செவ்வாய், 1 ஜனவரி, 2019

மூன்று நூல்கள்

ஆங்கிலம் வழி ஒன்றும் மலையாளத்திலிருந்து ஒன்றுமாக இரண்டு மொழிபெயர்ப்புகள். ஒரு கவிதைத் தொகுப்பு. ஆக மூன்று நூல்களுடன்  புதிய ஆண்டு தொடங்குகிறது. 


பாதுஷா என்ற கால்நடையாளன் ( மலையாளச் சிறுகதைகள் )
உண்ணி ஆர்.







ண்ணி ஆர் இன் சிறுகதைத் தொகுப்பு' பாதுஷா என்ற கால்நடையாளன் 'ஒரு மறுபதிப்பு. உண்ணியின் 12 கதைகள் கொண்ட தொகுப்பு 'காளி நாடகம்' 2007 இல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்தது. தமிழ் வாசகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுப்பு என்று அறிய முடிந்தது, எனினும் அதற்கு ஒரு மறுபதிப்பைக் கொண்டுவர இயலவில்லை.  காளி நாடகம் வெளிவந்த பின்னர் உண்ணியின் முக்கியமான சில கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவற்றையும் உள்ளடக்கியது 'பாதுஷா என்ற கால்நடையாளன் ' என்ற இப்போதைய தொகுப்பு. சிறுகதைகளாக வெளிவந்து மலையாள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கதையான லீலையும் பாங்கு என்ற கதையும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. 'லீலை' திரைப் படமாக வெளிவந்தது. 'பாங்கு' வரவிருக்கிறது.

இந்தப் புத்தகம் தொடர்பாகப் பகிர்ந்து கொள்ள  இரண்டு மகிழ்ச்சிகள்  இருக்கின்றன. காளி நாடகத்துக்கு நான் எழுதிய முன்னுரைதான் உண்ணியின்  சிறுகதைகள் பெருந்திரட்டில் ஆய்வுக் கட்டுரையாக வெளியானது. அதன் பகுதிகள்தாம்  பின்னட்டைக் குறிப்பாகவும் கொடுக்கப்பட்டன. தமிழில் எழுதப்பட்ட முன்னுரை ஒரு மலையாளப் புத்தகத்தின் மதிப்பீடாக மாறுவது அபூர்வம். இது முதல் மகிழ்ச்சி. இரண்டாவது மகிழ்ச்சிக்குக் காரணகர்த்தர் புத்தகத்தின் முகப்பை வடிவமைத்த ஜெய்னுல் ஆபித். இன்று மலையாளப் பதிப்புலகில் அதிகம் பாராட்டுப் பெறும் வடிவமைப்பாளர் அவர். கிடைத்தற்கரியவர். ஆபித் வடிவமைக்கும் முதல் தமிழ்ப் புத்தகம் இதுதான்.


ஷா இன் ஷா ( வரலாறு )
ரிஸார்த் காபுஸின்ஸ்கி




காலச்சுவடு நவீன கிளாசிக் வரலாற்று வரிசையில் வெளியாகும் நூல் 'ஷா இன் ஷா'. போலந்தைச் சேர்ந்த கவிஞரும் பத்திரிகையாளருமான ரிஸார்த் காபுஸின்ஸ்கியின்  ஆக்கம். 1936 - 81 வரையான ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள், உள் நாட்டுக் கலவரங்கள், புரட்சிகள் எல்லாவற்றிலும் நேரடிச் சாட்சியாகப் பங்கேற்றவர். களத்தில் பெற்ற அனுபவங்களை முன்வைத்து நூல்கள் எழுதியர். அவற்றை வெறும் இதழாளனின் குறிப்புகளாக இல்லாமல் வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் பின்புலத்தில் இலக்கிய இயல்புடன் எழுதியவர். 1979 - 80 கால அளவில் இரானில் நடைபெற்ற ஷா முஹம்மது ரெஸா பஹ்லவியின் அதிகார வீழ்ச்சியையும் அயதுல்லா கொமெய்னியின் தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியையும் நேரில் கண்டு எழுதிய நூல் 'ஷா இன் ஷா'.


கவிதைகள், கதைகள்., கட்டுரைகள், நாவல்கள் என்று ஆங்கிலம் வாயிலாகச் சில படைப்பு களை முன்னரே மொழிபெயர்த்திருக்கிறேன். அவை எவற்றிலும் உணராத சிக்கலை இந்த மொழிபெயர்ப்பு ஏற்படுத்தியது. அதற்கு காபுஸின்ஸ்கியின் எழுத்தின் இயல்பே காரணம். இந்நூலில் கையாண்டிருக்கும் நடை (பொதுவாகவே அவரது எல்லா நூல்களிலும் கையாளப்படும் நடையும்) மாறுபட்டது. கவிதையின் பூடகத்தையும் செறிவையும் கொண்டது. ஒன்றைச் சொல்லும்போதே  தொடர்புடைய வேறொன்றைச் சுட்டுவது. இது இதழியலாளனின் நடையோ வரலாற்றாளனின் நடையோ அல்ல. புனைவு எழுத்தின் நடை. பருண்மையான தகவல்களையும் அரூபமான ஒன்றாகவே  காபுஸின்ஸ்கி முன்வைக்கிறார். ஒருவகையில் மாய எதார்த்தவாதமானது அவரது எழுத்துமுறை. இதைத் தமிழாக்குவது பெரும்பாடாக இருந்தது.


போலிஷ் மொழி மூலத்திலிருந்து வில்லியம் ஆர். பிராண்ட், கதார்ஸினா ம்ரோஸ்கோவ்ஸ்கா ஆகியோர் ஆங்கிலத்தில் மேற்கொண்ட ஆக்கமே இந்தத் தமிழ் வடிவத்தின் மூலம். வாசிப்பில் பரவசத்தையும் புதிய உலகைக் கண்டடைந்த பெருமிததையும் அளித்த நூல் இது. ஆனால் தமிழாக்கத்துக்குப் பிடிவாதமாக இணங்க மறுத்த்து. மொழியாக்கத்துக்கு என்று தனிப்பட்ட முறையில் நான் வகுத்துக் கொண்டிருந்த விதிகளை மீறவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை அடியொற்றிய தமிழாக்கமாக இந்த நூலைக் குறிப்பிட விரும்பவில்லை. தமிழ் வாசகருக்கு புரிந்துகொள்ள இசைவானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுதந்திரமாக அத்து மீறப்பட்டிருக்கிறது. போலிஷ் சோஷலிஸ்டான ரிஸாத் காபுஸின்ஸ்கியின் ஆன்மா இந்த அத்துமீறலை மன்னிக்கும் என்பது என் மூடநம்பிக்கை.


செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல ( கவிதைகள் )
சுகுமாரன்








ன்னுடைய ஏழாவது கவிதைத் தொகுப்பு .'நீருக்குக் கதவுகள் இல்லை' ( 2011 )  தொகுப்புக்குப் பிறகு எழுதிய கவிதைகள் இவை.


இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளைத் தொகுத்துக் கொண்டிருந்த போது இத்தனை காலமும் எழாத பல கேள்விகள் எனக்குள்ளேயே எழுந்தன. கவிதை எப்போதும் நிகழ்காலத்தைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போதே காலத்தை மீறிய ஒன்று அதில் இல்லையா? கவிதையின் பேசுபொருள் அன்றாட நடவடிக்கையின் சித்தரிப்பா, இல்லை, அதைப் பற்றிய விசாரணையா? கவிதை மொழியின் துணைப்பண்டமா, உற்பத்தியின் மூலமா? கவிதையின் மொழி வெளிப்படையானதா, தொனிவேற்றுமை கொண்டதா? கவிதைக்குள் இயங்கும் பார்வை மோஸ்தருக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டுமா? அதைப் புறக்கணிக்கும் ஒன்றாகவிதை செய்திக்கான வாகனமா, தனியான இருப்பா? கவிதை கைப்பழக்கமா, மனக் கனிவாகவிதை என்னவாக இருக்க வேண்டும், கவிதையைப் போலவா அல்லது கவிதையாகவாகவிதை எழுத்துத் தொடங்கிய காலம்முதல் இடைவிடாமல் உறுத்திவந்த கேள்விகள் தாம் இவை. எல்லாக் காலத்திலும் அவற்றுக்கான பதில்களைத் தேடிக் கண்டடைந்திருக்கிறேன். எனினும் இந்தத் தொகுப்பின் தருணத்தில் அவை உரத்த குரலில் முழங்கின.ஒருவேளை கவிதைகள் பல்கிப் பெருகி மலிந்திருக்கும் சூழலில் என்னுடைய கவியிருப்புக் குறித்த பதற்றத்திலிருந்து அவை எழுந்திருக்கலாம். வழக்கம்போலவே அவற்றுக்கான பதில்களைக் கண்டுபிடித்துமிருக் கிறேன். எங்கே எப்படி என்ற பெரும் கேள்விகளுக்கு இங்கே இந்தக் கவிதைகளில்தான் என்பதே பதில்.
                                   ---   *   ---


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக