புதன், 2 நவம்பர், 2011

புத்தகங்களின் கூட்டறிக்கை






பொதுவாக நாங்கள் நிர்க்குணமானவர்கள்
எங்களைப் புரட்டும்போது
முனகலைவிடவும்
சுவாசத்தைப்போலவும் எழும்
மெல்லிய ஓசையிலிருந்து
நீங்கள் அதைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.


நீங்கள் அறியாத ஏதோ வனத்தின்
பூர்வ ஜென்ம பந்தம்
இன்றும் எங்களுக்குள் தொடர்கிறது
நாங்கள் புரண்டுகொடுக்கும்போது
ஒரு கானகமும் அசைவதைக் கவனித்திருக்கலாம்


நீங்கள் தொட்டுத் துடிப்பறியாத நாளங்களில்
மண்ணின் குருதி
இன்றும் எங்களுக்குள் பாய்கிறது
மை வரிகளுக்கிடையில் விரலோட்டும்போது
அதன் ஓட்டம் அதிர்வதை உணர்ந்திருக்கலாம்


உங்களில் யாரோ ஒருவரின்
கண்டு தீராக் கனவு
இன்றும் எங்களுக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
திரைக் காட்சியைப்போல
முதுகுக்குப் பின்னாலிருந்தல்ல
தொலைக்காட்சியைப்போல
தலைக்கு முன்னாலிருந்தே
அது எல்லார் கண்களுக்குள்ளும் நுழைவதைப் பார்த்திருக்கலாம்

பொதுவாக நாங்கள் சாத்வீகமானவர்கள்
எங்களில்
உன்னதர்களும் நடுவர்களும் கடையர்களும்
நிர்வாணிகளும் வேடதாரிகளும்
வழிகாட்டிகளும் திசைதிருப்பிகளும் இருப்பது உண்மை
எனினும்
நாங்கள் விதிகளை மதிப்பவர்கள்
எங்களைப்போல வரிசையைக் கடைப்பிடிப்பவர்களை
நீங்கள் ஒருபோதும் காணமுடியாது

நாங்கள் சமாதானப் பிரியர்கள்
எங்களுடைய
ஒரு பக்கம் கிழியும்போது
மறுபக்கம் தானாகவே பிய்த்துக் கொள்கிறது
அழிந்தும் அழியாமல் இருக்கிறோம் என்பது உண்மை
ஏனெனில்
நாங்கள் பக்கங்களில் மட்டும் இருப்பவர்களல்ல

நாங்கள்
குணமற்றவர்கள்
இன்முறையானவர்கள்
அமைதி விரும்பிகள்

எனினும் நீங்கள்
எப்போதும் எங்களை நினைத்து மிரளுகிறீர்கள்
வரிசையாக நிற்கும் நாங்கள்
விதிகளை மீறி
ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படுவோம் என்றும்
அதன் உயரம்
உங்களை விட உயர்ந்திருக்குமென்றும்
அஞ்சுகிறீர்கள்
பிய்த்துக் கிழித்தாலும்
எங்கள் பக்கங்களுக்கிடையிலிருந்து
அழியாக் கனவுகளின் சாபம்
உங்களைப் பின் தொடரும் என்று
பயப்படுகிறீர்கள்

உங்கள் வெருட்சிக்குக் காரணம்
நாங்களல்ல
பயத்தின் களிமண் கால்களில் நிற்கும்
உங்கள் அதிகார உடல்

நாங்கள் அப்பாவிகள்
தன்னியக்கமில்லாத வெறும் ஜடங்கள் -
மனதில் ஜுவாலையுள்ள ஒருவர்
எங்களைத் தொடும்வரை.






4 கருத்துகள்:

  1. இதனை விட மென்மையாக வலிமையாக எதிர்ப்பு காட்டமுடியாது சார்,

    பதிலளிநீக்கு
  2. Face book , Google + and Google Buzz- ல் பகிர்ந்து உள்ளேன் Sir

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சார்..
    என்ன சொல்வதெனத் தெரியவில்லை..
    மிக அமைதியும் அழுத்தமும் கூடிய பதிவு..

    பதிலளிநீக்கு
  4. வேல் கண்ணன், கௌரிப்ரியா நன்றி.

    பதிலளிநீக்கு