சனி, 13 ஜூலை, 2013

நல்வரவு, மார்க்கேஸ்





அனைவருக்கும் வணக்கம். இந்த அரங்கில் இருக்கும் கூட்டத்தை தமிழ் வாசகர்களின் பிரதிநிதிகளாக எடுத்துக் கொண்டே பேச விரும்புகிறேன். முதலில் இரண்டு விஷயங்களுக்காக மன்னிப்புத் தெரிவித்து விட்டுப் பேச்சைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் நாவல் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலின் தமிழாக்கம் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகும் என்று காலச் சுவடு பதிப்பகம் அறிவித்திருந்தது. கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் முன்பதிவு செய்திருந்தார்கள்.  ஆனால் கொஞ்சம் தாமதமாக  ஜூன் இறுதியில் இன்றுதான் வெளியிடப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்கள் நூலைத் தயாரித்து முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தின.  அதில் முக்கியமான காரணம் நான். மொழிபெயர்ப்பை முடிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசத்தை விட மிக மிக அதிகமாகவே எடுத்துக் கொண்டேன். அதுவே தொடர்ச்சியாகக் கால தாமதத்தை ஏற்படுத்தியது. அதற்காக எல்லா வாசகர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன். 

ஒரு மொழிபெயர்ப்பு  நாவலுக்காக இத்தனை வாசகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த வாசக வரவேற்பு இந்த நாவலுக்கு ஆரம்பத்திலிருந்தே கிடைத்து வந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளியாக இருந்தது. அது குளிர்காலம். இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் நடுங்க வைக்கிற குளிரில் புத்தகக் கடை முன்னால் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள். கடைக்கு வந்த சில மணிநேரங்களில் புத்தகம் விற்றுத்தீர்ந்தது. வரிசையிலிருந்த பலரும் புத்தகம் கிடைக்காத ஏமாற்றத்துடன் திரும்பிப் போனர்கள். அந்தப் புத்தகம் ஒரு நாவல். சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய கிறிஸ்துமஸ் கரோல்’.
இருபதாம் நூற்றாண்டிலும் அதே போல ஒரு புத்தகத்துக்காக மக்கள் காத்து நின்றார்கள் என்பது காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்டியூடுக்காகத்தான். டிக்கன்சின் நாவலை வாங்க லண்டன்வாசிகள் மட்டுமே காத்திருந்தார்கள். மார்க்கேஸின் நாவலுக்காக ஸ்பானிய மொழி பேசுகிற எல்லா நகரங்களிலும் வாசகர்கள் காத்திருந்தார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.

1967இல் வெளிவந்த நாவல் மூல மொழியான ஸ்பானிஷில் மூன்று கோடிப் பிரதிகள் விற்பனை ஆனது. இன்றுவரையும் அதிகம் விற்பனை யாகும் நாவல்களின் பட்டியலிலும்  இருந்து கொண்டே இருக்கிறது. 1970 ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது. 1982இல் இலக்கியத்துக்கான நோபெல் பரிசு மார்க்கேஸுக்கு வழங்கப்பட்டது.  தொடர்ந்து உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றைய கணக்குப் படி இந்த நாவல் 37 மொழிகளில் வெளிவந்திருக்கிறது. தமிழ் 38 ஆவது மொழி. நாவல் அதிகாரபூர்வமாக மொழியாக்கம் பெற்றிருக்கும் மூன்றாவது மொழி. மலையாளம், இந்தி இப்போது தமிழ். பதிப்புரிமை பெறாமல் பல மொழிகளில் பெயர்க்கப் பட்டிருப்பதன் கணக்குத் தெரியவில்லை. எனவே தமிழிலும் இந்த நாவல் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது என்பது ஆச்சரியமாகவும் அதே சமயம் இயல்பானதாகவும் தோன்றுகிறது. இந்த எதிர்பார்ப்பை நான் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் தாமதத்துக்குக் காரணம் என்று இப்போது தோன்றுகிறது. அதற்காகவும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இனி நான் பேசப் போவதில் கொஞ்சம் சுய தம்பட்டம் ஒலிக்கலாம். அதற்காக முன்கூட்டியே உங்களிடம் மன்ன்னிப்புக் கோருகிறேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் காலச்சுவடு கண்ணன் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கியிருந்தார். மொழிபெயர்ப்பதற்குப் பொருத்தமான நபரைத் தேடிக் கொண்டுமிருந்தார். அந்தச் சமயத்தில் பெரியவர் ஞாலன் சுப்ரமணியன் எனக்கு அறிமுகமானர். அந்த அறிமுகமே சுவாரசியமானது. பாப்லோ நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பை வெளியிட்டிருந்தேன். உயிர்மை வெளியீடு. புத்தகம் வெளியாகி சில மாதங்கள் கழிந்த பிறகு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. பேசியவர் ஞாலன் சுப்ரமணியன்.கவிதை மொழி பெயர்ப்பு சிறப்பானதாக இருக்கிறது என்று பாராட்டினார். நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றார். நான் இருப்பது திருவனந்தபுரத்தில். அவர் சென்னையில். எனவே சென்னை வரும்போது சந்திக்கலாம் என்று தெரிவித்தேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு மாலை நேரம் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். பார்க்க வேண்டும்என்று சொன்னார்.

‘’நான் சென்னையில் இல்லையே சார் எப்படிப் பார்க்க?’’ என்று மரமண்டைத்தனமாகப் பதிலையும் சொன்னேன்.

‘’இல்ல தோழர் நான் இங்கே திருவனந்தபுரத்துலதான், ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஒரு லாட்ஜுல இருக்கேன். எங்கே வந்தா உங்களைப் பார்க்கலாம்’’என்று கேட்டார்.

’’இல்லை நானே வருகிறேன்’’ என்று அவர் குறிப்பிட்ட லாட்ஜுக்குப் போனேன்.

திருவனந்தபுரத்தில் ஏதாவது வேலையா வந்தீங்களா சார்?’’ என்று கேட்டேன்.

உங்களைப் பார்க்கிறது மட்டும்தான் ஒரே வேலை. அதுக்காகத்தான் வந்தேன்’’ என்றார்.

அவருக்கு ஒரு எழுபது எண்பது வயதாவது இருக்கும். ஆனால் என்னை விட உற்சாகவானாகவும் பரபரப்பானவராகவும் இருந்தார். யாரோ ஒருவன் அவனுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் செய்த மொழிபெயர்ப்பை வாசித்து விட்டு அவனைப் பார்க்கக் கைக்காசை செலவு செய்து ஆயிரம் கிலோமீட்டர் தாண்டிவந்திருக்கிறாரேகிறுக்கு முற்றிய கிழவராக இருப்பார் என்றுதான் முதலில் பட்டது. அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டபோது அது கிறுக்கல்ல; பேரார்வம் என்பது புரிந்தது. அவர் தோழர் ஜீவாவால் இடது சாரி இயக்கத்துக்குள் அழைத்து வரப்பட்டவர். முதலில் ரஷ்யாவிலும் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏதோ ஒன்றிலும் இருந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர். அந்த மொழியின் நவீன இலக்கியங்களுடன் ஓரளவு அறிமுகம் உள்ளவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சென்னையில் பாப்லோ நெரூதாவின் பெயரால் ஸ்பானிய மொழி கற்பிக்கும் பள்ளி ஒன்றையும் நடத்திக் கொண்டிருப்பவர். இந்தப் பின்னணியில் தான் மார்க்கேஸின் நாவலை அவரால் மொழிபெயர்க்க முடியும் என்று நினைத்தேன். அவரை நண்பர் கண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

 நாவல் மொழிபெயர்ப்புத் தொடங்கியது. நாவலின் முதல் அத்தியாயம் காலச் சுவடு இதழிலும் வெளியானது. சரியாக ஆறு அத்தியாயங்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்பு அதை வாசித்துப் பார்க்கும் பணி எனக்குத் தரப்பட்டது. அதை செம்மைப்படுத்தி வெளியிட முடிவு செய்தோம். ஆனால் ஏதோ காரணங்களால் ஞாலன் சுப்ரமணியத்தால் ஆறு அத்தியாயங்களைத் தாண்ட முடியவில்லை. அதற்குள் காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே மாற்று ஏற்பாடாகப் புதிய மொழிபெயர்ப்பாளரைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெவ்வேறு ஆட்களை அணுகினோம். தில்லியில் வாழும் ஸ்பானிய மொழி தெரிந்த தமிழ்ப் பெண் ஒருவரை அணுகிப் பார்த்தோம். அவருக்கு நவீனத் தமிழ் இலக்கியத்துடன் எந்தப் பரிச்சயமும் இல்லை. நவீன தமிழ் இலக்கியத் திலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் பரிச்சயமுள்ள ஒருவரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இதையெல்லாம் காதலிக்கு மாப்பிள்ளை பார்க்கிற மனநிலையில்தான் செய்து கொண்டிருந்தேன். அதைத் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ நண்பர் கண்ணன் பெருந்தன்மையாக நீங்களே பண்ணிடுங்கஎன்றார். அந்த வார்த்தை காதில் விழுந்த விநாடி நான் அடைந்த சிலிர்ப்பை விளக்கிச் சொல்வது கடினம். முப்பது வருடங்களாகச், சரியாகச் சொன்னால் 1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கண்ணன் சொல்லும்வரை மனதுக்குள் இருந்த கனவு அது.

வாசிப்பு தீவிரமாக மாறிய காலகட்டத்தில் தமிழில் கவனமாக வாசித்ததைப் போலவே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அறிமுகமான பெயர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மலையாளத்தில் சிறந்த நாவல்களில் ஒன்றான  ஓ.வி. விஜயனின் கசாக்கின்டெ இதிகாசம்லத்தீன் அமெரிக்க நாவலான One Hundred Years of Solitude’இன் சாயலில் எழுதப்பட்டது என்ற புரளி இலக்கிய வட்டங்களில் நிலவியது. அது அன்றைய இலக்கிய வாதிகள் நடுவே  விவாதமாக இருந்தது. அதில் மார்க்கேஸ் நாவலின் பகுதிகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. மாஜிக்கல் ரியலிசம் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருந்தது. இவை எல்லாம் உருவாக்கிய வாசகக் குறுகுறுப்பு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேட வைத்தது. அன்று - 70களின் இறுதியில் அல்லது 80களின் ஆரம்பத்தில் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைப்பது அரிது. அதுவும் இதுபோன்ற நவீன நூல்கள் எங்கள் ஊரான கோயம்புத்தூரில் உடனடியாகக் கிடைப்பது சிரமம். அன்றைக்கு எனக்குத் தெரிந்த ஒரே பதிப்பாளரான க்ரியா ராமகிருஷ்ணன் மூலம் அந்தப் புத்தகத்தின் பெங்குவின் பதிப்பு கிடைத்தது. தன்னுடைய நண்பரான பத்மநாப ஐயர் லண்டலிருந்து வாங்கி அனுப்பியதாகக் கொடுத்தார். அது ஒரு டிசம்பர் மாதக் கடைசி நாட்கள் என்பதும் சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிவடைய இருந்த நேரம் என்பதும் ஞாபகமிருக்கிறது. ஊருக்குப் போய் வாசிக்க ஆரம்பித்தேன். முதல் நாலு பக்கங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே நாற்பது முறை அகராதியைப் புரட்ட வேண்டியிருந்தது. அது ஒரு தொல்லை. ஆனால் கதையின் சுவாரசியம் அதைப் பொறுத்துக்கொள்ளச் செய்தது. இருந்த போதும் மூன்று அத்தியாயங்களுக்கு மேல் - அதுவே அறுபது பக்கங்களுக்கு மேல் வரும் - வாசிப்பைத் தொடர முடியவில்லை. அந்த ஆண்டு அக்டோபரில் மார்க்கேஸுக்கு நோபெல் இலக்கியப் பரிசு அளிக்கப்பட்டது. நோபெல் பரிசுகளின் வரலாற்றில் மிக அதிகம் இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்திய விருதுகளில் அதுவும் ஒன்று. 82க்கும் 84க்கும் இடையே கிட்டத்தட்ட மார்க்கேஸின் அதுவரையிலான படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் எல்லாம் பிக்கடோர் பதிப்புகளாகக் கிடைக்க ஆரம்பித்திருந்தன. நானும் அறுபத்தியோராவது பக்கத்திலிருந்து மீண்டும் தொடங்கி One Hundred Years of Solitude’ஐ வாசித்து முடித்தே விட்டேன். கிறிஸ்டோபர் கொலம்பஸுக்குப் பிறகு மனிதர்கள் நிரம்பிய புதிய உலகத்தைக் கண்டு பிடித்த அடுத்த ஆள் நான் தான் என்று கொஞ்சம் பெருமிதமாக உணர்ந்தேன். உண்மையில் நாவலின் பல பகுதிகள் அப்போது புரியவில்லை.

கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில் பகுதிகளாகவும் முழுமையாக வும் நான்கைந்து முறையாவது இந்த நாவலை வாசித்திருப்பேன். அப்போதும் முழுமையாகப் புரிந்ததில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் வரிக்குவரி நாவலைப் புரிந்துகொண்டது அதை மொழிபெயர்க்கத் தொடங்கியபோதுதான். இது இரண்டுச் செய்திகளை எனக்கு உணர்த்தியது. ஒரு படைப்பை நெருக்க மாகப் புரிந்துகொள்வதற்குச் சிறந்தவழி அதை மொழிபெயர்ப்பதுதான் என்பதை அனுபவமாகத் தெரிந்துக்கொண்டேன். இன்னொன்று வெறும் வாசகனாக ஒரு படைப்பை அணுகுகிறபோது கிடைக்கும் சலுகை. ஒரு வாசகன் பல பக்கங்களைப் புரட்டி வாசித்தும் ஒரு நாவலைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மொழிபெயர்ப்பாளனால், ஒரு வரியை ஒரு வார்த்தையைக் கூட விட்டுவிட முடியாது என்ற கட்டுப்பாட்டை அனுபவத்தில் உணர்ந்தேன்.

மார்க்கேஸின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான கிரகோரி ரபாஸா, தன்னுடைய நினைவுக் குறிப்புகளில் -  'If This Be Treason: Translation and Its Dyscontents' என்ற குறிப்புகளில் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது ஒரு மொழி பெயர்ப்பாளனும் எழுத்தாளன்தான். அவன் முன்னால் கதைக்கான களன், பாத்திரங்கள், சம்பவம் எல்லாம் அப்படியப்படியே இருக்கின்றன. அவன் செய்ய வேண்டியது அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து அதை எழுதி முடிப்பதுதான்.இந்த மொழிபெயர்ப்பை அப்படித்தான் செய்திருப்பதாக நம்புகிறேன்.

நாவலைப் புரியாமல் வாசித்த காலத்திலேயே ஒரு சாகசத்தையும் செய்தி ருக்கிறேன். மார்க்கேஸுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. அதையொட்டி கோவை வானொலி நிலையத்தின் இலக்கிய நிகழ்ச்சியொன்றில்
 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலைப் பற்றி ஓர் உரை கூட நிகழ்த்தினேன்.  சென்னை வானொலி நிலைய இயக்குநராக இருந்து மிக அண்மையில் பணி ஓய்வு பெற்ற நண்பர் ஜே. கமலநாதன் தான் அந்தச் சாகசத்துக்குத் தூண்டுதலாக இருந்தார். எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் எழுத, வாசிக்க வந்த எல்லாரிடமும் மார்க்கேஸ் எழுத்துகள் மீதான பிரியமும் பாதிப்பும் இருந்தன என்று சொல்ல முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ப் புனைகதையை ஒவ்வொரு பிறமொழி எழுத்தாளர்கள் பாதித்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் காலம் முதல் இன்றுவரை இந்தப் பாதிப்பின் சாயல்களைப் பார்க்கலாம். மாப்பசான், ஓஹென்றி, ஆன்டன் செகாவ், டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜாய்ஸ், காஃப்கா என்று பலர். இந்த வரிசையில் பரவலாக வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட, மொழி பெயர்க்கப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்தான் என்று தோன்றுகிறது. மார்க்கேஸின் சாயலையொட்டி அவர் முன்வைத்த மாந்திரீக எதார்த்தவாதம்என்ற போக்கையொட்டித் தமிழில் நிறையவே  எழுதப் பட்டிருக்கின்றன. தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’  முதல் பா. வெங்கடேசனின் தாண்டவராயன் கதைவரையிலான நாவல்கள், ஜெயமோகனின் டார்த்தீனியம்என்ற குறுநாவல், தமிழ்ச்செல்வனின் வாளின் தனிமை’, விமலாதித்த மாமல்லனின் சிறுமி கொண்டுவந்த மலர்’ ‘உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தைமுதல் கோணங்கி எழுதிவரும் கதைகள், நாவல்கள் வரை - இவை உடனடி உதாரணங்கள்-  மார்க்கேஸின் பாதிப்பு அல்லது மாஜிக்கல் ரியலிசத்தின் பாதிப்பு தென்படுகின்றன. இதன் பொருள் இவர்கள் எல்லாம் இடதுகையில் மார்க்கேஸின் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு வலது கையால் தங்களது கதைகளை எழுதினார்கள் என்பது அல்ல. ஒட்டுமொத்தமாக உலக இலக்கியத்தைப் பாதித்த ஒரு போக்கின் விளைவை - அதிர்வை - வாசிப்பின் மூலமோ வாசித்தவர்கள் சொல்லக் கேட்டதன் மூலமோ பிரதிபலித்திருக்கிறார்கள் என்பதுதான். கொஞ்சம் விரிவாக யோசித்தால் மார்க்கேஸின் பாதிப்பு இல்லாமலிருந்தால் சல்மான் ரஷ்டியின் ‘Midnight’s Children’,  அருந்ததி ராயின் ‘God of small things’  போன்ற நாவல்களின் கதையாடலும் வடிவமும் வேறாக அமைந்திருக்கும் என்பது என் யூகம்.
மாஜிக்கல் ரியலிசம்என்பது மார்க்கேஸின் கண்டுபிடிப்பல்ல. லத்தீன் அமெரிக்கப் புனைகதையில் அவருக்கு முன்பே கையாளப்பட்டுவந்த போக்கு. அதைத் தனது அனுபவங்களால் மார்க்கேஸ் செழுமைப் படுத்தினார். அவரே ஒரு பேட்டியில் சொன்னார். என்னுடைய எழுத்தில் மாந்திரீக எதார்த்தம் என்று ஒன்றைப் பற்றிச் சொல்கிறார்கள். அப்படி ஒன்றை நான் உணர்ந்ததே இல்லை. கரீபியப் பகுதியில் வாழ்க்கையில் தட்டுப்படும் அன்றாட எதார்த்தங்கள் வெளியில் இருப்பவர்களுக்கு மாயத்தன்மை கொண்டதாகத் தெரிகிறது.மற்றவர்களின் மாய எழுத்தில் வாசகனை வசீகரிக்கும் மாயத் தன்மைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோது மார்க்கேஸ் தனது எழுத்துகளில் அந்த மாயத்தன்மையின் அடிப்படையான எதார்த்தத்தை மறைக்காமல் இருந்தார். இந்த நாவலின் ஒரு பாத்திரமான அழகி ரெமேதியோஸ் ஒரு பிற்பகல் நேரம் காயப்போட்டிருக்கும் படுக்கை விரிப்புகளுடன் அந்தரத்தில் எழும்பி உயிரோடும் உடலோடும் நேரடியாக சொர்க்கத்துக்குப் போகிறாள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு பாத்திரமான பெர்னாண்டா கடவுளிடம் பிரார்த்திக்கிறாள். விலை உயர்ந்த அந்த விரிப்புகளைத் திரும்பக் கொடுக்க வேண்டும்என்றுதான். இந்தத் தெளிவுநிலை -  lucidity தான் மார்க்கேஸை முக்கியமானவராக்கியது. தமிழில் எழுதப்பட்ட மாஜிக் ரியலிச எழுத்துகளில் பெரும்பான்மை யானவற்றில் புரிந்துக்கொள்ளப்படாமல் விடப்பட்ட அம்சம் இதுதான்.
இந்த மாயக்கூறுதான் மேற்கத்திய வாசகர்களையும் நம்மைப் போன்ற கீழைத்தேய வாசகர்களையும் கவர்ந்தது. மார்க்கேஸை அபிமான எழுத்தாளர் ஆக்கியது. மேற்கத்திய வாசகர்களுக்கு புதிய கதையைச் சொன்னதால். கிழக்கத்திய வாசகர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் பார்க்கும் காட்சி களைப் புனைவில் வெளிப்படுத்திய நெருக்கத்தினால். நாவலிலிருந்து ஒரு காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மகோந்தா நகரத்தை உருவாக்கிய ஹோஸே அர்க்காதியோ புயேந்தியா, தனது ஆராய்ச்சிகளால் பைத்தியம் முற்றி வீட்டு முற்றத்தில் மரத்தடியில் கட்டப்பட்டுக் கிடக்கிறார். இந்த உலக நினைவே இல்லாத அவர் இருந்த இடத்திலேயே கழித்த மலத்தை மனைவி உர்சுலா மண்ணைப்போட்டு மூடி மண்வெட்டியால் அள்ளி வீசுகிறாள். இப்படியான காட்சியை நாம் வியந்து பாராட்டும் எந்த மேற்கத்திய நாவலிலும் பார்ப்பது அரிது. ஆனால் ஓர் இந்திய நாவலில் - அல்லது தமிழ்நாவலில் - இதை மிக எதார்த் தமானதாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். மேற்கத்திய Sophisticationக்குப் பதிலாக இயல்பான வெகுளித்தனம் மிளிர்வதுதான் மார்க்கேஸ் நமக்கு நெருக்கமானவராகத் தெரியக் காரணம். அண்மைக் காலத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துகளும் அவருடையதாக இருக்கக் காரணமும் இந்த நெருக்கம்தான். இத்தனை இணக்கமான ஓர் எழுத்து தமிழுக்கு அதிகாரபூர்வமாக இப்போது தான் வாய்த்திருக்கிறது என்பது விந்தையாகவே தோன்றுகிறது.

இந்த மொழிபெயர்ப்பு தொடர்பாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல; நூறு விழுக்காடு பொருத்த மானதும் அல்ல. இதை அண்மையில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். மலையாளக் கவிஞரான வினயசந்திரனின் மறைவையொட்டி நான் ஒரு அஞ்சலிக் குறிப்பை - மாத்ருபூமி வாரஇதழில் எழுதியிருந்தேன், மலையாளத்தில். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரான தோழர் வானமாமலை அதைத் தமிழாக்கம் செய்து சங்கத்தின் இதழான கேரளத் தமிழில்வெளியிட்டிருந்தார். அதே கட்டுரையை நானும் தமிழில் எழுதி காலச்சுவடு இதழிலும் வெளியிட்டேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த போது வியப்பாக இருந்தது. இரண்டும் வெவ்வேறு தமிழ் வடிவங்களிலி ருந்தன. இரண்டிலும் குறிப்பிடப்படும் சம்பவங்களும் பெயர்களும் உரையாடல் களும் எல்லாமும் ஒன்றாகவே இருந்தபோதும் வேறுவேறாகவே தென்பட்டன. அது ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியது. மொழிபெயர்ப்பில் மூலத்தைச் சார்ந்து வலுவான நம்பகத் தன்மையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை உணரவைத்தது. தனிமையின் நூறு ஆண்டுகளில் நான் பின்பற்றி யிருக்கும் முதலாவது விதி இந்த நம்பகத் தன்மையை உருவாக்கியது தான். அதை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளை மார்க்கேஸே அவரது இதர படைப்புகள் மூலம் வழங்கினார். இந்த நாவலுடன் தொடர்பு டையவையாகவே, இந்த நாவலுக்கு முன்னும் பின்னுமாக எழுதிய கதைகளில் அதைச் செய்திருந்தார். தனிமையின் நூறு ஆண்டுகளில்வரும் கர்னல் அவுரேலியானோ புயேந்தியா கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவ தில்லை, குறுநாவலில் வருகிறார். ரியோஹாச்சா என்ற இடத்திலிருந்து வாடிகனுக்குப் போப் ஆண்டவரைப் பார்க்கச் செல்லும் பயணம்விநோத புனிதயாத்திரிகர்கள் தொகுப்பின் சிறுகதை ஒன்றில் இடம் பெறுகிறது. இந்த அம்சங்கள் மொழிபெயர்ப்பில் நம்பகத்தன்மையை உருவாக்க உதவின.

ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு நடையைக் கோருகின்றன. மூலத்துக்கு வரிவரியாக ஒத்துப்போகும் நடை, ஆசிரியனுக்கு விசுவசமாக இருக்கும் நடை, என்று. இந்த நாவல் வலியுறுத்தியது கதையாடலை மட்டும் முன்னிருந்தும் நடையை அல்ல; அதற்குள் இருக்கும் துணைப் பிரதிகளையும் மேªலுழுவதற்கு உதவும் நடையை. எனவே வரிக்கு வரியாள மொழிபெயர்ப்பு நடையோ கதையாடலே முன் நகர்த்தும் நடையோ இதில் பயன்படுத்த வில்லை. கருத்தையும், உணர்வுகளையும் முதன்மைப்படுத்தும் நடையையே பயன்படுத்த நேர்ந்தது. மார்க்கேஸை மார்க்கேஸாக அடையாளப்படுத்தும் நடையை.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸே மூன்று தனித்தனி நடைகளில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஒன்று டான்குவிக்ஸோட்எழுதிய செர்வான்டிஸின் செவ்வியல் நடை. தனிமையின் நூறு ஆண்டுகள்நாவலைப் பற்றிச் சொல்லப்பட்ட மிக உயர்வான மதிப்புரை பாப்லோ நெரூதா – செர்வான்டிஸூக்குப் பிறகு ஸ்பானிய மொழி தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பது இந்த நாவலில்தான் - சொன்னதுதான். பைபிளின் சாயலுள்ள நடை, இரண்டாவது. நாவலில் இடம் பெறும் சமகாலத் தன்மையுள்ள நிகழ்வுகளில் பத்திரிகையாளனின் துல்லியமான நடை. இந்த மூன்றையும் தான் பிறந்து வளர்ந்த கொலம்பியக் கிராமமான அரக்காடாக்கா வட்டார வழக்குடன் இணைந்த தனது உணர்வுகளுடன் கலந்து உருவாக்கிய நடையில்தான் மார்க்கேஸ் எழுதியிருக்கிறார். ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். அமரந்தா உர்சுலா என்ற பாத்திரம் பிரஸ்ஸெல்லில் படிப்பு முடித்து கணவன் காஸ்ட்டனுடன் மகோந்தா திரும்புகிறாள். அவர் கொண்டுவந்திருக்கும் பொருட்களில் ஒன்றின் பெயர் Velocipede. வேறு எதுவும் இல்லை. சைக்கிள்தான். அரக்காடாகா வழக்குச் சொல் அது.

நாவலை நீங்களே வாசிக்கவிருப்பதால் அதன் கதைப் போக்கைப் பற்றியோ அதிலுள்ள வரலாற்றுப் பின்னணி இலக்கிய மேன்மைகள் பற்றியோ பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் எழுதப்பட்டவற்றில் மிகச் சிறந்த நாவல்என்று சல்மான் ரஷ்டி குறிப்பிட்டிருப்பது பொருத்தமான மதிப்பீடுதான்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸை விடவும் அவரது சமகாலத்தவரான ஜார்ஜ் லூயி போர்ஹேயின் எழுத்துகள் அறிவார்ந்த தர்க்கங்கள் நிரம்பியவை. மார்க்கேஸின் நாவல்களை விட கார்லோஸ் புயெந்திஸின் படைப்புகள் இன்னும் வசீகரமானவை. மார்க்கேஸின் கதையாடலை விட மரியா வர்கஸ் யோஸாவின் கதையாடலில் அரசியல் உள்ளோட்டங்கள் அதிகம். இவை அனைத்தையும் கடந்து எல்லா மொழிகளிலும் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அந்தந்த மொழியின் எழுத்தாளராக சொந்தம் கொண்டாடப் படுவதன் காரணம்: அவர் எழுத்து இவை எல்லாவற்றையும் விட மானிடத் தன்மை மிகுந்தது more human என்பதுதான். மனிதச் சிக்கல்களை கலையின் வெகுளித்தனத்துடன் சொன்ன நாவல் தனிமையின் நூறு ஆண்டுகள்என்பதுதான் மார்க்கேஸை நிகரற்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

மொழிபெயர்ப்புகளைப் பற்றி பீட்டர் ஹெச் ஸ்டோனுடன் நடத்திய நேர்காணலில் மார்க்கேஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். நான் எனக்கு விருப்பமான புத்தகங்களை அந்நிய மொழியில் வாசிக்க விரும்பவில்லை. காரணம், நான் மிக நெருக்கமாக உணர்வது ஸ்பானிய மொழியில்தான்.காப்ரியேல் கார்சியா மார்க்கேஸை ஒரு தமிழ் வாசகன் தனக்கு நெருக்கமாக உணர்ந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு துணை செய்யுமானால் முப்பது ஆண்டுகள் கனவுகண்ட இலக்கியக் காதல் பலித்துவிட்டதாகக் கருதுவேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. 


காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்நாவலின் தமிழாக்கத்தின் வெளியீட்டு விழா சென்னையில் ‘டிஸ்கவரி புக்பேலசில்கடந்த ஜூன் 30 அன்று மாலை நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை இது. புகைப்படத்தில் நூலை வெளியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் விஜயசங்கர், பெற்றுக் கொண்ட ஜி.குப்புசாமி ஆகியோருடன் நானும்.

2 கருத்துகள்:

  1. மிக இயல்பான, நேர்த்தியான பேச்சு! மொழி பெயர்ப்பு மிகச் சரளமாக இருக்கிறது. ஆங்கில மொழி பெயர்ப்பில் படிக்கும் போதிருந்ததை விட நாவலுக்கு மிக நெருக்கமாக உணர வைக்கிறது. பாராட்டத்தக்க வெற்றி. சந்தேகமின்றி, இது ஒரு 'Lifetime achievement' சுகுமாரன்! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு