ஞாயிறு, 13 நவம்பர், 2011

கபீர் நெய்துகொண்டிருக்கிறார்






மனம் - தறி
வாக்கு - இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்

நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது?
நதிபோல் கடலிலா?
வானம்போல் வெளியிலா?

சொல்கிறார் கபீர்:
'உருவமற்ற நாடா
ஊடோடிப் பின்னிய துணி
கரையோ நுனியோ இல்லாதது'.

நெசவின் தரமென்ன?
கனத்த கம்பளியா?
இழைத்த பருத்தியா?
மெல்லிய பட்டா?

சொல்கிறார் கபீர்:
'நீரினும் மெல்லியது
புகையினும் நுண்ணியது
காற்றினும் எளியது'

நெய்த துணிக்குச் சாயமெது?
வெயிலின் காவி?
பிறையின் பசுமை?
நட்சத்திர வெள்ளி ?

சொல்கிறார் கபீர்:
'நிறம் நிறத்திலிருந்தே பிறக்கிறது
எனவே
எல்லாம் ஒரேநிறம்
உயிரின் நிறமென்ன சகோதரா!
நீதான் கண்டுபிடியேன்'

தறி இறக்கி நிறந்தோய்த்த துணியை
எப்படிப்போய் விற்க?
எவர்வந்து வாங்க?

சொல்கிறார் கபீர்:
'வாங்குபவர் மொய்க்கும்
சந்தையில் நானில்லை
என் இடம்தேடி
வாடிக்கை வருவதில்லை'

உடுப்பவர் இல்லாமலா உடை?
எவர் அணிவார் பூமியின் வஸ்திரம்?

சொல்கிறார் கபீர்:
'தோல் ஒன்று எலும்பும் ஒன்று
சிறுநீர் மலம் எல்லாம் ஒன்று
ஒரே ரத்தம்
ஒரே மாமிசம்
ஒரே துளியில் உருவானது பிரபஞ்சம்
பிராமணனென்ன? சூத்திரனென்ன?
உடுப்பவன் யாரானால் உடைக்கு என்ன?'

எவர் நிர்வாணம் காக்குமிந்தச் சொல்?
ஆண் அல்லது பெண்?

சொல்கிறார் கபீர்:
அதுதானே மனிதா, பெருங்குழப்பம்
வேதம் எது?
குர் ஆன் எது?
எது புனிதம்?
எது நரகம்?
ஆண் எது? பெண் எது?
காற்றோடு விந்துமுயங்கி
இறுகிச் சுட்ட மண்பாண்டம்
விழுந்துடைந்த பின்பு
என்ன என்பாய்?

மனம் - தறி
உண்மை - இழை
பூமிக்கான வாக்கை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்.




4 கருத்துகள்:

  1. அருமையான கவிதை..எடுத்துக்கொண்ட படிமதத்தைப் போல ஓரோர் ஊடையாக அடிக்கி அடிக்கி ஒரு பட்டுத் திரையாக வளர்ந்து நகர்கிறது கவிதையே... இது நெய்யப்பட்ட கவிதையா?

    பதிலளிநீக்கு
  2. பூமிக்கான வாக்கு! கருத்து, மொழி, காலம், எண், பால் என எல்லாம் ஒத்திழைந்து எதுவும் முற்ற முடியாமல் தொடர்ந்திய்லும் அற்புதம்!

    பதிலளிநீக்கு
  3. தறி இறக்கி நிறந்தோய்ந்த துணி.... நூலில்தானே நிறம் தோய்ப்பர்.....

    பதிலளிநீக்கு
  4. ஒரு புள்ளியில் துவங்கி வெளியெனும் பிரம்மாண்டத்தை நோக்கி நகரும் கவிதை. எளிமையான வார்த்தைகளில் பின்னியிருக்கிறிர்கள். பல முறை வாசித்து விட்டேன்

    பதிலளிநீக்கு