வியாழன், 6 நவம்பர், 2014

ஒரு கவிதையின் இரு நிறங்கள்




சீனக் கவிஞர் து மு ( Du Mu  - 803 - 852 ) ஒரு கவிதையின் இரண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள். முதலாவது பொழிபெயர்ப்பு டேவிட் யங்கும் ஜியான் ஐ லின்னும் இணைந்து செய்தது. இரண்டாவது பைன்னருடையது.

பிரிவு

ளவற்ற அன்பு எப்படியோ
அன்பின்மையாக மாறிவிடுகிறது.

இந்தப் பிரியாவிடைக் குப்பியைக் கடந்து
ஒரு சிநேகப் புன்னகையைக்கூட
நம்மால் சிந்த முடிவதில்லை.

இந்த மெழுகுவத்தியால் மட்டுமே
ஏதோ உணர்ச்சிகளை
வெளிப்படுத்த முடியும்போல.

இரவு முழுவதும்
சின்னதாக மெழுகுக் கண்ணீரை
வடித்துக் கொண்டிருக்கிறது.

                                                                         *   *  *


ழ்ந்த அன்பு எவ்வாறு ஆழ்ந்த அன்பாகத் தோன்றும்?
வழியனுப்பு விருந்துகளில் அது எவ்வாறு புன்னகைக்க முடியும்?
நமது சோகத்தை இந்த மெழுகுவத்தியால்கூட உணரமுடிகிறது
நம்மைப்போலவே இரவு முழுவதும் அழுகிறது.              


செவ்வாய், 4 நவம்பர், 2014

அசோகமித்திரன் காலச்சுவடு ஜெயமோகன் அப்புறம் நானும்



நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட,
பற்றி எரிவது மேல்-
ஒரு கணம் எனினும்.




காலச்சுவடு செப்டம்பர் 2014 இதழில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் நேர்காணல் வெளியானது. நேர்காணலில் அசோகமித்திரன் குறிப்பிட்டதாக இடம்பெற்ற சில தகவல்கள் பிழையானவை என்று சுட்டிக் காட்டி க்ரியா ராமகிருஷ்ணன், கவிதா பதிப்பக உரிமையாளர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் மறுப்புக் கடிதங்கள் எழுதி இருந்தனர்.அவை அக்டோபர் இதழில்  வெளியிடப் பட்டன. அசோகமித்திரனும் சில தகவல்களுக்கு மறுப்புத் தெரிவித்து எழுதியிருந்தார். அந்தக் கடிதமும் அக்டோபர் இதழிலேயே வெளியானது.

ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல் எழுத்துப் பிரதியாக மாறிய நிலையிலும் வடிவமைப்பின் போதும் ஏற்பட்ட மாற்றங்களில் சில பிழைகள் நேர்ந்தன. அசோகமித்திரனின் 'மானசரோவர்' நாவல் சாவி வார இதழில் தொடராக வெளிவந்தபோது அசோகமித்திரன் எழுதிய கைப் பிரதியை இதழ் அலுவலகத்துக்குக் கொண்டு சேர்த்த அதன் துணை ஆசிரியர் ரவி பிரகாஷின் பெயர் ரவிபிரசாத் என்று அச்சேறியிருந்தது. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலைக் குறிப்பிடும் இடத்தில் 'கோட்டாறில் யுத்தம் நடந்ததா' என்று நாவலில் வரும் கேள்வி 'குளச்சலில் யுத்தம்' என்று பிழையாக வந்திருக்கிறது.

இவையெல்லாம் தவிர்த்திருக்கக் கூடிய பிழைகள். எனினும் ஒரு இதழ் உருவாக்கத்தில் தவிர்க்க முடியாமல் ஊடுருவி விடும் பிழைகளும் கூட. பிழைகள் ஏற்படுவதும் அவை  சுட்டிக் காட்டப்படும்போது திருத்தங்கள் அச்சியற்றப்படுவதும் இதழியலில் பொதுவான நடைமுறை. அந்த அடிப் படையிலேயே அடுத்த இதழில் மேற்சொன்ன கடிதங்கள் வெளியிடப் பட்டன. தவிர்க்க இயலாமல் நேர்ந்த இந்தப் பிழைகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக, நேர்காணலை மேற்கொண்டவன்  என்ற நிலையில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சோகமித்திரன் நேர்காணல் தொடர்பாக எழுத்தாளர் திரு.ஜெயமோகன் தனது இணையtத்தளத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தார். 'அசோக மித்திரனை அவமதித்தல்' என்ற தலைப்பில்  அக்டோபர் 13 ,2014 அன்று பதிவேற்றப்பட்டிருக்கும் குறிப்பில் தன்னுடைய அபார ஞான தரிசனத் தாலும் தன்னிகரற்ற அற நோக்காலும் கண்டடைந்த ஊகங்களையும் கற்பனைகளையும் பொய்களையும் அவிழ்த்து விட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பலராலும் எதிர்வினைகள் நடத்தப்பட்டன.  அழுக்காறும் அவதூறுகளும் தன்னைத் தூக்கிக் காட்டிக்கொள்ளும் விளம்பரக் குயுக்திகளும் நிரம்பிய அந்தக் குறிப்பு, பதில் சொல்லத் தேவைப்படும் அருகதை எதுவும் இல்லாதது. அதில் எனக்கு கஞ்சிக் கூலி என்று  அவர் அளித்திருக்கும் 'கௌரவம்'  அவருடைய தரத்தையே காட்டுகிறது. புளுகுகளுக்கும் கற்பனையான பழியுரைகளுக்கும் பதில் சொல்வது வெட்டி வேலை என்பதே எனது நிலைப்பாடு. இது குறித்து மௌனமாக இருக்கவே விரும்பினேன். அதையே கடைப்பிடிக்கவும் செய்தேன்.

ஆனால், இந்த நிலைப்பாடு சரியல்ல என்பதையும் எனது உதாசீன மௌனம் ஜெயமோகன் செய்யும் பொய்ப் பிரச்சாரத்தை அனுமதிப்பதாக மாறுகிறது என்பதையும் உணர நேர்ந்தது. ஃபேஸ்புக்கில் இடப்பட்ட நிலைத்தகவல்கள் சிலவும் அதை உறுதிப்படுத்தின. அதை விடவும், தெரிந்த நண்பர்களும் தெரியாத வாசகர்களும் எனக்கு என்னவோ அசம்பாவிதம் நேரிட்டு விட்டதுபோலத்  தொலைபேசியில் விசாரிக்கத் தொடங்கியது அமைதியைக் குலைத்தது. 'அசம்பாவிதம் நடந்தது இங்கே இல்லை. நாகர்கோவில் பார்வதி புரத்தில் போய் விசாரியுங்கள்' என்று சொல்லிப் பார்த்தேன். அப்படியும் விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

அண்மையில் எங்கள் ஊரான கோவைக்குச் சென்றிருந்தபோது சந்திக்க நேர்ந்த பழைய நண்பர்களும் மூக்கைச் சிந்திக் கொண்டு இதையே விசாரித்தார்கள். நெடுநாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்களுக்கும் உரையாடலுக்குரிய விஷயம்  இதுவாகவே இருப்பது அதிர்ச்சியளித்தது. 'பொய்மை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்'  ஆகி விடக் கூடாது என்பதனாலேயே  பதில் சொல்ல முற்பட்டிருக்கிறேன். ஜெய மோகனின் லட்சோபலட்சம் வாசகர்களிடமும் அசோகமித்திரனின் ஆயிரக்கணக்கான வாசகர்களிடமும் எனக்கிருக்கும் நூற்றுச் சொச்சம் வாசகர்களிடமுமே இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எழுதத் தொடங்கி இன்றுவரை சர்ச்சைகளிலோ விவாதங்களிலோ ஈடுபட்டதில்லை. பொது வெளியில் நடைபெறும் இலக்கிய விவாதங்கள், தங்கள் தரப்பே சரியானது என்று நிறுவ இரு தரப்பினரும் முயற்சி செய்யும் மல்யுத்தப் போட்டிகளாகவே எனக்குத் தோன்றியிருக்கின்றன. அதனால் இலக்கிய ஞானம் விகசிப்பதில்லை என்பது அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று. மாறாக, ஒத்த அலைவரிசையுடைய நண்பர்களின் உடன்பாடும் எதிர்மறையுமான கருத்துக்கள், வாதங்கள் சிந்தனையை விரிவடையச் செய்வதையும்  நடைமுறையில் உணர்ந்து பயன் பெற்றிருக்கிறேன். ஃபேஸ்புக்கிலோ இணைய தளங்களிலோ நடக்கும் சச்சரவுகளிலும் எனக்கு விருப்பமில்லை. அக்கறையுமில்லை.

அசோகமித்திரன் நேர்காணலை முன்வைத்து ஜெயமோகன் எழுப்பியிருப்பது விவாதமல்ல; அவதூறு. வீண்பழி சுமத்தும் கபடம். சொந்தக் கட் - அவுட்டைச் சதா சுமந்து திரியும் ஒருவரின் புலம்பல். யாரையோ கேவலப்படுத்த யாரையோ பிணையாக்கும் கோழைத்தனமான ஒப்பாரி. இது நியாயமான எந்த எதிர்வினைக்கும்  லாயக்கில்லாதது.  
ஆனால் இந்தக் குறிப்புக்குக் கொடுக்கபட்டிருக்கும் தலைப்புத்தான் எரிச்சலடையச் செய்கிறது. பெரும் ஆளுமையான அசோகமித்திரனைக் கேடயமாக நிறுத்தி ஜெயமோகன் செய்து கொள்ளும் தற்புகழ்ச்சியும் தருக்கும்தான் ஆத்திரமளிக்கின்றன. வழக்கமான பொறுப்பற்ற வாசகங்களில் - sweeping statements  – பலரையும் மலினப்படுத்தும் இந்த ஆபாசம் அருவருப்படைய வைக்கிறது. போகிற போக்கில் தர்ம அடி கொடுத்து விட்டு, பரபரப்பை உண்டாக்கி எட்டி நின்று இளிக்கும் இந்தத் தந்திரம் குமட்டுகிறது.

நேர்காணல் வெளியான காலச்சுவடு இதழுக்குத் தன்னுடைய மறுப்பை ஜெயமோகன் தெரிவித்து எழுதியிருந்தால் அவரது 'அறச் சீற்றத்தை' நான் புரிந்துகொள்ள முடிந்திருக்கும். பொறுப்பாசிரியர் என்ற நிலையில் அதை வெளியிடவும் செய்திருப்பேன். அந்தச் சுதந்திரம் காலச்சுவடில் எனக்கு இருக்கிறது. முன் குறிப்பிட்ட கடிதங்கள் வெளியிடப் பட்டதே அதற்குச் சான்று. அவர் தனது குறிப்பைப் பொதுவெளியான இணையத்தில்தான் வெளியிட்டிருக்கிறார். எனவே அதற்கான எதிர்வினையையும் அதே ஊடகத்தில் ஆற்றுவதே சரி என்பது என் எண்ணம்.

ஜெயமோகனுக்கு எங்கிருந்து அறக் கோபம் வந்தது? ஏன் வந்தது? அசோகமித்திரனுக்காகவா? இல்லை என்பதை அவருடைய செயலே காட்டுகிறது. 'அவரை திட்டமிட்டு அவமதித்துவிட்டது காலச்சுவடு  என்பதே உண்மை' என்று முழங்கும் ஜெயமோகன் அந்த உண்மைக்கு ஆதாரமாக எதைக் காட்டுகிறார்? மாறாகத் தன்னை அவ மதிக்கவும் தன்னுடைய 'புகழை' மறைக்கவும் செய்யப்பட்ட 'சதிகளை'த்தானே முன்வைக்கிறார். அவருடைய நோக்கம் அசோகமித்திரன் சார்பாகப் பேசுவதல்ல; அவரைச் சாக்கிட்டுத் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வதுதான். குறிப்பின் முதல் வாசகமே அதைத்தானே சொல்கிறது.

' அசோகமித்திரனின் காலச்சுவடு பேட்டி பற்றி பலர் என்னிடம் சொன்னார்கள். அதில் அவர் வெண்முரசுவை கிழித்துவிட்டார்' என ஃபேஸ்புக்கில் பலர் மகிழ்ந்தார்கள் என்றார்கள். அவர் தமிழில் என்னை புகழ்ந்ததுபோல எவரையும் புகழ்ந்ததில்லை. ஆகவே ஒரு படைப்பை முற்றிலும் நிராகரித்தாலும் அதுவும் நியாயமே. ஆனால் அதில் அவர் தன் மனைவிக்கு அது புரியவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்.'

ஆக, தார்மீகக் கொப்பளிப்புக்குக் காரணம் இதுவரை தன்னைப் புகழ்ந்தவர் தனது படைப்பைக் கிழித்து விட்டதாக மண்டபத்தில் ஏதோ அநாமதேயம் சொன்னதைக் கேட்டதுதான்.இதே ரீதியில்தான் அறப்பெருக்கு அணை யுடைத்துப் பாய்கிறது.

அவர்களுக்கு அசோகமித்திரன் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பேட்டி எடுப்பது காலச்சுவடின் வம்பு அரசியலை அதன்வழியாக நிலைநாட்டுவதற்காக மட்டுமே. வெண்முரசு வெளிவரத் தொடங்கியதுமே நான் எதிர்பார்த்ததுதான், அது ஓர் இலக்கியமே அல்ல என்று பல்வேறு தொண்டைகளைக் கொண்டு சொல்ல வைப்பார்கள்.நம்மூரில் தொண்டையைக் கொடுக்கவும் பலர் தயாராகத்தான் இருப்பார்கள்.

ஜெயமோகன் சேம் சைடிலேயே கோல்போட்டுக் கொள்ளும் இந்த வாசகங்களில்தான் எத்தனை அறப் பீச்சல்? இவர் எதிர்பார்த்திருந்தாராம். காலச்சுவடு தனது வம்பு அரசியலை நிலைநாட்டிக் கொள்வதற்காக,அது ஓர் இலக்கியமே இல்லை என்று சொல்ல வைக்கும் எந்தத் தொண்டை யையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். எனவே, அவரே கள்ளத் தொண்டையில் பிலாக்கணம் வைக்கத் தொடங்கி விட்டார். அதற்கு இந்த நேர்காணல் ஒரு சாக்கு. அதுதானே பகல் வெளிச்சம் போலத் தெரியும் உண்மை? அசோகமித்திரன் பொருட்டல்லாமல் போவது யாருக்கு என்பதை இதுவே சொல்லவில்லையா?

இவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. மிகத் தெளிவான சான்றை சாட்சாத் ஜெயமோகனே எடுத்துக் கொடுக்கிறார். அக்டோபர் இதழில் வெளிவந்த அசோகமித்திரனின் விளக்கக் கடிதத்தில் அவர் குறிப்பிட்ட வாசகங்களைத் தனக்குச் சாதகமாக முன்வைக்கிறார். அசோகமித்திரன் குறிப்பிட்டிருப்பது இவ்வாறு.

நான் முதலில் இருந்தே பதில்கள், கேள்விகள் எழுத்து மூலம் இருக்க வேண்டும் என்றேன். அது நடக்கவில்லை. ஒலிப்பதிவு இயந்திரங்கள் பேச்சை மலினப் படுத்தும். அதுபோலவே புகைப்படங்களும். இலக்கியப் பேட்டி எழுத்து பற்றித்தான் இருக்க வேண்டும். என்வரை சொல்புதிது, சுபமங்களா பேட்டிகள் எடுத்துக் காட்டாக இருந்தன.’’ (காலச்சுவடு இதழ் 179 அக்டோபர் 2014 பக்கம் 8). 

ஜெயமோகன் அதைப் பற்றித் தனது தளத்தில் குறிப்பிடுவது இது. 

அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள்வரை அவரை எடுத்த மிகச் சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பி யிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதி வடிவை எனக்கு அனுப்பி நான் அதைச் செப்பனிடமும் செய்தேன். இன்னொரு பேட்டி சொல்புதிதுக்காக. நானே எடுத்தது.



அசோகமித்திரன் தனது கடிதத்தில் எங்கே சிறந்த பேட்டி என்று 
குறிப்பிடுகிறார்? இது என்ன  தற்புகழ்ச்சி? ஜெயமோகன் எடுத்தால் எல்லாம் சிறப்பாச்சே! கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் 
பாட்டாச்சே! அந்த அளவுச் சிறப்போடு பேட்டி எடுக்க இலக்கிய உலகில் 
இன்னொருvவர் இருக்க முடியுமா என்ன?


இந்த இரண்டு பேட்டிகளும் தான் எடுத்தவை என்ற ஜெயமோகனின்  பீற்றலை ஒரு பேட்டிதான் நீங்கள் எடுத்தது, சொல்புதிதுக்காக. இன்னொருபேட்டி சுபமங்களா வுக்காக நான் எடுத்தது என்று உரிமைவாதத்துடன் வந்தார் ஞாநி. அமரர் கோமல் சுவாமிநாதன் மறுக்க வரமாட்டார் என்ற துணிச்சலில் சொல்லப்பட்ட தனது பொய் அம்பலப்பட்ட போதும் முதலில் பேட்டிக்கு வினாக்களைத் தயாரித்து அனுப்பியதாகச் சொன்னார். அது பொய் என்று ஞாநி மறுத்ததும் இல்லை அதைச் செப்பனிட்டதாகக்  கரணமடித்தார். ஜெயமோகன் சொன்னது பொய் என்பதை நிறுவும் வரை ஞாநியும் சளைக்காமல் நின்றார். அதை ஏற்பதைத் தவிர வழியில்லை என்றதும் களவு முதல் என் கையில்தான் இருக்கிறது; ஆனால் நான் கள்ளனில்லை என்று சொல்லும் பெருமித  ஒப்புதலை சிலாகிக்காமல் இருப்பது எப்படி? ( பார்க்க: அசோக மித்திரன் பேட்டி – ஒரு விளக்கம் 13 அக்டோபர் 2014 http://www.jeyamohan.in/?p=63674 )


இதே அபாண்டத்தைத்தான் தனது குறிப்பின் முடிவில் ‘கஞ்சிக் கூலிஎன்று எனக்கு அளித்த அடைமொழியைத் திரும்பிப் பெறுவதிலும் காட்டியிருக்கிறார். முதல் பதிவேற்றத்தின் போது இடம் பெற்ற அந்த வாசகம் பின்னர் நீக்கப்பட்டிருக்கிறது. நான் கஞ்சிக் கூலி என்று ஜெயமோகன் நம்புவது உண்மையானால் அதை அப்படியே அல்லவா விட்டிருக்க வேண்டும்? பொது வெளியில் ஒருவனை வசைபாடுவது, அது வசை என்று சுட்டிக் காட்டப்பட்டதும் வாலை இடுக்கிக் கொண்டு ஒதுங்குவது. இது என்ன நேர்மை? ஒற்றை வாசகத்தைப் பொறுப்பில்லாமல் உதிர்ப்பதன் மூலம் இதுவரை ஆளுமைகள் பலரையும் அவமதித்த நபரா அசோகமித்திரனை அவமதித்ததாக வெகுண்டு எழுவது? இந்த நடிப்பையா இலக்கிய அக்கறை என்று கொள்வது?


எண்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவரை நேர்ப்பேச்சில் பேட்டி கண்டு அவர் சொன்னதையும், சொன்னதாக இவர்கள் புரிந்துகொண்டதையும், இவர்கள் அவரிடம் சொல்லவைத்ததையும் சேர்த்து பேட்டி எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.


இது காலச்சுவடு நேர்காணலுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது. ஒருவேளை ஜெயமோகன் மேற்கொள்ளும் நேர்காணல்களில் பின்பற்றும் அணுகுமுறையாக இருக்கலாம். காலச்சுவடு நேர்காணல் நடத்தப்பட்ட பின்னணியையும் அதன் முறையியலையும் கொஞ்சம் பொறுத்து விரிவாகவே சொல்கிறேன். அது என் கடமையும் விவகாரத்தை விளக்கத் தேவையானதும் கூட.


இந்த நேர்காணல் தொடர்பாக முக்கியமான கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். அசோகமித்திரன் சொல்லாத ஒரு வார்த்தையும் இந்த நேர்காணலில் இடம் பெற வில்லை. அவரே சொன்ன பிறகு எதையெல்லாம் பிரசுரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினாரோ அதில் ஒரு காற்புள்ளியைக் கூடப் பிரசுரிக்கவில்லை. பேச்சு வழக்கில் இருந்த உரையாடலை பொது வழக்குக்கு மாற்றியது மட்டுமே இதில் செய்யப்பட்ட மாற்றம். நேர்காணல் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் சொல்ல விடுபட்ட்து என்று  அசோகமித்திரனே எழுதியனுப்பிய கேள்வியும் பதிலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது தனித்துத் தெரியாமல் இருப்பதே நேர்காணலின் நம்பகத்தன்மைக்கு அத்தாட்சி.


ஜெயமோகனே விபரீதமான தலைப்பை தனது குறிப்புக்கு வைத்ததன் மூலம் அவமதிப்புச் செய்திருப்பவர். ஓர் எழுத்தாளரை அவமதிக்க ஒரு பத்திரிகை சிறப்புப் பகுதியா வெளியிடும்? அவரிடமிருந்து கதை வாங்கி வெளியிடும்? அவரைப் பற்றி எழுதப்பட்டதும் கேட்டு எழுதுவிக்கப் பட்டதுமான கட்டுரைகளை வெளியிடும்? இரண்டு இலக்கியக் கிறுக்குகள் சில நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து அவரைப் பேட்டி காணும்? பேஸ்புக்கிலோ இணைய தளத்திலோ கற்பனையும் பொய்யும் அபாண்டமுமாக ஒரு பதிவு போட்டால் போதாதா, ஜெயமோகன் தொடர்ந்து செய்து வருவதுபோல? யார் யாரை அவமதித்திருக்கிறார்கள் என்று இதைப் படிக்கும் வாசகர்கள் முடிவு செய்யட்டும்.


இந்த நேர்காணல் ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடைபெற்றது. அது முழுவதுமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதன் பதிவுகள் கைவசமே இருக்கின்றன. ஜெயமோகன் இளித்துக் காட்டும் கோரைப் பல் இளிப்பை மறுக்கும் ஆதாரமாகக் கையாளலாம். ஆனால் அதை ஒருபோதும் செய்யப் போவதில்லை. அதுதான் அசோகமித்திரனை அவமதிக்கும் செயலாகும். அதை நான் செய்யத் தயாரில்லை.இந்த எதிர்வினையில் தவிர்க்க வியலாமல் அசோகமித்திரன் பெயரைக் குறிப்பிட நேர்வது துரதிர்ஷ்ட வசமானது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக நான் தொடர்ந்து வாசிக்கும் முன்னோடி எழுத்தாளரும் தனது படைப்புகளின் வாயிலாக மானுட நன்மையின் சிறு அளவை யாவது எனக்குப் புகட்டியவருமாக நான் மதிக்கும் அசோகமித்திரனை ஏதேனும் விதத்தில் வருத்தப்படுத்தி யிருந்தால் இந்தப் பொது வெளியில் மன்னிப்புக் கோருகிறேன்.



                     அசோகமித்திரனுடன் . நாள் 22 4 2011



ன் இலக்கிய உலக நுழைவுக் கட்டங்களில் நான் ஆவேசமாக வாசித்த எழுத்தாளில் அசோகமித்திரனும் ஒருவர். மிக விரைவில் அபிமானத்துக்கு உரியவராக மாறினார். எங்களூர் கோவையில் மார்க்சிய அறிஞர் ஞானி ஓவ்வொரு ஆண்டும் மே மாத வாக்கில் முக்கியமான சமகால எழுத்தாளர் ஒருவரை அழைத்துக் கூட்டம் நடத்துவார். 1976 இல் சுந்தர ராமசாமி. 77 இல் அசோகமித்திரன். 

பத்தொன்பது வயதுப் பையனான நான் முதன்முதலில் வாசிப்பைக் கடந்து கட்டுரை எழுதியது அசோகமித்திரனைப் பற்றித்தான். அவருக்காக நடத்தப் பட்ட சிறப்புக் கூட்ட்த்தில் வாசிப்பதற்காக அதுவரை வெளிவந்திருந்த அவரது மூன்று நாவல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் ஊன்றிப் படித்து நான் எழுதிய கட்டுரையே எனது முதல் இலக்கியக் கட்டுரை. அதற்குக் கிடைத்த முதல் பாராட்டும் அசோகமித்திரன் வாயால்தான். உபரியாக்க் கிடைத்த ஷொட்டு - கட்டுரைப் பிரதியைப் பார்வையிட்டு அவர் சொன்ன வாசகம். ‘உங்க கையெழுத்து அழகா இருக்கு’.  நோட்டுப் புத்தகத் தாளில் முப்பது பக்கங்கள் வரும் அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி 18 ஆவது அட்சக்கோடுபற்றியது. ஞானி நட்த்திய ‘பரிமாணம்; இதழின் முதல் இதழில் அதைப் பார்க்கலாம்.அதன் பின்னர் சென்னை வாழ்க்கையில் அவரைப் பலமுறை கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன்.  நண்பர் மாமல்லனுடன் ஊர் சுற்றித் திரிந்து விட்டு சும்மா அசோகமித்திரனை அவர் வீட்டில் போய்ப் பார்த்த நாட்கள் அநேகம். பின்னர் குங்குமம் வார இதழில் பணியாற்றிய காலத்தில் ஒரு தீபாவளி இணைப்பிதழில் வெளியிட அசோகமித்திரனிடம் கட்டுரை கேட்டேன். தலைப்பு நான் சொன்னது. ‘எழுத்தாளருக்குப் பிடித்த ஐந்து படங்கள்’. தலைப்புக்கு உதவியவர் அன்று என் சக ஊழியராக இருந்த எஸ்.ராம கிருஷ்ணன். கட்டுரையை வாங்கி வந்தவரும் அவரே. (பார்க்க: அசோக மித்திரன் கட்டுரைகள் – 2. கிழக்குப் பதிப்பகம் பக்: 859 ) அதற்கு முன்பே அசோகமித்திரனுடன் ஏற்பட்டிருந்த மானசீக நெருக்கமே அவரைக் கட்டுரை எழுதச் செய்யலாம் என்று தூண்டியது. மலையாளக் கவிஞரும் நண்பருமான பாலசந்திரன் சுள்ளிக்காடின் முயற்சியில் கேரள மாநிலம் ஆலுவாயில் நடந்த ‘மானசோத்ஸவம்இலக்கியச் சந்திப்பில் அசோக மித்திரனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அன்று அவர் பேசியவை இன்றும் நினைவில் இருப்பவை. குறிப்பாக ஹெமிங்வேயையும் நார்மன் மெய்லரையும் பற்றிய அகப் பார்வை மிளிரும் பேச்சு. 1999 இல் நண்பரும் வங்காளக் கவிஞருமான அஞ்சென் சென் கேட்டுக் கொண்ட்தற்கிணங்க சென்னையில் வங்கக் கவிஞர் ஜீபனானந்த தாஸ் நூற்றாண்டு விழாவில் அவரை அழைத்து வந்து பேசவைத்தேன். நானும் கட்டுரை வாசித்தேன். அதில் சாகித்திய அக்காதெமி வெளியீடான ‘ஜீபனான்ந்த தாஸ் வாழ்க்கை வரலாறு தமிழாக்கத்தைப் பற்றிச் சொன்னதை – நவீன கவிதையின் முன்னோடியான ஜீபனானந்தா க. த. திருநாவுக்கரசின் மொழியாக்கத்தில் புராதனக் கவிஞராகத் தென்படுகிறார் – என்று நான் சொன்னதைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். ’’ திருநாவுக்கரசு அவர் துறையில பெரிய ஸ்காலர். நீங்க இப்படிக் கடுமையாச் சொல்லியிருக்க வேண்டாம்’’. அது ஒரு பாடத்தின் பயிற்சியாக மனதில் பதிந்தது. என்றென்றும் பின்பற்ற வேண்டிய அறிவுரையாகவே அதைக் கருதினேன். அசோகமித்திரனை அபிமானம் குன்றாமல் பார்த்த, சந்தித்த இன்னும் பல நாட்கள்  நினைவில் மங்காமல் இருக்கின்றன. இந்த ஞாபகப் பசுமைதான் அவருடன் விரிவான நேர்காணலை மேற்கொள்ள ஆதாரமான பின்புலம்.


நானாவது அசோகமித்திரனின் எளிய வாசகன். உடன் நேர்கண்ட நண்பர் தேவிபாரதி தீவிர அசோகமித்திரன் வாசகர். அசோகமித்திரன் தொலை பேசியில் பேசுகிறார் என்றால் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை விட்டு எழுந்து நின்று பதில் சொல்லும் அதிதீவிர வாசகர்.


அசோகமித்திரனின் ‘1945இல் இப்படியெல்லாம் இருந்தது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு மேடையில் அவர் பரவசத்துடனும் நெகிழ்ச்சி யுடனும் தழுதழுத்ததை இப்போதும் மறப்பதற்கில்லை. அசோகமித்திரனின் நூலை வெளியிடும் வாய்ப்பை தேவிபாரதிக்கு வழங்கியதே அசோக மித்திரன் தான். அதே மேடையில் வெளியிடப்பட்ட தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவலை வெளியிடக் கேட்டுக் கொள்ளப்பட்டவர் அசோகமித்திரன். ‘’  இந்த நாவலில் சமர்ப்பணம் எனக்கு என்று போட்டிருப்பதால் நானே வெளியிடுவது பொருத்தம் இல்லை. வேறு யாராவது வெளியிடட்டும். ஆனால் ஒன்று செய்யுங்கள். என்னுடைய புத்தகத்தை நீங்கள் வெளியிட்டு விடுங்கள்’’ என்று சொன்னவர் அசோக மித்திரன். ‘உங்கள் புத்தகத்தை வெளியிடத் தகுந்த ஆள்தானா நான்?’’ என்ற தேவிபாரதியின் கேள்விக்கு ‘அதெல்லாம் தகுதியான ஆள்தான்’’ என்பது அவரது பதில். இலக்கியச் செயல்பாட்டில் எல்லாரும் சமம் என்று அவர் கருதுகிறார் என்பதைச் சுட்டிக் காட்டியதாகவே பட்டது. தேவிபாரதி பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் அசோகமித்திரனும் நானும் மட்டுமே அமர்ந்திருந்தோம். இடையில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டு அதைக் கொண்டு வந்து கொடுத்த கண்ணனிடம் அசோகமித்திரன் ரகசியமாகச் சொன்னார். ‘ தேவிபாரதி புத்தகத்தைப் பற்றிப் பேசாமல் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். என் கதைகள் பிடிக்கவில்லை போலிருக்கிறது.’’ இந்த அப்பழுக்கற்ற அசோகமித்திரப் பகடிக்கு கண்ணன் சிரிப்பை எட்டக் கூடிய புன்னகை செய்தார். நான் சிரிப்பை அடக்க வாயைப் பொத்திக் கொண்டேன். நிகழ்ச்சி முடிந்த பின்னர் தேவி பாரதியிடம் இதைச் சொன்னபோதுஅவர் அடைந்த ஆனந்தத்தை எப்போதாவது அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டால் கூட அடைய மாட்டார் என்று தோன்றியது. அந்தச் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையும் இன்னொரு கதையும் காலச்சுவடில் அவர் பொறுப்பாசிரியராக இருந்தபோது வெளியாயின என்பதே தேவிபாரதியின் ஆனந்தத்துக்குக் காரணம். நேர்காணலில் அவரைpப் பங்கேற்கச் செய்யக் காரணமும் இந்த அபிமானமே.

இவ்வளவு விரிவாக இவற்றைக் குறிப்பிடுவதன் நோக்கம் எங்கள் தகுதிகளை உயர்த்திக் காட்டுவதல்ல; நாங்களும் ஆகிருதிகளாக்கும் என்று தமுக்கு கொட்டி முழக்குவதல்ல. இலக்கியத் தளத்தில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் அல்லது சக எழுத்தாளனுக்கும் இடையில் உருவாகும் மானசீக உறவை விளக்குவதுதான். பொதுவாக இலக்கியப் பரிமாற்றம், குறிப்பாக அசோகமித்திரனுடனான எங்கள் அணுகுமுறை என்ன என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான்.



இந்த நேர்காணலுக்கான முதல் யோசனை தேவிபாரதியுடையதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலச்சுவடு – பொறுப்பாசிரியராக அவர் இருந்த போதே முளைவிட்ட யோசனை. யோசனை தெரிவிக்கப்பட்டதும் அதை விரைவில் முடிக்குமாறு உந்திக் கொண்டிருந்தார் கண்ணன். வெவ்வேறு காரணங்களால் அதைச் செயல்படுத்துவது தாமதமாகிக் கொண்டேயிருந்தது. உதவாது இனி ஒரு தாமதம்என்று அதற்கு வேகத்தைக் கூட்டியது பெருந்தேவியும் நண்பர்களும் ஒருங்கிணைந்து சென்னையில் கடந்த ஜூன் மாதம் நடத்திய அசோகமித்திரனை வாசித்தல்நிகழ்ச்சி.


நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட கட்டுரைகளை வாசித்தபோது அசோகமித்திரனுடன் நேர் காணல் நடத்தும் எண்ணம் வலுப்பட்டது. தேவிபாரதியிடமும் இதைப் பற்றித் தெரிவித்தேன். இருவரும் அசோகமித்திரன் படைப்புகளை மறுவாசிப்பும் புது வாசிப்பும் செய்தோம். அதன் அடிப்படையில் நேர்காணலுக்கான கேள்விகளை உருவாக்கினேன். நேர்காணலில் கேட்பதற்காக ஐம்பது வினாக்கள்வரை தயார் செய்திருந்தேன். அதிலிருந்து முப்பது கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மின் அஞ்சலில் அந்தக் கோப்பைப் பெற்ற தேவிபாரதி கேள்விகளைப் பார்வையிட்டுச் சிலவற்றை நீக்கினார்; அவர் கேட்க உத்தேசித்திருந்த கேள்விகளைச் சேர்ந்தார்.


அந்தக் கோப்பு எனக்கு அனுப்பப்பட்டது. இருவருமாக தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடி இருபத்தைந்து கேள்விகள் இறுதி செய்யப்பட்டன. கால அளவைக் கருத்தில் கொண்டே எண்ணிக்கையை நிர்ணயம் செய்தோம். பேட்டியளிப்பவரின்  வயதையும் உடல்நிலையையும் கவனத்தில் கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவரைப் பேசவைக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் செய்யப்பட்ட நிர்ணயம் இது. அவரே மேற்கொண்டு பேச விரும்பினால் இன்னொரு அமர்வாக அதைச் செய்யலாம் என்றும் முடிவெடுத்தோம். காலச்சுவடு செப்டம்பர் 2014 இதழை ‘அசோகமித்திரன் சிறப்புப் பகுதியுடன்உருவாக்குவது என்று தீர்மானித்தேன். ஆசிரியர் கண்ணனிடமும் தெரிவித்து சம்மதம் பெற்றேன். கேள்விகளை அவர் பார்வையிட்டது அப்போது மட்டுமே. ‘அசோகமித்திரனை வாசித்தல் கருத்தரங்க்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் இரண்டைத் – பெருமாள் முருகன், பெருந்தேவி எழுதியவை- தேர்வுசெய்தேன். புதிய கட்டுரைகள் சிலவற்றையும் சேர்க்க விரும்பினேன். அதற்காக, அசோகமித்திரனின் நண்பரும் நெடுநாள் வாசகருமான லண்டன்வாழ் எழுத்தாளர் சச்சிதானந்தன் சுகிர்தராஜா, அசோகமித்திரனை நெருங்கி அறிந்த விமலாதித்த மாமல்லன். ‘தண்ணீர்நாவலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்த பி.கே.ஸ்ரீநிவாசன் ஆகியவர்களைத் தொடர்பு கொண்டேன். இது ஒருபுறம் இருக்கும் நிலையில் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு அசோகமித்திரனின் இசைவைப் பெற்றோம். அவருடைய புதிய கதை ஒன்று இடம் பெற வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்திருந்தேன். அவர் அனுப்பிய பதில் பின்வருமாறு:

அன்புள்ள சுகுமாரனுக்கு,

சிறுகதை கிடைத்து விடும். நேர்காணல் அவசியமா? அவசியம் என்று தோன்றினால் கேள்விகளை எழுதி அனுப்பினால் நான் பதில்களை அனுப்பி விருகிறேன். தாங்கள் வந்துதான் தீரவேண்டும் என்றால் ஆகஸ்ட் 9 அல்லது 10 சரியாக இருக்கும். ஆனால் தவிர்க்கப் பாருங்கள்.

அன்புடன்
அசோகமித்திரன்



மதிப்புக்குரிய படைப்பாளியுடன் உரையாடும் வாய்ப்பைத் தவிர்க்கவிரும்பவில்லை. (இதைக் காலச்சுவடு நேர்காணலின் முன்னுரையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறேன்). எனவே என்னை விடவும் அசோகமித்திரனுக்கு நெருக்கமானவரான தேவிபாரதியைத் தொடர்பு கொண்டு பேசினேன்.அவர் பேசி அசோகமித்திரனின் சம்மதத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்தே நேர்காணல் நடத்தப்பட்டது.


ந்த நேர்காணல் தொடர்பாக வெளிப்படையான ஒரே ஒரு நோக்கம்தான் எங்களுக்கிருந்தது. அவரது வாசகர்களாகவே அவரை மேலும் நெருக்கமாக அறிந்து கொள்ளுதல். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் செயல் பட்டு வருபவர் அவர். அவரது படைப்புகள் சில ஆயிரம் பக்கங்களாக வாசகர் முன்னால் விரியத் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் வாசகனுக்கு அவை பற்றித் தன்னுடையதான அபிப்பிராயங்களுக்கு வந்து சேரும் உரிமை இருக்கிறது. அதைப் போலவே அந்தப் படைப்புகளுக்குப் பின்னிருக்கும் அனுபவத் தூண்டுதல்களை அறிந்து கொள்ள விரும்பும் உரிமையும் இருக்கிறது. அதை வெளிக் கொணர்வதுதான் இந்த நேர்காணலின் நோக்கம் என்று வரையறுத்துக் கொண்டோம். அதைச் சார்ந்தே வினாக்களும் அமைந்தன. எழுத்தை வாழ்க்கையும் வாழ்க்கையை எழுத்தும் எந்தவகையில் பாதிக்கின்றன என்று அறியும் ஆர்வத்தைத்தான் அந்தக் கேள்விகளில் பார்க்க முடியும். அதைப் பொருட்படுத்திச் சொன்னதைத் தான் அந்த பதில்களில் பார்க்க முடியும்.அந்தக் கேள்விகளும் பதில்களும் வெளிப்படையானவை.


ஜெயமோகனின் வக்கிர தரிசனம்தான் அதற்கு இல்லாத உள் நோக்கங்களைக் கற்பிக்கின்றன. பாஷ்யங்கள் உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பேட்டி அளித்தவரின் முதுமை அவருக்கோ எங்களுக்கோ பொருட்படுத்தப்படக் கூடியதாக  இருக்கவேயில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேர உரையாடலில் அவர் பேச்சில் வெளிப்படுத்திய இளமை ததும்பிய உற்சாகம் வியப்பையே அளித்தது. இந்த வியப்பையும் நேர்காணலின் முன்னுரைக் குறிப்பில் சொல்லி இருக்கிறேன்.


சு.வெங்கடேசனையும் ஜோ டி குரூசையும் மேற்கோள் காட்டிப் பேசும் ஒருவரை, அர்விந்த அடிகாவின் நாவலை எடுத்துப் பேசும் ஒருவரை, இலக்கியபூர்வமான நித்திய இளைஞராகவே பார்த்தோம். அவரது முதுமையைத் தன்னுடைய விதண்டா வாதத்துக்குப் பக்கபலமாகக் காட்டுபவர் செய்வதல்லவா அவமதிப்பு? இந்த உண்மை விளம்பலுக்குச் சாட்சியாக மௌனியையும் நகுலனையும் பற்றி இழுத்து வந்து அம்பலப் படுத்தியதல்லவா அவமதிப்பு? தேசிய அளவிலும் தமிழ் அறிவுலக வரம்பிலும் சாதனையாளர்கள் என்றும் பங்களிப்பாளர்கள் என்றும் கருதப்பட்ட பல ஆளுமைகளை விஷமத்தனமான அபிப்பிராயங்களைச் சொல்லி அவமதித்த, அவமதித்துக் கொண்டிருக்கிற மகானுபாவர் யார் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றில்லையா?


ஜெயமோகனின் குறிப்பிலேயே அதை மீண்டும் பார்க்கலாம். டி. ஐ. அரவிந்தன்,  தேவிபாரதி எல்லாரும் வம்பர்கள். அவதூறு செய்பவர்கள். இவர்கள் எல்லாம் பூர்வாசிரமத்தில் சாதுவான பிள்ளைப் பூச்சிகளாகத்தான் இருந்தார்கள். எப்போது காலச்சுவடில் சேர்ந்தார்களோ அதற்கு அடுத்த நொடியிலிருந்து நச்சுப் பாம்புகளாகி விட்டார்கள். எல்லாம் இந்த அவதார புருஷனின் அருள் நோக்கிலிருந்து நீங்கியதால் வந்த கோளாறு. அப்படித்தானா? இந்தியா டுடே ஊழியராக இருந்து ஜெயமோகனின் எழுத்துகளை வெளியிட்டபோது டி. ஐ. அரவிந்தன் பணியாளர். அவரே காலச்சுவடு பொறுப்பாசிரியராக ஆனதும் ’’’ ஆசாமி ஆகிவிட்டார்’. சாமரம் வீசுபவராகி விட்டார். ஜெயமோகனிடம் வைக்கம் முகம்மது பஷீர் சிறப்புப் பகுதிக்காகக் கட்டுரை கேட்டு வாங்கி வெளியிட்ட தேவிபாரதி வம்பராகிவிட்டார். இந்தப் பிழைப்புவாதிகளின் பட்டியலில் சேர்ந்து நானும் ’சமகால இலக்கியத்தில் பெரும் வீழ்ச்சியை அடைந்து விட்டேன். எத்தனை பரிதாபம்? அதை விடப் பரிதாபமாக எனக்குப் படுவது ‘என் மானுட வீழ்ச்சியில் ஜெயமோகனுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலி’’‘. இந்தப் போலி அனுதாபமே என்னை அவமானப்படுத்துகிறது. ஜெயமோகன் என்ற சக எழுத்தாளர் மீது நான் இதுவரை கொண்டிருந்த குறைந்த பட்ச மரியாதையைப் பற்றி சுய அவமதிப்பை ஏற்படுத்துகிறது. கன்னக்கோல் திருடனின் சன்மார்க்க உபதேசம்போல அருவெறுப்பைத் தருகிறது.




ஜெயமோகனால் காலச்சுவடை அண்டிப் பிழைப்பவர்களாகப் பட்டியலிடப்படும் நான் உட்பட மூன்று பேரும் இந்த ‘ஆசாமி’ ‘ புறங்கையால் ஒதுக்கிவிடக் கூடியவர்களா? அரவிந்தன் கால் நூற்றாண்டுக் காலமாகவும் தேவிபாரதியும் நானும் கிட்டத்தட்ட நான்கு பதிற்றாண்டுக் காலமாகவும் நவீன இலக்கியச் சூழலில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். சிறிதோ பெரிதோ எங்களால் ஆன பங்களிப்பின் பேரில் அடையாளம் காணப்பட்டவர்கள்தான். சுய சிந்தனையையும் சொந்தக் கருத்து களையும் முன்வைத்துத்தான் இன்று எங்களுக்கு இருப்பதாக நாங்கள் நம்பும் இடத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த இடம் எங்களுக்கு இருக்கிறது என்பதானாலேயே  காலச்சுவடு எங்களை மதிக்கிறது. எங்களது பங்களிப்பை ஏற்கிறது. எங்களுக்கான சுதந்திரத்தை அளிக்கிறது. எங்களது வாசிப்பையும் நுண்ணுணர்வையும் இலக்கியத்தின் மீதான மரியாதையையும் எங்கள் எழுத்துக்களில் பார்க்க முடியும். அவை வாசகர்களின் ஊனக் கண்ணுக்குப் புலானகின்றன. ஜெயமோகனின் ஞானக் கண்ணுக்குப் புலனாகவில்லை என்பது எங்கள் குறையல்ல. ஆனால் புரையேறிய தனது கண்களில் தெரியும் குருட்டுப் பிம்பங்களை வைத்து முடிவு கட்டுவது அவருடைய அறப் பார்வை என்றால் என்ன செய்ய, ’ ‘ஐயோ பாவம்’’ ‘ , என்று இரக்கப்படுவதைத் தவிர.  

இது எங்கள் சார்பில் பேசப்பட்டதென்றாலும் பொதுவானது. நவீன தமிழ் இலக்கியச் சூழல் ஜெயமோகனை  மட்டுமே முன்னிருத்தியதல்லை. பொருட்படுத்தத் தகுதியான ஒற்றைப் படைப்பை எழுதிய ஆள் முதல் டன் கணக்கில் எழுதிக் குவித்தவர்கள்வரை சகலரின் பங்களிப்பும் சேர்ந்ததுதான். அவை நிலைபெறுவதும் பெறாமல்போவதும் காலத்தின் போக்காலும் வாசக ஏற்பாலும் தீர்மானிக்கப்படும். அதற்கான உரிமையை யாரும் ஜெயமோகனுக்குக் குத்தகைக்கு விடவில்லை. அவராகவே எடுத்துக் கொள்வதையும் அனுமதிப்பதற்கில்லை. அரவிந்தன் கதை எழுதினால் அது இலக்கிய உபாதை. தேவிபாரதி கதை எழுதினால் தெய்வீக இலக்கியம் என்ற நக்கல். இது விமர்சனமா என்ன? காழ்ப்பல்லாமல் இதை என்னவென்று சொல்வது? இவர் சமைப்பது மட்டுமே இலக்கியம் என்று நிர்ப்பந்திக்கும் திமிரும் ஆணவமும் எங்கிருந்து வருகிறது? இவருடைய கருத்துகள் தவிர, பிறர் கருத்துகளையும் பங்களிப்புகளையும் இகழும் அகந்தையை எப்படி அனுமதிப்பது?


என்னுடைய முன்னாள் பெருமை பற்றியும் இந்நாள் சிறுமை பற்றியும் ஜெயமோகன் வைக்கும் புலம்பல் செவி கைப்பதாக இருக்கிறது. காலச்சுவடுடன் எனக்குள்ள தொடர்பு சுந்தர ராமசாமி தொடங்கிய முதல் இதழிலிருந்தே ஆரம்பமாகிறது. ஜெயமோகனின் நோய்நாடிக் குறிப்பின்படி – டயாக்னோசிஸ் நோட் – என்னுடைய வீழ்ச்சி அன்றே ஆரம்பமாகி இருக்க வேண்டாமா? இருபத்தைந்து வருடமாகவா வெளியே தெரியாமல் இருந்தது? குறைந்த பட்சம் இவருடைய ‘வெள்ளை யானை’ நாவலைப் பற்றி ராஜ் கவுதமன் எழுதிய மதிப்புரையை நான் பொறுப்பேற்ற பின்னர் காலச்சுவடில் வெளியிட்டபோதாவது தெரிந்திருக்க வேண்டாமா? அந்தச் சமயத்திலும் கண்ணன் அதன் சர்வாதிகாரியாகவும் காலச்சுவடு வம்பு வரலாற்றைக் கொண்டதாகவும் தானே இருந்தது? ஏன் அப்போது பொங்கவில்லை?

அது எப்படி? அக்குளில் எதையோ இடுக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது அடுத்தவன் மேல் கல் எறிய முடியுமா? அவரைப் பற்றிய சிலாகிப்பாக இதழில் வந்தால் காலச்சுவடு புனித கிரந்தம். ஒற்றை வரி எதிராக வந்தால் காலச்சுவடு சதிகார ஏடு. காலச்சுவடு நேர்காணலில் இந்த நவீன வியாச மகரிஷியின் மகா பாரதத்தைப் பற்றி இரண்டு இடங்களில் அபிப்பிராயம் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லை என்றால் ஜெயமோகன் இந்த நேர்காணல் தொடர்பாக எதையும் சொல்லியிருக்க மாட்டார். இதை யூகிக்க வேறு எங்கும் போகவேண்டாம். ஜெயமோகன்.இன் பார்த்தால் போதாதா?

காலச்சுவடில் பணியாற்றுவது எனக்கு நேர்ந்திருக்கும் வீழ்ச்சி என்று வருந்துகிறார் ஜெயமோகன். என்ன கரிசனம். ஆனால், இதைக் கௌரவம் என்றே நான் நம்புகிறேன். விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் உண்மை இருக்கிறது. காலச்சுவடு இன்று தமிழில் பரவலாக அறியப்பட்ட பண்பாட்டுத் தளம். தவிர்க்கமுடியாத செயல்பாடு. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வெளியிலிருந்தும் சமீபத்திய ஐந்து ஆண்டுகளாகவும் நான் அவதானிக்கும் விஷயம் ஒன்று இருக்கிறது. காலச்சுவடுடன் தொடர்பு வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் விரும்பாத எழுத்தாளர் அரிது. காலச்சுவடு இதழில் படைப்பு வெளியாக வேண்டும் என்று முண்டியடிப்பவர்களையும் காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக நூல் வெளியாக வேண்டும் என்று நச்சரிப்பவர்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இது காலச்சுவடுக்கு மட்டுமே பிரத்தியேகமானதாக நான் பார்க்கவில்லை. ஒரு சூழலின் தேவையாகவே பார்க்கிறேன்.

காலங்காலமாக இதுபோன்ற பண்பாட்டுத் தளங்கள் உருவாகியிருக் கின்றன. சிற்றிதழ்களாகவும் சீரிய பதிப்பகங்களாகவும் அவை இருந்திருக் கின்றன.  இவையே சூழலில் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அந்த மாற்றங்கள் எவரோ ஒருவரிடம்  மையம் கொண்டு நடைமுறை ஆகின்றன. சி.சு.செல்லப்பா முதல் க்ரியா ராமகிருஷ்ணன், அன்னம் மீரா என்று வளர்ந்த ஒன்றுதான் இன்று காலச்சுவடாகவும் கண்ணனாகவும் வந்து நிற்கிறது. கண்ணனின் சாமார்த்தியம் சூழலை உருவாக்கவில்லை. சூழல்தான் சாமர்த்தியசாலியான கண்ணனைக் கண்டடைந்திருக்கிறது. இது நாளை மாறலாம். இதே அர்ப்பணிப்புடன், உழைப்புடன், புதிய நோக்குடன், ஒருங்கிணைப்புத் திறனுடன் வரும் ஒருவர் கையில் சேரலாம். ஏனெனில் கலாச்சாரத்தைப் பேணிக் காசு பார்ப்பதை விடவும் சீட்டித் துணி கிழித்துச் செல்வந்தனாகும் வாய்ப்பு கண்ணன் முன் இப்போதும் திறந்தே இருக்கிறது என்று நம்புகிறேன். நாற்பது ஆண்டுகளாக சீரிய இலக்கிய 
உலகில் உழல்பவன் என்ற முறையில் இந்த இடம் சரியானது என்றே நம்புகிறேன். என்னுடைய கருத்தையும் பார்வையும் திறனையும் மதித்துக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு வீழ்ச்சி என்றால் கோளாறு என்னிடமில்லை. அதற்காகப் பெறும் கௌரவமான ஊதியம்  ‘கஞ்சிக் கூலி’ என்றால் கேவலம் எனக்கில்லை. ஜெயமோகனே  இதைச் சொல்லக் கூசவேண்டும். ஏனெனில் நான் ஜெயமோகனின் சன்னிதானத்தில் உண்டைக் கட்டிக்கு யாசித்து நிற்கும் சிஷ்யப் பண்டாரமல்ல.

மற்ற எழுத்தாளர்களை சிறுமைசெய்து சுந்தர ராமசாமியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கமுடியாதென்பதையும் புரிந்துகொள்ளுங்கள். சுரா அவரது கருத்துக்களுக்காக, நூல்களுக்காக வாழட்டும். அவரது எழுத்துக்களுடன் சம்பந்தமேயற்ற உங்கள் சில்லறை வம்புகளால் அவர் வாழமுடியாது

ஜெயமோகனின் குறிப்பில் மிகக் கேவலமான பகுதியும் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ளும் பகுதியும் இதுதான். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதியும் பேசியும் கலந்துரையாடியும் செயல்பட்ட சுந்தர ராமசாமியின் ஆளுமையும் அவருக்கான வாசக ஏற்பளிப்பும் ஜெயமோகன் நப்பாசைப்படுவது போன்ற    கையறு நிலையிலா இருக்கிறது? பிற எழுத்தாளர்களைச் சிறுமைப்படுத்தினால் மட்டுமே நிற்கக் கூடிய தள்ளாட்டத்துடனா இருக்கிறது?.தன் காலத்தில் தனது எழுத்துக்களில் அவர் பரிந்துரைத்ததும் பொருட்படுத்திப் பேசியதும் மதிப்புரைத்ததும் ஊக்குவித்ததும் எத்தனை எழுத்தாளர்களை என்று அவருடைய கட்டுரைத் தொகுதியைப் பார்க்கும் வாசகனால் மிக எளிதில் புரிந்து கொள்ளமுடியும். சரியாகச் சொன்னால் சுந்தர ராமசாமியின் பிம்பத்தை ஊதிப் பெருக்குபவர் ஜெயமோகன் தான். காலச்சுவடு அதன் நிறுவனரைப் பற்றிப் பேசுவதைவிட அதிகம் பேசுபவர் ஜெயமோகன்தான்.அவரது இணையத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் எத்தனை கட்டுரைகளில் சுந்தர ராமசாமி இருக்கிறார் என்று பாருங்கள். அவரை மேற்கோள் காட்டியே எத்தனை கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். கையறு நிலையில் இருப்பது யார் என்பது தெளிவாகும். சுந்தர ராமசாமியின் பேருருவைக் கண்டு ஜெயமோகன்  குறுகி நிற்பது புலப்படும்.   

ஒரு பேச்சுக்காக ஜெயமோகன் சொல்வதை வைத்துப் பார்த்தால் அறுபது ஆண்டுக் காலமாக எழுதித் தனக்கான வாசகர் வளத்தைப் பெருக்கி வைத்திருக்கும் அசோகமித்திரனின் ஆளுமை அப்படிச் சிறுமைப் படுத்தி விடக் கூடியதா? அப்படிச் சொல்வது, சொல்வதென்ன, நினைப்பதே கூட அவரை அவமதிக்கும். இந்த அவமதிப்பைச் செய்வது யார்?  அப்படித் திட்டமிட்டெல்லாம் எந்த எழுத்தாளரையும் மகத்துவப்படுத்தி விட முடியாது என்பதுதான் இலக்கிய உலகின் மாற்ற முடியாத விதி.  சுந்தர ராமசாமியைப் பெரிதாகக் காட்டுவதன் மூலம் அசோகமித்திரனைச் சின்னதாக்கி விடுகிறார்கள் என்பது ஜெயமோகனின் நுண்ணுணர்வு இன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம். இரண்டு எழுத்தாளுமைகளும் ஒன்றல்ல; ஒன்றுக்கு ஒன்று சளைத்ததுமல்ல. இந்த எளிய உண்மை கொட்டன் சுக்காதித் தைலம் முதல் வியாச பகவானுக்கு ஏற்படும் பேன்கடிவரை பேசும் ஆன்மீகப் பேராசானுக்கு, இலக்கிய மகா குருவுக்கு எப்படிப் புரியாமல் போனது?



காலச்சுவடு பதிப்பகத்தின் நூற்பட்டியலில் அதிகம் விற்பனையாகும் நூல்களின் ஆசிரியர்கள் சிலரில் அசோகமித்திரனும் ஒருவர். அவரது ஏழு புத்தகங்கள் காலச் சுவடு வாயிலாக வெளியாகியிருக்கின்றன. இவற்றில் இந்த ஆண்டு வெளியான மூன்று புத்தகங்கள் தவிர பிற நூல்கள் குறைந்த பட்சம் இரண்டு பதிப்புகளும் அதிக பட்சம் ஆறு பதிப்புகளும் வந்திருக்கின்றன.  அதன் பொருள் காலச்சுவடு பதிப்பகத்துக்கு வருவாய் ஈட்டித் தருபவர்களில் அவரும் ஒருவர்.

‘சர்வாதிகாரி’யான கண்ணன் தனக்கு வரவுவரும் வாசலைத் தானே சாத்திக்கொள்ளும் காரியத்தைச் செய்வாரா? என்னையும் தேவிபாரதி யையும் ஏவிவிட்டு அசோகமித்திரனை அவமதிக்கும் சொந்தச் செலவில் சூனியம் வைக்கிற கைங்கரியத்தைச் செய்வாரா? மேற்சொன்னவற்றில் நான்கு புத்தகங்களின் நூலாக்கத்தில் என் பங்கு சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கிறது.அவற்றுக்குக் குறிப்புகள் எழுதியதும் சிலவற்றுக்கு முன்னுரை எழுதுவித்ததும் அவமதித்தலின் பாகம்தானா?


ஜெயமோகனின் தளத்தில் குறிப்பு வந்த நாள்முதல் இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினார்கள். சிலர் கூடவே கூடாது என்று அறிவுறுத் தினார்கள். இலக்கியச் செயல்பாட்டில் நான் ஆதாரமாகப் பின்பற்றும் நம்பிக்கைகளுக்கும் என் சுபாவத்துக்கும் ஏற்ப மௌனமாக இதைக் கடந்து செல்லவே விரும்பினேன். 


என்னதான் கனவானாகவே இருக்க முயன்றாலும் இந்தப் பொய்யின் விஷமுள் எனக்குள் வேதனையைத் தந்து கொண்டே இருந்தது. ஈடு பாட்டுடன் என் வேலைகளைச் செய்வதைத் தடை செய்து கொண்டே இருந்தது. பேசாமல் இருந்து விடுவது இந்த அத்துமீறலை அனுமதிப்பது ஆகும் என்றும்  அவசியமற்ற பழியைச் சுமப்பது ஆகும் என்ற உறுத்தல் ஓயாமல் இருந்து  கொண்டிருந்தது. ஒரு தரப்பை வைத்துப் பேசவே இந்த மௌனம் வழிகோலும் என்று எச்சரிக்கை உணர்த்தியது. என் தரப்பை விரிவாக வைப்பதே இதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஒரே வழி என்பதனாலேயே பேச விரும்பாப் பொருளைப் பற்றிப் பேச முற்பட்டேன். இப்படிப் பேச நேர்ந்ததைப் பற்றி வெட்டவெளியில் ஆடை களையப்பட்ட அவமானம் தோன்றுகிறது. மலக் கிடங்கில் கால்வைத்தது போன்ற அருவருப்பும் அசூசையும் இருக்கின்றன.


உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதும் கற்பனையான குற்றச் சாட்டுகளைச் சுமத்துவதும்  ஜெயமோகனின்  வாடிக்கை. சமீபத்திய இலக்கு நானும் அதற்கு முகாந்திரம் காலச்சுவடு நேர்காணலும். “பிறரை நிந்திக்கிறேன்; அதனால் இருக்கிறேன்’’  என்பது அவரது இருப்பு நியாயமாக இருக்குமோ என்னவோ? இலக்கிய, பண்பாட்டுத் துறைகளில் சாதனையாளர்கள் என்றும் பங்களிப்பாளர்கள் என்றும் கருதப்படும் பலரை மேம்போக்கான குற்றச்சாட்டுகள் மூலம், அவதூறுகள் மூலம் இழிவுபடுத்தி வந்திருக்கிறார் என்பது யாரும் அறியாததல்ல. அந்த ஆளுமைகள் அவதூறு செய்யப்படும் போது மௌனமாக இருந்தது பற்றியும் எனக்கு அதே அனுபவம் நேரிட்டதும் வருந்துவது பற்றியும் பொறுக்க முடியாத குற்ற உணர்வு என்னை கடந்த சில நாட்களாகவே உறுத்திக் கொண்டிருந்தது. இந்த உறுத்தலிலிருந்து விடுபட எண்ணியதும் எதிர்வினைக்கு இன்னொரு காரணம். கமலாதாஸ், அருந்ததி ராய், ஞாநி, மனுஷ்யபுத்திரன்,விடியல் சிவா,எஸ்.வி.ராஜதுரை ஆகியவர்களை இந்தப் பேராசான் அவமதித்த விதம் யாருக்கும் தெரியாததல்ல. 

அந்தத் தருணங்களில் அதை மறுத்துச் சொல்லத் தோன்றியும் அப்படிச் சொன்னால் மட்டும் அடங்கி விடுகிற நபரல்ல ஜெயமோகன் என்று தெரிந்ததனாலும் மௌனமாக இருந்திருக்கிறேன். அந்தக் கோழைத்தன மான உணர்வு இப்போது வெட்கத்தை அளிக்கிறது. அதை மீறவும்தான் இந்த எதிர்வினை. 


ஜெயமோகனின் இத்தகைய  கைங்கரியங்களைப்  பற்றி அவருக்கு அணுக்கமானவர்களே மறைமுகமாகக் குறை சொல்லியிருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால்  நட்புக்குக் குந்தகம் ஏற்பட்டு விடுமென்ற பெருந்தன்மையாலோ, சொன்னால் மட்டும் திருந்தவா போகிறார் என்ற அலுப்பாலோ, இதைச் சொன்னால் தமக்குக் கிடைக்கக் கூடிய நல் வாய்ப்புகள் நழுவி விடுமென்ற அச்சத்தினாலோ புறமுதுகுப் பேச்சுகளுடன் ஒதுங்கியிருக்கிறார்கள். நான் தொடர்ந்து வாசிக்கும் சம கால எழுத்தாளர் களில் ஒருவர் என்ற வாசக மரியாதையைத் தவிர ஜெயமோகனுடன் எந்த ஒட்டுறவும் எனக்கு இல்லை. அதனால் எந்த இழப்பும் இல்லை. 


ஆனால் இந்த எதிர்வினையை முன்வைக்கும்போது வேறொரு இழப்பைக் குறித்த அச்சம் எனக்கு இருக்கிறது. ஏறத்தாழ 40 ஆண்டுகளாக இலக்கியச் சூழலில் செயல்பட்டு வருகிறேன். அதன் விளைவாக கண்ணியமான ஓர் உயர்நிலை – stature –அமைந்திருப்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். இதுவரை எனது எழுத்துக்கள் மூலமாக அல்லாமல் வேறு எந்த உபாயத்தின் மூலமாகவும் என்னை முன்னிருத்தியது இல்லை. என் இயல்புக்கும் இதுவரை பின்பற்றி வந்த உறுதிப் பாட்டுக்கும் மாறாகவே இந்த எதிர்வினையில் ஈடுபட நேர்ந்திருக்கிறது. அது அந்த ஸ்டேச்சரைப் பாழடித்து விடக் கூடாது என்ற பெரும் பயம் எனக்கு இருக்கிறது.



காலச்சுவடு நேர்காணல் மகத்தானது என்றோ ஆகச் சிறந்தது என்றோ எனக்கு அபிப்பிராயமில்லை. நேர்காணப்படும் ஆளுமை வெளிப்படாத எந்த நேர்காணலும் பயனற்றது என்ற அழுத்தமான உணர்வு எனக்கு இருக்கிறது. எடுத்து எழுதியதில் ஏற்பட்ட சேதாரங்களைக் கணக்கில் கொண்டாலும் கூட இந்த நேர்காணல் சரியான பதிவு என்றே நம்புகிறேன். நேர்காணப் பட்டவரின் ஆளுமையைக் காட்டக் கூடியதே  என்று நம்புகிறேன். 


காலச்சுவடின் பொறுப்பாசிரியராக நான் வெளிக்கொண்டு வந்த - 2013 ஜுலை முதல்  2014 நவம்பர்பர் வரையிலான - 17 இதழ்களில் மிக அதிக வாசகர் கடிதங்களைப் பெற்றது 2014 செப்டம்பர் இதழ்தான். அதற்குக் காரணம் அசோகமித்திரனின் நேர்காணலே. இலக்கிய நண்பர்களின் சந்திப்புகளிலும் உரையாடல் களிலும் பேசப் பட்டது. சமூகத் தளங்களிலும் இணைய வெளியிலும் அதிகம் பகிர்ந்து கொள்ளப் பட்டது. அசோகமித்திரனை வாசிப்பதற்குத் துணையாகவும், சிலரிடம் தொடக்கமாகவும் அமைந்தது. இதற்காகவே செயல்பட்டோம்; அதில் ஓரளவாவது வெற்றியடைந்திருக்கிறோம். இந்த முதன்மையான நோக்கத்தைத் தவிர நேர்காணலை ஒட்டிச் சொல்லப்படும் குற்றச் சாட்டுகளும் கற்பிக்கப்படும் உள் நோக்கங்களும் சந்தர்ப்பவாதமானவை. தந்திரமும் கபடமுமானவை. அவை கிஞ்சிற்றும் பொருட்படுத்தப்பட வேண்டியவை அல்ல. 

இந்த விவகாரத்தில் என்னுடைய ஒரே எதிர்வினை இந்தப் பதிவு. இதுவே முதலாவதும் இறுதியானதும். பொய்க்கால் குதிரைகளுக்குக் கொள்ளும் தண்ணீரும் வைப்பது என் வேலை அல்ல.