புதன், 10 செப்டம்பர், 2014

ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி...

ண்பர் நெய்தல் கிருஷ்ணன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டாரில் நடை பெற்ற நாராயண குருவின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் உரையாற்றச் செய்தார். இலக்கியம் தவிர பிற மேடைகளில் அரிதாகவே பங்கேற்றிருந்த எனக்கு அது புதிய அனுபவமாகவே இருந்தது. ஓரளவுக்கு நல்ல உரையை அன்று நிகழ்த்தியதாகவே தோன்றியது. அது நல்ல உரைதான் என்று விழா அமைப்பாளர்களும் நினைத்திருக்க வேண்டும். இந்த ஆண்டும் அழைப்பு வந்தது. அழைக்கச் செய்தவர்  பேரா. அ.கா. பெருமாள். அழைத்தவர் பேரா. சரவணை. 

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற நாராயண குருவின் 160 ஆவது பிறந்த நாள் விழாவில் பேசக் கிடைத்தது பெருமைக்குரிய வாய்ப்பு. விழாவை ஒட்டி நடந்த போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்ளுக்குப் பரிசளித்தது இனிய அனுபவம். இந்தப் பெருமைக்கும் இனிமைக்கும் இடையில் ஒவ்வாத ஒரு அனுபவமும் இருந்தது. நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்தில் வைத்திருந்த ஆளுயர அளவுள்ள நாராயண குருவின் உருவப்படத்துக்கு பிராமணப் புரோகிதர்கள் நடத்திய சடங்கு. எதற்கு எதிராகக் குருதேவர் குரல் எழுப்பினாரோ, எந்த மனப் பான்மைக்கு எதிராகப் போராடினாரோ அந்த வைதீக மரபுக்குள் அவரைத் தள்ளி விட்டிருந்ததைப் பார்க்க மனம் நொந்தது. 

மகான்களின் வழியை அடைப்பதற்கு உத்தமமான உபாயம் அவர்களைப் பீடத்திலேற்றி வைத்து வழிபடுவதுதான்போல.










எல்லாருக்கும் வணக்கம். சரியாக  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாராயண குருவின் பிறந்த தினத்தன்று இதே மேடையில் பேசி இருக்கிறேன். இன்று அதே நாளில் அதே மேடையில் அதே குருவைப் பற்றி மறுபடியும் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இதற்காக விழாக் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

இன்று நாம் குருவின் 160வது பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருக் கிறோம்.  இதே செப்டம்பர் மாதத்தில்தான் அவரது சமாதி தினமும் வருகிறது.  அவர் நம்மிடையே வாழ்ந்தது எழுபத்தி இரண்டு ஆண்டுகள். இந்த எழுபத்திரண்டு ஆண்டு வாழ்க்கையில் அவர் செய்த காரியங்கள் இன்றும் நினைக்கப் படுகின்றன. அவர் சொன்ன கருத்துகள் இன்றும் தேவையாக இருக்கின்றன. அவரது செயல்களும் கருத்துகளும் இன்றும் பேசப்படுகின்றன; நடைமுறைப் படுத்தப் படுகின்றன. நாராயண குருவுக்கு முன்னாலும் பின்னாலும் பல  மகான்கள் தோன்றியிருக்கிறார்கள். மனித வாழ்க்கைபற்றிக் கவலைப்பட்டிருக்கிறார்கள். உபதேசங்கள் கொடுத்திருக் கிறார்கள். சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார்கள். அவை எல்லாம் ஒரு காலத்தில் முக்கியமானவையாக இருந்து பின்பு மறக்கப்பட்டு விட்டன. அன்று பெரும் செல்வாக்குச் செலுத்திய பல மகான்கள் பின்னர் மறக்கப் பட்டு விட்டார்கள்.
ஆனால் எந்தக் காலத்துக்கும் பொருத்தமானவராகவும் எந்தக் காலத்திலும் மறக்கப்படக் கூடாதவர்களாகவும் இருக்கும் பெருமக்களில் ஒருவராக இருந்து வருபவர் நாராயண  குரு.

அவர் ஒரு துறவி. ஆனால் துறவறத்தை எல்லாருக்கும் கட்டாயமான தாகச் சொன்னதில்லை. அவருடைய அணுக்கத் தொண்டரும் சின்ன சாமி என்று அழைக்கப்பட்டவருமான  மகா கவி குமாரன் ஆசான் குடும்பஸ்தர். அவர் ஆன்மீகவாதி. ஆனால் எஸ் என் டி பி.யின் செயல் திட்டங்களை உருவாக்கிய டாக்டர். பல்பு அறிவியல் பார்வையை முன்னிருத்தியவர். அவர் தெய்வ ஆராதனையை ஏற்றுக் கொண்டவர். ஆனால் அவரது சீடர்களில் ஒருவராக இருந்த சகோதரன் அய்யப்பன் நாத்திகர். இப்படிப் பல சிந்தனைகளுடைய ஆட்களைத் தனது கருத்துக்களாலும் செயல் பாடுகளாலும் ஈர்த்தவர் நாராயண குரு. அப்படி ஈர்க்கக் காரணம் நாராயண குரு நடைமுறை சார்ந்த வாழ்க்கையிலேயே மனிதர்கள் மேம்பட  முடியும் என்று காட்டியதுதான்.அவருடைய கருத்துகளோ போதனைகளோ நாளைய வாழ்க்கையைப் பற்றியதல்ல;  செத்த பிறகு கிடைக்கக் கூடிய சொர்க்கம் பற்றியதோ  அல்ல. இன்றைய வாழ்க்கையை பற்றியது. இந்த உலகத்தில் வாழ்வதைப் பற்றியது. இன்றைக்கு மனிதன் வாழ்வதைப் பற்றிய கவலையிலிருந்து பிறந்த கருத்துகள் அவை. இந்த வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்ற அக்கறையிலிருந்து பிறந்த செயல்கள் அவருடையவை. அதனாலேயே அவை இன்றும் தேவை யானவையாக இருக்கின்றன.

நாராயண குருவுக்குச் சமமாகப் பேசப்பட்ட பல மகத்தான மனிதர்களும் அவருக்கு முன்னும் பின்னும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் காலப் போக்கில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. நாராயண குரு பிறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர் சுவாமி விவேகானந்தர். குருவுக்கு பதின்மூன்று ஆண்டுகள் இளையவர் மகாத்மா காந்தி. காந்திக்கும் பின்னால் பிறந்த பெரியார் ஈ வே ரா, நாராயண குருவை விட சுமார் இருபது ஆண்டுகள் இளையவர். இங்கே குறிப்பிட்ட இந்தப் பெரு மக்கள்தாம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இந்திய வாழ்க்கையில் சீர்திருத்தங்களைச் செய்தவர்கள். இவர்கள் எல்லாரும் பிற்காலத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள். விவேகானந்தர்  வெறும் இந்து மதவாதியாகச் சொல்லப் பட்டார். காந்தி தலித்துகளுக்கு எதிரானவர் என்று டாக்டர் அம்பேத்கரால் அவர் காலத்திலேயே விமர்சிக்கப்பட்டார். பெரியார், பிராமணர் அல்லாத  சாதி இந்துகளுக்கு ஆதரவானவர் என்று குறை சொல்லப்பட்டார். இன்றுவரை விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவராகவே இருந்திருக்கிறார் நாராயண குரு. அவரது காலத்தில் அவருக்கு எதிராகச் சின்ன முணுமுணுப்புகள்தாம் எழுந்திருக் கின்றன, என்பதைத் தவிர அவர் மீதான பெரிய விமர்சனங்கள் சொல்லப்
பட்டதில்லை. அதற்குக் காரணம் அவரது வாழ்க்கை. தான் சொன்னதற்கும் செய்ததற்கும் இடைவெளி இல்லாத வாழ்க்கை அவருடையது.

அவர் ஒரு ஆன்மீகவாதி. அத்வைத தத்துவத்தைக் கடைப் பிடித்தவர். பலப்பலவாகத் தெரியும் எல்லாம் ஒன்றே என்பதுதான் அத்வைதத்தின் அடிப்படை. எல்லா உயிர்களும் ஒன்று. நம்முடைய மாயையால்தான் அவை வெவ்வேறாகத் தெரிகின்றன. இந்த மாயை கலைந்து விட்டால் வேற்றுமைகள் இல்லாமல் போய்விடும் என்பது அத்வைதத்தின் விளக்கம். இதை உபதேசமாகச் சொன்னவர்களே அதிகம். ஆதி சங்கரர் முதல் இன்றைய கார்ப்பொரேட் சாமியார்கள் வரை. ஆனால் இதை நடை முறையில் செய்து காட்டியவர் என்ற பெருமை நாராயண குருவுக்கு உரியது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் அதைச் செயலிலும் காட்டியவர். மனிதர்கள் எல்லாரிடமும் மனம் திறந்து பேசியவராக இருந்தார் நாராயண குரு. எல்லா வகையான மனிதர்களிடமும் பேசியவர். மகாத்மா காந்தி, ரவீந்திர நாத் தாகூர் போன்ற பெரும் மனிதர்களிடம் மட்டுமல்ல. கடைநிலையில் இருந்தவர் களிடமும் பேசியவர். கொஞ்சம் அதிகப்படியாகச் சொன்னால் குட்டிச் சாத்தானிடம் கூடப் பேசியவர்.

நாராயண குருவின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு நகைச்சுவையுணர்வு உள்ள குரு, ஏன்  அவர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் கூடச் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கவில்லை என்று ஆச்சரியமாக இருக்கும். 

சிவகிரி ஆசிரமத்தில் நாராயண குரு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெகு தொலைவிலிருந்து இரண்டு பேர் அவரைப் பார்க்க வருகிறார்கள். இரண்டு பேர் காத்துக்  கொண்டிருக்கிறார்கள் என்று குருவிடம் சீடர்கள் தெரிவிக்கிறார்கள். '' அவர்களை ஏன் காக்க வைக்க வேண்டும்? அழைத்துக் கொண்டு வரலாமே'' என்கிறார். அவர்களை அழைத்துக் கொண்டு போகிறார்கள். '' நம்மைப் பார்க்க வந்தீர்களாக இருக்கும். நல்லது'' என்கிறார் குரு. ''பார்க்க மட்டுமில்லை. உங்களிடம் ஒரு சங்கடத்தைச் சொல்ல வந்தே ¡ம்'' என்கிறார்கள் வந்தவர்கள். ''நம்மிடமா, என்ன சங்கடம் சொல்லுங்கள்'' இது குரு. ''ரொம்ப நாட்களாக வீட்டில் குட்டிச் சாத்தானின் தொல்லை தாங்க முடியவில்லை.  என்னென்னவோ கர்மங்களெல்லாம் செய்து பார்த்து விட்டோம்.ஒரு பலனுமில்லை. சுவாமிகள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்கிறார்கள். '' தொல்லை தருவது யார்  என்று சொன்னீர்கள். குட்டிச்சாத்தானா? பரவாயில்லையே. சரி, நீங்கள் அதைப் பார்த்தீர்களா?'' பார்த்தோம் சுவாமி. வீட்டு வளவில் கறுப்பாகக் கரி மூட்டைபோல நிற்பதை அடியவர்கள் பார்த்தோம். எப்போஒதும் தொந்தரவுதான். விடாமல் கல்லை எறிந்து கொண்டிருக்கிறது'' '' அது சரி அந்தக் குட்டிச் சாத்தான் நாம் சொன்னால் கேட்குமா?'' ஆமாம் சாமி. சாமி சொன்னால் கேட்கும். ''ஆனால் அந்தக் குட்டிச் சாத்தானுக்கும் நமக்கும் பழக்கமில்லையே '' இதைக் கேட்டு வந்தவர்கள் முகம் வாடி நிற்கிறார்கள். '' ஆகட்டும் குட்டிச் சாத்தானுக்கு நாம் ஒரு கடிதம் எழுதினால் போதுமா?'' என்று கேட்டு விட்டு ஒரு பக்தனிடம் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் சொல்வதை எழுதிக் கொள்ளும்படிச் சொல்கிறார். அந்தக் கடிதம் இப்படி. 

’’திரு குட்டிச்சாத்தான் அறிந்து கொள்வதற்காக, இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் பெரேராவின்  வீட்டில் இனிமெல் எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது. இப்படிக்கு நாராயண குரு.''

இந்தச் சம்பவத்தை வெவ்வேறு வகையில் வியாக்கியானம் செய்யலாம். தன்னைத் தேடி வந்தவர்கர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகக் குரு செய்த உபாயம் என்று சொல்லலாம். அவர் நடத்திய சித்து விளையாட்டு என்று சொல்லலாம். அறிவுத் திறன் குறைந்தவர்களுக்கு அறிவின் முக்கியத் துவத்தை எடுத்துச் சொன்னதாகப் பார்க்கலாம். எல்லாரும் ஒன்று  என்று நம்பும் ஒரு அத்வைதி சாத்தானையும் கடவுளின் தோற்றம் என்று சொல்லாமல் சொன்னதாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட மாபெரும் கருணை நிரம்பிய  ஞானி சக மனிதர்கள் மீது காட்டிய கரிசனம் என்பதுதான் பொருத்தம். அப்படிப் பார்க்கவே நான் விரும்புகிறேன். குருவே அப்படித்தான் எண்ணியிருக்கிறார் என்று அவரது வார் த்தைகளை வைத்தே சொல்ல முடியும். '' அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம்'' என்றுசொல்லியிருக்கிறார். எனக்கு நன்மை ஏற்படுவதற்காகக் கடைப் பிடிக்கும் ஒன்று அடுத்தவனுக்கும் நன்மையளிப்பதாக வர வேண்டும்.

இந்த வாசகத்தை நாராயண குரு தனது வாழ்க்கை மூலம் நிரூபித்தார். அவர் செயல் பட்டது தான் பிறந்து வளர்ந்த சமூகத்தின் இடையில். அன்றைக்கு மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த அந்தச் சமூகத்தை முன்னிருத்தியே அவர் பேசினார். செயல்பட்டார். ஆனால் அவரது பெரிய சிந்தனை, பெருந் தன்மையான செயல்கள் சொந்தச் சமுதாயத்தை முன்னேற்ற  மட்டுமல்ல; பிற சமுதாயங்கள் மேம்படவும்  உதவின. அந்த வகையில் ஒரே சமயம் அவர் தத்துவஞானியாகவும் சீர்திருத்தக் காரராகவும் விளங்கினார். அவருக்கு முன்பும் அவரது  காலத்திலும் தத்துவவாதிகளும் சீர்திருத்தக் காரர்களும் இருந்தார்கள். ஆனால் தத்துவக்காரர்கள் அநேகமாக சாதாரண வாழ்க்கைக் காரியங்களில் கவனம் செலுத்தாத உபதேசிகளாக இருந்தார்கள்.  சீர்திருத்தக் காரர்கள்  வாழ்க்கைக் காரியங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தார்களே தவிர, மனிதனின் ஆன்மீகத் தேவைகளைப் புறக்கணித்தார்கள். இந்த  இரண்டையும் சரி சமமாகப் பார்த்தவர்; செயல்பட்டவர் என்பதே நாராயண குருவின் பெருமை.

'' அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம்'' என்று சொன்னதை அவர் எப்படிச் செயலில் காட்டினார் என்பதைச் சரியாக எடுத்துச் சொன்னவர் கம்யூனிஸ்டான இ.எம்.எஸ்.
அவர் சொல்கிறார். '' சுவாமிகள் கோவில்களுக்கும் மடங்களுக்குமான அஸ்திவாரங்களைத்தான் உருவாக்கினார். ஆனால் அவற்றின் மேலே  சமுதாய  நல்லிணக்கம் என்ற கட்டடம் கட்டப்பட்டது. அவர் விதைத்தது ஆன்மீக சிந்தனையின் விதைகளை. ஆனால் அவற்றிலிருந்தே சமூக, அரசியல் உரிமைகள் முளைத்தன. வேத கால  இந்தியாவின் கருத்துக் களைத்தான் குரு பிரச்சாரம் செய்தார். ஆனால் அது கேட்பவர்களின் காதுகளில் சுதந்திரம் சமத்துவம் ககோதரத்துவம் என்ற மேற்கத்திய சிந்தனைகளாகவே  பதிந்தது.'' என்கிறார் இ எம் எஸ். 

நாராயண குருவின் முக்கியத்துவத்தையும் வரலாற்றில் அவருக்குள்ள பாத்திரத்தையும் இதைக் காட்டிலும் துல்லியமாக வேறு யாராலும் மதிப்பிட்டு விட முடியும் என்று தோன்றவில்லை.

தனது சமூகத்துக்காக குரு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மொத்தக் கேரள சமூகத்தையும் பாதித்தது. ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியது. சரியாகச் சொன்னால்  நாராயண  குருவே. இன்றைய கேரளத்தின் மறு மலர்ச்சியின் நாயகன் . வேறு எந்த அத்வைதிக்கும் ஞானிக்கும் இந்தப் பாத்திரம் வாய்க்கவில்லை. தனது சமூகத்தை நோக்கி அவர் பேசியவை எல்லாச் சமூகங்களையும் மாற்றியது. அந்த வகையில் பெரும் பொது நன்மையின் மையமாகவே அவரைச் சொல்ல வேண்டும். ஒரு அத்வைதி என்ற நிலையில் அவர் யாரிடமும்  பேதம் காட்டியதில்லை. அதனாலேயே அவர் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவராக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டார். ஈழவர்களை மட்டுமல்ல; இன்று தலித்துகள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினரையும் குரு தனது கருணையால் அரவணைத்துக் கொண்டார். திருவனந்தபுரம் நகரத்தின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என். குஞ்ஞிராமன் என்ற தலித் சமூகத்தவர். 1960 ஆம் ஆண்டு வாக்கில் குஞ்ஞிராமன் காலமானதாகச் சொல்லப்படுகிறது. அவரை மேயர் பதவிக்கு தகுதியானவராக ஆக்கியவர் நாராயண குரு. இதை குஞ்ஞிராமனே தனது பதவியேற்பின் போது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இன்று பெரியாரை தலித்துகளுக்கு ஆதரவானவர் அல்ல  என்று விமர்சிப்பதைபோல நாராயண குருவை விமர்சிக்க முடியாமற் போனதன் காரணம் இதுதான். 

நாராயண குரு பின் பற்றிய அத்வைதம் இந்து மதத்தில் அடங்கியது என்று சொல்லப் படுகிறது. அதை குருவும் மறுத்ததில்லை. அவர் பிரதிஷ்டை செய்ததெல்லாம் இந்துக் கடவுள்கள் என்பதிலிருந்தே இது புரியும். ஆனால் உண்மையில் குரு வெறும் இந்து மத சாமியாராக இருக்கவில்லை. இதை எடுத்துச் சொன்னவர் மகா கவி பாரதி. தனது கட்டுரைகளில் இதைச் சொல்கிறார். சரியாகச் சொன்னால் கேரளம் மட்டுமே அறிந்திருந்த ஸ்ரீ நாராயண குருவை பாரதியே  தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கேரளத்தைப் பற்றி பாரதி ஆறு கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அதில் ஒன்றில்தான் குருவை ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்று குறிப்பிடுகிறார். அதில் ஒரு கட்டுரையில் அவர் தெரிவிக்கும் விவரம் நாராயண குரு இந்து மதத்தைக் கடந்து சென்றிருப்பதைச் சொல்கிறது. ஆலுவா கல்லூரியில் முஸ்லிம் மாணவன் ஒருவன் சமஸ்கிருதம் கற்பதைப் பற்றி எழுதுகிறார் பாரதி. அதற்குக் காரண கர்த்தா ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்றும் பாராட்டுகிறார்.

ஒரு ஆன்மீகவாதி. சீர்திருத்தக் காரர். கவிஞர். என்றெல்லாம் நாராயண குருவைச் சிறபிக்கலாம். அவை எல்லாவர்ரையும் விட அவர் பெற்றிருந்த இடம் விசாலமானது. நடைமுறையும் தத்துவமும் ஒன்றிணைந்த சங்கமம் அவர். பழைய சடங்குகளிலிருந்து சமுதாயத்தை மீட்டவர். புதிய கருத்து களைச் சொல்லி வேற்றுமைகளை இல்லாமலாக்கியவர். கல்வியை யையும் அதன் மூலம் பெறும் அறிவையும் முதன்மைப் படுத்தியவர். தொழில் செய்து முன்னேறத் தூண்டியவர். மதத்தைத் தாண்டி மனிதர்களைப் பார்த்தவர். அந்தப் பார்வையில்தான் மதம் எதுவானாலும் மனிதன் நன்மை அடைந்தால் போதும் என்றார். சாதிகளுக்கு அப்பாற்பட்ட மனித நன்மையை வலியுறுத்தியவர். அதனால்தான் அவரால் சாதியைக் கேட்காதே; சாதியை சொல்லாதே' என்று அறிவிக்க முடிந்தது. வெவ்வேறாக இருக்கும் மனிதர்களை ஏற்றுக் கொண்ட நடைமுறைவாதி.  அதே சமயம் அவர்கள் எல்லாரும் ஒன்று என்று திடமாகச் சொன்ன ஆன்மீகவாதி.

குரு எழுதிய பல நூல்களில் ஒன்று தெய்வதசகம். இந்த நூலை அவர் 1814 ஆம் ஆண்டு எழுதினார் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் இது நாராயண குருவின் தெய்வ தசகத்தின் நூற்றாண்டு. பத்துக் கண்ணிகள் உள்ள இந்தச் சிறு நூலை குருவின் தத்துவ அறிக்கை என்று சொல்லலாம். மிக எளிய பிரார்த்தனை வரிகளுடன் தொடங்குகிறது இந்தத்  தசகம். ’தெய்வமே, காத்து கொள்க அங்கு/ கைவிடாதிங்ஙு ஞங்ஙளே' என்ற முதல் வரியிலேயே கடவுளுடன் நேரடியான உரையாடல் தொடங்கி விடுகிறது. இது ஒரு வழக்கமான பக்திப் பிரார்த்தனை அல்ல என்று இப்போது வாசிக்கும்போது தோன்றியது. தெய்வம் தன்னைத்தான் காத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதாகவும் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுவதாகவும் புதிய அர்த்தங்களைச் சொல்லத் தோன்றுகிறது.

ஏனெனில் அப்படிப்பட்ட காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று மனிதர்கள் சாதி அடிப்படையிலும் மதத்தின் அடிப்படையிலும் பார்க்கப் படுகிறார்கள். மனிதர்கள் வெவ்வேறான நம்பிக்கைகளும் குணங்களும் கொண்டவர்கள் என்பதை மறுத்து எல்லாருக்கும் ஒரே அடையாளம் போடுகிற முயற்சிகள் நடக்கின்றன. வெவ்வேறு கடவுள்களை மீண்டும் பெரிது படுத்தும் காரியங்கள் நடக்கின்றன. இவை நாராயண குரு போன்ற மாமனிதர்கள் நமக்குக் கற்பித்த மேலான நம்பிக்கைகளுக்கு எதிரானவை.

நாராயண குரு முன்வைத்த கடவுள் அறியப்பட முடியாத ஒன்று. அதை அறிவதே வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் என்பது அவரது நம்பிக்கை. தெய்வ தசகத்தின் இரண்டாவது செய்யுள் அதைத்தான் சொல்கிறது. 'ஒன்னொன்னாய் எண்ணித் தொட்டு/ எண்ணும் பொருள் ஒடுங்ங்கியால் நின்னிடும் த்ருக்கு போலுள்ள நின்னில் ஆ ஸ்பந்தமாகணம்'.

'ஒவ்வொன்றாய் எண்ணித் எண்ணித் தொட்டு
எண்ணிய பொருள் முடிந்ததும்
மிஞ்சும் ஒளியாய் நிற்கும் 
உனக்குள்ளே அந்தத் துடிப்பாக வேண்டும் '

நாராயண குருவின் கடவுள் பற்றிய சிந்தனை வெளிப்படுவது இதில்தான். நமக்குத் தெரிந்த பொருட்களை தொட்டு எண்ணிப் பார்க்கிறோம். எண்ணி எண்ணி அவை எல்லாம் தீர்ந்ததும் ஒரு பார்வை, ஒரு எண்ணம், ஒரு வெளிச்சம் மிஞ்சும். அதை நம்மால் விளக்க முடியாது. ஆனால் உணர முடியும். அந்த நிலைதான் கடவுள் என்கிறார் குரு. இதை வேறு விஷயங்களுக்கும் பொருத்தலாம். சாதியைப் பேசுகிறோம் பேசிக் கொண்டே போனால் சாதியே இல்லாத ஒரு புள்ளிக்குப் போய்ச் சேர்வோம். மதத்தைப் பர்றிப் பேசிகிறோம். ஆராயந்து ஆராயந்து மதமே இல்லாத ஒரு இடத்துக்கு வந்து சேருவோம். கடவுளைப் பற்றிப் பேசிப் பேசி கடவுள் என்ற ஒன்று விளங்காத முனையை அடைவோம். இந்தப் புள்ளியை, இந்த இட்த்தை, இந்த முனையைக் கண்டவர் நாராயண குரு. அதுவே அவரது மகத்துவம். அதுதான் இந்த நாளிலும் அவரைப் பொருத்தமுடையவராக ஆக்குகிறது. கடவுள் எவ்வளவு உயர்ந்தவர் என்பதையல்ல; மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதையே நாராயண குரு அழுத்தமாகச் சொன்னார் என்று அவரது கருத்துகளிலிருந்து செயல்களிலிருந்து நாம் கண்டு அடைய முடியும்.இன்று அப்படிக் கண்டு அடைவது மிகவும் தேவை.

இந்தக் கருத்துகளை குருதேவரின் பிறந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த விழாக் குழுவினருக்கு வந்தனம். உங்கள் அனைவருக்கும் நன்றி.










1 கருத்து:

  1. இது ஒரு அறிவார்ந்த படைப்பு. ஒவ்வொரு வரியும் தெளிவான சிந்தனையில் பிறந்திருக்கிறது. ஒரு வரிகூட வீணாகாமல் முத்துமுத்தாய் விழுந்திருக்கிறது. ஆனால் கற்பனை அல்ல. முழு உண்மை. தங்களைப்போன்ற கவிஞர்களுக்கு குருவைப்பற்றி சுதந்திரமாக பேசலாம். ஆனால் என்னைப்போன்றோருக்கு தயங்கவேண்டியிருக்கிறது. மக்கள் வேறு வழியில் சிந்திபார்களோ என்ற பயம் தான். சர்.

    பதிலளிநீக்கு