வியாழன், 9 ஜனவரி, 2014

உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது...


ணையத் தகவல்கள் இரண்டு இந்தக் குறிப்புகளுக்குத் தூண்டுதல். முதலாவது, சமூக வலைத்தளம் மூலம் வந்த வேண்டுகோள். இரண்டாவது நண்பர் அந்திமழை இளங்கோவன் பகிர்ந்து கொண்ட பதிவு. இரண்டும் நினைவுகளைக் கிளறி  விட்டன.  ரசித்து மறந்த காலத்தையும் கேட்டு மறந்த பாடல்களையும் திரும்பக் கொண்டு வந்தன.

றுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் விடலைகளாகவும் வாலிபர்களாகவும் இருந்த இன்றைய வயோதிக அன்பர்களின் நினைவில் எப்படியும் சில இந்திப் பாடல்கள் இப்போதும் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும். இசை நாடாக்கள் புழக்கத்துக்கு வந்திராத காலம். திரைப் படத்தின் பாடல்களை கொலம்பியா அல்லது எச் எம் வி ரிக்கார்டுகளில் கேட்டு மகிழுங்கள் என்று திரைப்பட இடைவேளைகள் அறிவித்தபோதும் இசைத் தட்டுகள் கைக்கெட்டாத காலம். வானொலி மட்டுமே இசை விரும்பிகளின் புகலிடமாக இருந்த காலம். சுருக்கமாக இளையராஜாவுக்கு முந்தைய சங்கீதக் கனவுகளின் காலம்.

இந்தக் கால அளவில் அதிகமான நேயர்களைக் கொண்டிருந்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். இந்திய வானொலிகள் பெரும்பாலும் அரசின் பரப்புரை ஊடகங்களாகவும் மேட்டுக்குடி ரசனையைப் பேணுவனவாகவும் வெகுஜனப் பங்கேற்புக்கு வாய்ப்பளிக்காதவையாகவும் இருந்தன. அந்தக் குறையை இலங்கை வானொலி தீர்த்து வைத்தது.
வானொலி என்பதே ஆடம்பர சாதனமாகக் கருதப்பட்ட காலத்திலேயே இலங்கை வானொலிக்கு அபாரமாக வளர்ச்சியடைந்திருந்தது இந்த ஒலிபரப்பு. 1950 முதல் இரண்டு பதிற்றாண்டுகள் 'கிங் ஆஃப் ஏர் வேய்ஸ்' என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 20 கோடி நேயர்கள் இருந்ததாகக் கணக்குகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு மொழிகளான தமிழிலும் சிங்களத்திலும் மட்டுமல்லாமல் இந்தியிலும் தென் இந்திய மொழிகள் நான்கிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நிகழ்ச்சிகளை அளித்தது. அதில் நிறுவனத்துக்குக் கிடைத்த மாபெரும் நேயர் வரவேற்பு தமிழ் மக்களிடமிருந்துதான். இரண்டாவது அதிக பட்ச நேயர் எண்ணிக்கை இந்தி நிகழ்ச்சிகளுக்கு. அதிலும் குறிப்பாக 'பினாகா கீத் மாலா'வுக்கு.


அமீன் சயானி



இலங்கை வானொலி நிலையம் அமைக்கப்பட்டதே சுவாரசியமான கதை. ஒரு தந்திப் பொறியாளரின் அந்தரங்கப் பொழுது போக்கே வெகுஜன ஊடகமாக மாறியது. பிரிட்டிஷ் காலனி நாடுகஈல் ஒன்றாக இருந்த சிலோனின் தலைநகர் கொழும்புவில் அமைந்திருந்த மத்திய தந்தி அலுவலகத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த  எட்வர்ட் ஹார்ப்பர் என்ற ஆங்கிலேயருக்கு ஒரு ரேடியோக் கருவி கிடைத்தது. 1923 ஆம் ஆண்டு அது. முதல் உலகப் போரில் நேசநாடுகளால் முறியடிக்கப்பட்ட ஜெர்மன் ராணுவத்தின் நீர்மூழ்கிக் கப்பலிலிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கருவி  ஹார்ப்பரின் கையில் கிடைத்தது.  தனது சக ஊழியர்களுடன் அதைப் பரிசோதனை செய்து பார்த்தார். சோதனை வெற்றி அடைந்தது. தந்தி அலுவலகத்திலிருந்து  ஒலித்த இசையைக் கேட்டு மக்களின் காதுகள் சிலிர்த்தன. இலங்கையில் வானொலி நிலையம் உருவானது. 1925 டிசம்பர் 16 அன்று தனது பரவலான ஒலிபரப்பைத் தொடங்கியது. விடுதலைக்குப் பிறகு ஆங்கிலேயர்களிடமிருந்து கைமாற்றப்பட்ட வானொலி இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கத் தொடங்கியது. 1950 இல் தொடங்கப்பட்ட வர்த்தக ஒலிபரப்பு மாபெரும் வெற்றிகளை ஈட்டியது. இதற்குப் போட்டியாகவே இந்திய வானொலி வர்த்தக ஒலிபரப்பைத் தொடங்கியது. தமிழ் நாட்டு கோபால் பல்பொடிக்கும் சைபால் களிம்பு மருந்துக்கும் இந்திய லக்ஸ் சோப்புக்கும் லிப்டன் தேயிலைக்கும் சந்தையை உருவாக்கியதில் இலங்கை வானொலியின் பங்கு அபாரமானது. தமிழ்ச் சினிமாவை பாடல்கள் மூலமும் ஒலிச் சித்திரங்கள்  மூலமும் அது வளர்த்தது. சிலோன் ரேடியோவில் பாட்டுக் கேட்டு ரசிக்காத ஒரு தமிழர் கூட இருக்க முடியாது என்ற நிலையை அடைந்தது.

தினமும் பதினேழு முதல் இருபது மணி நேர ஒலிபரப்பு. கோடிக்கணக்கான நேயர்கள். கோடிக்கணக்கான வருவாய். திரைப்பட நட்சத்திரங்களுக்கு நிகராகப் புகழ் பெற்ற வானொலி அறிவிப்பாளர்கள். இப்படிச் செல்வாக்குடன் இருந்த வானொலி நிலையம் இன்று கிட்டத்தட்ட செயலிழந்த நிலையில் இருக்கிறது. விளம்பர வருவாய் குறைவு. எனவே பேருக்கு மட்டும் நிகழ்ச்சிகள். நட்சத்திர அறிவிப்பாளர்கள் பலர் போர்க் காலங்களில் சிதறிப் போனார்கள். இவ்வளவு இருந்தும் ஆச்சரியமான ஓர் உண்மை நிலைத் திருக்கிறது. பண்பலை ஒலிபரப்புகள், இண்டர்நெட் வானொலி, எல்லாம் வந்த பின்னரும் இலங்கை வானொலின் நேயர் எண்ணிக்கை குறையாம லிருக்கிறது. ஆனால் அந்த நேயர்கள் அதிருப்தியுடன் காத்திருகிறார்கள். ஒலிபரப்பு நேரம் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு அமைப்பையே - ரேடியோ சிலோன் நேயர்கள் சங்கம் – உருவாக்கி யிருக்கிறார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோள்தான் வலைத்தளம் மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதுதான் ஞாபகத்தின் கதவுகளை விரியத் திறந்து வைத்தது.

லங்கை வானொலி மூலம் என் காதுகளுக்குள் குடியேறிய இரண்டு பாடல்களை இன்னும் மறக்க முடியவில்லை. ஒருபோதும் மறக்க முடியாது. முதலாவது, ஒரு இந்திப் பாடல். குருதத் இயக்கி நடித்த 'காகஸ் கே பூல்' படத்தின் பாடல். தோல்விய்டைந்த சினிமாக் கலைஞனைப் பற்றிய அந்தப் படம் இன்றும் குருதத்தின் சாதனையாகக் கருதப்படுகிறது. சினிமாவுக்காக வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட கலைஞனைப் பற்றிய அந்தக் கதைக்கு குருதத்தின் நிஜ வாழ்க்கையுடன் தொடர்பு இருந்தது. 'வக்த் நே கியா, க்யா ஹசீ சிதம்' என்று நாயகி வஹீதா ரஹ்மானுக்காகக் குருதத்தின் மனைவி கீதா தத் பாடிய பாடலுக்கும் நிஜப் பின்னணி இருந்தது. தனது கதாநாயகி வஹீதா ரஹ்மான் மீது கணவர் குருதத்துக்கு ஏற்பட்டிருந்த ஈடுபாட்டில் நொந்து போயிருந்தார் கீதா. 'காலம் நமக்கு என்ன துயரத்தைச் செய்திருக்கிறது? இனி நீ, நீயுமல்ல, நான் நானுமல்ல' என்ற கைபி ஆஸ்மி எழுதிய வரிகள் படத்தின் கதைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரங்களை ஏற்றவர்களின், பாடியவரின் உண்மையான மனப்போக்குக்கும் பொருத்தமாக இருந்தன. இசை - எஸ். டி பர்மன்.

முதன் முதலில் கேட்ட இந்தப் பாடல் இப்போதும் ஞாபகத்தில் ஒலிப்பது போலவே பாட்டைப் பற்றிச் சொன்ன அறிவிப்பாளரின் குரலும் எதிரொலிக்கிறது. 'பினாகா கீத் மாலா' என்ற இந்தி 'நேயர் விருப்பம்' நிகழ்ச்சியில் அந்தப் பாடலை முதலில் கேட்டேன். அடுத்த பாடல் இன்ன படத்தில் இன்னார் இசையமைப்பில் இன்னார் எழுதி இன்னார் பாடியதுஎன்று அறிவிக்கும்போதே அந்தப் பாடலுக்குப் பொருத்தமான தொனியை உருவாக்கிக் கொள்ளும் அறிவிப்பாளர் மீது மதிப்பு ஏற்பட்டது. அவர் பெயர் அமீன் சயானி. பினாகா கீத்மாலா' நிகழ்ச்சியின் நிரந்தர அறிவிப்பாளர். இலங்கையில் அரசியல் கொந்தளிப்பு தொடங்கிய எண்பதுகளிலும் அமீன் சயானி உற்சாகக் குரலில் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார். பின்னர் எப்போதோ காணாமற் போயின அவரும் அவரது நிகழ்ச்சியும். ஆனால் சப்த வசீகரனான அமீன் சயானியை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த ஆசை மனதுக்குள் உருவானபோது அதற்கான எந்தச் சாத்தியமும் இல்லாமலிருந்தது.

பத்திரிகையாளனாகப் பணியாற்றிய காலங்களில் அந்த ஆசை மீண்டும் உயிர் பெற்றது. இன்று உள்ள அளவு தகவல் தொடர்பு வசதிகள் இல்லாமலிருந்த நாட்கள்.  ஒரு இசை விற்பனை நிலையம் வெளியிட்ட இந்திப் பாடல் தொகுப்பு இசைத் தட்டு/ கேசட்டின் மேலட்டை விவரணையில் ( sleeve notes) அமீன் சயானி என்ற பெயரைப் பார்த்து அந்த நிறுவனத்துக்குக் கடிதம் கூட எழுதினேன். பதிலில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு வந்தது. பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்பியவர் அமீன் சயானி. ஆர்வத்துடன் போயிருந்தேன். அந்தச் சந்திப்புக்கு வழக்கமாக வரும் பத்திரிகையாளர்கள் கூட வரவில்லை. ஆக, இரண்டு ஆங்கில நாளிதழ்கள், ஒரு ஆங்கில சினிமா இதழ் ஆகியவற்றின் செய்தியாளர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். தமிழிலிருந்து ஒண்ணே ஒண்ணு என்று நான் மட்டுமே. இத்தனைக்கும் நான் பணியாற்றிய பத்திரிகை இந்தியையும் இந்திப் பாடல்களையும் எதிர்க்கும் பாசறையின் சரக்கு.

பினாகா கீத் மாலாவின் நாற்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் பாகமாகவே அமீன் சயானி வந்திருந்தார். மீண்டும் அந்த நிகழ்ச்சியை இந்திய வானொலி மூலம் நடந்தவும் முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அது முன் அளவு வெற்றிகரமானதாகவோ வருவாய் ஈட்டக் கூடியதாகவோ அமைய வில்லை. அந்தச் சந்திப்பில் அவரிடம் அதிகம் பேசியது நான் தான். 'வழக்கமா எந்தப் பிரஸ் மீட்லயும் வாயைத் திறக்காம உட்கார்ந்திருப்பீங்க, நீங்களா இன்னிக்கு இவ்வளவு பேசுறீங்க?' என்று ஆங்கில சினிமா இதழின் செய்தியாளர் ஆச்சரியப்பட்டார். நானா பேசினேன்? கீத் மாலா நேயனல்லவா பேசியது? உரையாடலின் முடிவில் அமீன் சயானியிடம் ஒரு வேண்டுகோளை வைத்தேன். வானொலியில் அறிவிப்பதுபோல ஒருமுறை என் அபிமானப் பாடலுக்கான முன்னோட்டத்தைச் சொல்லுங்களேன்? அமீன் சயானி சிரித்துக் கொண்டே வேண்டுகோளை நிறைவேற்றினார். அந்த நொடியில் ரேடியோவே இல்லாத அந்த ஓட்டல் அறையில் அலைவரிசைக் கரகரப்புடன் 'வக்த் நே கியா ' என்று கீதா தத்தின் குரல் கசிந்து கேட்டது.

கோழிக்கோடு சிலோன் ரேடியோ நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்காக நிதி திரட்டுகிறார்கள். அதில் எனது சின்ன நன்கொடையும் உண்டு. அது ரேடியோ சிலோனுக்காகவோ அமீன் சயானிக்காகவோ அல்ல; என்னுடைய பதின்பருவக் கனவுக்காக.

றத்தாழ இதே கால அளவில் கேட்டு ரசித்துப் பாடிக் கொண்டு திரிந்த  தமிழ்ப்பாடலும் இருக்கிறது. இலங்கை வானொலி தனது ஈழத்துப் பொப் இசைப் பாடல்கள் வரிசையில் ஒலிபரப்பிய பாடல். அது பாப் பாடலல்ல. மெல்லிசைப் பாடல். அதை எழுதியவர் , இசையமைத்தவர், பாடியவர் யாரென்று தெரியாமலேயே பாடிக் கொண்டு திரிந்த நாட்கள் அதிகம். எண்பதுகளில் ஈழப் பிரச்சனை. தீவிரமாக இருந்தபோது அகதிகளாகத் தமிழகத்துக்கு வந்தவர்களில் இலக்கியம் மூலம் அறிமுகமான சில ஈழ நண்பர்களிடம் எரிகிற வீட்டில் இசை ஒரு கேடா என்று தப்பாக நினைத்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடனும் மிகுந்த தயக்கத்துடனும்  அந்தப் பாடலைப் பற்றி விசாரித்திருக்கிறேன்
கேட்டதில் பாடகர் பெயர் மட்டும் தெரிய வந்தது. எம்.பி.பரமேஸ். ஈழத்து மெல்லிசை மன்னர் என்று பட்டம் பெற்றவர் என்பதைத் தவிர வேறு விவரங்கள் தெரியவில்லை. அன்றைய போர்ச் சூழலில் அந்தப் பாடகரும் காணாமற் போயிருக்கலாம் என்று ஹம்சத்வனி என்ற தமிழ்ச் செல்வன் சொன்னது நினைவில் இருந்தது.

'உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது, எனக்குத் தெரியுமா நீ என்னை அழைப்பது என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல் அது. மிக எளிய வரிகள். 'நிலவு தெரியுமா ஓடும் முகில் விலகாமல்' என்ற வரியில் மட்டுமே லேசான கவிதை மின்னும். ஆனாலும் அந்தப் பாடல் மனதுக்குள் வெகு காலம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு படை அணி வகுப்புக்குப் பயன்படுத்துவது போன்ற தாளக் கட்டு, டி.எம். சௌந்தர ராஜனையும் ஏ எம் ராஜாவையும் கலந்தது போன்ற குரல். மிகச் சாதாரணமான மெல்லிசைப் பாடலாக இருக்க வேண்டியதை அதற்குள்ளிருந்த ஏதோ ஓர் உணர்வு மிகவும் ஈர்ப்புள்ள பாடலாக மாற்றி யிருந்தது. அது என்ன என்பது மிக நீண்ட காலம் புதிராகவே இருந்தது. நண்பர் இளங்கோவன் அனுப்பிய மின்அஞ்சல் தகவல் அந்தப் புதிரை விடுவித்தது. 



.               
                            எம் பி பரமேஸ்


இலங்கையில் இசைக் குழுவி நடத்தி வந்தவர் எம்.பி.பர்மேஸ். சகோதரர் கோணேசுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இலங்கையில் முதலாவது தமிழ்ப் பாடல் இசைத் தட்டை உருவாக்கியவர். அவரே எழுதி இசையமைத்துப் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான ஒன்றுதான் மேலே சொன்ன பாடல். அந்தப் பாடலின் மர்ம வசீகரத்துக்குக் காரணம் அதைத் தனது காதலிக்காக எழுதினார் என்பது. தமிழகத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற சிவமாலினிக்காக அவர் எழுதிய பாடல்தான் அது என்பது தெரிந்ததும் அந்த ஈர்ப்பின் காரணம் விளங்கியது. இருவரும் 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்தப் பாட்டைக் கேட்டு மாலினி அதைத்தானே முழு மனசுடன் செய்திருக்க  முடியும் ? இனக்கலவரத்தின் நாட்களில் புலம் பெயர்ந்த பரமேஸ் இப்போது ஜெர்மனியில் வசிப்பதாக இணையத் தகவல் தெரிவிக்கிறது.  அமைதி நிலவிய இடைக் காலத்தில் பரமேஸ் தமிழகத்துக்கும் வந்து பிரபல இசையமைப்பாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

இந்த விவரங்களுடன் இணையத்தில் துப்புத் துலக்கியபோது நண்பர் இளைய அப்துல்லா 'தீபம்' தொலைக்காட்சிக்காக எம்.பி.பரமேசை நேர்காணல் செய்திருந்த ஒளிப்பதிவுகள் பார்க்கக் கிடைத்தன. அவரைத் தொடர்பு கொண்டபோது '' அவர் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார் கதையுங்கோ இது நம்பர்'' என்று பதில் அளித்தார் இளைய அப்துல்லா. கதைக்க வேண்டும். பதின் வயதில் என்னை அலைக்கழித்த பாட்டு சிவமாலினியை என்ன செய்தது என்று கேட்க வேண்டும்.

அந்திமழை ஜனவரி 2014 இதழில் வெளியானது.


1 கருத்து:

  1. மெல்லிய சோகமும், ஞாபகத்தின் மடிப்புகளும் ஊடாடும் நல்ல பதிவு!. ”வக்த் நே க்யா கியா” பாடல், எனது விருப்பமான “யே துனியா மில் பீ ஜாயே தோ கியா” (பியாசா) வை ஞாபகப் படுத்தி மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது. நன்றி. செங்கதிர்.

    பதிலளிநீக்கு