புதன், 31 ஜூலை, 2013

பு.பு. (அல்லது) B W வின் குறிப்புகள்



''இவ்வ்வ்ளோ புக்கு வெச்சிருக்கிங்களே, எதுக்கு?''   கேட்டது என்  பக்கத்து வீட்டுத் தோழி கரிஷ்மா. (வயது ஆறு).  என்  புத்தக அலமாரியைப் பார்த்து விட்டு நிறையக் கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு  அனுசரணையான பதில்களாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

''எதுக்கா, படிக்கிறதுக்குத்தான்''

''இவ்ளோவையும் படிக்க முடியலேன்னா?''

''படிக்க முடியலேன்னா தினத்துக்கு ஒரு புக்கா வேவிச்சுச் சாப்ட்றுவேன்''

''அப்ப என்ன ஆவீங்க?''

'' புக்கைச் சாப்டுச் சாப்டுப் புழுவாயிடுவேன்''

''அப்ப உங்கள நா என்னான்னு கூப்றதுடது?''

''புத்தகப் புழுன்னு கூப்டுக்கோ''

''பெருசா இருக்கே?''

அவள் ஆங்கிலம் வழிப் பயில்பவள். அதனால் ''  புக் வோம்னு கூப்டலாம்''  என்றேன். அது புத்தகப் புழுவைவிடச் சிக்கலாக இருந்தது அவளுக்கு. ''பி.டபிள்யூ'' என்று சுருக்கிக் கொடுத்தேன். அதுவும் சரியாகவில்லை. நீண்ட நேரம் கண்களை மூடி ஆலோசனையில் மூழ்கினாள். கடைசியாகத் தீர்மானத்துக்கு வந்து கண்களைத் திறந்து சிரித்தபடி 'புபு' என்று அழைத்தாள். முதலில் சின்ன அதிர்ச்சியும் பிறகு பெரிய மகிழ்ச்சியும் தோன்றியது. முதலாம் வகுப்புப் படிக்கும் சிறுமி தானாக ஒரு சொற் சுருக்கத்தைக் கண்டுபிடித்த ஆச்சரிய அதிர்ச்சி. அதுவும் என்னைச் சரியாக உருவகப் படுத்தி விட்டாள் என்பதில் பெரிய மகிழ்ச்சி.

புத்தகங்களின் காதலன் நான் . மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும்போது புத்தகங்களை உணர்கிறேனா என்பது நிச்சயமில்லை. ஆனால் புத்தகங்களைத் தொடும்போது ஓர் உயிரைத் தொடுவதுபோலத்தான் இருக்கிறது. அவற்றுடன் உறவாடும்போது மனிதர்களுடன் புழங்குவதுபோலத்தான் இருக்கிறது. அதனால் என் குட்டித் தோழி 'புபு' என்று அழைத்ததும் மனம் துள்ளிக் குதித்ததை  சகஜமாகவே எடுத்துக் கொண்டேன்.



ன்னை விடவும் தீவிரமான புத்தகப் புழுக்கள் இருக்கிறார்கள்.தெரிந்தவர்களா கவும் தெரியாதவர்களாகவும். அவர்களில் ஒரு புழு பிரதீப் செபாஸ்டியன். பெங்களூருக்காரர். தி ஹிந்து, டெக்கான் ஹெரால்ட், பிசினஸ் வேர்ல்டு போன்ற ஆங்கில நாளேடுகளில் இலக்கியப் பத்திகளும் தெஹல்கா, ஓப்பன், காரவன் இதழ்களில் கட்டுரைகளும் எழுதுகிறார். பிரதீப்பின் புத்தகக் காதல் சற்று வித்தியாசமானது. அவருடைய வாசிப்பில் புத்தகத்தின் உள்ளடக்கத்துக்கு இடமிருக்கிறது. அதை விட அவரைக் கவர்வது புத்தகத்தின் திட வடிவம். ஒரு புத்தகத்தின் அட்டை, தாள், கட்டுமானம். அதன் பதிப்பு வரலாறு, அதன் வாசனை, அச்சு எழுத்துகளின் அமைப்பு, எழுத்துருக்கள், சமயங்களில் அவற்றிலுள்ள எழுத்துப் பிழைகள் ஆகியவைதாம். இவற்றை யெல்லாம் விலாவாரியாகச் சிலாகித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். புத்தகத்தை அடுக்கி  வைப்பது, புத்தக அலமாரிகள், இரண்டாம் கை புத்தகங்கள், புத்தகத் திருட்டு, கையொப்பமிட்ட பிரதிகள் என்று புத்தகக் காதலின் எல்லா அம்சங்களையும் விளக்கிச் சொல்லுகிறார். சமீப காலத்தில் படித்த புத்தங்களில் மிகச் சுவாரசியமாக இருந்த புத்தகம் பிரதீப் செபாஸ்டியனின் ' தி க்ரோனிங் ஷெல்ஃப்' (The goaning shelf ). புழு அறியும் புழுவின் கால். எனினும் புத்தகத்தில் சொல்லப்படுவது போன்ற அத்தனை நுணுக்கமானதல்ல என்னுடைய காதல். நான் புத்தகத்தின் உள்ளடக்கதிலேயே கவனம் கொள்கிறேன். அதன் புற அழகில் லயிக்க முடியாமற் போவதற்குக் கார ணம் தமிழ்ப் பதிப்பாளர்கள். நாம் மனதுக்குள் மிகவும் செல்லம் பாராட்டும் பல புத்தகங்களும் வடிவமைப்பில் எந்த ஈர்ப்பும் இல்லாதவை. புதுமைப்பித்தன், ஜானகிராமன் ஆகியோரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை கோரமான வடிவமைப்பிலும் குறைந்த பட்சம் பக்கத்துக்கு ஒரு பிழையுடனும் பதினாறு பக்க ஃபாரத்துக்குள் நாலைந்து எழுத்துருக்களிலும் வாசித்து நொந்திருக்கிறேன். கணிணித் தொழில் நுட்பத்துக்கு நன்றி. இன்று சில பதிப்பகங்களாவது  புத்தகங்களை நேர்த்தியான வடிவைப்பில் வெளியிடுகின்றன. பிரதீப்பின் புத்தகத்தில் விவாதிக்கப்படும் அம்சங்களில் வடிவ நேர்த்தியும் ஒன்று.

புத்தகக் காதலர்களின் பேராசைகளில் ஒன்று ஒரு புத்தகத்தின் முதல் பதிப்பை உரிமையாக்கிக் கொள்வது என்கிறது பிரதீப்பின் ஒரு கட்டுரை. பிரபல எழுத்தாளர்களுடைய புத்தகங்களில் முதல் பதிப்பை வைத்திருப்பதில் ஏதோ கோஹினூர் வைரத்தையே சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் கர்வம் அவர்களுக்கு ஏற்படுகிறதாம். முதல் பதிப்பைக் கைவசப்படுத்துவதற்காக என்ன விலை கொடுக்கவும் எந்தத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்களாம்.

ரஷ்யாவின் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் பிரபல எழுத்தாளர் விளாதிமீர் நபக்கோவ். ஆரம்பத்தில் தனது படைப்புகளை ரஷ்ய மொழியில் எழுதிய நபக்கோவ் ஒன்பது நாவல்களுக்குப் பிறகு ஆங்கிலத்திலேயே எழுத ஆரம்பித்தார். அவருடைய மிகப் பிரபலமான நாவல் 'லோலிடா'. மத்திய வயதுக்காரரான ஓர் இலக்கியப் பேராசிரியர்  பன்னிரண்டு வயதுச் சிறுமியிடம் காதல் கொள்வதுதான் நாவலின் கதை. இது ஒழுக்கக் கேட்டை நியாயப்படுத்தும் நாவல்  என்று இங்கிலாந்து, பிரான்ஸ், முதலான பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. இந்த நாவலை நபக்கோவ் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதினார். வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரே ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்த்தார்.

ரிக் கெகோஸ்கி என்ற அரிய புத்தகங்களின் விற்பனையாளர் 1988 ஆம் ஆண்டு தனது கேட்லாகில் 'லோலிடா' ஆங்கில நாவலின் முதல் பதிப்புப் பிரதி விற்பனைக்கு இருப்பதாக அறிவித்தார். விலை 3250 பவுண்டுகள். இந்திய ரூபாயில் சுமாராக இரண்டே முக்கால் லட்சம். இதை எழுதிய நாளின் நிலவரப்படி 2,77, 625 ரூபாய். சில வாரங்களுக்குப் பிறகு கெகோஸ்கிக்கு ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் க்ரீன்  ஒரு கடிதம் எழுதினார். ' நாவலாசிரியர் நபக்கோவ் கையெழுத்துப் போட்ட 'லோலிடா' வின் முதல் பிரதி என்னிடம் இருக்கிறது. விலைக்கு வாங்கிக் கொள்ளச் சம்மதமா? '. புபுவான கெகோஸ்கி உடனே பதில் போட்டார். 'சம்மதம் விலை 4000 பவுண்ட்'. கிரயம் முடிந்து புத்தகம் கைக்கு வந்தது. 'விளாதிமீர் நபக்கோவிடமிருந்து கிரஹாம் க்ரீனுக்கு , நவம்பர் 1959' என்ற வாசகங்களுடன் பச்சை மசியில் வரைந்த பட்டுப் பூச்சியின் படம் சகிதமிருந்த முதல் பக்கத்தைப் பார்த்ததும் கெகோஸ்கி தன்னையே மெச்சிக் கொண்டார். அடுத்த நாளே புத்தகத்தை 9000 பவுண்டுக்கு விற்பனையும் செய்தார். பிரபல ராக் பாடகர் எல்டன் ஜானின் பாடலாசிரியரான பெர்னி டாபின் அதை வாங்கினார். சங்கதி கையை விட்டுப் போன பின்னர்தான் பொன் முட்டை போடும் வாத்தை அறுத்த முட்டாள்தனத்தை உணர்ந்தார் கெகோஸ்கி. அதைத் திரும்ப வாங்க முயற்சி செய்தார். நடக்கவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக அந்த அபூர்வப் பிரதியை மறுபடியும் வாங்கினார். விலை  13,000 பவுண்டுகள். பத்தாண்டுகள் வரை அந்தப் பொக்கிஷத்தைத் தன்வசம் வைத்திருந்தார். அதற்குப் பிறகு ஒரு புத்தகத்துக்கு என்ன மதிப்பு என்று காட்டும் குறுகுறுப்புடன் அதை விற்றார். உலகின் மிகப் பெரிய அருங்கலைப் பொருள்களின் விற்பனையகமான கிறிஸ்டீஸின் நியூயார்க் கிளையில் நபக்கோவ் கையெழுத்திட்ட 'லோலிடா' நாவலின் முதல் பிரதி யை நீங்கள் வாங்கலாம். விலை 2,64,000 டாலர்கள் மட்டுமே. இந்திய மதிப்பில் ......?



ருபது ஆண்டுகளுக்கு முன்பு எனக்குச் சில புத்தகங்களும் பத்திரிகைகளும் கிடைத்தன. அன்றைய நிலவரப்படி இந்தியச் சந்தைகளில் கிடைப்பதற்கு அரியவை. ராமச்சந்திரன் என்பவர் தனது சேகரிப்பிலிருந்தும் வேறு ஏதோ புத்தகச்  சுரங்கத்திலிருந்தும்  திரட்டிய மாணிக்கங்களை பாதி விலைக்கும் முக்கால் விலைக்குமாக விற்பனை செய்தபோது அகப்பட்டவை அவை. பொருளாதார முடையோ வீட்டிலிருப்பவர்களின் தொணதொணப்போ அவரை அதற்குக் கட்டா யப் படுத்தியிருந்தது. புத்தகப் புழுக்களின் நிரந்தர பயம் வீட்டவர்களின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் ஊசிகள்தாம்.  குளிர் சாதனப் பெட்டியோ குக்கரோ வாங்கும்போது கிடைக்கும் அட்டைப் பெட்டிகளை வருடக்கணக்காகப் பாதுகாக்க த்  தயாராகும் குடும்பத்தினர்  புத்தகங்களுக்கு மட்டும் வீட்டில் இட ஒதுக்கீட்டை அனுமதிப்பதில்லை.

எனக்குக் கிடைத்த மாணிக்கங்களில் ஒன்று 1960 களில் நடத்தப்பட்ட இலக்கிய இதழ். Plumed Horn என்று பெயர்.மெக்சிகோவிலிருந்து நடத்தப்பட்ட பத்திரிகை. ராய் சௌதிரி என்று ஓர் இந்தியப் பிரதிநிதியும் அதற்கு இருந்திருக்கிற ¡ர். எட்டு ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. அதன் 12 இதழ் எனக்குக் கிடைத்தது. ராக்வெல் ஜோதோரோவ்ஸ்கி என்ற பெண்கவிஞரின் கவிதைகள் வெளியான சிறப்பிதழ். அதிலிருந்து சில கவிதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதழை மார்கரெட் ரண்டாலும் கணவர் செர்ஜியோ  மாண்ட்ரகானும் ஆசிரியர்களாக இருந்து நடத்தி யிருக்கிறார்கள். இருவரும் விவாகரத்துச் செய்ததும் பத்திரிகையும் நிறுத்தப் பட்டு விட்டது. மார்க்கரெட் பெண்ணியத்தின் முக்கிய  நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் 'Gathering Rage' என்ற நூலை எழுதியவர்.எழுபது வயது தாண்டிய இன்றும் உலகம்  சுற்றிக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு நன்றி.இணையம் வழியாக அவரைத் தேடிப் பிடித்து விசாரித்த போது ராக்வெல் உயிருடன் இருப்பது தெரிந்தது. தொடர்பு கொண்டேன்.



                                                                 ராக்வெல் ஜோதோரோவ்ஸ்கி     



சில கவிதைகளையும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார். விஷயம் அதுவல்ல.  Plumed Horn இதழின் பிரதி என்னிடம் இருக்கும் ரகசியம் பகிரங்கமா னது. 1500 டாலர் கொடுத்தால் தருவாயா என்று விசாரணைகள் வந்தன. பதில் அனுப்பவில்லை. 2000 டாலர் ? அதற்கும் பதில் அனுப்ப வில்லை. 'இரண்டாயிரம் டாலர் என்றால் சும்மாவா? கிட்டத்தட்ட ஒரு லட்சம் சாமி, விற்று விடு' என்றார் நண்பர். 'புழுக்கள் தங்கள் பிரபஞ்சத்தை விற்பதில்லை' என்றேன். அவருக்குப் புரியவில்லை.

எல்லா மனிதர்களையும் நேசித்து விட முடியாது என்பதுபோல எல்லாப் புத்தகங்களையும் வாசித்து விடவும் முடியாது. இரண்டும் சாத்தியமில்லை. வாசிக்கத் தகுதியானவை என்று உலகம் பாராட்டும் சில புத்தகங்களை வாசிக்காமல் இருப்பது இளம் தலைமுறை எழுத்தாளர்களின் மனநலத்துக்கு உதவும் என்கிறார்  கனடிய நாவலாசிரியர், பத்தியாளர்.  கிராஃபோர்ட் கிலியன். அவர் சொல்லும் காரணம் விநோதமானது. வாசகர்களால் அதிகம் படிக்கப் படுவதும் எழுத்தாளர் களால் மிகவும் சிலாகிக்கப்படுவதுமான பத்து புத்தகங்களை அவர் பட்டியலிடுகிறார்.
''இவையெல்லாம் மோசமான புத்தகங்கள் என்ற அர்த்தத்தில் சொல்ல வில்லை. மிக நல்ல புத்தகங்கள். அதனால்தான் வா சிக்க வேண்டாம் என்று சிபாரிசு செய்கிறேன். இந்தப் புத்தகங்கள் இளம் மனதை ஆழமாகப் பாதிக்கும். நான் என்னுடைய  விடலைப் பருவத்தில் சாலிங்கரின்  The Catcher in the Rye நாவலை வாசித்தேன். அது ஏற்படுத்திய பாதிப்பில் நான் அதிக  பட்சம் மூக்கால் அழுகிற ஸ்டெனோகிராபராகத்தான் ஆகியிருந்திருக்க வேண்டும். அந்த பாதிப்பிலிருந்து தப்ப நான் க டும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் இப்படிச் சொல்கிறேன். தவிர இளம் எழுத்தாளர்கள் இந்த பாதிப்புக்கு உட்பட்டால் முன்னோடி எழுத்தாளர்களின் சாயலிலேயே எழுத ஆரம்பித்து விடுவார்கள். அது நல்லதல்ல.  அமெரிக்க இலக்கியத்துக்கு ஒரு சாலிங்கர் போதும். எதற்குக் குட்டிக் குட்டியாகப் பல சாலிங்கர்கள்'' என்பது கிலியனின்  வாதம். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நம்முடைய தேர்வைப் பொருத்தது. ஆனால் அவர் சொல்வது நிஜம். படிக்க வேண்டிய புத்தகங்கள்போலவே படிக்கக் கூடாத புத்தகங்களும் இருக்கின்றன. நோபெல் பரிசு பெற்றவர்களான அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்வே, பிரிட்டிஷ் எழுத்தாளர் வில்லியம் கோல்டிங், ஜனரஞ்சக வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அயன் ராண்ட், ஹெரிச் சீகால் ஆகியோரின் புத்தகங்களைத்தான் படிக்கக் கூடாத புத்தகங்கள் என்று பட்டியலிடுகிறார். கிலியனின் பட்டியலுக்கு நேர் எதிராகப் படிக்க வேண்டாத தமிழ்ப் புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கலாமா என்று யோசித்தேன். அதனால் ஏற்படவிருக்கும் ஜென்மப் பகை பயமுறுத்துகிறது.

எழுத்தாளர் ஜெயகாந்தன்  'நினைத்துப் பார்க்கிறேன்' என்ற புத்தகத்தில் தான் படிக்கப் பயந்த நூல் என்று ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஹிட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் ( எனது போராட்டம்). இளம் பருவத்தில் வாசிக்க விரும்பி பக்திபூர்வமாகத் தொடங்கிப் பயந்துபோய்ப் பாதியில் நிறுத்திய ஒரு புத்தகம் இருக்கிறது. நானாக வாங்கிய முதல்  பிரதி தவிர அவ்வப்போது அன்பளிப்பாக வும் அந்தப் புத்தகம் க்டைத்துக் கொண்டே இருந்தது. கிடைக்கும்போது எல்லாம் பயத்தில் அடிவயிறு கலங்கும். இந்தப் புத்தகத்தை வாசிக்கவே வேண்டாம் என்று மனம் முரண்டு பிடிக்கும். ஏனென்று இதுவரையிலும் புரியவே இல்லை.அந்தப் புத்தகம் - பகவத் கீதை.

(அந்திமழை ஜனவரி 2013 இதழில் வெளியானது. )




1 கருத்து:

  1. எங்கோ இதன் லிங்க் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. உங்களின் ஃபுரொஃபைலை கவனிக்காமல், இணையத்தில் கூட இப்படி நன்றாக எழுதுகிறார்களா என்று அதியசத்துக் கொண்டே வாசித்து முடித்தேன். கடைசியில்தான் உங்கள் பெயர். :)

    பதிலளிநீக்கு