காணீர் ... அகண்ட காவிரி
***
திரூரில் சில நாட்களுக்கு முன்பு, ( பிப்ரவரி 28 – மார்ச்
3, 2025 ) நடைபெற்ற துஞ்சன் உற்சவத்தில் பங்கேற்கச்
சென்றிருந்தபோது மலையாளக் கவிஞர், நண்பர் பி.ராமனையும் சந்தித்தேன். கடந்த இரு ஆண்டுகளிலாக
வெளிவந்திருக்கும் அவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளை
( நனவுள்ள மின்னல் / ஈரமுள்ள மின்னல்) , ஆ ஸ்தலம் அணிஞ்ஞ ஷர்ட் ஞான் / அந்த இடம்
அணிந்த சட்டை நான் ) அன்பளிப்பாகக் கொடுத்தார். வீடு திரும்பி தொகுப்புகளை வாசிக்கத்
தொடங்கினேன். வேகமான வாசிப்பிலும் இரண்டு கவிதைகள் கவனத்தைப் பிடித்து நிறுத்தின. அவை
இரண்டும் இசையைப் பற்றிய கவிதைகள். இரண்டுக்கும்
பாட்டுடைத் தலைவர் சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன்.
சமகால இலக்கியவாதிகள்
பலருக்கும் அபிமானப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் என்பது அவர்களுடைய படைப்புகள் வழியாக
வெளிப்படுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இலக்கியவாதிகள் தங்களது துறையல்லாமல்
இன்னொரு கலைத் துறையிலும் ஆர்வமுடையவர்கள் என்பதன் சான்றாகவும் கலைகள் ஒன்றை ஒன்று
பாதிக்கும் தன்மை கொண்டவை என்பதன் சான்றாகவும் இதைக் கொள்ளலாம்.
நிகழ் கால எழுத்துக்களில்
அதிகம் சீராட்டப்பட்டிருப்பது சஞ்சய் சுப்ரமணியனும் அவரது இசையும்தான். நேரடியாகவும்
உள்ளுறையாகவும் அவரது இசை கணிசமான ஆக்கங்களில் பேசப்பட்டிருக்கின்றன. கவிஞர் இசையும்
இந்தக் குறிப்பை எழுதுபவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளில் சஞ்சயின் இசை தரும் அனுபவத்தை
விவரித்திருக்கிறார்கள். மலையாளக் கவிஞரான வி.எம். கிரிஜா ஒரு கவிதையில் சஞ்சயின்
‘கர்ப்பூரம் நாறுமோ…’ என்ற ஆண்டாள் திருமொழியும் ‘பெற்றதாய் தனை மக மறந்தாலும்…’ என்ற
வள்ளலாரின் பாடல் விருத்தமும் தனக்குள் ஏற்படுத்திய சலனங்களைப் பதிவு செய்திருந்தார்.
அண்மையில் வெளியாகியுள்ள சஞ்சய் சுப்ரமணியனின் வாழ்க்கைக் குறிப்புகளின் தொகை நூலான
‘ஆன் தட் நோட்’ டுக்கு ஸ்ருதி இதழில் நேர்த்தியான மதிப்புரையையும் கிரிஜா எழுதியிருக்கிறார்.
சஞ்சயின் பாட்டுத் திறத்தால் பாலிக்கப்பட்டு
நாங்கள் மூவரும் எழுதிய கவிதைகள் , முறையே இசையின் ‘மகத்தான ஈ’ , கிரிஜாவின்
‘மாத்திரைகள் மட்டுமே’ என்னுடைய ‘கானமூர்த்தி’ ஆகியவை விகடன் தடம் இதழில் ‘ ஒரு பாடகரும்
மூன்று கவிஞர்களும்’ என்று வெளியாயின.
சஞ்சய் சுப்ரமணியன்
பாடிய அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகளில் ஒன்றான ‘ எழுந்தாளே பூங்கோதை’யையும்
( ராகம்: மோகனம் ) அவர் பாடியிருந்தால் என்ற கற்பனையின் விளைவாக தியாகராஜரின் சாரி
வெடலின ( ராகம்: அசாவேரி ) கீர்த்தனையையும்
மையப் பொருளாகக் கொண்டவை பி.ராமனின் இரண்டு கவிதைகளும். அவற்றின் தமிழாக்கத்தை
இங்கே பகிர்கிறேன்.
கவிதைகள் ‘
எந்த ருசிரா ராமா’…
எழுந்தாளே பூங்கோதை
சீதையை மகுடமாக
ஏந்திய
தீச்சுடர்கள்
பாடுகின்றன
‘எழுந்தாளே
பூங்கோதை’
தீமரக் கிளையில்
பூத்த
பூப்போலே எழுந்தாளே
சுடவேயில்லை
, கீழே பூமியும் பாடுகிறது
‘எழுந்தாளே’
அந்தக் குளிரூற்றை
வேர் உறிஞ்சுவதால்
தீமரம் குளிர்கிறது;
குளிர் அலைகளுக்குமேல்
சீதையின் முகம்
காட்சியளிக்கிறது
உலர்ந்து உதிர்ந்திருக்கலாம்
திரு நெற்றியில் இட்ட குங்குமம்
சூடு தணிக்க
இப்பாடல் இல்லாமலிருந்தால்
சஞ்சயின் எழுந்தாளே துணைவராதிருந்தால் தேவி
உள்ளே பொசுங்கியிருப்பாள்
அக்கினி தேவன் கைகளில்
தீயைக் குளிரவைத்து
சீதையைப் பொசுக்காமல்
பூமிக்குத்
திரும்பத் தந்த பாடலே நன்றி.
சாரி வெடலின...
தலைக் காவேரியில்
இப்போது
என் காலை நனைக்கும்
நீர்
எத்தனையோ நாட்கள்
கழித்து
ஒருமுறை
திருவையாற்றைக்
கடந்து போகலாம்
தியாகராஜரின்
சாரி வெடலின…
அசாவேரியில்
ஒழுகும் காவேரிக் கீர்த்தனை
நூற்றாண்டுகளினூடே
மீண்டும் மீண்டும்
என்னை அடைவதுபோல
அல்ல
ஒரு குளம் காவேரி
கீழே பாகமண்டலத்தில்
நதியாகச் சட்டென்று
தோன்றும்
சங்கமமாக விரியும்
சஞ்சய் சுப்ரமணியன்
பாடி
நான் கேட்டதில்லை
‘சாரி வெடலின…’
எனினும்
… ஈ காவேரி
ஜூடரே
சஞ்சயின் குரல்வளையில்
சட்டென்று தோன்றி
எனக்குள் எப்போதும்
துள்ளிக் குதித்து
ஓடிக் கொண்டேயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக