சர்வோத்தமன் சடகோபனை நேரில் சந்தித்ததாக நினைவில்லை. மின் அஞ்சல் தொடர்பு மூலம் அறிமுகமானவர். கடந்த ஆறேழு ஆண்டுகளாக அவ்வப்போது மின் அஞ்சல் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். ஒரு குறும்படமும் எடுத்திருக்கிறார். கவிதைகள் பற்றி சில மொழிபெயர்ப்புகள் பற்றி மின் அஞ்சலில் எழுதியிருக்கிறார்.அவை எல்லாம் மகிழ்ச்சி அளித்தன. நேற்றைய மின் அஞ்சலில் அவர் எழுதியிருந்தது இது.
‘
Hi Mr.Sukumaran,
I read the book The strange case of billy biswas. I remember you mentioning about this book in uyirmmai some years back.i think you also added that you tried to meet him Delhi once but was not able to meet.I remembered the Growing stone short story of Albert Camus when I read this novel.When I started reading I thought may be this book is just a romantic view of tribal life.But it was not so.Arun joshi is too honest.The tone of the book also was similar to Camus tone.I liked the book very much.More than Biswas it was the helpless tone of Romi which parallels with the tone of the engineer in Growing stone that makes this novel an important one.Had you not mentioned about this book may be I would have never read this.
Thanks
Sarwothaman.
அவருடைய கடிதம் தந்த உற்சாகம் அருண்ஜோஷி பற்றிய இந்தக் கட்டுரையைப் பதிவேற்றத் தூண்டியது. உயிர்மையில் வெளிவந்த இந்தக் கட்டுரை, பின்னர் ’வெளிச்சம் தனிமையானது’ என்ற கட்டுரைத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டது. அதிகம் யாரும் கவனிக்காத எழுத்தாளரான அருண்ஜோஷியைப் பற்றிய கட்டுரையையும் யாரும் அதிகம் கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்து வந்தது. அதைப் பொய்யாக்கி இருக்கிறார் நண்பர் சர்வோத்தமன். அதை விட முக்கியம் ஜோஷியின் நூலைத் தேடிப் படித்திருக்கிறார். எந்த வகையில் சர்வோத்தமனுக்கு நன்றி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அருண்ஜோஷி
'உன் இயல்பே உன்னுடைய விதி'('Your character is your fate') - என்ற ஒற்றை வாக்கியத்தின் மூலம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய விருப்பத்துக்குரிய எழுத்தாளரானவர் அருண்ஜோஷி.'பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கு' என்ற ஜோஷியின் நாவலில் வரும் இந்த வாசகம் இன்றும் பொருள் பொதிந்ததாகவே தொடர்கிறது.
இலக்கிய வேட்கை தீவிரமாக இருந்த பருவத்தில் வாசித்துத் தள்ளிய ஏராளமான புத்தகங்களில் ஆங்கிலத்தில் எழுதும் இந்தியஎழுத்தாளர்களின் ஆக்கங்களும் இருந்தன. காகித அட்டைப் பதிப்புகளாக இந்தியப் பதிப்பகங்கள் வெளியிட்ட புனைகதைகளின் மீது உடனடி விருப்பம் விழுந்தது. ராஜாராவ், முல்க்ராஜ் ஆனந்த்,ஆர்.கே.நாராயண்,நயனதாரா சகால், கமலாமார்க்கண்டேயா, அனிதா தேசாய்.ஆர்.பி.ஜப்வாலா,குஷ்வந்த் சிங் என்று பிரபலமாக இருந்த எல்லா எழுத்தாளர்களின் ஒவ்வொரு புத்தகத்தையாவது வாசித்துப் பார்த்திருப்பேன்.இந்த வாசிப்பு பெரும்பாலும் மனச்சோர்வையே தந்தது. இந்தியத் துரைமார் களை விட,தமிழ் போன்ற தேசிய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் ஆழமான படைப்பு களைத் தந்திருக்கிறார்கள் என்ற உண்மை பிடிபட்டபோது இந்தநூல்களிடமிருந்து விலகினேன்.இந்திய வாழ்க்கையை ஆங்கில வாசகனின் ருசிக்கேற்பப் பரிமாறுவதுதான் இந்தவகை எழுத்தின் நோக்கமென்று கருதினேன்.அந்த கருத்துக்கு மாறாகவும் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையை இரண்டு எழுத்தாளர்கள் கொடுத்தார்கள்.சஷ்தி பிரதாவும் அருண்ஜோஷியும்.இருவரும் சமகாலத்தினர்.சம வயதினர்.
சஷ்தி பிரதாவின் கதை கவிதைகளை விட அவரது சுய சரிதையான'என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்' (My God died young)என்ற நூல் என்னை வெகுவாகக் கவர்ந்தது.கல்கத்தாவில் பிறந்தவர்.கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைதேடிப் போய் கழிப்பறைத் துப்புரவாளர், சமையலறை பணியாளர், மது விடுதியில் ஊழியர்,தபால்காரர் என்று பல்வேறு வேலைகளைச் செய்து கடைசியில் பத்திரிகையாள ரானவர். இருபத்தியெட்டாம் வயதில் தன்னுடைய சரிதையை புத்தகமாக எழுதினார். தன்னுடைய அவமானங்கள், வலிகள்,காதல்,காமம் எல்லாவற்றையும் அப்பட்டமாக எழுதினார்.அதுவரை இந்தோ ஆங்கில ஆக்கங்களில் காண முடியாமலிருந்த வெளிப்படையான எழுத்துமுறை. அதை மேலும் ருசிகரமானதாக்குவதற்காக சஷ்தி பிரதா பயன்படுத்தியிருந்த பாலியல் சித்தரிப்புகள் - இவை வாசகனை ஈர்த்தன; அதிர்ச்சி
யளிக்கவும் செய்தன. இவ்விரு அம்சங்கள்தாம் சஷ்தி பிரதாவை பிரபலமாக்கியவை.ஒரு வாசகனாக அந்தப் புத்தகத்தை நெருங்க என்னைத் தூண்டியவையும் இதே அம்சங்களே.
யளிக்கவும் செய்தன. இவ்விரு அம்சங்கள்தாம் சஷ்தி பிரதாவை பிரபலமாக்கியவை.ஒரு வாசகனாக அந்தப் புத்தகத்தை நெருங்க என்னைத் தூண்டியவையும் இதே அம்சங்களே.
அருண்ஜோஷியின் படைப்புகளுடன் நேர்ந்த அறிமுகம் சஷ்தி பிரதாவின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது. வாழ்க்கை பற்றி இந்த இரு எழுத்தாளர்களும் கொண்டிருந்த பார்வைகள் அதற்குக் காரணம் என்று இப்போது வகைப்படுத்த முடிகிறது.பிரதாவின் பார்வை மரபுநெறிகளை மீறுவதாக இருந்தது.அவரது பிற கதைமாந்தர்கள் கூட அவருடைய பொஹீமியன் அணுகுமுறையின் சாயல்களையே கொண்டிருந்தார்கள். வாழ்வின் கேள்விகளைப் புறக்கணித்து நகர்பவர்களாக இருந்தார்கள்.
அருண்ஜோஷியின் பின்னணி பாதுகாப்பானது.இந்தியாவிலும் அமெரிக்காவிலுமாக கல்வி பெற்றார்.ஒரு தொழிலதிபராக வாழ்ந்தார். எனவே மரபெதிர்ப்பான ஒரு வாழ்க்கைமுறை இயல்பாகவே அவருடைய தேர்வாக இருக்கவில்லை.மாறாக பொருளியல் வாழ்வின் வெற்றிகள் மனிதர்களை வெறுமையாக்குவதைப் பற்றிய சிந்தனைகளைத் தேர்ந்து கொண்டார்.இந்த உலகில் மனித இருப்பின் அர்த்தம் என்ன என்ற கேள்வியால் தடுமாறும் கதை மாந்தர்கள் அவருடையவர்கள். பெரும்பாலும் அவர்கள் அந்நியமானவர்கள். மானுடச் சூழலின் அபத்தம் அவருடைய படைப்புகளின் அடியோட்டம்.'மனிதமனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்' என்று தனது இலக்கிய நோக்கம் பற்றி அருண்ஜோஷி குறிப்பிட்டார்.
எழுத்தின் இந்த இயல்பு சார்ந்து அருண்ஜோஷியை எக்சிஸ்டென்ஷியலிச எழுத்தாளர் என்று இனங்கண்டு கொள்வது எனக்கு உவப்பாக இருந்தது. இருத்தலியல் கோட்பாட்டின் ஆகச் சிறந்த இந்திய உதாரணம் அருண்ஜோஷி என்று இப்போதும் எண்ணுகிறேன். இந்த எண்ணம்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி சென்றபோது அருண்ஜோஷியைச் சந்திக்கும் ஆர்வத்தைக் கிளறி விட்டது.
அது ஒரு டிசம்பர் மாதம்.சாகித்திய அக்காதெமியும் இந்திய கவிதை அமைப்பும் (Poetry Society of India) இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவிதை மொழிபெயர்ப்புப் பட்டறையின் உறுப்பினனாக தொடர்ந்து நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.தமிழில் நான் எழுதியுள்ள கவிதைகளிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை ஹிந்தியில் மொழிபெயர்ப்பது பட்டறையின் பணி.ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு கவிஞர் என்று தேர்ந்தெடுக்கப் பட்டுக் கலந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய தமிழ்க் கவிதையை தமிழும் ஹிந்தியும் தெரிந்த பாலசுப்ரமணியம் தோராயமான ஹிந்தி வடிவத்துக்கு மொழிபெயர்ப்பார்.ஹிந்திக் கவிஞரான விமல்குமார் திருத்தமான ஹிந்தி வடிவத்துக்கு அதை மாற்றுவார்.பட்டறையின் மொழிபெயர்ப்பு முறையில் கவிஞனாக என்னுடைய பங்கு மொழிபெயர்ப்பில் கவிதை பொருள் மாறாமலும் தொனி பிசகாமலும் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறதா என்று மேற் பார்வை செய்வது மட்டுமே. எனவே நிறைய நேரம் மிச்சமிருந்தது. விமல்குமார் பத்திரிகையாளராகவும் இருந்தார். மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு இடையிடையே அலுலகத்தை எட்டிப்பார்க்க ஓடுபவராக இருந்தார்.ஆக, வேறு ஏதாவது செய்ய நேரமிருந்தது. அந்த நான்கைந்து நாட்களும் அருண்ஜோஷியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.சாகித்திய அக்காதெமியில் பணியாற்றும் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரித்தேன் உற்சாகம் தரக்கூடிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.இத்தனைக்கும் அருண்ஜோஷி சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர்.அவருடைய 'லாஸ்ட் லேபிரிந்த்' (The Last labyrinth -கடைசி சுழல்வழி) நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த படைப்புக்கான 1982 ஆம் ஆண்டின் விருதைப் பெற்றிருந்தது.இந்த விவரம் தவிர அக்காதெமி நண்பர்கள் மூலம் அறிய முடிந்த தகவல்கள் எதுவுமில்லை.
அருண்ஜோஷியின் வீட்டு முகவரியோ அலுவலக முகவரியோ தொலைபேசி எண்ணோ எதுவும் கிடைக்கவில்லை.தில்லி இலக்கிய வட்டத்திலும் அவர் அபூர்வமாகவே காணப்பட்டிருக்கிறார்.அந்த நான்கைந்து நாட்களில் தில்லியில் அறிமுகமான எழுத்தாளர்களில் ஒருவரும் ஆங்கிலப் பேராசிரியரும் கவிஞருமான மகரந்த் பராஞ்பே மட்டுமேஅருண்ஜோஷியைச் சந்தித்திருப் பதாகச் சொன்னார். அவருக்கும் ஜோஷியின் தற்போதைய முகவரி தெரியவில்லை.தில்லியிலிருந்து நொய்டா தொழிற்சாலை வளாகத்துக்குச் செல்லும் வழியில் ஜோஷியின் தொழிற்சாலை இருப்பதாகத் தெரிவித்தார். மறுநாள் மாலை தில்லிக் குளிரைப் பொருட்படுத்தாமல் அருண்ஜோஷியைத் தேடிக் கிளம்பினேன்.அரைகுறையான ஹிந்தி மொழியறிவும் வழிகள் பற்றிய குழப்பமும் தேடலை விரயமாக்கின.
சாகித்திய அக்காதெமி விருது பெற்ற ஓர் எழுத்தாளர்,அதுவும் உயர்தட்டு மொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தில் எழுதியவர் ஒருபோதும் புகழின் வெளிச்சத்தில் வந்து நின்றதில்லை என்பது வியப்பளித்தது.புதிராகவும் இருந்தது.அவருடைய நாவல் பாத்திரங்கள்போலவே அவரும் அந்நியமான வராகவே இருந்திருக்கிறார்.'அருண்ஜோஷியின் விநோத வழக்கு' - The Strange case of Arun Joshi - என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
தில்லியிலிருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பின்னர் மகரந்த் பராஞ்பேயோ சாகித்திய அக்காதெமி வெளியீடான 'இந்தியன் லிட்டரேச்சர்' இதழின் துணையாசிரியரான(இன்று அதன் ஆசிரியர்) தாமசோ,யாரென்று இப்போது நினைவில்லை, தகவல் தெரிவித்தார்கள்.நான்
அருண்ஜோஷியைத் தேடிப் போன நாட்களுக்கு வெகு முன்பே அவர் காலமாகி இருந்திருக்கிறார்.
அருண்ஜோஷியைத் தேடிப் போன நாட்களுக்கு வெகு முன்பே அவர் காலமாகி இருந்திருக்கிறார்.
புகழ்பெற்ற தாவரவியலாளரும் கல்வியாளருமான தந்தைக்கு 1939 இல் வாரணாசியில் பிறந்தார். அருண்ஜோஷி.ஏழு வயதுவரை காசி வாழ்க்கை.அதன் பின்னர் லாகூரில் இளமைப் பருவத்தைக் கழித்தார்.தேசப் பிரிவினையைத் தொடர்ந்து பஞ்சாபுக்குத் திரும்பினார்.படிப்பில்முன்னணியில் இருந்தவர்.அந்த அடிப்படையில் அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் பல்கலைக் கழகத்தில் முழுமையான உதவித்தொகை பெற்று பொறியியலிலும் தொழிற் சாலை மேலாண்மையிலும் பட்டப் படிப்பை முடித்தார்.பின்னர் எம்.ஐ.டி.யில் முதுகலைப் பட்டம் பெற்றார்.பல்கலைக் கல்வியின்போது அவருக்குக் கிடைத்த அனுபவம் தான் எழுத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அருண்ஜோஷியின் உறவினர் ஒருவர் மனநல மருத்துவராக இருந்தார். தன்னுடைய கைச் செலவுகளுக்காக அவருடைய மருத்துவ விடுதியில் பகுதி நேரப்பணியாளராக இருந்தார் அருண்ஜோஷி. மனச் சிதைவுக்கு ஆளான மனிதர்கள் இடையே பணியாற்றிய அந்த அனுபவம் அவருக்குள் ஆழமாகப் பதிந்தது.அந்தப் பதிவுதான் அவரை இலக்கியத்துறைக்குள் நுழையச் செய்தது.
கல்விப் பருவம் முடிந்து இந்தியா திரும்பிய அருண்ஜோஷி முதலில் ஒரு கம்பெனியில் மேலாண்மைப் பிரிவில் பணியாற்றினார்.சிறிது காலத்துக்குப் பிறகு சொந்தமாகத் தொழிற்சாலை தொடங்கி டீசல் எஞ்சின்கள்,வார்ப்பக உதிரிப் பாகங்கள் போன்ற இரும்பு வாடை உற்பத்திகளைத் தயாரித்தார். வெற்றிகரமான தொழிலதிபராக ஆதாயம் ஈட்டினார். இதற்கிடையில் மனசின் அழைப்புக்குச் செவி சாய்த்து எழுத ஆரம்பித்தார்.1968 முதல் இருபத்தைந்து ஆண்டுக் காலம் அவருடைய படைப்பாக்கப் பருவம்.1968 இல் வெளிவந்த அருண்ஜோஷியின் முதல் படைப்பான 'அந்நியன்' (The Foreiginer) நாவலை வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் குஷ்வந்த் சிங்.
முதல் நாவல் பெற்ற வாசக,விமர்சக வரவேற்பு அருண்ஜோஷியைத் தொடர்ந்து எழுதச் செய்தது.எனினும் அந்த எழுத்து வாசக ருசிக்கான தீனியாக அல்ல; ஓர் எழுத்தாளன் அனுபவிக்கும் ஆன்மீகப் பதற்றத்தின் அடையாளங்களாக இருந்தது.தொழிற்சாலை அதிபராக,செல்வந்தராக இருந்தும் தனி மனிதனாக இருப்பின் அர்த்தம் பற்றிய கேள்வி களால் வதைபடுபவராக இருந்தார் அருண்ஜோஷி என்பதை அவருடைய எல்லா நாவல்களும் பகிரங்கப்படுத்துகின்றன.அவர் நிர்வகித்து வந்த அறக் கட்டளையின் முதன்மையான நோக்கம் தொழிற்கூடங்களில் மனித அம்சத்தை மேம்படுத்துவதாக இருந்தது. ஒரே சமயத்தில் எதிரெதிரான இரண்டு உலகங்களில் அவர் உழன்றது முரண்போலவும் தோன்றுகிறது.
இருபத்தைந்து ஆண்டுகள் எழுத்து வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் அருண்ஜோஷி எழுதியவை ஐந்து நாவல்களும்.ஒரு சிறுகதைத் தொகுதியும் மட்டுமே.அபூர்வமான ஒன்றோ இரண்டோ நேர்காணல்களைத் தவிர எல்லாக் காலத்திலும் ஊடகங்களிருந்து விலகியே நின்றிருந்திருக்கிறார். தன்னுடைய படைப்புகளை முன்வைத்துப் பிரசித்தி தேடிக்கொள்ளவோ அல்லது தன்னுடைய பொருளாதார வெற்றிகளைக் காட்டி இலக்கிய விளம்பரத்தை உருவாக்கிக் கொள்ளவோ அவர் முனைந்ததில்லை. புத்தககங்களின் பின் அட்டையில் கூட அவருடைய புகைப்படம் அச்சானதில்லை.அது அவருடைய இயல்பாக இருந்திருக்கிறது.அந்த இயல்புதான் அவரை இலக்கிய உலகின் மறதிக்குள் வெகு எளிதாக தள்ளிவிட்டிருக்கிறது.அல்லது புதியது மட்டுமே மகத்தானது என்று இலக்கிய உலகம் பின் பற்றும் மாயை காரணமாக இருக்கலாம்.
1993 இல் பருவ மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பான வறண்ட நாட்கள். வாழ்நாள் முழுவதும் உடனிருந்து கொன்றுகொண்டிருந்த ஆஸ்துமா திடீரென்று முற்றி அருண் ஜோஷியை முழுமையாகக் கொன்று தீர்த்தது.
@
அருண்ஜோஷியின் நாவல்களில் நான் முதலில் வாசித்தது அவரது இரண்டாவது நாவலான 'பில்லி பிஸ்வாசின் விநோத வழக்'கை.அவரது நாவல்களில் மிகச் சுவாரசிய மானதும் பிரபலமானதும் அதுதான்.அவருடைய நாயகர்களில் கலகக்காரனும் பில்லி பிஸ்வாஸ்தான்.சிரத்தையாக வாசித்த எல்லா நாவல்களிலும் வரும் நாயகர்களைப்போல ஆக ஆசைப்பட்ட இருபதின் பருவத்தில் சற்றுக் கூடுதலாகவே என்னைக் கவர்ந்தான் பில்லி. தவிர இருத்தலியல் சிந்தனை மனதைக் கவ்விப் பிடித்திருந்த காலம் அது.
ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆங்கிலம்வழி வாசிக்கக் கிடைத்த நாவல்கள் கலாச்சார இடைவெளி காரணமாக மெல்லிய விலகலை தோற்றுவித்திருந்தன.அந்த இடைவெளியை இந்திய அனுபவங்களால் நிரப்பியவராக அருண்ஜோஷி தெரிந்தார்.
உலகப்போர்களும் தொழில்மயமாக்கமும் ஐரோப்பிய கலாச்சாரத்தில் அந்நியமாதலையும் மனித இருப்பைப் பற்றிய கேள்விகளையும் ஏற்படுத்தின.சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் சமூகக் கோளாறுகளும் பொருளாதார வெற்றிகளுக்காக இந்தியர்கள்ஆன்மாவைத் தொலைக்கும் சூழலும் இருப்பைப் பற்றிய சிந்தனைகளை எழுப்பின.அதைப் படைப்பாக் கங்களில் தேர்ச்சியுடன் விவாதித்தவர் அருண்ஜோஷி. இந்த வகைப்பாட்டை பின்வரும் உருவகமாக மனதில் பதிந்து வைத்திருந்தேன். மேற்கத்திய
எக்சிஸ்டென்ஷியலிசம் கண்ணாடிக் குப்பிக்குள் இருப்பது.இந்திய எக்சிஸ்டென்ஷியலிசம்
எக்சிஸ்டென்ஷியலிசம் கண்ணாடிக் குப்பிக்குள் இருப்பது.இந்திய எக்சிஸ்டென்ஷியலிசம்
மண்கலத்தில் வைக்கப்பட்டிருப்பது.அதன் சாரம் மண்கலத்தின் நுண்துளைகள் வழியாகக் கசிந்து கொண்டிருக்கும். அருண்ஜோஷியின் மண்கலம் பொருத்தமாகக் கசிவதை
அவருடைய படைப்புகளிலிருந்து ஊகித்தேன்.
பிமல் பிஸ்வாஸ் என்கிற பில்லி பிஸ்வாஸ் இருத்தலியல் கேள்விகளால்
தன்னுடைய வாழ்க்கையை ஆராய முயல்கிறான்.அது அவனை சமூகத்தின் பொது மரபுக்கு அந்நியனாக்குகிறது.பில்லி நியூயார்க் பல்கலைக் கழகத்தில் மானுடவியல்துறை மாணவன். அதே பல்கலைக் கழகத்தில் படிக்கவரும் ரோமியைத் தன்னுடன் தங்க அனுமதிக்கிறான். ரோமியின் கூற்றாகத்தான் நாவல் நிகழ்கிறது.சொந்த மண்ணைப் பிரிந்த புகலிடவாசியாக ஏக்கத்துடன் தன்னை உணரும் ரோமிக்கு பில்லி ஓர் ஆச்சரியமாகவே தென்படுகிறான்.
பில்லிக்கு யாதும் ஊரே.யாவரும் கேளிர்.அவன் வசிக்கத் தேர்ந்தெடுத்த இடம் கூட அமெரிக்காவின் இருட்பகுதி என்று சொல்லப்படும் ஹார்லெம் சேரிப்புறம்.அவனுடைய தோழமை சேரிவாசிகளான முன்னாள் குற்றவாளிகளுடன் என்பதெல்லாம் ரோமியை தர்மசங்கடப்படுத்துக்குள்ளாக்குகின்றன.சேரிவாசிகளுடன் பில்லிக்கு இருந்த அதே தோழமை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான துல்லாவுடனும்
இருக்கிறது. ரோமியை விட பில்லியை சரியாகக் கணிப்பவள் துல்லாதான். "பில்லி தனக்குள்ளே எதையோ உணர்கிறான்.அவனுக்கே அது நிச்சயமில்லை. ஒரு பூர்வகுடி மனோபாவம் அவனிடமிருக்கிறது.அதை அடக்கிவைக்கப் பார்க்கிறான்.ஆனால் அது அவனை மீறி ஒரு நாள் வெடிக்கும்.எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்" என்று அவள் சொல்லும் வாசகங்கள்தாம் நாவலின் போக்கைத் தீர்மானிக்கின்றன.
இந்தியாவுக்குத் திரும்பும் பில்லி தில்லிப் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறான்.சராசரி நடுத்தர வர்க்கத்தின் அட்டவணை வாழ்க்கை அவனை சலிப்படையச் செய்கிறது.மனைவி மீனாவுடன் அன்றாடம் நடக்கும் சச்சரவுகள் எல்லா உறவுகளையும் வெறுக்கச் செய்கின்றன.அதில் ரோமியின் நட்பும் அடங்கும்.இந்த வாழ்க்கை ,இந்த உறவுகள் இவற்றுகெல்லாம் என்ன அர்த்தம் என்று குமைகிறான் பில்லி
பிஸ்வாஸ்.மனக் கொந்தளிப்பு உச்சமான ஒரு கட்டத்தில் காணாமற் போகிறான். அவனைத் தேட முயற்சிகள் செய்யப்படுகின்றன.பயனில்லை. காவல்துறை பில்லி பிஸ்வாஸ் வழக்கின் கோப்பை மூடிவிடுகிறது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு.ரோமி மாவட்ட ஆட்சியராகிருக்கிறான்.மத்திய இந்தியாவில் நிலவும் வறட்சியைப் பார்வையிடுவதற்காக ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்கிறான்.வழியில் பழங்குடியினரின் கூட்டம் ஒன்று அவனுடைய ஜீப்பை மறிக்கிறது.அரை நிர்வாணமான ஒருவன் ஜீப்பை மறித்து "பையா, உன்னால் என்னை அடையாளம் காண முடியாது. முடிகிறதா? "என்கிறான். ரோமி ஆச்சரியத்துடன் தெரிந்துகொள்ளுகிறான்."பில்லி".
கல்லூரிப் பணிக்காலத்தில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிலாசியாவின் ஆதிக் காமம் பில்லியை ஈர்த்தது.அவளுடைய உறவுதான் சாலமரக் காடுகள் அடர்ந்த மைக்காலாக் குன்றுகளில் வாழும் பழங்குடிகளிடையே அவனைக் கொண்டுவந்து சேர்த்தது.அந்த வாழ்க்கைதான் அவனுடைய கேள்விகளுக்குப் பதிலாக அமைந்தது. அங்கே இருந்தது பில்லியின் விடுதலை.
ரோமி - பில்லி ரகசிய சந்திப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பில்லியின் தந்தை மகனை மீண்டும் தேடுகிறார்.மூர்க்கமான அந்த வேட்டையில் ஒரு போலீஸ்காரனால் சுடப் படுகிறான் பில்லி பிஸ்வாஸ்.ரோமியின் கையில் கிடந்து உயிர் விடும் முன்பு "வேசி மகன்களே" என்ற கத்துகிறான்.அது தனக்கான வசை மட்டுமல்ல என்று புரிகிறது ரோமிக்கு.
பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கில் அருண்ஜோஷியின் வாழ்க்கைச்
சம்பவங்களும் விரவிக் கிடக்கின்றன.அவருடைய அமெரிக்கக் கல்விப்புல நினைவுகள், மனநல விடுதி அனுபவங்கள் நாவலைக் கட்டமைக்கின்றன.
சுய சரிதைத்தன்மையுள்ளகுறிப்புகள் இடம்பெறும் எழுத்துமுறை அருண்ஜோஷியின் எல்லா நாவல்களிலும் காணப்படுகிறது.அவருடைய முதல் நாவலான 'அந்நியனி'ல் வரும் முதன்மைப் பாத்திரம் சிந்தி ஓபராயும் பில்லியைப் போலவே ஆஸ்துமா நோயாளி. அமெரிக்கக் கல்வி பெற்றவன். இவர்கள் மட்டுமல்லாமல் அவரது மூன்றாவது நாவல் 'அப்ரெண்டிஸி'ல் வரும் ரத்தனும் ஆஸ்துமா நோயாளி.அருண்ஜோஷி தன்னுடைய
சுய சரிதைத்தன்மையுள்ளகுறிப்புகள் இடம்பெறும் எழுத்துமுறை அருண்ஜோஷியின் எல்லா நாவல்களிலும் காணப்படுகிறது.அவருடைய முதல் நாவலான 'அந்நியனி'ல் வரும் முதன்மைப் பாத்திரம் சிந்தி ஓபராயும் பில்லியைப் போலவே ஆஸ்துமா நோயாளி. அமெரிக்கக் கல்வி பெற்றவன். இவர்கள் மட்டுமல்லாமல் அவரது மூன்றாவது நாவல் 'அப்ரெண்டிஸி'ல் வரும் ரத்தனும் ஆஸ்துமா நோயாளி.அருண்ஜோஷி தன்னுடைய
சுயத்தை நோய் உட்பட, தனக்கிருக்கும் எல்லா குணங்களையும் கதை மாந்தர்களுக்கு வழங்கியிருக்கிறார்.
அருண்ஜோஷியின் முதல் நாவல் 'அந்நியன்' சிக்கலான பின்னல்களையும் அநேக பாத்திரங்களையும் கொண்டது.சிந்தி ஓபராயின் கதையை சராசரியான முக்கோணக் காதல் கதையாக இறங்கி விடாமல் செய்வது ஆசிரியர் மேற்கொள்ளும் வாழ்க்கை பற்றிய விசாரணை.
கென்ய- இந்தியத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்த சிந்தி ஓபராய் நான்கு வயதில் ஒரு விமான விபத்தில் பெற்றோர்களை இழந்து கென்யத் தெருக்களில் அநாதையாக விடப்படுகிறான்.உறவினர் ஒருவர் ஆதரவில் வளர்கிறான்.பிள்ளைப் பருவத்தின் அநாதைத்தனம் அவனுடைய குணத்தில் இயல்பாகவே ஓர் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.உறவுகளுடனோ இடங்களுடனோ அவனுக்கு எந்தவிதமான உணர்வு நெருக்கமும் இல்லை. எந்த பந்தத்திலும் சிக்கிக் கொள்ளாத முகமூடியாகவும் விலகலாகவும் இந்த குணத்தைப் பராமரிக்கிறான் சிந்தி.கல்லூரியில் அவனைக் கவர்கிற ஜூன் பிளைட் என்ற பெண்ணுடனான நெருக்கத்திலிருந்து முதலில் விலகவே
விரும்புகிறான்.சிந்தியின் ஆஸ்துமாத் திணறலைப் பார்த்துப் பரிதாபப்படும் ஜூன் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.எல்லாம் சுபமாக முன்னேறும் தருணம்.தில்லியிலிருந்து படிப்பதற்காக அமெரிக்கா வரும் பாபு கெம்கா என்ற பணக்கார வீட்டுப் பையன் அறிமுகமாகிறான்.பாபுவுக்கு அந்தச் சூழல் அந்நியமானது.நிலைகொள்ளாமல் தடுமாறுகிறான்.அவனுக்கு உதவும் சிந்தி ஓபராய் ஜூனுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான்.அறிமுகம் பின்னர் காதலாக மலர்கிறது.திருமணமும் நிச்சயயிக்கப் படுகிறது.ஆனால் குழப்பங்களால் ஆட்டுவிக்கப் படும் பாபு தனக்குப் பொருத்தமானவனல்ல
என்று உணர்ந்து மறுபடியும் சிந்தியிடம் நெருக்கமாகிறாள்.பாபு ஓடும் காரின் முன் விழுந்து தற்கொலைசெய்துகொள்கிறான்.நொறுங்கிப் போகிறாள் ஜீன். ஓபராயின் இறுக்க முகமூடி தளர்கிற முதல் கட்டம்.ஜூனை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறான் ஓபராய். தீர்மானம் செயலாவதற்குள் பாபு மூலம் தரித்த கருவைச் சிதைக்க முயற்சிக்கும் ஜூன் இறந்துவிடுகிறாள். 'வேதனைகளுக்கு முடிவே கிடையாது.நன்மைக்கும் தீமைக்குமான
போராட்டத்துக்கு முடிவே கிடையாது' என்று யோசிக்கிறான்.சிந்தி ஓபராய்
வாழ்க்கைச் சூழலுடன் மிக அந்நியமானவனாக உணர்கிற இந்தத் தருணங்களுடன் நாவலின் முதல் பகுதி நிறைவடைகிறது.தன்னை ஒரு வெளியாளாக அல்லது அநந்நியனாகவே கருதும் ஓபராய் வேர்களைத் தேடி இந்தியாவுக்கு வருவது இரண்டாம் பகுதி.இங்கும் அவன் ஓர் அந்நியன். 'என்னுடைய அந்நியத்தன்மை என்னுடனேயே தொடர்ந்து வருகிறது.நான் எங்கே போனாலும் அதைக் களைய முடிவதில்லை' என்பதுதான் அவனுடைய ஆளுமைச் சிக்கல். இந்த அந்நியத்தன்மையிலிருந்து அவன் விடுபடும் மையத்தை நோக்கி நகர்கிறது நாவல்.பாபுவின் தகப்பனாரான கெம்காவின் தொழில் சாம்ராஜ்ஜியம் வருமான வரிச் சிக்கல் காரணமாகத் தள்ளாடுகிறது.கெம்கா பொருளாதார முறைகேடுகளுக்காகச் சிறையிலடைக்கப் படுகிறார்.வீழ்ச்சியடைந்த அந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தை இரண்டு நோக்கங்களுக்காக காப்பாற்றி நிமிர்ந்துகிறான் ஓபராய்.ஒன்று:
தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது.இரண்டு:பாபுவின் சகோதரி ஷீலாவின் அன்புக்கு இணங்குவது.இவற்றின் மூலம் தன்னுடைய அந்நியத்துவத்திலிருந்து மீள முயற்சிக்கிறான்.நாவல் முடிந்த பின்னும் தொடர்வது அதன் கதையல்ல;புகலிட வாழ்க்கையின் அந்நியத்தன்மை.அது தரும் கலாச்சார அதிர்ச்சிகள்.சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய வாழ்வின் இந்த அம்சங்களை முதலில் படைப்புக்குப் மையமாக அருண்ஜோஷி யோசித்திருந்தார் என்பதுதான் வாசகனைக் கவர்கிறது.
ஜோஷியின் மூன்றாவது நாவல் அப்ரெண்டிஸ் அவரது முதலிரண்டு நாவல்களின் தொடர்ச்சியும் விலகலும் கூட.முந்தைய இரு நாவல்களில் முதன்மைப் பாத்திரங்கள் தங்கள் இருப்பை பாவ மன்றாட்டுத் தொனியில் (Confession)அணுகியவர்கள்.அப்ரெண்டிசின் மையப்பாத்திரமான ரத்தன் ரதோட் பாவப் பரிகாரத்தில் ஈடுபட்டு இருப்புக்கு நியாயம் தேடுகிறான்.
வேலை தேடி தில்லிக்கு வருகிறான் ரத்தன்.அலைகிறான்.ஒன்றும் கிடைப்பதில்லை.தீவிர அலைச்சலுக்குப் பிறகு ராணுவத் துறையின் பிரிவில் தற்காலிகக் குமாஸ்தா வேலை கிடைக்கிறது.அதை நிரந்தரப்படுத்திக் கொள்வதற்காக மேலதிகாரியின் மகளைத் திருமணம் செய்துகொள்ளுகிறான். உத்தியோகத்தில் உயர்வதற்காக எந்த சமரசத்துக்கும் அவன் தயார்.நிழல் உலக வியாபாரியான ஹிம்மத் சிங்கிடமிருந்து கையூட்டி வாங்கிக் கொண்டு
தரம் குறைந்த ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் அனுமதிக்கிறான். (போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் புதியதல்ல;பழைய மரபின் தொடர்ச்சிதான் போலிருக்கிறது). இந்திய சீனப் போரில் அந்தத் தளவாடங்கள் பயன்படுத்தப் பட்டு ஏராளமான இந்தியச் சிப்பாய்கள் இறக்கிறார்கள்.பொது மக்கள் விசாரணை கோருகின்றனர்.அரசியல் கட்சிகள் ரத்தனைக் கைகழுவி விடுகின்றன.அவன் பலியாடாகிறான்.விசாரனையில் முறைகேட்டை ருசுப் படுத்தும் ஆதாரங்கள் இல்லை என்பதால் விடுதலை அடைகிறான். போர் முனையிலிருந்து திரும்பும் ரத்தனின் பால்ய நண்பரான பிரிகேடியர் இந்த முறைகேட்டினால் ராணுவத்திலிருந்து நீக்கப்படுகிறார்.அவர்தான் அந்தத் தளவாடங்களைப் பயன்படுத்தியவர். அவருக்கு அவை காயலான்கடைச் சரக்கு என்று புரியாமல்போனதுதான் குற்றம். தவறை ஒப்புக்கொள்ள ரத்தன் முன்வந்தால் பிரிகேடியர் காப்பாற்றப்படலாம்.அப்படிச் செய்வது தன்னுடைய அந்தஸ்தைக் கவிழ்த்து விடுமென்று தயங்குகிறான் ரத்தன்.அதற்குள் பிரிகேடியர் தற்கொலை செய்துகொள்கிறார்.பாவச் சுமை தாளாமல் குமையும் ரத்தன் கோவில் வாசலில் பக்தர்களின் காலணிகளைத் துடைக்க அமர்கிறான்.கர்மவினை
தீர்க்க கடவுளின் பயிற்சிப் பணியாளன்- அப்ரெண்டிஸ்- ஆகிறான்.
அருண்ஜோஷியின் நாவல்களில் இந்தியமனம் அதன் கலாச்சார அடையாளங்களுடன் வெளிப்படும் நாவல் அப்ரெண்டிஸ்.பகவத் கீதையின் உபதேசங்கள் தீவிரமாகவும் நையாண்டியாகவும் அலசப்படுகின்றன.ஆசிரியர் கீதையைப் போற்றுகிறாரா விமர்சிக்கிறாரா என்று கண்டுபிடிப்பது சுவாரசியமான ஆட்டம்.
'கடைசிச் சுழல்வழி'நாவலில் அருண்ஜோஷி கூடுதலான இந்தியக் குறிப்பீடுகளுக்கு இடமளிக்கிறார்.கதாநாயகன் சோம் பாஸ்கர்.சூரியனும் சந்திரனும் இணைந்த பெயர்.நாயகி அனுராதா.இந்திய மரபுப்படி ஒரு நட்சத்திரம்.கதைப்படி ஒரு சினிமா நட்சத்திரம்.
தந்தையை இழந்த சோமுக்கு அவரது சொத்துக்கள் கிடைக்கின்றன. அவனுக்கு மனைவியும் இருக்கிறாள்.கீதா.(பகவத் கீதை?).முன்னால் சினிமா நட்சத்திரமான அனுராதா அவனைக் கவர்கிறாள்.'அவள் ஒரு சமுத்திரம் போல.அவளுடைய ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது' என்கிறான்.அந்த ஆழத்தைக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறான்.
அவளும் கணவன் அஃப்தாபும் வசிக்கும் சுழல்வழிகளுள்ள வீடு இருப்பின் பொறியாகவே சோமுக்குப் படுகிறது.அனுராதாவின் வசீகரமும் ஈர்ப்பும் சோமைப் பித்துக்கொள்ளச் செய்கின்றன.பித்து முற்றி மாரடைப்பில் விழுகிறான் சோம்.அவ்வளவுதான் கதை தீர்ந்தது என்று குடும்ப டாக்டர்.கே. கைவிரித்த பிறகும் ஆச்சரியகரமாக மீள்கிறான் சோம். அனுராதா எந்த தடயமும் இல்லாமல் காணாமற் போகிறாள்.அவளைத் தேடுவதற்காக
சோம் கொடுக்கும் விலை முட்டாள்தனமாக அதிகம்.அஃப்தாபின் நொடித்துப் போன வியாபாரப் பங்குகளை வாங்குகிறான்.கடைசியில் ஒரு மலைக் கோவிலில் அவளைப் பார்க்கிறான்.'நீ உயிருடன் இருக்கவேண்டும் என்பதற்காக உன் காதலைத் துறந்துவிட்டேன்' என்று அனுராதா சொல்லுவதை எரிச்சலுடன் பெருமிதத்துடனும் ஏற்றுக்கொள்கிறான்.
மீண்டும் அவள் காணாமற் போகிறாள்.அவளைத் தேடி சுழல்வழிகளுள்ள அவள் வீட்டை அடைகிறான்.அந்த புதிர் வழியின் மையத்தில் அனுராதாவின் சடலம் கிடக்கிறது. தற்கொலையா?கொலையா? தன்னுடைய கேள்விகளையும் அவளைப் பற்றிய நினைவு களையும் ஒரு பிரார்த்தனைபோல சொல்லிக் கொண்டு நிற்கிறான் சோம் பாஸ்கர்.
அருண்ஜோஷியின் நாவல்களில் சிக்கலான வடிவமுடைய நாவல் இது. காமம், வேட்கை,மனமுறிவு,வன்மம் என்று உணர்வின் முடிவற்ற சுழல்வழிகளில்
மனிதர்கள் உழல்வதனால் இந்த வடிவமும் இருளும் வாய்த்திருக்கலாம்.ஒரு வகையில் உருவகத்தன்மை கொண்ட படைப்பு கூட.ஜோஷியின் அடுத்த நாவலான 'நகரமும் நதியும்'வாசிக்க நேர்ந்தபோது 'கடைசி சுழல்வழி'யில் அதன் வடிவ ஒத்திகை தென்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டஅருண்ஜோஷியின் நாவல் 'நகரமும் நதியும்'.சல்மான் ரஷ்திக்கு முற்பட்டகாலப்பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய நாவல்களில் இந்த நாவலுக்கு பரீட்சார்த்தமான இடமுண்டு.சரியான பொருளில் புதிய புனைவெழுத்தின் சாயல்கள் அருண்ஜோஷி விட்ட இடத்திலிருந்து ஆரம்பமாயின என்பது பொருந்தும்.
நகரமும் நதியும் நாவலில் இடம் பெறுவது நமக்குத் தெரிந்த எல்லா நகரங்களுந்தான். நதியும் நாமறிந்த நதிகள்தாம்.நகரத்தின் அதிபதியான மகா அதிகாரி (Great Master) வம்சாவழியாக நகரத்தை ஆட்சி செய்யும் உரிமை பெற்றவர்.ஒரு நாள் அதிகாலை கெட்ட கனவு கண்டு எழுகிறார். ஆஸ்தான ஜோதிடர்கள்,முகஸ்துதி பாடும் அமைச்சர்கள் எல்லாரையும் வரவழைத்து ஆலோசனை நடத்துகிறார்.அவருடைய ஆட்சியை பலப்படுத்த
ஒரே வழி நகரத்தின் இன்னொரு துருவமான ஏழைப் படகோட்டிகளின் அனுதாபத்தைப் பெறுவது. அவர்களை குஷிப்படுத்தப் பார்க்கிறார் மகா அதிகாரி. படகோடிகள் அவருடைய பசப்பலுக்கு மயங்க மறுக்கிறார்கள்.அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் தண்டனைகள் விதிக்கப் படுகின்றன.படகோட்டிகள் கூட்டம் கூட்டமாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.வன்முறைக் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.மொத்தமும் நாசமாகின்றன.கொந்தளித்து எழும் நதியும் ஒரு வார காலம் ஓயாது பெய்யும் மழையும் நகரத்தை மூழ்கடிக்கின்றன. அந்தப் புராதன நகரத்தில் இனி எதுவும் மிச்சமில்லை.அந்தச் சிதிலங்களின் மீது புதிய நகரம் நிர்மாணிக்கப்படும்.அதுவும் பழையதுபோலவே புதிய பெயர்கொண்ட புதிய மகா அதிகாரிகளுக்கு ஆட்சிப் பொருளாகலாம் என்ற அங்கதத்துடன் நாவல் நிறைவு பெறுகிறது.அழிந்து போன நகரத்தில் உயிரோடு எஞ்சிய அநாமதேயன் மட்டும் புதிய தொடக்கத்தின் பிரதிநிதியாக நதியில் மிதந்துவரும் தெப்பத்தில் ஏறுகிறான். மனித இனத்தின் பயணம் தொடர்கிறது.
நவீன யுகத்தின் நையாண்டி;அரசியல் மோகத்தின் உருவகம்; வரலாற்றின் மீதான ஓர் எழுத்தாளனின் பதிவு என்று பல முகங்களை இந்த நாவலில் காணலாம்.மகா அதிகாரி என்ற பாத்திரம் அதிகாரத்தை நிலை நிறுத்த விரும்பும் ஏகாதிபத்தியமோ, நாஜிசமோ, எதுவாகவும் இருக்கலாம். ஸ்டாலினோ, ஹிட்லரோ, இந்திரா காந்தியோ எவராகவும் இருக்கலாம்.
அருண்ஜோஷியின் பிற நாவல்களிருந்து கதை மையத்தில் வேறுபட்ட நாவல் 'நகரமும் நதியும்' .மற்ற நாவல்கள் தனி மனித இருப்பைப் பற்றிய விசாரணையாக அமைந்தவை. இந்த நாவல் ஒரு குடியுரிமைச் சமூகத்தின் இருப்பைப் பற்றியது.அதற்கு நேரும் அபாயங்கள் பற்றியது.சல்மான் ரஷ்திக்கு 'மிட் நைட் சில்ட்ரன்' நாவல் மூலம் கிடைத்த பிரபலம் அருண்ஜோஷியின் இந்த நாவலுக்குக் கிடைத்திருக்க வேண்டிய கவனத்தை
பறித்தது என்றும் கருதப்படுகிறது. தன்னுடைய எழுத்துக்களையோ எழுத்தாளன் என்ற தகுதியில் தன்னையோ முன்னிருத்திக்கொள்ள விரும்பாத அருண்ஜோஷியின் சுபாவம் காரணமாக இருக்கலாம்.
@
இலக்கிய வாசிப்பு தீவிரமாகத் தொடங்கிய கால அளவில் அறிமுகமான அருண் ஜோஷியின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். அநேகமாக அவருடைய எல்லா நாவல்களையும் பத்து கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பையும்.கால் நூற்றாண்டுகளுக்கு முந்தைய அந்த வாசிப்பில் ஓர் இனம் புரியாத ஈர்ப்பை மட்டுமே பெற்றிருந்திருக்கிறேன். வாசிப்பின் வழிகள் வேறு திசைகளுக்குத் திரும்பியபோது அந்த ஈர்ப்பு மறைந்து போனது.அருண்ஜோஷி என்ற எழுத்தாளரை நானும் மறந்தேன்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய நாவல்கள் சிலவற்றை வாசிக்க விரும்பினேன். சில நாவல்கள் நான் இதுவரை கொண்டிருக்கும் கருத்தை மெய்ப்பித்தன.ஆங்கிலத்தை விடவும் தரமும் ஆழமுமான படைப்புகள் மாநில மொழிகளில்தான் உருவாகின்றன என்ற பாரபட்சமான
அபிப்பிராயம் மேலும் வலுவானது.அப்படி வாசிக்கத் திரட்டிய நாவல்களில் அருண் ஜோஷியின் நாவல்களும் இருந்தன.மறு வாசிப்பில் அவை புதிய பொருள்கொண்டு துலங்கியது ஓர் இலக்கிய அனுபவம்.ஒவ்வொரு நாவலும் ஒன்றுக்கொன்று வேறு பட்டதாகத் தெரிந்ததும் அதன் இன்னொரு அம்சம்.
அருண்ஜோஷியின் ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு கூறல்முறையில் அமைந்தவை. முதல் நாவலான 'அந்நியன்' மையப்பாத்திரமான சிந்தி ஓபராயின் தன்மைக்கூற்றாக எழுதப்பட்டது.பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கு நாவல் பில்லியின் நண்பன் ரோமியின் விவரிப்பாக அமைகிறது.மூன்றாவது நாவல் 'அப்ரெண்டிஸ்' ஒரு தனி மொழியின்
வடிவம் கொண்டது.முதன்மைப் பாத்திரமான ரத்தன் ராதோர் யாரென்று வெளிப்படுத்தப் படாத ஒருவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மொழியில் தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறான்.கடைசி சுழல்வழி மையப்பாத்திரத்தின் கூற்றாக இருந்தாலும் ஓர் உருவகத்தன்மையின் புதிர் மொழியில் சொல்லப்படுகிறது.'நகரமும் நதியும்' நாவலின் கதையாடல் அநாமதேயன் என்ற பாத்திரத்துக்கு அவனுடைய குரு மகா யோகேஸ்வரர்
சொல்லுவதான வடிவம் கொண்டது.இவை எழுதப்பட்ட காலப் பகுதியை யோசிக்கும் போது ஓர் எழுத்தாளர் இத்தனை வகைகளைக் கையாண்டிருப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது.
கதைச் சட்டகத்தில் பொருத்திஅருண்ஜோஷியின் நாவல்களை இங்கே முன் வைத்திருப்பது அநீதி என்று புரிகிறது.ஏனெனில் நாவல் கதையல்லவே.அருண்ஜோஷியின் நாவல்களில் கதையம்சம் ஒரு தோராய வடிவம் மட்டுமே. மனித இருப்பின் கேள்விகளை விசாரிப்பதுதான் அவற்றின் நோக்கம். மேற்கத்திய எக்சிஸ்டென்ஷியலிச எழுத்தாளர்கள் எழுப்பிய கேள்விகளை அருண்ஜோஷி இந்தியப் பின்னணியில் எழுப்பியிருக்கிறார். மனிதனின் இருப்புக்கு என்ன பொருள்?உறவுகளின் அர்த்தம் என்ன?பொருட்களின்
பின்னால் மனிதன் நடத்தும் வேட்டையின் விளைவு என்ன?அதிகாரம்மனிதனை என்னவாக மாற்றுகிறது? - காலங்காலமாக நிமிரும் இந்த அடிப்படையான கேள்விகள்தாம் அவருடைய அக்கறைகள்.மனிதனின் விதி பற்றிய அவருடைய விசாரங்கள்தாம் படைப்புகளின் மையம்.இவற்றுக்கு ஓர் இந்திய மனம் கண்டடைகிற பதில்களை அருண்ஜோஷியிடம்
பார்க்க முடிகிறது.அந்த பதில்கள் மேற்கத்திய எக்சிஸ்டென்ஷியலிசஎழுத்தாளர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகின்றன.அவர்களைப் பொருத்தவரை மனித இருப்பு ஓர் அபத்தம். அர்த்தமில்லாதது.ஜோஷிக்கோ அது ஓர் தேடல்.தன்னை அறிந்து கொள்ள மனிதன் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணம்.இந்தக் கருத்தாக்கங்களின் அடிப்படையில் அருண்ஜோஷி இந்து தத்துவங்களை வலியுறுத்தியவராகக் கருதப்படுகிறார்.ஓரளவுக்கு அது உண்மையாகவும் இருக்கலாம்.ஆனால் அவருடைய முதன்மையான பிரச்சனை மனிதனின் இருப்பையும் இருப்பின் அறத்தையும் சார்ந்தது.'' மனிதனின் செயல் அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்,எனவே ஒருவர் பொறுப்பற்ற இருப்பைத் தொடரமுடியாது.ஏதாவது ஒரு புள்ளியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது'' என்பது அவருடைய பார்வை.
பதிற்றாண்டுகளின் இடைவெளிக்குப் பின்பு அருண்ஜோஷியின் நாவல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தியபோது அவை வாசிப்புக்கு உகந்தவையாகவே இருந்தன.அவர் மையப்ப டுத்தி யிருந்த சில கேள்விகள் இன்றும் பொருந்தக் கூடியவை.உலகமயமாக்கலின் விளைவாக நாம் இழந்துகொண்டிருக்கும் மானுட குணங்களைப் பற்றிய விவாதங்களின் சாயலை, பாலியல் உறவுகளின் சிக்கல்களை, சுற்றுச் சூழல் நசிவை,ஆன்மீக வறுமையை,
அரசியல் பகடையாட்டங்களை இன்றைய அர்த்தத்தில் இந்தப் படைப்புகளில் காண முடிகிறது.கேள்விகள் நிரந்தரமானவை.பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. கேள்விகளின் நிரந்தத்தன்மைதான் காலம் கழிந்தும் அருண்ஜோஷியை நிகழ்காலத் தேவையுள்ளவராக எனக்குத் தோன்றச்
செய்திருக்கிறது.
@