனின் இசை நிகழ்ச்சி. சஞ்சயின் கச்சேரி அற்புதமாக இருந்தது என்பது.செம்பரிதி ஒளி பெற்றது; பைந்நறவு சுவை பெற்றது என்று சொல்வதுபோல பொருளற்றது. பொதுவாக அவர் அற்புத சித்தர்.  சமயங்களில் அதி அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுபவர். நேற்றைய நிகழ்ச்சியில்  என்னைப் பரவசப்படுத்திய இரண்டு அற்புதங்கள்  சஞ்சய் பாடிய மைசூர் வாசுதேவாச்சாரி யாவின் பஹூதாரி உருப்படியும்  கீரவாணி ராகம் தானம் பல்லவியும். சஞ்சயின் பஹுதாரி இதுவரை இந்த ராகத்தில் இதுவரை கேட்ட எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய குதிரைப் பாய்ச்சல். அதுவும் சிறகுள்ள பறக்கும் குதிரையின் அபாரப் பாய்ச்சல். சிம்மேந்திர மத்திமம் என்று மனதுக்குள் நினைத்த ( நம்முடைய சங்கீத ஞானத்தின் லட்சணம் அப்படி ) ராகம் தானம் பல்லவி கீரவாணி என்று அப்புறந்தான் பிடி பட்ட து. ராகம் தானம் பல்லவியின் பல இடங்களில் உயிர் உருகித் திரளும் ஆனந்தத்தைக் கொடுத்தார் சஞ்சய். 


                                                                           கேரளகௌமுதி    நாளிதழ்    6. 08.2018


கவிஞரும் நண்பருமான ரவிகுமாரின் 'எம். டி. ராம்நாதன்' நீள்கவிதையின்  ஆங்கில மொழி பெயர்ப்பு நூலை சஞ்சய் வெளியிட நீலகண்ட சிவன் சங்கீத சபையின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தியும் நானும் பெற்றுக் கொண்டோம். மிகவும் பெருமையாக உணர்ந்த தருணம் அது. என் காலத்தின் பெரும் இசைக் கலைஞரின் கையால் ஒரு நூலைப் பெறுவது பெருமை மட்டுமல்ல; பெரும் பேறும் கூட.