புதன், 31 ஜூலை, 2013

பு.பு. (அல்லது) B W வின் குறிப்புகள்



''இவ்வ்வ்ளோ புக்கு வெச்சிருக்கிங்களே, எதுக்கு?''   கேட்டது என்  பக்கத்து வீட்டுத் தோழி கரிஷ்மா. (வயது ஆறு).  என்  புத்தக அலமாரியைப் பார்த்து விட்டு நிறையக் கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு  அனுசரணையான பதில்களாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

''எதுக்கா, படிக்கிறதுக்குத்தான்''

''இவ்ளோவையும் படிக்க முடியலேன்னா?''

''படிக்க முடியலேன்னா தினத்துக்கு ஒரு புக்கா வேவிச்சுச் சாப்ட்றுவேன்''

''அப்ப என்ன ஆவீங்க?''

'' புக்கைச் சாப்டுச் சாப்டுப் புழுவாயிடுவேன்''

''அப்ப உங்கள நா என்னான்னு கூப்றதுடது?''

''புத்தகப் புழுன்னு கூப்டுக்கோ''

''பெருசா இருக்கே?''

அவள் ஆங்கிலம் வழிப் பயில்பவள். அதனால் ''  புக் வோம்னு கூப்டலாம்''  என்றேன். அது புத்தகப் புழுவைவிடச் சிக்கலாக இருந்தது அவளுக்கு. ''பி.டபிள்யூ'' என்று சுருக்கிக் கொடுத்தேன். அதுவும் சரியாகவில்லை. நீண்ட நேரம் கண்களை மூடி ஆலோசனையில் மூழ்கினாள். கடைசியாகத் தீர்மானத்துக்கு வந்து கண்களைத் திறந்து சிரித்தபடி 'புபு' என்று அழைத்தாள். முதலில் சின்ன அதிர்ச்சியும் பிறகு பெரிய மகிழ்ச்சியும் தோன்றியது. முதலாம் வகுப்புப் படிக்கும் சிறுமி தானாக ஒரு சொற் சுருக்கத்தைக் கண்டுபிடித்த ஆச்சரிய அதிர்ச்சி. அதுவும் என்னைச் சரியாக உருவகப் படுத்தி விட்டாள் என்பதில் பெரிய மகிழ்ச்சி.

புத்தகங்களின் காதலன் நான் . மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும்போது புத்தகங்களை உணர்கிறேனா என்பது நிச்சயமில்லை. ஆனால் புத்தகங்களைத் தொடும்போது ஓர் உயிரைத் தொடுவதுபோலத்தான் இருக்கிறது. அவற்றுடன் உறவாடும்போது மனிதர்களுடன் புழங்குவதுபோலத்தான் இருக்கிறது. அதனால் என் குட்டித் தோழி 'புபு' என்று அழைத்ததும் மனம் துள்ளிக் குதித்ததை  சகஜமாகவே எடுத்துக் கொண்டேன்.



ன்னை விடவும் தீவிரமான புத்தகப் புழுக்கள் இருக்கிறார்கள்.தெரிந்தவர்களா கவும் தெரியாதவர்களாகவும். அவர்களில் ஒரு புழு பிரதீப் செபாஸ்டியன். பெங்களூருக்காரர். தி ஹிந்து, டெக்கான் ஹெரால்ட், பிசினஸ் வேர்ல்டு போன்ற ஆங்கில நாளேடுகளில் இலக்கியப் பத்திகளும் தெஹல்கா, ஓப்பன், காரவன் இதழ்களில் கட்டுரைகளும் எழுதுகிறார். பிரதீப்பின் புத்தகக் காதல் சற்று வித்தியாசமானது. அவருடைய வாசிப்பில் புத்தகத்தின் உள்ளடக்கத்துக்கு இடமிருக்கிறது. அதை விட அவரைக் கவர்வது புத்தகத்தின் திட வடிவம். ஒரு புத்தகத்தின் அட்டை, தாள், கட்டுமானம். அதன் பதிப்பு வரலாறு, அதன் வாசனை, அச்சு எழுத்துகளின் அமைப்பு, எழுத்துருக்கள், சமயங்களில் அவற்றிலுள்ள எழுத்துப் பிழைகள் ஆகியவைதாம். இவற்றை யெல்லாம் விலாவாரியாகச் சிலாகித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். புத்தகத்தை அடுக்கி  வைப்பது, புத்தக அலமாரிகள், இரண்டாம் கை புத்தகங்கள், புத்தகத் திருட்டு, கையொப்பமிட்ட பிரதிகள் என்று புத்தகக் காதலின் எல்லா அம்சங்களையும் விளக்கிச் சொல்லுகிறார். சமீப காலத்தில் படித்த புத்தங்களில் மிகச் சுவாரசியமாக இருந்த புத்தகம் பிரதீப் செபாஸ்டியனின் ' தி க்ரோனிங் ஷெல்ஃப்' (The goaning shelf ). புழு அறியும் புழுவின் கால். எனினும் புத்தகத்தில் சொல்லப்படுவது போன்ற அத்தனை நுணுக்கமானதல்ல என்னுடைய காதல். நான் புத்தகத்தின் உள்ளடக்கதிலேயே கவனம் கொள்கிறேன். அதன் புற அழகில் லயிக்க முடியாமற் போவதற்குக் கார ணம் தமிழ்ப் பதிப்பாளர்கள். நாம் மனதுக்குள் மிகவும் செல்லம் பாராட்டும் பல புத்தகங்களும் வடிவமைப்பில் எந்த ஈர்ப்பும் இல்லாதவை. புதுமைப்பித்தன், ஜானகிராமன் ஆகியோரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை கோரமான வடிவமைப்பிலும் குறைந்த பட்சம் பக்கத்துக்கு ஒரு பிழையுடனும் பதினாறு பக்க ஃபாரத்துக்குள் நாலைந்து எழுத்துருக்களிலும் வாசித்து நொந்திருக்கிறேன். கணிணித் தொழில் நுட்பத்துக்கு நன்றி. இன்று சில பதிப்பகங்களாவது  புத்தகங்களை நேர்த்தியான வடிவைப்பில் வெளியிடுகின்றன. பிரதீப்பின் புத்தகத்தில் விவாதிக்கப்படும் அம்சங்களில் வடிவ நேர்த்தியும் ஒன்று.

புத்தகக் காதலர்களின் பேராசைகளில் ஒன்று ஒரு புத்தகத்தின் முதல் பதிப்பை உரிமையாக்கிக் கொள்வது என்கிறது பிரதீப்பின் ஒரு கட்டுரை. பிரபல எழுத்தாளர்களுடைய புத்தகங்களில் முதல் பதிப்பை வைத்திருப்பதில் ஏதோ கோஹினூர் வைரத்தையே சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் கர்வம் அவர்களுக்கு ஏற்படுகிறதாம். முதல் பதிப்பைக் கைவசப்படுத்துவதற்காக என்ன விலை கொடுக்கவும் எந்தத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்களாம்.

ரஷ்யாவின் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் பிரபல எழுத்தாளர் விளாதிமீர் நபக்கோவ். ஆரம்பத்தில் தனது படைப்புகளை ரஷ்ய மொழியில் எழுதிய நபக்கோவ் ஒன்பது நாவல்களுக்குப் பிறகு ஆங்கிலத்திலேயே எழுத ஆரம்பித்தார். அவருடைய மிகப் பிரபலமான நாவல் 'லோலிடா'. மத்திய வயதுக்காரரான ஓர் இலக்கியப் பேராசிரியர்  பன்னிரண்டு வயதுச் சிறுமியிடம் காதல் கொள்வதுதான் நாவலின் கதை. இது ஒழுக்கக் கேட்டை நியாயப்படுத்தும் நாவல்  என்று இங்கிலாந்து, பிரான்ஸ், முதலான பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. இந்த நாவலை நபக்கோவ் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதினார். வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரே ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்த்தார்.

ரிக் கெகோஸ்கி என்ற அரிய புத்தகங்களின் விற்பனையாளர் 1988 ஆம் ஆண்டு தனது கேட்லாகில் 'லோலிடா' ஆங்கில நாவலின் முதல் பதிப்புப் பிரதி விற்பனைக்கு இருப்பதாக அறிவித்தார். விலை 3250 பவுண்டுகள். இந்திய ரூபாயில் சுமாராக இரண்டே முக்கால் லட்சம். இதை எழுதிய நாளின் நிலவரப்படி 2,77, 625 ரூபாய். சில வாரங்களுக்குப் பிறகு கெகோஸ்கிக்கு ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் க்ரீன்  ஒரு கடிதம் எழுதினார். ' நாவலாசிரியர் நபக்கோவ் கையெழுத்துப் போட்ட 'லோலிடா' வின் முதல் பிரதி என்னிடம் இருக்கிறது. விலைக்கு வாங்கிக் கொள்ளச் சம்மதமா? '. புபுவான கெகோஸ்கி உடனே பதில் போட்டார். 'சம்மதம் விலை 4000 பவுண்ட்'. கிரயம் முடிந்து புத்தகம் கைக்கு வந்தது. 'விளாதிமீர் நபக்கோவிடமிருந்து கிரஹாம் க்ரீனுக்கு , நவம்பர் 1959' என்ற வாசகங்களுடன் பச்சை மசியில் வரைந்த பட்டுப் பூச்சியின் படம் சகிதமிருந்த முதல் பக்கத்தைப் பார்த்ததும் கெகோஸ்கி தன்னையே மெச்சிக் கொண்டார். அடுத்த நாளே புத்தகத்தை 9000 பவுண்டுக்கு விற்பனையும் செய்தார். பிரபல ராக் பாடகர் எல்டன் ஜானின் பாடலாசிரியரான பெர்னி டாபின் அதை வாங்கினார். சங்கதி கையை விட்டுப் போன பின்னர்தான் பொன் முட்டை போடும் வாத்தை அறுத்த முட்டாள்தனத்தை உணர்ந்தார் கெகோஸ்கி. அதைத் திரும்ப வாங்க முயற்சி செய்தார். நடக்கவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக அந்த அபூர்வப் பிரதியை மறுபடியும் வாங்கினார். விலை  13,000 பவுண்டுகள். பத்தாண்டுகள் வரை அந்தப் பொக்கிஷத்தைத் தன்வசம் வைத்திருந்தார். அதற்குப் பிறகு ஒரு புத்தகத்துக்கு என்ன மதிப்பு என்று காட்டும் குறுகுறுப்புடன் அதை விற்றார். உலகின் மிகப் பெரிய அருங்கலைப் பொருள்களின் விற்பனையகமான கிறிஸ்டீஸின் நியூயார்க் கிளையில் நபக்கோவ் கையெழுத்திட்ட 'லோலிடா' நாவலின் முதல் பிரதி யை நீங்கள் வாங்கலாம். விலை 2,64,000 டாலர்கள் மட்டுமே. இந்திய மதிப்பில் ......?



ருபது ஆண்டுகளுக்கு முன்பு எனக்குச் சில புத்தகங்களும் பத்திரிகைகளும் கிடைத்தன. அன்றைய நிலவரப்படி இந்தியச் சந்தைகளில் கிடைப்பதற்கு அரியவை. ராமச்சந்திரன் என்பவர் தனது சேகரிப்பிலிருந்தும் வேறு ஏதோ புத்தகச்  சுரங்கத்திலிருந்தும்  திரட்டிய மாணிக்கங்களை பாதி விலைக்கும் முக்கால் விலைக்குமாக விற்பனை செய்தபோது அகப்பட்டவை அவை. பொருளாதார முடையோ வீட்டிலிருப்பவர்களின் தொணதொணப்போ அவரை அதற்குக் கட்டா யப் படுத்தியிருந்தது. புத்தகப் புழுக்களின் நிரந்தர பயம் வீட்டவர்களின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் ஊசிகள்தாம்.  குளிர் சாதனப் பெட்டியோ குக்கரோ வாங்கும்போது கிடைக்கும் அட்டைப் பெட்டிகளை வருடக்கணக்காகப் பாதுகாக்க த்  தயாராகும் குடும்பத்தினர்  புத்தகங்களுக்கு மட்டும் வீட்டில் இட ஒதுக்கீட்டை அனுமதிப்பதில்லை.

எனக்குக் கிடைத்த மாணிக்கங்களில் ஒன்று 1960 களில் நடத்தப்பட்ட இலக்கிய இதழ். Plumed Horn என்று பெயர்.மெக்சிகோவிலிருந்து நடத்தப்பட்ட பத்திரிகை. ராய் சௌதிரி என்று ஓர் இந்தியப் பிரதிநிதியும் அதற்கு இருந்திருக்கிற ¡ர். எட்டு ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. அதன் 12 இதழ் எனக்குக் கிடைத்தது. ராக்வெல் ஜோதோரோவ்ஸ்கி என்ற பெண்கவிஞரின் கவிதைகள் வெளியான சிறப்பிதழ். அதிலிருந்து சில கவிதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதழை மார்கரெட் ரண்டாலும் கணவர் செர்ஜியோ  மாண்ட்ரகானும் ஆசிரியர்களாக இருந்து நடத்தி யிருக்கிறார்கள். இருவரும் விவாகரத்துச் செய்ததும் பத்திரிகையும் நிறுத்தப் பட்டு விட்டது. மார்க்கரெட் பெண்ணியத்தின் முக்கிய  நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் 'Gathering Rage' என்ற நூலை எழுதியவர்.எழுபது வயது தாண்டிய இன்றும் உலகம்  சுற்றிக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு நன்றி.இணையம் வழியாக அவரைத் தேடிப் பிடித்து விசாரித்த போது ராக்வெல் உயிருடன் இருப்பது தெரிந்தது. தொடர்பு கொண்டேன்.



திங்கள், 29 ஜூலை, 2013

ஒரு மீள் பதிவு - கலாப்ரியாவின் ’ நான் நீ மீன்’ தொகுப்பு வெளியீடு


















ல்லாருக்கும் வணக்கம்.
நண்பர் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வெளியிடப்பட்ட 'நான் நீ மீன்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்து என்னுடைய பேச்சைத் தொடர விரும்புகிறேன். 'மந்திரச் சிமிழ்' என்ற கவிதை எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் - அது கவிதையாக இருக்கிறது. கவிதையல்லாத நிறைய சமாச்சாரங்களுக்கு இடையில் ஒரு கவிதையை வாசிக்கக் கிடைத்த மகிழ்ச்சியால் பிடித்துப் போனது. இரண்டாவது காரணமும் இருக்கிறது. சுய நலமான காரணம். அது என்னவென்பதைக் கவிதையை வாசித்து முடிப்பதற்குள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இனி கவிதை.

இதை
வாசிக்கத் தொடங்கி விட்டீர்களா,
எனில் நீங்கள்தான்
ஏழு கடல்தாண்டி
ஏழுமலைதாண்டி
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
சிமிழ் தேடிப் போகும் இளவரசன்.

முதல் கடலின் கரையில்
நம்பிக்கையளிக்கும் விதமாய்
'
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது' என்கிறது
பிரமிளின் வண்ணத்துப் பூச்சி

மலையேறி இறங்கிக்
கடலேகும் முன் கழிமுகத்தில்
அள்ளிப் பருகிய நீரில்
சுகுமாரன் கை கவிழ்த்த நீரும்
கலந்திருக்கிறது

கானகமொன்றின் இசை
உங்கள் முகம் கை கழுத்தைத்
தழுவி உவகையுறுகிறது
நகுலனின் அம்மா என
'
நண்பா, அவள் 
எந்தச் சுவரில் 
எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்' என
அவர் காதில் விழும் குரலை
நீங்களும் செவியுறுகிறீர்கள்
அது அவரது அம்மாவா
கொல்லிப் பாவைகளா

தீவை விட்டுத் தெப்பத்தை
அலையுள் சரிக்கும்பொழுது
கரையில் வேறெதுவும்
செய்ய முடியாமல்
ஒதுங்கப் பாடை நிழலுமின்றிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஞானக்கூத்தனின் நாய்

தெப்பம் சிதையக்
கடலுக்குக் கீழ் 
ஓட்டமும் நடையுமாய்
அலைந்து கொண்டிருக்கின்றன 
தேவதச்சனின் அன்பின் சிப்பிகள்

பொன்னிலைகள் ஆபரணமாய் உதிர்ந்து கிடக்கும்
மரத்தின் கழுத்தைக் காலடி எனக் கற்பித்து
இளைப்பாறியதை நினைக்கக்
கவ்விக்கொள்ளும் தேவதேவனின் வெட்கம்

கண்டு கொள்கிறீர்கள்
பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஜோடிக் கண்களென 
இரண்டு வண்டுகளைச் சிமிழுக்குள்
எதில் மந்திரவாதியின் உயிர்

படைப்பின் மகத்துவம் புரிந்த
வாசகன் நீங்கள்
கொல்ல மனமின்றி
இரண்டையும் தப்பவிட்டு
மறுபடியும் தேடத் துவங்குகிறீர்கள்
இம்முறை என்னோடு.



ண்பர்களே, இன்று இங்கே தங்களுடைய புதிய தொகுப்புகளை வெளியிட்ட இரண்டு கவிஞர்களுடனும் எனக்குத் தொடர்பும் உறவும் இருக்கிறது. கலாப்ரியா, அய்யப்ப மாதவன் இரண்டு பேருடைய தலா ஒரு தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். அந்த அடிப்படையில் இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாகவே கவிதை பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. கவிதை ஆர்வலனாக நான் வாசிக்கிற சிந்திக்கிற யோசிக்கிற மொழியில் கவிதை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி. கவிஞனாக நானும் அதே மொழியில் எழுதுகிறவன். அதனால் கவிதையைப் பற்றிய பேச்சு நான் எங்கே இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுகிற மகிழ்ச்சி. ஆனால் எல்லா சமயத்திலும் கவிதையைப் பற்றி மகிழ்ச்சியாகவே பேசிவிட முடிவதில்லை. 

தமிழில் இன்று ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. அதை விட அதிக எண்ணிக்கையில் கவிஞர்களும் இருக்கிறார்கள்.எல்லாக் கவிதைகளையும் எல்லாக் கவிஞர்களையும் பற்றிப் பேசப் பேராசை இருக்கிறது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. சில கவிதைகளைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய அறிவுக்கு நல்லது. சில கவிஞர் களைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய வளர்ச்சிக்கு உதவும். சில கவிதைகளையும் சில கவிஞர்களையும் பற்றிப் பேசாமலிருக்கலாம். அது நம்முடைய உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது. அண்மையில் கவிஞர் ஒருவர் தொலைபேசியில் அழைத்திருந்தார். அவருடைய வெளிவரவிருக்கும் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்டார். ஏற்கனவே முன்னுரைக் கவிஞன் என்ற நற்பெயரைப் பெற்று விட்டேன். அதனால் இனிமேல் யாருக்கும் முன்னுரை எழுதுவதாக இல்லை. மன்னிக்கவும் என்றேன். மறுமுனையிலிருந்து வசவுமழை பெய்யத் தொடங்கியது. இதுவரை நான் முன்னுரை எழுதிய கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டு அதையெல்லாம் விட மோசமான கவிதையைத் தான் எழுதவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டார். அவர் பேசியது வெளிநாட்டிலிருந்து என்பதால் தப்பித்தேன். உள்ளூராக இருந்தால் அவர் பேச்சில் தெரிந்த ஆவேசத்துக்கு என்னை தேக உபத்திரவம் செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை. அதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.கவிஞன் என்று அறியப்பட கவிதை மட்டும் எழுதினால் போதாது காட்டுக் கூச்சல் போடவும் தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய கவிதைகள் மூலமாகவே தன்னை நிறுவிக் கொண்டவர் கலாப்ரியா. எழுத வந்த நாள் முதல் இன்றுவரை அவரைப் பின் தொடர்பவனாகவே இருக்கிறேன். அதிகம் பேச வாய்ப்புத்தரும் கவிதைகளை எழுதியிருப்பவர். கவிதைகளைப் பற்றி விரிவாக ஒரு முன்னுரையிலும் சுருக்கமாக இரண்டு மேடைகளிலும் பேசியிருக்கிறேன். இங்கே பேசக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. அதற்குக் காரணமும் அவர்தான். நினைவின் தாழ்வாரங்கள் என்ற அவருடைய புத்தகத்தின் முன்னுரையில் ஒரு வாசகம் இருக்கிறது. 'பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரணனாகிய நான்' என்று ஒரு வாசகம். அந்த வாசகத்தைப் படித்த பிறகு அவரைப் பற்றிப் பேச ஒருவிதமான தயக்கம் வந்து விட்டது. யோசித்துப் பார்த்தால் எழுதுகிற எல்லாரும் பாராட்டை மட்டுமே விரும்புகி றவர்கள்தான். அதை அவர்கள் அவ்வளவு வெளிப் படையாகச் சொல்லு வதில்லை. கலாப்ரியா சொல்கிறார். அந்தப் பாசாங்கு இல்லாத தன்மைதான் அவருடைய இயல்பு. அவரது கவிதைகளின் இயல்பு.

நவீனக் கவிஞர்களில் தீர்க்கதரிசி கலாப்ரியா என்று நினைக்கிறேன். இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளைப் பற்றி மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஆருடம் எழுதியவர் .

'
படிம 
உருவக 
குறியீட்டு இடையீடில்லாத
நிர்வாணக் கவித்துவம் வேண்டி
நீ
எப்போது தியானிக்கப் போகிறாய்? என்பது அவர் கவிதை. இன்று எழுதும் புதியவர்கள் இந்த தியானத்தைத்தான் கவிதையில் மேற்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகள் 'திறந்த கவிதைகளாக' plain poetry ஆக இருப்பவை. கலாப்ரியாவைப் படித்துத்தான் இதைச் செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை.கவிதை ஆக்கத்தில் நிகழும் தொடர்ச்சியாக இதைச் சொல்லலாம். அதற்கு உந்துதல் கொடுத்த கவிஞர்களில் ஒருவர் கலாப்ரியா.

கலாப்ரியா கவிதைகளில் நான் முக்கியமானதாகக் கருதுவது மூன்று அம்சங்களை.

ஒன்று; காட்சிப்படுத்துதல்.நான்கைந்து காட்சிகளை ஒன்றின் பின் ஒன்றாகவோ பக்கம் பக்கமாகவோ முன்னும் பின்னுமாகவோ அடுக்கி வைத்து விட்டுக் கவிதை என்கிறார். வாசிக்கவும் வாசித்ததும் இதைப் போல நாமும் எழுதி விட முடியுமே என்று சுலபமாக எண்ணவைக்கிற கவிதையாக்கம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அந்தக் காட்சிகளின் தேர்வில் அவர் காட்டுகிற கவனமும் அவை ஒன்று சேரும்போது பொருள்தருவதாக அமைவதும்தான் கவிதையாக மாறுகிறது. 

இரண்டாவது: நவீன கவிதையில் ஒரு இடத்தின் சித்திரமும் அங்கே வாழ்பவர்களின் சூழலையும் சித்தரித்தவர் கலாப்ரியா. ஒரு சமூகத்தின் அகப் பிரச்சனைகளை அவர் அதிகம் ஆராயவில்லை. புறத் தோற்றங்களைச் சார்ந்து அந்த சமூகத்தின் அந்த மனிதர்களின் இருப்பைப் பற்றிச் சொல்லி யிருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் அந்த மாதிரியான ஒரு கவிதை இருக்கிறது. வீடுகளையொட்டிய வாய்க்காலில் நல்ல நீர் ஓடியபோது அதை எல்லாரும் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் வாழைமட்டையில் தெப்பம் செய்து விளையாடுகிறார்கள். காலப்போக்கில் வாய்க்கால் சாக்கடையாக மாறுகிறது. நீர் தேங்குகிறது. அதில் பிணம் மிதக்கிறது. இப்போதும் எல்லாரும் கழியுடன் சாக்கடையை நெருங்குகிறார்கள். மிதக்கிற பிணம் தங்கள் வீட்டு எல்லைக்குள் வந்து விடக் கூடாது என்று கழியால் தள்ளி விடுகிறார்கள். 'வளர்ச்சி' என்ற கவிதை இது. இந்தச் சித்திரமும் அதற்குள் இருக்கும் கதைத்தன்மையும் தான் கவிதை ஆகின்றன. இது அவர் கவிதைகளில் முக்கியமான அம்சம். கலாப்ரியா சிறுகதைகள் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் எழுதாமல் விட்ட பல சிறுகதைகள்தாம் அவரிடம் கவிதையாகியிருக்கின்றன.

மூன்றாவது: தமிழ்க் கவிஞர்களில் வாசகர்களின் பங்களிப்பை அதிகம் கேட்கிற கவிஞர் கலாப்ரியா. வாசகனை சக கவிஞனாக்குபவை அவரது கவிதைகள். நான்கைந்து காட்சிகளை முன்னால் வைத்து விட்டு நகர்ந்து விடுகிறார். அவற்றை இணைக்கிற வேலை வாசகனுடையது. அவன் அதைச் செய்கிறபோதுதான் கவிதை முழுமையடைகிறது.

இப்படி நிறையப் பேச இடமளிப்பவை கலாப்ரியாவின் கவிதைகள். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக எழுதி வருபவர். அவருடைய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு 2000 ஆவது ஆண்டில் தமிழினி வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகும் இரண்டு தொகுப்புகள் வந்திருக்கின்றன. post complete collection வரிசையில் இந்த 'நான் நீ மீன்'மூன்றாவது தொகுப்பு. மூன்று தலை முறைகளைத் தாண்டியும் பேசப்படும் பெயராகக் கலாப்ரியா இருப்பது அவருடைய வாசகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 'பெயர்களின் நிழலை அழிய விடுவதில்லை ஒளி' என்று இந்தத் தொகுப்பில் ஒரு கவிதையில் அவரே குறிப்பிடுகிறார்.

பெயர்களைப் பற்றிச் சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. கலாப்ரியா சம்பந்தப்பட்டதுதான்.அவருடைய 'வனம் புகுதல்' தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். முன்னுரையை எழுதி அவருக்கு அனுப்பிய பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 'இந்த முன்னுரையில் 37 இடங்களில் 'கலாப்ரியா' என்று என் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்க சந்தோஷமாக இருக்கிறது' என்று எழுதியிருந்தார். படித்ததும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, ஒருவன் கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த ஆளின் கவிதைகளை வாசித்து, அரை மாதம் குறிப்பெடுத்து, ஐந்தாறு நாள் வார்த்தை வார்த்தையாகத் திரட்டி பத்து பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அந்த ஆள் இத்தனை இடத்திலே என் பேர் வந்திருக்கு என்று பதில் எழுதிறாரே என்று இருந்தது. யோசித்துப் பார்த்த போது இந்த 'சௌந்தர்யக் கிறுக்குதானே கவிதைக்கு அடிப்படை' என்ற ஞானம் வந்தது. சிரித்துக் கொண்டேன். இந்தப் பேச்சிலும் 'கலாப்ரியா' என்ற பெயரை 15 முறை மனநிறைவுடன் குறிப்பிட்டிருக்கிறேன் என்ற அறிவிப்புடன் என் பேச்சை நிறைவு செய்கிறேன். எல்லாருக்கும் வணக்கம். நன்றி.
இடுகையிட்டது சுகுமாரன் நேரம் 10:27 AM http://img2.blogblog.com/img/icon18_edit_allbkg.gif 


பாடாத பாட்டெல்லாம்




த்திரிகையாளனாகக் குப்பை கொட்டத்  தொடங்கிய பிறகு அரசியல் சமூக திரையுலகப் பிரபலங்கள் பலரையும் நேருக்கு நேராகத் தரிசிக்கிற பாக்கியமும் சிலருடன் சில வார்த்தைகளும் பலருடன் பல வாக்கியங் களும் பேசுகிற  அதிருஷ்டமும் லபித்திருந்தது.  இதற்கெல்லாம் மிக மிக முன்பே நான் பார்த்து ஓரிரு சொற்கள்  பேசிய முதலாவது சினிமாப் பிரபலம் பி.பி. ஸ்ரீநிவாஸ்.

கர்நாடக மாநில அரசின் மின் சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் - மைசூர்லாம்ப்ஸின் விற்பனைப் பிரதிநிதியாக அலைந்ததுதான் என்னுடைய இரண்டாவது வேலை. அதற்கு எங்கள் ஊரில் விற்பனை யாளராக இருந்த வர்கள் புகழ் பெற்ற மல்லிசேரி பீடி உற்பத்தியாளர்கள். பீடிக் கம்பெனி தவிர அதே பெயரில் ஓர் இசைக் குழுவையும் நடத்தி வந்தார்கள். கம்பெனி இருந்த பழைய பாணிக் கட்டடத்தின் பின்பக்கம் பெரிய கிடங்கு.பீடி இலைகளும் புகையிலைத் தூளும் நிறைந்த மூட்டைகள்  அட்டி போட்டு வைக்கப் பட்டிருக்கும். அந்த இடத்தில்தான் பெரும்பாலும் இசைக் குழுவின் ஒத்திகையும் நடக்கும். அந்த நாட்களில் வானொலியில் எந்தப் பாட்டைக் கேட்டாலும் அந்தப் பாட்டுக்குப் பீடி வாசனை இருப்பதுபோலத் தோன்றி மூக்கை உறிஞ்சிக் கொள்வேன். அங்கிருந்த நாட்களில் குடுவை விளக்குகளுக்கும் குழல் விளக்குகளுக்கும் பட்டிகளுக்கும் உதிரிப் பொருட்களுக்கும் ஆர்டர் பிடிக்க அலைந்த நாட்களை விட இசைக் குழுவின் ஒத்திகை கேட்க முளையடித்து உட்கார்ந்த நாட்கள் அதிகம். கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான வல்சராஜ் அந்தப் பொறுப்பின்மையை உற்சாகமாக அனுமதித்தார்.  ஒத்திகை நடக்கும் நாட்களில்விநியோகஸ்தரின் பிரதிநிதிகள் மார்க்கெட்டுக்கு வரச் சொல்லி என்னைக் கட்டாயப் படுத்தும்போது என்னுடைய சுணங்கும் முகத்தைப் பார்த்து'' அவன் இல்லேன்னா நீங்க ஆர்டர் பிடிக்காதா?'' என்று மலையாளத் தமிழில் அபயம் கொடுப்பார்.

ஒருமுறை காரமடை அரங்கநாதர் ஆலய ஆண்டுத் திருவிழாவுக்கு மல்லிசேரி இசைக்குழுவின் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. நட்சத்திர விருந்தினராக அழைக்கப்பட்டவர் பி.பி.ஸ்ரீநிவாஸ். நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாகவே அவர் கோவைக்கு வந்திருந்தார். ''நீ வேணும்னா அவருக்கு உதவியாக இருக்கிறாயா?'' என்று வல்சராஜ் கேட்ட நொடியில் மனம் புல்லரித்தது. '' இருக்கிறேன். ஆனா கம்பெனி சூபர்வைசர் யாராவது கேட்டால்...'' என்று இழுத்தேன். ''அவன் மார்கிட்ட நான் சொல்லுது'' என்றார்.

பி.பி.எஸ். தங்கியிருந்த அலங்கார் ஓட்டலுக்குப் போனேன். சொல்லப் பட்டிருந்த அறைக் கதவைத் தட்டினேன். திறந்தது. வழுக்கைத் தலையும் உறக்கம் கலையாத முகமுமாக கரை வேட்டி கட்டிய ஒருவர் எட்டிப் பார்த்து '' ஹூம்?'' என்றார்.குழப்பமாக இருந்தது. ''சாரி சார்'' என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தேன்.

அங்கிருந்த வரவேற்பாளரிடம் அறை எண்ணைச் சொல்லி அதில் இருப்பவர் ஸ்ரீநிவாஸ்தானா என்று கேட்டேன். ஆமாம் என்பது பதில்.இருந்தும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. பி.பி.ஸ்ரீநிவாஸ் உயரமாக இருப்பார். புஷ் குல்லா போட்டிருப்பார். தடித்த கண்ணாடி அணிந்திருப்பார். நெற்றியில் சிந்தூரக் கோடு இழுத்து விட்டிருப்பார். ஆனால் நான் பார்த்த உருவத்துக்கு இது எதுவுமில்லை. நம்பிக்கை வராமல் குழம்பினேன். அங்கிருந்தே வல்சேட்டனுக்குப் போன் செய்து கேட்டேன். அவர் சொன்னதும் அதே எண்ணைத்தான். மறுபடியும் அந்த அறை முன்னால் போய் நிற்கத் தயக்கமாக இருந்தது. யோசிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் சாக்கில் உணவகத்துக்குள் போய் காப்பிக்குச் சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.

ஏனோஅந்த அறையில் இருப்பவர் பி.பி,ஸ்ரீநிவாஸ்தான் என்பதை மனம் ஒத்துக் கொள்ள மறுத்துக் கொண்டேயிருந்தது.மேஜைக்கு வந்த காப்பியைக் குடித்து முடித்தேன். எழுந்து வெளியே வந்து அறையை நோக்கித் த்யக்கத்துடன் நடக்க ஆரம்பித்தேன். என்னைத் தாண்டி முன்னால் போன ஓட்டல் சர்வரின் தோள் மீது இருந்த டிரே கண்ணில் பட்டது.சிற்றுண்டி வகைகள் இருந்தன. சர்வரும் நானும் ஒரே வாசலில் நின்றோம். அவர் அழைத்ததும் கதவு திறந்தது. பி.பி. ஸ்ரீநிவாஸ் தெரிந்தார். புஷ் குல்லா போட்டிருந்தார். நெற்றியில் ஸ்ரீசூர்ணம் தர்த்திருந்தார்.கெட்டிக் கண்ணாடி போட்டிருந்தார். கட்டம்போட்ட சட்டைப்பையில் நான்கைந்து கலர் பேனாக்களைச் சொருகியிருந்தார். மரக் கலர் சால்வையை மடித்துத் தோளில் போட்டிருந்தார். தடிமனான கண்ணாடி அணிந்திருந்தார். ஆக நான் முதலில் பார்த்ததும் அவரைத்தான். ஆனால் அது அபிஷேகச் சிலை. இப்போது பார்ப்பதும் அவரைத்தான். ஆனால் இது அலங்கார ரூபம். இந்த உருவம்தான் எனக்குப் பழக்கமான பிபிஎஸ். என்னுடைய முட்டாள் தனத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

''கொஞ்சம் முன்னால் நீங்கதான வந்தீங்க?'' என்று கேட்டார். குரலில் அதே பிபிஎஸ் ஒலித்தது. அவர் 'ஹூம்' என்று கேட்டதற்குப் பதிலாக ஒரு வாக்கியம் பேசியிருந்தால் அசட்டுத்தனமாகப் பின் வாங்கியிருக்க மாட்டேன் என்று பட்டது.

'' ஆமாம் சார். ஆனா நீங்கதானான்னு டவுட்டா இருந்துது. அதான் போயிட்டேன்'' என்றேன். அதிகம் வாய் திறக்காமல் ஒரு ஸ்வர மாத்திரை அளவுச் சிரிப்பைச் சிரித்தார். ''இப்ப டௌட் கிளியராயிடுச்சா?''  என்றார். ''ஆயிடுச்சு சார், இப்பத்தான் படத்துல பாத்த மாதியிருக்கீங்க. அதுவு மில்லாம இதைப் பார்த்ததும் எல்லா சந்தேகமும் போயிடுச்சு'' என்றேன், தடித்த கண்ணாடிக்கு அப்பா அவர் கண்கள் சந்தேகமாகப் பார்த்தபோது சிற்றுண்டி மேஜையில் கண்ணாடிக் கிண்ணத்தில் வைத்திருந்த பாசந்தியைச் சுட்டிக் காட்டினேன். அப்போது அவர் சிரித்த சிரிப்பு முன்னை விட நாலைந்து ஸ்வர மாத்திரைகள் நீளமாக இருந்தன.

சிற்றுண்டியை அருந்திக் கொண்டே விசாரித்தார். நான் ஆர்க்கெஸ்டிரா வில் வேலை செய்கிறேனா? பாடுவேனா? காரமடை இங்கிருந்து எத்தனை தூரம்? கார் அனுப்புவார்களா? ரிட்டர்ன் டிக்கெட் ஏற்பாடு செய்து விட்டார்களா?

தெரிந்தவற்றுக்குப் பதில். தெரியாதவைக்குத் தலை குனிந்த மௌனமுமாக இருந்தேன். கை கழுவி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தார். அவர் அதிகம் பேசுகிற ரகமில்லை. நானும் சங்கோஜி. வெகு நேரம் அறைக்குள் மின் விசிறியின் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பிபிஎஸ் ஒரு கனத்த டயரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். தயக்கத்தை வலிய உதறிவிட்டு நான் பேசத்த் ஹொடங்கினேன். அவரிடம் கேட்க நிறையவே இருந்தன. 'நிலவே என்னிடம் நெருங்காதே' என்ற ராமு படப் பாடல் பாகேஸ்வரி ராகம்தானே? ' பார்த்தேன் சிரித்தேன் ' வீர அபிமன்யூ பாடல் சஹானாவா? 'கடவுள் அமைத்த மேடையில் 'தென்றலே நீ பேசு 'பாடியதற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் ஏன் பாடவில்லை? கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடித்தார். அவர் முன்பு பார்த்த பார்வைக்கும் இப்போது பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசமிருந்தது. '' பாட்டுக் கற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டார். '' அப்படிச் சொல்ல முடியாது. கொஞ்ச நாட்கள் கற்றுக் கொள்ளப் போனேன். வீட்டுச் சூழ்நிலை காரணமாகத் தொடர முடியவில்லை'' என்றேன். ''ஆனா உங்க கூட பாட்டிருக்கு'' என்றார். ஏனோ எனக்குக் கண்கள் கலங்கின.



றுநாள் மாலை காரமடையில் கச்சேரி. நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரமாகியும் அவருக்குப் பாட்டு வரவில்லை.முதலில் பக்திப் பாடல்கள் .பிறகு அப்போதைய ஹிட் பாடல்கள். பழைய பாடல்களுக்கான வாய்ப்பில் தான் அவர் பாட வேண்டியிருக்கும் என்று தோன்றியது. கூட்டம் ரசிக்கிற விதத்தைப் பார்த்தால் அவர் பாட்டு எடுபடாது என்றும் தெரிந்தது. மேடையின் மூலையில் வல்சேட்டனுக்கும் பிபிஎஸ்ஸுக்கும் அருகில் உட்கார்ந்திருந்தேன். வல்சேட்டனிடம் என் சந்தேகத்தைச் சொல்லவும் செய்தேன். பிபிஎஸ் சோர்ந்து உட்கார்ந்திருந்தார் என்று தோன்றியது. கண் அசந்திருக்கிறார் என்றும். 'அடுத்த பாடல் 'சுமை தாங்கி'படத்திலிருந்து 'மயக்கமா கலக்கமா? பிரபல பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் பாடுவார்' என்ற அறிவிப்பு மெல்லிய கர கோஷங்களை மூடியது. அதுவரை பார்த்திராத பி பி எஸ் சை மைக்கின் முன்னால் பார்த்தேன். பாடி முடித்ததும் கையொலிகள் முழங்கின. அவர் அதைப் பொருட்படுத்தாமல் திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.

சில பாடல்களுக்குப் பிறகு மீண்டும் அவருடைய முறை. 'படித்தால் மட்டும் போதுமா?'படத்திலிருந்து 'பொன் ஒன்று கண்டேன்... பெண் அங்கு இல்லை' பாடலை சௌந்தரராஜனின் குரலில் பாடும் இளைஞருடன் சேர்ந்து பாட ஆரம்பித்தார்.

பல்லவி முடிந்து சரணம் வந்தது. முதல் சரணத்தின் வரிகளை டிஎம்ஸ் குரலோன் பாடியதும் பிபிஎஸ் தொடர வேண்டும். பாட்டில் சென்றேன் என்ற டிஎம் எஸ் குரலுக்குப் பதிலாக ஊஹும் என்று ஸ்ரீநிவாஸ் முனகியபோது என் மண்டைக்குள் மின்னல் அடித்தது. நேற்று அறைக் கதவைத் தட்டியதும் இதே ஹூம்தானே பதிலாக வந்தது. ஏன் என்னால் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை? என்று யோசித்தேன். அண்மைக் காலமாக அவர் அதிகம் பாடவில்லை. ஆனால் அவர் பாடல் ஒலிபரப்பாகாத நாள் இல்லையே? இருந்தும் ஏன் எனக்குப் பிடிபட வில்லை? பழைய பாடல்களை மறந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறை யைச் சேர்ந்தவனாகி விட்டேனா? நான் யோசித்துக் கொண்டே அவர் பாடுவதைக்  கவனித்தேன். பாடலின் இரண்டாவது சரணத்தைப் பாடிக் கொண்டிருந்தார்கள் . நானும் மனசுக்குள் பாடிக் கொண்டிருந்தேன். 'என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நானிருந்தேன்' என்பது வரி. டிஎம்ஸ் குரலோன பாடிய அதே வரியையே - உன் விழியில் நானிருந்தேன் -என்று பிபிஎஸ்ஸும் பாடினார்.  நான் உணர்ச்சிவசப்பட்டு 'அய்யோ தப்பு' என்றது பிபிஎஸ் சுக்குக் கேட்டு விட்டது. கை நீட்டி ஆர்க்கெஸ்டிராவை நிறுத்தினார். சைகை காட்டி என்னை மைக் அருகில் வரச் சொன்னார். போய் நின்றேன். முதுகில் தட்டி '' அந்த லைனைப் பாடிடுங்க'' என்றார்.
கொஞ்சம் தயங்கி நிறையப் பயந்து வாயைத் திறந்தேன். என் விழியில் நீ இருந்தாய்' என்றார் டிஎம் எஸ் எதிரொலி.உன் வடிவில் நானிருந்தேன்' என்று பிபிஎஸ் சாக மாறினேன் நான். நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை என்ற வரிகளை மூன்று குரல்கள் பாடின. வாழ்நாளில் நான் முதலும் கடைசியுமாக மேடையில் பாடியது அது மட்டுமே.



வார இதழில் பணியாற்றிய காலத்தில் ஒரு சினிமா சிறப்பிதழுக்காக பி பி ஸ்ரீநிவாசைப் பேட்டி காணத் திட்டமிட்டேன்.அவரை நெருங்க மேற்சொன்ன நிகழ்ச்சிதான் திறப்பாக அமைந்தது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையி லிருந்த தனது இரண்டாவது வீடான டிரைவ் இன் உட்லாண்ட்சில்தான் அவரைச் சந்தித்தேன். இப்போது முகத்தில் சுருக்கதின் தோது கூடி யிருந்தது. சட்டைப்பையில் கலர் பேனாக்களின் எண்ணிக்கையும் 
கூ டியிருந்தது. பழைய சம்பவத்தைச் சொன்னபோது முதன்முறை சிரித்ததுபோல ஒரு மாத்திரைச் சிரிப்பு. பேட்டியாக வேண்டாம்.பேசுவோம் அதிலிருந்து தேவையானதை எடுத்து வெளியிட்டுக் கொள்ளலாம் என்று யோசனை சொன்னார். சரி என்று ஒப்புக் கொண்டேன். ஆனால் அந்தக் கட்டுரையை எழுதவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று:பேச்சில் காரசாரமாக எதுவும் இல்லை. எல்லாரைப் பற்றியும் மிகையாவே பாராட்டி யிருந்தார். அது அவருடைய சுபாவமாகவும் இருக்கலாம். இரண்டாவது காரணம்: அவர் போட்ட நிபந்தனை. அவர் எழுதிய கவிதையை - எட்டு மொழிகளில் சுமார் இரண்டு லட்சம் கவிதைகள் எழுதி இருக்கிறேன் என்றார் - இதழில் வெளியிட வேண்டும். கவிதையைப் பற்றியும் பி.பி.ஸ்ரீநிவாசைப் பற்றியும் எனக்கு உயர்வான கருத்துகள் இருந்தன. எனவே கவிதையை வெளியிடுவ தற்கில்லை என்றேன். 'அப்ப இதுவும் வேண்டாம்'.

சரி. என்று விடை பெற்றேன். அதன் பின்னர் அதே உட்லாண்ட்ஸ் டிரைவ் இன் - இல் அவரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். முதலில் வணக்கம் தெரிவித்து நகர்ந்திருக்கிறேன். பின்னர் அதுவுமில்லை. நாளடைவில் அவருக்கு என்னை மறந்தே போயிற்று. கடைசியாக நான் அவரைப் பார்த்ததும் அதே டிரைவ் இன்னில்தான். 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். பழசைப் பற்றி எதுவும்  சொல்லாமல் முதுமையைச் சுமந்து குனிந்து தளர் நடையில் வந்தவரை நெருங்கி வணக்கம் போட்டேன். தலையசைத்து நடந்தார். அந்த நாளுக்கு இரண்டு மாதங்களுக்குப்பின் டிரைவ் இன் இல்லை.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அந்த இடத்தின் நித்திய விருந்தாளியான பி.பி ஸ்ரீநிவாசும் இல்லை.

                               










புதன், 24 ஜூலை, 2013

அப்பாவின் வாசனை


அப்பா காலமானபோது எனக்கு வயது நாற்பத்து மூன்று. அவருக்கு அறுபத்து ஐந்து தாண்டியிருக்கலாம்.உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஒன்றிண்டு வயது குறைவாகவும் இருக்கலாம். அப்பாவின் வயதை நிர்ணயிக்க உதவும் ஆதாரம் எதுமில்லை. அவருக்கு ஜாதகம் எழுதப்பட்டிருக்கவில்லை. அலுவலகப் பதிவேட்டில் கொடுத்திருந்த வயதும் சரியானதல்ல. வேலைக்குச் சேர்ந்த போது  தோற்றம் சின்னப் பையனுடையதாக  இருந்ததால் வயதைக் கூட்டிச் சொன்னார்களாம். அதனால் நிர்ணயிக்கப் பட்டதற்கு ஓரிரு வருடங்கள் முன்பே பணிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே அப்பாவுக்கு இருந்திருக்கிறது.

அப்பாவின் ஆயுளில் நாற்பத்து மூன்று வருடங்கள் எங்கள் இருவருக்கும் பொது. அப்படியும் சொல்ல முடியாது. பிறந்த ஓராண்டுக்குள் அப்பாவின் சகோதரியால் எடுத்துச் செல்லப்பட்டு எட்டு வயதுவரை அவர்கள் பராமரிப்பில் வளர்ந்தேன்.அந்த எட்டு வருடங்களைக் கழித்தால் அப்பாவுக்கும் எனக்கும் இருந்த அணுக்கத்தின் வயது முப்பத்தைந்து மட்டுமே.

இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஐந்து அல்லது ஆறு முறை, இல்லை யில்லை சரியாக ஆறு தடவைகள் அவரைத் தொட்டிருக்கிறேன். தற்செயலாகப் பட்டுக்கொண்டதோ  அவர்  சுய நினைவுடன்  இல்லாதபோது ஸ்பரிசிக்க நேர்ந்ததோ அடிக்க வந்தபோது தடுத்துக் கொண்டதோ மனம் ஒப்பித் தொட்டது ஆகாதே. 'சின்னக் குழந்தையாக இருந்தபோது கூட அவர் என்னைத் தொட்டது இல்லையா?' என்று அம்மாவிடம் ஒருமுறை கேட்டிருக்கிறேன். 'இல்லை, அவருக்குச் சின்னக் குழந்தையை எப்படித் தூக்குவது என்று தெரியாது' என்றாள் அம்மா. என்னுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு புத்தாண்டு நள்ளிரவில் எனக்குத்  தம்பி பிறந்தான். அம்மாவுக்குத் துணையாக மருத்துவமனைக்கு வந்திருந்த ராஜம்மாவின் கையிலிருந்து அழுக்குப் பஞ்சில் செய்த பூப்போலிருந்த குட்டி ஜீவனை நூறு பிரசவங்கள் பார்த்த தாதியின் லாகவத்துடன் கைகளில் வாங்கினேன். எட்ட நின்றிருந்த அப்பா கிணற்றுக்குள் பார்ப்பதுபோல அதை எட்டிப் பார்த்தார். அமுதக் கலசத்தை அலுங்காமல் கையில் வைத்திருக்கும் கர்வத்துடன் அப்பாவின் முகத்தையும் பார்த்தேன். என்னைத் தீண்ட மறந்ததைச் சுட்டிக் காட்டும் இனிய பழிவாங்கல் அந்தப் பார்வை.

முதல்முறையாக அப்பாவைத் தொட்டது எந்த வயதில் என்பது ஞாபக மில்லை. ஆனால் அந்த நாளின் காட்சியும் வாசனையும் இன்றும் நினைவில் இருக்கின்றன.

அன்றைக்கு அத்தை வீட்டிலிருந்து வந்திருக்கிறேன். அப்பா வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். வாசலில்சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போடும் ஓசை கேட்டதும் ஓடிப் போய்ப் படியேறி வரும் அப்பாவைக் கட்டிக் கொள்கிறேன். அவர் உதறிப் போட்ட செருப்புகளில் கால்களை நுழைந்துக் கொள்கிறேன். டயர் அடிப்பாகமுள்ள காலணிகளை இழுத்துக்கொண்டு நடந்து என் முகத்தை அவருடைய வயிற்றில் பதித்துக் கொள்கிறேன். இரண்டு கைகளாலும் அவருடைய இடுப்பை வளைத்துக் கட்டிக் கொள்கிறேன். அப்பா  அரை டிரவுசர்போட்டிருக்கிறார். அப்போதெல்லாம் ஒயர்மென்னின் சீருடை காக்கிச் சட்டை; காக்கி அரை டிரவுசர். பின் இடுப்புப் பக்கத்தில் பெல்ட்டில் சொருகி யிருக்கிற கட்டிங் ப்ளையர் கையில் நெருடுகிறது.  அதன் வெளியே துருத்தி யிருக்கும் பிடியை ஒருமுறை அழுத்துகிறேன்.டிரவுசருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு பிடி அப்பாவின் உடம்பை அழுத்தியிருக்க வேண்டும். அவர் அதை உருவி எடுத்து வலது கையில் பிடித்துக் கொள்கிறார். இடது கையால் அவருடைய இடுப்பில் கோர்த்திருக்கும் என் கைகைகளைப் பிரித்து என்னைத் திருப்பி நிறுத்துகிறார். நான் அவர் கையை விடாமலிருந்தேனா அல்லது அவர் என் வலது கையைப் பிடித்திருந்தாரா? தெரியவில்லை. தூக்கிய கையுடன் கால்களை அகட்டி வைத்துப் பெரிய செருப்புகளை இழுத்தபடி 'தத்தக்கா புத்தக்கா' என்று நடந்து வீட்டுக்குள் நுழைகிறேன்.

அந்த முதல் நெருக்கத்தில் அப்பாவிடமிருந்து வெவ்வேறு வாசனைகள் வீசியதை முகர்ந்தேன். சற்று முன்புதான் சலூனுக்குப்போய்ச் சவரம் செய்திருப்பார்போல. அவர்மேல் படிக்காரமும் மரிக் கொழுந்தும் கலந்த மணம் தங்கியிருந்தது. வியர்வையின் இளநீர் வாடையும் காக்கி உடைகளின் துவர்ப்பான கஞ்சி வாடையும் இருந்தன.கட்டிங் ப்ளையரை வைத்திருந்ததால் இரும்பின் நெடி இருந்தது. எல்லாவற்றையும் மிஞ்சி  சிகரெட் வாசனையும் இருந்தது. அந்த வாசனைக் கூட்டணி எனக்குப் பிடித்திருந்தது. அப்பாவையும் பிடித்திருந்தது. எல்லா அப்பாக்களும் இது போன்ற கலவைவாசனையுடன் தான் இருப்பார்கள் என்பது பிள்ளைப்பருவ ஞானமாக இருந்தது. அப்பாவுக்குச் சுயமாகச் சவரம் செய்து கொள்ளத் தெரியாது என்பது அந்த ஞானத்தில் வாய்த்த இன்னொரு தகவல். அப்பாவுடனிருந்த நாட்களில் ஒருநாள்கூட அவராக முகம் மழித்துக் கொள்வதைப் பார்த்ததில்லை. நான் வயதுக்கு வந்த பிறகுதான் ஷேவிங் செட் உருப்படிகள் வீட்டுக்கு வந்தன. ஒருமுறையாவது அப்பாவுக்கு முகம் மழித்து விடவேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர் முகத்திலிருந்து யூடிகொலேனோ டெட்டாலோ வாசனையடிப்பதாகப் பல நாட்கள் கற்பனை செய்திருக்கிறேன்.

இனி அத்தை வீட்டிலிருப்பதில்லை என்ற முடிவுடன் பிறந்த வீட்டுக்கே வந்தபோது அப்பா நெருக்கமாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி அமையவில்லை. அப்பாவின் உலகத்துக்கு வெளியில்தான் எனக்கு இடமிருந்தது. அந்த உலகத்தின் வாசலில் எப்போதாவது எட்டிப் பார்க்கும் போது ''என்னடா, என்ன வேணும்?'' என்று கேட்பதைத் தவிர அவருக்கு என்னுடன் பேச எதுவும் இல்லாமலிருந்தது. எனக்குப் பின்னால் பிறந்த உடன்பிறப்புகள் உல்லாசமாக நடமாடிய அந்த உலகம் எனக்கு மட்டும் அடைக்கப்பட்டதாக இருந்தது. அதற்குள் நுழைய எனக்குக் கடைசிவரை அனுமதி  கிடைக்கவே இல்லை.

சம்பள நாளில் அப்பாவின் வாசனை வேறாக இருக்கும். அந்த மணமுள்ள அப்பாவுக்காகக் காத்திருப்பது ஆனந்தமாக இருக்கும். வரும்போதே நகரத்தின் பிரசித்தி பெற்ற அசைவ உணவகத்திலிருந்து பிரியாணிப் பொட்டலங்களை வாங்கி வருவார். சைக்கிளின் ஹாண்டில்பாரில் மாட்டியிருக்கும் பையை எடுத்துக் கொண்டு உள்ளே வந்ததும் வீடேமசாலா வாசனையை முகர்ந்து  விடைத்துக் கொள்ளும். ஒவ்வொரு பொட்டலமாக எடுத்துப் பிரித்து பரப்பி வைப்பார்.எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்குவோம். அப்பா தன் பங்கு பிரியாணியிலிருந்து இறைச்சித் துண்டுகளைத் தேடி எடுத்து தங்கைக்கு ஊட்டுவார். அவள் அதை மென்று விழுங்கும்வரை அவருடைய கை அவள் முகத்துக்கு அருகிலேயே இருக்கும். அப்பாவுக்கு நீளமான விரல்கள். அதில் ஆள் காட்டி விரல் நகம் மட்டும் பறவையின் அலகுபோலக் கூர்ந்து நீண்டிருக்கும். வேலை செய்யும்போது ஏற்பட்ட சின்ன விபத்தில் அடிபட்டு அந்த விரல் பறவையாகிருந்தது. கை நீண்டிருக்கும்போது குஞ்சுக்கு உணவூட்டும் பறவையின் தலைபோல இருக்கும். நானும் வாயைப் பிளந்து கொண்டிருப்பேன். அடுத்த ஊட்டல் எனக்குத்தான் என்று நாக்கில் எச்சில் சுரந்து கொண்டிருக்கும். ஆனால் ஒருபோதும் பறவைத்தலை என்னை நோக்கித் திரும்பியதில்லை. எச்சிலை விழிங்கிக் கொண்டு தின்று தீர்ப்பேன்.
ஒருமுறை பிரியாணி தினத்தில் தங்கையை நோக்கி நீண்ட அப்பாவின் கையை வலிந்து என் பக்கமாகத் திருப்பி இறைச்சித் துண்டைக் கவ்விக் கொண்டேன். அந்தத் துண்டுக்கு என்னுடைய இலையில் இருந்த 'சீஞ்சிக் காயை' விட அலாதியான ருசியும் மணமும் இருந்தது. அப்பா அதிர்ந்துபோய் முறைத்துப் பார்த்தார். கையை உதறினார். 'ஏன் நீயாக எடுத்துச் சாப்பிட மாட்டியா?'' என்று கேட்டார். அதுதான் இரண்டாம் முறையாக அவரைத் தொட்ட ஞாபகம்.

ஒன்றிரண்டு சம்பள நாள்களுக்குப் பிறகு அசைவ உணவைச் சாப்பிட மாட்டேன் என்று விரதமிருக்கத்தொடங்கினேன். தொடர்ந்து சில வருடங்கள் சாக பட்சணியாகவே இருந்தேன். அப்பாவின் வாசனையே இல்லாம லிருந்தேன். அதுபோன்ற ஏதோ ஒரு தருணத்தில்தான் அப்பாவிடமிருந்து விலகத் தொடங்கினேன். அவர் இருக்குமிடத்தில் நான் இல்லாமலிருக்கும் படிப் பார்த்துக் கொண்டேன். அவர் முன்னறையில் இருந்தால் நான் புழக்கடையில். அவர் வீட்டிலிருந்தால் நான் வெளியில்.

1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முப்பதாம் தேதிக்குப் பிறகு அப்பாவின் வாசனை மாறத் தொடங்கியது. தமிழ் நாட்டில் மது விலக்கு நீக்கப்பட்டது அன்றிலிருந்துதான்.

ஆரம்பத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ வருடத்துக்கு ஒரு தடவையோ அப்பாவிடமிருந்து நொதித்த பழங்களின் வாடை வீசத் தொடங்கியது. 'அது வேறொன்றுமில்லை, வயிற்று வலிக்காகச் சாப்பிடுகிற கஷாயம்' என்று விளக்கம் சொன்னாள் அம்மா.  சில வருடங்களுக்குப் பிறகு அந்த வாசனை வீடு முழுக்கத் தேங்கி நின்றது. அதே வாசனையுடன் பள்ளிக் கூடத்துக்கு எஸ் எஸ் எல் சி புத்தகத்தில் கையெழுத்துப்போட அப்பா வந்தார். பள்ளி அலுவலக அறைக்குள் அப்பாவின் வாடை பரவியது. நடுங்கும் கையால் அப்பா கையெழுத்துப் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அப்பாவின் நண்பரும் பள்ளியின் எலெக்ட்ரீஷியனும் பியூனுமானவர் கேட்டார் '' ஒங்க அப்பா எப்போடா கருணாநிதி கட்சியிலே சேர்ந்தார்?'முதலில் புரியவில்லை. அப்பா கம்யூனிஸ்ட் கட்சியாச்சேஅவர் எப்போது திமுகவில் சேர்ந்தார் என்று குழம்பினேன். அப்பா இனிஷியலில்லாமல்தான் கையெழுத்துப் போட்டார். இனிஷியலையும் போடச் சொன்னேன். அவருடைய விரல்கள் அவருடைய இனிஷியலை மறந்திருந்தன. உதவித் தலைமை ஆசிரியரோ அலுவலகப் பணியாளர்களோ கவனிக்காத நொடியில் அவர் போட்ட கையொப்பத்துக்கு முன்னால் நானே அப்பாவின் இனிஷியலைப் போட்டேன்.

சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து சைக்கிளை வெளியே எடுக்க அப்பா தடுமாறினார்.  உதவி செய்யத் தோன்றாமல் பக்கத்திலேயே நின்றிருந்தேன். அவருடைய நிலையை பள்ளித் தோழர்கள் பார்த்து விடக் கூடாது என்று பயமாக இருந்தது.சைக்கிளை எடுத்து வாசலை நோக்கித் தள்ளத் தொடங்கிய போது மெதுவாகச் சொன்னேன் '' நீங்க இப்பிடி வந்திருக்க வேண்டாம்'' அப்பா  உணர்ச்சியற்ற குரலில் '' எப்பிடி வந்தாலும் நான் உன் தகப்பன் தானே'' என்றார். இடது ஹாண்டில் பாரைப் பிடித்திருந்த அவர் கையை  உணர்ச்சி ததும்பத் தொட்டேன். சில நொடிகளுக்குப் பிறகு அழுகையை அடக்கிக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடினேன்.

பள்ளிப் படிப்பு முடிந்தது. கல்லூரிக் காலத்தில் ஒருநாள் முன்னாள் ஆசிரியரைப் பார்க்கப் போனேன். பார்த்துப் பேசி முடித்து வெளியே வரும் போது அப்பாவின் நண்பர் தென்பட்டார். பார்த்ததும் விசாரித்தார்-'"அழ்ப்பா சவுழ்க்கியமாழா '' . அவரும் கருணாநிதியின் வலையில் வீழ்ந்திருந்தார் என்பதை வன்மத்தோடு ரசித்தேன். சிறப்பு '' கரம் வழக்கொழிந்து போய் விடாமலிருக்கவும்தான் மதுவிலக்கு ரத்துச் செய்யப்பட்டது என்ற உண்மை அன்று புலப்பட்டது.

அப்பாவுக்கு நகராட்சி மின்சாரத் துறையில் கம்பியாளர் வேலை. அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் பணியாற்றினால் போதும். ஆனால் அப்பாவுக்கு வேறு பணிகளும் இருந்தன. அவர் தேர்ந்த கேபிள் ஜாயிண்டர். தலைக்கு மேலே போகும் கம்பிகளல்லாமல் மண்ணுக்குள்ளே போகும் கம்பி வடங்களை இணைப்பதில் நிபுணர். நகரத்தில் எங்காவது கேபிள் ஜாயிண்ட் பழுதுபட்டால் அப்பாவுக்கு அழைப்பு வரும். போனால் இரண்டு மூன்று நாட்கள் வீட்டுக்கு வரமாட்டார். ஒருமுறை அப்படிப் போனவர் நாலைந்து நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவே  இல்லை. இரண்டு நாள் பொறுத்த அம்மா மூன்றாம் நாளிருந்து அலுவலகத்தில் விசாரித்து எங்கே என்று போய்ப் பார்க்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். வந்து விடுவார் என்று சமாதானப்படுத்தி இரண்டு நாட்களைக் கடத்தினேன். பிறகு அம்மாவின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அரை மனசுடன் சம்மதித்தேன். அலுவலகத்தில் விசாரித்து இடத்தைத் தெரிந்து கொண்டேன். அரை அடி உயரத் தூக்குப் போசியில் சோற்றையும் மீன் குழம்பையும் அடைத்துக் கொடுத்தாள் அம்மா. அதை எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏற வெட்கமாக இருந்தது. நடந்தே போனேன்.  வீட்டிலிருந்து ஐந்தாறு கிலோ மீட்டர் தாண்டியிருக்கும் இடத்தில் பெரிய டிரான்ஸ்பார்மர் அருகில் அப்பாவின் குழு கூடாரம் போட்டிருந்தது. அருகிலேயே இன்னும் ஒன்றிரண்டு கூடாரங்கள். பார்த்ததும் தெரிந்தது கூடை, முறம் பின்னுகிறவர்களின் தற்காலிக ஜாகை. அப்பாவின் சைக்கிள் கூடாரத்தை இழுத்துக் கட்டிய கயிற்றையொட்டி நின்றிருந்தது. ஆடி மாதக் காற்று பாயந்து கூடாரம் ஆடியதில் கயிறும் சேர்ந்து ஆடி சைக்கிளின் ஹாண்டில்பாரை அசைத்தது. நானும் குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக் கொள்ள உதவிய சைக்கிள் ஆச்சே. என்னை வரவேற்கத் தான் அந்தத் தலையாட்டல்.

அப்பாவுக்குத்தான் வரவேற்கத் தோன்றவில்லை. ''வேலைக்காக வந்திருக்கிறேன். முடிந்ததும் வரமாட்டேனா? அதற்குள் ஏன் தேடி வந்தாய்?'' என்றார். நான் மௌனமாக இருந்தேன். கூடாரத்துக்குள் பார்த்தேன். வேலை எல்லாம் முடிந்து ஏறக் கட்டி வைத்திருந்தது. கொண்டு போன சாப்பாட்டை அப்பா பாதி சாப்பிட்டார். மிச்சத்தை கூடைமுடையும் பெண் ஒருத்தியிடம் எடுத்துப் போகச் சொன்னார். அவள் வந்து 'இது யாரு ஒங்க பையனா?' என்று  என் நெற்றி முடியைக் கலைத்து விட்டுப் போனாள். 'தே கண்ணு இங்க பாரு ஒரு அண்ணன் வந்திருக்கு' என்ற குரல் கூடாரத்துக்குளிருந்து வெளியேறும் முன் அழுக்குப் பாவாடை மட்டும் அணிந்த  மூன்று வயது மாநிறக் குழந்தை அருகில் வந்தது. நெருங்கி நின்று பார்த்தது. அதன் உடம்பிலிருந்து மரிக்கொழுந்து வாசனை துளைப்பதுபோல வீசியது. எப்படி வந்தேன் என்று கேட்டார் அப்பா. நடந்து வந்ததைச் சொன்னேன். 'இந்த வேகாத வெயிலில் ஏன் நடந்து வந்தாய்? பஸ்ஸில் வருவதற்கென்ன?' நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். அப்பா லேசாகச் சிரித்தார். 'பாத்திரத்தை நான் கொண்டு வருகிறேன். நீ பஸ்ஸிலேயே போ. சாயங்காலம் வந்து விடுவேன்' என்றார். வலது கையில் சோற்று மிச்சம் காய்ந்து கொண்டிருக்க இடது கையால் பனியனுக்குள் துளாவி முதலில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தார். 'அம்மாவிடம் கொடுத்து விடு' என்று நீட்டினார். யோசித்து மறுபடியும் பனியனுக்குள் கைவிட்டு பத்து ரூபாய் நோட்டுகள் இரண்டை எடுத்து நீட்டினார். இதை பஸ்ஸுக்கு வைத்துக் கொள்'. அது பேருந்துக் கட்டணத்தை விடப் பத்து மடங்கு அதிகம். ரூபாய்த் தாள்களை வாங்கிச் சட்டைப்பைக்குள் வைத்தபோது அவற்றிலும் மரிக் கொழுந்து வாசமடித்தது.

வீட்டில் அம்மா இல்லாத ஒரு நாள். நானும் பெரிய தங்கையும் இருந்தோம். வேலைக்குப் போயிருந்த அப்பா அரை நாளிலேயே திரும்பி வந்தார். நடையில் தள்ளாட்டமிருந்தது. வழக்கமானதுதான் என்று விட்டேற்றியாக உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். பின் பக்கமிருந்து ஓக்காளமும் 'அப்பா என்னாச்சு?' என்ற தங்கையின் குரலும் கேட்டன. கவலைப்படாமல் புத்தகத்தில் புதைந்திருந்தேன். பின்கட்டு சந்தடி வாசிப்பை முறித்தது. அலுத்துக் கொண்டு எழுந்து போய்ப் பார்த்தேன். அப்பா வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. தங்கை விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். தரையில் வாந்திக் கசடு சிந்தியிருந்தது. டிச்சுக் குழியைத் தோண்டி விட்டதுபோன்ற நாற்றம். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அப்பா மறுபடியும் ஓக்காளத்துடன்  குனிந்து வாந்தி யெடுத்தார். அஜீரண வஸ்துக்கள் வாயிலிருந்து வழிந்து  சட்டையின் மார்பிலும் கைகளிலும் கால்களிலும் ஒட்டிக் கிடந்தன. அருவெருப்பாக இருந்தது. தங்கை மூக்கைச் சுருக்கிக் கொண்டு நின்றாள். சில விநாடிகளில் என்னுடைய அருவெருப்புக் கலைந்து இரக்கம் ஊறியது. தங்கையை உள்ளே போகச் சொல்லி விட்டு அப்பாவைக் கைத்தாங்கலாகக் குளியல் அறைக்குள் கொண்டு போனேன். அவர் உடைகளைக் களைந்து தண்ணீரை மொண்டு ஊற்றிச் சுத்தப்படுத்தினேன். சமர்த்துக் குழந்தையாக அம்மணக் கோலத்தில் என் முன்னால் உட்கார்ந்திருந்தார் அப்பா. தலையைத் துவட்டிய துவாலையை அவருடைய இருப்பில் சுற்றி விடக் குனிந்தபோது என் இடது தோள்மேல் அப்பாவின் ஈரக் கை பதிந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அப்போது அவர் கண்களில் மின்னிய கனிவை அதற்கு முன்போ பின்போ கண்டதில்லை.தகப்பனுக்கு அப்பாவாக நான் உணர்ந்த அபூர்வ விநாடி அது. அவரை அணைத்துப் பிடித்துத் திரும்ப வீட்டுக்குள் அழைத்துப் போனபோது வெயிலில் வதங்கிய வெற்றிலையின் மணத்துடன் இருந்தார் அப்பா. ஒருவேளை அதுதான் அப்பாவின் இயற்கை வாசனையா? தெரியவில்லை.

காலமாவதற்குச் சில மாதங்கள் முன்னால் படுக்கையில் கிடந்த அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். தீராத வயிற்று நோவால் உடம்பு ஒடுங்கியிருந்தது. மல்லாந்தோ சாய்ந்தோ படுக்க முடியாமல் கால்களை மடக்கி வைத்துக் குழந்தைபோலக் குப்புறப்படுத்திருந்தார். அவரிடமிருந்த நல்ல வாசனைகளும் துர் வாசனைகளும் காணாமற் போயிருந்தன. மருந்துகளின் மொச்சை வாடை மிஞ்சியிருந்தது. நானும் அவருமாகத் தனித்து விடப்பட்ட நேரத்தில் கேட்டார். 'நான் ஒனக்கு வேணுங்கிறதப் பண்ணலேன்னு தோணுதாடா?' குழப்பமாக அவரைப் பார்த்தேன். ஏன் அப்படிக் கேட்கிறார். 'இல்ல, ஒம் புஸ்தகத்துல எளுதீருக்கியே அதான். ஒனக்குத்தான் எம் மேல அன்புமில்ல விரோதமு மில்லயே' என்றார். அப்பாவின் வார்த்தைகள் என்னைச் சுட்டன; குத்திக் குதறின. குற்ற உணர்வுடன் தலைகுனியச் செய்தன. அவர் சொன்னது நான் எழுதிய கவிதை வரியின் ஞாபகச் சாயல். சரியான வரிகள் இவை. 'அப்பா, எனக்கு உன்மேல் அன்பில்லை;  பகையைப் போலவே'. அந்த வரிகளை யோசித்த மூளையைப் பிடுங்கி எறியலாம் என்றும் எழுதிய விரல்களை நசுக்கி முறித்து விடவும் தோன்றியது. மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் இடையில் ஊசலாடினேன். நான் எழுதியிருப்பதை அப்பா வாசித்திருக்கிறார். நாளிதழ் தவிர வேறு வாசிப்பு வாசனையில்லாதவர் என் கவிதையை எப்போது படித்தார்? தெரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னைக் குற்றம் சாட்டும் அந்தக் கவிதையை அவரை எவ்வளவு நோகச் செய்திருக்கும் என்பதில் வேதனையாக இருந்தது. மனதுக்குள் குமைச்சலாக இருந்தது. மனிதர்களைக் காயப்படுத்தி என்ன இலக்கியம்? என்று வெறுப்பாகவும் இருந்தது. ஆனால் எழுதியது எழுதியதுதானே.எழுதும்போது இருந்த அப்பாவின் நிலையும் எழுதிய என் மனநிலையும் வாஸ்தவமானவை. இப்போது அப்பா காட்டும் பெருந்தன்மையும் என்னைத் தவிக்க வைக்கும் குற்ற உணர்வும் கூட வாஸ்தவமானவை.

எல்லா சராசரித் தகப்பன்களைப் போலத்தான் அப்பாவும். ஐந்து பிள்ளைக ளைப் பெற்றார். அவர்கள் வளர்வதைப் பார்த்தார். தன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டதாக நம்பினார். எல்லா சராசரித் தகப்பன்களின்  நன்மை களும் கெடுதிகளும் அப்பாவிடமும் இருந்திருக்கின்றன. இல்லாமலிருந்தது தன்னுடைய மனசைப் பகிர்ந்து கொள்கிற விருப்பம். என்றைக்காவது மனம் திறந்து பேசியிருந்தால் எங்கள் இருவருக்கும் நடுவில் நிகழ்ந்த குளிர்ப் போர் நடக்காமலே இருந்திருக்கலாமோ என்னவோ? ஆனால் நான் நெருங்கியபோது அப்பா விலகிப் போனார். விலக விலக அவரை விரோதியாக நினைத்தேன். அப்பாவின் உலகமும் யோசனைகளும் என்னவென்று அறிந்து கொள்ள அந்தப் போலிப் பகை தடையாக இருந்ததை அவரில்லாத இப்போது உணர முடிகிறது. இழந்த பின்பு வருவதுதானே ஞானம்.

அப்பாவின் உடம்பு கிடத்தப் பட்டிருந்தது. நோயில் குலைந்த உடம்பு என்பதால் ஆடைகளை மட்டும் அகற்றி மாற்றுத் துணியை அணிவித்தார்கள். மாலை போட்டார்கள்.  உடம்பு வேனுக்குள்  ஏற்றப்பட்டது.  நானும் தம்பியும் உறவினர்களும் ஏறிக் கொண்டோம். மயானத்துக்குப் போகும் பாதையின் குண்டு குழிகளில் வண்டி ஏறி இறங்கியபோது ஸ்ட் ரெச்சரிலிருந்து அப்பா விசுந்து விடக் கூடாது என்று உடம்பைப் பிடித்துக் கொண்டேன். உயிர் வெளியேறிய அப்பாவின் பாதி திறந்த கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடம்பில் சார்த்தியிருந்த செவ்வந்தியும் ரோஜாவும் தழைகளும் வாடிய மரிக்கொழுந்தும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலையைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். வண்டி குழியில் குதித்தபோது கையோடு ஒட்டிக் கொண்ட மரிக் கொழுந்தைத் திரும்பவும் மாலைக்குள் சொருகினேன்.அப்பா எரிந்து கொண்டிருக்கத் திரும்பி நடந்தோம். வியர்வையைக் கையால் துடைத்தபோது மரிக்கொழுந்தின் வாசனை நாசிக்குள் புகுந்தது. 'நானும் நீங்களும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாம். பரஸ்பரம் புரிந்து கொள்ள முயன்றிருக்கலாம். உங்களுக்கு என்னை விட்டாலும் பிரியத்தைக் கொட்ட நான்கு பிள்ளைகள். எனக்கு ஒரு  அப்பாதானே?' என்று அந்த வாசனையிடம் அரற்றிக் கொண்டிருந்தேன்.

@

அந்திமழை இதழில் வெளிவந்தது.