ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

விசாரணை



மலையாள சமூக, பண்பாட்டு உலகங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு வரும் பெண்பாத்திரம் குறியேடத்து தாத்ரி. பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டு சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட தாத்ரி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவள்.
நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெறி தவறிய காமக் குற்றவாளி. பின்னர் ஆணாதிக்க வெறிக்கு இரையான அப்பாவி. இன்று பெண்ணுரிமையின் முதல் மலையாளிக் குரல்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிறந்து அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து மறைந்த குறியேடத்து தாத்ரி கேரள சமூக வரலாற்றில் இன்றும் வாழ்கிறாள். ஆண் மேலாதிக்கம் அதன் எல்லா விதமான பிற்போக்குக் குணங்களுடனும் பரவியிருந்த சமுதாயத்தில் ஓர்  அபலைப்பெண் தனது உடலையே ஆயுதமாக்கி நடத்திய கலகம், குற்றஞ் சாட்டியவர்களையே  குற்றவாளிகளாக்கியது.அன்றைய சமூகக் கட்டுப் பாடுகளையும் அநீதியையும் சவாலுக்கு அழைத்த  தாத்ரி விரட்டப் பட்டாள். வாழ்வின் இறுதிக் காலங்களில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று புறவுலகுக்குத் தெரியவில்லை. ஆனால் தாத்ரியின் முடிவிலிருந்துதான் கேரள சமூக வாழ்க்கையின்  மறுமலர்ச்சிக் காலத்தில் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்று ஆரம்பமானது.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் நிலவிய மேற்சாதி ஒழுக்க விதிகள்  பெண்ணை போகச்சரக்காக மட்டுமே கையாண்டன. பிற ஆணுடன் தொடர்புகொண்டிருந்த பிழைக்காக தாத்ரிக்குட்டி என்ற நம்பூதிப் பெண்மீது விசாரணை நடத்தி சமூக விலக்கு கற்பிக்கப் பட்டது. இந்த சம்பவம் நடந்தது 1905 இல். அந்த சமுதாய விசாரணையின்  நோக்கத்தையும் நடை முறையையும் விளைவுக¨ளையும் அறிந்துகொள்ளும் முன்பு அந்தக்
காலத்தின் பண்பாட்டுச் சூழலையும் ஆண்-பெண் உறவுமுறையின் இயல்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.



இன்று ஒருங்கிணைந்த மாநிலமாகவுள்ள கேரளம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று முக்கிய நிலப்பகுதிகளாகப் பிரிந்திருந்தது. வடக்குப் பகுதி மலபார். மத்தியப் பகுதி கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்டது. தென்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகை யிலிருந்தது. ஆனால், மூன்று பிரதேசங்களிலும் கலாச்சாரக் கட்டுமானம் மட்டும் பொதுவான
தன்மைகொண்டிருந்தது. சமுதாயத்தில் ஆணின் ஆதிக்கம் மேலோங்கி யிருந்தது.பெண்களும் கீழ்ச்சாதியினரும் வளர்ப்பு விலங்குகளாகவே பராமரிக்கப்பட்டனர். இந்தக் கொடுமைக்கு எதிரான முதல் போராட்டம் 1859 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. பிற்பட்ட வகுப்பினராக ஒதுக்கப்பட்ட சாணார் இனத்தவர் தங்களது பெண்கள் மார்பை சீலையால்
மறைத்துக்கொள்ள உரிமைகோரிப் போராடி வெற்றி பெற்றனர். பெண்ணின் மானம் என்பது அடிப்படையில் ஆணின் மரியாதையும் சமூகத்தின் கௌரவமும் மானிட மதிப்பீடுகளின் தேவையும் என்று உணரவைத்த போராட்டம் அது. இந்த விழிப்புணர்வின் கனலிலிருந்து படர்ந்த சுவாலைகள் தாம் நாராயண குருவும் அய்யங்காளியும். நாராயண குரு 1903இலும் அய்யங் காளி 1905இலும் சமுதாய மறுமலர்ச்சிக்கான அமைப்புகளைத் தோற்று வித்தனர்.

ஆனால் அதே காலப்பகுதியில்தான் கேரள சமூக அமைப்பின் மேல்தட்டி லிருந்த உயர் சாதியான நம்பூதிரி சமுதாயம் பெண்களை அடுப்படிக்குள் வேகவைத்துக்கொண்டிருந்தது. வெளி உலகில் பரவலாகியிருந்த மாற்றத்தின் அதிர்வுகள் நம்பூதிரி இல்லங்களில் நுழைய அனுமதிக்கப் படவில்லை. நிலவுடைமை பிடிநழுவாமலிருக்கவும் பிராமணீய அதிகாரம் பறிபோகாமலிருக்கவும் காபந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. கலாச்சார
ஆதிக்கத்தை வலுவாக்க விதிகள் இறுக்கப்பட்டன. அந்த இறுக்கத்தில் நம்பூதிரிப் பெண்கள் நெரிபட்டனர்.

நம்பூதிரி இல்லங்களில் மூசாம்பூரி என்று அழைக்கப்படும் மூத்த நம்பூதிரி மட்டுமே திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப் படுவார். அவருக்கு இளையவர்களான நம்பூதிரிகள் கோவில் ஊழியக்காரர்களான அம்பல வாசிகளின் வீட்டுப் பெண்களையோ நாயர் தறவாட்டுப் பெண்களையோ சம்பந்தம் செய்துகொள்ளலாம். சொத்துக்கள்மீதும் பெண்கள்மீதும் முழு
அதிகாரமுள்ள மூசாம்பூரி வயதைப் பொருட்படுத்தாமல் எட்டோ பத்தோ பெண்களை 'வேளி' (கல்யாணம்) நடத்திக் கொள்வார். விளைவு? குழிக்குப் போகிற பிராயமுள்ள நம்பூதிரிக்கு முந்தா நாள் பூப்படைந்த மணப்பெண். நம்பூதிரி இல்லங்கள் உதாசீனம் செய்யப்பட்ட பெண்களால் நிரம்பிய இருண்ட தொழுவங்களாக நின்றன.

திருமணம் என்ற பெயரால் இல்லத்தில் அடைக்கப்பட்டவர்களின் சக்களத்திப் போர்,நிறைவு செய்யப்படாத பாலியல் வேட்கை ஆகியவை பெண்களை முடக்கின.இளம் விதவைகளின் பெருமூச்சுகளால் இல்லத்தின் அகாயிகள் (உள் அறைகள்) தீச்சூளைகளாயின.மணமாகாத நம்பூதிரிப் பெண்கள் (நம்பூதிரிப் பெண்களுக்கு அந்தர்ஜனம் என்று பெயர்) கனவுகளையும்
ஆசைகளையும் விழுங்கி கன்னியராக முதிர்ந்தனர்.கூந்தல் நரைத்து, உடல் குன்றி சாவுக்காகக் காத்துக் கிடந்தனர். அப்படி இறந்துபோகும் முதிர் கன்னிகளால் குலத்துக்கு சாபம் வந்து விடாமலிருக்க அந்த பிணத்துடன் உடலுறவுகொள்ள வெளியிலிருந்து கீழ்ச்சாதிக்காரர்களான 'நீசர்கள்' அமர்த்தப்பட்டனர்.இந்த தோஷ பரிகாரம் 'நீச கர்மம்' என்று அழைக்கப்பட்டது.

பண்பாட்டு விதிகளில் ஆண்களுக்கு நிரந்தர சலுகையிருந்தது. ஒரு நம்பூதிரிப் பெண் அந்நிய ஆடவனுடன் தொடர்புகொண்டால் அவள் களங்கப்பட்டவள். அவள் மீது சமுதாய விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக்கு 'ஸ்மார்த்த விசாரம்' என்று பெயர். நம்பூதிரி கிராம சபைகளின் நடவடிக்கை களைச் செய்யும் ஸ்மார்த்தர்களும் மீமாம்சகர்களும் அடங்கிய குழு அந்தர் ஜனத்தின் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும். அதற்குத் தோதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் தனியறையில் அடைக்கப்படுவாள்.உறவினர் எவரும் அவளை நெருங்கவோ உணவோ தண்ணீரோ கொடுக்கவோ அனுமதிக்கப் படமாட்டார்கள். இருண்ட அறையில் ஒண்டிக்கிடக்கும் 'குற்றவாளி'க்கு அவளுடைய தாசி(பணிப்பெண்) மட்டும் உதவலாம்.காமக்குற்றம் சாட்டப்பட்ட பெண் 'சாதனம்' என்று அழைக்கப்பட்டாள். சாதனம் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய பலவிதமான உபாயங்கள் பிரயோகிக்கப் பட்டன. பாயோடு சுருட்டிக்கட்டி மாளிகையின் மேலிருந்து அவளை எறிவது ஒருமுறை.அவளை அடைத்துவைத்திருக்கும் அறைக்குள் விஷ ஜந்துக்களை விடுவது இன்னொரு உபாயம்.இந்த தண்டனைகளிலிருந்து  தப்பினால் அவள் நிரபராதி. ஆனால் அப்படி யாரும் தப்பியதில்லை.விஷப் பிராணிகளுக்கு ஒழுக்க விதிகள் பற்றிய ஞானமில்லாததே காரணம்.

அடைக்கப்பட்டிருக்கும் 'சாதன'த்தை ஸ்மார்த்தர்களின் பஞ்சாயத்து விசாரிக்கும்.உயிர் வற்றி உடல் ஒடுங்கிய சாதனம் பெரும்பாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்.தன்னைப் போகித்தவன் யார் என்று சொல்லிவிடும். அத்துடன் சாதனம் இல்லத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலக்கப் படும். இல்லத்திலிருந்து வெளியேற்றி கதவை அடைத்து பிண்டம் வைக்கப்படும்.
நீத்தாருக்கான சடங்கு அது.இனி அவள் உயிரற்றவள். இறந்தவள். இல்லத்தி லிருந்து எறியப் பட்ட சாதனத்தை பிரம்மனின் சந்ததிகளல்லாத எந்த நீசனும் பொறுக்கிக்கொள்ளலாம்.ஆனால் அதற்கு யாரும் முன்வந்ததில்லை.தொழில் அதிகாரத்தை வைத்திருக்கும் மேற்சாதியுடன் மோதிக்கொள்ளத் துணிந்த தில்லை.

சமுதாயத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்ட பெண்கள் திசையறியாத ஏதோ நிலப்பரப்பில் மண்ணில் புதைந்து மக்கிப்போயிருக்கலாம். எரிந்து சாம்பலாகிக் கார்றில் கரைந்திருக்கலாம். அவர்களுக்கு வரலாறு இல்லாமற் போயிற்று.இந்த சமுதாய அநீதிகளைத் தனது உடலை ஆயுதமாகவும் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளையே தந்திரோபாயமாகவும் மாற்றி
எதிர்கொண்டதன் மூலம் வரலாற்றுப் பாத்திரமானவள் குறியேடத்து தாத்ரிக் குட்டி.



பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் அரங்கோட்டுக் கரையில் கல்பகசேரி இல்லத்தில் அஷ்டமூர்த்தி நம்பூதிரியின் மகளாகப் பிறந்தவள் சாவித்திரி. பிடிவாதக்காரக் குழந்தையாக வளர்ந்தாள். பெண்கள் கல்வி கற்பது ஆசாரத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்பட்ட காலத்தில் அருகிலிருந்த குரு குலத்தில் படிக்க அந்தப் பிடிவாதம் துணைசெய்தது. தர்க்க புத்தியுடனும்
சுதந்திர வாஞ்சையுடனும் வளர்ந்த பெண் பூப்படைந்தபோது தீச்சுடரின் அழகுடன் ஒளிர்ந்தாள். உடல் மலர்வதற்கு முன்னும் உடல் மலர்ந்த பின்னும் அவளை மோகித்து கலந்தவர்கள் பலர் என்று செவிவழிக் கதைகள் சொல்கின்றன.

தாத்ரியை வேளி முடித்து அனுப்பியது குறியேடத்து இல்லத்துக்கு. அவ்வாறு வெறும் சாவித்திரிக் குட்டி குறியேடத்து தாத்ரியாகிறாள்.அவளை மணந்தவர் குறியேடத்து இல்லத்தை சேர்ந்த இரண்டாம் சந்ததியான ராமன் நம்பூதிரி. இந்த மணஉறவில் ஒரு சதி மறைந்திருந்தது.

நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்தவரான மூசாம்பூரிக்கு மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் உரிமை.இரண்டாமவரான அப்பன் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் வேத விதிப்படி ஒரே ஒரு வழியிருந்தது. மூசாம்பூதிரியால் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வாரிசை உற்பத்தி செய்ய முடியாமலிருந்தாலோ தீராத நோயிருந்தாலோ அவரது அனுமதியுடன்
வைதிகமுறைப்படி பரிகாரங்கள் நடத்திய பின்பு இரண்டாமவர் மணமுடித்துக் கொள்ளலாம். குறியேடத்து நம்பியாத்தன் நம்பூதிரி தீராத நோயாளியாக இருந்தார்.அதனால் ராமன் நம்பூதிரிக்கு தாத்ரியை மணந்துகொள்ள முடிந்தது. ஆனால் முதலிரவில் அவளுடன் உறவுகொண்டவர் மூசாம்பூதிரி. தாத்ரியின் கனவுகள் பொசுங்கின. மனம் துவண்டது.உடல் களவாடப்பட்டது. அந்த கொடூர நொடியில் தாத்ரி வெஞ்சினப் பிறவியானாள்.தன்னை வஞ்சித் தவர்களைப் பழிவாங்க தனது உடலை ஆயுதமாக்கினாள். அவளது மாமிசப் பொறியில் பல ஆண்கள் சிக்கினர்.

தாத்ரியின் துர்நடத்தை ஊர்ப்பேச்சாக மாறியது.கொச்சி சமஸ்தானத்தின் ராஜா விசாரணைக்கு அனுமதியளித்தார். தாத்ரியை முன்னிருத்திய ஸ்மார்த்த விசாரம் நாற்பது நாட்கள் நீண்டது. தன்னைக் காமப்பிழைக்கு ஆளாக்கியவர்களைப் பற்றி முப்பத்தியொன்பது நாட்கள் எதுவும் பேசாம லிருந்தாள் தாத்ரி. அப்படிப் பேசாமலிருப்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பில் முடியும். தான்மட்டுமே குற்றத்தின் பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கும் என்ற உள்ளுணர்வில் நாற்பதாம் நாள் தன்னோடு கிடந்தவர்களை அடையாளம் காட்டினாள்.அவள் பகிரங்கப்படுத்திய வரிசையில் அறுபத்தி நான்கு புருஷர் களின் பெயர்கள் இருந்தன.அறுபத்தி ஐந்தாவது பெயரைச் சொல்வதற்கு முன்பு பணிப்பெண்ணிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து சபையில் காட்டச் சொன்னாள். 'இந்தப் பெயரையும் சொல்லவேண்டுமா?' என்று அவள் கேட்டதும் ஸ்மார்த்தனும் மீமாம்சகனும் மகாராஜாவும் அதிர்ந்து நடுங்கினர். அந்த நொடியில் ஸ்மார்த்த விசாரம் முடிந்தது. தாத்ரியுடன் உறவுகொண்ட அறுபத்தி நான்கு ஆண்களும் விலக்கு கற்பித்து நாடு கடத்தப்பட்டனர். தாத்ரிக் குட்டிக்குப் பிண்டம் வைக்கப்பட்டது. அவளுடைய முதுகுக்குப் பின்னால் மரண ஓலத்துடன் கதவு அறைந்து மூடப்பட்டது. அவள் இறந்து போனவர் களில் ஒருத்தியாகக் கருதப்பட்டாள்.

தாத்ரி வெளிப்படுத்திய அறுபத்தி நான்கு பெயர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். உறவினர்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள், அண்டை வீட்டவர்கள்,கல்வி கற்பித்த குரு,இல்லத்துக்கு வந்துபோன இசைவாணர்கள், கதகளிக் கலைஞர்கள் என்று எல்லா ஆண்களும் இருந்தனர். அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பெற்ற தகப்பனின்பெயரும் உடன்பிறந்த சகோதரனின் பெயரும் இருந்தன. தாத்ரி சொன்னவர்களில் பாதி அவளை வீழ்த்தியவர்கள். மறுபாதி அவளால் வீழ்த்தப்பட்டவர்கள். அவள் சொல்லாமல்விட்ட அறுபத்தி ஐந்தாவது பெயர் கொச்சி மகராஜாவின் பெயர் என்றும் ராஜாவுக்கு நெருக்கமுள்ள நபரின் பெயர் என்றும் நிரூபணம் செய்யப்படாத ஊகங்கள் நிலவின.இன்றும் அது விடுவிக்கப்படாத புதிர்.

குறியேடத்து தாத்ரி சம்பவத்துக்கு முன்பும் சில அந்தர்ஜனங்கள் பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வாயில்லாப் பிராணிகளாக தண்டனையை ஏற்றுக்கொண்டு மடிந்து காலத்தின் புழுதியாக அவர்கள் மறைந்தனர்.தாத்ரி குட்டி மட்டுமே எதிர்விசாரணைக்குத் தயாரானவள். தன்மீது சுமத்தப் பட்ட குற்றத்தின் ம்றுபக்கத்தை அம்பலப்படுத்தி தார்மீக உறுத்தலை உண்டாக்கியவள். ஆணாதிக்க மனோபாவத்தையும் பெண்ணுக்கு விரோதமான சாதியொழுக்க விதிகளையும் கேலிக்குள்ளாக்கியவள்.எந்த உடல் பாவக்கறை படிந்தது என்று உதாசீனமாகச் சொல்லப்பட்டதோ அதே உடலை ஆயுதமாக தாத்ரி மாற்றினாள். எந்த ஒழுக்க விதிகள் தன்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனவோ அதேவிதிகளை தனது பிரதிவாத மாக்கினாள். 'குலப்பெண்ணுக்குத்தான் பிரஷ்டம். எப்போது ஒரு குலப் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று தீர்மானிக்கிறீர்களோ அப்போதே அவள் அந்தத் தகுதியிலிருந்து கீழே தள்ளப்பட்டு வேசியாகிறாள். வேசியின் தர்மத்தைக் கேள்வி கேட்கவோ அவளைத் தண்டிக்கவோ ஸ்மார்த்த சபைக்கு என்ன அதிகாரம்?' என்ற தாத்ரியின் கேள்வியில் அன்று மிரண்ட சமுதாயம்  பின்னர் ஸ்மார்த்த விசாரம் நடத்தவில்லை.

நாடு கடத்தப்பட்ட அறுபத்து நான்கு ஆண்களில் ஒருவரைத் தவிர யாரும் பின்னர் சொந்த மண்ணுக்குத் திரும்பவில்லை. கதகளிக் கலைஞரான காவுங்ஙல் சங்கரப்பணிக்கர் மட்டும் சமுதாய விலக்கிலிருந்து விடுவிக்கப் பட்டார். தன்னை நாடுகடத்திய ராஜாவிடமிருந்து கலைக்காகப் பரிசு பெறுவதை சபதமாகக்கொண்டு தீவிர சாதகத்தில் ஈடுபட்டார். நாடுகடத்தப்
பட்டவருக்கு மேடைகள் மறுக்கப்பட்டன. ஒருவேளைச் சோறோ  ஒரு மிடறு நீரோ தலைசாய்க்க ஒரு திண்ணையோ அகப்படாமல் அலைய நேர்ந்தது. எனினும் சங்கரப் பணிக்கர் தளரவில்லை. அறுவடை முடிந்த வயல் வெளிகளை அரங்காக்கி கதகளி நிகழ்ச்சிகளை நடத்தினார்.புரவலர்க ளல்லாத சாமானிய மக்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.அதுவரை கோவில்களின்
கூத்தம்பலங்களிலும் நம்பூதிரி இல்லங்களிலும் தனி ரசனைக்குரிய கலையாக இருந்த கதகளி அவரால் பொது ரசனைக்குரிய ஊடகமானது. அந்தக் கலைஞரின் மறு அரங்கேற்றத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடைசியில் எந்த ராஜாதிகாரம் பிரஷ்டம் செய்ததோ அதே கொச்சி
மகாராஜாவிடமிருந்து தனது கலைக்குரிய அங்கீகாரமாக பரிசும் பெற்றார் சங்கரப் பணிக்கர்.

தாத்ரி சம்பவத்தால் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட பலரும் அவளைச் சபித்திருக்கிறார்கள். சபிக்காத நபர் சங்கரப் பணிக்கர். இருவருக்குமிடையில் பாலியல் ஈர்ப்பை மீறிய உறவு உருவாகியிருந்தது. ஒரு கலைஞனுக்கும் ரசிகைக்குமான உறவு. சங்கரப் பணிக்கர் கதகளியில் ஏற்ற பாத்திரங்க ளெல்லாம் பகன்,கீசகன் என்று அசுர இயல்புள்ள பாத்திரங்கள். அவற்றைச்
சித்தரிப்பதில் முரட்டுத்தன்மையை மீறி சில அடவுகளில் பெண்மையின் சாயல் இருந்தது. அது தாத்ரியின் சிநேகம் அளித்த கொடை என்றும் கருதப் படுகிறது. மனித தேகமல்ல கலையின் பரவச நுட்பம்தான் தாத்ரியிடம் காதலையும் காமத்தையும் கிளரச் செய்திருக்கிறது.



ஸ்மார்த்த விசாரம் நடத்தி பிரஷ்டு கற்பிக்கப் பட்ட குறியேடத்து தாத்ரிக்கு என்ன ஆயிற்று என்பது வாய்மொழிக் கதைகளிலிருந்தே அறியப்படுகிறது. தாத்ரி விசாரணை பற்றிய தகவல்கள் வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் கையேட்'டில் (மலபார் மானுவல்) விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால் பின்கதைகள் அனைத்தும் மக்கள் பேச்சிலிருந்தே பெறப்படுகின்றன.
சம்பவத்தோடு தொடர்புடைய பலரது பின் தலைமுறையினர் இன்றும் வாழ்கிறார்கள் என்ற நிலையில் வாய்மொழித் தகவல்களை பொய்யென்று தள்ளுபடி செய்வதும் தவறாகிவிடும்.

சமுதாயத்தால் விலக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் பொறுப்பு மகாராஜாவைச் சேர்ந்தது.கூடாவொழுக்கத்துக்காக தண்டிக்கப்பட்டவளை ஊர் மத்தியில் பராமரிப்பது ராஜ நீதிக்கு இழுக்கு என்பதால் புறம்போக்குப் பகுதியில் அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப்படும். வைதீக நியதி அது. அதுபோன்று தாத்ரிக்கும் பெரியாற்றின் கரையில் மயானத்தையொட்டி
இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே அவள் வாழ்ந்ததற்கான சான்றுகளில்லை. 1905 இல் இறந்து போகவில்லை என்பது மட்டும் நிச்சயம். முன் காலங்களில் பிரஷ்டம் செய்யப்பட்ட பிற பெண்களைப்போல தாத்ரியும் பாண்டிதேசத்துக்கு -தமிழ்நாட்டுக்கு- அடைக்கலம் தேடிப் போனாள் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட விவரம். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியர் ஒருவரை மணந்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயுமாகியிருக்கிறாள். இரண்டு பெண்களும் ஓர் ஆணும். மகள்களில் ஒருத்தி பாலக்காட்டிலும் மகன் சென்னையிலும் வாழ்ந்தார்கள். சென்னைவாசியான மகள் வயிற்றுப் பேத்தி நடிகையாக அறிமுகமாகி மலையாளத் திரையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நட்சத்திரமாக ஜொலித்திருக்கிறாள்.

அறுபத்தைந்து பேருடன் உடலுறவு கொண்டும் கர்ப்பமடையாத தாத்ரி மூன்று குழந்தைகளுக்குத் தாயானது உயிரியல் விந்தையா? மனதின் தந்திரமா? என்பது இன்றும் தெளிவாகாத ரகசியம்.

ஸ்மார்த்த விசாரத்தின்பேரில் புறக்கணிக்கப்பட்ட ஆண்கள் குற்றவுணர்வால் சாதியும் பெயரும் மாறி வேறிடங்களுக்குப் போனார்கள். அவ்வாறு வெளியேறிய ஒருவரைப் பற்றி மலையாளச் சிந்தனையாளரும் இலக்கிய வாதியுமான எம்.கோவிந்தன் பின்வருமாறு எழுதினார்.

'மேனோன் சாதிப்பிரிவைச் சேர்ந்த அவர் திருச்சூர் நகரத்தில் முன்சீப்பாகவோ மாஜிஸ்திரேட்டாகவோ பணியாற்றி வந்தார்.திருமணமானவர். ஸ்மார்த்த விசாரத்தில் விலக்கப்பட்டவர்களின் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. பதறிப்போன அவரது மனைவியும் குடும்பத்தினரும் மேனோனைக் கைவிட்டனர்.ஊரைவிட்டு வெளியேறினார் மேனோன். அப்போது இளைஞராக இருந்த அவர் பாலக்காடு ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்துப் பெண்மணி ஒருவரை மணந்துகொண்டு பிழைப்புத் தேடி இலங்கைக்குப் போனார்.தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரும் சம்பாத்தியம் எதுவும் தேடாமல் இலங்கையிலேயே காலமானார் மேனோன். அவரது விதவை பாலக்காட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் தமிழ் நாட்டில் குடியேறினார். வீட்டு வேலை பார்த்தும் சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட்டும் பிள்ளைகளை வளர்த்தார். பிற்காலத்தில் அந்த இரு பிள்ளைகளும் திரைப்பட நடிகர்களானார்கள். அவர்களில் ஒருவர் தமிழக மக்களின் அமோக ஆதரவுக்குப் பாத்திரமானார். காலப்போக்கில்அவர்களை ஆள்பவருமானார்.'


கேரளத்தின் மறுமலர்ச்சி சிந்தனையில் பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வைத் தூண்டி விட்டதில் குறியேடத்து தாத்ரியின் கலகத்துக்கும் பங்குண்டு. தாத்ரி கலகம் நடந்து முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு நம்பூதிரிகளை மனிதர்களாக மாற்றும் நோக்கத்துடன் 'யோக க்ஷேம சபை' தொடங்கப்பட்டது. நம்பூதிரிக் குடும்பத்தில் பிறந்தவராயினும் அதன் மனு நீதிக்கும் ஆதிக்க விதிகளுக்கும் கலாச்சார அடக்குமுறைக்கும் பிற்போக்கு மனோபாவத்துக்கும் எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர். செயலாலும் பேச்சாலும் எழுத்தாலும் புதிய உணர்வு களைத் தோற்றுவித்தனர்.

பின் நாட்களில் அவர்களில் முன் வரிசையில் நின்றவர் வி.டி.பட்டதிரிப்பாடு. பெண் உரிமை பிரச்சனை ஆணின் பிரச்சனையும் சமூகத்தின் பிரச்சனையும் அதன் விரிவாக மானுடப் பிரச்சனையுமாகிறது என்று உணர்த்தினார் அவர். இல்லங்களின் சமையற்கூடங்களில் வெந்து உருகிக்கொண்டிருந்த பெண்களின் அவலத்தை மையமாக்கி அவர் எழுதிய 'அடுக்களையிலிருந்து அரங்கத்துக்கு' என்ற நாடகம் ஸ்மிருதிகளின் விலங்குகளிலும் மனு தர்மத்தின் தளைகளிலும் பூட்டப்பட்டிருந்த உயிரின் சுதந்திரத்தை உசுப்பியது. அந்த நாடகம் தான் ஈ.எம்.எஸ். உட்பட பல சமூக சீர்திருத்தவாதிகளை உருவாக்கியது.

குறியேடத்து தாத்ரிக்கு கலாச்சார நாயகியின் மதிப்பை ஏற்படுத்தியவரும் வி.டி.தான்.அதன் தொடர்ச்சியாகத்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் தாத்ரியை மையப்படுத்தி படைப்புகள் உருவாயின. மலையாள இலக் கியத்தில் ஆழமான செல்வாக்குச் செலுத்திய கலாச்சாரப் பாத்திரமாக தாத்ரியைச் சொல்லலாம். தாத்ரியின் வரலாற்றை விரித்தும் அதன் அறியப் படாத பக்கங்களின் மர்மத்தைத் தேடியும் கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் திரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. 'அபராதியான அந்தர்ஜனம்' என்ற தலைப்பில் ஒடுவில் குஞ்ஞிக்கிருஷ்ண மேனோன்  எழுதிய கவிதையே முதல் படைப்பு. மாடம்பு குஞ்ஞிக்குட்டனின் 'பிரஷ்டு',
லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் 'அக்னி சாட்சி' (சிற்பியின் மொழியாக்கத்தில் தமிழில் வெளி வந்துள்ளது), உண்ணி கிருஷ்ணன் பூதூரின் 'அம்ருதமதனம்', நந்தனின் 'குறியேடத்து தாத்ரி' இவையெல்லாம் தாத்ரியின் நாவல் முகங்கள். எம்.கோவிந்தன் எழுதிய 'ஒரு கூடியாட்டத்தின் கதை'- தாத்ரி குட்டிக்கும் கதகளி கலைஞர் சங்கரப் பணிக்கருக்குமிடையில் இழையோடிய காதலைச் சொல்லும் நீள்கவிதை.'யக்ஞம்' என்ற ஸ்ரீதேவியின் நாடகம் ஸ்மார்த்த விசாரத்தை சமகாலச் சூழலில் பொருத்தும் மறுவாசிப்பு.

ஒரு கூடியாட்டத்தின் கதையில் இடம் பெறும் ஆண்-பெண் உறவின் கனவையும் காதலையும் மையக் கருவாக வைத்து மூன்று திரைப்படங்கள் உருவாயின. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய 'பரிணயம்' (இயக்கம்: ஹரிஹரன்), அரவிந்தன் இயக்கிய 'மாறாட்டம்', ஷாஜி என்.கருண் இயக்கிய 'வானப்ரஸ்தம்'.

இந்த ஆண்டுடன் தாத்ரி குட்டி மீதான விசாரணைக்கு நூறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. வெறும் காமப் பிசாசு என்று சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உதாசீனத்துக்குள்ளான ஒருபெண் நூற்றாண்டு கடந்தும் நினைக்கப்படுவதன் காரணம், தாத்ரியின் அரூபமான முன்னிலையில் எல்லா கலாச்சார மனங்களும் மறைமுக விசாரணைக்குள்ளாவதாக இருக்கலாம்.




ஆதார நூல்கள்:

1.வி.டி.யுடெ தெரஞ்ஞெடுத்த க்ருதிகள் (வி.டி.யின் தேர்ந்தெடுத்த படைப்புகள்)

2.ஒரு கூடியாட்டத்தின்டெ கத (ஒரு கூடியாட்டத்தின் கதை) - எம்.கோவிந்தன்

3.லோகண்டெ மலபார் மான்யுவல் (லோகனின் மலபார் மானுவல்)

4.தாத்ரிக்குட்டியுடெ ஸ்மார்த்த விசாரம் (தாத்ரி குட்டியின் ஸ்மார்த்த விசாரம்) ஆலங்கோடு லீலா கிருஷ்ணன்

5.அடுக்களையில் நின்னும் அரங்ஙத்தேக்கு (அடுப்படியிலிருந்து அரங்குக்கு) வி.டி.பட்டதிரிப்பாடு

6.கண்ணீரும் கினாவும்- வி.டி.யுடே ஆத்ம கத (கண்ணீரும் கனவும் - வி.டி.யின் தன் வரலாறு)


2005 ஆம் ஆண்டு எழுதப்பட்ட் கட்டுரை. முதலில் ‘உங்கள் நூலகம்’ இதழில் வெளிவந்தது.  பின்னர் ‘வெளிச்சம் தனிமையானது’ கட்டுரை நூலில் (உயிர்மை பதிப்பகம், சென்னை ,2008) சேர்க்கப்பட்டது. 
ஓவியம் நன்றி: நம்பூதிரி.



















1 கருத்து:

  1. நான் படித்ததிலேயே கவிஞரின் ஆகச்சிறந்த கட்டுரை இதுதான் எனச்சொல்வேன். புரையோடிய ஒரு காலகட்டத்தின் சமூகம், மொத்த அழுக்குகளோடும் நம் கண்முன் புரண்டோடுகிறது.இப்படி இன்னும் நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு