சனி, 13 பிப்ரவரி, 2010

கவிதையில் மனித உறவுகள்

நண்பர்களே, 'இருபத்தியோராவது நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைச் செல்நெறிகள்’ என்ற பொதுத்தலைப்பு இந்தக் கருத்தரங்கத்துக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் துணைத் தலைப்பு - கவிதையில் மனித உறவுகள். இந்தத் துணைத் தலைப்பை முன்மொழிந்தவர் ஒன்று வில்லங்கமானவராக இருக்க வேண்டும். அல்லது மிகவும் எச்சரிக்கையுணர்வு கொண்டவராக இருக்கவேண்டும். ஏனெனில் தலைப்பில் இரண்டுவித மன நிலைக்குமான கூறுகள் இருக்கின்றன.

கவிதை என்ற சொல் மூலம் குறிக்கப்படும் உணர்வுநிலை எவ்வளவு விரிவானதோ அதே அளவுக்கு மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கை வழியாகச் சுட்டப்படும் இயல்பும் விரிவானது. மனிதனுடன் தொடர்புடைய எதுவும் கவிதைக்கு விலக்கானதல்ல. அதேபோல, மனிதன்கொள்ளும் எந்த உறவும் கவிதைக்குப் புறம்பானதல்ல. கவிதை என்ற சொல்லுக்குள் ஒரு கடல் மறைந்திருக்கிறது.அதைப்போன்ற இன்னொரு கடல் மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கையில் ஒளிந்திருக்கிறது. இரண்டு கடல்களை ஒரு குப்பிக்குள் அடக்க வேண்டிய கட்டாயத்தைத் தலைப்பு கொண்டிருக்கிறது. இதை வில்லங்கம் என்று சொல்லாமலிருப்பது எப்படி?

கவிதைக்குப் பொருளாகும் மனித உறவுகளும் உறவுகளைப் பொருள்படுத்தும் கவிதை யாக்கமும் முற்றானவையல்ல.. மனித உறவை எந்த மிச்சமு மில்லாமல் கவிதை சித்தரித்து விட்டது என்று சொல்வதற்கோ மனிதன் கொள்ளும் எல்லா உறவுகளும் முழுமை யடைந்து விட்டன என்று அறிவிப்பதற்கோ ஒருபோதும் வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பு ஒருபோதும் வராது. எனினும், கவிதையும் உறவுகளும் அப்படியான நிறைவை நோக்கியே முன்னேறுகின்றன. இது ஓர் எச்சரிக்கை. எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் தலைப்பை இந்தக் கோணத்திலிருந்தே அணுகுகிறேன்.

சரியாகச் சொல்லப்போனால் இந்த இரண்டு எல்லைகளுக்குள் நிகழும் ஊஞ்சலாட்டம்தான் கவிதையாக்கம். வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் வாழ்க்கையை மதிப்பிடும் படைப்புச் செயல் பாட்டுக்கும் இடையில் நிகழும் ஊஞ்சலாட்டம். அது வேடிக்கையானது. அதேசமயம் எச்சரிக்கையானதும் கூட. இதையே ஒரு பகுப்பாக வைத்துக் கொண்டால் நவீனத் தமிழ்க் கவிதையையே வேடிக்கையானவை; எச்சரிக்கையானவை; இரண்டும் கலந்தவை என்று பிரித்து விடவும் முடியும்.

அண்மைக் காலமாக எழுதி வரும் கவிஞர்களில் சிலரை இந்தப் பகுப்புக்கு உட்படுத்திப் பார்க்கலாமென்று கருதுகிறேன். இசை, முகுந்த் நாகராஜன், சங்கர ராம சுப்ரமணியன் ஆகியோரின் கவிதைகளை வேடிக்கையானவை என்றும் குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றோரின் கவிதைகளை எச்சரிக்கையானவை என்றும் யூமா வாசுகி, இளங்கோ கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் முதலியோரின் கவிதைகளை வேடிக்கையும் எச்சரிக்கையும் கலந்தவை என்றும் சொல்ல விரும்புகிறேன். இதில் வேடிக்கை என்று நான் பயன்படுத்தும் சொல் மிக எச்சரிக்கையானது. எச்சரிக்கை என்று கையாளும் வார்த்தை வேடிக்கையானது.

கவிதை தொடர்பான விவாதங்களில் கவிதை என்றால் என்ன? என்ற புராதனமான கேள்வி எப்போதும் கேட்கப்படுவதுண்டு. அதற்கான நிலையான பதில் எதுவுமில்லை. அந்தந்தக் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்பவோ கவிஞன் அல்லது திறனாய்வாளனின் மனப் பாங்குக்கு ஏற்பவோ இதற்கான பதில் முன்வைக்கப்படுவதும் உண்டு. இந்தத் தலைப்பை யொட்டி இன்னொரு தற் காலிகமான பதிலை முன்வைக்க விரும்புகிறேன். மனித உறவின் கலாச்சார முகங்களில் ஒன்று கவிதை.

முன்பே குறிப்பிட்டதுபோல மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கை விரிவானது. பறவை அதன் பறத்தலைப் பற்றிய எந்தத் தடயங்களையும் ஆகாயத்தில் விட்டு வைப்பதில்லை. மீன் அதன் நீந்தலின் சுவடுகளை நதியில் தேக்கி வைப்பதில்லை. ஆனால் மனித ஜீவனுக்கு அது போன்ற சுதந்திரம் இல்லை. அவன் இருந்த்தற்கும் வாழ்ந்ததற்குமான ஏராளமான அடையாளங்களை மண்ணில் பதித்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை தாம் உறவுகளை உருவாக்குகின்றன. இந்த உறவுகளின் ஆகத்தொகையே கலாச்சாரம் அல்லது பண்பாடு. மனிதன் தவிர்த்த பிற உயிரினங்களின் தேவை உயிரியல் சார்ந்தது. மனிதத் தேவைகளோ உயிரியலை மட்டும் சார்ந்தவையல்ல. அவன் உறவு கொள்ளும் எல்லாவற்றையும் சார்ந்தது. மனிதன் மனிதனோடு கொள்ளும் உறவு, மனிதன் இயற்கையோடு கொள்ளும் உறவு, மனிதன் காலத்தோடு கொள்ளும் உறவு, மனிதன் இடத்தோடு கொள்ளும் உறவு, மனிதன் கருத்துகளோடு கொள்ளும் உறவு, மனிதன் முந்தைய தலைமுறையோடு கொள்ளும் உறவு, மனிதன் கனவுகளோடு கொள்ளும் உறவு - என்று உறவின் நிலைகள் விரிவானவை. எண்ணற்ற கிளைகள் கொண்டவை. மனிதன் கொள்ளும் உறவுபோலவே அவன் கொள்ளும் உறவின்மையையும் உறவில் நேரும் முரண்களையும் பகைகளையும் கூட உறவின் கூறாகவே இலக்கியம் கருதுகிறது.

அப்படிக் கருதுவதனாலேயே இலக்கியம் உருவாகிறது. கவிதை உருவாகிறது. கலைகள் உருவாகின்றன. இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் பண்பாட்டுச் செயல்பாடு. ஆனால் இந்தச் செயல்பாடு காலத்தையொட்டியும் மனிதன் உருவாக்கும் சமூகச் சூழலையொட்டியும் மாற்றமடைகின்றன. அதற்கு இருபத்தியோராம் நூற்றாண்டு உட்பட எந்தக் காலமும் விலக்கல்ல. இன்றைய கவிதை உட்பட எந்தக் கவிதையும் விலக்கல்ல.

காலமும் சமூகமும் வாழ்நிலைகளும் தொடர்ந்து மாற்றம் பெற்று வருகின்றன. அதை யொட்டி இலக்கியமும் குறிப்பாகக் கவிதையும் மாற்றம் பெறுகின்றன. அதில் இடம் பெறும் உறவுகளும் மாற்றத்துக்குள்ளாகின்றன.

ஓர் எடுத்துக்காட்டாகக் காதல் பற்றிய கவிதையைப் பார்க்கலாம். காலங் காலமாகக் கவிதை கொண்டாடி வரும் ஓர் உறவு - காதல். சங்க காலம் முதல் இன்றுவரை கவிதையின் ஊற்றாக இருக்கும் இந்த உறவு ஒரே அர்த்தத்தில் பேசப் படுவதில்லை. 'காதல் வசப்பட்டவர்கள், குதிரைமீது ஏறிக்கொள்வதைப்போலப் பனை மடல் மீது ஏறிக்கொள்வார்கள். எருக்கம் பூவைச் சூடிக்கொள்வார்கள். பிறர் சிரித்தாலும் மதிக்க மாட்டார்கள்' என்று ஓர் ஆணின் காதல் மனதை 'குறுந்தொகை'ப் பாடல் சிலாகிக்கிறது. அது நாமறியாத ஒரு நூற்றாண்டின் போக்கு.'பங்கமொன்றில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்' என்று பாரதியின் ஆண் திருப்தியடைந்து விடுகிறான். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனநிலை. இருபதாம் நூற்றாண்டு நகர்ப்புறக் காதலனின் மனநிலையை ஞானக்கூத்தன் கவிதையொன்று சொல்கிறது.

'கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா.மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா.சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கி விடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்.

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்லக்
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி.
கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
தனிமையிலே என்நினைப்புத் தோன்றுமோடி
? '

இதற்கு முற்றிலும் வேறானது இன்றைய காதலனின் மனவோட்டம். தேவதேவன் கவிதை அதை இப்படிச் சொல்கிறது.

'கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்.
ஒரு காப்பி சாப்பிடலாம் வா'.


தேவதேவன் அறிமுகப்படுத்தும் காதலன் பயந்தாங்குளியாகவோ கூச்ச சுபாவியாகவோ இருக்கலாமோ என்னமோ?

ஆனால் பெண்கள் காதல் உறவில் வெளிப்படையானவர்களாக மாறி யிருக்கிறார்கள். சுகந்தி சுப்ரமணியனின் ஒரு கவிதையில் வீட்டை விட்டு வெளியே எங்கும் அழைத்துச் செல்லாத காதலன் அல்லது கணவன் மீதான புகார் ஒலிக்கிறது. அந்த மனநிலையை இன்றைய உறவு பற்றிய கருத்தாக்கங்கள் புரட்டிப் போட்டிருக்கின்றன.காதல் என்ற உணர்வே ஒப்புக்குச் சொல்லப்படுவது.அதன் உண்மையான பொருள் காமம் சார்ந்தது. காதல் பெண்ணை வழிபடுகிற ஆணாதிக்கத் தந்திரம். அவளது உடலிருப்பைக் கண்டு கொள்ளா மலிருக்கிற பாராமுகம். இதை மறுக்கிற குரலில் உறவின் புதிய பொருளை குட்டி ரேவதியின் கவிதை சொல்கிறது.

'வருடிப் பார்த்திருக்கிறாயா என் காமத்தை/
ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப்போலவோ
அல்லது ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும் ஆர்வத்துடனோ
? '
என்று கேட்கிறது. இந்த மனநிலையும் உறவுப் பரிமாணமும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கருத்தாக்கம் என்றே கருதுகிறேன்.
உறவுகளின் மீது ஒட்டப்பட்டிருந்த புனிதச் சீட்டுகளை புதிய கவிதைகள் சுரண்டி எறிந்திருக்கின்றன. தாய்மையைப் பற்றிய கருதுகோள்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன. தாய்மை என்பது இயற்கையான நல்லியல்பு,தாய் மீதான பாசம் பிள்ளைக் கடன் என்ற கருத்துக்களை இன்¨றைய கவிதைகள் நொறுங்கிவிழச் செய்திருக்கின்றன. என்.டி.ராஜ் குமாரின் இந்தக் கவிதையை அதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்ல விரும்புகிறேன்.'
பற்றி எரிகிற தீயை அணைக்கிற மனவியே,
சூசகமாய் ஒரு வார்த்தை சொல்/
சோற்றில் விஷம் வைத்து அம்மாவைக் கொன்று விடுகிறேன்'

என்று அதிர்ச்சியூட்டுகிறது கவிதை. இந்த அதிர்ச்சிக்குக்காரணம் உறவுகள் மீதான பூச்சுக்களைக் களைந்து விட்டு கவிதை எதார்த்தத்தை முன்வைக்க விரும்புவதுதான். இது தாயை மட்டுமல்லதாய்மையின் சந்தனக் காப்புச் சார்த்திய எல்லா விக்கிரகங்களின் மீதான கற்பனைகளையும் பெயர்ப்பதுதான்.

இதுவரை சொன்னவை வரையறுக்கப்பட்ட உறவுகளை முன்னிருத்திப் பேசப்பட்டவை. மனிதன் தானாகத் தேர்ந்தெடுத்துகொள்ளும் உறவுகளின் சுதந்திரத்தையும் சுதந்திரமின்மைகளையும் நவீனக் கவிதைகள் முன்வைக்கின்றன. தொண்ணூறுகளில் எழுதப்பட்ட சமயவேலின் 'சந்தி' என்ற கவிதை இது.
'நான் உன் கணவரோடு
நீ என் மனவியோடு
நம்மை எதிரெதிர் ஆசனங்களில் அமர்த்தி
வேடிக்கை பார்க்கும் மிக்சரும் காபியும்.
எல்லாம் பேசிக்கொண்டோம்
அந்த ஒரே விஷ்யம் மட்டும்
தொடப்பட முடியாமல்/
நம்மைச் சுற்றிப் புதைந்து எழுந்து
புதைந்து நழுவிக் கொண்டிருந்தது
நம் முழு இருப்பையும் அசைத்து விடும்
ஒரு கனத்த கேள்வியின் விசுவரூபத்தின் முன்
தடுமாறி நின்றோம்.


ஏற்கனவே அறிமுகமான ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உறவின் இழப்பை மீட்டெடுக்க முடியாமல் போவதன் சூழலைச் சொல்கிறது கவிதை. ஒரு கையறு நிலை மௌனத்தில் முடிகிறது. இதே உறவின் சூழலை இதே உறவின் இயல்பை மனுஷ்யபுத்திரனின் அண்மைக்காலக் கவிதை வேறு மொழியில் சொல்கிறது.
'சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
எப்போதும் உருவாகி விடுகிறது ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்க முடியாத பாவ்னையின் நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை'.
என்று முன்னேறுகிற கவிதை ஓர் உறவின் மீதான பண்பாட்டு இடக்கரடக்கலைக் கேலி செய்கிறது. அந்தக் கேலி இந்த நூற்றாண்டின் துக்கம் கூட.
'நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியைப் பெயர் சொல்லாமல் அழைப்பது எப்படி என்று?
அல்லது பெயர்களை வெறும் பெயர்களாக
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை சிஸ்டர் என்று அழைக்கும்
ஒரு ஆபாசக் கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று'
.
இப்படியான ஒரு கவிதை சென்ற நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வாய்ப்பில்லை.

வாழ்வு. கலை பற்றிய கண்ணோட்டங்களும் மாறியிருக்கின்றன. வாழ்வுடனும் கலையுடனும் மனிதனுக்குள்ள உறவைப் பற்றிய கவிதை ந.பிச்சமூர்த்தியின் 'கொக்கு'.
'படிகக் குளத்தோரம் கொக்கு
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக் குறுக்கு
முடியில் நீரை நோக்கும் மஞ்சள் கட்டாரி மூக்கு
வாழ்வு குளம் செயலும் கலை.
நாமும் கொக்கு
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகு
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு தெரிவதே போதாதா
?'
என்று சாத்வீகமான அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறார் பிச்சமூர்த்தி. அப்படியான உறவல்ல இன்றைய காலம் நமக்குக் கொடுத்திருப்பது. இதை இசையின் கவிதை அடையாளம் காட்டுகிறது.
'இச் சாக்கடை நீரில்
உறுமீன் ஏது?
கிடைக்கிற குஞ்சுகளைக் கொத்தித் தின்
என் கொக்கே.'
என்ற வரிகள் சமகால உறவின் அறிவிப்பு.

சமூகத்துடன் மனிதன் கொள்ளும் உறவும் இன்று வேறு பொருள்களைக் கொண்டிருக்கிறது. தனி மனிதன், சமூக மனிதன் என்று இருமையாகத் தென்பட்ட உறவு இன்றைய கவிதையில் தனி மனிதனின் மூலம் வெளிப்படும் சமூகம் என்றாகி இருக்கிறது. இதை ஒட்டிய நெருக்கமும் விலகலும் கவிதைக்குப் பொருளாகின்றன. ஏற்பும் நிராகரிப்பும் கவிதைப் பொருளாகின்றன. த.அரவிந்தனின் 'கல்லாட்டம்' என்ற கவிதை மறைமுகமாக ஒரு சமூக உறவின் சித்திரத்தைத் தீட்டுகிறது.

'யாரும் விளையாடாத மைதானத்தில்
ஒரு கல் நடுவராக நிற்கிறது.
ஒரு கல் ஓடிவந்து சுழற்பந்து வீசுகிறது
ஒரு கல் ஏறிவந்து
மட்டையால் விளாசுகிறது.
மூன்று கற்கள் அண்ணாந்தபடியே
பறக்கும் பந்தைப் பிடிக்க ஓடுகின்றன
எதனிடமும் சிக்காமல் பந்து
எல்லைக் கோட்டைக் கடக்க
பல கற்கள் கைதட்டுகின்றன'
.
இதில் அரசியலின் விளையாட்டும் விளையாட்டின் அரசியலும் சித்தரிக்கப்படுகின்றன. சமூக வாழ்வில் வெற்றிகள் பாராட்டப்படும் பொதுமனப்பான்மையைக் கவிதை கேலி செய்கிறது. அதன் மறுபக்கமாக தோற்கடிக்கப்படுபவர்களின் துயரத்தை நிழலுருவமாகக் காட்டவும் செய்கிறது.

வாழ்க்கையை இலக்கியம் எப்படி அளக்கிறது? டி.எஸ் இலியட் தன்னுடைய கவிதையொன்றில் இதற்கான பதிலைக் குறிப்பிட்டிருந்தார். 'இலக்கியம் வாழ்க்கையை தேக்கரண்டியால் அளக்கிறது'. கவிதையின் மனித உறவுகள் என்ற சமுத்திரத் தலைப்பை தேக்கரண்டியால்தான் என்னாலும் அளக்க முடிகிறது. மனித உறவுகள் என்று நாம் எதையெல்லாம் குறிப்பிடுகிறோமோ
அவையனைத்தையும் கவிதை பொருட்படுத்தி உள்வாங்கிக் கொள்கிறது. இந்த உள் வாங்கல் இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் மிக விரிவாகவே நிகழந்து வருகிறது. இதைப் பற்றிய ஓர் இருப்புக் கணக்குக்கு நான் தயாரில்லை.ஒன்று, நான் கவிதையாக்கத்தில் கவனம் செலுத்துபவன். கணக்கெடுப்பாளனாக மாறினால் கவிதையுடனான என் உறவு குலைந்து விடலாம். இரண்டாவது, ஒன்பது ஆண்டுகளுக்குள்ளாக ஒரு நூற்றாண்டின் போக்கைக் கணிப்பது கடினம். எனினும் கவிதை ஆர்வலானாக சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.
இதுவரை கவிதைக்குள் அனுமதிக்கப்படாமலிருந்த பல உறவுகள் நவீனக் கவிதையில் மையப் பொருளாகி இருப்பதை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கவிதைப் போக்கில் நிகழ்ந்திருக்கும் முதன்மையான அம்சமாகக் குறிப்பிடலாம். சமூகத்தில் நடந்திருக்கும் மாற்றங்களின் விளைவாக மனிதன் ஒற்றை அடையாளம் கொண்டு சுருக்கப்படுகிறான்/சுருக்கப்படுகிறாள். இதற்கு எதிராக அவன் கொள்ளும் நிலைப்பாடுகள் புதிய உறவுத் தளங்களை உருவாக்குகின்றன. பெண்ணுக்கான இடம், இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு உரிய இடம், அரசியலுடன் உறவு கொள்வதற்கும் கொள்ளாமலிருப்பதற்குமான இடம், குடும்பத்தை உருவாக்குவதற்கும் உருவாக்காமலிருப்பதற்குமான இடம் என்று புதிய தளங்கள் உருவாகியிருப்பது நவீனக் கவிதையின் போக்கில் தென்படுகிறது. தனது தனித்துவ, சமூக அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சி இன்று முன்னெடுக்கப்படுகிறது. அவை புதிய உறவுகளை ஏற்படுத்துகின்றன. சூழலுடனான உறவு, வரலாற்றுடனான உறவு, தொன்மங்களுடனான உறவு என்று அவை வளர்ச்சியடைகின்றன. இதை புதிய போக்கு எனலாம். இந்தப் பேச்சில் முன்பு ஓர் இடத்தில் குறிப்பிட்டது போல உறவின் கலாச்சார முகமே கவிதை. வேறு எந்த நூற்றாண்டிலும் கண்டிராத அக நிர்ப்பந்தங்களும் புறத் திணிப்புகளும் இருபத்தியோராம் நூற்றாண்டில் அதிகமாக இருக்கிறதோ என்னவோ? அப்படி இருப்பவற்றை எதிர்கொள்ள இன்றைய கவிதை மனித உறவுகளை மறு பார்வைக்கு ட் படுத்துகிறது. வாழ்க்கை புதிய உறவுகளை உருவாக்குகிறது. கவிதை அதை மதிப்பிடுகிறது. ஏனெனில் வாழ்வுக்கும் கவிதைக்குமான உறவு வெறும் இலக்கியம் சார்ந்தது மட்டுமல்ல; அது புதியதை விரும்புகிற மனிதனின் வேட்கை. இன்றைய கவிதையில் மனித உறவுகள் இடம் பெறுவது இந்த நோக்கில்தான் என்று கருதுகிறேன்.
சரி, எனக்கும் உங்களுக்கும் கவிதையின்பாலுள்ள உறவு என்ன? அதுவும் மனித உறவுதானே.

@

கோவை பாரதியார் பல்கலைக் கழகமும் சாகித்திய அக்காதெமியும் இணைந்து 9 பிப்ரவரி 2010அன்று கோவையில் நடத்திய கருத்தரங்கில் பேசியது.

6 கருத்துகள்:

  1. /கணக்கெடுப்பாளனாக மாறினால் கவிதையுடனான என் உறவு குலைந்து விடலாம். இரண்டாவது, ஒன்பது ஆண்டுகளுக்குள்ளாக ஒரு நூற்றாண்டின் போக்கைக் கணிப்பது கடினம். எனினும் கவிதை ஆர்வலானாக சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்./

    அவ்வப்போது சமகாலக் கவிதைகள் குறித்த உங்கள் பார்வையைத் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஜெகதீசன், உங்கள் வேண்டுகோளில் வில்லங்கமாக
    ஒன்றும் இல்லையே?

    பதிலளிநீக்கு
  3. வெளிப்படையாய் சொன்ன
    என்னுடைய இந்த
    விருப்பத்திலும்
    வில்லங்கம் காணும்
    உங்க(லொள்)ளுக்கு,
    வில்லங்கக் கவிஞர்
    என்று பட்டம் தர
    விரும்புகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. //'கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா.மாடிக்
    கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா.சன்னத்
    தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
    தூங்கி விடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
    விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்.

    பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்லக்
    கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி.
    கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
    தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
    தனிமையிலே என்நினைப்புத் தோன்றுமோடி? '//


    அடடா...இந்தக் கவிதையை காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரவிசுப்ரமண்யம் பாடிக் கேட்டுவிட்டு வீட்டில் எல்லோரும் ரசித்தோம் ,வரிகள் மறந்து விட்டனவே என்றிருந்தேன்.இங்கே கிடைத்தது.நன்றி சுகுமாரன் சார்.

    பதிலளிநீக்கு
  5. தலைப்பும், பகிர்வும் அருமை. உறவுகளைப் பேசாத கவிதைகள் மிகக்குறைவு எனலாம். பகிர்தலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கவிதை பற்றிய உங்களின் கட்டுரைகளை வாசித்து இருக்கிறேன். நடந்த நிகழ்வு பேச்சு என்பதால் நகைச்சுவையும் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி. இம்மாதிரியான நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வை
    முன்பே வலைப்பூவில் அறிவித்தல் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்

    பதிலளிநீக்கு