ஞாயிறு, 7 ஜூன், 2020






கபீர் விருந்து
 

 உரையின் எழுத்து வடிவம் கிடைக்குமா என்று கேட்ட நண்பர் சண்முகத்துக்காக....


                           கபீர் கவிதைகள்
                           @


னைவருக்கும் வணக்கம். தகடூர் புத்தகப் பேரவை  நடத்தும் ‘கபீர் விருந்து’  இணையவழி  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னைப் பங்கேற்கச் செய்திருக்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் செங்கதிர், கபீரின் 120 கவிதைகளைத் தமிழாக்கி ‘புன்னகைக்கும் பிரபஞ்சம்’ என்ற தொகுப்பை அளித்திருக்கிறார். அண்மைக் காலத்தில் தமிழுக்குக் கிடைத்த நல்ல மொழியாக்க நூல் இது என்று சொல்லலாம்.  அதைவிட அதிக முக்கியத்துவத்தை நூலுக்கு அளிக்க விரும்புகிறேன். 

இலக்கியத்துக்குக் கிடைத்த கொடை என்று சொல்வதை விட நாம் வாழும் காலத்தின் மனநிலைக்குத் தரப்பட்ட முறிமருந்து என்று பார்க்கவே விரும்புகிறேன். மனிதர்கள் வெவ்வேறாகப் பிளவுபட்டிருக்கும் சூழலில் அவர்கள் எல்லாரையும் சமமானவர்களாகவும் சமமதிப்புக்கு  உரியவர்களாகவும் சகோதரர்களாகவும் பார்க்கும் எண்ணத்தை உருவாக்கும் வலிமை கபீரின் கவிதைகளுக்கு உண்டு. கபீரின் கவிதை ஒன்று இதைச் சொல்கிறது.

‘கடவுள் மசூதிக்குள்ளேயே இருப்பார் என்றால்
உலகச் செயல்களை  நடத்துவது யார்?
உன் புனிதப் பயணத்தில் பார்த்த சிலைக்குள் ராமன் இருப்பார் என்றால்
அது இல்லாத வெளியிடத்தை அவர் எப்படி அறிவார்?
ஹரி கிழக்கில் இருக்கிறார்
அல்லாஹ் மேற்கில் இருக்கிறார்.
உன் இதயத்தை ஆழ்ந்து பார்
அங்கே ராமன், கரீம் இருவரையும் காணலாம்
உலகிலுள்ள ஆண்களும் பெண்களும்
அவனுடைய உயிர்த் தோற்றங்கள்.
கபீர் அல்லாஹுவுக்கும் ராமனுக்கும் பிள்ளை.

இந்த மானுட ஒருமையை உணர்த்தும் குரல்தான் நம்முடைய இன்றைய தேவை. அதை வலியுறுத்துகிற படைப்புகள்தான் இப்போது அவசியம். எப்போதையும்விட இந்த நாட்களில் கபீர் நமக்குத் தேவைப்படுகிறார்.  அந்தத் தேவையை இந்த மொழியாக்கம் நிறைவேற்றுகிறது. அந்த அர்த்தத்தில்தான் இந்த நூலை காயங்களை ஆற்றும் மருந்தாகப் பார்க்கிறேன். இது இந்த நூலின் சமூகப் பொருத்தப்பாடு.

இலக்கியரீதியிலும் கபீர் இன்று தேவையானவராக இருக்கிறார். அவர் வாழ்ந்தது இன்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு. ஐநூறு, அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு. இந்தக் கவிதைகள் எழுதப்பட்டதும் பல நூற்றாண்டு களுக்கு முன்பு. ஆனால் இன்றைக்கும் இலக்கியமும் கலையும் எந்த மானுட இணக்கத்தை முன்னிருத்துகின்றதோ அதை அவர் முன்பே கண்டடைந்திருக் கிறார். வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் அவர் இன்றைய இலக்கியத்துக்கும் உந்துதலாக இருக்கிறார். ஏனெனில் அவர் காட்டிய மானுட உணர்வுகள் எந்த அளவுக்குப் பழைமையானவையோ அதே அளவுக்குப் புதுமையானவையும் கூட. இந்தப் புதுமையை இந்த மொழியாக்கத்தில் பார்க்க முடிகிறது. ஒருவேளை அந்த மாறாத புதுமைதான் தமிழாக்கத்துக்கும் காரணமாக இருக்கலாம்.  

பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் என்பதால், பல நூற்றாண்டு களுக்கு முன்னால் வாழ்ந்த ஒருவர் இயற்றியது என்பதால் அந்தப் படைப்பிலும் வரலாற்றுக் குழப்பங்கள். படைப்பாளியின் வாழ்க்கையை அறிவதிலும்  வரலாற்றுச் சிக்கல்கள். கபீர் யார்? ஒருவரா இல்லை, வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பலரா? ஒரே இடத்தில் வாழ்ந்தாரா? ஒரே மொழியில் எழுதினாரா? இல்லை, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் எழுதினாரா? என்பதெல்லாம் தெளிவாக இல்லை. புதிராகவே இருக்கின்றன. ஒருவகையில் இந்தப் புதிர்தான் கபீரைப் பொறுத்து எனக்கு வசீகரமானதாக இருக்கிறது. அறியப்படாத ஒன்றின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுவது சகஜம் இல்லையா?

இந்தப் புதிரான குழப்பத்தை அல்லது குழப்பமான புதிரையொட்டித்தான் கபீரைப் பற்றிய கதைகள் சொல்லப்படுகின்றன. அவரது பிறப்பும் வாழ்வும் பல கதைகளுக்கு அடிப்படையாகின்றன. கபீர் இந்துவாகப் பிறந்து இஸ்லாமியராக ஆனாரா? பிறப்பாலும் வளர்ப்பாலும் இஸ்லாமியராகவே இருந்தாரா? அவரை யார் உரிமை கொண்டாடுவது? அவரை எந்த மதத்தில் சேர்ப்பது?  இந்த சொந்தம் பாராட்டுதல் பற்றிய பல கதைகளைக் கபீரின் வாழ்க்கை வரலாற்றில் பார்க்கலாம். அவை பற்றி செங்கதிர் நூலின் முன்னுரையில் மிக விரிவாகவே குறிப்பிடுகிறார். கபீர் கவிதைகளின் உயிரோட்டத்தை அறிய உதவும் செறிவான முன்னுரை. இந்த முன்னுரையை வாசிக்காமல் கவிதைகளைப் புரிந்து கொள்ள முயல்வது துடுப்பில்லாமல் படகை ஓட்டுவதுபோல என்று சொல்ல விரும்புகிறேன்.

வாசகன், எழுத்தாளன் என்ற நிலையில் அவ்வப்போது எனக்குச் சில விருப்பங்கள் ஏற்படும். ஒரு கட்டத்தில் பழந்தமிழ் நூல்களை வாசிக்கத் தோன்றும். பிறகு செவ்வியல் இலக்கியங்களில் ஆர்வம் ஏற்படும். அப்புறம் சூபிசம் மீது நாட்டம் வரும். இன்னொரு சந்தர்ப்பத்தில் நவீன இலக்கியத்தில் கவனம் போகும். அப்படியான ஆர்வம் ஒரு வேளையில் கபீரிடமும் சூர்தாஸிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. கபீர் கவிதைகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்னை எவ்வளவு ஈர்த்ததோ அதே அளவுக்கு அவரைப் பற்றிய கதைகளும் கவர்ந்தன. அவர்றில் ஒரு கதை அவரது இறப்பைப் பற்றியது.  உயிருடன் இருந்தபோது இந்துக்கள் அவரைப் பகைவராகப் பார்த்தார்கள். முஸ்லிம்களும் எதிரியாகப் பார்த்தார்கள். இறந்த பின்னர் அந்த உடலுக்கு இரண்டு பிரிவினரும் சொந்தம் கொண்டாடினார்கள். இன்றைய கதையின் பழைய பதிப்பு மாதிரித் தெரிகிறதில்லையா?

இந்துவுக்கு ராமனும்
முஸ்லீமுக்கு ரஹீமும் பிரியமானவர்கள்..
உணராமல் சண்டையிட்டு
ஒருவரை ஒருவர்
கொன்றிடும் அவர்கள்
இறைமையின் ரகசியம் அறியாதவர்கள்.
என்று கபீர் சொல்லுவது நவீன காலத்தைப் பற்றியும்தான் இல்லையா?

கபீரின் சடலத்தை மூடியிருந்த துணியை விலக்கிப் பார்த்தபோது அங்கே பூக்களின் குவியல்தான் தெரிந்தது. இரண்டு தரப்பு ஆட்களும் பாதிப் பாதியாகப் பிரித்துக் கொண்டார்கள், இந்துக்கள் அந்தப் பூக்களை தகனம் செய்தார்கள். முஸ்லிம்கள் கபர் அடக்கினார்கள். அவர்கள் எரித்தும் புதைத்தும் மறைத்த அந்தப் பூக்களின் ஒருபோதும் மறையாத நறுமணம்தான் கபீ்ர் கவிதைகள்.

கபீரைக் கவிஞானி என்று இந்திய இலக்கிய மரபும் ஆன்மீக மரபும் குறிப்பிடு கின்றன. அவரது பாடல்கள் வழிபாட்டின் அம்சங்களாக இருக்கின்றன. ஆலயங்களில் பஜன்களாகப் பாடபடுகின்றன. இலக்கியமாகவும் இருக்கின்றன. இதை இந்திய ஞான மரபின் வழிமுறையாகச் சொல்லலாம். கவிதைக்கும் ஞானத்துக்கும் இழைபிரியாத தொடர்பு சொல்லப்படுகிறது. கவிதை எழுதியவர்கள் எல்லாரும் ஞானிகளாக இருந்ததில்லை. ஆனால் ஞானிகளாகப் போற்றப்படுபவர்கள் எல்லாரும் கவிதை எழுதியிருக்கிறார்கள். இந்த உண்மை கபீரைத் தீவிரமாக வாசித்தபோது விளங்கியது. அதை இப்படி வகைப்படுத்திப் பார்க்கிறேன். ஞானம் தேடல் மிகுந்த தனி மனிதனின் செயல். கவிதை தனி நபரால் எழுதப்பட்டாலும் ஒரு சமூக மனத்தின் வெளிப்பாடு. அதனால்தான் ஞானிகளின் வார்த்தைகள் எளிதில் பிடிபடுவது இல்லை. கவிஞர்களின் சொற்கள் எளிதில் புலப்பட்டு விடுகின்றன. இந்த வகைப்படுத்தலின் அடிப்படையில் கபீரை ஞானி என்று விலகிச் செல்வதைக் காட்டிலும் கவிஞர் என்று நெருங்கிச் செல்ல முடிகிறது என்று நம்புகிறேன்.

இந்தத் தொகுப்பின் முதல் கவிதையையே உதாரணமாகச் சொல்லலாம்.
சொல் காயப்படுத்தி வீழ்த்துகிறது ஒருவனை.
சொல் தட்டிப்பறிக்கிறது மற்றொருவனின் மணிமுடியை.
சொல்லை உய்த்துணரும் ஒருவனுக்கே
அனைத்தும் இனிதாக முடிகிறது.

இது ஒருபோதும் ஞானியின் நாவிலிருந்து எழக் கூடியது அல்ல. அது வழியைத் தேடும் அறிவைச் சொல்லும். அனுபவித்த உணர்வைச் சொல்லாது. கபீர் சொல்வது அறிந்ததை அல்ல; அனுபவித்ததை.  

இந்தியா முழுவதும் பரவியிருந்த பக்தி இயக்கத்தின் விளைவுதான் கபீர் என்பதில் சந்தேகமில்லை. பக்தி இயக்கக் கவிதைகளின் எல்லா அம்சங் களையும் கபீர் கவிதைகளில் காண முடியும். அவற்றில் கையாண்டிருக்கும் உவமைகளும் உருவகங்களும் குறிப்பீடுகளும் பக்தி இலக்கியத்திலிருந்து  எடுத்தாண்டவைதாம். ஆனால் தனது கவிதைகளில் அவற்றை வேறுபட்ட முறையில் முன்வைக்கிறார். அதற்குக் காரணம், பக்தி இயக்கத்தின் வழிமுறைகளில் இருந்த வேறுபாடு என்று நினைக்கிறேன். பக்தி இயக்கத்தின் பொதுவான குறிக்கோள் இறைவனை அடைவது. எப்படி அடைவது என்பதில் வித்தியாசங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் எழுதப்பட்ட பக்திக் கவிதைகளுக்கும் வட இந்திய பக்திக் கவிதைகளுக்குமே வேறுபாடுகள் இருக்கின்றன. வட இந்திய மரபு கடவுளை நெருங்கி விட்ட தொனியில் பேசுகிறது. சமயங்களில் கடவுளின் குரலாகவே பேசுகிறது. கொஞ்சம் அதட்டலாகவே பேசுகிறது. கபீரிடம் இந்தத் தொனியைப் பார்க்கலாம். கவிதைகள் அனைத்திலும் அவரே பேசுகிறார். கபீர் பேசுகிறான்; கபீர் சொல்கிறான் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்.

தென்னிந்திய பக்திக் கவிதைகள் பெரும்பாலும் கடவுளை நெருங்க விரும்பும் குரலில் அமைகின்றன. அதற்காக மன்றாடும் தொனியில் பேசுகின்றன. கடவுளின் குரலாக இல்லாமல் அந்தக் குரலின் எதிரொலியாகவே இந்தக் கவிதைகள் இருக்கின்றன. ஓரிரு வித்தியாசங்கள் இருக்கவும் செய்கின்றன.

கபீரைப் பொதுவான பக்தி மரபிலிருந்தும் விலகியவராகவே பார்க்கிறேன். ஏனெனில் அவருடைய பிரச்ச்னை கடவுளைத் தேடுவதல்ல; மனிதர்களைக் கண்டடைவது. அவருடைய அக்கறை தெய்வத்தை மனித உருவத்தில் பார்ப்பது அல்ல; மனிதர்களைத் தெய்வத்தின் வடிவத்தில் பார்ப்பதுதான். அதனால்தான் அவருடைய ராமன் அவதார புருஷனாகச் சித்தரிக்கப் படுவதில்லை. அவதார இலட்சியத்தை வலுப்படுத்தும் புராணக் குறிப்புகள் எதையும் கபீருடைய ராமனுக்கு இல்லை. அவர் அடைய விரும்பும் இடமாகச் சொல்லும் வைகுந்தம் பாற்கடலில் மிதக்கும் திருத்தலம் அல்ல; மெக்காவும் புனிதக் கிணறான ஜம்ஜம் ஊற்றெடுக்கும் பரிசுத்த பூமியல்ல. அவர் அடைய விரும்பும் இடம் மனிதர்கள் நடமாடும்  மண்ணுலகம்தான். அதிலிருக்கும்  எளிய குடிசைதான். இதை அவரே இப்படிச் சொல்லுகிறார்;

எங்கெங்கோ தேடுகிறாய்
உன்னருகில் இருக்கும் என்னை.
தீர்த்தக்கரைகளில் இல்லை
திருத்தலங்களில் இல்லை நான்
தன்னந்தனியாகவும் இல்லை.

பளிங்குக்கோயிலில் இல்லை
பள்ளிவாசலிலும் இல்லை
காபாவில் இல்லை நான் கைலாசத்திலும் இல்லை.
உன்னருகில் இருக்கிறேன்

தாந்திரீகத்தில் இல்லை
தவம் செய்வதிலும் இல்லை.
விருந்தில் இல்லை
விரதத்திலும் இல்லை.
சடங்குகளில் இல்லை நான்
சன்னியாசத்திலும் இல்லை.

உயிரில் இல்லை உடலில் இல்லை
முடிவேயில்லாத ஆகாயத்திலும் இல்லை.
உள்ளொடுங்கும் குகையில் இல்லை நான்
உயிரிகளின் உயிரிலும் இல்லை.


நீ தேடுவது உண்மையெனில்
மின்னிமறையும் கணங்களில் கிடைத்திடுவேன்.
கபீர் சொல்கிறேன்
கவனமாகக் கேளுங்கள் துறவிகளே
நான் வாழ்வது நம்பிக்கையெனும் குடிசையில்.

இந்த இம்மை இயல்பு தான் கபீரின் முதன்மையான தனித்துவக் கூறு என்று நம்புகிறேன்.

இந்தியச் சிந்தனையில் பக்தியும் ஆன்மீகமும் ஒன்றுதான் என்று கருதப் படுகிறது. அவை வெவ்வேறானவை என்பது என் எண்ணம். அதை வலுப்படுத் தியவர்களில் ஒருவராகக் கபீரைக் காண்கிறேன். அவருடைய இரண்டாவது தனித்துவக் கூறாக இதைப் பார்க்கிறேன். கொஞ்சம் விளக்கமாகவே சொல்லலாம். பக்திக்கு ஒரு இலக்கு மையம் தேவைப் படுகிறது. ஆன்மீகத்துக்கோ வெவ்வேறு இலக்குகள் வேண்டியிருக்கின்றன. பக்தி முழுமையான சரணாகதியை வலியுறுத்துகிறது. உலகியல் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிக்க நிர்ப்பந்திக்கிறது. ‘மானுடர்க்கு என்று பேச்சுப்படின் வாழுகில்லாய்’ என்ற ஆண்டாளின் குரல் அதைத்தான் காட்டுகிறது. எல்லாவற்றையும் துறந்து இறைமையை அடைவது பக்தியின் வழி.


அதற்கு மாறானது ஆன்மீகம். அது சரணாகதி அடையச் சொல்வதில்லை. தேடச் சொல்கிறது. இறைமையை உலகியலுக்குள் கொண்டு வருகிறது. தெய்வமான கண்ணனைத் தன் சேவகனாக்கி வீடு பெருக்கி விளக்கேற்ற வைக்கிறது. உலகியலைத் துறக்காமல் இறைமையை அடைய முயல்கிறது. கபீர் பக்தியின் சடங்குகளை நிராகரிக்கிறார். உலகியலின் ஆன்மீகத்தை எடுத்துக் காட்டுகிறார். சடங்குகளைக் கற்பிதங்கள் என்கிறார். இந்தக் கவிதை அதைச் சுட்டிக் காட்டுகிறது.

இந்நீரைப் பருகுவதற்குமுன்
கொஞ்சம் யோசி, பண்டிதனே.
நீ வசிக்கும் இந்தவீட்டின் சுவர்கள்
எத்தனையோ உயிர்கள் மட்கிக்கலந்த மண்ணாலானது.
இம்மண்ணில்தான்
ஐம்பத்தாறு கோடி யாதவர்களும்
எண்பத்தெட்டாயிரம் துறவிகளும்
மரணித்திருக்கின்றனர்.
இப்பூமியில் நீ வைக்கும்
ஒவ்வொரு அடியின் கீழும்
ஒரு தீர்க்கதரிசி புதைக்கப்பட்டிருக்கிறார்.
அழுகித்தான் போனது
அவர்களின் உடல்களும்.
மீனும், ஆமையும், முதலையும்
முன் நாளில்
இங்குதான் குஞ்சுபொரித்தன.
ரத்தம் தோய்ந்த
இந்த ஆற்று நீரோடு கலந்து
அழுகிப்போன மனிதர்களும் மிருகங்களும்
நரகத்தை உன்னிடம் கொண்டுவருகிறார்கள்.
மதிய உணவிற்குப்பின்
நீ பருகும் பால் எங்கிருந்து வருகிறது?
எலும்புகளின் மஜ்ஜையில் திரண்டு
தசைகளின் நாளங்களில் சுரந்து
வருவதல்லவோ அது?.
களிமண்ணைத் தீட்டு என்கிறாய், நீ.
அப்படிச்சொல்லும் அந்தப் புனித நூல்களை,
உனது கற்பனைகளை வீசியெறி.
கபீர் சொல்கிறேன் கேள், பண்டிதனே.
இவையெல்லாம்
நீ புனைந்த கற்பிதங்களே .

மூன்றாவது தனித்துவமாகக் கபீரிடம் பார்ப்பது அவரது கலக உணர்வை. ஆன்மீகக் கவிஞர்களில் கலகக்குரலாக வெளிப்பட்டவர்களில் அவரும் ஒருவர். இதை இப்படிச் சொல்லலாம். மதமும் ஆன்மீகமும் ஒன்றல்ல என்று நம்புகிறேன். ஆனால் இந்திய மரபில் இரண்டும் ஒன்றாகத்தான் கருதப் படுகின்றன. மதங்கள் தம்மை நிலைப்படுத்துக் கொள்ள சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்க்குகின்றன. அவற்றை நியாயப்படுத்துக் கொள்வதற்காக புனித நூல்களையும் வேதங்களையும் அவதாரக் கதைகளையும் உற்பத்தி செய்கின்றன. மனிதர்களுக்கு வாழ்க்கையைத் தாண்டிய சொர்க்கங்களையும் கற்பிக்கின்றன. ஆன்மீக மரபு இதற்கு மாறானது. அதை ஒவ்வொரு காலத்திலும் மதங்கள் இந்த மரபைத் தமக்குள் இழுத்துக் கொள்கின்றன. இது உலகில் உள்ள எல்லா மதங்களிலும் நடக்கிறது. இந்திய சமயமரபு புத்தமதத்தையும் சமண மதத்தையும் விழுங்கியது. இஸ்லாமிய சமயமரபு ஜராதுஷ்டிர மதத்தை விழுங்கியது. இந்த மதப்பிடிப்புகளுக்கு எதிராகவே ஆன்மீக மரபு செயல் படுகிறது. அதைக் கேள்வி கேட்கிறது. விமர்சிக்கிறது. அதற்காகக் கலகம் செய்கிறது. அப்படியான ஒரு குரலாகவே கபீரைச் சொல்ல வேண்டும். ஆன்மீக மரபு இன்னொன்றையும் செய்கிறது. அது எல்லாவற்றையும் மானுடவயப் படுத்துகிறது. மத நூல்களில் கடவுளர் அதி மானுடர்கள். ஆன்மீக மரபில் அவர்கள் சாதாரண மனிதர்கள். கபீரின் கவிதையில் கடவுள் படகோட்டி யாகவும் பொற்கொல்லனாகவும் நெசவாளியாகவும் குயவனாகவும் இடையனாகவும் இருக்கும் மனிதர்கள் நடுவேதான் நடமாடுகிறார். அவர்கள் சார்பிலிருந்தே கபீர் கலகக்குரலை இப்படி எழுப்புகிறார்.

கல்லையும் மணலையும் கொண்டு
கட்டி எழுப்பினோம் மசூதியை.
அதன்மீதேறி
அலறுகிறான் முல்லா.
அப்படியென்ன செவிடாகிவிட்டதா
ஆண்டவனின் காது.

கபீரை நவீனமான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். ஒரு கவிதையை உதாரணமாகச் சொல்கிறேன். நாயக நாயகி பாவத்தில் எழுதிய கவிதை களிலும் அவர் வேறுபட்டு நிற்கிறார். பொதுவாக இந்த பாவத்தில் எழுதப் படும் கவிதைகள் இறைஞ்சலாகவோ ஒப்புக் கொடுக்கும் உணர்வுடனோ அமையும். விரகத்தில் துடிப்பார்கள். கூடலுக்குத் தவிப்பார்கள்.ஆனால் கபீரின் நாயகி மாறுபடுகிறாள்.

ஒரு முத்தத்திற்காக
உன்னை ஒட்டிப் படுத்திருக்கும்
என்னை ஏறிட்டும் நோக்காமல்
முகம் திருப்பிப் படுத்திருக்கிறாய்
பிரியமானவனே!
இப்படி கிடந்து
என் உயிரை வதைக்காமல்
திரும்பிப்படு.

விரதத்தில் ஒருவன்
அசையாமல் அப்படி படுத்திருக்கலாம்
எனதருகில் இப்படி படுத்திருப்பது பாவம்.
முகம் திருப்பி
என் கழுத்தை வளைத்து
இறுக அணைத்துக்கொள்.

நம் இருவருக்குள்ளும்
யார் உருவாக்கியது
இந்த இடைவெளி?.
நீயே என் காதலன்
நான் உனக்கானவள்.

கபீர் சொல்கிறேன்,
நன்றாகச் செவிமடு.
தலைவனுக்கு என் மீதிருந்த
காதல் வடிந்துவிட்டது.

கபீரின் கவிதைகள் பற்றிய என் எண்ணங்களை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அவை பேசித் தீராத அளவுக்கு விரிவானவை. மீண்டும் பேசத் தூண்டுபவை. இன்னொரு தருணத்தில் விரிவாகப் பேசலாம். செங்கதிரின் மொழியாக்கம் பற்றிப் பேச விரும்புகிறேன். அதுதான் இந்தச் சிந்தனைகளைத் தூண்டி விட்டது. புன்னகைக்கும் பிரபஞ்சம் தொகுப்பை வாசிக்கவில்லை என்றால் கபீரைப் பற்றி இவ்வளவு யோசித்திருக்க மாட்டேன். மொழியாக்கம் பற்றி மூன்று அம்சங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

கபீரின் கவிதைகள் தமிழில் முன்னர் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மூன்று நூல்களாக வெளிவந்திருக்கின்றன. பெரும்பாலும் ஆங்கிலம் வழியாகத் தமிழில் வந்தவை. அவற்றை கபீர் கவிதைகளை அறிமுகப் படுத்தும் நூல்கள் என்று எடுத்துக் கொள்ளலாமே தவிர கபீர் கவிதைகளை அனுபவிக்க உதவும் நூல்கள் என்று சொல்ல முடியாது. இந்தி மொழியின் வெவ்வேறு பேச்சு வழக்குகளில் உருவான கவிதைகள் இவை. எழுதப் பட்ட கவிதைகள் அல்ல. சொல்லப்பட்ட கவிதைகள். அவற்றின் மூல அழகு ஆங்கிலத்தில் கிடைப்பது அரிது. ஆனால் செங்கதிர் வெவ்வேறு இந்தி மூலங்களிருந்து இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். அந்த அந்த வழக்கின் உயிரோட்டத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரே பொருளைச் சொல்லும் கபீரின் இரண்டு கவிதைகளை ஒப்பிட்டால் இந்த நேர்த்தி விளங்கும். 
             நீர்த்துளி
தோழியே,
தேடித்தேடியே காணாமல் ஆனான் கபீர்.
கடலில் கலந்துவிட்டது நீர்த்துளி.
தேடி எடுப்பது எங்ஙனம்?. 


இது ஒரு கவிதை. இதே படிமத்தை வைத்துச் சொன்ன இன்னொரு கவிதை வேறுபட்ட தொனியில் ஒலிக்கிறது.
துளிகள் கலந்து ஆழி ஆவதை
அறிவர் எல்லோரும்.
ஆழி உலர்ந்து
ஒரு துளியாவதை அறிபவனோ
ஆயிரத்தில் ஒருவன்.
இரண்டும் ஒரே காலத்தில் எழுதப்பட்டதோ ஒரே வழக்கில் சொல்லப் பட்டதோ ஒருவராலேயே சொல்லப்பட்டதோ அல்ல என்று நினைக்கிறேன். அவற்றை மூலத்தின் சாயல் கலையாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கவிதைப் பிரக்ஞை முதலாவது அம்சம்.


சரியான சொற்களில் மொழியாக்கத்தைச் செய்திருப்பது இரண்டாவது சிறப்பு. கபீரின் கவிதைகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. அதனால பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆங்கிலத்தில் மிக அதிகமான மொழியாக்கங்கள் உள்ளன. கபீரின் கவிதைகளை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு கவிதையில் கொடிய ஆயுதம் என்ற சொல்லைத் தாகூர் சரியாகவே ‘லீதல் வெப்பன்’ என்று பயன்படுத்துகிறார். அதே கவிதையை மிகச் சிறந்த கவிஞரான ராபர்ட் ப்ளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். கொடிய ஆயுதத்தை  அவர் ‘லீதல் கன்’ என்கிறார். இது வரலாற்றுப் பிழையாகவும் பொருத்தமில்லாத பிரயோகமாவும் பட்டது. கபீர் வாளைப் பார்த்திருக்கலாமே தவிர துப்பாக்கியை பார்த்திருக்க முடியாதே என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. அப்படியான சந்தேகம் எழ வாய்ப்பில்லாத தமிழாக்கத்தை செங்கதிர் செய்திருக்கிறார். சமுத்ர என்ற சொல்லுக்கு ஆழி என்றும் சாகர் என்ற சொல்லுக்குக் கடல் என்றும் அவர் பயன்படுத்தியிருப்பது மொழி பெயர்ப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

கபீர் இந்தக் கவிதைகளைச் சொல்லி இருப்பது வெவ்வெறு விதமான செய்யுள் வடிவங்களில். அவற்றில் தமிழுக்கு இணங்கி வரக்கூடிய வற்றையே மொழிபெயர்த்திருக்கிறார். அது பெறும் மொழி வாசகர் மீதான அக்கறை சார்ந்தது. கூடவே இந்தக் கவிதைகளை நவீன மொழியில் கொடுத்திருக் கிறார். அது இரட்டைப் பயனை அளிக்கிறது. அவை கபீர் ஒரு நவீன கவிஞர்தான் என்ற உணர்வை. தமிழில் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற பெருமிதத்தை.
கபீர் சொல்கிறார்:
மசியையோ காகிதத்தையோ
தொட்டதில்லை நான்.
எழுத்தாணியைப் பற்றியதும் இல்லை
எனது கரங்கள்.
நான்கு யுகங்களின் அற்புதத்தை
எடுத்துரைக்கும் கபீரின் இவ்வுதடுகள்.

கபீர் என்ற அற்புதத்தை தமிழுக்குக் காட்டிய நண்பர் செங்கதிர், அதைப் பகிர்ந்து கொள்ள  வாய்ப்பளித்த தகடூர் புத்தகப் பேரவை நண்பர்கள், இணையம் வழியாக இந்த உரையாடலில் பங்கேற்ற ஆர்வலர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வணக்கம்.

@



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக