செவ்வாய், 20 செப்டம்பர், 2011

சுந்தர ராமசாமியும் எம்.கோவிந்தனும் சில இலக்கிய யூகங்களும்

























என்னுடைய உரை சுந்தர ராமசாமியைமட்டும் பற்றியதல்ல; ஆனால் சுந்தர ராமசாமியையையும் பற்றியது.மலையாள எழுத்தாளரும் சிந்தனையாள ருமான எம். கோவிந்தனைப் பற்றிச் சில கருத்துகளையும் அவருக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையில் நிலவிய பரஸ்பரப் பாதிப்புப் பற்றியயூகங்களையும் பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அதற்கு இந்த மேடையையும் இந்த ஆர்வலர் கூட்டத்தையும் விடப் பொருத்தமான சூழல் வேறு அமைய முடியாது.



எம். கோவிந்தனைப் பற்றி அதிகம் பேசியவரும் அடிக்கடி பேசியவரும் சுந்தர ராமசாமிதான். தமிழ் மலையாளக் கலை இலக்கியச் சூழல்கள் பற்றிய ஒப்பீடுகளில் தமிழுக்கு அவசியம் வரவேண்டிய மலையாள எழுத்தாளர்களில் ஒருவராக எம். கோவிந்தனைப் பல சமயங்களிலும் முன்னிலைப் படுத்தியிருக்கிறார். 'எம்.கோவிந்தன் மிக முக்கியமான சிந்தனையாளர். ஐரோப்பியச் சிந்தனைகளையும் கீழைத் தேயச் சிந்தனைகளையும்அவற்றின் சாரம் சார்ந்து அறிந்தவர். சகல அறிவுகளும் அவருடைய பார்வையில் வெளிப்படும்போது வயோதிகர் ஒருவர் திண்ணையில் அமர்ந்து பேசுவதுபோல் எளிமைப்படுகிறது.எதையும் நீர்க்கச் செய்யாத எளிமை அவருடையது. சிந்தனைக் கூர்மையும் விவேகமும் நகைச்சுவை உணர்ச்சியும் கொப்பளிக்கும் எழுத்து. ஓர் ஆளுமை என்று எடுத்துக் கொண்டால் அவரை எம். என். ராயுடனும் ராம் மனோகர் லோகியாவுடனும் ஒப்பிட்டுப் பேச முடியும். பெரியார்இயக்கத்தை வரவேற்றவர். அவ்வியக்கத்தை சேர்ந்த ஆரம்ப கால லட்சியவாதிகளுடன் தோழமை கொண்டிருந்தவர்.தமிழுக்கு வரவேண்டும் இவருடைய எழுத்து' என்று சாகித்திய அக்காதெமி நடத்திய இரு மொழி சிறுகதைப் பட்டறைபற்றிய கட்டுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். ( ஆளுமைகள் மதிப்பீடுகள் - பக் 367). பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1996 இல் எழுதிய இந்தக் கருத்தை அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே நேர்ப் பேச்சில் சொல்லியிருந்தார்.



அந்தக் காலப் பகுதியில் மாதம் ஒருமுறையாவது சுந்தர ராமசாமியுடன் சில நாட்களைக் கழிக்கும் வாய்ப்பு எனக்குஇருந்தது. மலையாள நவீன இலக்கியத்துடன் அறிமுகம் ஏற்பட்டு வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதில் சரியானதேர்வுக்குத் துணைபுரிந்தவர் சுந்தர ராமசாமி. மறுபடியும் சந்திக்கும் போது என்னுடைய மலையாள வாசிப்பைப்பற்றி அக்கறையுடன் விசாரிப்பார். இரண்டாவதோ மூன்றாதவதோ சந்தர்ப்பத்தில் அவர் பரிந்துரைத்த பெயர் எம். கோவிந்தன். அது மலையாள இலக்கியத்தில் நவீனத்துவத்தின்கொடிபட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தகாலம். இலக்கிய விவாதங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாக கோவிந்தன் பெயரும் இருந்தது. அதையொட்டி அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தேன். அவர் நடத்திய சிற்றிதழான 'சமீக்ஷா' வின் சில இதழ்களையும் பார்த்திருந்தேன். ஒரு கவிஞராகவும் ம.ராஜாராம் தமிழாக்கம் செய்து நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வந்திருந்த 'சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்' தொகுப்பில் 'சர்ப்பம்' என்ற நேர்த்தியான நெடுங்கதையை எழுதிய எழுத்தாளராகவும் கோவிந்தன் அறிமுகமாகி இருந்தார். ஆனால் சுந்தர ராமசாமி அவரை எனக்கு அறிமுகப்படுத்த நினைத்தது வெறும் எழுத்தாளராகவோ கவிஞராகவோ மட்டுமல்ல; ஒரு சிந்தனையாளராக.



பெரிய காரியங்களின் கடவுளர்களான சிந்தனையாளர்களின் நிழலைக் கண்டாலே ஓட்டமெடுக்கும் மனநிலை என்னுடையது. தன்னுடைய நூலகத்திலிருந்து கோவிந்தனின் 'தேடலின் ஆரம்பம்' என்ற புத்தகத்தை எடுத்துக் கொடுத்து வாசித்துப் பார்க்கும்படிச் சொன்னார். என்னுடைய அலர்ஜி பற்றிச் சொன்னேன். 'இல்ல, இவர் உங்களை அவ்வளவு ஒண்ணும் கஷ்டப்படுத்த மாட்டார். நீங்க படிக்கலாம்' என்றார். படித்தேன்.உண்மையில் வாசிப்பின் மூலம் புதிய எல்லைகளைக் காட்டக் கூடியவராக இருந்தார் கோவிந்தன். வெளிச்சத்தின் ஒரு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் மேலும் வெளிச்சத்துக்கு அதிலிருந்து இன்னும் அதிகம் வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்பவராக இருந்தார்.



'சுதந்திரத்தின் புதிய தொடுவானங்களைத் தேடி முன்னேறிச் செல்வதாக இருக்க வேண்டும் நம்முடைய வாழ்க்கையின்கோட்பாடு.பழைய கருத்துக்கள் தேடலுக்கு வழிகாட்டக் கூடியவனவாக இருந்தால் நல்லது. முடிந்தால் அவற்றின் உதவியுடன் , தேவைப்படுமானால் அவற்றைத் தூர எறிந்தும் தான் புதிய வாழ்க்கை முறையின் வெளிச்சத்தை நோக்கி நம்மால் முன்னேற முடியும். அதைத் தவிர வேறு வழியில்லை' என்ற கோவிந்தனின் கருத்தை சுந்தர ராமசாமியின்படைப்பு வாழ்க்கையோடும் கருத்துக்களுடனும் பொருத்திப் பார்க்கலாம். அவை துல்லியமாக இணைவதை உணரலாம்.



தொடர்ந்து புதிய தேடலுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த வராகவே சுந்தர ராமசாமி இருந்தார். படைப்புகளிலும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்திலும். எழுபது வயதைக் கடந்த பின்னும் இன்னும் செய்து முடிக்கப் புதிய காரியங்கள் இருக்கின்றன என்று நம்பினார். கோவிந்தன் தொண்ணூறு வயதைக் கடந்த பின் மறைந்தார். அவருடையவலுவான பங்களிப்பு என்பது அந்த வயதுக்கும் கொஞ்ச காலத்துக்கு முன்பே முடிந்திருந்தது. ஆனால் அதன் விளைவுகள் அப்போதும் காத்திரமானவை யாகவும் தவிர்க்க முடியாதவையாகவும் இருந்தன. உலக அளவில் சோவியத் யூனியனின் சரிவுக்குப் பிறகு. இந்திய அளவில் பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஜனநாயகம் இல்லாத எதேச்சாதி காரமாக உருமாறும்; சடங்குத்தனமாக நடைமுறைப்படுத்தப்பட்ட கம்யூனிசம் சிதைவுறும் என்றும் மதத்தை மனிதனுக்கு அடங்கியதாக அல்லாமல் மதத்துக்கு மனிதனைக் கருவியாக எண்ணும்போது பொதுவான மானுட மதிப்பீடுகள் கைவிடப்படும் என்றும் அவர் எழுதியிருந்தவை தீர்க்க தரிசனங்களாகக் கருதப்பட்டன. சரியாகச் சொல்வதென்றால் அவர் எழுதியும் பேசியும் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தை விட சிந்தனைக்கு ஓய்வளித்திருந்த காலத்தில் அவரது கருத்துகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தது.



'மதம் ஒரு போதை மருந்தாக இருக்கலாம். ஆனால் அந்த மருந்தைக் கைவிடுவதற்காக இன்னொரு போதை மருந்தை உட்கொள்ளத் தொடங்குவதில் என்ன முற்போக்குத்தன்மை இருக்க முடியும்?' என்று கோவிந்தன் கேட்ட கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்வியைத் தமிழ்ச் சூழலில் எழுப்பியவர் சுந்தர ராமசாமி என்று எண்ணுகிறேன். ஒருவரை யொருவர் பாதித்துக் கொண்ட இரு படைப்பாளர்கள் சந்திக்கும் புள்ளி இது.
சுந்தர ராமசாமியைப் பெரிதும் பாதித்த ஆளுமைகளில் எம். கோவிந்தனும் ஒருவர் என்பது என் யூகம். இலக்கியத்துக்கான அடிப்படைப் பார்வையை புதுமைப்பித்தனிடமிருந்தும் இலக்கியத்தின் தர நிர்ணயம் பற்றிய நோக்கைக் க.நா.சு. விடமிருந்தும் பெற்றிருந்தது போலவே வாழ்க்கை விசார¨ணையை அவர் எம்.கோவிந்தனிடமிருந்து பெற்றிருக்கக் கூடும் என்பதை சுந்தர ராமசாமியை வாசிக்கும் போதல்ல; கோவிந்தனை வாசிக்கும்போதே நான் இனங்காண்கிறேன். புதுமைப் பித்தனிடம் ஓர் எதிர்மறுப்புக் கண்ணோட்டம் இருந்தது. க.நா.சு விடம் ஓர் அத்வைதியின் பெரும்போக்கான அணுகுமுறை இருந்தது. சுந்தர ராமசாமியிடம் இந்த இரண்டுமில்லாத இம்மையியல் சார்ந்த ஒரு பார்வையைப் பார்க்க முடியும். அதனாலேயே ஆன்மீகம்,அமானுஷ்யம், தொன்மம் போன்ற கருத்தாக்கங்கள் அவரிடம் செலாவணி ஆவதில்லை. புதுமைப்பித்தனுக்கு வைதீக மரபில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட அமானுஷ்யமான கூறுகள் படைப்புகளில் இடம் பெறுகின்றன. க.நா.சுவின் எழுத்திலும் ஆன்மீக வேட்கைக்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த இருவரின் பாதிப்பு சுந்தர ராமசாமியிடம் இருந்தாலும் அவருடைய படைப்புப் பார்வை இம்மை சார்ந்தது.'செக்குலர்ஆனது. அதைக் கோவிந்தன் வழியாக அடைந்த பாதிப்பு என்று கருதுகிறேன். இந்த இம்மையியல்பு நவீனத்துவத்தின் ஒரு கூறு என்று வைத்துக் கொண்டாலும் சுந்தர ராமசாமி கோவிந்தனிடமிருந்து பெற்றிருக்கலாம்.



பாதிப்பு என்று நான் சொல்லுவதைச் சரியாகச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். எம்.கோவிந்தனால் பாதிக்கப் பட்டவர் என்று சொல்வதன் மூலம் சுந்தர ராமசாமி கோவிந்தனை அப்பட்டமாகப் பின் தொடர்ந்தார் என்று அர்த்தமில்லை. அவருடைய மொழியிலேயே சொல்வதென்றால் 'உரலில் உலக்கை விழும்போது தரையில் வைத்திருக்கும் பாத்திரம் அதிர்வதுபோலத்தான்' இந்தப் பாதிப்பு.



ஜெயமோகன் நடத்திய நேர்காணலில் (விரிவும் ஆழமும் தேடி - பக் 59) 'உங்களை மானசீகமாக எம்.கோவிந்தனின் பின்காமி என்று சொல்லலாமா?' என்ற கேள்வி இடம் பெறுகிறது. அதற்கு சுந்தர ராமசாமி அளிக்கும் பதிலில் கோவிந்தனைப் பற்றிய அவருடைய கருத்து நிலை தெளிவாகிறது.
'பின் காமி இல்லை. எங்கள் இருவருக்குமே அந்த வார்த்தை பிடிக்காது. நாங்கள் நண்பர்கள். 1950 களில் எம்.கோவிந்தனையும் சி.ஜே தாமசையும் வெகு தீவிரமாகப் படித்தேன். சி.ஜே.யிடம் எனக்கு மயக்கமிருந்தது அவருடைய மொழியைச் சார்ந்து. கோவிந்தனிடம் மயக்கமற்ற மதிப்புக் கொண்டிருந்தேன். அவரை நான் ஒருபோதும் மறக்க முடியாது. சுயமாகச் சிந்திப்பதில் இருக்கும் பேரழகை நான் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அவரைப் படிக்கும்போது என் குழந்தைகளுக்கு மலையாளம் தெரியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும். சிந்தனையின் இந்த நாட்டுவகை அவர்களுக்குத் தெரியாது. தமிழில் இந்த நாட்டு வகைக்கு உதாரணங்கள் இல்லை. புதுமைப்பித்தன் இந்த வகையாகச்சிந்திக்கக் கூடியவர் என்று தோன்றினாலும் மொழியின் அழகுகளிலும் நளினங்களிலும் சிக்கிக் கொள்ளக் கூடியவர்.திருவள்ளுவர் இந்தக் காலத்தில் இருந்தால் ஒருவேளை கோவிந்தனைப் போல எழுதியிருக்கலாம்.'



கோவிந்தனைப் பற்றிய இத்தகைய இனங்காணலை எந்த மலையாள எழுத்தாளரும் செய்ததில்லை. அவரை ஒரு மார்க்சீய எதிர்ப்பாளராகவும் எதிர் கலாச்சாரவாதியாகவுமே முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். அவரை அடிப்படையில் புரிந்து கொண்டு வகைப்படுத்தியவர் ஒரு தமிழ்ப் படைப்பாளர் என்பது தமிழ் வாசகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.



நீண்ட காலமாக அச்சியற்றப்படாமலிருந்த எம்.கோவிந்தனின் கட்டுரைகள் அண்மையில் ஒரு குட்டித் தலையணைப்பருமனுடன் நூலாக வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 1200 பக்கங்கள். இதுபோன்ற கனமான புத்தகங்களை வாசிக்க நான் கடைபிடிக்கும் உபாயம் ஒன்றிருக்கிறது. நூலின் பின் பகுதியில் இருக்கும் பெயர்க் குறிப்புப் பட்டியலில் எனக்கு விருப்பமான பெயர்களை, தெரிந்த பெயர்களைத் தேடுவது. 'புதிய மனிதன் புதிய உலகம்' என்ற கோவிந்தனின் நூலில் தமிழ்ச் சூழல் சார்ந்த பெயர்களைத் துளாவிக் கொண்டிருந்தேன். அண்ணாதுரை, பெரியார், சுப்ரமண்ய பாரதி, க.நா.சு.ராஜாஜி ஆகிய பெயர்கள் தென்பட்டன. அதில் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்த்த சுந்தர ராமசாமியின் பெயர் இல்லாமல் இருந்தது முதலில் அதிர்ச்சியளித்தது.



ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடனான நடந்த ஓரிரு சந்திப்புகளில் கோவிந்தன் சுந்தர ராமசாமி மீது கொண்டிருந்த மதிப்புப் புலப்பட்டது. முதல் முறையாக கோவிந்தனை நண்பர்கள் கி.ஆ.சச்சிதானந்தன், சி.மோகன், வசந்தகுமார் ஆகியோருடன் சந்தித்தேன். சுந்தர ராமசாமி சொல்லிச் சொல்லி மனதில் பதிந்திருந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தது போலிருந்த கோவிந்தனால் ஈர்க்கப்பட்டேன். அவருடைய 'உயிர்ப்பு' என்ற கதையை சுருக்கமாகத் தமிழாக்கம் செய்துதர வேண்டும் என்று கேட்டிருந்தார். மறுநாள் அந்த தமிழ்ச் சுருக்கத்துடன் போய்ச் சந்தித்தேன். அந்தக் கதையை குமார் சஹானி தமிழில் சினிமாவாக எடுக்கவிருப்பதாகச் சொன்னார். மயானக் காவல்காரன் ஒருவன் மரணத்தின் முன் தடுமாறுவதுதான் அந்தக் கதையின் மையம். அன்றைக்கு இருந்த இளமைக் குறும்பில் அதை விடவும் சிறப்பான கதையை 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' என்ற தலைப்பில் ஜெயகாந்தன் எழுதியிருப்பதாகத் தெரிவித்தேன்.அந்த வகையில் குமார் சஹானி மூலம் தமிழுக்குக் கிடைத்திருக்க வேண்டிய சிறந்த திரைப்படத்துகான தங்கப்பதக்கத்தை கிடைக்காமல் செய்திருக்கிறேன்.



அன்றைய பேச்சில் அதிகம் குறிப்பிடப் பட்டவர் சுந்தர ராமசாமி. 'சுந்தர ராமசாமியெ அறியோ? ' என்று பொன்னானி மலையாளத்தில் கேட்ட போது 'இதென்ன கேள்வி, சுந்தர ராமசாமி என் சட்டைப் பைக்குள்தானே இருக்கிறார்' என்ற பீற்றலுடன் பதில் சொன்னேன். பிற்காலத்தில்தான் தெரிந்தது என் சட்டைப் பைக்குள்ளே இருந்ததுபோலவே சுந்தர ராமசாமி பலருடைய சட்டைப் பைகளுக்குள்ளும் இருந்திருக்கிறார். 'நீ மலையாளத்திலும் வாசிக்கிறாய் இல்லையா? சுந்தர ராமசாமி ஸ்டேட்டஸில் மலையாளத்தில் யாரையாவது சொல்ல முடியுமா?' என்று கேட்டார் கோவிந்தன். நான் பதிலை யோசித்து முடிப்பதற்குள் அவரே சொன்னார். 'இல்லை.யூ குட் நாட் ஹேவ் எ ராமசாமி இன் மலையாளம் அஸ் யூ குட் நாட் ஹேவ் எ கோவிந்தன் இன் தமிழ்'.



கோவிந்தன் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை சுந்தர ராமசாமியும் அளித்திருந்தார். அவருடைய கட்டுரைகளில்கோவிந்தனைப் பற்றி மட்டுமாக எழுதப்பட்ட கட்டுரை எதுவும் இல்லை. இரங்கற் குறிப்புகளாக அவர் எழுதியிருப்பவற்றிலும் கூட மலையாளிகளான ஈ.எம்.எஸ் சும் பஷீரும் மட்டுமே இருக்கிறார்கள். கோவிந்தனின் மறைவுக்குப் பின்பு வெளிவந்த 'காலச் சுவடு' இதழில் கோவிந்தனின் ஒரு கட்டுரை - 'மனித மதிப்பீடுகள்' (சுந்தர ராமசாமின் காலச் சுவடு - பக்: 565) யின் மொழியாக்கம் இடம் பெற்றது. அதற்கு முன்னுரையாகக் கொடுக்கப்பட்டிருந்த வரிகள் சுந்தர ராமசாமி எழுதியவையாக இருக்கலாம் என்ற யூகத்தைத் தந்தது. அவதானியின் நாட்குறிப்பிலிருந்து... என்று அச்சிடப் பட்ட அந்த வரிகள் கோவிந்தனைச் சரியாக மதிப்பிட்டவை. 'என்னிடம் இயற்கையாக இருந்த சுதந்திர உணர்வும் உண்மையை கண்டையும் ஆசையும் கோவிந்தன் எழுத்துக்களால் வளர்ந்தன.' என்று ஜெயமோகனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். 'பலா பலன்களைப் பற்றிக் கவலைப் படாமல் எழுது', ‘சகல மேன்மைகளும் கூடுவது சுதந்திரத்திலிருந்துதான்', ‘ஒரு கலைஞன் தன் காலத்திலேயே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை'இவ்வகையான செய்திகளை அவர்களிடமிருந்து நான் தொடர்ந்து உறிஞ்சிக்கொண்டிருந்தேன்' என்று அதே பேட்டியில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டார்.



பரஸ்பரம் பாதித்துக் கொண்ட நபர்கள் தங்களது எழுத்தில் மற்றவரை முன்னிலைப் படுத்தாமல் விட்டதை இயல்பு என்று இப்போது நினைக்கிறேன். 'இலக்கியத்தில் நேரடியான உறவு இல்லாமலே பாதிப்புக்கு ஆளாகி விடுவதுண்டு. நேரடியான உறவு கொண்டிருந்தும் துர்ப்பலமான செல்வாக்கோடு நின்று விடுவதும் உண்டு. இலக்கியத்தில் செல்வாக்கு என்பது அருவமானது. வாடைக்காற்று அடிப்பதால் மழையிருக்கலாம் என்பது போன்ற அனுமானம்.செல்வாக்கின் வியாபகத்தை உள்ளங்கையில் ஏந்திக் காட்டவோ பார்க்கவோ முடியாது' (ஆளுமைகள் மதிப்பீடுகள் பக் 35) என்று சுந்தர ராமசாமி சொல்லியிருப்பதன் பொருள் கோவிந்தனை வாசிக்கும்போது எனக்குப் புலப்பட்டது.



கோவிந்தன் சிந்தனை அடிப்படையில் ஒரு ராடிகல் ஹூமனிஸ்ட். எம்.என்.ராயிடமிருந்து பெற்ற இந்தக் கருத்தாக்கத்தைதனது சுய சிந்தனை மூலம் விரிவாக்கம் செய்து கொண்டார். அதை இப்படிச் சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன்.' மனிதனின் படைப்பாற்றலுடன் இணைத்துத்தான் சுதந்திரத்தைப் புரிந்து கொண்டார் கோவிந்தன். படைப்பு உருவாக்கத்தின் விதையும் அது முளை விட்டு வளர்வதற்கான சூழலும் அந்தக் கற்பனையில்தான் துலங்குகின்றன. இதில் தனிமனிதன் என்ற கருத்துக்கு அழுத்தம் அதிகம். ஆனால் அவனுடைய சமூக இயல்பை அந்த அழுத்தம் மறுப்பதில்லை. சமூகத்தை தனிநபருக்கு அப்பாற்பட்ட எதிர்த் துருவமாக நிறுத்துவது இல்லை. தனி மனிதனிடம் ஒளிர வேண்டியதும் அவனுடைய அனுபவமாக மாறவேண்டிய இயல்புதான் சுதந்திரம். கலையும் பண்பாடும் அரசியலும் பேரழகுகொள்வது இந்த மதிப்பீட்டை வெளிப்படுத்தும்போதுதான். அதையே படைப்பாற்றல் எனலாம். புதுமை எனலாம்.ஆதன் எதிரி அதிகாரம். மனிதன் மனிதனாக இருக்க இந்த அதிகாரங்களிடமிருந்து விலகி ஓட வேண்டியிருக்கிறது. மனிதன்என்ற மதிப்பீட்டைப் புரிந்து கொள்ள இந்த அதிகாரமற்ற சுதந்திரச் சூழலை உருவாக்க வேண்டும். படைப்பாற்றல் வெளிப்படும் பின்புலத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு படைப்பின் நோக்கமும் படைப்பாளியின் நடவடிக்கையும் இந்த மானுடச் சூழலை உருவாக்குவதுதான்.



கோவிந்தனின் இந்தக் கருத்துக்களைக் கருவிகளாக வைத்து சுந்தர ராமசாமியை கூடுதல் ஆழத்தில் புரிந்து கொள்ளமுடியும். சுந்தர ராமசாமியின் படைப்புகளை முன்வைத்து கோவிந்தனையும் புரிந்து கொள்வது சாத்தியம். இரு வேறு மொழிகளில் இயங்கியபோதும் இருவரையும் இப்படிப் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எம்.கோவிந்தனின்ஜீவன் தமிழ் உயிரல்ல என்றாலும் திராவிட உயிர் என்பது ஒரு காரணம். சகல துறைகளிலும் மதிப்பீடுகள் முன்னைவிட வேகமாகச் சரிந்து கொண்டிருக்கும் காலம் இது. இதில் மானிடச் சூழலைப் பற்றிக் கனவு காணவும் யோசிக்கவும்கூட இந்த இருவரும் தேவைப்படுகிறார்கள். இந்தப் பெருங் கனவைப் பற்றி யோசித்தவர்கள் என்ற நிலையில்தான்இவரை வாசிக்கும்போது அவரும் அவரை வாசிக்கும்போது இவரும் நினைவுக்கு வந்தார்கள் என்று நினைக்கிறேன்.தவிர, கோவிந்தனை அண்மையில் வாசிக்கும்போதெல்லாம் சுந்தர ராமசாமி ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருந்தார். மலையாளத் திலிருந்து தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவருடன் அமர்ந்து போட்ட பட்டியலில்எம். கோவிந்தனின் பெயரை முதலாவதாகச் சேர்த்ததும் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருந்தது.



சரியாக அறுபது வருடங்களுக்கு முன்னால், 1951 இல் வெளியான எம்.கோவிந்தனின் 'தேடலின் ஆரம்பம்' என்ற நூலில் ஒரு முன்னுரைக் கதை இருக்கிறது. லெஸ்ஸிங் எழுதியது. கடவுள் தன்னுடைய வலது கையில் முழுமையான உண்மையையும் இடது கையில் உண்மைக்கான தேடல் வேட்கையையும் வைத்துக் கொண்டு 'உனக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்' என்று என்னிடம் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் கடவுளின் இடது கையைப் பிடித்துக் கொண்டு சொல்வேன்: 'எனக்கு இது போதும். முழுமையான உண்மை உங்களுக்குமட்டுமே உரிமையானது'.



சுந்தர ராமசாமியும் எம்.கோவிந்தனும் கடவுளின் இடது கையைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் என்பது அவர்களுக்குஇடையே உள்ள ஒற்றுமை.
@
ஜூன் 3,4, 5 நாட்களில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெற்ற சுரா - 80 பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசியது.

3 கருத்துகள்: