வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பெயரிலும் இருக்கிறது.






''ஏம் மந்திரி, ஒன்ற பேரே மந்திரிதானா?'' என்று அவனைக் கேட்டிருக்கிறேன். ஒன்றல்ல பலமுறை.

''ஆருக்கு சாமி தெரியும்.  எப்பப் பொறந்தோமுன்னும் ஆரு பேரு வெச்சாங்கன்னும் யாபகத்துல வெச்சுக்க நாம் என்ன பெரிய சாதிப் பொறப்பா? ஏதோ பேருன்னு ஒண்ணு. '' என்று பதில் சொல்வான். அதில் வருத்தமோ ஆற்றாமையோ இருக்காது.விதியைச் சகித்துக் கொள்ளும் உணர்ச்சியின்மை தெரியும்.

மந்திரிக்கு மந்திரி என்ற பெயரைத் தவிர வேறு பெயர் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அவனுடைய குலத்தில் ஏதோ  முன்னோடியின் பெயராம்.ஆனால் அந்தப் பெயரில் யாரும் அவனை அழைத்தது கிடையாது. சின்னப் பையன்கள் முதல் முதிர்ந்தவர்கள்வரை அவனை 'ஏ. சக்கிலியா' என்று கூப்பிட்டுத்தான் கேட்டிருக்கிறேன். மந்திரியை மந்திரி என்று அழைத்ததில்லையே தவிர அவனுடைய மனைவி மக்களை அந்தப் பெயரின் ஒட்டாகத்தான் கூப்பிடுவார்கள்.'மந்திரி பொண்டாட்டி, மந்திரி பையா, மந்திரி புள்ளே' என்று அவன் குடும்ப நபர்கள் அழைக்கப் பட்டார்கள். அவர்களுக்குத் தனியாகப் பெயர்கள் இருந்தனவா என்று கூடத் தெரியவில்லை.

அவன் எங்கள் பகுதி நகர சுத்தித் தொழிலாளி. எங்கள் பகுதியில் இருந்தவை ஆள் வந்து எடுக்கும் கழிப்பறைகள். மந்திரிக்கு ஒதுக்கப் பட்டிருந்தவை குறைந்த பட்சம் ஐநூறு வீடுகள். எல்லா வீட்டுக் கழிப்பறைகளும் வெயில் காலத்தில் உலர்ந்து நாறும். மழை நாட்களில் நிரம்பி வழிந்து அருவருப்பு ஏற்படுத்தும் .மந்திரி ஒருநாள் வராமல் போனால் ஊரே நாறித் தொலைக்கும்.   எனக்குத் தெரிந்து ஒருநாளும் அவன் வராமல் போனது இல்லை. அபூர்வமாக வராமல் போகும் நாட்களிலும் அவன் மனைவியோ, மகனோ, மகளோ வந்து மலத்தை அள்ளித் துப்புரவாக்கியிருப்பார்கள்.

மந்திரிக்கும் எனக்குமான மானசீக நெருக்கம் அவன் எனக்குச் செய்த உதவியில்  தொடங்கியது. பள்ளிப் பருவத்தில் ஒருநாள் முற்பகல் உடம்பு சரியில்லை என்று பாதியிலேயே வீட்டுக்குத் திரும்பினேன். பஸ் ஏறி வீடு வந்து சேரும்வரை நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு என்னுடைய நிறுத்தம் வந்து பஸ்ஸை விட்டு இறங்கியதும் சுழல ஆரம்பித்தது. வழியில் விழுந்து விடுவேன் என்ற பயத்தில் தெருவோர டீக்கடை அருகில் ஒண்டி நின்றேன். பயனில்லை. கண்கள் மங்கிக் காட்சிகள்  எல்லாம் நிழல்களாக நெளியத்  தொடங்கின. ஏதேதோ நிழல்கள் கண் முன்னால் நகர்வது தெரிந்தது. ஒரு நிழற் கை நீண்டு வந்து ஒரு கிளாஸ் தண்ணீரை நீட்டியது. அதை குடித்தது ஞாபகமிருந்தது. மறுபடியும் கண்விழித்த போது வீட்டின் முன் அறையில் கிடந்தேன். என்ன நடந்திருக்கும், யார் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். முன் அறையின் கம்பித் தடுப்புக்கு அந்தப் பக்கம் உருமாலை கட்டிய மந்திரியின் தலை தெரிந்தது. ''இப்பத் தேவலாங்களா, சாமீ'' என்று விசாரித்தான். நன்றி கலந்த ஜுரப் புன்னகையுடன்  தலையசைத்தேன்.

குரல் கேட்டு முன் வாசலுக்கு வந்த அம்மாவிடம்'' பஸ்ஸுலேர்ந்து சாமி எற்ங்கி வந்து ஒலிம்பஸ் கடைக்குட்ட உளுந்திருச்சிங்க சாமி. நாந்தே தண்ணி வாங்கிக் குடுத்தே''என்று வியாக்கியானம் சொன்னான்.

அம்மாவின் முகம் கறுப்பதைப் பார்க்க முடிந்தது. வெளியில் ஊற வைத்த ஏதோ தானியத்தைக் காயப் போட்டுக் காவல் உட்கார்ந்திருந்த வீரப்பத் தேவர் மனைவி எழுந்து நின்றதை தடுப்பு வழியாகப் பார்க்க முடிந்தது. '' உமாம்மா, இதென்ன அக்குருமமாருக்கு. சக்கிலியப் பயங் கையால தண்ணி வாங்கிக் குடிக்கறது நல்லாவா இருக்கு. ஏண்டா சக்கிலிப்பையா,  ஒனக்கு என்ன புத்தி கெட்டுப் போச்சா?'' என்று அம்மாவிடமும் மந்திரி யிடமும் சொன்னது மறைமுகமாக என்னைக் குத்தியது. காய்ச்சல் கீழே தள்ளும் உடம்பைச் சேகரித்துக் கொண்டு எழுந்தேன்.

'' அவங் குடுத்தது சிறுவாணித் தண்ணி தானுங்க. அதுல சக்கிலின்னு ஒண்ணும் எளுதல'' என்றேன். அம்மா '' சும்மா இருடா'' என்று அதட்டினாள். மந்திரி எதுவும் நடவாததுபோல ''சாமீ. பளயது இருந்தாப் போடுங்க'' என்று சமாதானமாக நடந்தான். எனக்குத்தான் காது மடல்கள் எரிந்து கொண்டிருந்தன.

இரண்டு விதமான அழைப்புகளால் மந்திரி தன்னுடைய வருகையை அறிவிப்பான். காலையில் மலம் நிறைந்த வாளியைச் சுமந்து வந்து பொடக்காலிக் கதவைத் தட்டி'' கக்கூசுக்குத் தண்ணி ஊத்துங்க சாமீயோவ்'' என்பான். நண்பகல் வாக்கில் அலுமியச் சட்டியுடன் '' பளயது இருந்தாப் போடுங்க'' என்று நிற்பான். எப்போதாவது இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் '' சாமீ. டீத்தண்ணி ஊத்துங்க'' என்றும் வருவான். அவனுக்குத் தேநீர் ஊற்றுவதற்காகவே வீட்டின் பின்கட்டு எறவாணத்தில் ஒரு தேங்காய்த் தொட்டி இருக்கும். அதில்தான் தேநீரை வாங்கிக் குடிப்பான். தேநீர்  சூடாக இருக்க வேண்டும். குடிக்கிற சூட்டில் அல்ல. ஆற்றாமல் அப்படியே கொதிக்கிற சூட்டில் இருக்க வேண்டும். அதைப் பச்சைத் தன்ணீர் குடிப்பதுபோல மடக்கு மடக்கென்று நொடி நேரத்தில் காலி பண்ணுகிற வேகம் ஆச்சரியப் படுத்தும். குடித்து முடித்ததும் சிரட்டையைக் கழுவி மறுபடியும் எறவாணத்தில் சொருகி வைப்பான்.

எனக்கு நீர் வார்த்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதை மாற்றினேன். தேங்காய்ச் சிரட்டைக்குப் பதிலாக ஒரு இண்டாலியம் தம்ளரை அங்கே வைத்தேன். அதன் கத்தரிப் பூ நிறமும் வெள்ளியாகத் தெரியும் பூ வலைப்பாடுகளும் இப்போதும் கண்களுக்குள் தெரிகின்றன.  தம்ளர் பெரியது. '' உன்னாலே பாரு, அவனுக்கு அரைப்படி டீ வெக்க வேண்டியிருக்கு'' என்று அம்மா செல்லமாகச் சலித்துக் கொண்டாள்.

ஒரு மழைக்கால விடுமுறை தினத்தில் முதல் முறையாக அந்தத் தம்ளரில் நான் தான் தேநீரை ஊற்றிக் கொடுத்தேன். இரண்டு கைகளாலும் அதை வாங்கிக் கொண்டு '' அத அங்கியே வெச்சிருக்கலாமே சாமீ'' என்று கூச்சத்துடன் அவன் நெளிந்தான். அந்தக் கூச்சம் உறுத்தியது. ஆவி பறக்க அதைக் குடிக்கும்போது தம்ளரின் விளிம்புக்குமேல் தெரிந்த அவன் கண்கள் நீர் ததும்பிப் பளபளத்தன. காரணம்  அதிகச் சூடாக இருந்திருக் கலாம். இல்லை.அவன் வழக்கமாகக் குடிக்கும் சூடுதான் அது.

அந்தரத்தில் எங்கிருந்தோ வருவதுபோலத்தான் மந்திரியின் வாழ்க்கை. அவனும் அவனுடைய மொத்தக் குடும்பமும் நகராட்சிப் பணியாளர்கள். ஆனால் சம்பளம் வழங்கப்பட்டது அவனுக்கு மட்டும்தான். கருக்கலிலேயே மொத்தக் குடும்பமும் எங்கள் பகுதிக்கு வந்து விடும். இரண்டு சக்கரங்கள் வைத்து துத்தநாகப் பீப்பாய் பொருத்திய வண்டியை நகராட்சி அலுவலகத் திலிருந்து அவர்களில் ஒருவர் தள்ளிக் கொண்டு வருவார்கள்.மற்றவர்கள் கையில் துடைப்பமும் வாளியும் மலத்தை அள்ளுவதற்கான தகர முறமுமாக அவரவர் பகுதிக்குப் பிர்ந்து போவார்கள். பகலில் வேலை முடிந்தாலும் இரவுவரை அந்தக் குடும்பம் எங்கள் வட்டாரத்திலேயே இருக்கும். குறிப்பாக எங்கள் தெருவில். கடைசி பஸ்ஸில்தான் வீடு திரும்புவார்கள். மற்ற சமயங்களில் பஸ்ஸில் ஏற  அவர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். 'ஒசந்த மனிதர்கள் போகிற வேளையில் சின்ன சாதிக்காரன் எப்படிப் போக?' வெகு காலத்துக்குப் பிறகுதான் அவர்கள் அன்று நகரத்தின் விளிம்பாகக் கருதப்பட்ட லங்கர்கானா பகுதியிலிருக்கும் காலனியிலிருந்து வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தேன்.

நான் வளர்ந்து வந்த காலம் அப்படியொன்றும் சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடிய காலமல்ல. கல்வி வாய்ப்புகளும் நாகரிக சௌகரியங் களும் மெல்ல மெல்லப் பரவலாகிக் கொண்டிருந்த காலம். இருந்தும் கண்ணுக்குத் தெரியாமல் வேற்றுமைகள் மனிதர்களை தீண்டத் தகாதவர் களாகவே விலக்கிக் கொண்டிருந்தன. மந்திரியுடன் நான் சிரித்துப்  பேசுவதைப் பார்த்து நட்பையே முறித்துக் கொண்ட நண்பன் அதை நிரூபித்தான். ஆனால் எனக்கு வயது ஆகஆக மந்திரிக்கு என் மீதான அன்பு மரியாதையாக மாறிக் கொண்டிருந்தது. 'சாமீ' என்ற அழைப்பு மாறி 'பண்ணாடி'என்று ஆனது. அவன் அப்படி அழைக்கும்போதெல்லாம் அருவருப்பாகத் தோன்றும்.

'பண்ணையமே இல்லாத ஆளு எப்புடி மந்திரி பண்ணாடி ஆகுறது?' என்று கேட்டிருக்கிறேன். 'வூடு வாசல் இல்லாத நானு மந்திரியானாப்ல தாஞ்சாமி'' என்ற அவனுடைய பதில் சிரிப்பூட்டியது.

ஆனால் மந்திரி தன்னை ராஜாவாகக் கொண்டாடிக் கொள்கிற சந்தர்ப்பங் களையும் கவனித்திருக்கிறேன். மாரியம்மன்திருவிழாவில் சில சமயம் தப்பட்டை அடித்துக் கொண்டு வருவான். போதையில் கால்கள் பின்னினாலும் கைகள் தப்பட்டையில் கணக்குப் பிசகாமல் விழும். டண்டணக்கு டணக்கு டா, டணக்குணக்கு டணக்கு டா என்று தாளக் கட்டுகள் அவிழும்போது அவன் லயச் சக்ரவர்த்தியாகத் தோன்றுவான். அவன் முகத்தில் கலைஞனின் கர்வம் தெரியும். அதே மந்திரி மப்பு அதிகமாகப் போனால் பாடகனாகவும் மாறிவிடுவான். ஒரே பாட்டைத்தான் பாடுவான். அதுவும் ஏதோ பழைய தெலுங்குப் படத்தின் பாட்டு.' அந்தமே ஆனந்தம், ஆனந்தமே ஜீவித மகரந்தம்' என்று உச்ச குரலில் ஒலிக்கும். கூடவே அவன் மனைவியும் சேர்ந்து கொள்வாள். அவள் மேலான அவனுடைய பிரியம் எப்போதும்  வெளியே தெரியும் சங்கதித்தான். 'பிட்டா'  (குழந்தை) என்றுதான் அவளை அழைப்பான். சாராயத்தில் கிறங்கி இரண்டு பேரும் ஜோடிப் பாடகர்களாக மாறும்போது அந்தப் பிரியத்துக்கு சங்கீத சௌக்கியம் வந்து விடும்.

நீண்ட காலத்துக்குப் பிறகு வேலை நிமித்தமாக ஆந்திராவில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம்,மந்திரியின் அபிமானப் பாடல் காற்றில் அலைந்து வந்தது. 'அந்தமே ஆனந்தம்'. கண்டசாலாவின் குரல். யாரிடமோ விசாரித்து விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.மந்திரிக்குத் தெலுங்கு தெரியும் என்பது வாஸ்தவம். ஆனால் தெலுங்கு சினிமாவின் எவர் கிரீன் பாடல் கோயமுத்தூரில் வசிக்கும் அவன் நாக்கில் எப்படிக் குடியேறியது என்று   புரியவில்லை. கண்டசாலாவின் பாட்டை மந்திரி ஏன் நாகூர்  அனீபாவின் குரலில் பாடுகிறான் என்ற மர்மமும் புரிய வில்லை.

நகராட்சி ஊழியன். ஆனாலும் மந்திரி அநேக வீடுகளுக்கு வேலைக்காரனா கவும் இருந்தான். கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது தவிர சாக்கடை அடைப்பை நீக்குவது, கிணறுகளிலோ நீர்த் தொட்டிகளிலோ விழுந்து சாகும் ஜீவன்களின்  சடலத்தை அப்புறப்படுத்துவது எல்லாம் அவனுடைய குறுந் தொழில்களில் அடங்கும்.

அப்போது எங்கள் வீட்டில் மாடுகள் இருந்தன. அவற்றைப் 'பலனுக்குக் கொண்டுபோக' உதவி செய்வது மந்திரிதான்.  நானும் கூடவே போன ஒருமுறை கேட்ட கேள்விதான் என் பூப்பெய்தலின் முதல் அடையாளம். இரண்டு கட்டை வேலிகளுக்கிடையில் நிற்க வைத்த எங்கள் பசு லட்சுமியின் மீது கந்தசாமி தோட்டத்துக் காளை ஆவேசமாகத் தாவி ஏறியது. லட்சுமியும் நானும் ஒரே சமயத்தில் பயந்து கூச்சல் போட்டோம் . அது 'ம்ம்மோவ்' என்றும் நான் 'அய்யோ' என்றும் . 'மந்திரி அந்தக் காள எதுக்கு அப்புடிப் பண்ணுது' என்ற கேள்விக்கு அப்பா 'சும்மா இருடா' என்றார். 'அது அப்படித்தான் சாமீ. மனுசங்க கலியாணம் மாரியா மாட்டுக்குக் கலியாணம்' என்றான் மந்திரி. மாடுகளின் சாந்தி முகூர்த்தத்துக்கு மட்டுமல்ல அவற்றின் பிள்ளைப் பேற்றுக்கும் மந்திரியின் சகாயம் தேவைப்பட்டது. பிறந்து மன்ணில் விழுந்த கன்றைக் குளிப்பாட்ட, தாய்ப் பசுவின் சினை நஞ்சை மூட்டைக் கட்டி எடுத்துப்போய் ஏதாவது பால்வடியும் மரத்தில் கட்ட எல்லாம் மந்திரிதான் தேவைப்பட்டான். அபூர்வமாகச் செத்துப் போன கன்றை எடுத்துப் போகவும் அவன் தான் வந்தான். அன்றைய அவனும் குடும்பமும் லங்கர்கானாவுக்குப் போகவில்லை. அந்த இரவு மாட்டிறைச்சி விருந்துடன் அமர்க்களப் பட்டதாக அம்மாவிடம் சொன்ன போது மாட்டையும் மனிதர்கள் உண்பார்கள் என்ற புதிய தகவல்  தெரிய வந்தது.

வீட்டின் பின்பக்கம் நெல்லி மரமிருந்தது. அதன் இலைகள் எப்போதும் உதிர்ந்து கழிவு நீர் வழிகள் அடைத்துக் கொள்ளும். மரத்தை வெட்டி விடச் சொன்னபோது மந்திரி நடுங்கினான். அது அவர்கள் குல தெய்வமாம். ஏதோ காலத்தில் அவர்கள் குலத்தில் பிறந்த ஒரு பெண் இறந்த பின்பு நெல்லி மரமாக மாறினாளாம். அதனால் அதை வெட்டக் கூடாது. தப்பு என்றான். நெல்லி மரத்தின் பெயரைக் கூட அவன் உச்சரித்ததில்லை. அவன் உச்சரிக்க மறுத்த இன்னொரு பெயர் எம்.ஜி.ஆர். 'அது சாமியோட பேருங்க' என்பான். எம்.ஜி.ஆர்.அவனைப் பொருத்தவரை நடிகரல்ல. கடவுள்.மதுரை வீரன்.

ஒரு மனிதனின் வயது முதிர்ச்சியை அப்பட்டமாகப் பார்த்தது சிலரிடம். அதில் மந்திரியும் உண்டு. அவனுக்கு நாள் தோறும் வயதாகிக் கொண்டிருந்தது. நான் பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிப் பருவத்துக்கும் உத்தியோக பருவத்துக்கும் மாறினேன். அவனுக்கு என்னை எங்கே பார்த்தாலும் ஒரே கோரிக்கைதான் இருந்தது. ''ஆக்கு பாக்கு தீசேனிக்கு டப்பு ஈயண்டி சாமியோவ்'' என்ற கோரிக்கை. வெற்றிலை பாக்கு வாங்கக் காசு என்பதைத் தவிர அவனுக்குக் கேட்க  எதுவுமில்லை என்றுதான் நினைத்திருந்தேன் என் திருமணம் முடியும்வரை.

திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் பஸ் நிறுத்தத்தில் மந்திரியைப் பார்த்தேன்.''சாமி, கலியாணத்துக்கு ஒரு வாய்க் கஞ்சி ஊத்தல சாமி'' என்றான். உள்ளே ஏதோ நாடி அறுபட்டதுபோல இருந்தது. வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டேன். ''அதனால என்ன சாமீ. வெத்தல பாக்கு வாங்கக் காசு குடுங்க'' என்று வழக்கமான கோரிக்கைக்கு வந்தான். கொடுத்தேன். எனினும் என்னமோ குறையாக இருந்தது. ''மந்திரி இங்கதான் இருப்பே?'' என்று கேட்டேன்.

''சாமிக்குத் தெரியாதுங்களா, நா வேற எங்க போக?''

பக்கத்திலிருந்த ஜவுளிக்கடையில் ஒரு சட்டைத் துணியும் சேலையும் வாங்கினேன். அதை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தேன். காக்கிச் சீருடையைத் தவிர வேறு எந்த உடையையும் அவன் அணிந்ததில்லை. வீடுகளிலிருந்து  கொடுக்கும் பழைய சேலையைத் தவிர வேறு எதையும் அவன் மனைவி உடுத்தியதில்லை. இரண்டும் தெரியும். அதை அவர்கள் உடுத்தாமலிருக்கவும் கூடும் என்பதும் தெரியும். எனினும் எனக்கு அப்படிச் செய்யத் தோன்றியது. கூச்சத்துடன் அதை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு '' இதி எந்துக்கு சாமீயோ?'' என்றான். அதைச் செய்வதற்கு எனக்கு அந்தரங்கமான காரணம் இருந்தது.

எப்போதோ ஒருமுறை மந்திரியிடம் கேட்டேன். தெருவில் ஏராளமான வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் பையன்கள் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் வெற்றிலை வாங்கக் காசு கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன்?

'' கேக்கலாம் சாமீ, அவுங்க குடுப்பாங்க. இந்தாடா சக்கிலியான்னு சொல்லிகிட்டுக் குடுப்பாங்க. அதை எப்டி சாமீ வாங்கறது. இன்னி வரைக்கும் நீ என்னெயெ சக்கிலியான்னோ வாடா போடான்னோ சொன்னதில்ல. அதாஞ் சாமீ ஒன்ற கிட்ட கேக்குறன்'' என்றான். எனக்கு ஒரு நொடி பெருமிதமாக இருந்தது. ஆனால் அடுத்த நொடி உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டிருந்த நிஜம் சுட்டது. இல்லை. நானும் அவனைச் சாதிப் பெயரால் குறிப்பிட்டிருக் கிறேன். ஒரே ஒரு முறை. பதினாலோ பதினைந்தோ வயதில். தள்ளாட்டத் துடன் வீடு திரும்பிய அப்பாவை மந்திரி அழைத்து வந்த ஒரே ஒருமுறை. சக்கிலியன் கூட்டிக் கொண்டு வந்து விடுகிற அளவுக்குக் கேவலமாகவா போனீர்கள் என்று அப்பாவைக் கேட்டிருக்கிறேன். அப்பா மேலிருந்த ஆத்திரத்தில் செய்த சொற் குற்றம் அது. பின்னணி என்னவாக இருந்தாலும் குற்றம் குற்றம்தானே?

@




























சூரிய நெல்லிப் பெண்


                                                                                           Photo courtesy The New Indian Express


லையாளத்தில் ஒளிபரப்பாகும்  இரண்டாவது தனியார் தொலைக்காட்சியில் தலைமைச் செய்தி ஆசிரியராகச் சுமார் பத்தாண்டுகள் பணியாற்றினேன். தினம் இரண்டு நாளிதழ்களையாவது அக்குளில் இடுக்கிக் கொண்டு நடமாடும் மலையாளிகளின் கவனத்தைத் தொலைக்காட்சிச் செய்திகள் பக்கம் திருப்பத் தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. அன்றாடச் செய்திகளை ஒளிபரப்புவதால் மட்டும் அவர்களை ஈர்க்க முடியாது என்று சீக்கிரமே புரிந்தது. எங்கள் தொலைக்காட்சி வருவதற்கு முன்னால் , 1998 ஆம் ஆண்டுக்கு முன்னால்,கேரளத்தில் நடந்த சம்பவங்களின் ஃபாலோ - அப் செய்திகளில் அக்கறை காட்டினால் பார்வையாளர்களைத் திருப்ப முடியும் என்ற உத்தி தோன்றியது. பழைய செய்திகளைப் புதியகாட்சிகளுடன் ஒளிபரப்ப முடிவு செய்தேன்.

காவல்துறையினரால் என்கௌண்டரில் கொல்லப்பட்ட வர்கீஸ் என்ற நக்சலைட் போராளி தொடர்பான வழக்கு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருந்தது. அவர் மோதலில் கொல்லப்படவில்லை கட்டிவைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகத்தை எழுப்பினோம். பத்திரிகைகளும் அதே அலைவரிசையில் மறு விசாரணையைத் தொடங்கின. என்கௌண்டர் குழுவில் இருந்த கான்ஸ்டபிள் ராமசந்திரன் நாயர் 'அது மோதல் மரணமல்ல; திட்டமிட்டு நடத்திய படுகொலை' என்று வாக்குமூலம் கொடுத்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மனதைக் கிழித்துக் கொண்டிருந்த உண்மையை பகிரங்கப் படுத்தினார். வர்கீஸ் வதம் மீண்டும் செய்தியானது. மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. ராமச்சந்திரன் நாயர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளானார்.அதற்கிடையில் ராமச்சந்திரன் நாயர் காலமானார். அவரது உண்மை வெளிப் படுத்தல் புத்தகமாகவும் வெளிவந்தது. ( அதன் தமிழாக்கம் 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி' என்ற பெயரில்
மக்கள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழாக்கம்; குளச்சல் மு யூசுப்). புத்தகத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் 'தலப்பாவு' என்ற திரைப்படமும் வெளிவந்தது.

வர்கீஸ் வழக்கு செய்தியாக ஒளிபரப்பானதில் கிடைத்த வரவேற்பால், மறதியில் புதைந்திருந்த வேறு வழக்குகளையும் தோண்ட ஆரம்பித்தோம். எங்கள் தொலைக்காட்சி தொடங்குவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு சூரிய நெல்லிப் பெண்ணை மையமாகக் கொண்டது. இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவி கடத்தப்பட்டாள். ஒரு மாத காலத்துக்கும் மேலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இழுத்துச்செல்லப்பட்ட அந்தச் சிறுமியை நாற்பத்திரண்டு பேர் கூட்டாக வன்புணர்ச்சி செய்து சிதைத்தார்கள். காரியம் முடிந்ததும் பெண்ணை அவளுடைய தகப்பனார் பணியாற்றிக் கொண்டிருந்த தபால் அலுவலகத்தின் வாசலில் அநாதையாக விட்டுப் போனார்கள். உடலும் மனமும் கிழிபட்ட நிலையில் அந்தச் சிறுமி வீட்டுக்குள் ஒடுங்கினாள். பின்னர் உண்மை வெளிவர ஆரம்பித்தது. வழக்குத் தொடரப் பட்டது. கேரளத்தின் நீதித் துறை வரலாற்றில் பாலியல் குற்றங்களை விசாரணை செய்வதற்கான முதல் சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டது. அதன் விசாரணை உச்ச கட்டத்திலிருந்த 1999 ஆம் ஆண்டுதான் எங்கள் தொலைக் காட்சி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முனைப்பில் இருந்தது. சூரியநெல்லி வழக்கை ஃபாலோ செய்ய முடிவெடுத்தேன். அதற்கான தகவல்களையும் வழக்கு விவரங்களை யும் சேகரிக்கச் செய்தேன்.

அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளராக இருந்த மூத்த பத்திரிகையாளர் லீலா மேனன் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து உண்மைகளை அறிந்து எழுதினார். அதைப் பின் தொடர்ந்து அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேச எங்கள் செய்தியாளரையும் அனுப்பினேன். அவர் சேகரித்து வந்த தகவல்கள் நிலைகுலையச் செய்தன. அந்தச் செய்தியை
எப்படிக் கொடுப்பது என்ற தடுமாற்றம் வந்தது. செய்தியாளனுக்குக் கொண்டாட்டம் தரக் கூடியது அந்த 'ஸ்டோரி'. பரபரப்பும் செக்ஸும் வன்முறையும் கலந்த அந்தச் செய்தி ஒளிபரப்பப்பட்டால் தொலைக் காட்சியின் 'ரேட்டிங்  பிச்சுக்கும்'என்று தெரிந்தது. ஆனால் அதைச் செய்ய எனக்குள்ளிருந்த மனித உணர்வு அனுமதிக்கவில்லை. அந்த உணர்வைத் தூண்டியதும் சூரிய நெல்லிப் பெண்தான்.

'சார், உங்கள் செய்தியாளரிடம் எனக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லி இருக்கிறேன். உண்மையைச் சொல்லியிருக்கிறேன். எனக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடந்து விடக் கூடாது என்பதனால்தான் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறேன். உங்களுக்குப் பெண்ணோ தங்கையோ இருந்தால் எப்படி கையாளூவீர்களோ அப்படிச் செய்யுங்கள். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நிஜமான குற்றவாளிகள் உலகத்துக்குத் தெரியவேண்டும். அதற்காகத்தான் இந்த வழக்கில் பிடிவாதமாக இருக்கிறேன்' என்ற அவளுடைய தொலைபேசி உரையாடல்தான் தடுமாற்றத்தை விட்டு முடிவெடுக்கத் தூண்டியது. செய்தியை அந்தப் பெண்ணுக்கு ஆதரவான நிலையிலிருந்து மட்டுமே கொடுப்பதுநடுநிலைமை, ஊடக தர்மம் எதையும் பார்க்காமல் அவளுடைய  கோணத்தை மட்டுமே முன்வைப்பது என்ற முடிவுக்கு வந்தேன். அதையே செயல்படுத்தினேன்.  அதற்காக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரான மிக முக்கிய அரசியல் பிரமுகரால் அச்சுறுத்தலும் விடப்பட்டது. முதலில் தொடை நடுங்கியது வாஸ்தவம். யோசித்தபோது அந்த அச்சுறுத்தல் குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பு என்று விளங்கியது. தொடை நடுக்கம் நின்று தோளை உயர்த்திக் கொண்டேன் அந்த நொடியில்.


1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். இடுக்கி மாவட்டம் சூரிய நெல்லியைச் சேர்ந்த பதினாறு வயதுப் பள்ளிச் சிறுமி கடத்தப் பட்டாள். கடத்தியது அவள் தினமும் பள்ளிக்கு சென்று வரும் பேருந்தில் நடத்துநராக இருந்த இளைஞன்.
அவன் மீது அவளுக்குக் காதலும் நம்பிக்கையும் இருந்தது. அந்த நெருக்கத்தில் அவனுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்திருந்தாள். அந்தப் படத்தை வைத்து மிரட்டித்தான்  அவளைக் கடத்தியிருந்தான். பாதி வழியில் அவன் தலைமறைவானான்.  காப்பாற்றுவதாகச் சொன்ன ஒரு பெண் தர்மராஜன் என்பனுக்கு அவளைக் கைமாறினாள். தர்ம ராஜனின் கையில் சந்தப் பண்டமானாள். கேரளம் முழுவதும் கொண்டு செல்லப் பட்டு விலை பேசி உடல் விற்பனை செய்யப்பட்டாள். பதினாறு வயதுப் பெண்ணை நாற்பத்திரண்டு ஆண்கள் ஒரு மாதத்துக்கும் மேலாகக் குதறினார்கள். சக்கையாக்கப்பட்டு திரும்பக் கொண்டு வந்து வீசப்பட்ட பெண்ணால் நடக்க முடியவில்லை. அவளுடைய உடலிலும் பிறப்புறுப்பிலும் காய்ங்கள் இருந்தன. சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நாளிதழில் வெளிவந்த ஒரு படத்தைப் பார்த்தாள். மத்திய அமைச்சர் பி.ஜே குரியனின் படம் அது. தன்னை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியவர்களில்  அவரும்ஒருவர் என்று வெளிப்படுத்தினாள். இடுக்கியிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தன்னை வல்லுறவுக்குட் படுத்தினார் என்று குறிப்பிட்டாள், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த நிமிடம் முதல் அந்தக் குடும்பத்தின் கஷ்ட காலம் தொடங்கியது. அவர்கள் அனுபவித்த அவமானமும் துயரமும் சொல்லில் அடங்காதவையாக இருந்தன.

அந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இடது சாரிக் கூட்டணி சூரிய நெல்லிப் பிரச்சனையை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது. அதுவரை சூரிய நெல்லிப் பெண்ணுக்கு ஆதரவாக இருந்த நாளிதழ்களில் சில - குறிப்பாக மலையாள மனோரமா - குரியனுக்கு ஆதரவாக மாறின. சூரிய நெல்லிப் பெண்ணை 'ஒழுக்கங்கெட்ட பெண்' என்று சித்தரிக்கத் தொடங்கின. தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கதைகளை நெய்தன. காவல்துறையும் அவர்களது முறையீட்டுக் குக் காது கொடுப்பதற்குப் பதில் அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. குடும்ப கௌரமும் பெண்ணின் எதிர் காலமும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் வழக்கை விட்டு விடச் சொன்னது. அவர்கள் அதை மறுத்தார்கள். எல்லாம் இழந்த பிறகு போராட்ட உணர்வு மட்டுமே அவர்களிடம் மிஞ்சியிருந்தது. அதைக் கைவிட அவர்கள் தயாராக இல்லை. விளைவு அவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். சொந்தக்காரர்கள் விலகினார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள். சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டார்கள். இருந்தும் அவர்கள் வழக்கிலிருந்து பின் வாங்கவில்லை.

1999 இல் விசாரணை நடந்தது. சதியாலோசனை, கடத்தல், கூட்டு வன்கலவி ஆகிய குற்றங்களின் பேரில் 41 பேர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப் பட்டார்கள். பி.ஜே. குரியன் மட்டும் சேர்க்கப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் அவர் இல்லை என்ற அலிபி மூலம் அவர் விடுவிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 35 பேருக்கு நான்காண்டு முதல் ஆயுள் காலம் முழுவதும் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. முக்கியக் குற்றவாளியான தர்மராஜன் தலைமறைவானான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கை மறு விசாரணை செய்த கேரள உயர் நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது. அதற்கிடையில் கைது செய்யப்பட்ட தர்மராஜனுக்கு மட்டும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதுவும் வன்புணர்ச்சிக்காக அல்ல. சூரிய நெல்லிப் பெண்ணை 'பெண் வியாபாரத்தில்' ஈடுபடுத்தியதற்காக. விசித்திரமாக இருந்தது நீதிபதிகள் ஆர். பசந்தும் கபூரும் வழங்கிய தீர்ப்பு. சம்பவத்தில் பெண் 'கற்பழிக்கப் பட்டாள்' என்பது சரியல்ல. ஏனெனில் அவளுக்குப் பதினாறு வயது நிரம்பியிருந்தது. செக்ஸ் பற்றித் தெரிந்திருக்கும் பருவம் அது. எனவே அவள் 'கற்பழிக்கப்படவில்லை' என்பது தீர்ப்பின் சாராம்சம்.

தன்னைச் சின்னா பின்னப்படுத்தியவர்களில் தற்போதைய மாநிலங்கள் அவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் இருந்தார் என்பதை ஆதாரத்துடன் நிறுவி சூரிய நெல்லிப் பெண் பீருமேடு நடுவர் மன்றத்தில் மீண்டும் வழக்குத்  தொடுத்தாள். இடுக்கி அரசு விருந்தினர் மாளிகையில் குரியன் தன்னைச் சிதைத்தார் என்று தெர்வித்திருந்தாள். நடுவர்
மன்றம் குரியனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர் உயர் நீதி மன்றத்தில் மனுச் செய்தார். முப்பத்தைந்து பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் விடுவிக்கப்பட்ட வழக்கில் குரியனை விசாரிக்கவோ தண்டிக்கவோ முடியாது என்று உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ்காரக்  குரியனுக்காக வாதாடியவர் பி.ஜே.பி. காரரான அருண் ஜேட்லி என்பதில் ஏதாவது மர்மம் உண்டா? அரசியலில் அதுவெல்லாம் சகஜம்தானா?

ன் புணர்ச்சிக்கும் நீதிமன்றத் தீர்ப்புக்கும் இடையிலான காலங்களில் சூரிய நெல்லிப் பெண்ணின் வாழ்க்கை கொடூரமானதாகவே இருந்திருக்கிறது. அந்தக் கொடூரத்தை அவளும் அந்தக் குடும்பமும் இரண்டு வழிகளில் வென்றிருக்கிறார்கள். தீவிர விசுவாசிகளான அவர்கள் கர்த்தரிடம் ஓயாமல் பிரார்த்தனைச் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து நீதிக்காகப் போராடியிருக் கிறார்கள். முதலில் சூரிய நெல்லியிலேயே குடியிருந்தார்கள். அந்தப் பெண்ணின் தாய் அங்குள்ள எஸ்டேட் மருத்துவமனையில் நர்சாக இருந்தார். அதனால் எஸ்டேட் குவார்ட்டர்சில் பாதுகாப்பாகக் குடியிருக்க முடிந்தது. அவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு குடியிருந்த இடங்களில் அந்தப் பெண் விநோதப் பொருளாகப் பார்க்கப் பட்டாள். 'இதுதான் சூரிய நெல்லி கேசில் மாட்டிய பெண்' என்று சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்துப் போகிற அவமானத்தைச் சகிக்க முடியாமல் ஜனநடமாட்டம் கு¨றைந்த இடங்களில் வசித்தார்கள். ஆனால் அது எதுவும் சமாதானமான வாழ்க்கைக்கு அவர்களைக் கொண்டு செல்லவில்லை.

சூரிய நெல்லிப் பிரச்சனையை அரசியலாக மாற்றித் தேர்தலில் வெற்றி பெற்ற இடது முன்னணி பெண்ணுக்கு அரசுவேலை கொடுத்தது. அதுவும் அவர்கள் வாழ்க்கைக்கு உதவவில்லை. சென்ற ஆண்டு அவள் மீது பொய்யான குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுச் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட அந்த வழக்குக்குப் பின்னணிக்  காரணம் வேறு. அந்த வேளையில்தான் அவள் தன்னுடைய வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித் திருந்த மனு பட்டியலிடப்பட்டிருந்தது.அந்தச் சந்தர்ப்பத்தில் அவளை மோசடிப் பேர்வழி என்று நிரூபிப்பது யாருக்கோ தேவையாக இருந்திருக்கிறது.

உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு  கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதி மன்றம் சூரிய நெல்லி வழக்கை ஆராய்ந்து மீண்டும் விசாரணை நடத்த ஆணை பிறப்பித்திருக்கிறது. உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்ப்பின் மேல் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சரும் இந்நாள் மாநிலங்கள் அவைத் துணைத் தலைவருமான பி.ஜே.குரியனை விசாரிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. '' இந்த முறையாவது என் மகளுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்'' என்று தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் காத்திருக்கிறார் சூரியநெல்லிப் பென்ணின் தந்தை. பெண்ணுரிமை அமைப்புகள் குரியன் பதவி விலக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக் கின்றன.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு முக்கியத்துவம் பெறக் காரணமும் குரியனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய அரசுதான். தில்லி மருத்துவ மாணவியின் கொடூரக் கொலைக்குப் பிறகு அமைக்கப்பட்ட  வர்மா கமிஷனின் பரிந்துரைகள்தாம் வழக்கை மறு விசாரணைக்குக் கொண்டு வந்திருக்கிறது. காவல்துறையால் கண்டுபிடிக்கப்படாமலிருந்த அல்லது கண்டுகொள்ளப்படாமலிருந்த தர்மராஜனை ஒரு தனியார் தொலைக்காட்சி தேடிப் பிடித்துப் பேட்டி கண்டது.''குரியனுக்கு சம்பவத்தில் பங்கில்லை என்று யார் சொன்னது? நான் தானே அவரை இடுக்கி விருந்தினர்  மாளிகைக்கு அழைத்துப் போனேன்'' என்று அவன் சொன்ன நிஜம் நீதியமைப்பையே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது.

சூரிய நெல்லி வழக்கின் முன் பின்னான கதை இது. என்னை வியப்பும் வருத்தமும் கொள்ளச் செய்தவை அதன் பின்னணியில் இருக்கும் சுரணையின்மைதான். வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்த நீதிபதி பசந்தை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டது. பேட்டியல்ல. காமிராவை ஒளித்து வைத்துச் செய்த 'கொடுக்கு நடவடிக்கை'. 'அந்தப் பெண் ஒழுக்கங் கெட்டவள். குழந்தை விபச்சாரி' என்று நீதிபதி சொன்ன வார்த்தைகள்தாம் உறுத்துகின்றன.வியப்பளிக்கின்றன. ஒரு நீதிபதிக்குப் பெண்களைப் பற்றிப் பாமரத்தனமான கருத்துத்தான் இருக்கிறது. உண்மையை அல்ல; ஒழுக்கத்தைத்தான்  சரியானது என்று நினைக்கிறார் என்பதன் வெளிப்பாடு அவருடைய அபிப்பிராயம். இந்தக் கருத்தை வைத்துக் கொண்டிருக்கும் நீதிபதியின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதையே சூரிய நெல்லி வழக்கில் உயர் நீதி மன்றத் தீர்ப்பு காட்டுகிறது.

இரண்டாவது வருத்தம், எந்தத் தொலைக் காட்சி மூலம் அந்தப் பெண்ணுக்கு அனுதாபமான நிலைப்பாட்டை முன்வைத்திருந்தேனோ அதே தொலைக் காட்சி பி.ஜே.குரியனை மகாத்மா குரியனாக ஒப்பனை செய்து செய்தியை ஒளிபரப்புகிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வு தோன்றுகிறது. முதன் முதலாக இதே தொலைக் காட்சி சார்பாக சூரிய நெல்லிப் பெண்ணிடம் நேர்காணல் நடத்திய செய்தியாளரிடம் - இன்று அவரும் இந்தத் தொலைக்காட்சியில் இல்லை - இதைப் பகிர்ந்து கொண்டபோது ''சார், என்ன செய்யமுடியும்? இதெல்லாம் இப்படித்தான்'' என்றார். இப்படித்தானா?

@



























சில கட்டுரைகள் - சாமி திந்தகத்தோம்...தோம்

அந்திமழை - அச்சிதழின் ஆரம்ப நாட்களில் ‘மனக்கணக்கு ‘ என்ற பத்தியில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினேன். கணினிச் சேகரத்தில் வேறு எதையோ தேடிக் கொண்டிருந்த போது இந்தக் கட்டுரைகள் மீண்டும் பார்வைக்குக் கிடைத்தன. சில வருட இடை வெளிக்குப்  பின்பு இவற்றை வாசித்தபோது ‘பரவாயில்லாமல்தான் எழுதியிருக்கிறேன்’ என்று தோன்றியது. 

ஒருவேளை  அந்த இடைவேளைதான் அப்படித் தோன்றக் காரணமோ ?






















சாமி திந்தகத்தோம்...தோம்


பொது மேலாளரின் டிரைவர் மூலம் தகவல் கசிந்ததும் செய்திப் பிரிவில் என் மேஜையைச் சுற்றி சகஊழியர்கள் திரண்டுவிட்டார்கள். அவர்கள் கேள்விப் பட்டது உண்மையா என்று விசாரித்தார்கள். ஆமாம் என்ற போதும் நம்ப மறுத்தார்கள். வலிறுத்திச் சொன்னதும் அவநம்பிக்கை கேலியாக மாறியது. அடப்பாவமே உனக்கும் இந்தக் கதியா? என்ற பரிதாபமாக மாறியது. 'தெரியுமே,  இதுவரை போட்டதெல்லாம் வெளிவேஷம்'  என்ற இளப்பமாக மாறியது. இவ்வளவு களேபரமும் பொது மேலாளருடன் சபரிமலைக்கு வருகிறேன் என்று சொன்னதன் விளைவு.

அவர் எல்லா மலையாள மாத முதல் தேதியும் மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்குப் போகிறவர். பெரும்பாலும் அவருடைய நண்பர்களோ, அலுவலகத்திலிருந்து யாராவது பக்தசிரோன்மணிகளோ துணைக்குப் போவார்கள். அந்த முறை துணைக்கு யாரும் இல்லை. உடன் வருவதாகச் சொன்ன ஊழியர் ஒருவரும் புறப்படுவதற்கு முன்பு வரவில்லை என்று பின் வாங்கி விட்டார். தனியாக அவ்வளவு தூரம் காரோட்டிப் போய்த் திரும்புவதில் தயக்கம் தோன்றியதைப் பேச்சு வாக்கில் சொன்னார். எதுவும் யோசிக்காமல் நானும் வருகிறேன் என்றேன். முதலில் விழித்தார். அப்புறம் விஷமமாகச் சிரித்தார். பிறகு கனிவு நிரம்பிய பார்வையுடன் பரிவு ததும்பும் குரலில் சொன்னார். '' அய்யப்பன் சக்தியுள்ள சுவாமிதான் சார். உங்களையும் தன்னுடைய சந்நிதிக்கு அழைத்துவிட்டார், பார்த்தீர்களா?'' இதைச் சொல்லும்போது அவர் கண்களில் பக்திக் கண்ணீர் துளும்பியது. இதே  கனிவையும் பரிவையும் அவ்வப்போது ஊழியர்களிடமும் காட்டினால் எவ்வளவு நல்லது என்று நினைத்துக் கொண்டேன். '' அய்யப்பன் ரொம்ப நாளைக்கு முன்பே அழைப்பு விடுத்து விட்டார். நான் தான் ஏற்கவில்லை'' என்றேன். ''இப்படி முடக்குவாதம் பேசிக்கொண்டேதான் வருவீர்கள் என்றால் நான் தனியாகவே போய்க் கொள்கிறேன்'' என்று கடிந்துகொண்டார்.

திருவனந்தபுரத்திலிருந்து சபரிமலைக்கு நூற்றுச் சொச்சம் மைல்கள். வசீகரிக்கும் மலைப் பாதை. அந்த முறை மழைப்பருவத்தில் சரியான மழை. அதனால் தாவரப் பசுமை தழைத்திருக்கும். சொகுசான குளிர்பதனம் செய்யப்பட்ட காரில் பயணம். விரதம் இருக்காமல் சடங்குகள் நடத்தாமல் ஒரு புனித யாத்திரை. வாய்ப்பை நழுவ விட மனமில்லை. சமாதானத் தொனியில் சொன்னேன். '' முடக்கு வாதமே இல்லை. உண்மையாகவே அய்யப்பன் முன்பே அழைத்திருக்கிறார். என் பாட்டி வாயிலாக. பாட்டி எப்போதோ நேர்ந்து கொண்டார்களாம். என்னை சபரிமலைக்கு அழைத்து வருவதாக. நான் தான் நழுவிக் கொண்டிருந்தேன். என்னை அய்யப்பனிடம் ஆஜர் படுத்தாமலேயே பாட்டியும் இறந்து போய்விட்டாள். அவர்கள் வார்த்தையைக் காப்பாற்றுவதற்காகவாவது சபரிமலைக்குப் போக வேண்டும் என்று  நினைத்திருந்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு உங்கள் மூலம் அது நிறைவேறப் போகிறதோ என்னவோ? '' 

ஜி.எம்.  என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார். நான் சொன்னதை முழுவதுமாக நம்பவில்லை என்று புரிந்தது. நம்பவும் வாய்ப்பில்லை. நான் தொலைக் காட்சியின் செய்திப் பிரிவுக்குத் தலைமை ஆசிரியர். என் பொறுப்பில் ஒளிபரப்பாகும் செய்திகளில் தெய்வீகக் கைங்கரியங்களுக்குப்  போதுமான இடம் அளிப்பதில்லை என்ற வருத்தம் என்மேல் உண்டு. மதச் சார்பற்றவன் என்று காட்டிக் கொள்வதற்காக பெருவாரியான மக்கள் பார்க்கக் கூடிய செய்திகளை இருட்டடிப்புச் செய்கிறேன் என்று முகத்துக்கு நேராகவும் சொல்லியியிருக்கிறார். அதை விட அபச்சாரமான காரியத்தைச் செய்திருக்கிறேன் என்றும் நினைத்திருந்தார். மாலை ஏழு மணிச் செய்திகளில் ஒரு சின்ன ஐட்டத்தைச் சொருகியிருந்தேன். 'சபரிமலையில் நாளை' என்று அடுத்த நாள் சடங்குகளை அறிவிக்கும் செய்தித் துணுக்கு. அதில் அவருக்கு ஆட்சேபம் இருந்தது.  ஒரு புனித சமாச்சாரத்தை கடைச் சரக்காக்கி விட்டேன் என்று நிர்வாகத்திடமும் முறையிட்டார். அந்த அறுபது நொடித் துணுக்குக்கு விளம்பரதாரர் மூலம் வருவாய் கிடைக்கிறது என்று தெரிந்ததும் நிர்வாகம் என் தரப்பை ஆதரித்தது. நிர்வாகத் தலைமையும் பகுத்தறிவுப் பாசறையின் கொழுந்து என்பதால் ஜி.எம்மால்எதுவும் செய்ய முடியவில்லை.

இப்படியான முன் கதையுள்ள ஒருவன் சபரிமலைக்கு நேர்த்திக் கடன் பாக்கியிருக்கிறது என்று சொல்வதை நம்ப மறுத்தது நியாயம். ஆனால் கிளம்புவதற்குத் தயாரான சமயத்தில் எனக்குப் பதிலாக ஒருவரைக் கண்டுபிடிப்பது கால விரயம் என்று தோன்றியதால் அரை மனசுடன் கார்க் கதவைத் திறந்து வைத்தார். ஏறிக் கொண்டேன். பழவங்காடி பிள்ளையாருக்கு ஒரு எறி தேங்காய் சமர்ப்பணத்துடன் என்னுடைய 'கன்னி யாத்திரை' தொடங்கியது.

நகர எல்லையைத் தாண்டும் வரை பேசாமலேயே இருந்தோம். கார் ஸ்டீரியோ வழியே யேசுதாஸ் அய்யப்ப கானங்களைப் பொழிந்து பரவசப்படுத்திக் கொண்டிருந்தார். '' இந்த ஆள் மட்டும் இவ்வளவு பாடல்களைப் பாடி உருக்காமலிருந்தால் அய்யப்பனுக்கு இவ்வளவு மவுசு வந்திருக்குமா சார்? என்று கேட்டேன்.

சாலையில் பதிந்த பார்வையை விலக்காமல் பதில் சொன்னார். '' இந்த வம்புதானே வேண்டாங்கிறது. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? பிறப்பால் கிறிஸ்தவரான ஒரு ஆளை தன் மேல் இத்தனை பக்தியுடன் பாட வைத்தது ஒரு நிமித்தமில்லையா? உங்களை மாதிரி ஒரு நாத்திகனை மலையேற வைத்ததுபோல''. வாதத்தில் வெற்றி பெற்ற புன்னகையுடன் காரை மலைப் பாதையில் செலுத்தினார்.பதில் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று யோசித்தபடி தலையசைத்துப் பின்னோக்கி ஓடும் மழை நனைந்த மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு '' இல்லை சார், இதில் தெய்வ நிமித்தமோ அற்புதமோ ஒன்றும் இல்லை. எல்லாரும் உடலை வருத்தி பாடுபட்டுப் போய்ச் சேரும் இடத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்த்து வைக்கிற குறுகுறுப்பு மட்டும்தான் இருக்கிறது. அப்புறம் நான் நாத்திகனில்லை.  சந்தேகப் பிராணி. ஆத்திகனாக இருப்பது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபம்தான் நாத்திகனாக மாறுவது. இரண்டும் தீர்மானமான இரண்டு எல்லைகள். அதனால்தான் நீண்ட காலமாக நாத்திகம் பேசுகிற ஒருவன் சட்டென்று ஆத்திகனாகிவிட முடிகிறது. நான் இரண்டும் கெட்டான். சந்தேகி. விசுவாசத்துக்கும் அவிசுவாசத்துக்கும் நடுவில் இருப்பவன். அது த்ரில்லிங்கான இடம். ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் கிடைக்காத சுதந்திரம் கிடைக்கும் இடம்'' என்றேன். ''சாமீ, ஆளை விடுங்க,. உங்க கூடப் பேச நான் வரலை'' என்று ஸ்டியரிங்கிலிருந்து கையை எடுத்துக் கும்பிடு போட்டார். சிரித்துக்கொண்டே ஜன்னலை இறங்கி வழியோரக் காட்சிகளில் கவனத்தைச் செலுத்தினேன்.

அது ஜூன் மாத நடு நாட்களில் ஒன்று. கேரளத்தில் பருவ மழைக் காலம்.சற்று ஓய்ந்திருந்த மழையின் மிச்சம் பாறைகளில் கசிந்து கொண்டிருந்தது. தார்ச் சாலைக் குழிகளில் தேங்கியிருந்தது.காட்டுத்தனமாக வளர்ந்திருந்த தாவரங்களில் அந்திநேரப் பசுமை மின்னியது. வண்டி மேல் நோக்கிச் செல்லச் செல்ல கானக வாசனை அடர்ந்து வந்தது.  சிள் வண்டுகளின் இடைவிடாத ரீங்காரத்துடன் இருட்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மணி ஆறைக் கூட எட்டவில்லை. பம்பைக்குப் போய்ச் சேர்வதற்குள்  இருட்டு எல்லா இடங்க¨ளையும் ஆக்கிரமித்திருந்தது.

எங்கள் தொலைக்காட்சியின் சபரிமலைச் செய்தியாளரும் ஒளிப்பதிவாளரும் காத்திருந்தார்கள். ஜி.எம். கணபதியை வணங்கி விட்டு தலையில் இருமுடிக் கட்டுடன் வந்து ''ஏறலாமா?'' என்றார். என்னுடைய பையை ஒளிப்பதிவாளர் வாங்கிக் கொண்டார். ''சார், சுமையில்லாமல் ஏறலாம்'' என்றார்.  செய்தியாளர் சில முன்னெச்சரிக்கைகளைச் சொன்னார். மெதுவாக ஏறுங்கள். கால்களை ஊன்றி நடந்து செல்லுங்கள். அட்டைகள் இருக்கும் பார்த்துச் செல்லுங்கள். செடி கொடிகளத் தொடவேண்டாம். கேட்டுக் கொண்டிருந்த பொது மேலாளர்  '' ஒரு காரியம் பண்ணுங்க. நீங்க கூடவே இருந்து சாரை அழைச்சுட்டு வாங்க. நான் மேலே போய்க் காத்திருக்கிறேன்'' என்று செய்தியாளரிடம் என்னை ஒப்படைத்தார். உருக்கமும் ஏக்கமும் கலந்த குரலில் '' சாமியே சரணம் அய்யப்பா'' என்று கோஷமிட்டார். அந்த மலைக் காட்டின் இருட்டிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத ஏதேதோ முகங்கள் அந்தக் கோஷத்துக்குப் பதில் முழக்கம் செய்தன. ஜி.எம். கறுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு படிகளில் ஏறி இருளில் கரைந்தார். நான் பேண்ட்டைச் சுருட்டி விட்டுக் கொண்டு ஏற ஆரம்பித்தேன். நண்பர்கள் உடன் வந்தார்கள். ஒரு மணி நேரம் வேகமாக ஏறிக் கொஞ்சம் சமதளமாக இருந்த இடத்தில் நின்று பார்த்தபோது பம்பா கணபதி கோவில் குட்டியூண்டாகத் தெரிந்தது. பம்பையாறு மின் ஒளியில் சரிகைத் துகள்களாகத் தெரிந்த்து.   

மறுபடியும் மலையேறத் தயாரானபோது கால்கள் நகர மறுத்தன. மூச்சுத் திணறியது.  வயிறு கலங்கி வாய் வழியாக வந்து விடுவது போலக் கலவரம் செய்தது.கண்கள் அடைத்துக் கொண்டன. மழைத் தூறலில் இருந்த குளிரையும் தாண்டி தலைமுதல் கால்வரை வியர்த்தது. பிரயத்தனப்பட்டு எட்டு வைத்தபோது கால்கள் துவண்டன. சரிந்து விழப்போன என்னை நண்பர்கள் தாங்கிக் கொண்டார்கள். அணைத்துப் பிடித்து பாதையோரமாக ஒரு பாறை மேல் உட்கார வைத்தார்கள். கண்கள் தானாக மூடிக் கொண்டன. காதுகளில் மௌனம் இரைச்சலிட்டது. 'சாமியே அய்யப்போ... அய்யப்போ சாமியே' என்ற கூட்டுக்குரல்கள் வேறு ஏதோ கிரகத்திலிருந்து வந்தன. நீண்ட நேர இளைப்பாறலுக்குப் பிறகு புலன்கள் சமநிலைக்குத் திரும்பின. நண்பர்கள் ஆறுதலாகச் சிரித்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது. ''முதல் தடவைதானே சார் அப்படித்தான் இருக்கும். அப்புறம் நாமெல்லாம்தான் நடக்கறதோ உடம்பாலே உழைக்கிறதோ  இல்லையே? அதுதான் பிரச்சனை. ஒண்ணும் அவசரமில்லை. மெதுவா ஏறிப் போகலாம். இல்லே, உங்களாலே முடியலேன்னா டோலில போகலாம். ஆனா அது புண்ணியமில்ல. அதுவுமில்லாமல் டோலிக்குக் கொடுக்கிற காசில் ஒரு தடவை துபாய்க்குப் போய்ட்டு வந்துடலாம்'' என்றார் செய்தியாளர்.



















எனக்கு இரண்டு யோசனைகள் இருந்தன. ஒன்று - அவர்கள் சொல்வதுபோல டோலியில் போகலாம். சாய்வு நாற்காலியின் இரு பக்கக் கால்களையும் இரண்டு நீண்ட உருட்டுக்கட்டைகளில் கட்டிவைத்த தற்காலிகப் பல்லக்குதான் டோலி. நாற்காலியில் ஒருவர் உட்கார்ந்திருக்க முன்னும் பின்னும் இரண்டு ஆட்கள் சுமந்து செல்லும் டோலிகளை வழியில் பார்த்தேன். முதியவர் களுக்கும் உடல் நலம் குன்றியவர்களுக்குமான மலைப் பல்லக்கு. ''நான் முதியவனோ நோயாளியோ இல்லையே ஷாஜி. நீங்க சொன்ன மாதிரி கன்னி யாத்திரீகன்'' என்று சாக்குச் சொல்லி டோலியை மறுத்தேன். இரண்டாவது யோசனை எனக்கே பிடித்திருந்தது. பேசாமல் வந்த வழியிலேயே திரும்பி விடலாம். 'கைலாசத்தை விடப் புனிதமான சபரிமலையின் பாதத்தில் நின்றாயிற்று. கங்கையை விடப் புனிதமான பம்பை நீரைத் தொட்டாயிற்று. போதும். தன்னுடைய பக்தர்களின் வருகைப் பதிவேட்டில் ஒரு நபர் குறைவதை காருண்ய மூர்த்தியான அய்யப்பன் பொருட்படுத்த மாட்டார்'. மலையிறங்கும் யோசனையைச் சொன்னதும் செய்தியாள நண்பர் விழித்தார். '' சார், நீங்க திரும்பக் கீழே போக வேண்டுமானால் இன்னும் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். நீங்கள் ஏறுவதைப் பார்த்தபோது சமாளித்து விடுவீர்கள் என்று நினைத்தேன். ஏறுவதை விட இறங்குவது சிரமம். அதுவும் மழை பெய்திருக்கும்போது. கவலைப் படாதீங்க சார், மெல்ல ஏறுங்க. விடிவதற்குள் ஏறி நடையை அடைந்து விடலாம்'' என்றார்.

குழப்பம் கலையாமல் தயக்கத்துடன் உட்கார்ந்திருந்தபோதுதான்  எங்களை நெருங்கி வந்த மூதாட்டியைப் பார்த்தேன். ஆந்திராவையோ கர்நாடகத் தையோ சேர்ந்தவர் என்று தோன்றியது. கனத்த சரீரம். நரைத்த தலை. உடலோடு ஒட்டிய கழுத்தில்  கருகுமணிகள் கோர்த்த தங்க மாலை. அவற்றுடன் சின்னச் சின்ன  ருத்திராட்ச வடங்கள். கறுப்புச் சேலையும் ஜாக்கெட்டும். சிவந்த முகம். மலையேறிய சிரமத்தில் முகம் மேலும் சிவந்திருந்தது. நெற்றி முழுக்க அப்பிய சந்தனம் மழையிலும் வியர்வை யிலும் கலைந்திருந்தது. வாயால் மூச்சு விட்டுக் கொண்டு நான் உட்கார்ந்திருந்த பாறையில் வந்து உட்கார்ந்து '' சாமீயே சரணம், தேவுடா சரணம்'' என்றதும் அவரது ஊரும் புரிந்தது. '' ஒரே இக்கட கூச்சுரா'' என்று சொன்னபோதுதான் அவருடன் வந்த இளைஞனைக் கவனித்தேன். மூதாட்டியின் ஆண் பதிப்பு. அதே நிறம், கனம்,முகம். தலை மட்டும் நிலை கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்தது. கடைவாயில் ஒழுகிக் கொண்டிருந்த எச்சிலைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே இருந்தான். நாங்கள் மூவரும் அந்த இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் மூதாட்டி இதமான சிரிப்புடன் பேச ஆரம்பித்தார். எங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். 'முதல் தடவை எல்லாமே சிரமமாகத்தான் இருக்கும். அப்புறம் சரியாகி விடும்'என்று எனக்கு ஆறுதல் சொன்னார். அந்த ஆறுதல் வார்த்தைகள் எனக்குள் உறங்கிக் கிடந்த பிடிவாதத்தை எழுப்பி விட்டன. நண்பர்களிடம் சொன்னேன் '' ஷாஜி, நான் மெதுவாக ஏறி வந்து விடுகிறேன். நீங்கள் முன்னால் போகலாம். இவ்வளவு வயசான கிழவி மலையேற முடியுமென்றால் என்னால் முடியாதா? '' நண்பர் அவநம்பிக்கையுடன் பார்த்தார். தயங்கி நின்றார். இல்லை நான் வந்து விடுவேன் என்று உறுதி சொன்ன பிறகு அவரும் ஒளிப்பதிவாளரும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே ஏறினார்கள். மரக் கூட்டங்களுக்கு இடையில் மறைந்தார்கள். வழக்கமான சீசன் அல்ல. இருந்தாலும் நூற்றுக் கணக்கானவர்கள் மலையேறிக் கொண்டிருந்தார்கள்.

மலையேற்றத்தைத் தொடர எழுந்தபோது மூதாட்டியும் இளைஞனும் எழுந்தார்கள். சேர்ந்தே போகலாமே என்றார் பாட்டி. இசைந்தேன். நடக்கத் தொடங்கியதும் பாட்டி பேசத் தொடங்கினார். சொந்த ஊர் குண்டூர் பக்கம் கிராமம். புகையிலை விவசாயம். அதுவும் கடந்த இரண்டு வருடங்களாகத் தான் புகையிலை சாகுபடி. அதற்கு முன்பு பருத்திதான் பயிர் செய்திருந் திருக்கிறார். வழக்கமாக மண்டலக் காலத்திலோ மகர விளக்குக் காலத்திலோதான் சபரிமலைக்கு வருவார். புகையிலைப் பராமரிப்பை முன்னிட்டு கடந்த இரண்டு வருடங்களாகத்தான் ஜூன் ஜூலையில் வருகிறார். கணவர் போய்ச் சேர்ந்தே பத்துப் பன்னிரண்டு வருடங்கள் ஆகி விட்டன. மூன்று பிள்ளைகளில் இரண்டு பெண்கள். கல்யாணம் முடிந்து விட்டது. இவன் நடுப் பிள்ளை. பிறந்ததிலிருந்தே இப்படி இருக்கிறான். பேச்சு சரியாக வராது. எந்தக் காரியத்தையும் சுயமாகச் செய்து கொள்ளத் தெரியாது. எல்லா வைத்தியமும் பார்த்தாகி விட்டது. எல்லாக் கோவில்களும் ஏறி இறங்கியாகி விட்டது. 'அய்யப்ப சாமி வழிகாட்டுவார்' என்று மூன்றாவது வருடமாக மாலை போட்டு மலையேறிக் கொண்டிருக்கிறார்.


ஆந்திரப் பாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோது எனக்கு என்னுடைய பாட்டி நினைவுக்கு வந்தார். அம்மா வழிப் பாட்டி. அம்மாவைச் சேர்த்து ஏழு பிள்ளைகளின் தாய். அம்மா கடைக் குட்டி. ஆறு அண்ணன்களில் ஒருவர் இளம் வயதிலேயே காலமாகி விட மிஞ்சியவர்களில் ஐந்தாமவரும் ஆறாமவரும் உடற் குறை கொண்டவர்கள். இருவருக்கும் பேச்சுத் திறன் இல்லை. ஐந்தாமவருக்கு உபரியாக இரு கால்களும் பிறவியிலேயே வளைந்தவை.அம்மாவின் இளம் பருவத்தில் தாத்தா மறைந்து போக ஏழு ஜீவன்களையும் பாட்டிதான் வளர்த்து ஆளாக்கியிருந்தார். வீடு வீடாக வேலை செய்தும் ஆடு,  கோழிகளைப் பராமரித்தும் கோவில் தெய்வத்துக்கு நைவேத்தியம் பொங்கிப் போட்டும் பிள்ளைகளின் வயிற்றை வாடாமல் காப்பாற்றினார். பாட்டி அபாரமான பக்தை. அவர் வீட்டுச் சுவர்கள் முழுக்க எல்லாக் கடவுள்களும் கொலுவிருந்தார்கள். அவர்களில் பிரதானமானவர் அய்யப்பன். மாத விலக்கு நின்ற நாள் முதல் பாட்டி சபரிமலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். அய்யப்பனிடம் அவருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் இருந்தது. 'என்னுடைய இரண்டு ஊமைப் பிள்ளைகளையும் பேச வைத்து விடு'. பத்துப் பதினைந்து வருடங்கள் மலையேறி மன்றாடிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரைத் தவிர அவர் அய்யப்பனிடம் நேர்ந்து கொண்டது எனக்காகவும் என்னுடைய இரண்டாவது தங்கைக்காகவும். டைபாயிடு காய்ச்சலில் விழுந்த தங்கைக்காக மனமுருகி வேண்டிக் கொண்டார். சீக்கிரம் காய்ச்சலைப் போக்கி விட்டால் அடுத்த வருடம் தங்கையையும் சன்னிதானத்துக்கு அழைத்து வருவதாக நேர்ந்து கொண்டார். பத்து வயதுச் சிறுமியை அழைத்துப் போய் அய்யப்பனுக்குக் காட்டினார். பள்ளிக்கூடம் முடிக்கும் முன்பே புத்தி கழன்றுபோன என்னைப் பழுது பார்க்கும்படியும் பையன் மறுபடியும் கடவுளைக் கும்பிடுபவனாக மாறியதும் கூட்டி வருவதாகவும் அய்யப்பனுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமலேயே கண்ணையும் மூடினார்.

அங்கங்கே உட்கார்ந்தும் நின்றும் மூச்சிரைக்க மலையேறி சரங்குத்தியை அடைந்தபோது கிட்டத்தட்ட நள்ளிரவாகியிருந்தது. வழியில் பெய்த மழைக்கு ஒதுங்கியதில் ஆந்திரப் பாட்டியையும் பிள்ளையையும் நழுவ விட்டிருந்தேன். வருத்தமும் குற்றமுமாக மனது  அடித்துக் கொண்டது. ஜி.எம்.மும் நன்பர்களும் காத்திருந்தார்கள். நாங்கள் மலையாளத்தில் முக்கியமான தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள். அதனால் வனத் துறையின் விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது. அறையில் போய்ச் சுருண்டு கொண்டால் போதும் என்று கால்களும் உணர்வும் கெஞ்சின. ஆனால் அப்படிச் செய்ய மனம் மறுத்தது. பைகளை அறையில் போட்டு விட்டு தனியாக சன்னிதானத்தின் பக்கவாட்டு வழியாகப் போய் அந்த உயரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மலைகளின் நடுவிலான ஆலயம். சுற்றிலும் காடு. காட்டு மரங்களுக்கிடையில் மலையேறி வந்து கொண்டிருந்த பக்தர்களின் டார்ச் வெளிச்சமும் தீப்பந்தங்களின் ஒளியும் மறைந்தும் தெளிந்தும் அலைந்தன. நடுநிசிக்குப் பிறகும் ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். குளிர் காற்று விரட்டியதும்  அறைக்குத் திரும்பினேன். சிள் வண்டுகளின் ஒலியும் சரண கோஷங்களும் எப்போதோ தூக்கத்தில் கரைந்தன.

விடியற் காலை மூன்று மணிக்கெல்லாம் ஜி.எம். குளித்துத் தயாராகி விட்டார். கறுப்பு வேட்டி. சட்டை போடாத உடம்புடன் இருந்தார். நானும் தயாரானேன். இரவு வந்த வழியாகவே சன்னிதானத்தை அடைந்தோம். பொது மேலாளர் குளிர்ந்து விறைத்திருந்த கல் தரையில் சயனப் பிரதட்சணம் ஆரம்பித்தார். சரணம் விளித்துக் கொண்டு தரையில் உருண்டவரைப் புரட்டி விடும் வேலையை உற்சாகமாகச் செய்தேன். உயர் அதிகாரியைத் தரையில் உருட்டி விடும் அரிய வாய்ப்பைத் தந்த அய்யப்பனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். அங்கப் பிரதட்சணம் முடிந்ததும் எழுந்தார். ''வாங்க, ரூமுக்குப் போய்க் குளித்துவிட்டு நடை திறக்கும் முன்னால் வந்து விடலாம்'' என்று அழைத்துப் போனார். எல்லாம் முடித்துத் திரும்பி வரும்போது என்னை பக்கவாட்டு வழியாகவும் வரச் சொன்னார். அவர் பதினெட்டாம் படி வழியாக இருமுடியுடன் மேலே வந்தார். அவருடன்  சில முக்கியப் பிரமுகர்களும். எல்லாரும் கருவறையின்  அடைந்திருந்த பொற்கதவுக்குமுன்னால் நின்றோம். நான்கு மணிக்கு நடை திறந்தது. பரவசக் கோஷங்களும் மணி நாதமும் ஒலித்தன. அந்த மலைகளில் முட்டி எதிரொலித்தன. கூட்டம் அதிகமில்லாத நேரம். போதாக்குறைக்கு நாங்கள் அதி முக்கியப் பிரமுகர்கள் என்பதால் யாரும் விரட்டவுமில்லை. ஒரு நொடிப் பார்வைக்குமேல் எனக்கும் அய்யப்பனுக்கும் பரிமாறிக் கொள்ள எதுவுமில்லை. நான் விலகி நடந்தேன். பதினெட்டுப் படிக¨ளையும் கடந்து ஆந்திரப் பாட்டி பிள்ளையுடன் வந்து நின்றார். தேவஸ்தானக் காவலர்களை அவர்களை விலக்கி நிறுத்தினார்கள். பாட்டி கெஞ்சிக்கொண்டிருந்தார். பார்க்கப் பரிதாபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அப்போது வந்து சேர்ந்த நண்பர்களையும் அழைத்துக் கொண்டு பாட்டியை நெருங்கினேன். காவலரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பாட்டியை என்னுடன் வந்தவர் என்றேன். தொலைக் காட்சிக்காரன் என்பதால் வழி திறந்தது. பாட்டியையும் பிள்¨ளையும் அழைத்துச் சென்று நடையில் நிறுத்தினோம். கண்ணீர் மல்க வாழ்க்கையின் மொத்த துக்கத்தையும் கொட்டுகிற குரலில் கேவிக் கொண்டு பாட்டி வழிபடுவதைப் பார்த்தபோது எனக்கு உடல் சிலிர்த்தது. கண்கள் கலங்கின. யாராவது குறிப்பாகப் ஜி.எம். பார்த்தால் நான் பக்தியில் பழுத்து விட்ட்தாக நினைக்கலாம் என்பதால் கூட்டத்திலிருந்து வெளியேறினேன்.

'' சாமீ...'' என்று பாட்டி அழைத்தார். குரல் கம்ம அவர் தெலுங்கில் சொன்னது அரைகுறையாகப் புரிந்தது. '' மூணு வருஷமா வர்றேன். இந்தத் தடவை மாதிரி நிம்மதியா தரிசனம் செய்ததில்லை. உன்னால்தான் அது நடந்தது. பாரேன், அடுத்த வருஷம் வரும்போது இவன் நல்லா ஆயிடுவான்'' பாட்டி அடுத்துச் செய்ததுதான் என்னை உலுக்கியது. அந்த இளைஞனின் கையில் வெற்றிலை பாக்கை வைத்து என்னிடம் கொடுக்கச் சொல்லித் தெலுங்கில் சொன்னாள். சில நொடிகளுக்குப் பிறகு தலையை ஆட்டி எச்சில் ஒழுகும் வாயைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு அவன் அதை நீட்டினான். அதில் வெற்றிலையும் முழுப் பாக்கும் ஒரு நூறு ரூபாய்த்தாளும் இருந்தன. அதைக் கையில் திணித்து விட்டு அவன் என் கால்களைத் தொடக் குனிந்தான். நான் துள்ளி நகர்ந்தேன். ஒரே சமயத்தில் பரிவும் அருவருப்புமாக இருந்தது. அரைகுறைத் தெலுங்கில் கடவுள் சன்னிதியில் மனிதர்களை வணங்கக் கூடாது என்று உபதேசம் செய்தேன்.''இக்கடெ அந்தரூ தேவுடு காதா?'' என்றார் பாட்டி. புரிந்தபோது பாட்டியை வணங்கத் தோன்றியது. கும்பிட்டேன். நான் கும்பிட்டது ஆந்திரப் பாட்டியையா இல்லை எனக்காக நேர்ந்து கொண்ட மறைந்துபோன என் பாட்டியையா? தெரியவில்லை.

என்னுடைய ஊமை மாமாக்களில் ஒருவர் பேசாமலேயே இறந்து போனார். இன்னொருவர் இன்றும் பேசாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆந்திரப் பாட்டியின் பிள்ளை இப்போது பேசிக்கொண்டிருப்பானா? பாட்டியின் பக்தியை மெச்சி அய்யப்பன் அவனைப் பேசவைத்திருக்கக் கூடும். இல்லையா?
@

ஓவியங்கள்: பி ஆர் ராஜன் 

















வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

மோகத்தின் நிழல்


















'ம்மா வந்தாள்ஒன்றைத் தவிர தி. ஜானகிராமன் எழுதிய பிற நாவல்கள் எல்லாமும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. 'ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் 'கணையாழி' போன்ற சிறு பத்திரிகை களிலுமே அவை தொடராக வெளியாகியிருக்கின்றன. பிற்காலத்தில் வெகு ஜனப் பிரபலமுள்ள எழுத்தாளர்கள் உருவாக்கிய தொடர் கதை இலக்கணம் எதற்கும் தி.ஜாவின் நாவல்கள் உட்படாதவை. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசக எதிர்பார்ப்புக்காக ஏற்படுத்திய திடீர் திருப்பங்களோ சுவாரசியச் சிக்கல்களோ இல்லாமல் எழுதப்பட்டவை.  எனவே தான் இந்த நாவல்களைத் தொடர்கதைகள் என்று சொல்லாமல், தொடர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

தி.ஜானகிராமனின் மாஸ்டர் பீஸான 'மோக முள்'ளும் தொடராக வெளி வந்த நாவல்தான். 1955 - 56 ஆண்டுகளில் 'சுதேசமித்திரன்' நாளிதழின் வாரப் பதிப்பில் தொடராக வெளிவந்தது. ஜானகிராமனின் நாவல்களிலேயே அளவில் பெரிய நாவல் இது. மிக அதிகமான  பாத்திரங்கள் கொண்ட நாவலும் இதுதான். அவரது நாவல்களில் அதிக அளவு வாசகர்களைப் பெற்றதும் இதுவாகவே இருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் காரணம் அது பத்திரிகைத் தொடராக வெளிவந்ததுதான். ஆணின் விடலை மனப் பாங்குக்கு உகந்ததாக நாவலின் கதைப் போக்கு இருந்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். பதின் வயதில் தைக்கும் முள்ளின் நோவு காலம் கடந்தும் தீராத மோகமாகவே எஞ்சியிருக்கச் செய்யும் ரசவாதம் அதில் இருக்கிறது.

பதினேழாம் வயதில், கல்லூரிப் பருவத்தில் 'மோக முள்'ளை முதன் முதலாகப் படித்தேன். கல்லூரி நூலகத்தில் இரண்டு நாட்கள் அடைந்து கிடந்து எண்ணூறு பக்கங்களையும் படித்து முடித்தேன். அந்த வாசிப்பில் அடைந்த பரவசத்தின் புதுக் கருக்கு இன்றும் களிம்பேறாமல் மனதுக்குள் இருக்கிறது. அந்தப் பரவசத்தை  ஜானகிராமனின் வார்த்தைகளிலேயே சொல்லலாம். ' காதல் செய்கிற இன்பம் அதில் இருந்தது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிபோதல், வேதனை எல்லாம் அதில் இருந்தன.

இந்த எல்லா உணர்வுகளும் மையப் பாத்திரமான யமுனாவைச் சார்ந்தே இருந்தன. அது மனதும் உடலும் பெண்ணின் ரகசியத்தை அறிந்து கொள்ளத் தவித்துக் கொண்டிருந்த வயது. அந்தத் தவிப்பைச் சமன் செய்து கொள்ளவும் கற்பனைகளில் வாழவும்  ஜானகிராமன் சித்தரித்த யமுனா உதவினாள். மெல்ல மெல்ல அந்தக் கற்பனைப் பாத்திரம் அசலானது என்றும்  எங்கோ கண்ணுக்குத் தட்டுப்படும் தொலைவில் நடமாடிக் கொண்டிருக்கிறது என்றும் உயிர் பெற்றுக் கூடவே தொடர்ந்தது. ஆண் பாத்திரமான பாபுவை விட வயதில் மூத்தவள் யமுனா என்பது வெளிப் படையான சலுகையாகத் தெரிந்தது அந்த வயதுக்கு. சம வயதுப் பெண்களுடன் பேசத் தயக்கமும் துணிவின்மையும் கொண்டிருந்த மனதுக்கு பெரிய பெண்ணிடம் சகஜமாகப் பேசலாம் என்ற சுதந்திரத்தைக் கொடுத்தது. அந்த விபரீத சுதந்திரம் பாடத் திட்டத்திலேயே மகா அலுப்பூட்டும் பாடமான வேதியியலைக் கற்பிக்க வந்த தற்காலிகப் பேராசிரியையை யமுனாவாகக் கற்பனை செய்து ரசிக்கச் செய்தது. அவரை மட்டுமல்ல வேறு பல அக்காள்களையும் யமுனாவாக ஆக்கியது.

பாபுவின் பார்வையில்தான் தி.ஜானகிராமன் யமுனாவைச் சித்தரிக்கிறார். 'இவளிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அணுக முடியாத தொட முடியாத ஒரு முழுமை. பொலிவு. சந்தனக் கட்டையின்  வழவழப்பு,நீண்ட விரல்கள் நீண்ட கைகள் நீண்ட பாதம்'. இது ஆராதனை சார்ந்த மனநிலை. அதையும் மீறிய ஒருத்தியாகவும் யமுனா காட்டப் படுகிறாள். 'இவளும் ஒரு கணத்தில் ஒளி மங்கிய முக்கால் இருளில் தனிமையின் கை மறையும் அந்தி மங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும்' என்ற ஆண் தவிப்பின் இலக்காகக் காணும் மனநிலை. இந்த இரண்டு மனநிலைகளையும் மீறிய ஒருத்தியாக யமுனாவைப் பார்த்ததும் பார்க்கவைத்ததுமே நாவலின் வெற்றி. தன்னை விட இளையவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள்; உடலையும் தருகிறாள். இது மட்டுமே யமுனா என்றால் அவளை மறந்து விடுவது சுலபம். ஆனால் 'இதுக்குத்தானே? என்ற முகத்தில் அறைகிற கேள்வியையும் கேட்டு அவனை உடலின்பத்தைக் கடந்த அனுபவத்தை நோக்கித் தள்ளி விடுகிறாள்; இசையில் தேர்ச்சிபெற அனுப்பி வைக்கிறாள். இந்த ஆளுமைத் திருப்பமே யமுனாவை மறக்க இயலாத பாத்திரமாக, இன்றும் என்னால் காதலிக்கப்படும் ஜீவனாக மாற்றுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் யமுனாவுக்கு ஒவ்வொரு முகத்தையும் தோற்றத்தையும் கற்பனை செய்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போதும் அவள் மனதுக்குள் முக விவரங்கள் இல்லாத ஒருத்திதான். நாவலைப் புத்தக வடிவில் வாசித்ததால் எனது கற்பனைக்குத் தோதான முகத்தைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. இது தொடராக வந்த சமாச்சாரம் ஆச்சே? அப்படியானால் வெளிவந்த காலத்தில் யமுனாவின் தோற்றம் சித்தரிக்கப்பட்டிருக்குமில்லையா? என்று நாவலை முதன் முதலாகப் படித்து முடித்த காலத்தில் ஏக்கம் வந்தது. ஜானகிராமனின் நெருங்கிய நண்பரும் மோகமுள் நாவலில் ஒரு பாத்திரமாகவே இடம் பெறுபவருமான எழுத்தாளர் எம்.வி. வெங்கட் ராமிடம் விசாரித்தேன். அப்போது சிறிது காலம் அவர் எங்களூர் கோவையில் இருந்தார். வங்கி ஊழியரான மகனுடன் வசித்து வந்தார். அவரிடம் 'மோக முள்' வெளியான 'சுதேசமித்திரன்' இதழைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன். அவரிடம் ஓரிரு இதழ்கள் மட்டுமே இருந்தன. அதுவும் கும்பகோணத்தில் இருக்கிறது என்று கையை விரித்தார். ஏமாற்றமாக இருந்தது. அதை உணர்ந்த எம்.வி.வி. முடிந்தால் யாரையாவது விட்டு அதைக் கொண்டு வரச் செய்வதாகச் சொன்னார். சொன்னதுபோலச் செய்தார். சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் மோக முள் அத்தியாயங்கள் இடம் பெற்ற இரண்டு இதழ்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் என் தீயூழ். ஒரு அத்தியாயத்தில் பாபுவும் நண்பன் ராஜமும் ஆற்றங்கரையில் உட்கார்ந்திருக்கும் படம். இன்னொன்றில் ரங்கண்ணாவும் பாபுவும் இசைப்பயிற்சியில் ஈடு பட்டிருக்கும் படம். பார்த்ததும் மனது பொருமியது. ஆனால் மகிழ்ச்சி யாகவும் இருந்தது. என் யமுனா எனக்கு மட்டுமான யமுனாவாகவே இருக்கிறாள் என்ற ரகசிய சந்தோஷம்.

ஓவியர்கள் சித்தரிப்பை விட தி.ஜாவின் வார்த்தைச் சித்தரிப்பே மேலானது. அவரது எல்லாப் பெண்பாத்திரங்களும் அப்பழுக்கில்லாத அழகிகள். அதே சமயம் அகத் துணிவு கொண்டவர்கள். இந்து (அம்மா வந்தாள் ), பாலி ( மலர் மஞ்சம் ), அனசூயா, செங்கா ( உயிர்த்தேன்), அம்மணி ( மரப்பசு), குஞ்சம்மாள் ( செம்பருத்தி ) எல்லாரும் ஒரேபோன்ற உயிர்ப்பும் ஒளியும் கொண்டவர்கள்.அவர்களில் இன்னும் திடமானவள், இன்னும் பிரகாசமானவள் யமுனா. மனம் அப்படித்தான்  நம்ப விரும்புகிறது;  இல்லை, நம்புகிறது.

இந்தப் பாத்திரங்கள் அனைத்தும் ஆண்மைய நோக்கின் வெளிப்பாடுகளே. ஆண் மனம் தன்னை முழுமையாக்கிக் கொள்ள விரும்பும் பால்விழைவின் கற்பனைகள்தாம். ஆனால் ஜானகிராமன் இந்தப் பெண் பாத்திரங்களை ஆணுக்கு இணையாகவே உருவாக்க விரும்பியிருக் கிறார். சமயங்களில் ஆணுக்குச் சமமானவர்களாக; சில சமயம் ஆணை மீறியவர்களாக; இவர்களில் யமுனா மட்டுமே ஆணைத் தன்னைக் கடந்து செல்ல வலியுறுத்துகிறவளாக உருவாக்கப்பட்டிருக்கிறாள். அவள் விட்டு விலகாத மோகத்தின் நிழல்; ஆனாலும் தனியள். கதைப் பெண்களில் யமுனாவே என் நாயகியாக மாற அதுதான் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.


 ( அந்திமழை இதழில் வெளியான கட்டுரை)