வெள்ளி, 11 ஜூன், 2021

ஒரு வெள்ளாட்டின் ஒப்புதல்கள்

 

2017  ஜனவரி மாதத்தில் ஒரு நாள். மதுரையிலிருந்து வே. அலெக்ஸ் தொலைபேசியில் அழைத்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் உண்டு. எழுத்து சார்பில் அவர் வெளியிட்ட சில நூல்களைப் பெறுவதற்காகத் தொடர்பு கொண்டதைத் தவிர தனிப்பட்ட நெருக்கம் இல்லை. எனவே அந்த அழைப்பு வியப்பைக் கொடுத்தது. ஆங்கிலத்தில் வெளியாகியிருந்த சிறு வெளியீடு ஒன்றைத் தமிழாக்கம் செய்து தர முடியுமா என்று விசாரித்தார். விவரம் சொல்லும்படிக் கேட்டேன். வெளியீடு என்னைத் தூண்டினால் மட்டுமே மொழியாக்கம்  பற்றித் தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிட்டேன். 

‘அது உங்களுக்குப் பிடிக்கும். நீங்கள் தமிழாக்கம் செய்வது பொருத்தமாகவும் இருக்கும். உங்கள் வெல்லிங்டன்’ நாவலுக்கு எழுதியிருக்கும் பின்னுரைதான் உங்களை அணுகக் காரணம். ஆங்கில வடிவத்தை அனுப்புகிறேன். படித்துப் பாருங்கள்’ என்று பதிலளித்தார். உடனே ‘ஒரு வெள்ளாட்டின் ஒப்புதல்கள்’ என்ற கள ஆய்வறிக்கையின் இணைப்பை மின் அஞ்சலில் அனுப்பினார்.

மும்பை, டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த பிரபாகர் ஜெயபிரகாஷ் இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தவர். தி குவாலிடேட்டிவ் ரிப்போர்ட் 5 பிப்ரவரி 2017 இதழில் அறிக்கை வெளியாகியுள்ளது.

 

நீலகிரி மாவட்டம் கூடலூரிலுள்ள தேயிலைத் தோட்டம் தொடர்பான பிரச்சனை அது. எஸ்டேட் நிர்வாகம் நில ஆக்கிரமிப்பின் மூலம் அங்குள்ள பழங்குடியினரது கிராமங்களையும் கபளீகரம் செய்திருந்தது. அதற்கு எதிராக ஆதிவாசிகளும் மனித உரிமைச் செயல் பாட்டாளர்களும் நடத்திய போராட்டங்களின் வாய்மொழிப் பதிவு அந்த ஆவணம். சட்டத்துறைக் கலைச்சொற்களும் நீதிமன்ற நடைமுறைகளும் விரவிய அந்த ஆவணத்தை மொழியாக்கம் செய்வது எளிதல்ல என்பதே முதலில் எழுந்த எண்ணம். ஆனால் அந்த ஆவணம் புனைவுக்குரிய ஈர்ப்பான முறையில் எழுதப்பட்டிருந்தது. ஒரு வெள்ளாட்டின் வாக்குமூலமாக நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டிருந்தன. ஆய்வறிக்கையின் தகவல் மொழியில் அல்லாமல் படைப்பூக்கமுள்ள மொழியில் எழுதப்பட்டிருந்ததும் அதில் கையாளப்பட்டிருந்த நாடகத்தன்மையும் தன் மூலம் வெளிப்பட்ட நாடகமாக்கலும் மொழியாக்கத்துக்குத் தூண்டின. மொழிபெயர்க்க முடியும் என்ற நம்பிக்கை உறுதிப்பட்டதும் அலெக்ஸை அழைத்து இசைவைத் தெரிவித்தேன். மகிழ்ச்சியைத் தெரிவித்தவர் என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டார். ‘’ அது எதுக்குங்க?’’ என்று தயங்கினேன். ‘’ இல்லை, எனக்காக ஒரு வேலை செய்யறீங்க, அதுக்கு ஊதியம் கொடுக்க வேணுமில்லையா?’’ என்றார். வேலையை ஒப்புக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறேனே தவிர அதைச் செய்யத் தொடங்கவில்லை. முதலில் அப்படி ஒரு ஊதியம் வேண்டாம். அப்படியே வேண்டுமென்றால் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

‘’ இல்லை, முதலிலேயே கொடுத்துட்டா நல்லது’’ என்று விடாக்கண்டனாகப் பதில் சொன்னார். அவர் ஒன்றும் நிதிமிகுந்த பதிப்பாளர் அல்லர். சமூக அக்கறை காரணமாகப் பதிப்பிலும் ஈடுபட்டிருப்பவர். அவரிடமிருந்து காசு வாங்குவது சரியல்ல என்று பட்டது. பெரிய காரியங்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்குச் செய்யும் சிறு உதவியாகவே அந்த வேலையை நினைத்தேன்.

‘’ என்னாலே செய்து முடிக்க முடியலென்னா உங்க காசு நஷ்டமில்லையா? அதனால வேலை முடிஞ்சதும் அதைப் பத்திப் பேசலாம்’ என்றேன் கொடாக்கண்டனாக.

‘’ முடிச்சிருவீங்கன்னு நம்பிக்கை. அதில்லேன்னா ஒரு நண்பருக்குச் செலவு செஞ்சதா நெனச்சுட்டுப் போறேன்’’ என்றார். எவ்வளவோ விலக முயன்றும் தப்ப முடியவில்லை. வங்கி விவரங்களைக் கொடுக்க வேண்டியதாயிற்று. விவரம் கிடைத்த அரைமணி நேரத்துக்குள் தொகையும் கணக்கில் சேர்க்கப்பட்டது. தர்மசங்கடமாக உணர்ந்தேன். வேலையில் ஈடுபடுபவன் உற்சாகமாக செய்யட்டும் என்ற எண்ணத்தில் முன்பணத்தை அலெக்ஸ் கொடுத்தார். ஆனால் அது என்னைத் தார்மீகமாகச் சிக்கலுக்குள்ளாக்கியது. இந்த இக்கட்டை அவரிடம் தொலைபேசியில் சொன்னேன். சிரித்தார். அது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இருக்கச் சொன்னார். அப்படியே இருக்க முயன்றேன். ஆனால் அப்படியே இருக்க முடியவில்லை.

 

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மொழியாக்கத்தைத் தருவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை. மேலோட்டமான பார்வைக்கு ஆய்வறிக்கையாகவும் வாசிக்கச் சுவாரசியமானதாகவும் தென்பட்ட பிரதி உள்ளே சிக்கலான இடங்களைக் கொண்டிருந்தது. அவற்றை விளங்கிக்கொள்ள சான்று நூல்களையும் வாசிக்க வேண்டியிருந்தது. பிற வேலைகளும் சோம்பலும் மொழியாக்கப் பணியை மந்தமாக்கின. ஒருவழியாக மார்ச் முதல் வாரத்தில் தமிழாக்கப் பிரதியை அலெக்ஸுக்கு மின்னஞ்சல் செய்தேன். 



 


அதுவரை 'பாதி முடித்திருக்கிறேன், முக்கால்வாசி முடிந்தது' என்று நானாகச் சொன்னேனே தவிர அவராக ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. மின்னஞ்சலைப் பெற்று வாசித்து விட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்றார். அதன் பிறகு அந்தப் பிரதி பற்றிப் பேச்சு எழவில்லை. அலெக்ஸ் எனக்கு அளித்த ஊதியம் மன உறுத்தலையே கொடுத்தது. அவர் போன்ற சிறு பதிப்பாளருக்கு அது அதிகச் செலவுதான். எனினும் தொழில்முறையிலான பொறுப்பு என்று அதைச் செய்திருந்தார். சரிதான், ஆனால் அவர் கட்டாயப் படுத்தினார் என்பதற்காக அதை வாங்கியிருக்க வேண்டாம் என்று குமைந்து கொண்டிருந்தேன். அந்தத் தொகையில் சொந்தச் செலவு எதையும் செய்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தேன். சில நாட்களுக்குப் பிறகு திருவனந்தபுரம் செக்ரட்டேரியட் முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பழங்குடியினர் அமைப்புக்குக் கொடுத்தேன். கூடலூர் பழங்குடியினரைப் போலவே எஸ்டேட் நிர்வாகத்தால் நிலத்தின் மீதான உரிமை இழந்த செங்கரை ஆதிவாசிகளுக்கு அந்தத் தொகையைச்  சேர்த்தபோது நிம்மதியாக இருந்தது.

 

‘ஒரு வெள்ளாட்டின் ஒப்புதல்கள்’ என்ற பிரதி நூலாக்கம் பெறும் முன்னர் வே. அலெக்ஸ் மறைந்தார். அந்தப் பிரதியும் மறைந்தது என்றே எண்ணியிருந்தேன். அண்மையில் கணினிக் கோப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது அந்தத் தமிழாக்கம் கிடைத்தது. அதைப் பாதுகாக்கும் பொருட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டும் இங்கே பகிர்கிறேன்.

-- -------------------------------------- -- -------------------------------------------------------------------------------------------------


                                           ஒரு வெள்ளாட்டின் ஒப்புதல்கள்

                                    ஒரு பழங்குடிச் சமூகத்தின் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு.

 

                                                                         பிரபாகர் ஜெயபிரகாஷ்



முன்னுரை

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் நடுப்பகுதி. கூடலூரில் தென்மேற்குப் பருவமழை அப்போதுதான் தொடங்கியிருந்தது. நல்ல குளிர்.முழு நகரமும் பனியால் மூடப்பட்டிருந்தது. நான் தாமதமாக எழுந்து மெல்ல அந்த நாளைத் தொடங்கினேன். நான் வாடகைக்கு எடுத்திருந்த அறை மலை அடிவாரத்தில் இருந்தது. அங்கே கெய்ஸர் வசதி இல்லாததால் சாவதானமாக ஒரு தாம்பாளத்தில் நீரைச் சூடாக்கினேன். தயக்கத்துடனேயே குளிக்கப் போனேன். தேவையான வெப்ப ஆடைகளை அணிந்துகொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். குண்டும் குழியுமான சாலைதான்; ஆனால்  களப்பணி நாட்களில் நடை என்னை தகுதியானவன் ஆக்கியது. விடுதியில் காலைச் சிற்றுண்டி அருந்திய பின்பு  கோல்டன் கிளவுட் எஸ்டேட்டுக்குச் செல்ல ஒரு ஷேர் ஆட்டோவை அமர்த்திக்கொண்டேன்.  இரண்டு பெண்களும் ஓர் ஆணுமாக மூன்று பயணிகளுடன் அதில் பயணம் செய்தேன். அவர்கள் அந்தப் பகுதியில் இருக்கும் வெவ்வேறு தோட்டங்களில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள்.

 

கூடலூர், தேயிலை, காப்பி, ஏலத் தோட்டங்களால் சூழப்பட்ட மலைநகரம். தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தின் புகழ் பெற்ற மலைநகரமான ஊட்டி ( உதகமண்டலம்)யிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகரம். கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து பதினைந்து நிமிடத் தொலைவிலிருந்தது கோல்டன் கிளவுட் எஸ்டேட். ஆட்டோ ஓட்டுநர் என்னிடம் பத்து ரூபாய் கட்டணம் வாங்கினார். தனியார் சோதனைச் சாவடி ஒன்றின் முன்னால் இறங்கிக் கொண்டேன். நான் பயணம் செய்து வந்த முதன்மைச் சாலை அன்று பரபரப்பாக இருந்தது. கேரள மாநிலத்துக்  கோழிக்கோட்டையும் கர்நாடக மாநிலத்து மைசூரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அது. அங்கிருந்து சற்றுத் தொலைவில்தான் முதுமலை புலிகள் காப்பகமும் இருக்கிறது.

 

எஸ்டேட் நுழைவாயிலில் முதலில் தென்படுவது ஓர் அறிவிப்புப் பலகை. அது இவ்வாறு:

 

சென்னை உயர் நீதி மன்ற ஆணை. ரிட் மனு எண் 14817 - 1966 - 24 பிப்ரவரி 1999. அல்லூரையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்ந்த எல்லாத் தொழிலாளர்களும் குடியிருப்பாளர்களும் , அனுமதிக்கப்பட்ட இந்த நிலம் மேற்குறிப்பிட்ட தடை ஆணை மூலம் பாதுகாக்கப்பட்டது என்று எச்சரிக்கப் படுகிறார்கள். 374 தரநிர்ணய அறிக்கை 2017 இன் படி இந்த நிலப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மீறினால் சட்டபூர்வமான நடவடிக்கைக்கும் தண்டனைக்கும் உட்படுத்தப் படுவார்கள் - நிர்வாகத்தினர் .

 

 இந்த அறிவிப்பு எஸ்டேட்டுக்குள்ளே வாழும் ஆதிவாசி சமூகத்தினருக்கும் பிறருக்கும் விடப்பட்ட அப்பட்டமான மிரட்டலாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு , இந்த ரிட் மனுவின் மீதான அசல் தீர்ப்பை (சில்வர் கிளவுட் எஸ்டேட் - முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், மற்றவர்கள் வழக்கு  சென்னை உயர்நீதிமன்றம், W P No 14817 / 96 மற்றும் W M P No 29289 / 96 02 Fevruary 1999 )  பரிசோதித்தேன். அறிவிப்புப் பலகையில் இடம் பெற்றிருக்கும் தகவல் தவறானது;  திசை திருப்பப்பட்டது என்றும் ஆதிவாசி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவே இந்த விவாதம் எழுப்பப்பட்டது என்பதையும் அறிந்தேன்.

 

அன்று சோதனைச் சாவடி ( சங்கிலி கேட் ) யில் இரண்டு காவலர்கள் இருந்தார்கள். விசாரணைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டேன். நான் ஒரு தாவரவியல் ஆய்வாளனென்றும் பெட்ட குரும்பர்களிடமிருந்து மூலிகைகள் பற்றி ஆய்ந்தறிய வந்திருப்பதாகவும் அவர்களை நம்ப வைத்தேன். என்னுடைய தொடர்பாளரான பெட்ட குரும்பர் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த்,  என்னுடைய வருகையின் நோக்கம் பற்றி எஸ்டேட் காவலர்கள் விசாரித்தால் இந்தக் கதையைச் சொல்லும்படி ஆலோசனை கூறியிருந்தார். சில வருகைகளுக்குப் பின்னர் பழக்கப்பட்ட முகமாக மாறியிருந்தும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அதே கேள்விகளையே என்னிடம் கேட்டார்கள். களநிலவரத்தின்  சமூக அரசியல் கட்டுப்பாடுகள் காரணமாக என்னுடைய உண்மையான நோக்கத்தை  சக பங்காளர்களிடம் மட்டுமே வெளிப்படுத்தியிருந்தேன்.

 

கூடலூரிலுள்ள தோட்ட பூமி ( ஜன்மம் பூமி ) கடந்த நாற்பது ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடையே தொடர் விவாதமாக இருந்து வருகிறது ( மக்கள் சிவில் உரிமைக் கழகம் 2002 ). தற்போது , எஸ்டேட் முதலாளிகளே இந்த நிலத்தைத் தங்களது  முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். கோல்டன் கிளவுட் எஸ்டேட் முதலாளி , அந்த எஸ்டேட்டுக்குள்ளே இருந்த கிராமங் களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்கவில்லை. அவருடைய அக்கறைகளும் என்னுடைய நோக்கமும் எதிரெதிராக இருந்தன. பெட்ட குறும்பர்களின் மூதாதையர் நிலத்தை மீட்டெடுக்க உதவுவதற்காகவே  அவர்களுடைய வாய்மொழி வரலாறுகளைப் பதிவு செய்கிறேன் என்பதைத் தெரிவித்தால் எஸ்டேட் முதலாளி  என்னை உள்ளேயே விடமாட்டார் என்று உள்ளூர் வாசிகளுக்கு நிச்சயம் தெரிந்திருந்தது.

 

அல்லூர், கோடமூலா ஆகியவை அந்த எஸ்டேட்டுக்குள் இருந்த இரண்டு முக்கியமான கிராமங்கள். பெட்ட குரும்பர், பனியர், காட்டு நாயக்கர், இருளர் ஆகிய நான்கு முதன்மையான ஆதிவாசிகளுக்கும் காட்டில் வாழ்பவர்களான மண்டாடன் செட்டி, நாடார், தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கும் அவை வாழிடங்களாக இருக்கின்றன.  ( சமூக அமைப்பு, மறுவாழ்வுக்கான செயல் நடவடிக்கைக் குழு, 2012 ). இந்தக் கள ஆய்வின் பங்கேற்பாளர்கள் கோடமூலாவிலுள்ள பெட்ட குரும்பர்கள் ஆவர். கோடமூலாவில் பெட்ட குரும்பர் குடும்பங்கள் 72 உம் காட்டுநாயக்கர் குடும்பங்கள் ஐந்தும் உள்ளன.

 

பெட்ட குரும்பர் இனத்தின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்று கால்நடை வளர்ப்பு ( லோகன், 1887, பக் 114 ) ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் எஸ்டேட் முதலாளிக்கு எதிராக பெட்ட குரும்பர்கள் நடத்திய போராட்டத் துக்குப் பிறகே அந்த அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டதாக ஆனந்த் என்னிடம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு முறைகளில் எஸ்டேட் முதலாளி கால்நடை வளர்ப்பைத் தடைசெய்திருக்கும் தகவலை பரவலாக்கி இருந்தார். எனினும் பெட்ட குரும்பர்கள் அவருடைய எல்லா நடவடிக்கை களையும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.

 

 

2012 - 13 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றையே இந்த ஆய்வுக் கட்டுரை முன்வைக்கிறது. ஆதிவாசி மக்களின் உரிமைகளை எஸ்டேட் முதலாளி அடக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துவது  மட்டுமல்ல இந்த ஆய்வு. வருவாய், வனம், காவல்துறைகள் போன்ற அரசு எந்திரங்கள் பங்கேற்றிருப்பதையும் எடுத்துக் காட்டுவதும் ஆகும். எஸ்டேட் முதலாளி உள்ளூரில் செல்வாக்கான நபர். என்னுடைய கண்ணோட்டத்தில் வலுவான சமூக - அரசியல் ஆதரவு இல்லாமல் முன் குறிப்பிட்ட அறிவிப்புப் பலகை தொடர்பான விவாதங்கள் உருவாகியிருக்காது. பிலிப்பின் ஆக்கங்கள் ( 2003 மார்கன் 1884 ) இந்தக் கூற்றுக்குத் துணை புரிகின்றன. 'ஆதிக்க சமூகத்தின் அதிகாரமும் அறிவும் இணைந்தே செயல்படுகின்றன' என்பது பிலிப்பின் கூற்று. 19 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் உருவான பிரிட்டிஷ் காலனியாதிக்கம் முதலே உள்ளூரில் இந்தச் செயல் நடைபெற்று வருகிறது. காலனியாதிக்க காலகட்டத்தில் ஆதிவாசி மக்கள் அவர்களது பாரம்பரிய மண்ணிலிருந்தும் தொழிலிலிருந்தும் அகற்றப் பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக தோட்டத் தொழிலாளர்களாகக் கீழிறக்கப் பட்டார்கள்.

 

இந்தக் களத்தில் நிலவும் அச்சுறுத்தல், பொய் வழக்குகள், அதிகாரமின்மை, நிலத்துடனான உணர்வார்ந்த பிணைப்பு போன்ற சிக்கல்களே பெட்ட குரும்பர்களின் கதைகளைக் கற்பனையான தளத்தில் வெளிப்படுத்த என்னையும் ஆனந்தையும் கட்டாயப்படுத்தின. கோடமூலா ஒரு சிறு கிராமம். அவர்களின் கதைகளை பெயர் மாற்றி எழுதினாலும் சம்பந்தப்பட்ட தனிநபர்களால் தங்களது அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமற் போகும். இந்த ஆய்வுக்காக  ஆதிவாசி முன்னேற்ற சங்கம் (ஏ எம் எஸ் )  ,   ( சமூக அமைப்பு, மறுவாழ்வுக்கான செயல் நடவடிக்கைக் குழு,  ( அக்கார்ட் - ACCORD ) ஆகிய சிவில் அமைப்புகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டேன். பங்கேற்பாளர்கள் நிரந்தரமான அச்சத்திலேயே இருந்தார்கள். எனவே இந்தக் கதைகளை வெளியிடுவதன் வாயிலாக அவர்களுடைய வாழ்க்கைக்கும் அமைதிக்கும் ஊறு நேர்வதை நான் விரும்பவில்லை. 90 களின் இடைப் பகுதியில் நடந்த போராட்டத்தில், எஸ்டேட் முதலாளியும் காவல்துறை அதிகாரிகளும் பெட்ட குரும்பர் தலைவரான கேத்தன் மீது பொய் வழக்குத் தொடுத்திருந்தனர். தனது சொந்த மக்களின் கண்முன்னாலேயே சிறப்பு அதிரடிப் படையினரின்  துப்பாக்கிக்கட்டைகளால் கொடூரமாக கேத்தன் தாக்கப்பட்டார். சில நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார். அப்போதிருந்து பக்கவாத பாதிப்புக்குள்ளானார்; சுறுசுறுப்பை இழந்தார்.

 

முறையியல்

 

கற்பனையான களங்களை உருவாக்குவதிலுள்ள சவால் என்னை பல்வேறு இனவரைவியல் ஆக்கங்களுக்கு இட்டுச் சென்றது. பாண்டீலியர் எழுதிய இன வரைவியல் நாவலான 'தி டிலைட் மேக்கர்ஸ் ( 1971 )  விஷயத்தைச் சீராக்குவதற்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது. ப்யூபோ இந்தியர்களின் கதையை எடுத்துச்சொல்ல  பங்கேற்பாளர்களின் விவரணையிலிருந்த சாரத்தையும் உயிர்ப்பையும் தக்கவைத்துக் கொண்டு அவர் கற்பனையான களத்தை உருவாக்கினார். அதைப் போன்றே, டென்சின் , லிங்கன் ஆகியோரின் படைப்பான ' ஹேண்ட் புக் ஆஃப் குவாலிடேட்டிவ் ரிசர்ச்', எனது கருத்து களுக்கும் கோட்பாட்டு அடித்தளத்துக்கும் செறிவூட்டியது.  அதுவே படைப்பாற்றல் கொண்ட ஆய்வு நெறிமுறையை அறிமுகப் படுத்தியது; அனுபவவாதியின் இருமையை எதிர்கொள்வதற்கான வழிகளை அமைத்துத் தந்தது. இறுதியாக, இந்தப் போராட்டம் கால்நடை வளர்ப்புடன் தொடர்புடையது என்பதால் ஒரு வெள்ளாட்டை மையப் பாத்திரமாகக் கொண்டு பங்கேற்பாளர்களின் விவர¨ணைகளைப் பதிவு செய்யத் தீர்மானித்தேன். பங்கேற்பாளர்கள் அனைவரின் விவரணையிலும் ராணி, என்ற வெள்ளாடு, பாத்திரமேற்கிறது. போராட்டத்தின் மையப்பாத்திரம் அவள்தான்.  எஸ்டேட் வாட்சர் ஒருவன் அவளைக் கடத்திச் செல்ல முயன்றபோது கோடமூலா ஆதிவாசிகளிடம் பிடிபட்டான். அதிலிருந்துதான் போராட்டம் வெடித்தது.

 

பின் நவீனத்துவ அணுகுமுறையையும் இனவரைவியல் , வாய்மொழி வரலாறு, ஆழமான நேர்காணல்கள் உள்ளிட்ட முறைகளையும் பின்பற்றி இருக்கிறேன். குரும்பர்களின் அன்றாடப் போராட்டத்தைப் புரிந்து கொள்ள இந்த முறைகள் எனக்கு உதவின. ஆதிவாசிகள் வாய்மொழி மரபைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய கடந்த ஐந்து தலைமுறைகளின் வரலாற்றைப்  பதிவு செய்ய வாய்மொழி வரலாறே துணைசெய்தது.

 

தரவு சேகரிப்புகளின் பட்டியலைத் தயாரித்தேன். ஜூலை 2012 க்கும் ஜனவரி 2013 க்கும் இடையில் ஏழு மாத காலங்கள் கூடலூரில் தங்கியிருந்து பன்னிரண்டு நேர்காணல்களை மேற்கொண்டேன். போராட்டத்தின்போது இந்தத் தரவுகள் பரவலாக்கப் பட்டன. பங்கேற்பில்லாத பார்வையாளன் என்ற உபாயத்தைக் கையாண்டேன்.

 

ஆய்வுக்குரிய கேள்விகளை மதிப்புரைகளின் அடிப்படையிலும் இதற்கு முன்பு அரசு சார்பாகப் பணியாற்றியபோது கூடலூருக்குச் சென்ற அனுபவங்களின் அடிப்படையிலும் வடிவமைத்துக் கொண்டேன். அக்கார்ட், ஏ எம் எஸ் உறுப்ப்பினர்களுடன் நடத்திய ஆரம்ப கட்ட விவாதங்கள் கூடலூரிலுள்ள ஏழு கிராமங்களைத் தேர்ந்தெடுக்க வழி கோலின. மே 2012 இல், இந்த ஏழு ஆதிவாசி கிராமங்களையும் சென்று பார்த்து கோடமூலாவைத் தேர்ந்தெடுத்தேன். எஸ்டேட் முதலாளிகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் கோடமூலா செயலூக்கம் மிக்கதாகவே இருந்தது.

 

பெருமளவில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்களைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமான பிரச்சனைகள் இருந்தன. முதலாவதாக, பூர்வகுடி மக்களின் வரலாற்று உரிமைகளை எஸ்டேட் முதலாளிகள்  பறித்துக் கொண்டனர், அவர்களது அடையாளங்களை அழித்தனர்; அவர்களுடைய மூதாதையர் நிலத்திலேயே  அவர்களைத் தோட்டக் கூலிகள் ஆக்கினர். இரண்டாவதாக, அரசு ஆதிவாசி கிராமங்களில் எந்த விதமான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும்  தவிர்த்தது. அதற்கு  இரண்டு முதன்மையான காரணங்கள் குறிப்பிடப் படுகின்றன. சுற்றுச் சூழலுக்கு நேரும் பாதிப்பு என்பது ஒன்று அந்தப் பொறுப்பையும் எஸ்டேட் முதலாளிகளுக்கு மாற்றி விட்டது இரண்டாவது.

 

இந்த் ஆய்வை மேற்கொள்ளும் போது, ஆதிவாசி சமூகத்தின் இடையறாத போராட்டங்களைப் புரிந்து கொள்வதும் ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் மறுப்புகளைப் பதிவு செய்வதும் அந்தப் போராட்டக் கதைகளைப் பரவலான பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதுமே என்னுடைய நோக்கங்களாக இருந்தன. இந்த ஆய்வுக்காக அமெரிக்காவிலுள்ள தலாய் லாமா ஆய்வாளர் அமைப்பின் நல்கையைப் பெற்றேன். அது தவிர கலைஞர்களும் வழக்கறிஞர் களுமான என் நண்பர்கள் பலரும் உதவினார்கள். இது மும்பை,  டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் நான் மேற்கொண்ட டாக்டர் பட்டத்துக்கு முந்திய ஆய்வின் பகுதியும் ஆகும். பெட்ட குரும்பர்கள் குறித்த  சிறிய ஆவணப் படத்தையும் நாங்கள் தயாரித்தோம். படத்தில் இடம் பெற்றிருக்கும் சில ஓவியங்களை இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன்.


                                                                                     ஓவியம்: குரூஸ்

 

ராணியின் ஒப்புதல்கள்

 

நான் அக்ரமின் வீட்டுக் கதவைத் தட்டி, யாராவது பதில் சொல்லக் காத்திருந்தேன்.

 

''வணக்கம், நான் ராணியைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறேன்'' என்றேன்.

 

''ராணியா? ராணி என்ற பெயரில் இங்கே யாரும் இல்லை.தவிர நாங்கள் இந்து குடும்பம் அல்ல. தவறான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள்'' அக்ரம் பதில் சொன்னார்.

 

'' இந்த வீட்டுக்குத்தான் இப்ராகீம் ராணியை விற்றார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்''  என்றேன்.

 

''நீங்கள் வெள்ளாட்டைப் பற்றியா சொல்கிறீர்கள்?'' என்று  கேட்டார்.

 

''ஆமாம்''என்று  பதில் சொன்னேன்.

 

''நீங்கள் எதற்காக ஆட்டைப் பார்க்க விரும்புகிறீர்கள்? அதை வாங்கப் போகிறீர்களா? '' என்று கேட்டார். 

 

''இல்லை , அவளிடம், அதாவது அந்த ஆட்டுடன் பேச வேண்டும்''

 

'' என்ன சொல்கிறீர்கள், அவளிடம் பேசுவதா?  நீங்கள் குடித்திருக்கிறீர்களா?  ஆட்டுடன் ஒருவர் எப்படிப் பேச முடியும்?''

அவர் கோபப்படுவதை என்னால் பார்க்க முடிந்தது.

 

'' சில நிமிடங்கள் ராணியைப் பார்த்துப் பேச என்னை அனுமதியுங்கள்'' 

நான் மன்றாடினேன்.

 

'' அதை ராணி என்று என்ன தைரியத்தில் அழைக்கிறீர்களோ? அது கொட்டகையில் இருக்கிறது. நீங்கள் போகும்போது என் தூக்கத்தைக் கலைக்காமல் போங்கள்'' என்று கறாராகச் சொன்னார். 

 

'நன்றி' என்று பதில் சொன்னேன்.

 

குறுகலான சந்து வழியாக நடந்தேன். வாசலிலிருந்து பார்த்தபோதே கொட்டகை தென்பட்டது. சந்துக்கு இணையாக ஓடிய சாக்கடையிலிருந்து துர் நாற்றம் எழுந்து வந்தது. எனக்கு ஆர்வம் மேலிடத் தொடங்கியது.

 

''யார் இவர்? இவரை நான்  இங்கே முதல் முறையாகப் பார்க்கிறேன். பார்க்க விநோதமாக இருக்கிறார். கொட்டகைக்குள்ளே நுழைய  மிகவும் குனிய வேண்டியிருந்ததே! அவருக்கு ஆறடிக்கும் அதிகமான உயரம் இருக்கலாம். இவர்தான் என்னைப் புதிதாக வாங்கியவரா?  இவர் மறுபடியும் என்னை வேறு ஒரு இடத்துக்குக் கொண்டு போகப் போகிறாரா? ''

முதன்முதலாக என்னைப் பார்த்ததும் ராணியின் மனதுக்குள் இது போன்ற கேள்விகள் நிரம்பின.

 '' என் பெயர் பிரபாகர். நோனியின் நண்பன். பெட்ட குறும்பர்களின் போராட்டத்தைப் பற்றிப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்'' என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

 

பெட்ட குரும்பர்களுக்கு கேத்தன், கேத்தி, பொம்மன் போன்ற சில பொதுப் பெயர்கள் உண்டு. ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பிரித்துப் பார்க்க ஒருவர் பெயருக்கு முன்னால்  அவர்களுடைய குணத்தையோ தோற்றத்தையோ அடிப்படையாகக் கொண்ட அடைமொழிகளைச் சேர்த்துக் கொள்வார்கள். உதாரணமாக, எப்போதும் பொய் சொல்லும் சோமனின் பெயர் டூப் சோமன்.

 

'' நான் கிராமத்தைவிட்டு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. என்னைப் பார்க்க யாரும் வரவில்லை, என்னுடைய தோழி நோனி கூட. உண்மையில் மனிதர்களில் எனக்கு இருக்கும் ஒரே தோழி அவள்தான். பிறந்த போதிலிருந்தே அவளை எனக்குத் தெரியும். என்னை விட எட்டு மாதம் இளையவள். நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம்’’. ராணி நினைவு கூர்ந்தாள். 

 

''நோனிக்கும் உன்னைப் பற்றித்தான் ஏக்கம். உன்னைப் பார்க்க வர அவள் பெற்றோர்களிடம் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.'' என்னுடைய சொற்கள் அமைதியைக் கலைத்து நொறுக்கி ராணியை கவனத்துக்குக் கொண்டு வந்தன.

 

''அப்படியா?'' ராணி பரவசப்பட்டதுபோலத் தெரிந்தது.

 

'' கடவுளே, உன் குரல் மிக வேடிக்கையானதாக இருக்கிறது. உனக்கு வேண்டிய சிலரிடம் மட்டும்தான் நீ பேசுவாய் என்று நோனி சொன்னபோது நான்  நம்பவில்லை'' என்று பாராட்டினேன்.

 

'' பலருக்கும் நான் பேசுவது கேட்காதபோது இந்த ஆசாமிக்கு மட்டும் என் குரல் கேட்பது எப்படி என்று தெரியவில்லை'' என்று ராணி யோசித்தாள்.

 

'' என்னை கேலி செய்ய வந்தீர்களா என்ன? சொல்லுங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்?''  அவள்  தொந்தரவு அடைந்திருப்பது தெரிந்தது.

 

'' மன்னிக்கவும் அது என் நோக்கமல்ல. கோடமூலாவைப் பற்றி, நீ அங்கமாக இருந்த குடும்பத்தைப் பற்றி, நோனிக்கும் உனக்குமான உறவைப் பற்றி, எஸ்டேட் காவலாளி உன்னைக் கடத்திக் கொண்டு போக முயன்றபோது மூதாட்டிகள் எப்படிப் போராடி உன்னை மீட்டார்கள் என்பதைப் பற்றிச் சொல்'' என்று வேண்டிக் கொண்டேன்.

 

'' என்னிடம் ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? கோடமூலாவிலிருக்கும் மக்களிடம்தான்  கேட்க வேண்டும். விரிவாகச் சொல்ல அவர்களால்தான் முடியும்'' என்றாள் அவள்.  

 

'' நான் சில பேரைச் சந்தித்துச் சில தகவல்களைத் திரட்டியிருக்கிறேன்.  இருந்தாலும்,   குறிப்பிட்ட சம்பவத்தில்  மக்கள் போராடியது உனக்காகத்தான் என்பதால், உன்னுடைய கதையை உன் வார்த்தைகளிலேயே கேட்க விரும்புகிறேன். '' என்றேன்.

 

'' அந்தச் சம்பவத்தில் நான் வெறும் பலியாடுதான் என்பதை நீங்கள் இதற்குள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். உண்மையான நோக்கம் அதை விடவும் ஆழமானது. எஸ்டேட் உரிமையாளர் ஆதிவாசிகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குத் தன்னையே அண்டியிருக்க வேண்டும் என்பதற்காக கால்நடைகளைத் தடைசெய்ய முயன்று கொண்டிருந்தார்'' என்று பகிர்ந்து கொண்டாள்.

 

’’நானும் நோனியும் சிறு குட்டிகளாக இருந்தபோது பக்கத்திலிருக்கும் காட்டிலும் தோட்டங்களிலும் சாயங்காலம் முழுவதும் விளையாடிக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அது அந்த நாளின் மகிழ்ச்சியான பொழுதாக இருந்தது. சுற்றிலும் செடிகளும் மரங்களும் இருந்ததால் கண்ணா மூச்சி ஆட்டமாடுவது குதூகலமாக இருந்தது. சில சமயங்களில் வீட்டில் உண்ணப் பிடிக்காமலிருந்தால் காட்டில் இருக்கும் வளமான தாவரங்களை வைத்தே இரவுணவை முடித்துக் கொள்வேன்.

 

’’ஒருநாள் எஸ்டேட் உரிமையாளர் , எஸ்டேட் தொழிலாளர்கள் சிலருடன் வந்து நாங்கள் வழக்கமாக விளையாடும் பகுதியைச் சுற்றி அடையாளமிட்டார்கள். மொத்தத் தோட்டத்தைச் சுற்றி மின்சாரக் கம்பிகளால் வேலியடைத்தது எதற்காக என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆயிரம் ஏக்கருக்குக்கு மேல் பரந்து கிடக்கும் எஸ்டேட் , அந்த முதலாளிக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அந்த நிலத்தில் பெட்ட குரும்பர், பனியர், இருளர், காட்டு நாயக்கர் போன்ற ஆதிவாசிகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த நிலத்தின் மீது அவரைவிட அவர்களுக்கே உரிமை அதிகம்’’.

 

துண்டறிக்கைகளிருந்தும் வெவ்வேறு முக்கியமான தகவலாளர்களுடன் நடத்திய விவாதங்களிலிருந்தும், எஸ்டேட் முதலாளி, மொத்தக் காட்டைச் சுற்றியும் ( அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த ) தோட்டங்களைச் சுற்றியும் , மரக் கடத்தல்காரர்களிடமிருந்து காட்டையும் வன விலங்குகளிடமிருந்து ஆதிவாசிகளையும் பாதுகாக்கும் சாக்கில் , மின் இணைப்புக் கொடுக்கப்பட்ட கம்பி வேலிகளை அடைத்திருந்தார் என்பதை நான் கண்டு பிடித்திருந்தேன்.  நோக்கம் கடத்தல்காரர்களிடமிருந்து காட்டைப் பாதுகாப்பதுமட்டுமல்ல;  பூர்வகுடிகளையும் பிற சமூகத்தவர்களையும் தமது கண்காணிப்பில் வைத்திருப்பது என்பதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரே மரக்கடத்தலுக்காக 2007 ஆம் ஆண்டு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டவர்தான். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது ( அந்த வழக்கை என்னால் சரிபார்க்க முடியவில்லை). இதில் மேலும் முரணானது என்னவென்றால் பெட்ட குரும்பர் வீடுகளுக்கு இன்னும் கூட மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் அல்லூரில் இருக்கும் பலசரக்குக் கடையில் மூன்று ரூபாய் செலுத்தித்தான் தங்கள் கைப்பேசிகளை சார்ஜ் செய்கிறார்கள்.

 

எஸ்டேட் முதலாளி கால்நடைகளை வலுவான  உபாயமாகக் கையாளுவது ,  பூர்வகுடிச் சமூகத்தவர்களை அவர்களது பரம்பரைத் தொழிலைச் செய்வ திலிருந்து ( கால்நடை வளர்ப்பிலிருந்து ), தடுப்பதற்காகத்தான். கடந்த சில ஆண்டுகளாக எஸ்டேட் தொழிலாளர் பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பதால் ஆதிவாசிகளை முழுநேர எஸ்டேட் தொழிலாளர் களாகப் பணிபுரிய வைக்கத்தான்.

 

எஸ்டேட்டுக்குள் வசிக்கும் ஆதிவாசிகளின் வலுவான பிரிவு இந்தப் பிரச்சனையை எல்லா ஆதாரங்களுடனும் ஊடகங்களுக்குக் கொண்டு சென்றது. எஸ்டேட் முதலாளி நீதிமன்ற ஆணையைத் தவறாக மேற்கோள் காட்டுகிறார் என்பதையும் மக்களை மிரட்டுகிறார் என்பதையும் கொண்டு சென்றது. மலையாள நாளிதழ் ஒன்றைத் தவிர வேறு எந்தச் செய்தித்தாளும் எஸ்டேட் முதலாளியின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை என்பது வருத்தத்துக்குரியது. இதன் தொடர்ச்சியாக உள்ளூர் பத்திரிகை முகவருக்குத் தினந்தோறும் தொலைபேசி மிரட்டல்கள் வந்தன.

 

சிக்கலான கேள்விக்குப் போகும் முன்பு நான் கேட்டேன் '' ராணி, நீ பிறந்தது முதலே பீமனின் குடும்பத்துடன் தான் இருந்து வந்தாயா?''

 

'' இல்லை'' என்றாள்

 

''எனக்கு ஐந்து மாதம் ஆகும் வரை அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இப்ராஹிம் வீட்டில்தான் வளர்க்கப்பட்டேன். பிறகு ஒப்பந்தத்தின்பேரில் பெட்ட குரும்பரான பீமனின்  பராமரிப்பில்  என்னை விட்டார். என்னுடைய முதல் ஈற்றைப் பராமரிப்புச் செலவுக்காக எடுத்துக் கொள்ளலாம். இரண்டாவதாகவும்  அதற்குப் பிறகும் போடும் குட்டிகள் எல்லாமும் இப்ராஹிமுக்குச் சொந்தம் என்பது ஒப்பந்தம்.

 

''பீமன் வீட்டுக்கு வந்தபிறகுதான் எனக்கு ராணி என்று பெயர் வைக்கப்பட்டது.  வாழ்க்கையில் அதுவே என் மீது அன்பும் பாசமும் காட்டப்பட்ட முதல் சந்தர்ப்பம். இங்கே  இருப்பதுபோன்ற அசுத்தமான கொட்டைகையில் அங்கே அடைக்கப்படவோ கட்டிப்போடப் படவோ இல்லை. ஆரம்பத்தில் இரவு நேரங்களில் மட்டும் கட்டிப் போடப்பட்டேன். அந்தக் கிராமத்தில் நான் சுதந்திரமாகவே வாழ்ந்தேன், யார் வீட்டுக்குள்ளே வேண்டுமானாலும் நுழைய முடியும். குழந்தைகளால் அரவணைக்கப்பட முடிந்தது. கால்நடைகளைத் தடுப்பதற்காக அவர்கள் மின்சார வேலி போட்ட பின்பு வழக்கத்தை விட அதிக நேரம்  பீமன் என்னை கொட்டகையிலேயே கட்டிப்போடத் தொடங்கினார். ஒரு நாளைக்கு ஒருமுறை பக்கத்து வயலில் மேய்ச்சலுக்கு விடுவார்கள். சுற்றிலுமிருந்த வலுவான அச்சுறுத்தலிலிருந்து அந்தக் குடும்பங்கள் எங்களைப் பாதுகாக்கத் தொடங்கின.

 

அவள் முகம் துக்கத்தில் ஆழ்ந்தது.

 

''நீ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியைத் தவிர, எஸ்டே ட் உரிமையாளருக்கும் பூர்வகுடிகளுக்கும் இடையில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டதாக நினைவிருக்கிறதா?'' என்று கேட்டேன்.

 

'' ஆமாம். ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. மாத்தியின் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த என் சிநேகிதி தோலியைக் குறிவைத்திருந்தார்கள். மாத்தியின் மகள் வார்டு கவுன்சிலராக இருந்தாள். அவள் எஸ்டேட் உரிமையாளருக்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். தோலியை வளர்க்கிறார்கள் என்பதற்காகவே எஸ்டேட் முதலாளி மாத்தியின் குடும்பத்துக்குத் தொல்லை கொடுத்தார். மாத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - அவளுடைய இரண்டு பிள்ளைகள், இரண்டு மருமகள்கள் - எஸ்டேட்டில் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடைசியாக தோலியையும் என்னைப்போலவே விற்க வேண்டியதாயிற்று''

 

'' வருத்தப்படுகிறேன். உன்னுடைய தோழியை இழந்துவிட்டதைக் கேட்க வேதனையாகத்தான் இருக்கிறது. உனக்குப் பெரிய துன்பமாக இருந்திருக்கும்'' என்றேன்.

 

சிறிது நேரத்துக்குப் பின்பு அவள் சொன்னாள்: '' நீங்கள் என்னைப் பார்க்க வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நான் இங்கே தன்னந்தனியாக இருப்பதால் யாருடனாவது பேசுவதற்காகக் காத்துக் கொண்டு இருந்தேன். நோனியைத் தவிர வேறு யாரும் என் பேச்சைக் கேட்டதில்லை. இப்போது என்னுடைய உணர்ச்சிகளைப் பங்கு போட்டுக்கொள்ள இன்னொரு ஆள் எனக்குக் கிடைத்திருக்கிறார்'

 

'' எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?'' அவள் கேட்டாள்.

 

''நிச்சயமாக'' என்றேன்.

 

''பீமனுக்கும் அவர் குடும்பத்துக்கு ஒரு சேதி சொல்ல வேண்டும். நீங்கள் அதைத் தெரிவிப்பீர்களா?'' என்று வேண்டிக் கொண்டாள்.

 

'' நிச்சயம் செய்கிறேன்'' என்று வாக்குறுதியளித்தேன்,

 

'' நான் வருத்தம் தெரிவிக்க வேண்டும். என்னால்தானே அவர்கள் கிராமத்தை விட்டு அகதிகளைப்போல வெளியேறி  காமராஜ் நகரில் தலைமறைவாக இருக்கிறார்கள்'' என்றாள்.

 

 

''அதைப் பற்றி வருந்த வேண்டாம் அது உன்னுடைய தவறு அல்லவே?'' என்று ஆறுதல் சொன்னேன்.

 

''உனக்கு ஆட்சேபமில்லை என்றால் அன்று நடந்த சம்ப்வங்களை நினைவுபடுத்திச் சொல்ல முடியுமா?''  தயக்கத்துடன் கேட்டேன்.

 

'' விடிந்திருக்கவே தேவையில்லாத நாள் அது. என்னைச் சுற்றியிருந்த எல்லாமும் சீட்டுக்கட்டு மாளிகைபோலச் சரிந்து விழுந்தது'' அவள் தேம்பினாள்.

 

'' சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் கிராமத்துக்கு வந்திருந்தார். அதனால் பெட்ட குரும்பர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை எதிரொலிக்கத் தொடங்கிய நாளாக இருந்தது. ஆதிவாசிகளின் துயரங்களையும் துக்கங் களையும் பற்றி  அக்கறை கொள்ளும் மனிதர்களும் நாட்டில்  இருக்கிறார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் ஆதிவாசிகள் இருந்தார்கள்.

 

நீதிபதியின் வருகை ஒரு பஞ்சாயத்துக் கூட்டத்துக்காக இருந்தது. அந்தக் கூட்டத்தில் ஆதிவாசிக் குடும்பத்தினர் ஏராளமாகக் கலந்து கொண்டார்கள்.  தங்களுடைய தாங்கொணாத துயரங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். தங்களுடைய வீட்டுத் தோட்டங்கள் எஸ்டேட் உரிமையாளரால் எப்படிச் சூறையாடப்பட்டன என்பதையும் கால்நடைகளுக்குத் தடைபோடப் பட்டதையும் வறுமையைப் பற்றியும் மின்சாரம் இல்லாதது பற்றியும்  ஜன்மம் எஸ்டேட் சட்டம் 17 ஆம் பிரிவின் மறைவில் கட்டுமானப் பணிகள் தடுக்கப்பட்டதையும் மோசமான குடிநீர், வடிகால் வசதிகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள். நீதிபதி உருகிப் போனார். தன்னுடைய முழுமையான ஆதரவு ஆதிவாசிகளுக்கு இருக்குமென்று உறுதி அளித்தார்.

 

நிலைமை மேலும் சீரழியத் தொடங்கியது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கிடையில் எஸ்டேட் முதலாளி கூட்டத்துக்குள் தனது உளவாளிகளையும் அமர்ந்தி யிருந்தார். நீதிபதியுடனான கூட்டம் முடிந்த உடனேயே , அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கவும் முடிவு செய்யவும் பெட்ட குரும்பர் சமூகக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்த இடமும் என் வீடும் கிராமத்தின் இரண்டு முனைகளில் இருந்தன.

 

 

உயர்நீதிமன்ற நீதிபதியின் வருகையின் விளைவு பற்றி உள்ளூர்வாசிகளிடம் நான் விசாரித்தேன். கிராமத்தின் வருந்தத் தக்க நிலைமையை ஆராய சில அரசு அதிகாரிகளை நியமித்தார்; விசாரணை நடத்தவும் அதன் தொடர்ச்சியாக வளர்ச்சியை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியும் சில அரசுத்துறைகளுக்குக் கடிதங்கள் எழுதினார் என்பனவற்றை அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் கிராமத்தை எதுவும் மாற்றவில்லை. நிலைமைகள் அப்படியே இருந்தன''.

 

 

ராணி சட்டென்று உணர்ச்சிவசப்பட்ட பின்னர் தொடர்ந்தாள் : '' அன்றைக்கு என் வீட்டைச் சுற்றியிருந்த பகுதி காலியாக இருந்தது. குளிர்ந்த காற்றால் சூழல் அடர்த்தியாக இருந்தது. லலிதா அம்மாவும் நானும் மட்டுமே தனியாக இருந்தோம். எல்லா நாட்களையும் போலவே 12.30 மணிக்கு அவர் என்னை அவிழ்த்து , பக்கத்திலிருந்த பலா மரத்தின் அடியில் மேய விட்டார். நான் கொஞ்சம் புல்லையும் வேப்பிலையையும் தின்றேன்.

 

லலிதா அம்மா தண்ணீர் எடுப்பதற்காக வீட்டைவிட்டுப் போனார். நான் நெருக்கத்தில் பேச்சுக் குரலைக் கேட்டேன். கூட்டத்தைப் பற்றியும் மக்கள் இயக்கத்தைப் பற்றியும் யாரோ கைப் பேசியில் பேசுவதைக் கேட்டேன். மறு முனையிலிருந்தவர் கூட்டம் இன்னும் சிறிது நேரம் தொடரும் என்று உறுதியளிப்பதும் தெரிந்தது.

 

அந்த ஆள் என்னை நோக்கி வரத் தொடங்கினான். அவனை இதற்கு முன்பே நான் பார்த்திருக்கிறேன். அவன் பெயர் தாமோதரன். அல்லூரைச் சேர்ந்தவன். ஆதிவாசி அல்ல. எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்க்கிறான். நான் பயந்து உரக்கக் கத்த ஆரம்பித்தேன். அவன் என்னிடம் ஏன் இதைச் செய்தான் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. விரைவில் ஒருவிதமான அச்சம் என்னைச் சூழத் தொடங்கியது.

 

 ஆரம்பத்தில் அவனும் பதற்றமாக இருப்பது தெரிந்தது. என்னை கட்டிப் போட்டிருந்த கயிற்றின் முடிச்சை அவிழ்க்கப் பாடுபட்டான். நான் அவனுடைய தொடையில் மூன்று உதைகள் விட்டேன் ஆனால்  அவனுக்கு வலிக்கவில்லை. என்னுடைய கூக்குரல் ஆட்களின் கவனத்தை இழுக்கும் அளவுக்கு உரத்ததாக இருக்கவில்லை. எனவே நாங்கள் சற்று நேரம் போராடினோம். வெகு சீக்கிரமே அவன் முடிச்சை அவிழ்த்து மண்பாதை வழியாக என்னை இழுத்துக் கொண்டு போனான். அவன் என்னைக் கடத்திக் கொண்டு போகிறான். அதிர்ஷ்ட வசமாக அந்த தருணத்தில் லலிதா அம்மா தண்ணீர்க் குடத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் மண்குடத்தைத் தரையில் போட்டு விட்டு என்னை நோக்கி  ஓடி வந்தார்''.

 

கன்னத்தில் வழியும் கண்ணீர்ப் பெருக்கை ராணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

''அப்போதுதான் ஒரு தாயின் அன்பை முதன்முறையாக உணர்ந்தேன். லலிதா அம்மா பிதற்றிக் கொண்டிருந்தார். தாமோதரனைப் பார்த்துக் கத்தினார். என்னை விட்டுவிட்டுப் போகச் சொன்னார். ஆனால் அந்த மனித அரக்கன் அவர் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. முரட்டுத்தனமாக அவரைத் தள்ளிவிட்டான். கீழே தள்ளி விடப்பட்டவர்  உதவிக்காகக் கூக்குரலிட்டார்.  குடிசைக்குள்ளேயிருந்து நோனி ஓடிவந்தாள். லலிதா அம்மா தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். அம்மாவின் இடது முழங்கை முறிந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கூட்டம் நடக்கும் இடத்துக்கு ஓடிப் போய் ஆட்களை அழைத்து வரும்படி நோனியிடம் அறிவுறுத்தினார். நோனி மடமடவென்று மறைந்தாள்.

 

நோனி அவ்வளவு வேகமாக ஓடுவதை நான் பார்த்ததில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் ஓட்டப் பந்தயங்களில் எப்போதும் நான்தான் வெற்றி பெறுவேன்.

நான் அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த ஓட்டம் உணரச்செய்தது. காயம் பட்டு ரத்தம் கசிகிற லலிதா அம்மாவை விட்டு விட்டு என்னைக் காப்பாற்ற ஆட்களை அழைத்து வரப்போனாள். இதற்கு இடையில் என்னுடைய நான்கு கால்களும் கட்டப்பட்டு ஒரு பைக்கில் சேர்த்துப் பிணைக்கப்பட்டேன். பைக் புறப்பட இருந்த நேரத்தில் ஆட்கள் அதைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். சாவியை எடுத்துக் கொண்டார்கள்''.

 

'' பெட்ட குரும்பர் மூதாட்டிகளை  நான் போற்றுகிறேன்’’. என்று தொடர்ந்தாள்.

’’அவர்கள் துணிச்சலானவர்கள்; அச்சமறியாதவர்கள். அவர்கள் தாமோதரனைச் சுற்றி நின்று விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதேசமயம் , கிரிமினல் வழக்காக ஆகிவிடக் கூடாது என்பதற்காக தாமோதரனைச் சுற்றி நின்ற பெட்ட குரும்ப ஆண்களை விலகிப் போகச் சொன்னார்கள்.

 

’’நான் முன்பே உங்களிடம் சொன்ன , கேத்தன் மீது சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய அட்டூழியங்களுக்குப் பிறகு முதிர்ந்த பெண்களே போராட்டங்களுக்குத் தலைமை ஏற்று நடத்தத் தொடங்கியிருந்தார்கள். காவல்துறையினரால் ஆண்கள் மீது நடத்தப்படும் அத்து மீறல்களுக்குப் பெண்கள் உள்ளாக மாட்டார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். மற்ற பெட்ட குரும்பர் கிராமங்களிலும் இதே நடத்தையை நான் பார்த்திருக்கிறேன்.

 

''தோட்டத்துக்குள்ளிருக்கும் செடிகளை நான் மேய்ந்து கொண்டிருந்தேன். அதனால் என்னைப் பிடித்துக் கொண்டு போவதாக தாமோதரன் கூட்டத்தினரிடம் சொன்னான். தோட்டம் என் வீட்டிலிருந்து மிகவும் தூரத்தில் இருந்ததால் அவனுடைய வாதத்தை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏராளமான குரல்கள் உரத்தும் அவனைத் திட்டிக் கொண்டும் இருந்தன. நான் மயங்கி விழவிருந்தேன். சொற்ப விநாடி ஆசுவாசம் என்னுடைய உணர்வை மீட்டுக் கொள்ள எனக்கு உதவியது. இதற்கிடையில் தாமோதரனும் அவனுடைய பைக்கும் பிடித்துவைக்கப்பட்ட செய்தி எஸ்டேட் முதலாளிக்குப் போய்ச் சேர்ந்தது. அதுபோன்றே பெட்ட குரும்பர்களும் தங்கள் நலம் விரும்பிகளை ஆதரவுக்காக அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

’’எஸ்டேட் முதலாளி  உள்ளூர் காவல்துறை ஆய்வாளரை உதவிக்காக அழைத்திருந்தார். ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு துணை ஆய்வாளரான பெண் காவலர்  சம்பவ இடத்துக்கு எஸ்டேட் ஜீப்பில் வந்து சேர்ந்தார்.   உள்ளூர்வாசிகள் தங்கள் கவனத்தை அவர் மீது திருப்பினார்கள்; எஸ்டேட் ஏஜெண்டாக நடந்து கொள்வதாக அவரை ஏளனம் செய்தார்கள். அவருடைய அரசாங்க வாகனத்துக்கு  அரசு டீசல் விநியோகிப்பதில்லையா என்று கேட்டு அவரைக் கேலி செய்தார்கள்.


கூடலூரிலிருக்கும் அரசு அதிகாரிகள் எஸ்டேட் முதலாளிகளிடமிருந்து  மாதா மாதம் லஞ்சம் பெறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து  கேள்விப்பட்டிருந்தேன். லஞ்சத்துக்கு அப்பால் கோல்டன் கிளவுட் எஸ்டேட் முதலாளி ஒவ்வொரு மாதமும் காவல்துறைக்கு 25 லிட்டர் டீசலை அன்பளிப்பாகக் கொடுக்கிறார். அரசு அமைப்புகளும் முதலாளிகளும் ஒருவருக்கு ஒருவர் தமது அக்கறைகளைப் பேணுவதற்காக அவர்களிடையே நிலவும் வலைப்பின்னல் இது''.

 

ராணியுடன் உரையாடலைத் தொடங்கியதிலிருந்து நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் என் கால்கள் சோர்வடையத் தொடங்கின. தரையில் உட்கார்ந்து கொண்டேன். ராணி முன்னால் வந்து என் அருகில் உட்கார்ந்தாள்.  

 

'' கூட்டத்தினர் கட்டுப்பாட்டை இழந்தபோது துணை ஆய்வாளர், வட்டார ஆய்வாளரை உதவிக்கு அழைத்தார். சில நிமிடங்கலுக்குப் பின்னர், கலவரத்தைக் கட்டுப் படுத்துவதற்கு வருவதுபோல வட்டார ஆய்வாளர், அதிகாரிகள் படையுடன் வந்து சேர்ந்தார். வட்டார ஆய்வாளர் பெட்ட குரும்பர்களையும் எஸ்டேட்காரர்களையும் அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டார். ஒரே நாளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் படும் என்று பெட்ட குரும்பர்களுக்கு வாக்குறுதி அளித்தார். அன்று பின் மாலையில் தாமோதரனையும் அவனுடைய மோட்டார் பைக்கையும் விடுவித்தார். சமூகத் தலைவர்களிடம்  மனுவுடன் வந்து மறுநாள் ,தன்னைச் சந்திக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

 

 

மறுநாள், கூடமூலையிலிருந்து ஒரு குழுவும் ஆதிவாசி முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த இன்னொரு குழுவும் புகார் கொடுப்பதற்காகச் சென்றதாக நான் கேள்விப்பட்டேன். ஏ எம் எஸ் பிரதிநிதிகள் அவமரியாதையாக நடத்தப் பட்டார்கள்; மிரட்டப்பட்டார்கள்; இனி மேல் இந்த வழக்கில் தலையிட்டால் கொடிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப் பட்டார்கள். உள்ளூர் ஆதிவாசிகளின் புகார் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அந்த மனுவில் ஐந்து பெட்ட குரும்பர்கள் கையொப்பமிட்டிருந்தார்கள்.

 

எதிர்பாராத விதமாக மூன்று நாட்களுக்குள்ளேயே, சமுதாயத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களுக்கு எந்தத் தகவலும் தரப்படாமல்  புகார் மனு திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. புகார் மனு கொடுத்தவர்களுடன் சமரசம் செய்து கொள்ள எஸ்டேட் முதலாளி இப்ராகிமைத் தரகராக நியமித்திருந்தார்.

 

''இப்ராகிம் என்னை மறுபடியும் எடுத்துக் கொண்டு போய் அக்ரமுக்கு விற்றான். அவரிடம் இருக்கும் பணபலம். அரசியல் செல்வாக்கால் யாரையும் எஸ்டேட் முதலாளியால் விலைக்கு வாங்க முடியும். பொம்மன் விலை போனாரா அல்லது மிரட்டப்பட்டாரா என்று எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் எஸ்டேட் முதலாளிக்கு எதிராக நிலைப்பாடு எடுக்க அது அவருக்குக் காரணமாக இருக்கவில்லை.

 

''நான் கிராமத்தை விட்டு வெளியெறும்போது கோடமூலாப் பகுதியைச் சேர்ந்த சிலர் எஸ்டேட்டுக்குப் பணிபுரிய மறுத்து அப்போதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாக யாரோ சொல்லக் கேட்டேன். புகார் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட சில தனி மனிதர்கள் மட்டும் திரும்ப எஸ்டேட் வேலைக்குப் போனார்கள்.

 

’’உண்மையில் அது நல்ல அறிகுறி. தங்களுக்கு இடையில் இருக்கும் போதாமைகளையும் வேற்றுமைகளையும் மீறி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். என்றாவது ஒருநாள் இந்த மனிதர்கள் தங்கள் மண்ணின் மீதான அவர்களுடைய உரிமையை மீட்டெடுப்பார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.

 

சட்டென்று அவள் அமைதியானாள். அவள் கண்கள் அகல விரிந்தன. முதலில் நான் சற்றுக் குழம்பினேன். '' டேய் தம்பி... டேய் தம்பி'' என்ற குரலைக் கேட்டேன். வாசற்படியில் நின்று அக்ரம் என்னை அழைத்துக் கொண்டிருந்தார்.

 

'' அரைமணி நேரத்துக்கும் அதிகமாச்சு. அந்த ஆட்டுடன் இன்னும் என்ன இழவைச் செய்து கொண்டிருக்கிறாய்?'' என்று என்னைத் திட்ட ஆரம்பித்தார்.

 

''நான் உன்னை விலைக்கு வாங்கி விடவா? என்னுடன் வர உனக்கு விருப்பமா?'' என்று ராணியிடம் கேட்டேன்.

 

'' வேண்டாம். நான் வேறு எங்கும் போக எனக்கு விரும்பவில்லை.பொம்மன் குடும்பத்தாரிடம்  சேதியை மட்டும் சொல்லுங்கள்.  நோனியிடம் என் விசாரிப்பைச் சொல்லுங்கள். இந்த இடத்தில் என் கதை முடிகிறது என்று தோன்றுகிறது.''

 

 

மேலதிக ஆய்வுகள்:

 

சம்பவங்களைப் பற்றிய ராணியின் விவரிப்பு அவளுடைய சொந்த விளக்கம். என் அறிவுக்கு எட்டியவரையில் போராட்டத்தைப் பற்றியே வெவ்வேறான  ஆறு விளக்கங்கள் இருந்தன. இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொம்மன் போன்ற தற்காலிகத் தொழிலாளர்களின் பிரிவு; எஸ்டேட் வேலைக்குத் திரும்பிச் சென்ற தற்காலிகத் தொழிலாளிகள்; போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிரந்தர்த் தொழிலாளர்கள்; கண்ணன் ஆகிய தரப்புகளின் விவரணைகளை இந்தப் பகுதி பகுத்துப் பார்க்கிறது. ஒவ்வொரு பிரிவின் விவரணைகளும் சில விடுபடல்களும் சேர்க்கைகளும் கொண்டிருப்பினும் முதன்மையான விவாதம் ஒன்றாகவே இருந்தது.  களப்பணியின் போது நான் உருவாக்கி வைத்திருந்த நம்பிக்கை வெவ்வேறு தகவல்களையும் பெற உதவியாக இருந்தது. முதலில் தங்கள் சமுதாயத்துக்குள் நிலவும் வேற்றுமைகளை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அதுபோன்றே, இந்த விவரணைகளில் உள்ள மாறுபாடுகள் அனைத்தும்  கிசுகிசுப்புகள், புறங்கூறுதல் ஆகியவை வாயிலாகவே கிடைத்தன. வேற்று மனிதர்களிடம் மனந்திறந்து உரையாடுவதில் அவர்கள் எச்சரிக்கை கொண்டிருந்தனர்.

 

 

 

பீமன் ( அவரது நலம் விரும்பியின் வாக்கு மூலம்)

 

அந்த சம்பவத்துக்குப் பிறகு அவரும் ( பீமனும்) அவரது குடும்பத்தினரும் கிராமத்தை விட்டு அகதிகளைப்போல வெளியேறினார்கள். கோடமூலாவிலிருந்து யாராவது தொடர்பு கொள்ள அழைத்தாலும் அவர் தனது தொலைபேசியை எடுப்பதில்லை என்று கிராமத்தில் சொல்லப் பட்டது .இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் முக்கியமான ஒருவராக இருந்தபோதும் , காவல்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்த குழுவில் ஒருவராக அவர் இல்லை. எஸ்டேட் முதலாளி அவருடன் சமரச ஒப்பந்தம் செய்து கொள்ள இப்ராஹின் உதவினார். அதற்காக 10,000 ரூபாய் கை மாற்றப்பட்டது.

 

அவர் ஏழை; மண் குடிசையில்தான் வசிக்கிறார். வலுவான எஸ்டேட் முதலாளிக்கு எதிரான வழக்குகளுக்குப் பணம்  செலவழிக்க அவரால் முடியாது. அவர் காப்பாற்றியாக வேண்டிய குடும்பம் இருக்கிறது. அவர் மட்டுமே அந்தக் குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர். எனவே அவர்  அடங்கினார்;  எஸ்டேட் முதலாளியின் நோக்கங்களுக்கு எதிராக முன் நகரவில்லை.

 

 

தொடர்ந்து போராடும் தற்காலிகத் தொழிலாளர்கள்:

 

இந்தக் குழுவில் , இளைஞர்கள் - முதியவர்கள் என்று இரண்டு துணைப் பிரிவுகள் இருந்தன. கிராமத்திலிருந்த எல்லாப் பிரிவினருடனும் முதியவர்களுக்குச் சிக்கல்கள் இருந்தன. ஆனால் தமது எதிர்ப்பை அவர்கள் நேரிடையாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவர்களுடைய விவாதங்கள் பெரும்பாலும் செவிவழிச் செய்திகளையும் புலம்பல்களையுமே அடிப்படை யாகக் கொண்டிருந்தன. அவர்களது மறைமுகமாக எதிர்ப்புக்கான காரணங்களை ஆராய்ந்த போது , அவர்கள் முன்னர் எஸ்டேட் முதலாளியின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்றும் அவர்களில் சிலர் முதலாளியால் விலை பேசப்பட்டவர்கள் என்றும் தெரிய வந்தது. எனவே இந்தப் பிரிவைச் சேர்ந்த எவரும் மற்றவர்களைக் கேள்வி கேட்கும் தார்மீக உரிமையை இழந்திருந்தார்கள்.

 

 

இந்க் குழுவுக்கு உட்பட்ட இளைஞர்கள், அருகிலுள்ள எஸ்டேட்டுகள், பண்ணைகள், கடைகள் ஆகியவற்றில் வேலை செய்து தங்களது அன்றாட வாழ்வை நிர்வகித்துக் கொண்டார்கள். அதே சமயம், முதியவர்களைப்போல நடமாட்டம் அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்க வில்லை. பீமனும் அவர்கள் வயதை ஒட்டியவர்தான். ஆனால் அவர்கள் துரோகியாகவே அவரைக் கண்டார்கள். தங்கள் பூர்வீக நிலத்தை மீட்டெடுப்பதில் அவர்கள் ஊக்கமானவர் களாகவும் செயலாற்றல் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

 

 

எஸ்டேட் வேலைக்குத் திரும்பச் சென்ற தற்காலிகத் தொழிலாளர்கள்:

 

கோல்டன் கிளவுட் எஸ்டேட் காவலர்களுடன் நடந்த மோதலுக்குப் பிறகு , கண்ணனைத் தவிர, மற்ற பெட்ட குரும்பர் குடும்பத்தினர் எல்லாரும் இனி மேல் எஸ்டேட் வேலைக்குச் செல்வதில்லை என்று ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகச் சொல்லப்பட்டது.

 

ஐந்து பேர் கொண்ட முதல் குழுதான் மேற்சொன்ன ஒப்பந்தத்தை மீறியதும் முதலில் எஸ்டேட் முதலாளிக்கு எதிராகக் காவல்துறையினரிடம் புகார் மனுவை அளித்தவர்களே. இந்தக் குழுவினருடன் ஒரு சுமுகமான ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்து எஸ்டேட் முதலாளிக்கு இப்ராஹிம் உதவினார். எஸ்டேட் முதலாளியிடமிருந்து ஆளுக்கு 5000 ரூபாய் பெற்றுக் கொண்டு புகார் மனுவைத் திரும்பப் பெற்றார்கள். மறுபடியும் அவரிடமே வேலைக்கும் சென்றார்கள்.

ஒப்பந்தத்தை முறித்த இன்னொரு குழுவுக்கு பராமரிக்க வேண்டிய சிறு குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் இருந்தன. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நேரமே கிடைக்காது என்பதால் எஸ்டேட்டுக்கு வெளியே வேலை செய்வதும் கடினம். இந்தக் குழுவினரை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும் முன்பு எஸ்டேட் முதலாளி அவர்களிடமிருந்து மன்னிப்புக் கடிதங்களைப்  வாங்கிக் கொண்டார்.

 

எஸ்டேட் வேலைக்குத் திரும்பச் சென்ற நிரந்தரத் தொழிலாளி:

 

கிராமத்தைச் சேர்ந்த நான்கு நிரந்தரத் தொழிலாளர்களில் ஒருவர் , தான் மட்டுமே குடும்பத்தில் ஊதியம் ஈட்டுபவர் என்பதால், போராட்டம் தொடங்கிய அன்றே திரும்ப  வேலைக்குப் போனார். போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த மற்ற மூன்று நிரந்தரத் தொழிலாளர்களைப் போல அவருக்கு வேறு எந்த வருமானமும் இல்லை.

 

 

போராடிக் கொண்டிருந்த நிரந்தரத் தொழிலாளர்கள்:

 

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிரந்தரத் தொழிலாளர் மூவரில் இருவர் கணவனும் மனைவியும் என்பது ஒரு சுவாரசியமான காட்சி. இருவரும் வயது முதிர்ந்தவர்கள்; இன்னும் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெற இருந்தவர்கள்.

 

இந்தத் தம்பதியரின் மருமகனான மாதவன் மூலமே வெளியிலிருந்து யூனியன் தலைவர் ஒருவர் ஆதரவு அளித்துக் கொண்டிருந்தார். மற்றொரு எஸ்டேட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவருக்கு 20,000 ரூபாய் ஈட்டுத் தொகை வாங்கிக் கொடுத்திருந்தார் என்ற செய்தியைக் கேட்டுத்தான் அவர்கள் யூனியன் தலைவரை அணுகியிருந்தார்கள். தொழிலாளர் நீதிமன்றத்தில் எஸ்டேட் முதலாளிக்கு எதிராக அவர்கள் வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தார்கள் என்று அறிந்திருந்தேன். ஆனால் அது எந்தப் பிரிவில் தொடுக்கப்பட்டது என்று மாதவனால் சொல்ல முடியவில்லை.

 

இதற்கிடையே, யூனியன் தலைவரின் உதவியுடன் மாதவன் ஒரு தன்னார்வ நிறுவனத்தைப் பதிவு செய்தான்.  வாரத்துக்கு 25 ரூபாய் உறுப்பினர் கட்டணம் வசூலிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஏஜென்சி. ஏஜென்சியினர் பெரும்பாலும் அரசு அதிகாரிகளுக்கும் பூர்வகுடி மக்களுக்கும் இடையில் தரகராகவோ நடுவராகவோ செயல்பட்டனர். அந்த ஏஜென்சியில் பங்கேற்றிருந்த ஒருவர் வாயிலாக , ஆதிவாசி  மக்களில் ஒரு பிரிவினர் மாதவனை நம்பவில்லை என்பதை அறிந்தேன். அவன் செலவுக் கணக்குகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளாவில்லை என்பதும்  அவனுக்கு படிக்கவோ எழுதவோ தெரியாது என்பது காரணங்கள். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் முன்னர் அவன் எஸ்டேட் முதலாளிக்கு அந்தரங்க உதவியாளனாகப் பணியாற்றினான் என்பது. ஐந்து ஆண்டுகள் அவரிடம் வேலை பார்த்துவிட்டு அவருடன் நடந்த வாய்த் தகராறால் வேலையை இ்ழந்தான்.

 

கண்ணன் : ( நலம் விரும்பியின் கூற்று)

 

கண்ணன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எஸ்டேட் முதலாளிக்கு ஏஜெண்டாக வேலை செய்தான். போராட்டத்துக்கு சில மாதங்கள் முன்பு முதலாளி அவனுக்கு தொழிலாளி என்ற நிலையிலிருந்து எஸ்டேட் காவலராகப் பதவி உயர்வு கொடுத்திருந்தார். பெரும்பான்மையான எஸ்டேட் தொழிலாளிகள் எஸ்டேட் வாட்சராகவோ சூப்பர்வைசராகவோ ஆக ஆசைப் படுகிறார்கள். அவர்களுக்கிடையில் அது அந்தஸ்தின் அடையாளமாக ஆகியிருக்கிறது. ஒரு தொழிலாளியின் வேலைச் சுமையை ஒப்பிடும்போது வாட்சராகவோ சூப்பர்வைசராகவோ இருப்பவருக்குப் பணிச்சுமை குறைவு. எனவே போராட்டத்தில் கலந்துகொண்டு தன்னுடைய புதிய வேலையை இழக்க அவன் விரும்பவில்லை. அவ்வப்போது முதலாளியிடம் அளிக்கும் தகவல்களுக்காக பொருளாதார ஆதாயங்களையும் பெற்றுக் கொண்டிருந்தான்.

 

 

 

கோட்பாடு சார்ந்த விவாதம்

 

கோடமூலாவைச் சேர்ந்த பெட்ட குரும்பர் சமுதாயம் ஒரே தன்மையானது அல்ல என்பது வெளிப்படை. பிற சமுதாயங்களைப் போலவே பூமியின் அளவு, குடிப்பகை, பாலியல் வேற்றுமை, பதவிகள், சொத்து, சித்தாந்தம், வயது, அணுகுமுறைகள் போன்ற பல்வேறு காரணங்களால் பிளவுபட்டிருந்தது. உள்ளேயும் வெளியேயும் உள்ள சக்திகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்த வேற்றுமைகள்  முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தப் பங்கேற்பாளர்களின் விவரணைகள் இருமைவாதத்தைத் தெளிவாகவே மறுக்கின்றன. நன்மை - தீமை என்ற வழமையான எல்லைகளை மீறுகின்றன. பெரும் காலவரிசையை ஏற்க மறுக்கின்றன. இந்த நிலை, அக்கெரின் பின் நவீனத்துவம் பற்றிய - பின் நவீனத்துவம் பெரும் விவரணைகளை, இருமைவாதக் கருத்துக்களை மறுக்கிறது. பன்மை எதார்த்தங்களை நம்புகிறது - என்ற கருத்தாக்கத்துடன் எளிதாக ஒத்துப் போகிறது.  எடுத்துக்காட்டாக, கண்ணன் ஆரம்பத்திலிருந்தே இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை;  எஸ்டேட் முதலாளியின் தரப்பிலேயே இருந்தான். தன்னுடைய சக ஆதிவாசி  மக்களுக்கு எதிராகவே செயல்பட்டான். இந்தக் கதை இங்கே முடியுமானால், பிற பிரிவினர்கள் நம்புவதுபோல அவனை துரோகி என்ற சட்டகத்துக்குள் அடைத்துவிட முடியும்.  அவனுடைய நலம் விரும்பிகள் மூலம் தெரியவரும் அவனுடைய செயல்பாடுகளின் பின்புலம், ஆய்வு, பன்மை எதார்த்தங்களை வெளிப் படுத்துகிறது. அவன் தொழிலாளி என்ற தகுதியிலிருந்து அப்போதுதான் பதவி உயர்வு பெற்றான்.  எஸ்டேட் முதலாளியைப் பகைத்துக் கொள்வதன் மூலம் தன்னுடைய புதிய வேலையை, சம்பள உயர்வை, வசதியான வாழ்க்கையை  இழக்க அவன் விரும்பவில்லை.

 

தொடர் போராட்டம்

 

ஜேம்ஸ் சி ஸ்காட்டின் 'எளியோரின் ஆயுதம்' ,  ( 1985 ) என்ற நூல் போராட்டங்கள் தொடர்பான ஆய்வில் புரட்சிகரமானது. விவசாயிகளின் போராட்டங்களைப் புரிந்து கொள்ள நாம் முதலில் அந்த விவசாய சமூக அமைப்பின் விழுமியங்களையும்  அவர்கள் வாழ்க்கையுடன் எவ்வாறு பிணைந்திருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது முதன்மையான வாதம். பர்மா, வியத்நாம் ஆகிய நாடுகளின் விவசாயிகளின் எளிமையான அன்றாட எதிர்ப்புகளை புறங்கூறல், வதந்தி, திருட்டு ஆகியவற்றின் வாயிலாகவே ஆராய்ந்தார். வெளிப்படையான போராட்டம் என்பது அவர்களிடையே அரிதான நிகழ்வு என்று வாதிட்டார்.

 

நமது ஆய்வுப் பொருளான பெட்ட குரும்பர் போராட்டத்திலும் இதற்கு இணையானவற்றை  முன்வைக்க முடியும். அவர்களது நிலமும் வாழ்வாதாரங்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகக் காலனியாதிக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. முதலாளிகளும் அரசு அமைப்புகளும் இணைந்து பின்னியிருக்கும் வலிமையான வலைப்பின்னலை எதிர்த்து வெளிப்படையான போராட்டத்தை ஒருங்கிணைக்க அவர்களிடம் அதிகாரமோ நிதியாதாரங் களோ இல்லை. அவர்கள் செஉது கொண்டிருப்பதெல்லாம் ஆதிக்க சமுதாயத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக , இந்தக் கட்டுரையில் விவாதிக்கப் பட்டிருப்பதுபோல , எளிய முறையில் அன்றாடம் மறுப்பை வெளிப்படுத்துவது தான். வழமையான போராட்ட வடிவங்களுடன்  ஒப்பிட்டால் இந்தப் போராட்ட வடிவங்கள் புதுமையானவை; தெளிவற்றவை. இந்த அன்றாடப் போராட்ட வடிவங்களில் துரோகம், புறங்கூறல், புலம்பல்கள், எஸ்டேட் முதலாளியின் ஆணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தல், இரட்டை ஏஜெண்டுகளாகச் செயல்படுதல், நேர்மையான அதிகாரிகளையும் நீதிபதிகளையும் பேச்சு வார்த்தைக்காக அழைத்தல், அவர்களது ஆலோசனைகளை உள்ளாட்சி அமைப்புகளில் வலியுறுத்தல் ஆகியவற்றை உதாரணங்களாகக் காட்டலாம். பதிற்றாண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வரும் பின்புலம், அவர்கள் சந்திக்கும் இடையூறுகளின் தன்மை ஆகியவற்றை அறியாமல்  இந்தத் தொடர் போராட்டங்களைப் புரிந்துகொள்வது கடினம். 

 

இன்னொரு பக்கம், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கு வெறும் தொழிலாளர்கள் என்ற நிலமையிலிருந்து வாட்சர்களாகவும் சூப்பர்வைசர்களாகவும் முன்னேறுவதற்கான வாய்ப்பையும் இது அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, பீமனுக்குத் தன்னுடைய பலம் எதுவென்று தெரியும்; எனவே எஸ்டேட் முதலாளியுடன் மோதிக் கொண்டிராமல் காசை வாங்கிக்கொண்டு சில மாதங்களுக்காவது கிராமத்தை விட்டு அமைதியாக வெளியேறினார்.  அவர்கள் அணி சேர்வதற்குக் குடிப்பகையும் ஒரு காரணமாக இருப்பதை என்னுடைய கள ஆய்வின்போது பலமுறை நான் கவனித்திருக்கிறேன். கேத்தன் பிரச்சனையில் அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த இனக்குழுக்களில் இரண்டு எஸ்டேட் முதலாளிக்கு ஆதரவாகவும் மற்றது கேத்தனின் தரப்பிலும் நின்றது ஓர் உதாரணம். அந்த இரண்டு இனக்குழுத் தலைவர்களும் எஸ்டேட் சூப்பர்வைசர் பதவிக்கு உயர்த்தப் பட்டார்கள்.

 

 

சில சந்தர்ப்பங்களில் உள்ளூர் அரசியலும் கருத்து வேறுபாடுகளும் சமுதாயத்தின் வளர்ச்சியைப் பாதிப்பதில் குறிப்பிடத் தக்கவையாக இருந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கோடமூலாவிலிருக்கும் வீடுகளுக்கு மின்சாரம் கொண்டுவர ஒரு பிரிவினர் அரும்பாடு பட்டார்கள். மனுக்களுடன் ஏராளமான அரசு அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் போய்ப்பார்த்தார்கள்.  பல மாதங்கள் நடந்த போராட்டத்துக்குப் பிறகு, தங்களுக்கு மின் இணைப்புகள் பெறத் தகுதியுண்டு என்று அதிகாரிகளை ஏற்கச் செய்து, கோப்புகளை ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு நகர்த்த அவர்களால் முடிந்தது. திட்டம் அங்கீகரிக்கப்பட்டபோது எஸ்டேட் முதலாளியின் ஆதரவு பெற்ற இன்னொரு பிரிவினர். தங்கள் கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படுவது தங்களது மரபார்ந்த விழுமியங்களுக்கு எதிரானது என்று புகார் பதிவு செய்தார்கள். சந்தேகமில்லை, அதிகாரிகள் இரண்டாவது பிரிவினரின் வாதங்களையே ஏற்றுக் கொண்டார்கள்.

 

எனினும், தாங்கள் விரும்பியதை அடைய சில பிரிவினர் , எஸ்டேட் முதலாளி போன்றவர்களின் அதிகாரத்தைத் தூக்கி எறியும் எதிர்ப்புத் திறனையும் காட்டியிருக்கிறார்கள் என்பதும் உண்மையே. கோடமூலா கிராமத்தில் அதிகாரச் சமன்பாட்டை மாற்றியமைக்கக் குடிமைச் சமூகங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கின. ஆதிவாசி சமூகத்தினரின் இயக்கத்தை வலுப்படுத்த ஏ எம் எஸ் , உள்ளூரில் வழக்குரைஞர் ஒருவரைக் கொண்டு வந்தது. எனது களப்பணி நிறைவடையும் முன்னரே, கோடமூலாவைச் சேர்ந்த இளைஞர்கள் வழக்கறிஞரின் ஒத்துழைப்புடன்  சோதனைச் சாவடியையும் ( சங்கிலி கேட் ) அறிவிப்புப் பலகையையும் அகற்றினார்கள். இந்த முறை எஸ்டேட் முதலாளி,  ஆதிவாசிகளுக்கு எதிராக எந்த வழக்கையும் தொடுக்கவில்லை என்பது வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது. அதிகார அமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருந்தது என்ற உண்மை ஒருவேளை காரணமாக இருக்கலாம்.

 

எஸ்டேட் முதலாளிக்குத் தமது எல்லைகள் தெரியும் என்பதும் ஒரு கட்டத்துக்கு மேல் காவல், வருவாய், வனத்துறை அதிகாரிகளின் ஆதரவை அவரால் வாடிக்கையாகப் பெற்றுச் செல்ல முடியாது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒன்று. அவர்களுடைய உறவில் எப்போதெல்லாம் கொந்தளிப்பு ஏற்படுகிறதோ அப்போது 2007 இல் மரக் கடத்தலுக்காக வழக்குத் தொடுக்கப்பட்டது போன்ற வடிவத்தில் அது வெளிப்பட்டு விடும்.

 

முதலாளிகளும் அரசு எந்திரங்களும்

 

இங்கே இன்னொரு சுவாரசியமான காட்சியமைப்பையும் காணலாம். அது ஜனநாயகத்தின் தூண்களான - மக்கள் மன்றம். நீதித்துறை, நிர்வாகம், ஊடகம் ஆகியவை உழைப்பாளிகளுக்கு எதிராக முதலாளிகளுடன் ஐக்கியமாகும் காட்சி. இந்த வழக்கில் கண்டதுபோலவே நாடு முழுவதும் அரசு அமைப்புகள் அனைத்தும் முதலாளிகள், ஆதிக்க சமுதாயத்தினரின் அக்கறைகளுக்கே ஆதரவு அளிக்கின்றன. விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பான சிறைத்துறைப் புள்ளி விவரங்களும், 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் அமலாக்க நிலைமையும் இரண்டு எடுத்துக் காட்டுகள்.

 

விசாரணைக் கைதிகளாக இருக்கும் தலித்துகள் ( முன்னர் தீண்டத் தகாதவர்கள் ), அட்டவணைப் பழங்குடிகள் ( பூர்வகுடிகள் ), முஸ்லிம்கள் ஆகியவர்களின் பொருத்தமற்ற விகிதாச்சாரம்  வெறும் வீழ்ச்சியை மட்டும் காட்டவில்லை; இந்தக் குழுவினர் மீதான அதிகரித்து வரும் பாதிப்பையும் காட்டுகிறது'' என்று சமத்துவ ஆய்வுக்கான மையத்தின் இயக்குநர் ஹர்ஷ் மந்தர் கூறுகிறார். 2013 ஆம் ஆண்டின் சிறைத்துறைப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த அவதானிப்பை முன்வைக்கிறார்.

 

அதே போன்று, சமூக வளர்ச்சிக்கான கவுன்சில் , 2006  ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின்  அமலாக்க நிலவரம் பற்றிய  ஆய்வை 2010 இல் சமர்ப்பித்தது. இந்தச் சட்டம், இந்தியாவிலுள்ள ஆதிவாசிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வரலாற்று அநீதியைத் திருத்துவதற்கான முற்போக்கான சட்ட நடவடிக்கை ஆகும். எதுவாயினும்  அமலாக்க நெறியில் இந்தச் சட்டத்தின் மையமான அம்சங்கள் நிர்வாகத்தாலும் சட்டமன்றத்தாலுமே நாசமாக்கப்பட்டன ( பிஜோய் ,2010 பக் 15 ).

 

முடிவுரை

 

தங்களுடைய மரபான வாழ்க்கை முறையைத் தொடர்வதற்காக பெட்ட குரும்பர்கள் நடத்தும் தொடர் போராட்டம் விரிவான பொருளில் , காலனிய - பின் காலனிய அரசுகளின் ஆட்சிக் காலத்தில் ஆதிக்க சமுதாயத்தினரால், கைப்பற்றப்பட்ட தங்கள் மூதாதையரின் நிலத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். அவர்களுடைய அரசியல் உணர்வும் வாய்மொழி வரலாறுகளும் எஸ்டேட் உருவாக்கத்தால் அவர்களுடைய புராதன பூமி காலனி மயமாக்கப்பட்டதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

 

இதே நிலப் பகுதியில் வாழும் பிற ஆதிவாசி சமூகங்களான காட்டு நாயக்கர், இருளர், பனியர் இனத்தவர்கள் எஸ்டேட் முதலாளியுடனோ சிறு விவசாயிகளும் காட்டுவாசிகளுமான மண்டாடன் செட்டி வகுப்பினருடனோ ஒருபோதும் மோதலுக்கு நின்றதில்லை. வாழ்க்கை முழுவதும் எஸ்டேட் தொழிலாளியாக இருப்பது தங்களுடைய விதி என்ற முடிவுக்கு ஒருவேளை அவர்கள் வந்திருக்கலாம். அவர்களுடைய தொகை குறைவு, வரலாறு வேறுபட்டது என்பதுடன் பெட்ட குரும்பர்களைப் போல குறு விவசாயத்தில்  பயிற்சி பெற்றவர்களும் அல்ல. இந்தச் சூழ்நிலையே மண்டாடன் செட்டி உள்ளிட்ட பிற சமுதாயங்களுடன்  பெட்ட குரும்பர்களின் பிரச்சனையை சேர்க்க முடியாமல் ஆக்குகிறது. அதேசமயம், பிற சமுதாயங்களை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு பெட்ட குரும்பர்களைப் பற்றிப் புரிந்து கொள்வதும் இயலாத ஒன்று. பெட்ட குரும்பர் சமூகத்துக்குள்ளேயே நிலவும் வெவ்வேறு பிரிவுகள் தங்கள் சமூகத்துக்கும் எஸ்டேட் முதலாளிக்கும் ஆதரவளிப்பது அவற்றின் தனிநபர் அக்கறையையும் சமூக அக்கறையையும் ஒட்டியதே.

 

@

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக