இன்று பாப்லோ நெரூதா நினைவு நாள். அவர் மறைந்து ஐம்பது ஆண்டுகளும் நிறைவடைகின்றன. மனிதர்களையும் மானுட வாழ்க்கையையும் மகத்தானவை என்று கொண்டாடிய கவிஞர்களில் நெரூதாவுக்கு நிகரற்ற இடம் உண்டு. ‘எந்த மொழியிலும் அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் பெரும் கவிஞர்’ என்று இன்னொரு பேராளுமையான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் குறிப்பிட்டார். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல , அடுத்த நூற்றாண்டிலும் நெரூதாவே மகா கவி என்று காலம் சாட்சி சொல்கிறது.
நண்பர் பரிசல் செந்தில்நாதன் , பாப்லோ நெரூதா கவிதைகள், இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் ஆகிய இரு நூல்களைக் கொண்டு வந்தார். அவை முறையே மூன்றும் இரண்டும் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. மொழி பெயர்ப்பாளன் என்ற நிலையில் எனக்கு மகிழ்ச்சி அளித்த விஷயம் இது.
இருபது காதல் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையை இங்கே நெரூதா நினைவாக இங்கே பகிர்கிறேன்.
காதல் குறுகியது கவிதை முடிவற்றது
இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் பாப்லோ நெரூதாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. 1924 இல் அவரது இருபதாம் வயதில் வெளிவந்தது. அதற்கு முந்தைய ஆண்டு வெளியாகியிருந்த அந்தி வெளிச்சம் என்ற முதல் தொகுப்பு அவருக்குக் கவிஞன் என்ற அறிமுகத்தை அளித்தது. ஆனால் இரண்டாவது தொகுப்பே இலக்கியப் புகழையும் வாசக வரவேற்பையும் பெற்றுத் தந்தது. இன்றளவும் நெரூதாவின் கவிதை நூல்களில் அதிகம் பதிப்பிக்கப்பட்டதும் பரவலாக வாசிக்கப்பட்டதும் அநேகமாக இந்தத் தொகுப்பாகவே இருக்கலாம். நூற்றாண்டை நெருங்கும் நிலையில் அதன் பதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வாசிப்பும் பரவலாகியிருக்கிறது
இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் பாபாப்லோ நெரூதா கவிதைகளை அறிந்திராதவர்களும் அவரது காதல் கவிதைகளால்
ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இருபது காதல் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏதாவது
சில வரிகளைத் தங்கள் காதலைச் சொல்லப் பயன்படுத்தியிருப்பார்கள். குறிப்பாக, நூலின்
பதினான்காம் கவிதை (ஒவ்வொரு நாளும் நீ விளையாடுகிறாய்) இன் கடைசி வரியான வசந்தம் செர்ரி
மரங்களுடன் நிகழ்த்துவதை/ நான் நிகழ்த்த வேண்டும் உன்னுடன் என்பதும் இருபதாவது கவிதை
(இன்றிரவு என்னால் எழுத முடியும்) இன் இடையில் வரும் காதல் குறுகியது, மறதியோ மிக நீண்டது
என்ற வரியும் எழுதப்பட்ட காலம் முதல் இன்று வரை காதலர்களால் காதலிகளிடம் அந்தரங்கமாக
முணுமுணுக்கப்படுகின்றன. நெரூதாவின் கவிதைகள் ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில்
பெயர்க்கப்பட்டுள்ளன். அதன் வாயிலாக இந்த வரிகள் அந்தந்த மொழிகளின் உணர்வாகவே மாறியிருக்கின்றன.
அந்த மொழிகளின் கவிதையாக்கத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ செல்வாக்கும் செலுத்தியுள்ளன,
பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாட்டில் உள்ள சாலமோனின் உன்னதப்
பாட்டுகளுக்கு இணையான காதல் கவிதைகளின் தொகுப்பாக நெரூதாவின் இருபது காதல் கவிதைகள்
கருதப்படுகிறது. சாலமோனின் பாடல்களுக்கு மதத்தின் பின்புலம் உள்ளது என்ற வேற்றுமையைத்
தவிர்த்தால் இரண்டு நூல்களும் பொது ஒற்றுமைகள் கொண்டவை. பெண்மீது ஆண்கொள்ளும் மாளாக்
காதலையே இரண்டு நூல்களும் மையமாகக் கொண்டிருக்கின்றன. பெண்மீதான வேட்கையையே இரண்டும்
கொண்டாடுகின்றன. முன்னது பழமையின் பின்புலத்திலும் பின்னது நவீனப் பின்னணியிலும். காலமும்
பின்புலமும் மாறினாலும் பெண்மீதான ஈர்ப்பு ஒன்றுதான்போல. சாலமோனிடம் பெண்ணுடல் ‘அடைக்கப்பட்ட
தோட்டமும் மறைவு கட்டப்பட்ட நீரூற்றும் முத்திரையிடப்பட்ட கிணறு’மாக
உருவம் கொள்கிறது. நெரூதாவிடம் ‘வெண் குன்றுகளாகவும் வெண் தொடைகளாகவும் சரணடைந்த உலக’மாகவும் உயிர் பெறுகிறது..
முதல் தொகுப்புக்குக் கிடைத்த கவனம் பாப்லோ நெரூதாவுக்குத்
தனது வழியையும் பயணத்தையும் வகுத்துக்கொள்ள உதவியது. ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற தீர்மானத்தைக் கடைப்பிடிக்க ஏதுவானது. ‘அந்தி வெளிச்சம்’ தொகுப்பின் கவிதைகள் பெரும்பான்மையும் அன்று நடைமுறையிலிருந்த
ஸ்பானியக் கவிதைப் போக்கை ஒட்டி எழுதப்பட்டவை.
ஆனால்
அவற்றிலிருந்து மாறுபட்ட கவிதைகளே என்னுடைய விருப்பமாக இருந்தன. என்னுடைய புலனும் உயிரும்
பிரிக்கப்பட முடியாமல் இழைந்த கவிதைகளை எழுத ஆசைப்பட்டேன். அது ஒரு சாகசமென்பதை உணர்ந்து
கொண்டேன். அதன் விளைவுதான் இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் தொகுப்பு.
நூல் வெளிவந்த பின்னர் உண்மையிலேயே அது சாகசம் என்பது தெரிந்தது.
என்று தொகுப்பு வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்
கவிஞர் ராபர்ட் ப்ளைக்கு வழங்கிய நேர்காணலில் நெரூதா நினைவுகூர்ந்தார். இருபது காதல்
கவிதைகளை எழுதத் தூண்டிய சாகசம் நெரூதாவின் இறுதிக் காலம் வரை கவிதையிலும் வாழ்விலும்
தொடர்ந்தது.
நெஃப்தாலி ரேயஸ் பஸ்வால்தோ என்ற எளிய மனிதன் உலகப் பெரும்
கவிஞர் பாப்லோ நெரூதாவாக அறியப்படவும் இந்த சாகசமே காரணம்.
o
நெரூதாவின் கவிதையுலகம் எண்ணிக்கையால் பரந்தது. பாடுபொருட்களால்
விரிந்தது. முதல் கவிதை வெளியான பதின்மூன்றாம் வயது முதல் மரணமடைந்த அறுபத்தொன்பதாம்
வயது வரையிலான ஐம்பத்து ஆறு ஆண்டுகளில் எழுதிக் குவித்த கவிதைகளின் எண்ணிக்கை மூவாயிரத்து
ஐநூறுக்கும் மேல். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
இலான் ஸ்டாவன்ஸ் தொகுத்திருக்கும் பெருந் திரட்டில் ஏறத்தாழ அறுநூறு கவிதைகள் இடம்
பெற்றிருக்கின்றன. ஆங்கிலம் நீங்கலான உலகப் பிற மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நெரூதாவின் கவிதைகள் பேசும் மையப் பொருட்களும் விரிவானவை.
உப்பு முதல் பிரபஞ்சம் முடிய அனைத்தும் அவரது கவிதையாக்கத்தில் உள்ளடங்கியிருக்கின்றன.
அவருக்கு முன்னும் பின்னுமான காலத்தின் எல்லாத் தருணங்களும் பதிவாகியுள்ளன. மானுட இருப்பின்
சகல நிலைகளும் மனிதப் பிறப்பின் வெவ்வேறு உணர்வுகளும் கவிதைகளில் கூறுபொருளாகியுள்ளன.
இந்தக் கருத்தை முன்னிருத்தக் காரணம், பாப்லோ நெரூதாவைக் குறிப்பிட்ட ஏதாவது வகைமைக்குள்
முடக்கிவிட முடியாது என்பதை எடுத்துக் காட்டவும் அவரது கவிதைகளை ஏதாவது ஒரு பிரிவுக்குள்
அடக்கிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவும்தான்.
எனினும் அந்தக் கவிப் பேருலகைக் நான்கு நிலைகளிருந்து காண
முடியும். இருப்பு, இயற்கை, சமூகம், உலகம் என்று நான்கு பகுப்புகளில் அவரது கவிதைகளை
அணுகலாம். இவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று பாதிப்பவை. ஒன்றையொன்று சார்ந்தவை. ஒன்றுக்குள்
ஒன்று பிணைந்தவை. இவையனைத்துக்கும் அடிப்படையான உறவாகக் காதலைச் சொல்லலாம். காதலின்
வெவ்வேறு உணர்வு நிலைகளில்தான் நெரூதா தனது கவியுலகை உருவாக்கியிருக்கிறார் என்பதைக்
கவிதைகள் காட்டுகின்றன. இயற்கை மீதான காதல் ஆராதனையாகவும் சமூகத்தின் மீதான காதல் போராட்டமாகவும்
உலகத்தின் மீதான காதல் அரசியலாகவும் வெளிப் படுகின்றன. தனது மானிட இருப்பின் ஆதாரப்
புள்ளியாக அவர் கருதியது பெண்மீதான மாளாக் காதலைத்தான் என்பதன் சான்றாக இருபது காதல்
கவிதைகளைச் சொல்ல முடியும்.
o
இருபது காதல் கவிதைகள் வெளியான காலத்தில் எந்த அளவு புகழப்
பட்டதோ அந்த அளவுக்குக் கண்டனங்களுக்கும் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. மகத்தான
கவிதைகளாகப் பாராட்டப்பட்ட அதேசமயம் ‘விடலைப் பையனின் பிதற்றல்கள்’ என்றும் விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனங்களில் நெரூதா கவிதைகளின்
ஆதாரமான அம்சம் கவனிக்கப்படவில்லை. இந்தக் கவிதைகளில் இயற்கையின் அற்புதமான பகுதியாகவும்
தவிர்க்க இயலாத மானுடப் பங்காளியாகவும் பெண் சித்தரிக்கப்படுகிறாள். இதுவே இருபது காதல்
கவிதைகளை விடலைப் பையனின் காம விழைவாகவோ பெண்ணுடல் மீதான இச்சையாகவோ குறுகி விடாமல்
உயிரின் முடிவற்ற வேட்கையாக நிலைநிறுத்துகிறது. நெரூதாவின் இறுதிக் காலக் கவிதை வரை
இந்த இயல்பு நீடித்துமிருக்கிறது.
பாப்லோ நெரூதாவை பாத்திரமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்தாலியத்
திரைப்படம் ‘தி போஸ்ட்மேன்’. சிலியைச் சேர்ந்த எழுத்தாளர்
அந்தோனியோ ஸ்கர்மேதா ஸ்பானிய மொழியில் எழுதிய ‘பர்னிங்க் பேஷன்ஸ்’
நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சினிமா. மையப் பாத்திரமான தபால்காரன்
மரியா கவிதை எழுத விரும்புகிறவன். முன்னுதாரணமாக அவன் கருதுவது பாப்லோ நெரூதாவைத்தான்.
அவரைப் போன்ற ஒரு கவிஞன் ஆகிவிட்டால் ஏராளமான பெண்கள் தன்னை நேசிப்பார்கள் என்று கனவும்
காண்கிறான். ஒரு காட்சியில் தனது அதிகாரியான தந்தியாளரிடம் சொல்கிறான்.
“ஒருவர்
கவிஞராக இருந்தால் பெண்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். பாப்லோவைப் பாருங்கள். எவ்வளவு
பெண்கள் அவரை நேசிக்கிறார்கள். அவருக்கு வருகிற தபால்கள் எல்லாம் பெண்களிடமிருந்துதான்.
அவர் பெண்களால் நேசிக்கப்படுகிறவர்”
தந்தியாளர் திருத்துகிறார். “இல்லை. அவர் மக்களால் விரும்பப்படும்
கவிஞர்”. என்கிறார்.
மரியா அரைமனத்துடனேயே அதை ஒப்புக் கொள்கிறான். “சரி, மக்களாலும்
பெண்களாலும் நேசிக்கப்படும் கவிஞர்”.
இந்தக் காட்சி கற்பனையானதுதான். ஆனால் நெரூதாவைப் பொருத்தவரை
மிகமிக உண்மையானது. அவருடைய இயல்பையும் அவர் கவிதைகளின் குணத்தையும் சொல்வது. காதல்
உணர்வு பாப்லோ நெரூதாவின் உயிரணுவிலேயே ஓடிய ஒன்று. ஏனெனில் அவரது பெற்றோரே தம்மளவில்
மாளாக் காதலில் மூழ்கித் திளைத்தவர்கள்.
o
பாப்லோ நெரூதா என்ற ரிக்கார்தோ எலிஸெர் நெஃப்தாலி ரேயஸ் பஸ்வால்தோ
சிலியின் மத்தியப் பகுதி நகரமான பர்ராலில் 1904 ஜூலை 12 அன்று பிறந்தார். தந்தை ஜோஸ்
தெல் கார்மன் ரேயஸ் மொரலேஸ் இருப்புப் பாதைப் பணியாளர். தாய் ரோஸா நெஃப்தாலி பஸ்வால்தோ
ஒபாஸோ பள்ளி ஆசிரியை. இருவருக்கும் தனித்தனியான காதல் கதைகள் இருந்தன. அவை சுவாரசியமானவை.
அதே சமயம் கொந்தளிப்பு மிகுந்தவை. பிள்ளைப் பருவத்திலும் பதின் வயதிலும் நெரூதாவை இந்தக்
கொந்தளிப்பு ஆழமாகவே பாதித்தது.
ரோஸாவை மணந்து கொள்வதற்கு முன்னும் பின்னும் ஜோஸ் கார்மன்
இரண்டு பெண்களைக் காதலித்திருந்தார். அந்தக் காதல்களை மறைத்து வைத்துத்தான் ரோஸாவையும்
மணந்தார். இரு பெண்களில் ஒருவர் டிரினிடாட். மற்றவர் அவுரேலியா, அவர்களில் டிரினிடாடுடனான
உறவில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்திருந்தது, ரொடால்ஃபோ என்ற குழந்தை குடும்பத்தின்
நம்பிக்கைக்குரிய தாதியால் ஆற்றங்கரைச் சிற்றூர் ஒன்றில் வளர்க்கப்பட்டான். டிரினிடாடுக்கும்
ஜோஸ் கார்மனுடனான உறவுக்கு முன்பு ருடேசிண்டோ ஆர்டெகா என்ற பண்ணைத் தொழிலாளியுடனான
உறவில் முதலாவது ஆண் குழந்தை பிறந்திருந்தது. பெயர் ஆர்லாண்டோ. டிரினிடாடின் செல்வந்தக்
குடும்பம் அந்தக் குழந்தையையும் ரகசியமாகவே வளர்த்தது. ஜோஸ் கார்மன் தன்னுடைய காதல்
உறவுகளைப் பகிரங்கப் படுத்தியதில்லை. அவரது காதலிகள் அவற்றை மறைத்து வைத்ததும் இல்லை.
டிரினிடாடுடன் ஜோஸ் கார்மன் கொண்டிருந்த காதல் குறுகியது. ஆனால் அது நீண்ட கால விளைவுகளை
ஏற்படுத்தியது.
ஜோஸ் கார்மன் இருப்புப் பாதைத் தொழிலாளியாக இருந்தவர். ஆனால்
அது நிரந்தரமான வேலையல்ல. எனவே பிழைப்புக்காக கூலித் தொழிலாளியாகவும் சுமைதூக்கும்
பணியாளராகவும் வெவ்வேறு இடங்களில் அலைந்தார். வெவ்வேறு சிறு நகரங்களில் வாழ்ந்தார்.
வாழ்ந்த நகரங்களில் எல்லாம் அவருக்குக் காதலிகள் வாய்த்தார்கள். சிறு வயது முதலே காச
நோயால் அவதிப்பட்டு வந்த ரோஸா, மருத்துவர் ஆலோசனையின் பேரில் பர்ரால் நகரில் குடியேறினார்.
குடியேறிய குறுகிய காலத்துக்குள் ஜோஸ் கார்மன் தனது காதலை ரோஸாவிடம் வெளிப்படுத்தினார்.
ரோஸா நெஃப்தாலி இறுக்கமான பெண் அல்லர். எனினும் திடமான எண்ணங்களும்
தீர்மான செயலும் கொண்டவர். அதுவரையான நாட்களில் வறுமையையும் கடும் உழைப்பையும் ஓயாத
அலைச்சலையும் அனுபவித்து வந்த ஜோஸ் கார்மன் நிலையான குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார்.
அது ரோஸா மூலமாகவே அமையும் என்றும் நம்பினார். அந்த நம்பிக்கையுடன் ரோஸாவிடம் தன்னை
மணந்துகொள்ளும்படி மன்றாடினார். தனது உடல் நிலை நீண்ட கால உற்சாக வாழ்க்கைக்கு இணங்குமா
என்ற சந்தேகத்தில் ஜோஸ் கார்மனின் கோரிக்கைக்குத் தயங்கி வந்த ரோஸா நான்கு ஆண்டுகளுக்குப்
பின்னர் ஒப்புக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு பர்ரால் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில்
குடியேறினார்கள். மணம் முடித்த ஒன்பதாவது மாதம் நெஃப்தாலி பிறந்தான். காச நோயால் பீடிக்கப்பட்டிருந்த
ரோஸா குழந்தைக்கு இரண்டு வயது நிறைந்த வேளையில் மரணமடைந்தார். தன்னுடைய பிறப்பே தாயின்
மரணத்துக்குக் காரணம் என்ற அநாவசியக் குற்றவுணர்வை வாழ்நாள் முழுவதும் பாப்லோ நெரூதா
சுமந்திருந்தார்.
‘நான்
பிறந்தபோது
அவமானத்துக்குள்ளான
புனித ஆன்மாவுடன்
என் தாய்
இறந்தாள்’
என்று ஆரம்பக் காலக் கவிதையொன்றில் வருந்தியுமிருக்கிறார்.
ரோஸாவின் மறைவு ஜோஸ் கார்மனுக்குப் பெரும் இழப்பானது. சரியான
வேலையும் அமையவில்லை. வருமானமும் இல்லை. இரண்டு மாதக் கைக் குழந்தையான நெஃப்தாலியைப்
பராமரிக்கத் திணறினார், தன்னுடைய மாற்றந் தாயிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வேலை
தேடிப் போனார். ஆண்டிஸ் மலைகளுக்கு அப்புறமுள்ள பகுதியில் கால்நடைத் தொழுவத்தில் பணிபுரிந்தார்.
ஆறு மாதங்களுக்குப் பின்பு வெறுங்கையுடன் ஊர் திரும்பினார். ஜோஸின் முன்னாள் முதலாளிகளில்
ஒருவரின் மகளான அவுரேலியா டோல்ராவுடன் காதலிலும் ஈடுபட்டார். காதல் சாகசங்களும் நாடோடி
அலைச்சலும் இனிமேலும் சரிப்பட்டு வராது என்பதை எடுத்துச் சொன்ன அவுரேலியா அவரை டிரினிடாடிடம்
திரும்பச் செல்லும்படி அறிவுறுத்தினார். “அவள் உன் முதல் பிள்ளையின் தாய் அல்லவா?”
என்று சுட்டிக் காட்டினார். ஜோஸ் கார்மனும் டிரினிடாடும் முறைப்படி மணந்தார்கள். குழந்தை
நெஃப்தாலி மாற்றாந் தாய் டிரினிடாடின் அணைப்பில் வளரத் தொடங்கினான். குடும்பப் பொறுப்பை
உணர்ந்த ஜோஸ் கார்மன், தனது முதல் பிள்ளை ரொடால்ஃபோவையும் அழைத்து வந்தார்.
ஜோஸ் கார்மனுக்கு அவுரேலியா மீதான காதல் மறைக்க முடியாததாக
இருந்தது. அவர்களுக்கு இடையில் நெருக்கமான உறவும் ஏற்பட்டது. முப்பதுகளின் நடுப்பகுதியிலிருந்த
ஜோஸ் கார்மன்மீது பதினெட்டு வயது அவுரேலியானாவுக்கும் ஈர்ப்பு இருந்தது. திடகாத்திரரும்
முகப் பொலிவு உள்ளவரும் வசீகரமான நீலக் கண்கள் கொண்டவரும் இதமானவருமான அவர் பால் ஈர்க்கப்பட்டார்
அவுரேலியானா. நெஃப்தாலிக்கு இரண்டு வயதைக் கடந்தபோது ஜோஸ் கார்மனுக்கும் அவுரேலியானவுக்குமான
உறவில் ஒரு தங்கை பிறந்தாள். லாராட்டா என்ற லாரா.
ஆனால் இந்த உறவில் அவுரேலியானா இடையறாத தார்மீகத் திணறலையே
அனுபவித்தார். அவரது கத்தோலிக்க நம்பிக்கை பெரும் பதற்றத்தை அளித்தது. இன்னொரு பெண்ணின்
கணவனும் ஒரு பிள்ளைக்குத் தகப்பனுமான நபருடன் கொண்டிருந்த உறவு குற்றவுணர்வையே கொடுத்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்ற உணர்வுடன் லாராவைத் தன்னால் வளர்க்க முடியாது என்ற
முடிவுக்கு வந்தார். ஒன்று ஜோஸ் கார்மன் தன்னுடனும் லாராவுடனும் மட்டுமாக வாழ்க்கை
நடத்த வேண்டும். அல்லது டிரினிடாட், ரொடால்ஃபோ, நெஃப்தாலி அடங்கிய குடும்பத்துடன் வாழ
வேண்டும். தன்னுடன் வாழ விருப்பமில்லை என்றால் லாராவையும் அழைத்துச் செல்லவேண்டும்
என்று நிர்ப்பந்தித்தார். ஜோஸ் கார்மன் லாராவையும் கூட்டிக்கொண்டு குடும்பம் வசிக்கும்
டெமூகோ நகருக்குத் திரும்பினார். டிரினிடாட் தன்னுடைய குடும்பப் பெயரை சிறுமிக்கு அளித்து
அவளைத் தன்னுடைய மகளாக ஏற்றுக் கொண்டார். ஜோஸ் கார்மனின் ரகசிய உறவு அவருக்கு முன்னமே
தெரிந்திருக்கலாம் அல்லது அது பற்றிய சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால் அவர் அதை வெளிப்படுத்தவில்லை.
தனது சொந்தப் பிள்ளையான ரொடால்ஃபோ, ரோஸாவின் வாரிசான நெஃப்தாலி, அவுரேலியாவின் மகளான
லாரா மூவரையும் தன் கரங்களுக்குள் சேர்த்துக் கொண்டார்.
இந்தச் சிக்கலான உறவின் உண்மையும் வினோதமும் நெஃப்தாலியை
ஆழமாகப் பாதித்தன. பாப்லோ நெரூதா என்ற பிற்காலக் கவிஞரை இந்த ரகசியங்களும் மீறல்களும்
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தன.
o
நெஃப்தாலியின் இளமைப் பருவம் சிற்றன்னை டிரினிடாடின் அரவணைப்பிலும்
சகோதரி லாராவின் பாசத்திலும் கழிந்தது. சகோதரன் ரொடால்ஃபோ எவரிடமும் ஒட்டுதல் இல்லாமல்
நடந்து கொண்டான். தந்தை ஜோஸ் கார்மனின் கண்டிப்பு நெஃப்தாலியை வெருட்டினாலும் இருப்புப்
பாதைத் தொழிலாளியான அவருடன் மேற்கொண்ட ரயில் பயணங்கள் குதூகலமளித்தன. தானறியாத உலகத்தில்,
விந்தைகளின் உலகத்தில் வந்து பிறந்த குழந்தையின் குறுகுறுப்பு அந்தக் கண்களில் எப்போதும்
இருந்தது. அதைக் கவிஞனின் பார்வை என்று புகழ்ந்தவர்கள் தாய் டிரினிடாடும் சகோதரி லாராவும்
மட்டுமே.
பள்ளிப் பருவத்திலேயே நெஃப்தாலி கவிதைகள் எழுதத் தொடங்கினான்.
பொதுவான இலக்கிய வாசிப்புப் பழக்கமிருந்த டிரினிடாட் சிறுவனை
உற்சாகப்படுத்தினார். அந்த ஊக்குவிப்பை மதிக்கும் வகையில் அஞ்சலட்டை ஒன்றில் ஏரியும்
பனிமூடிய மரங்களுமிருக்க நடுவில் கவிதையெழுதி, அவருக்குச் சமர்ப்பித்தான் நெஃப்தாலி.
பொன்னிறப்
பகுதிகளின் நிலக் காட்சியிலிருந்து
அன்புள்ள
அம்மா
உனக்காக
இந்த எளிய அஞ்சலட்டையைத் தேர்ந்தெடுத்தேன்.
தந்தையிடம் காண்பித்தபோது ‘இதை எங்கேயிருந்து காப்பி அடித்தாய்?’
என்று கேட்டார். அம்மா ‘இது நல்ல கவிதை’ என்று சிகையை அளைந்து
பாராட்டினார். அன்று ஒரு கவிஞன் உருவானான்.
ஜோஸ் கார்மனின் குடும்பம், நெஃப்தாலி பிறந்த ஊரான பர்ராலிலிருந்து
டெமூகோவுக்கு இடம் பெயர்ந்தது. நெஃப்தாலியின் பள்ளிப்பருவம் அங்கு கழிந்தது. பள்ளிப்
பாடங்களைவிட இலக்கிய வாசிப்பில்தான் ஈடுபாடு அதிகம். இலக்கியம் தவிர்த்து பெண்களும்
அரசியலும் அவனை முதன்மையாக ஈர்த்தன. பதினோராம் வயதில் முதல் கவிதை வெளியானது. அதே வயதில்
முதல் காதலும் நிகழ்ந்தது. மரியா என்ற பெண் மீது கொண்ட ஈர்ப்பு அவளது புறக்கணிப்பால்
வெகு விரைவில் கலைந்தது. எளிய குடும்பத்துப் பையனைக் காதலிக்க அவள் குடும்பம் அனுமதிக்கவில்லை.
பிள்ளைக் காதலில் ஏற்பட்ட தோல்வி நெஃப்தாலியை தனியனாக்கியது. “நெரூதா எப்போதும் தன்னை
ஓர் அனாதையாகவே எண்ணியிருந்தார். தாயைத் தேடுவதிலேயே வாழ்க்கையைக் கழித்தார். இது ஓரளவு
உண்மை. எப்போதும் தாயை இழந்த பெரிய குழந்தையாகவே இருந்தார்” என்று
அவரது இளம் பருவத் தோழி பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார். அரசியல் உள்ளடக்கம் தவிர்த்த
ஆரம்பக் காலக் கவிதைகளில் தனிமையே பெரிதும் இடம்பெற்றது. இருபது காதல் கவிதைகளில் அதை
விரிவாகவே காணலாம்.
தனது தனிமையைத் தீர்த்துக் கொள்ள இரண்டாவது பிள்ளைக் காதலில்
விழுந்தான் நெஃப்தாலி. அமேலியா அல்விஸோ முதல் சந்திப்பிலேயே அவனுக்குள் கிளர்ச்சியை
ஏற்படுத்தினாள். அவளிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்தான். பதின் பருவப் பெண்ணான அவளுக்கு
அது விளங்கவில்லை.
தவிர அவள் குடும்பத்தினர் செல்வாக்கு மிகுந்தவர்கள். அவள்
தந்தை மின்சார உற்பத்தி நிலையம் நடத்தி நகரத்துக்கே விநியோகித்து வந்தார். வசதியான
பின்னணியைச் சேர்ந்தவர்கள். கீழ்மட்ட இருப்புப் பாதைத் தொழிலாளியின் பிள்ளையுடன் தங்கள்
பெண் பழகுவதைக் கண்டித்தார்கள். அமேலியா விலகினாள். நொறுங்கிப் போன நெஃப்தாலி கவிதையில்
தஞ்சம் புகுந்தான்.
பதினான்கிலிருந்து பதினாறு வயதுக்குள் நெஃப்தாலியின் சுமார்
முப்பது கவிதைகள் சிலியில் அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த வெவ்வேறு இதழ்களில்
அச்சேறின. ‘கனவுலகவாசியாகக் கவிதை எழுதிக் கொண்டு திரிவது நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது’ என்ற தந்தையின் கண்டிப்பு இலக்கியப் பெருமையை மறைத்து வைக்கச்
செய்தது. அவையனைத்தும் பாப்லோ நெரூதா என்ற புனைபெயரில் வெளிவந்தன. பள்ளி இறுதி நாட்களில்
வசந்த கால விழாவையொட்டி நடந்த போட்டியில் முதல் பரிசுக்குரியதாக பாப்லோ நெரூதாவின்
கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் கவிதையிலிருந்து நெஃப்தாலி ரேயஸ் என்ற இயற்பெயர்
மறைந்தது. பாப்லோ நெரூதா என்ற பெயர் உலகத்துக்கு அறிமுகமானது.
o
பதினேழாம் வயதில் உயர் கல்விக்காக நாட்டின் தலைநகரமான சாந்தியாகோவுக்கு
பாப்லோ நெரூதா சென்றார். சிலி பல்கலைக் கழகத்தில் பிரெஞ்சு பயிற்றுவிப்புத் துறையில்
சேர்ந்தார். இலக்கியத்திலும் கவிதை எழுத்திலும் அவருக்கு இருந்த மோகத்தை அறிந்திருந்த
ஜோஸ் கார்மன் ஒழுங்காகப் படித்தால் மட்டுமே தன்னால் உதவ முடியும் என்ற நிபந்தனையுடன்
அவரை அனுப்பி வைத்தார். பல்கலைக் கழகத்தில் சேர்ந்த குறுகிய காலத்துக்குள் கல்வி வளாகத்திலும்
இலக்கிய வட்டாரத்திலும் பிரபலமடைந்தார் நெரூதா. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவிதைப்
போட்டியில் முதல் பரிசு பெற்றது மேலும் புகழுக்குரியவராக்கியது. குறிப்பாகப் பெண்கள்
இடையே.
நெரூதாவின் பல்கலைக் கல்விப் பருவம் சிலியின் கொந்தளிப்பான
காலம். முதலாவது உலகப் போரில் சிலி நடுநிலைமை வகித்திருந்தும் போரின் பின் விளைவுகள்
நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்தன. அரசியல் குழப்பங்களும் பொருளாதார வீழ்ச்சியும் நாட்டை
உலுக்கிக் கொண்டிருந்தன. மக்கள் எழுச்சி போராட்டமாக வெடித்தது. அரசாங்கம் கலவரங்களை
அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முனைந்தது. ஜனாதிபதி யுவான் லூயிஸ் சான்ஃபுவாண்டஸ் மாணவர்கள்மீது
அடக்குமுறையை ஏவினார். அதில் ஒரு மாணவர் பலியானார். மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்ற
பாப்லோ நெரூதா மாணவர் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். கவிஞர், மாணவர் தலைவர்
ஆகிய தகுதிகளுடன் கிளாரிடாட் பத்திரிகையின் செய்தியாளரும் ஆனார்.
அந்த நாட்களிலிருந்து
அவ்வப்போது இடையீடுகள் நேர்ந்தாலும் அரசியல் என் கவிதையிலும் வாழ்க்கையிலும் பாகமானது.
என் கவிதைகளில் தெருவைப் பாராதா வகையில் கதவை மூட முடியாதது போலவே என் இளங்கவி மனதில்
காதலுக்கோ வாழ்க்கைக்கோ மகிழ்ச்சிக்கோ அல்லது துயரத்துக்கோ கதவை அடைக்கவில்லை (நினைவுக்
குறிப்புகள் பக். 53)
என்று பின்னர் நெரூதா சான்றளித்தார்.
படிப்பதற்காகப் பல்கலைக்கழகத்துக்குப் போனவன் கவிதை எழுதுவதிலும்
கட்டுரைகள் எழுதி வெளியிடுவதிலும் மூழ்கியதை அறிந்த ஜோஸ் கார்மன் செலவுக்காக நெரூதாவுக்கு
அனுப்பி வந்த பணத்தை அடியோடு நிறுத்தினார். பத்திரிகைகளில் எழுதிக் கிடைத்த சொற்ப வருவாயில்
வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. சிற்றன்னை டிரினிடாடும் சகோதரி லாராவும் மறைமுகமாக
உதவினார்கள். வசதிக் குறைவான அறைகளில் வசித்தார் நெரூதா. அந்தக் குறுகிய அறைகளிலும்
அவருடைய கவிதை வாசிப்பைக் கேட்கவும் அரசியல் பேசவும் இலக்கியக் கலந்துரையாடல் நடத்தவும்
ஆண்களும் பெண்களும் அன்றாடம் திரண்டார்கள்.
பல்கலைக் கழகத்தில் சேர்வதற்காகப் புறப்படும் முன்பே நெரூதா
காதல் வசப்பட்டிருந்தார். டெமூகோ வசந்தகால விழாவில் சந்தித்த டெரேஸா லியான் பெட்டியன்ஸ்
மீது காதல் கொண்டிருந்தார். விழாவில் நகரத்தின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்
தெரேஸா. சாந்தியாகோவுக்குப் புறப்படும் முன்பே தெரேஸாவுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
அவரை தெரூசா என்று அழைத்தார். அவரைப் பிரிந்த துயரம் நெரூதாவை அலைக்கழித்தது. கடிதங்களில்
காதலைக் கொட்டி அனுப்பினார். அவரிடமிருந்து வந்த பதில்களால் துள்ளினார். பதில் வரத்
தாமதமானால் சுணங்கினார். விடுமுறை நாட்களில் தெரேஸாவைச் சந்திக்க நீண்ட பயணம் மேற்கொண்டார்.
சந்திக்க முடியாமற் போன தருணங்களில் துவண்டார். தனிமையில் புலம்பினார்.
தெரேஸாவுக்கும் நெரூதா மீது காதல் இருந்தது. எனினும் பெற்றோரின்
எதிர்ப்பு அவரைக் கட்டிப்போட்டது. தெரேஸாவின் பெற்றோர் நெரூதாவை வல்லூறு என்று அழைத்தார்கள்.
அவரைப் பார்க்கக் கூடாது என்று மகளுக்குத் தடை விதித்தார்கள். ஆனாலும் காதலர்கள் இருவரும்
ரகசியமாக உறவாடிக் கொண்டிருந்தனர். நெரூதா தனது கவிதைகளை ரகசியமாகத் தெரெஸாவுக்குக்
கைமாற்றிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு இன்னொரு காதலியும் வாய்த்தார். மரியா
பரோடிஸ். சிறு தாள்களில் எழுதி அளிக்கும் கவிதைகளை யாருக்கும் தெரியாமல் உள்ளங்கைக்குள்
பொத்தி வைத்து வாசித்துப் பரவசப்பட்டார் மரியா. ‘சூரியனையும் தண்ணீரையும்போல நிச்சயமானவள்’ என்று புகழ்ந்தார் நெரூதா. இருபது காதல் கவிதைகளில் 19 ஆம் கவிதை
மரியாவைப் பற்றியது.
தெரேஸாவுடன் காதலில் ஆழ்ந்திருக்கும்போதே சக மாணவியும் நண்பரான
ரூபெனின் சகோதரியுமான ஆல்பெர்ட்டினா ரோஸா அசொகருடனும் காதல் கொண்டார் நெரூதா. அவரை
விட இரண்டு வயது மூத்தவர் ஆல்பெர்ட்டினா. அவரே விரும்பியும் ஆல்பர்ட்டினா மீது உருவான
ஈடுபாட்டை நெரூதாவால் தவிர்க்க முடியவில்லை. மாணவர் வட்டத்தில் அவருக்கு இருந்த புகழ்,
அவருடைய அறிவுத்திறன் அதற்கும் மேலாக அவருடைய கவிதைகள் ஆல்பட்டினாவையும் கவர்ந்தன.
வகுப்புத் தோழன் என்ற பழக்கத்தில் ஆல்பர்ட்டினாவின் வீட்டுக்கு அடிக்கடி செல்லவும்
நெரூதாவால் முடிந்தது. அவுரேலியானா, தெரேஸா ஆகிய பெண்களுடனான காதலுக்கு நெரூதாவின்
வறிய நிலை இடையூறாக இருந்தது. ஆனால் சாதாரணக் குடும்பத்துப் பெண்ணான ஆல்பெர்ட்டினாவைப்
பொறுத்து அந்தச் சிக்கல் எழவில்லை. ஆனால் ஆல்பர்ட்டினாவின் சகோதரி அடேலினா இருவரையும்
கண்காணித்து வந்தார். சகோதரன் ரூபென் அவர்களுக்குத் துணையாக இருந்தார். நெரூதாவும்
ஆல்பெட்டினாவும் மாலை நடை செல்லும்போது கூடவே போவார். சிறிது தொலைவு கடந்ததும் அவர்களை
விட்டு விலகிக் கண் மறைவாகச் செல்வார். இது இருவருக்கிடையிலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது.
காதலர்களுக்கு இடையில் பாலுறவு என்பது நெரூதாவின் தலைமுறையில்
விலக்கப்பட்டதாக இருக்கவில்லை. உண்மையில் நெரூதா உள்ளிட்ட அராஜகவாதி மாணவர்கள் கட்டுப்பாடற்ற
காதல் இயக்கத்துக்காக வாதாடிக் கொண்டிருந்தார்கள். ஆல்பெர்ட்டினாவுடன் பந்தம் உருவாகிச்
சில மாதங்காளுக்குப் பின்பு நெரூதா கிளாரிடாடில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். பாலியல்
திருப்திக்காகத் திருமணம், கற்பு என்ற பெயரில் பெண்களைக் கருவிகளாக்குவது பற்றிக் கட்டுரையில்
விளாசியிருந்தார்.
கட்டுரை வெளிவந்த இரண்டு மாதங்களில் ஆல்பெர்ட்டினா எந்த ரகசியங்களும்
மிச்சம் வைக்காமல் தனது உடலை நெரூதாவுக்கு முழு நிறைவுடன் திறந்து கொடுத்தார். பெண்ணுடல்
ஒளிவு மறைவு இல்லாமல் முதல் முறையாக நெரூதாவுக்குக் காணக் கிடைத்தது. அந்தத் தூய அனுபவத்தையே
‘பெண்ணின் உடலே, உன் கருணையைத் தொடர்ந்து போற்றுவேன்’ என்று
எழுதி இருபது கவிதைகளின் முதல் கவிதையாகவும் வைத்தார்.
ஒரு பெண்ணுடன் காதலில் திளைத்திருக்கும்போதே தொலைவிலிருக்கும்
இன்னொரு காதலிக்காக ஏங்குவது நெரூதாவின் இயல்பு. ஆல்பெர்ட்டினாவுடன் பிணைப்பிலிருந்து
கொண்டே தெரேஸாவை நினைத்து உருகிக் கொண்டிருந்தார். கடிதங்களில் விரகத்தைக் கொட்டிக்
கொண்டிருந்தார். பெற்றோரின் தடையை உடைத்து தெரேஸா அவரைத் தேடி வந்தார். ஆனால் அந்தக்
காதல் பழைய நறுமணத்துடனோ தீராத ஒளியுடனோ மங்காத வேட்கையுடனோ தொடரவில்லை. இருவரும் நிரந்தரமாகப்
பிரிந்தார்கள். தெரேசா பின்னர் தட்டச்சு பழுது நீக்குநர் ஒருவரை மணந்தார். பாப்லோ நெரூதா
மறைவுக்கு ஓர் ஆண்டு முன்பே தெரேஸா மறைந்தார்.
ஆல்பர்ட்டினாவுடனான உறவையும் நெரூதா கைவிடவில்லை. குடல்வால்
அழற்சி முற்றி அடிவயிற்றுச் சவ்வு பாதிக்கப்பட்ட ஆபத்தான நிலையில் ஆல்பெர்ட்டினா அறுவைச்
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை மகத்தான காதலனாக நெரூதா நிரூபித்த
சந்தர்ப்பம் அது. ஆல்பெர்ட்டினா மருத்துவமனைப் படுக்கையில் கிடந்த எல்லா நாட்களிலும்
நெரூதா அவருக்குத் துணையாக இருந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் ஆல்பர்ட்டினாவின் பெற்றோர்
அவரை சாந்தியாகோ பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறுத்தி கன்செஷியன் பல்கலைக்கழகக் கல்வியியல்
பள்ளியில் சேரும்படிக் கட்டளையிட்டார்கள். நெரூதா உடைந்து போனார். பிரிவு அவருக்கு
ஆத்திரமூட்டியது. அதை ஆல்பர்ட்டினாவுக்குக் கடிதங்களாக எழுதியனுப்பினார். தனக்கு வேதனையையும்
தன் காதலுக்கு அவமதிப்பையும் செய்தவராக ஆல்பெர்ட்டினாவைக் குற்றம் சாட்டினார். அவரைக்
குற்ற உணர்வு கொள்ளச் செய்தார். ‘உன் மௌனம் நட்சத்திரத்தின் மௌனம்’ என்று சமாதானமும் சொன்னார். இருபது காதல் கவிதைகளில் மிகப் பிரசித்தமான
‘இன்றிரவு என்னால் எழுத முடியும்’ என்ற கவிதையில் வரும் ‘இனி
அவளைக் காதலிப்பதில்லை/ எனினும் அவளை எவ்வளவு நேசித்தேன்’ என்ற
வரிகள் ஆல்பெர்ட்டினாவுக்கு எழுதப்பட்டவை.
‘நெரூதா
சாந்தியாகோவை விட்டு வந்திருந்தால் எங்களுக்கு இடையில் விலகல் நேர்ந்திருக்காது. நான்
அவரைத் திருமணம் செய்துமிருப்பேன்’ என்று பின்னாட்களில் ஆல்பர்ட்டினா
குறிப்பிட்டார்.
ஆல்பர்ட்டினாவை மையமாக்கி நெரூதா எழுதிய கவிதைதான் (நீ இருந்ததைப்போலவே
உன்னை நினைவு கூர்கிறேன் – கவிதை 6) அடுத்த காதலுக்கு வழிவகுத்தது. நெரூதாவின் கவிதைகளால்
ஈர்க்கப்பட்ட லாரா, அவர் படித்து வந்த விடுதிப் பள்ளி விழாவில் கவிதை வாசிக்க நெரூதாவை
அழைக்கச் சென்றார். அந்த சந்தர்ப்பத்துக்குப் பிறகு நெரூதா அடிக்கடி பள்ளிக்குச் சென்றார்.
இருவரும் நெருங்கினார்கள். ஆல்பர்ட்டினா விலகிச் சென்ற சமயம் அது. எனினும் லாராவுக்கும்
நெரூதாவுக்கும் இடையில் ஏற்பட்ட காதல் அதிகம் பேசப்படவில்லை. லாராவைப் பற்றி ஒரு வரியும்
எழுதவில்லை. நெரூதாவே அது பற்றி மௌனம் சாதித்தார். காரணம் லாராவின் வருங்காலக் கணவரான
ஹோமிரோ அர்சேயுடன் நெரூதாவுக்கு இருந்த நட்பும் மரியாதையும். அர்சே பின்னாட்களில் அர்சே
நம்பிக்கைக்குரிய செயலாளராக நெரூதாவின் மரணம் வரை பணியாற்றினார். 1977 ஆண்டு சர்வாதிகார
ஆட்சியாளர்களால் மண்டை பிளந்து கொல்லப்பட்டார். கணவரின் மறைவுக்குப் பிறகு எழுதிய நினைவுக்
குறிப்பில் “நான் பாப்லிட்டொவை முரட்டுத்தனமான குறுகிய காலம் காதலித்திருந்தேன்” என்று லாரா ஒப்புதல் செய்தார்.
o
பால்யம் முதல் பதின் பருவம் வரை, தான் காதலித்தவர்களும் தன்னைக்
காதலித்தவர்களுமான பெண்களுடன் ஏற்பட்ட உறவையும் பிரிவையும் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு
இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும். தனது தனிமையையும் அதைத் தீர்த்த பெண்களையும்
தனது காமத்தையும் அதைத் தணி்த்த துணைகளையும் பாப்லோ நெரூதா இந்தக் கவிதைகளில் அழியாத
நினைவுகளாக மாற்றினார். ஆண் மைய நிலையிலிருந்தே இந்தக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
காதலிலும் காமத்திலும் சம பங்கு வகித்த பெண்களின் தரப்பிலிருந்து சின்ன எதிர்வினை கூட
கவிதைகளில் இல்லை. முற்றிலும் ஓர் ஆணின் காதலும் காமமும் கொப்பளிக்கும் இந்தத் தொகுப்பின்
பெருவாரியான வாசகர்கள் பெண்கள் என்பது விந்தை. எந்தப் பெண்களைப் பற்றி கவிதைகள் எழுதப்பட்டனவோ,
சந்தேகமின்றி அந்தப் பெண்கள் இந்தக் கவிதைகளை வாசித்திருந்தார்கள் என்பது அந்தப் பெண்களின்
பிற்கால நேர்காணல்களில் வெளிப்படுகிறது.
முதன்மையாக நான்கு பேர் இந்தக் கவிதைகளின் மையப் பாத்திரங்கள்.
அமேலியா, தெரேஸா, ஆல்பர்ட்டினா ஆகிய மூவரும் கணிசமான கவிதைகளின் நாயகிகள். பிற பெண்களுடன்
உறவு நிலவியபோதும் இந்த மூவரையும் நெரூதா தீவிரமாகவும் மூர்க்கமாகவும் நேசித்தார்.
தொகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கவிதைகளில் இந்தப் பெண்கள் மறைவாகவும் பகிரங்கமாகவும்
தெரியக் காரணம் நெரூதாவின் அதீதக் காதல்தான். தான் அவர்களிடம் கண்ட தனித்துவத்தை முன்னிட்டே
காதலாகிக் கசிந்திருக்கிறார்.
பதின் மூன்று வயதில் காதல் கொண்ட அமேலியாவைத் தனது விடலைப்
பருவப் பதற்றத்தைத் தணித்தவராக நெரூதா கண்டார். தன்னை விடுவித்தவர் என்று தெரேஸவைக்
குறிப்பிடுகிறார். கவிதைகளில் மிக அதிக எண்ணிக்கையை ஒதுக்குமளவு அவருடைய பாதிப்பு இருந்தது.
இருபது காதல் கவிதைகளில் எட்டு கவிதைகள் தெரேஸாவை மையங்கொண்டவை. நீண்ட காலம் சீராட்டிக்
கொண்டிருந்ததும் தெரேஸா மீதான காதலைத்தான். இளமைக் காலம் தாண்டி மேலும் காதலுறவுகள்
நேர்ந்த பின்னும் தெரேஸாவைப் பிற்காலக் கவிதைகளிலும் நினைவு கூர்ந்திருக்கிறார். தன்னை
ஓர் ஆணாக முழுமையாகத் தனக்குள் வரவேற்றவர் என்று ஆல்பர்ட்டினாவைக் குறிப்பிடுகிறார்.
தான் வாழ்ந்த காலத்தில் எழுதிய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் நினைவுக் குறிப்புகளிலும்
மறைமுகமாகவும் மாற்றுப் பெயர்களிலும் தனது தோழிகளைக் குறிப்பிடுகிறார் நெரூதா. ஆனால்
அவரது காலத்துக்குப் பின்பும் வாழ்ந்த ‘காதலிகள்’ அவர் மறைவுக்குப்
பின்னர் நினைவுகூரல்களில் தங்கள் காதலை ஒப்புக் கொண்டனர்.
இருபது
காதல் கவிதைகளில் இடம்பெறும் பெண் யார் என்ற பதில் சொல்லக் கடினமான கேள்வி எப்போதும்
என்னிடம் கேட்கப்படுகிறது. வேதனையும் விழைவும் நிறைந்த இந்தக் கவிதைகளில் உள்ளும் புறமுமாக
இரு பெண்கள் ஊடோடியிருக்கிறார்கள். அவர்களை மாரிசால் என்றும் மாரிசோம்ப்ரா என்றும்
குறிப்பிடலாம். கடலும் சூரியனும் என்றும் கடலும் நிழலும் என்றும். இரவில் திட்பமான
சுதந்திரத்தோடு நட்சத்திரங்கள் ஒளிரும் டெமூகோவின் ஈர வானம் போன்ற விழிகளுள்ள வசீகர
நாட்டுப்புறக் காதலிதான் மாரிசால். நீரோட்டங்கள் சூழ்ந்த துறைமுகப் பிரதேசத்திலிருக்கும்
மலைகள்மீது பொலியும் அரை நிலவு அவள். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தன்னுடைய மொத்தக்
குதூகலத்துடனும் உயிர்ப்புள்ள அழகுடனும் தோன்றுகிறாள்.மாரிசோம்ப்ரா நகரத்து மாணவி.
தன்னிச்சையும் கட்டற்ற கற்பனையும் நிரம்பிய என் மாணவப் பருவத்தில், சாம்பல் நிறத் தொப்பியணிந்து
நளினமான கண்களுடனும் தேன் மலர்களின் வாசனையுடனும் வந்தவள். நகரத்தின் மறைவிடங்களில்
நிகழ்ந்த வேட்கை ததும்பிய சந்திப்புக்களில் உடலை அமைதிப்படுத்தியவள்.
என்று தனது நினைவுக் குறிப்புகள் (பக். 52) நூலில் நெரூதா
எழுதுகிறார்.
இருபது காதல் கவிதைகள் நூல், வெளிவந்த நாட்களில் மகத்தான
வரவேற்பையும் கடுமையான விமர்சனத்தையும் பெற்றது. ஆபாசக் களஞ்சியம் என்றும் தனிநபர்
காமக்கனைப்பு என்றும் கண்டனத்துக்குள்ளாது. தனியொரு கவிஞனின் திறந்த வாக்குமூலம் என்று
அதைச் சொல்லலாம். அதேசமயம் அது காலத்தின் புத்தகமாகவும் இருந்தது. அதனாலேயே அது இளைஞர்கள்
நடுவில் வெகுவாகப் புகழ் பெற்றது.
இந்த நூல் ஒரு யுகத்தை உருவாக்கியது; யுகத்தால் உருவானது.
அந்தத் தலைமுறை இளைஞர்கள் அந்தக் கவிதைகளில் தங்களைக் கண்டடைந்தார்கள். அவற்றில் தங்களை
அடையாளம் கண்டார்கள். தாங்கள் வாசிக்கும் காதலுடன் தங்களை இனங்கண்டார்கள். அந்த ஆண்டுகளில்
இளம் பெண்கள் சமூக வெளியில் அவர்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.
1920 ஆம் ஆண்டு உலகின் பல பாகங்களிலும் பாலியல் சுதந்திரம் அரும்பிய காலமாக இருந்தது.
சிலி இளைஞர்கள் இடையில் புரட்சிகரமான பாலியல் இயக்கத்தைப் பற்றிப் பேசப் பக்குவப்பட்டதாக
இருந்தது அந்தப் புத்தகம்” என்று பாப்லோ நெரூதாவின் வாழ்க்கை
வரலாற்றை எழுதிய மார்க் எய்ஸ்னெர் மதிப்பிடுகிறார்.
இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் வெளிவந்து
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாப்லோ நெரூதா சிலி நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டு
பணிநிமித்தம் பர்மாவுக்குப் புறப்பட்டார். தனது காதலிகளில் எவராவது உடன் வரவேண்டும்
என்று விரும்பினார். ஆல்பர்ட்டினாவிடமும் லாராவிடமும் தன்னை மணந்து ரங்கூனுக்கு வருமாறு
மன்றாடினார். லாராவுக்கு அப்போது வயது இருபது. சிறு பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பப்
பெற்றோர் மறுத்தார்கள். லாரா துணை வரமாட்டார் என்றானதும் நெரூதா தன்னை ஏற்றுக் கொள்ளும்படி
ஆல்பர்ட்டினாவுக்குக் கடிதங்களாக எழுதினார். முன்பு அமேலியா, தெரேஸா ஆகியவர்களுடனும்
காதல் முறியக் காரணமாக இருந்த சமூக அந்தஸ்து இங்கும் அவரை வீழ்த்தியது. ஆல்பர்ட்டினாவின்
பெற்றோர் மகளைக் கண்காணித்தார்கள். நெரூதாவை மனமாரக் காதலித்தபோதும் ஆல்பர்ட்டினாவா
பெற்றோரை மீறி வெளியேவரத் துணியவில்லை. ஏமாற்றத்தையும் துக்கத்தையும் துணையாக அழைத்துக்கொண்டு
தன்னந்தனியானாகப் புறப்பட்டார் பாப்லோ நெரூதா. அவரது பயணப் பையில் இழந்த காதல்களின்
உயிர்ச் சான்றான ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்’
தொகுப்பின் பிரதிகளும் இருந்தன.
@
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக