வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பெயரிலும் இருக்கிறது.






''ஏம் மந்திரி, ஒன்ற பேரே மந்திரிதானா?'' என்று அவனைக் கேட்டிருக்கிறேன். ஒன்றல்ல பலமுறை.

''ஆருக்கு சாமி தெரியும்.  எப்பப் பொறந்தோமுன்னும் ஆரு பேரு வெச்சாங்கன்னும் யாபகத்துல வெச்சுக்க நாம் என்ன பெரிய சாதிப் பொறப்பா? ஏதோ பேருன்னு ஒண்ணு. '' என்று பதில் சொல்வான். அதில் வருத்தமோ ஆற்றாமையோ இருக்காது.விதியைச் சகித்துக் கொள்ளும் உணர்ச்சியின்மை தெரியும்.

மந்திரிக்கு மந்திரி என்ற பெயரைத் தவிர வேறு பெயர் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அவனுடைய குலத்தில் ஏதோ  முன்னோடியின் பெயராம்.ஆனால் அந்தப் பெயரில் யாரும் அவனை அழைத்தது கிடையாது. சின்னப் பையன்கள் முதல் முதிர்ந்தவர்கள்வரை அவனை 'ஏ. சக்கிலியா' என்று கூப்பிட்டுத்தான் கேட்டிருக்கிறேன். மந்திரியை மந்திரி என்று அழைத்ததில்லையே தவிர அவனுடைய மனைவி மக்களை அந்தப் பெயரின் ஒட்டாகத்தான் கூப்பிடுவார்கள்.'மந்திரி பொண்டாட்டி, மந்திரி பையா, மந்திரி புள்ளே' என்று அவன் குடும்ப நபர்கள் அழைக்கப் பட்டார்கள். அவர்களுக்குத் தனியாகப் பெயர்கள் இருந்தனவா என்று கூடத் தெரியவில்லை.

அவன் எங்கள் பகுதி நகர சுத்தித் தொழிலாளி. எங்கள் பகுதியில் இருந்தவை ஆள் வந்து எடுக்கும் கழிப்பறைகள். மந்திரிக்கு ஒதுக்கப் பட்டிருந்தவை குறைந்த பட்சம் ஐநூறு வீடுகள். எல்லா வீட்டுக் கழிப்பறைகளும் வெயில் காலத்தில் உலர்ந்து நாறும். மழை நாட்களில் நிரம்பி வழிந்து அருவருப்பு ஏற்படுத்தும் .மந்திரி ஒருநாள் வராமல் போனால் ஊரே நாறித் தொலைக்கும்.   எனக்குத் தெரிந்து ஒருநாளும் அவன் வராமல் போனது இல்லை. அபூர்வமாக வராமல் போகும் நாட்களிலும் அவன் மனைவியோ, மகனோ, மகளோ வந்து மலத்தை அள்ளித் துப்புரவாக்கியிருப்பார்கள்.

மந்திரிக்கும் எனக்குமான மானசீக நெருக்கம் அவன் எனக்குச் செய்த உதவியில்  தொடங்கியது. பள்ளிப் பருவத்தில் ஒருநாள் முற்பகல் உடம்பு சரியில்லை என்று பாதியிலேயே வீட்டுக்குத் திரும்பினேன். பஸ் ஏறி வீடு வந்து சேரும்வரை நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு என்னுடைய நிறுத்தம் வந்து பஸ்ஸை விட்டு இறங்கியதும் சுழல ஆரம்பித்தது. வழியில் விழுந்து விடுவேன் என்ற பயத்தில் தெருவோர டீக்கடை அருகில் ஒண்டி நின்றேன். பயனில்லை. கண்கள் மங்கிக் காட்சிகள்  எல்லாம் நிழல்களாக நெளியத்  தொடங்கின. ஏதேதோ நிழல்கள் கண் முன்னால் நகர்வது தெரிந்தது. ஒரு நிழற் கை நீண்டு வந்து ஒரு கிளாஸ் தண்ணீரை நீட்டியது. அதை குடித்தது ஞாபகமிருந்தது. மறுபடியும் கண்விழித்த போது வீட்டின் முன் அறையில் கிடந்தேன். என்ன நடந்திருக்கும், யார் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். முன் அறையின் கம்பித் தடுப்புக்கு அந்தப் பக்கம் உருமாலை கட்டிய மந்திரியின் தலை தெரிந்தது. ''இப்பத் தேவலாங்களா, சாமீ'' என்று விசாரித்தான். நன்றி கலந்த ஜுரப் புன்னகையுடன்  தலையசைத்தேன்.

குரல் கேட்டு முன் வாசலுக்கு வந்த அம்மாவிடம்'' பஸ்ஸுலேர்ந்து சாமி எற்ங்கி வந்து ஒலிம்பஸ் கடைக்குட்ட உளுந்திருச்சிங்க சாமி. நாந்தே தண்ணி வாங்கிக் குடுத்தே''என்று வியாக்கியானம் சொன்னான்.

அம்மாவின் முகம் கறுப்பதைப் பார்க்க முடிந்தது. வெளியில் ஊற வைத்த ஏதோ தானியத்தைக் காயப் போட்டுக் காவல் உட்கார்ந்திருந்த வீரப்பத் தேவர் மனைவி எழுந்து நின்றதை தடுப்பு வழியாகப் பார்க்க முடிந்தது. '' உமாம்மா, இதென்ன அக்குருமமாருக்கு. சக்கிலியப் பயங் கையால தண்ணி வாங்கிக் குடிக்கறது நல்லாவா இருக்கு. ஏண்டா சக்கிலிப்பையா,  ஒனக்கு என்ன புத்தி கெட்டுப் போச்சா?'' என்று அம்மாவிடமும் மந்திரி யிடமும் சொன்னது மறைமுகமாக என்னைக் குத்தியது. காய்ச்சல் கீழே தள்ளும் உடம்பைச் சேகரித்துக் கொண்டு எழுந்தேன்.

'' அவங் குடுத்தது சிறுவாணித் தண்ணி தானுங்க. அதுல சக்கிலின்னு ஒண்ணும் எளுதல'' என்றேன். அம்மா '' சும்மா இருடா'' என்று அதட்டினாள். மந்திரி எதுவும் நடவாததுபோல ''சாமீ. பளயது இருந்தாப் போடுங்க'' என்று சமாதானமாக நடந்தான். எனக்குத்தான் காது மடல்கள் எரிந்து கொண்டிருந்தன.

இரண்டு விதமான அழைப்புகளால் மந்திரி தன்னுடைய வருகையை அறிவிப்பான். காலையில் மலம் நிறைந்த வாளியைச் சுமந்து வந்து பொடக்காலிக் கதவைத் தட்டி'' கக்கூசுக்குத் தண்ணி ஊத்துங்க சாமீயோவ்'' என்பான். நண்பகல் வாக்கில் அலுமியச் சட்டியுடன் '' பளயது இருந்தாப் போடுங்க'' என்று நிற்பான். எப்போதாவது இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் '' சாமீ. டீத்தண்ணி ஊத்துங்க'' என்றும் வருவான். அவனுக்குத் தேநீர் ஊற்றுவதற்காகவே வீட்டின் பின்கட்டு எறவாணத்தில் ஒரு தேங்காய்த் தொட்டி இருக்கும். அதில்தான் தேநீரை வாங்கிக் குடிப்பான். தேநீர்  சூடாக இருக்க வேண்டும். குடிக்கிற சூட்டில் அல்ல. ஆற்றாமல் அப்படியே கொதிக்கிற சூட்டில் இருக்க வேண்டும். அதைப் பச்சைத் தன்ணீர் குடிப்பதுபோல மடக்கு மடக்கென்று நொடி நேரத்தில் காலி பண்ணுகிற வேகம் ஆச்சரியப் படுத்தும். குடித்து முடித்ததும் சிரட்டையைக் கழுவி மறுபடியும் எறவாணத்தில் சொருகி வைப்பான்.

எனக்கு நீர் வார்த்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதை மாற்றினேன். தேங்காய்ச் சிரட்டைக்குப் பதிலாக ஒரு இண்டாலியம் தம்ளரை அங்கே வைத்தேன். அதன் கத்தரிப் பூ நிறமும் வெள்ளியாகத் தெரியும் பூ வலைப்பாடுகளும் இப்போதும் கண்களுக்குள் தெரிகின்றன.  தம்ளர் பெரியது. '' உன்னாலே பாரு, அவனுக்கு அரைப்படி டீ வெக்க வேண்டியிருக்கு'' என்று அம்மா செல்லமாகச் சலித்துக் கொண்டாள்.

ஒரு மழைக்கால விடுமுறை தினத்தில் முதல் முறையாக அந்தத் தம்ளரில் நான் தான் தேநீரை ஊற்றிக் கொடுத்தேன். இரண்டு கைகளாலும் அதை வாங்கிக் கொண்டு '' அத அங்கியே வெச்சிருக்கலாமே சாமீ'' என்று கூச்சத்துடன் அவன் நெளிந்தான். அந்தக் கூச்சம் உறுத்தியது. ஆவி பறக்க அதைக் குடிக்கும்போது தம்ளரின் விளிம்புக்குமேல் தெரிந்த அவன் கண்கள் நீர் ததும்பிப் பளபளத்தன. காரணம்  அதிகச் சூடாக இருந்திருக் கலாம். இல்லை.அவன் வழக்கமாகக் குடிக்கும் சூடுதான் அது.

அந்தரத்தில் எங்கிருந்தோ வருவதுபோலத்தான் மந்திரியின் வாழ்க்கை. அவனும் அவனுடைய மொத்தக் குடும்பமும் நகராட்சிப் பணியாளர்கள். ஆனால் சம்பளம் வழங்கப்பட்டது அவனுக்கு மட்டும்தான். கருக்கலிலேயே மொத்தக் குடும்பமும் எங்கள் பகுதிக்கு வந்து விடும். இரண்டு சக்கரங்கள் வைத்து துத்தநாகப் பீப்பாய் பொருத்திய வண்டியை நகராட்சி அலுவலகத் திலிருந்து அவர்களில் ஒருவர் தள்ளிக் கொண்டு வருவார்கள்.மற்றவர்கள் கையில் துடைப்பமும் வாளியும் மலத்தை அள்ளுவதற்கான தகர முறமுமாக அவரவர் பகுதிக்குப் பிர்ந்து போவார்கள். பகலில் வேலை முடிந்தாலும் இரவுவரை அந்தக் குடும்பம் எங்கள் வட்டாரத்திலேயே இருக்கும். குறிப்பாக எங்கள் தெருவில். கடைசி பஸ்ஸில்தான் வீடு திரும்புவார்கள். மற்ற சமயங்களில் பஸ்ஸில் ஏற  அவர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். 'ஒசந்த மனிதர்கள் போகிற வேளையில் சின்ன சாதிக்காரன் எப்படிப் போக?' வெகு காலத்துக்குப் பிறகுதான் அவர்கள் அன்று நகரத்தின் விளிம்பாகக் கருதப்பட்ட லங்கர்கானா பகுதியிலிருக்கும் காலனியிலிருந்து வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தேன்.

நான் வளர்ந்து வந்த காலம் அப்படியொன்றும் சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடிய காலமல்ல. கல்வி வாய்ப்புகளும் நாகரிக சௌகரியங் களும் மெல்ல மெல்லப் பரவலாகிக் கொண்டிருந்த காலம். இருந்தும் கண்ணுக்குத் தெரியாமல் வேற்றுமைகள் மனிதர்களை தீண்டத் தகாதவர் களாகவே விலக்கிக் கொண்டிருந்தன. மந்திரியுடன் நான் சிரித்துப்  பேசுவதைப் பார்த்து நட்பையே முறித்துக் கொண்ட நண்பன் அதை நிரூபித்தான். ஆனால் எனக்கு வயது ஆகஆக மந்திரிக்கு என் மீதான அன்பு மரியாதையாக மாறிக் கொண்டிருந்தது. 'சாமீ' என்ற அழைப்பு மாறி 'பண்ணாடி'என்று ஆனது. அவன் அப்படி அழைக்கும்போதெல்லாம் அருவருப்பாகத் தோன்றும்.

'பண்ணையமே இல்லாத ஆளு எப்புடி மந்திரி பண்ணாடி ஆகுறது?' என்று கேட்டிருக்கிறேன். 'வூடு வாசல் இல்லாத நானு மந்திரியானாப்ல தாஞ்சாமி'' என்ற அவனுடைய பதில் சிரிப்பூட்டியது.

ஆனால் மந்திரி தன்னை ராஜாவாகக் கொண்டாடிக் கொள்கிற சந்தர்ப்பங் களையும் கவனித்திருக்கிறேன். மாரியம்மன்திருவிழாவில் சில சமயம் தப்பட்டை அடித்துக் கொண்டு வருவான். போதையில் கால்கள் பின்னினாலும் கைகள் தப்பட்டையில் கணக்குப் பிசகாமல் விழும். டண்டணக்கு டணக்கு டா, டணக்குணக்கு டணக்கு டா என்று தாளக் கட்டுகள் அவிழும்போது அவன் லயச் சக்ரவர்த்தியாகத் தோன்றுவான். அவன் முகத்தில் கலைஞனின் கர்வம் தெரியும். அதே மந்திரி மப்பு அதிகமாகப் போனால் பாடகனாகவும் மாறிவிடுவான். ஒரே பாட்டைத்தான் பாடுவான். அதுவும் ஏதோ பழைய தெலுங்குப் படத்தின் பாட்டு.' அந்தமே ஆனந்தம், ஆனந்தமே ஜீவித மகரந்தம்' என்று உச்ச குரலில் ஒலிக்கும். கூடவே அவன் மனைவியும் சேர்ந்து கொள்வாள். அவள் மேலான அவனுடைய பிரியம் எப்போதும்  வெளியே தெரியும் சங்கதித்தான். 'பிட்டா'  (குழந்தை) என்றுதான் அவளை அழைப்பான். சாராயத்தில் கிறங்கி இரண்டு பேரும் ஜோடிப் பாடகர்களாக மாறும்போது அந்தப் பிரியத்துக்கு சங்கீத சௌக்கியம் வந்து விடும்.

நீண்ட காலத்துக்குப் பிறகு வேலை நிமித்தமாக ஆந்திராவில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம்,மந்திரியின் அபிமானப் பாடல் காற்றில் அலைந்து வந்தது. 'அந்தமே ஆனந்தம்'. கண்டசாலாவின் குரல். யாரிடமோ விசாரித்து விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.மந்திரிக்குத் தெலுங்கு தெரியும் என்பது வாஸ்தவம். ஆனால் தெலுங்கு சினிமாவின் எவர் கிரீன் பாடல் கோயமுத்தூரில் வசிக்கும் அவன் நாக்கில் எப்படிக் குடியேறியது என்று   புரியவில்லை. கண்டசாலாவின் பாட்டை மந்திரி ஏன் நாகூர்  அனீபாவின் குரலில் பாடுகிறான் என்ற மர்மமும் புரிய வில்லை.

நகராட்சி ஊழியன். ஆனாலும் மந்திரி அநேக வீடுகளுக்கு வேலைக்காரனா கவும் இருந்தான். கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது தவிர சாக்கடை அடைப்பை நீக்குவது, கிணறுகளிலோ நீர்த் தொட்டிகளிலோ விழுந்து சாகும் ஜீவன்களின்  சடலத்தை அப்புறப்படுத்துவது எல்லாம் அவனுடைய குறுந் தொழில்களில் அடங்கும்.

அப்போது எங்கள் வீட்டில் மாடுகள் இருந்தன. அவற்றைப் 'பலனுக்குக் கொண்டுபோக' உதவி செய்வது மந்திரிதான்.  நானும் கூடவே போன ஒருமுறை கேட்ட கேள்விதான் என் பூப்பெய்தலின் முதல் அடையாளம். இரண்டு கட்டை வேலிகளுக்கிடையில் நிற்க வைத்த எங்கள் பசு லட்சுமியின் மீது கந்தசாமி தோட்டத்துக் காளை ஆவேசமாகத் தாவி ஏறியது. லட்சுமியும் நானும் ஒரே சமயத்தில் பயந்து கூச்சல் போட்டோம் . அது 'ம்ம்மோவ்' என்றும் நான் 'அய்யோ' என்றும் . 'மந்திரி அந்தக் காள எதுக்கு அப்புடிப் பண்ணுது' என்ற கேள்விக்கு அப்பா 'சும்மா இருடா' என்றார். 'அது அப்படித்தான் சாமீ. மனுசங்க கலியாணம் மாரியா மாட்டுக்குக் கலியாணம்' என்றான் மந்திரி. மாடுகளின் சாந்தி முகூர்த்தத்துக்கு மட்டுமல்ல அவற்றின் பிள்ளைப் பேற்றுக்கும் மந்திரியின் சகாயம் தேவைப்பட்டது. பிறந்து மன்ணில் விழுந்த கன்றைக் குளிப்பாட்ட, தாய்ப் பசுவின் சினை நஞ்சை மூட்டைக் கட்டி எடுத்துப்போய் ஏதாவது பால்வடியும் மரத்தில் கட்ட எல்லாம் மந்திரிதான் தேவைப்பட்டான். அபூர்வமாகச் செத்துப் போன கன்றை எடுத்துப் போகவும் அவன் தான் வந்தான். அன்றைய அவனும் குடும்பமும் லங்கர்கானாவுக்குப் போகவில்லை. அந்த இரவு மாட்டிறைச்சி விருந்துடன் அமர்க்களப் பட்டதாக அம்மாவிடம் சொன்ன போது மாட்டையும் மனிதர்கள் உண்பார்கள் என்ற புதிய தகவல்  தெரிய வந்தது.

வீட்டின் பின்பக்கம் நெல்லி மரமிருந்தது. அதன் இலைகள் எப்போதும் உதிர்ந்து கழிவு நீர் வழிகள் அடைத்துக் கொள்ளும். மரத்தை வெட்டி விடச் சொன்னபோது மந்திரி நடுங்கினான். அது அவர்கள் குல தெய்வமாம். ஏதோ காலத்தில் அவர்கள் குலத்தில் பிறந்த ஒரு பெண் இறந்த பின்பு நெல்லி மரமாக மாறினாளாம். அதனால் அதை வெட்டக் கூடாது. தப்பு என்றான். நெல்லி மரத்தின் பெயரைக் கூட அவன் உச்சரித்ததில்லை. அவன் உச்சரிக்க மறுத்த இன்னொரு பெயர் எம்.ஜி.ஆர். 'அது சாமியோட பேருங்க' என்பான். எம்.ஜி.ஆர்.அவனைப் பொருத்தவரை நடிகரல்ல. கடவுள்.மதுரை வீரன்.

ஒரு மனிதனின் வயது முதிர்ச்சியை அப்பட்டமாகப் பார்த்தது சிலரிடம். அதில் மந்திரியும் உண்டு. அவனுக்கு நாள் தோறும் வயதாகிக் கொண்டிருந்தது. நான் பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிப் பருவத்துக்கும் உத்தியோக பருவத்துக்கும் மாறினேன். அவனுக்கு என்னை எங்கே பார்த்தாலும் ஒரே கோரிக்கைதான் இருந்தது. ''ஆக்கு பாக்கு தீசேனிக்கு டப்பு ஈயண்டி சாமியோவ்'' என்ற கோரிக்கை. வெற்றிலை பாக்கு வாங்கக் காசு என்பதைத் தவிர அவனுக்குக் கேட்க  எதுவுமில்லை என்றுதான் நினைத்திருந்தேன் என் திருமணம் முடியும்வரை.

திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் பஸ் நிறுத்தத்தில் மந்திரியைப் பார்த்தேன்.''சாமி, கலியாணத்துக்கு ஒரு வாய்க் கஞ்சி ஊத்தல சாமி'' என்றான். உள்ளே ஏதோ நாடி அறுபட்டதுபோல இருந்தது. வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டேன். ''அதனால என்ன சாமீ. வெத்தல பாக்கு வாங்கக் காசு குடுங்க'' என்று வழக்கமான கோரிக்கைக்கு வந்தான். கொடுத்தேன். எனினும் என்னமோ குறையாக இருந்தது. ''மந்திரி இங்கதான் இருப்பே?'' என்று கேட்டேன்.

''சாமிக்குத் தெரியாதுங்களா, நா வேற எங்க போக?''

பக்கத்திலிருந்த ஜவுளிக்கடையில் ஒரு சட்டைத் துணியும் சேலையும் வாங்கினேன். அதை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தேன். காக்கிச் சீருடையைத் தவிர வேறு எந்த உடையையும் அவன் அணிந்ததில்லை. வீடுகளிலிருந்து  கொடுக்கும் பழைய சேலையைத் தவிர வேறு எதையும் அவன் மனைவி உடுத்தியதில்லை. இரண்டும் தெரியும். அதை அவர்கள் உடுத்தாமலிருக்கவும் கூடும் என்பதும் தெரியும். எனினும் எனக்கு அப்படிச் செய்யத் தோன்றியது. கூச்சத்துடன் அதை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு '' இதி எந்துக்கு சாமீயோ?'' என்றான். அதைச் செய்வதற்கு எனக்கு அந்தரங்கமான காரணம் இருந்தது.

எப்போதோ ஒருமுறை மந்திரியிடம் கேட்டேன். தெருவில் ஏராளமான வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் பையன்கள் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் வெற்றிலை வாங்கக் காசு கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன்?

'' கேக்கலாம் சாமீ, அவுங்க குடுப்பாங்க. இந்தாடா சக்கிலியான்னு சொல்லிகிட்டுக் குடுப்பாங்க. அதை எப்டி சாமீ வாங்கறது. இன்னி வரைக்கும் நீ என்னெயெ சக்கிலியான்னோ வாடா போடான்னோ சொன்னதில்ல. அதாஞ் சாமீ ஒன்ற கிட்ட கேக்குறன்'' என்றான். எனக்கு ஒரு நொடி பெருமிதமாக இருந்தது. ஆனால் அடுத்த நொடி உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டிருந்த நிஜம் சுட்டது. இல்லை. நானும் அவனைச் சாதிப் பெயரால் குறிப்பிட்டிருக் கிறேன். ஒரே ஒரு முறை. பதினாலோ பதினைந்தோ வயதில். தள்ளாட்டத் துடன் வீடு திரும்பிய அப்பாவை மந்திரி அழைத்து வந்த ஒரே ஒருமுறை. சக்கிலியன் கூட்டிக் கொண்டு வந்து விடுகிற அளவுக்குக் கேவலமாகவா போனீர்கள் என்று அப்பாவைக் கேட்டிருக்கிறேன். அப்பா மேலிருந்த ஆத்திரத்தில் செய்த சொற் குற்றம் அது. பின்னணி என்னவாக இருந்தாலும் குற்றம் குற்றம்தானே?

@




























1 கருத்து: