வாப்பா
நபரூண் பட்டாச்சார்யா
2002 குஜராத் கலவரத்தின் பின்புலத்தில் நபரூண் பட்டாச்சார்யா எழுதிய கதை இது. பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து தொகுத்து நூலாக வெளியிடும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது இந்தத் தமிழாக்கம். வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்பட்ட ஆக்கத்தை அடிப்படையாக வைத்துத் தமிழாக்கம் உருவானது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வி.ராமசாமியுடனான கலந்துரையாடலில்
தமிழாக்கப் பிரதி இறுதி வடிவம் பெற்றது.
கலவரத்தில் நேரடியாகப் பங்கேற்ற
கும்பலில் சதாசிவ்வும் இருந்தான் என்று சொல்வது சரியில்லைதான். ஆனால் அவன் அந்தக்
கும்பலில் இல்லை என்றும் எப்படிச் சொல்ல? அலுவலகம் செல்லும் பாபுக்களும் அவர்களது
மனைவியரும்கூடக் காரில் வந்து கடைகளில் கொள்ளையடித்தார்கள்தானே? போலீசும் அந்தத்
தீவைப்பில் சம்பந்தப்படாமல் இருந்தார்களா என்ன? சிக்கல் அங்கேதான். சுருக்கமாகச்
சொன்னால் கலவரத்தில் பங்கெடுத்தவர்கள், பங்கெடுக்காதவர்கள் என்று பிரித்துப்
பார்ப்பது கடினம். கலவரக்காரர்களில் ஒருவனாகச் சதாசிவ்வைச் சேர்த்தாலும் அவன்
அவ்வளவு முக்கியமானவன் அல்ல என்றும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில
மாதங்களுக்கு முன்பு அவன் அயல்வாசிகளைப்போல ஒரு திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு
வந்தபோது அம்மா கேட்டாள்.
-
இதை
வெச்சு என்ன செய்வே?
-
சண்டை
வரப்போகுது. எலிகளைச் சாகடிக்க எல்லாரும் கூட்டமாப் போவாங்க.
-
சரி,
நீ என்ன செய்வே?
-
நானும்
போவேன்.
சதாசிவ் அம்மா இன்னும் சொல்லியிருப்பாள்.
அது கிட்டத்தட்ட அவள் உதடுவரைக்கும் வந்திருந்தது. ஆனால் அவன் எவ்வளவு கள்ளச்
சாராயம் குடித்திருந்தான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அதற்கு மேல்
எதுவும் பேசவில்லை. சதாசிவ்வின் அப்பா இறந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. அவரும்
முட்டமுட்டச் சாராயத்தைக் குடித்திருந்தார். ஆனால் அது அன்றைய வேலை முடிந்த
பிறகுதான். சென்ற வருடமே மில் மூடப்பட்டிருந்தது. அதன் பிறகே அவர் கள்ளச் சாராயம்
குடிக்க ஆரம்பித்திருந்தார். ஆட்கள் கள்ளச் சாராயத்தை விடவும் மிகவும் அபாயகரமான
எரிசாராயங்களைக் குடித்தார்கள். அதைக் குடித்துச் செத்தார்கள். சதாசிவ்வின் அப்பா
ஒரு பெயிண்ட் பாக்டரியிலிருந்து திருடிய ஐசோப்ரொஃஐல் ஆல்கஹாலை அருந்தியிருந்தார்.
சதாசிவ்வின் அப்பா வேலைக்காக அணிந்துவந்த காக்கி டிரவுசரும் கழுத்துப்பட்டி நைந்த
கருநீலச் சட்டையும் அந்த அறைக்குள்ளே கொடியில் தொங்கிக்கொண்டிருந்தன. சதாசிவ்வின்
கால்களில் ஒன்று சூம்பிக் கோணலாக இருந்தது. அவனை ஒடிசலானவன் குட்டையானவன் என்று
சொல்லலாம். அவனுடைய இடதுகால் ஏடாகூடமாக நீட்டிக் கொண்டிருப்பதால் மேலும்
குட்டையாகவும் விகாரமாவும் தோன்றினான். அது அப்படியே இருக்கட்டும். சதாசிவ் நீரில்
முக்கி ரொட்டிகளைத் தின்றுவிட்டுப்
படுக்கப் போனதும் அவன் அம்மா அந்தத் திரிசூலத்தை எடுத்துப் பரிசோதித்தாள்.
ஒன்றுக்கும் பயன்படாதது. வார்ப்பிரும்புக் கழிவிலிருந்து செய்தது. ஒருவர் அதைக்
கழிவுப் பொருளாக விற்றால் சின்னக்
கிண்ணத்தின் விலைகூடப் படியாது. சதாசிவ் அம்மா அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போதே
அவனுடைய சட்டைப்பையிருந்து தீப்பெட்டியை எடுத்தாள். சில குச்சிகளைத் தவிர
தீப்பெட்டிக்குள் இரண்டு பீடிகளும் பாதிபுகைத்த பீடியும் இருந்தன. சதாசிவ் அம்மா
ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தாள். அதைப் புகைத்துக் கொண்டிருக்கும்போதே அவளால் எதிர்ப்பக்கத்து
அறையிலிருந்து காஞ்சியும் அவன் மனைவியும் சண்டையிடுவதை உற்றுக் கேட்க முடிந்தது. காஞ்சியின் மனைவி போன வருடம் அவனுடைய சகோதரனுடன்
சூரத்துக்கு ஓடிப் போனாள். பிறகு அவளாகவே திரும்பி வந்தாள். அவர்கள் தினமும் சண்டை
போட்டார்கள். ஆனால் ஒத்துப் போகவும் செய்தார்கள். சமாதானமானதும் கேசட்
ரிக்கார்டரைப் போட்டார்கள். அந்தத் திரிசூலம் அறையின் மூலையில் சுவரோடு சார்த்தி
வைக்கப்பட்டிருந்தது. சதாசிவ் அறையின் வாசல் நிலைக்குக் கதவு இல்லை. மாவு
மூட்டைக்கு உபயோகிக்கும் பெரிய பிளாஸ்டிக் பைகளைச் சேர்த்துத் தைத்த திரை
தொங்கவிடப்பட்டிருந்தது. டீசலும் சமையலும் கலந்த வாடை அந்த அறையை மூச்சுத் திணறும்
இடமாக்கியிருந்தது. ஆனால் அவ்வப்போது நீண்ட இடைவேளை விட்டு வீசிய திடீர்க் காற்று
வாடையை ஊதி வெளியே தள்ளியது.
தொழிலாளர் காலனியின் சந்துகளுக்கும்
இடைவழிகளுக்கும் நடுவில் சாலை இடுங்கியோ காணாமலோ போயிருந்தது. மீண்டும் புழுங்கத்
தொடங்கியது. புழுக்கத்தின் முன்னால் வீசிய காற்று தோல்வியடைந்தன. சதாசிவ் அம்மாவால் தூங்க
முடியவில்லை. அவள் அரைகுறையாக உட்கார்ந்து
பாதித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தாள். அரைத் தூக்கத்திலிருந்து
விழித்ததும் ஒரு தகர மாவு டப்பாவின் பக்கத்தைத் தட்டிச் சத்தம் எழுப்பினாள்.
சுண்டெலியை விரட்டி ஓட வைப்பதற்காக அந்தச் சத்தம். தூக்கத்துக்கும் விழிப்புக்கும்
இடையில் வட்டமடித்துக் கொண்டிருந்த அவள் வெகு தூரத்திலிருந்திலிருந்து வந்த வேறு
ஒரு சத்தத்தையும் கேட்டாள். இந்தப் பின்
நேரத்திலும் எங்கோ ஓர் இடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாரோ
ஒருவர் சொற்பொழிவு ஆற்றுவதாக உரக்கக் கத்திக் கொண்டிருந்தார். இவ்வளவு பின் இரவுப்
பொழுதில் யாராவது எப்போதாவது பொதுக் கூட்டம் நடத்தியிருக்கிறார்களா? இந்த
நேரத்தில் யாராவது அதற்குப் போயிருப்பார்களா? உண்மையில் அது கூட்டமல்ல. வெள்ளை
அம்பாசிடர் கார் ஒன்று நாற்சந்தியில் நின்றிருந்தது. விரியத் திறந்து போட்டிருந்த
அதன் பின்பக்கக் கதவுகளுக்கு வெளியில் இரண்டு பெரிய ஒலிபெருக்கிகள் நீட்டிக்
கொண்டிருந்தன. ஒரு கேசட் ரிக்கார்டரிலிருந்து அந்தப் பேச்சு ஒலித்துக்
கொண்டிருந்தது. அதை ஒலிக்க விட்டவர்கள் சாலையில் நின்று தமக்குள் அடங்கிய குரலில்
பேசிக்கொண்டும் பான்மசாலாவை மென்றுகொண்டும் இருந்தார்கள். ஒருவர் சந்தனநிற சபாரி சூட் போட்டிருந்தார். எஞ்சிய மூன்று
பேர் புதிதாகச் சலவை செய்த வெள்ளைநிறக் குர்த்தாவும் பைஜாமாவும்
அணிந்திருந்தார்கள். டிரைவர் நடை பாதையில் குந்தி உட்கார்ந்திருந்தான். இதற்கு
முன்பு அண்டையில் மூன்று இடங்களில் காரை இதுபோல நிறுத்த வேண்டியிருந்தது. அதனால்
அவன் களைத்திருந்தான். அந்த மூன்று இடங்களிலும் அதே காஸட் அரைமணி, அரைமணி நேரமாகப்
போடப்பட்டிருந்தது. இன்னும் இரண்டு இடங்களில் அவன் காரை நிறுத்தி ஒவ்வொரு அரைமணி
நேரமாக, அதாவது இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அதே காசட்டை ஒலிக்கவிட வேண்டும். அந்தக்
காசட் தேர்ந்த தொழில்திறனுடன் ஒரு ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டிருந்தது. சில
பகுதிகளில், உணர்ச்சியைத் தூண்டி விடுவதற்காக, ஜாத்ரா நிகழ்ச்சிப் பாணியில் இசை
சேர்க்கப்பட்டிருந்தது. சில சமயங்களில் துயரப்படுபவர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும்
அதன் மற்ற பகுதிகளில் ஏளனமான உரத்த சிரிப்புகளே நிறைந்திருந்தன. தொலைக்காட்சியில்
நகைச்சுவைத் தொடர்களைப் பார்த்தவர்களுக்கு அந்தச் சிரிப்பு பழக்கமானது. தொலைக்காட்சி
நேரலையில் பங்கேற்கும் பார்வையாளர்கள் பொருத்தமான விநாடியில் சிரிக்க மறந்துபோனால்
இதுபோலச் சிரிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். அது என்னவாக இருந்தாலும், பேச்சு
ஒலித்துக் கொண்டிருந்தபோது ஒரு போலீஸ் வேன் வந்து அந்த இடத்தை வட்டமிட்டது. சபாரி
ஆசாமி அண்ணாந்து வாயை முழுக்கத் திறந்து பான்மசாலாப் பாக்கெட்டில்
மிச்சமிருந்ததைக் கொட்டிக் கொண்டார்.
அநீதிக்கு எதிராகப் போராடும் ரத்த தாகமுள்ள
படை வீரர்களாக அந்தக் கலவரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கருதப்பட்டால் சதாசிவ்வையும்
அவர்களில் ஒருவனாகச் சேர்க்கலாம். ஒவ்வொரு
நபருக்கும் ஒதுக்கிய சாராயக் குப்பியையும்
முன்னூறு ரூபாய் பணத்தையும் ஏற்கனவே வாங்கியிருந்தான். படுகொலைகள் முடிந்து பிணங்கள் தெருக்களில் கிடந்தபோது
அவற்றை அப்புறப்படுத்த ஒருவர் கூட வரவில்லை. நரிக்கூட்டமொன்று வந்தது. பட்டினி
கிடந்த நாய்களும் தாவும் வல்லூறுகளும் வந்தன. அதன் பிறகு எலிகளுடனும் ஈக்களுடனும்
எறும்புகளுடனும் வந்த அணியில்தான் சதாசிவ்
இருந்தான். சாராயத்தை அனுபவித்துக் குடித்து மகிழலாம் என்று நினைத்தான். வீட்டில்
உட்கார்ந்தே பாதிக் குப்பியைக் காலி செய்திருந்தான். ஆனாலும் போதை ஏறியிருக்கவில்லை.
ஐம்பது ரூபாயை அம்மாவிடம் கொடுத்தான். மிச்சம் இருநூற்று ஐம்பது ரூபாயைத் தனக்காகக
வைத்துக் கொண்டான். இன்னும் சில நாட்களுக்கு, இல்லை பல நாட்களுக்கு அந்தத் தொகை
அவனைப் பார்த்துக் கொள்ளும். எனவே போகவேண்டாம் என்றுதான் நினைத்தான். ஆனால்
சங்கரும் காஞ்சியும் போஜாவும் கூட்டமாக வந்து சதாசிவ்வை வெளியே இழுத்து
வந்தார்கள். ரிக்யால் நகரில் கொடூரமான தாக்குதல் நடந்திருந்தது. சாலையோரத்திலிருந்தே
தீப்பிழம்புகள் தென்பட்டன. கும்பல்கள் லாரிகளில் வந்து சேர்ந்திருந்தன.
கேஸ்சிலிண்டர்களை அடுக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். வாள்களையும் இரும்புத்தடிகளையும் கத்திகளையும் கபாப்குத்தி
வைக்கும் கம்பிகளையும் அமிலத்தையும் பெட்ரோல் குண்டுகளையும் வைத்திருந்தார்கள்.
இப்போது அவனால் அங்கே போய்ச் சேர முடிந்தால் சூறையாட ஏதாவது சரக்கு நிச்சயம்
இருக்கும். ஆனால் அவன் சீக்கிரம் அங்கே போயாக வேண்டும். அண்டை அயல்
பக்கங்களிலிருந்து ஆட்கள் இதற்குள் வந்து சேர்ந்திருப்பார்கள். சதாசிவ் நொண்டியபடி
கும்பலுடன் சேர்ந்து கொண்டான். அறையின் மூலையில் சுவரோடு சார்த்தி வைத்திருந்த
திரிசூலத்தை எடுத்துக் கொண்டான். அழுக்குப் பைஜாமாவின் நாடாவை இறுகக் கட்டினான்.
அதன் பிறகு கால்பக்கத்தை மேலே சுருட்டிவிட்டான். இந்த ஆயத்தங்களுக்கு உயிரூட்டிக்
கொண்டிருப்பதற்கு இடையில் அவன் ஒரு வார்த்தையும் உச்சரிக்கவில்லை; எதுவும்
பேசவில்லை. போதையின் பிடியில் அர்த்தமில்லாத கூச்சலை மட்டுமே வெளிப் படுத்தினான்.
தொற்றிக்கொள்ளக் கூடியது அந்த மனநிலை. மற்றவர்களும் அவனைப் போலத்தான்
இருந்தார்கள். ஒல்லிப் பிச்சான்களாகவும் வீணர்களாகவும் அலட்டல் காட்டுபவர்களாகவுமே
அவர்களும் இருந்தார்கள். அவர்கள் போக்கில் அவர்களும் கூச்சலிட்டார்கள். மில்தொழிலாளர்
காலனியின் இடுங்கிய சந்துவழியாக நடந்தார்கள். விசாலமான சந்தைக் கடந்து சாலையை
அடைந்தபோது, பற்றி எரிந்து கொண்டிருந்த ரிக்யால்நகரிலிருந்து எழுந்த
புகைமேகங்களின் வெளிச்சத்தைப் பார்த்தார்கள். ஒரு சிறு பகுதி காற்றின் வீச்சால்
சிதறடிக்கப்பட்டாலும் புகை மேல்நோக்கி உயர்ந்தது. இடது பக்கத்தில் கட்டுப்பாடற்ற
கும்பல் ஊர்வலம் போனது. முழுச் சாலையையும் ஆக்கிரமித்துக்கொண்டு அவர்கள் ஆனந்தமாக
நடனமாடினார்கள். அவர்களுக்கு எதுவும் நேரவில்லை. அவர்களால் மற்றவர்களுக்கும்.
புதிதாகக் கட்டி முடித்திருந்த சிவன் அப்பார்ட்மெண்ட்ஸுக்கு முன்னால் மாட்டீஸும்
மாருதியும் சாண்ட்ரோவும் உற்சாக எந்திரமான ஃபோர்டு ஐகான் கார்களும் கம்பீரமாக
நின்றுகொண்டிருந்தன. சதாசிவ்வின் குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அப்போது தங்களை ஒரு
உற்சாக எந்திரமாகவே உணர்ந்தார்கள். ஆனந்தக் கும்பல் சற்று முன்னேறியது. சந்தியில்
வலது பக்கமாகக் கும்பல் திரும்பியும்
அவர்கள் தயங்கி நின்றார்கள்.
அநேகமாக அது அவனுடைய சைக்கிளாகவே
இருக்கும். அதை மார்பில் சுமந்தபடி செத்துக் கிடந்தான். அழுக்கான டி ஷர்ட்டும்
வெளுத்துப்போன கோடுகள் உள்ள வெண்ணிற டிராக் சூட் காலுடையும் அணிந்திருந்தான். அவன்
முகம் கிழித்தெடுக்கப்பட்ட சினிமா போஸ்டரால் மூடியிருந்தது. அதன் மேல் ஒரு செங்கல்
வைக்கப்பட்டிருந்தது. காற்றின் வீச்சில் போஸ்டர் பறந்து போனாலும் சிதைந்த முகம் வெளியே தெரியாமல் இருக்கும் இல்லையா? போஜா
இறந்து கிடந்தவனின் சட்டைப்பைக்குள் கையைவிட்டு கைக்குட்டையையோ மெல்லிய கிழிசலையோ
வெளியே எடுத்தான். அதைத் தூர எறிந்தான். சற்று நேரம் அங்கே அமைதியாக இருந்தது. பிறகு மறுபடியும் நடக்கத் தொடங்கினார்கள்.
முடவனான சதாசிவ் குழுவிடமிருந்து பின் தங்கியிருந்தான். எதிர்த் திசையிலிருந்து
ஒரு லாரி வந்தது. டிரைவரின் கேபினுக்கு மேலிருந்த மாடத்தில் உட்கார்ந்திருந்த
சிலர் வாள்களையும் ஈட்டிகளையும் அரிவாள்களையும் வீசிக் கொண்டிருந்தார்கள். பழி
வாங்குவதைப் பற்றிய முழக்கங்களைத் தாளம் பிசகாமல் எழுப்பினார்கள். லாரியில்
அலமாரிகள், தட்டு அடுக்குகள், தலைகீழாக நிறுத்திய ரெஃப்ரிட்ஜெரேட்டர்கள்,
டி.வி.செட்கள், சூட்கேஸுகள், சமையல் பாத்திரங்கள், திரைகள், ஸ்கூட்டர்கள்,
கண்ணாடிகள், தேனிரும்பு நாற்காலிகள் எல்லாம் திணிக்கப்பட்டிருந்தன. லாரி அவர்களை
நோக்கி முன்னால் நகர்ந்தபோது சாலை ஓரமாக ஒதுங்கி வழிவிட்டார்கள். லாரி
வேகமெடுத்தது. லாரியின் பின்பக்கம், அதன் கொக்கியில் தற்செயலாக ஒட்டிக்கொண்ட அல்லது
வேண்டுமென்றே அங்கே சிக்கவைத்த ஆகாய நீல நிறமுள்ள செயற்கை இழைத் துப்பட்டா காற்றில்
படபடத்தது. சதாசிவ்வின் குழு இப்போது வெற்றி முழக்கங்களை உரக்கப் பாடினார்கள்.
ஓடத் தொடங்கினார்கள். சதாசிவ்வால் ஓட முடியாததால் இன்னும் பின்னால் விடப்பட்டான்.
அவன் திரிசூலத்தைக் கைத்தடியாக உபயோகித்தான். அதன் கணகண சத்தம் சாலையில் ஒலித்தது.
அவர்களைப் பின்தொடர்ந்து ரிக்யாலின்
மெயின் கேட்டை சதாசிவ் அடைந்த போது அவர்கள் எல்லாரும் வெளியில்
நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த இடத்துக்குத் தீவைத்த, ஆட்களைக் கொன்ற,
பெண்களை வன்புணர்ந்த அதே நபர்கள்தாம் மதில் சுவரால் வளைக்கப்பட்ட இரண்டு
கட்டடங்களையும் நெருப்பு
சூழ்ந்திருந்ததால் இந்த உதிரிவர்க்கத் திருடர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள்.
உள்ளே தீயின் சரசரப்பை மீறிப் பொருட்கள் உடைந்து நொறுங்கும் ஓசையும் கேட்டது.
கதவுகள் விழுந்து கொண்டிருந்தன. சட்டங்கள் தீப்பிடித்ததில் ஜன்னல் கிராதிகள்
கழன்று தொங்கின. சதாசிவ் சற்று நேரம் தீச்சுவாலைகளின் கோர தாண்டவத்தையும் புகைப்படலத்தையும்
பார்த்துக்கொண்டு நின்றான். காம்பவுண்டுக்குள் நிறுத்தியிருந்த கார் ஒன்றும்
எரிந்து கொண்டிருந்தது. இந்த அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்கு சதாசிவ் ஒருமுறை
வந்திருக்கிறான். பின் பக்கத்தில் கொஞ்சம் காலி நிலம் இருந்தது. அங்கே
களைபறிக்கும் வேலைக்கு பாக்யேஷ் வந்திருந்தான். சதாசிவ்வும் பாக்யேஷுடன்
வந்திருந்தான். பின்பக்கத்தில் ஒரு கேட் இருந்தது. பின்பக்க மதிலை ஒட்டி
ஆஸ்பெஸ்டாஸ் கூரைபோட்ட மூன்று ஷெட்கள் இருந்தன. அவை பணியாளருக்கான
குடியிருப்புகள். ஒருவேளை அவற்றில் கொள்ளை நடந்திருக்காது. யாரும் கவனிக்காமல்
பின்பக்கக் கேட் வழியாக உள்ளே நுழைந்தால் தன்னால் எதையாவது கண்டெடுக்க முடியுமா?
சதாசிவ்வின் நினைப்புத் தவறானது.
பின்பக்கத்திலும் எரிந்து கருகும் சதையின் வாடை கவிந்திருந்தது. அங்கும்
சூறையாடப்பட்டிருந்தது. இறந்த உடல்கள் எரியும் டயர்களைப் பயன்படுத்திச் சிதை
மூட்டப்பட்டிருந்தன. செருப்புகள் குப்புறக் கிடந்தன. கதவு திறந்து கிடந்தது.
ஒருவேளை சிலர் இந்தப் பக்கமாகத் தப்பிப் போயிருக்கலாம். நொறுங்கிய பீங்கான்
பண்டங்கள். பழைய துருப்பிடித்த குழந்தைகளுக்கான தள்ளுவண்டி ஒன்று தலைகீழாகக்
கிடந்தது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் வேய்ந்த ஷெட்களும் தப்பவில்லை. அறைகளுக்குள் தீ
எரிந்து கொண்டிருந்தது. ஓர் அறையில் பாதி எரிந்த காலண்டர் தென்பட்டது. சதாசிவ்
வாசலில் நின்று உள்ளே எட்டிப்பார்த்தான். உள்ளே தகித்த வெப்பம் பெருவெடிப்புப் போல
அவனைத் தாக்கியது. கதவு பெயர்ந்து வந்தது. அதன் கீழே ஒரு கை தெரிந்தது. உள்ளே
போய்த் தேடியிருந்தால் அவன் எதையாவது பார்த்திருக்கலாம். ஆனால் அப்படிச்
செய்வதற்கான வலிமையைத் திரட்டிக்கொள்ள சதாசிவ்வால் முடியவில்லை. அப்போது முனகலோ பயத்தைக் கட்டுப்படுத்த மூச்சை
இழுத்துப் பிடிக்கும் ஓசையோ போன்ற அசாதாரணமான சத்தத்தைக் கேட்டு சதாசிவ் திடுக்கிட்டான்; சுற்றிலும்
திரும்பிப் பார்த்தான். அங்கே யாரும் இல்லை. கொழுந்து விட்டு எரியும் சுவாலைகளின்
ஓசை மட்டுமே. எல்லா நாளையும்போல அந்தி வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்தது. அத்துடன் எரிசுவாலையின் ஓசையும் குறைந்து
கொண்டிருந்தது. ஒருவேளை மேலும் எரிக்க அங்கே எதுவும் இல்லையோ? சத்தம் கேட்டதாக சதாசிவ் நினைத்தது தவறா? அவன்
கொஞ்சம் பயந்தான். அதனால்தான் திரிசூலத்தை ஆர்ப்பாட்டமாக உயர்த்திக் கத்தினான்போல.
- யாரு
அங்கே?
பதில் இல்லை
-
அங்கே யாராவது இருக்கீங்களா?
அதற்கும் பதில் இல்லை.
இங்கே
அறைகளுக்குள் நிச்சயமாக யாரும் இல்லையா? சதாசிவ்வுக்கு நிராதரவான உணர்வு
ஏற்பட்டது. திரிசூலத்தை இறுகப் பற்றிக்கொண்டான். விலங்குகள் பிற விலங்குகளின்
இருப்பை உணர்வது இப்படித்தான்; மனிதர்கள் பிற மனிதர்களின் இருப்பை உணர்வதும்
இப்படித்தான். தான் எதையும் கேட்கவில்லை என்றும் சதாசிவ்வுக்கு ஒரு நொடி
தோன்றியது. அது சரிதானா? கதவுக்குக் கீழே தெரிந்த கைக்கு உரிய மனிதன்
செத்திருக்கவில்லையா? அது அவனுடைய முனகலா? விழுந்த கதவைத் தள்ளும் வலிமை அவனுக்கு
இல்லாமலிருந்ததா?
-
ஜாக்கிரதை,
என் கையில் திரிசூலம் இருக்கு. அதால உன்னைக் குத்துவேன்.
இந்த
முறையும் எதிர்வினை இல்லை.
அந்தி
வெளிச்சம் மறைந்து கொண்டிருக்கும் அந்தப் பகலின் கடைசி நேரத்தில் எல்லாமும்
அசாதாரணமாக உயிர் பெற்றிருப்பதை சதாசிவ் கவனித்தான். இருளில் மூழ்குவதற்கு முன்பாக
எல்லாமும் ஒருமுறை சுழல்கின்றனவா? அல்லது அவை பயத்தில் திடுக்கிடுகின்றனவா? ஆனால்
அங்கே எதுவும் இல்லை. சிறிது தூரத்துக்கு அப்பால், நீண்டிருந்த தரையில் ஒரு
தண்ணீர்த்தொட்டி கட்டிவிடப்பட்டிருந்தது. அது ஏன் அங்கே இருக்கிறது என்று
சதாசிவ்வுக்குத் தெரியும். அது கட்டட
வேலைக்காகச் செங்கற்களை ஊற வைக்கும் தொட்டி. அங்கே ஒருபுறத்தில் மரப்பலகைகள்
அடுக்கப் பட்டிருந்தன. ஒதுக்கமாக இருந்ததால் யாரும் அதற்குத் தீவைக்கவில்லை. ஆனால்
தண்ணீர்த் தொட்டிக்குள்? இங்கேயிருந்து அது சரியாகத் தெரியவில்லை. சதாசிவ்
திரிசூலத்தை ஈட்டிபோல ஓங்கிப் பிடித்தான். தண்ணீர்த்தொட்டியை நோக்கி நடந்தான். பாசிக்
கறை. வண்டல் படிந்த அடிப்பகுதியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. அதன் மூலையில்
சுவரோடு முதுகைச் சாய்த்து அவன் உட்கார்ந்திருந்தான். உள்ளாடை மட்டும் அணிந்த
சிறுவன். அவன் தலை மொட்டையாக இருந்தது. தலையில் சிரங்குப்புண் இருந்தது.
சதாசிவ்வைப் பார்த்ததும் சிறுவன் எழுந்து நின்றான். சதாசிவ் திரிசூலத்தை
வீசப்போவதுபோல ஓங்கினான். குழந்தை அமைதியாக இருந்தான். ஆனால் அவன் வாய்
திறந்திருந்தது. சில நொடிகளுக்குப் பிறகு சதாசிவ் கையை இறக்கினான். பகல் வெளிச்சம்
மறைந்து கொண்டிருந்ததில் எல்லாம் மங்கலாயின. சதாசிவ் தன்னைக் கொல்ல மாட்டான்
என்பது சிறுவனுக்குத் தெரிந்தது. அப்படியே செய்வதானாலும் அதை இங்கே செய்ய மாட்டான்.
அவன் மறுபடியும் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளாடை ஈரமாகி இருந்தது. தன்னால் அந்தக்
குழந்தையைக் கொல்ல முடியாது என்று சதாசிவ்வும் உணர்ந்தான். வெகு முன்பாகவே அவனுடைய
போதை கலைந்து போயிருந்தது. சதாசிவ் திரிசூலத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு
சூம்பிய காலை ஒரு பக்கமாக நீட்டியபடி உட்கார்ந்தான். அவர்கள் இருவரும்
உட்கார்ந்திருந்தார்கள். சதாசிவ் தொட்டியின் விளிம்பிலும் குழந்தை தொட்டிக்கு
உள்ளேயும். சதாசிவ் ஒரு பீடியைப் பற்றவைத்தான். அந்த பீடியைப் புகைத்துவிட்டுப்
போய்விடலாம் என்று தீர்மானித்தான். சிறுவனைக் கொல்லாவிட்டாலும் எரிகிற
பீடித்துண்டை அவன் உட்கார்ந்திருக்கும் தண்ணீருக்குள் சுண்டி விடத்தான் போகிறான்.
ஆனால் பீடியைப் புகைத்து முடிப்பதற்கு முன்பே தன்னுடைய யோசனைகளுக்குள் அந்தக்
குழந்தை புகுந்திருப்பதை சதாசிவ்
புரிந்துகொண்டான். அந்தக் குழந்தையைப் பற்றிய யோசிக்க எனக்கு என்ன அவசியம்?
ஏராளமான ஆட்கள் செத்துப் போயிருக்கிறார்கள். இதோ முன்னால் கதவுக்கு அடியில் சிக்கிக்கொண்ட
கை கிடக்கிறது. ஒருவேளை உள்ளே இன்னும் ஆட்கள் எரிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை
தப்பி ஓடியவர்கள் துரத்தப்பட்டு கடைசியில் பக்கத்துத் தெருக்களில்
பிடிபட்டிருக்கலாம். மறுபடியும் சதாசிவ் இக்கட்டுக்குள் அகப்பட்டான். செத்துப் போனவர்களில்
ஒருவனாக அந்தக் குழந்தையைச் சேர்க்க முடியவில்லை. அவன் அமைதியாக நடந்து போயிருக்கலாம்.
கையில் திரிசூலத்தைத் தூக்கிக்கொண்டு நொண்டி நடந்து போயிருந்தால் யாரும் எதுவும்
சொல்ல முடியாது. அவர்கள் எல்லாரும் பிரதான வாசலில் இருந்தார்கள். சதாசிவ் போன
பின்பு, முழுக்க இருட்டிய பிறகும் செங்கற்களை ஊறவைக்கும் தொட்டிக்குள் அந்தச்
சிறுவன் உட்கார்ந்து கொண்டே இருக்கலாம். ஆனால் எவ்வளவு நேரம்? இல்லை, எழுந்து
வெளியில் வருவானா? என்ன நடக்கும் என்று சதாசிவ்வால் யூகிக்க முடியவில்லை. ஆனால்
ஒரு விஷயத்தில் நிச்சயமாக இருந்தான். வெளியில் காத்திருப்பவர்களால் அவனைக் கண்டுபிடிக்க
முடியாது. பகல் வெளிச்சம் மறைந்தது. தொட்டிக்குள்ளும் இருட்டாக இருந்தது. அடியில் கொஞ்சம்
அழுக்கு நீர் இருந்தது. அதற்குள்ளே ஒரு மூலையில்
சிறிய உள்ளாடை அணிந்து தலையில் சிரங்குடன் அவன் உட்கார்ந்திருந்தான்.
ஏய், எந்திரிச்சு வெளியே வா.
இருட்டுக்குள்ளிருந்து
எந்த பதிலும் வரவில்லை.
நான் ஒண்ணும் செய்யமாட்டேன். பயப்படாதே. எந்திரிச்சு வா.
கலங்கிய
நீரில் ஏதோ அசைவு.
என் கையைப் பிடிச்சு ஏறி வா.
பிஞ்சுக்
கைகள் சதாசிவ்வின் கையைப் பற்றின. சதாசிவ் தன் கைகளால் அவனை மேலே இழுத்தான்.
தன்னுடைய கையைப் பையனின் கழுத்து, முதுகு, மெலிந்த மார்பு, இடுப்பு, புட்டங்கள்,
கால்கள் எல்லாவற்றின் மேலும் ஓடவிட்டான். அவனுடைய உள்ளாடை தொப்பலாகிக்
கால்வழியாகத் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. குழந்தை குளிர்காற்றில் விறைத்துப்
போயிருந்திருந்தான். நடுங்கிக் கொண்டிருந்தான். சின்னப் பற்கள் கிடுகிடுக்கும் ஓசை
சதாசிவ்வுக்குக் கேட்டது. சதாசிவ்
குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டான். தன்னுடைய சூடான கையால் குழந்தைக்குக்
கதகதப்பு ஏற்ற முதுகை வருடினான். குழந்தையை மார்போடு சேர்த்துக்கொண்டு இருளின் பகுதியாக
அங்கேயே உட்கார்ந்தான். அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது. குழந்தை வேகமாக
மூச்சுவிட்டான். சதா சிவ்வை இன்னும்
இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். சதாசிவ் குட்டி விரல்களையும் நகங்களையும் உணர்ந்தான்.
குழந்தை அவனைப் பிறாண்டிக் கொண்டிருந்தான். பிறகு நிச்சலனமாக ஓய்வெடுக்கத்
தொடங்கினான்.
சதாசிவ்
பின்பக்கத்து வழியாக இருட்டிலேயே
வெளியேறினான். அவனுடைய இடது கால் மெலிந்து சூம்பியது. அதனால் தூங்கிக்கொண்டிருந்த
குழந்தையைத் தனது வலது தோளில் போட்டுக்கொண்டான். கூர்விளிம்புகள் மேல்நோக்கியிருக்கும்படித்
திரிசூலத்தை இடது கையில் எடுத்துக் கொண்டான்.
வெளியே
சாலைக்கு வந்ததும் வலப்புறமாக நடந்தான். மெயின்கேட் அருகில் இன்னொரு லாரி வந்து
நின்றது. அவர்கள் எல்லாரும் கும்பலாகக் காத்திருந்தார்கள். ஒருவேளை இன்னும்
பொருட்களைச் சூறையாடியிருக்கலாம். அல்லது மனித உடல்களைக் குவித்திருக்கலாம்.
கழுத்து அறுக்கப்பட்ட நிர்வாணப் பெண்கள், மரணத்தை அணைத்துக் கொண்ட ஆண்கள். ஒருவேளை
அவர்கள் சதாசிவ்வையும் கவனித்திருக்கலாம். அப்படியே இருந்தாலும் அவர்கள் அதைப்
பற்றி யோசிக்க வில்லை. ஒருவேளை அவர்கள் கவனித்தது அந்தத் திரிசூலத்தை மட்டுமாக
இருக்கலாம்.
அந்தக்
கட்டடங்களுக்குள்ளே எரிந்துகொண்டிருந்த நெருப்பு சற்று முன்புதான் அணைந்திருந்தது.
ஆனால் தரைத்தளத்திலோ அல்லது அதே தளத்திலிருந்த சமையலறையிலோ கேஸ்சிலிண்டர் திடீரென்று பெருஞ்சத்தத்துடன்
வெடித்தது. அவர்கள் அதிர்ந்தார்கள். சதாசிவ்வும் அதிர்ந்தான். குழந்தை
திடுக்கிட்டு விழித்தான். புதிதாக எழுந்த நெருப்பு வெளிச்சத்தை அச்சத்துடன்
பார்த்தான். கூக்குரலிட்டு அழுதான்.
வாப்பா
அந்த
அலறலை அவர்களும் கேட்டார்கள்.
----- 0 -----
நபரூண் பட்டாச்சாரியா ( 1948 – 2014 )
நவீன வங்க இலக்கியத்தில் புரட்சிகர அழகியலின் நடைமுறையாளர்களில்
ஒருவர். இந்திய மக்கள் நாடகக்குழு ( இப்டா )வைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் நடிகரும்
நாடக ஆசிரியருமான பிஜோன் பட்டாச்சார்யா, 2012 இல் நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டவரும்
மகத்தான எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி இணையரின் ஒரே பிள்ளை. கல்கத்தாப்
பல்கலைக்கழகத்தில் பயின்றார். கவிஞராகவும் எழுத்தாளராகவும் செயலாற்றினார். ஒடுக்கப்பட்ட,
விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்க்கையை எழுதினார். அவர்களுக்கான செயல் பாடுகளில்
முன்னின்றார். சாகித்திய அக்காதெமி விருது உள்ளிட்ட பல பெருமைகளும் பெற்றவர். எனினும்
அதிகாரத்துக்கு எதிரானவராகவே இயங்கியவர். 2007 இல் தனக்கு அளிக்கப்பட்ட வங்க இலக்கியத்தின்
மிக உயர்ந்த விருதான பங்கிம் விருதை அன்றைய இடதுசாரி அரசின் நந்திகிராம் வன்முறைக்குக்
கண்டனம் தெரிவிக்கும் வகையில் மறுத்தவர். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய எல்லாத்
துறைகளிலும் பங்களித்தார். திரைப்படத் துறையிலும் கணிசமாகப் பங்காற்றினார். புற்றுநோயுடன் நீண்ட நாட்கள் போராடி 2014 இல் மறைந்தார்.
நன்றி : நீலம் - பிப்ரவரி 2021