திங்கள், 8 நவம்பர், 2010
கமலா சுரய்யா
பூந்தூறலாக மழை. இடையிடையே குளிர் வெயில். மரங்களில் தேங்கியிருந்த நீர்த் துளிகள் இலையசைவில் உதிர்ந்து மேலே சொரிந்தன. மசூதிக் கோபுரங்க ளிருந்து பறந்து வந்த புறாக்கள் மரக் கிளைகளில் உட்கார்ந்து 'க்ரும் க்ரும்' என்று கேட்டன.கபருஸ்தானின் மண் பாதங்களில் நிரடியது. வெள்ளை பூசிய பழைய சமாதிகள். பச்சைக் கோடி போர்த்திய புதிய மண்மேடுகள். இவற்றுக்கிடையில் அவர் உறங்கும் இடம் எது? புறாக்கள் க்ஹூம் க்ஹூம்' என்று முனகிக்
கொண்டு பறந்து போயின.
வெள்ளிக் கிழமை தொழுகை முடித்து எல்லாரும் போயிருந்தார்கள்.பாளையம் பள்ளிவாசல் அமைதியாக இருந்தது. அதன் பின்னால் உள்ள இடுகாட்டில் தயக்கத்துடன் தேடிக் கொண்டிருந்தேன்.
'என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார் மொல்லா.
'ஒரு சமாதியை. மாதவிக்குட்டியை அடக்கம் செய்த சமாதியை'
'அதை இங்கே தேடினால் எப்படி? ஏதாவது மயானத்தில் போய்ப் பாருங்கள்'
சொற்பிழையை உணர்ந்ததும் நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
'இல்லை, சுரய்யா, கமலா சுரய்யாவின் சமாதி?'
'அதோ அந்த மதிலுக்குப் பக்கத்தில்.ஒரு நீர்மாதளச் செடி தெரிகிறதா, அதுதான்'
அது செடிதான். மரமாக இன்னும் காலம் பிடிக்கும். மாதவிக் குட்டியின் இல்லை கமலாதாசின் இல்லை கமலா சுரய்யாவின் கதைகளில்தான் நீர்மாதளம் சீக்கிரம் வளரும். சீக்கிரம் பூக்கும்.அவர் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு 'நீர்மாதளம் பூத்த காலம்' என்பது நினைவுக்கு வந்தது.
கமலா சுரய்யாவின் சமாதிமேல் காய்ந்த இலைகள் கிடந்தன.மழைத் துளிகள் வலுத்து விழுந்தபோது அவை ஒலியெழுப்பின.துளிகள் விழவிழ இலையோசை கூடியது.யாரோ பேசுகிற ஒலிபோலக் கேட்டது.கமலாவின் குரலா? இல்லை.அது முதுமைப் பருவத்திலும் இளமையின் குரலாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசும்போது மல்பெரி இலையில் விழும் நீரின் குரல்.மலையாளத்தில் தென்னங் கீற்றில் சிதறும் ஜல சப்தம். பரபரப்பான வாகனப் போக்குவரத்து நிரம்பிய சாலைகளைக் கடந்து ஓர் ஆடும் அதன் குட்டிகளும் கபருஸ்தானுக்குள்
நுழைந்தன. எங்கேயிருந்து வந்திருக்கும் அவை? யோசித்துக் கொண்டிருந்த போது மொல்லா கேட்டார்: 'சார், போறீங்க இல்லையா?'
'ஆமாம். அனுமதி கொடுத்ததற்கு நன்றி' சொல்லி விட்டு இரண்டு ஐந்து ரூபாய் பொன் நாணயங்களை அவர் கையில் வைத்தேன். 'இது என்னத்துக்கு சாரே, சரி இருக்கட்டும்,உங்க மன சமாதானத்துகாக வாங்கிக்கிறேன்.சாரைப்போலத்தான் நிறையப் பேர் இந்த ஸ்திரீயோட கபரைப் பார்க்க அடிக்கடி வர்றாங்க. விதேசிகள் கூட வந்து பார்த்து விட்டுப்போகிறார்கள். ரொம்பப் பெரிய மனுஷிதான்போல' என்று நகர்ந்த மொல்லா ஆடுகளை விரட்டினார். 'இத்தனை நெருக்கடியான இடத்தில் இது மட்டும் எங்கிருந்தோ மக்களையும் கூட்டிகிட்டு வந்துடுது' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
மழை கொஞ்சம் பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. 'சார், கொஞ்சம் நின்று விட்டுப் போகலாமே?' என்று சொன்னபடியே மொல்லா இடைவழியில் நுழைந்து பள்ளிவாசல் வராந்தாவில் ஏறினார். 'மழை அவ்வளவொன்றும் பெரிதாக இல்லை, நான் வருகிறேன்' என்றபடித் திரும்ப ஒருமுறை அந்த மரணப் பூங்காவை ஏறிட்டேன். வெள்ளாடு குட்டிகள் பின் தொடர நீர்மாதளத்தின் நிழலில் அண்டுவது கண்ணில் பட்டது.
@
கட்டிப் போடப்பட்ட வெள்ளாடு
@
அறியாமையின் தூணில்
கட்டிபோடப் பட்ட ஜந்து நான்
ஒருமுறை தூணைச் சுற்றி
மீண்டும் திரும்பிப்போய்
இன்னொரு முறை சுற்ற மட்டுமே முடியும்
வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகள்
என்னை வழிமறித்து நிறுத்துகின்றன.
எனக்கு இந்தக் காலத்தின் உளவியல்
அப்படியொன்றும் பிடிபடுவதில்லை
அதற்கு முலையூட்டும்
தத்துவ சிந்தனை என்று அவர்கள் அழைக்கும்
தாயையும் எனக்குப் புரியவில்லை
எனக்கு அறிமுகங்கூட இல்லாத
ஒருவரைக் காயப்படுத்த
என்னால் முடியாது
இன்று நிலவும் வெறுப்பை
என்னால் பங்கிட முடியாது
நான் எவருடையதோ ஒரு வளர்ப்பு மிருகம்.
காலத்தில் நெருங்கி வந்து
மெல்லமெல்ல நொறுக்குவதற்காகக்
கைவிடப்பட்ட
பழைய விளையாட்டுப் பண்டம்
பசி முற்றி
பிளாட்டோவின் 'குடியர'சையும்
காளிதாசனின் 'சாகுந்தல'த்தையும்
சொந்த நம்பிக்கைகளைப் பற்றிய
குர்ஜியேவின் அலசலையும்
அப்புறம்
நிச்சயமாக
வால்ட் விட்மனின்' புல்லின் இதழ்க"ளையும்
மெய்ந்து தீர்த்த
வெள்ளாடு நான்.
வெள்ளோட்டம் பார்க்க வரும்
கசாப்புக்காரர்களுக்குப் போதுமான
கொழுத்த இறைச்சி எனக்கில்லை
நோய்க்கே நோய்வந்தது போன்றவள் நான்
என்னை இரவு உணவாக்கிக் கொள்ள
யாருக்கும் விருப்பமிராது
வெறுப்புக்கும் ஆயுதச் சந்தைகளுக்கும்
தான் தோன்றிக் கொலைகளுக்குமான
இந்த நூற்றாண்டில்
இது ஒரு வரமேதான்.
( கமலாதாசின் கடைசிக் காலக் கவிதைகளில் ஒன்று)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)