புதன், 24 ஜூலை, 2013

அப்பாவின் வாசனை


அப்பா காலமானபோது எனக்கு வயது நாற்பத்து மூன்று. அவருக்கு அறுபத்து ஐந்து தாண்டியிருக்கலாம்.உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஒன்றிண்டு வயது குறைவாகவும் இருக்கலாம். அப்பாவின் வயதை நிர்ணயிக்க உதவும் ஆதாரம் எதுமில்லை. அவருக்கு ஜாதகம் எழுதப்பட்டிருக்கவில்லை. அலுவலகப் பதிவேட்டில் கொடுத்திருந்த வயதும் சரியானதல்ல. வேலைக்குச் சேர்ந்த போது  தோற்றம் சின்னப் பையனுடையதாக  இருந்ததால் வயதைக் கூட்டிச் சொன்னார்களாம். அதனால் நிர்ணயிக்கப் பட்டதற்கு ஓரிரு வருடங்கள் முன்பே பணிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே அப்பாவுக்கு இருந்திருக்கிறது.

அப்பாவின் ஆயுளில் நாற்பத்து மூன்று வருடங்கள் எங்கள் இருவருக்கும் பொது. அப்படியும் சொல்ல முடியாது. பிறந்த ஓராண்டுக்குள் அப்பாவின் சகோதரியால் எடுத்துச் செல்லப்பட்டு எட்டு வயதுவரை அவர்கள் பராமரிப்பில் வளர்ந்தேன்.அந்த எட்டு வருடங்களைக் கழித்தால் அப்பாவுக்கும் எனக்கும் இருந்த அணுக்கத்தின் வயது முப்பத்தைந்து மட்டுமே.

இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஐந்து அல்லது ஆறு முறை, இல்லை யில்லை சரியாக ஆறு தடவைகள் அவரைத் தொட்டிருக்கிறேன். தற்செயலாகப் பட்டுக்கொண்டதோ  அவர்  சுய நினைவுடன்  இல்லாதபோது ஸ்பரிசிக்க நேர்ந்ததோ அடிக்க வந்தபோது தடுத்துக் கொண்டதோ மனம் ஒப்பித் தொட்டது ஆகாதே. 'சின்னக் குழந்தையாக இருந்தபோது கூட அவர் என்னைத் தொட்டது இல்லையா?' என்று அம்மாவிடம் ஒருமுறை கேட்டிருக்கிறேன். 'இல்லை, அவருக்குச் சின்னக் குழந்தையை எப்படித் தூக்குவது என்று தெரியாது' என்றாள் அம்மா. என்னுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு புத்தாண்டு நள்ளிரவில் எனக்குத்  தம்பி பிறந்தான். அம்மாவுக்குத் துணையாக மருத்துவமனைக்கு வந்திருந்த ராஜம்மாவின் கையிலிருந்து அழுக்குப் பஞ்சில் செய்த பூப்போலிருந்த குட்டி ஜீவனை நூறு பிரசவங்கள் பார்த்த தாதியின் லாகவத்துடன் கைகளில் வாங்கினேன். எட்ட நின்றிருந்த அப்பா கிணற்றுக்குள் பார்ப்பதுபோல அதை எட்டிப் பார்த்தார். அமுதக் கலசத்தை அலுங்காமல் கையில் வைத்திருக்கும் கர்வத்துடன் அப்பாவின் முகத்தையும் பார்த்தேன். என்னைத் தீண்ட மறந்ததைச் சுட்டிக் காட்டும் இனிய பழிவாங்கல் அந்தப் பார்வை.

முதல்முறையாக அப்பாவைத் தொட்டது எந்த வயதில் என்பது ஞாபக மில்லை. ஆனால் அந்த நாளின் காட்சியும் வாசனையும் இன்றும் நினைவில் இருக்கின்றன.

அன்றைக்கு அத்தை வீட்டிலிருந்து வந்திருக்கிறேன். அப்பா வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். வாசலில்சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போடும் ஓசை கேட்டதும் ஓடிப் போய்ப் படியேறி வரும் அப்பாவைக் கட்டிக் கொள்கிறேன். அவர் உதறிப் போட்ட செருப்புகளில் கால்களை நுழைந்துக் கொள்கிறேன். டயர் அடிப்பாகமுள்ள காலணிகளை இழுத்துக்கொண்டு நடந்து என் முகத்தை அவருடைய வயிற்றில் பதித்துக் கொள்கிறேன். இரண்டு கைகளாலும் அவருடைய இடுப்பை வளைத்துக் கட்டிக் கொள்கிறேன். அப்பா  அரை டிரவுசர்போட்டிருக்கிறார். அப்போதெல்லாம் ஒயர்மென்னின் சீருடை காக்கிச் சட்டை; காக்கி அரை டிரவுசர். பின் இடுப்புப் பக்கத்தில் பெல்ட்டில் சொருகி யிருக்கிற கட்டிங் ப்ளையர் கையில் நெருடுகிறது.  அதன் வெளியே துருத்தி யிருக்கும் பிடியை ஒருமுறை அழுத்துகிறேன்.டிரவுசருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு பிடி அப்பாவின் உடம்பை அழுத்தியிருக்க வேண்டும். அவர் அதை உருவி எடுத்து வலது கையில் பிடித்துக் கொள்கிறார். இடது கையால் அவருடைய இடுப்பில் கோர்த்திருக்கும் என் கைகைகளைப் பிரித்து என்னைத் திருப்பி நிறுத்துகிறார். நான் அவர் கையை விடாமலிருந்தேனா அல்லது அவர் என் வலது கையைப் பிடித்திருந்தாரா? தெரியவில்லை. தூக்கிய கையுடன் கால்களை அகட்டி வைத்துப் பெரிய செருப்புகளை இழுத்தபடி 'தத்தக்கா புத்தக்கா' என்று நடந்து வீட்டுக்குள் நுழைகிறேன்.

அந்த முதல் நெருக்கத்தில் அப்பாவிடமிருந்து வெவ்வேறு வாசனைகள் வீசியதை முகர்ந்தேன். சற்று முன்புதான் சலூனுக்குப்போய்ச் சவரம் செய்திருப்பார்போல. அவர்மேல் படிக்காரமும் மரிக் கொழுந்தும் கலந்த மணம் தங்கியிருந்தது. வியர்வையின் இளநீர் வாடையும் காக்கி உடைகளின் துவர்ப்பான கஞ்சி வாடையும் இருந்தன.கட்டிங் ப்ளையரை வைத்திருந்ததால் இரும்பின் நெடி இருந்தது. எல்லாவற்றையும் மிஞ்சி  சிகரெட் வாசனையும் இருந்தது. அந்த வாசனைக் கூட்டணி எனக்குப் பிடித்திருந்தது. அப்பாவையும் பிடித்திருந்தது. எல்லா அப்பாக்களும் இது போன்ற கலவைவாசனையுடன் தான் இருப்பார்கள் என்பது பிள்ளைப்பருவ ஞானமாக இருந்தது. அப்பாவுக்குச் சுயமாகச் சவரம் செய்து கொள்ளத் தெரியாது என்பது அந்த ஞானத்தில் வாய்த்த இன்னொரு தகவல். அப்பாவுடனிருந்த நாட்களில் ஒருநாள்கூட அவராக முகம் மழித்துக் கொள்வதைப் பார்த்ததில்லை. நான் வயதுக்கு வந்த பிறகுதான் ஷேவிங் செட் உருப்படிகள் வீட்டுக்கு வந்தன. ஒருமுறையாவது அப்பாவுக்கு முகம் மழித்து விடவேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர் முகத்திலிருந்து யூடிகொலேனோ டெட்டாலோ வாசனையடிப்பதாகப் பல நாட்கள் கற்பனை செய்திருக்கிறேன்.

இனி அத்தை வீட்டிலிருப்பதில்லை என்ற முடிவுடன் பிறந்த வீட்டுக்கே வந்தபோது அப்பா நெருக்கமாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி அமையவில்லை. அப்பாவின் உலகத்துக்கு வெளியில்தான் எனக்கு இடமிருந்தது. அந்த உலகத்தின் வாசலில் எப்போதாவது எட்டிப் பார்க்கும் போது ''என்னடா, என்ன வேணும்?'' என்று கேட்பதைத் தவிர அவருக்கு என்னுடன் பேச எதுவும் இல்லாமலிருந்தது. எனக்குப் பின்னால் பிறந்த உடன்பிறப்புகள் உல்லாசமாக நடமாடிய அந்த உலகம் எனக்கு மட்டும் அடைக்கப்பட்டதாக இருந்தது. அதற்குள் நுழைய எனக்குக் கடைசிவரை அனுமதி  கிடைக்கவே இல்லை.

சம்பள நாளில் அப்பாவின் வாசனை வேறாக இருக்கும். அந்த மணமுள்ள அப்பாவுக்காகக் காத்திருப்பது ஆனந்தமாக இருக்கும். வரும்போதே நகரத்தின் பிரசித்தி பெற்ற அசைவ உணவகத்திலிருந்து பிரியாணிப் பொட்டலங்களை வாங்கி வருவார். சைக்கிளின் ஹாண்டில்பாரில் மாட்டியிருக்கும் பையை எடுத்துக் கொண்டு உள்ளே வந்ததும் வீடேமசாலா வாசனையை முகர்ந்து  விடைத்துக் கொள்ளும். ஒவ்வொரு பொட்டலமாக எடுத்துப் பிரித்து பரப்பி வைப்பார்.எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்குவோம். அப்பா தன் பங்கு பிரியாணியிலிருந்து இறைச்சித் துண்டுகளைத் தேடி எடுத்து தங்கைக்கு ஊட்டுவார். அவள் அதை மென்று விழுங்கும்வரை அவருடைய கை அவள் முகத்துக்கு அருகிலேயே இருக்கும். அப்பாவுக்கு நீளமான விரல்கள். அதில் ஆள் காட்டி விரல் நகம் மட்டும் பறவையின் அலகுபோலக் கூர்ந்து நீண்டிருக்கும். வேலை செய்யும்போது ஏற்பட்ட சின்ன விபத்தில் அடிபட்டு அந்த விரல் பறவையாகிருந்தது. கை நீண்டிருக்கும்போது குஞ்சுக்கு உணவூட்டும் பறவையின் தலைபோல இருக்கும். நானும் வாயைப் பிளந்து கொண்டிருப்பேன். அடுத்த ஊட்டல் எனக்குத்தான் என்று நாக்கில் எச்சில் சுரந்து கொண்டிருக்கும். ஆனால் ஒருபோதும் பறவைத்தலை என்னை நோக்கித் திரும்பியதில்லை. எச்சிலை விழிங்கிக் கொண்டு தின்று தீர்ப்பேன்.
ஒருமுறை பிரியாணி தினத்தில் தங்கையை நோக்கி நீண்ட அப்பாவின் கையை வலிந்து என் பக்கமாகத் திருப்பி இறைச்சித் துண்டைக் கவ்விக் கொண்டேன். அந்தத் துண்டுக்கு என்னுடைய இலையில் இருந்த 'சீஞ்சிக் காயை' விட அலாதியான ருசியும் மணமும் இருந்தது. அப்பா அதிர்ந்துபோய் முறைத்துப் பார்த்தார். கையை உதறினார். 'ஏன் நீயாக எடுத்துச் சாப்பிட மாட்டியா?'' என்று கேட்டார். அதுதான் இரண்டாம் முறையாக அவரைத் தொட்ட ஞாபகம்.

ஒன்றிரண்டு சம்பள நாள்களுக்குப் பிறகு அசைவ உணவைச் சாப்பிட மாட்டேன் என்று விரதமிருக்கத்தொடங்கினேன். தொடர்ந்து சில வருடங்கள் சாக பட்சணியாகவே இருந்தேன். அப்பாவின் வாசனையே இல்லாம லிருந்தேன். அதுபோன்ற ஏதோ ஒரு தருணத்தில்தான் அப்பாவிடமிருந்து விலகத் தொடங்கினேன். அவர் இருக்குமிடத்தில் நான் இல்லாமலிருக்கும் படிப் பார்த்துக் கொண்டேன். அவர் முன்னறையில் இருந்தால் நான் புழக்கடையில். அவர் வீட்டிலிருந்தால் நான் வெளியில்.

1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முப்பதாம் தேதிக்குப் பிறகு அப்பாவின் வாசனை மாறத் தொடங்கியது. தமிழ் நாட்டில் மது விலக்கு நீக்கப்பட்டது அன்றிலிருந்துதான்.

ஆரம்பத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ வருடத்துக்கு ஒரு தடவையோ அப்பாவிடமிருந்து நொதித்த பழங்களின் வாடை வீசத் தொடங்கியது. 'அது வேறொன்றுமில்லை, வயிற்று வலிக்காகச் சாப்பிடுகிற கஷாயம்' என்று விளக்கம் சொன்னாள் அம்மா.  சில வருடங்களுக்குப் பிறகு அந்த வாசனை வீடு முழுக்கத் தேங்கி நின்றது. அதே வாசனையுடன் பள்ளிக் கூடத்துக்கு எஸ் எஸ் எல் சி புத்தகத்தில் கையெழுத்துப்போட அப்பா வந்தார். பள்ளி அலுவலக அறைக்குள் அப்பாவின் வாடை பரவியது. நடுங்கும் கையால் அப்பா கையெழுத்துப் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அப்பாவின் நண்பரும் பள்ளியின் எலெக்ட்ரீஷியனும் பியூனுமானவர் கேட்டார் '' ஒங்க அப்பா எப்போடா கருணாநிதி கட்சியிலே சேர்ந்தார்?'முதலில் புரியவில்லை. அப்பா கம்யூனிஸ்ட் கட்சியாச்சேஅவர் எப்போது திமுகவில் சேர்ந்தார் என்று குழம்பினேன். அப்பா இனிஷியலில்லாமல்தான் கையெழுத்துப் போட்டார். இனிஷியலையும் போடச் சொன்னேன். அவருடைய விரல்கள் அவருடைய இனிஷியலை மறந்திருந்தன. உதவித் தலைமை ஆசிரியரோ அலுவலகப் பணியாளர்களோ கவனிக்காத நொடியில் அவர் போட்ட கையொப்பத்துக்கு முன்னால் நானே அப்பாவின் இனிஷியலைப் போட்டேன்.

சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து சைக்கிளை வெளியே எடுக்க அப்பா தடுமாறினார்.  உதவி செய்யத் தோன்றாமல் பக்கத்திலேயே நின்றிருந்தேன். அவருடைய நிலையை பள்ளித் தோழர்கள் பார்த்து விடக் கூடாது என்று பயமாக இருந்தது.சைக்கிளை எடுத்து வாசலை நோக்கித் தள்ளத் தொடங்கிய போது மெதுவாகச் சொன்னேன் '' நீங்க இப்பிடி வந்திருக்க வேண்டாம்'' அப்பா  உணர்ச்சியற்ற குரலில் '' எப்பிடி வந்தாலும் நான் உன் தகப்பன் தானே'' என்றார். இடது ஹாண்டில் பாரைப் பிடித்திருந்த அவர் கையை  உணர்ச்சி ததும்பத் தொட்டேன். சில நொடிகளுக்குப் பிறகு அழுகையை அடக்கிக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடினேன்.

பள்ளிப் படிப்பு முடிந்தது. கல்லூரிக் காலத்தில் ஒருநாள் முன்னாள் ஆசிரியரைப் பார்க்கப் போனேன். பார்த்துப் பேசி முடித்து வெளியே வரும் போது அப்பாவின் நண்பர் தென்பட்டார். பார்த்ததும் விசாரித்தார்-'"அழ்ப்பா சவுழ்க்கியமாழா '' . அவரும் கருணாநிதியின் வலையில் வீழ்ந்திருந்தார் என்பதை வன்மத்தோடு ரசித்தேன். சிறப்பு '' கரம் வழக்கொழிந்து போய் விடாமலிருக்கவும்தான் மதுவிலக்கு ரத்துச் செய்யப்பட்டது என்ற உண்மை அன்று புலப்பட்டது.

அப்பாவுக்கு நகராட்சி மின்சாரத் துறையில் கம்பியாளர் வேலை. அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் பணியாற்றினால் போதும். ஆனால் அப்பாவுக்கு வேறு பணிகளும் இருந்தன. அவர் தேர்ந்த கேபிள் ஜாயிண்டர். தலைக்கு மேலே போகும் கம்பிகளல்லாமல் மண்ணுக்குள்ளே போகும் கம்பி வடங்களை இணைப்பதில் நிபுணர். நகரத்தில் எங்காவது கேபிள் ஜாயிண்ட் பழுதுபட்டால் அப்பாவுக்கு அழைப்பு வரும். போனால் இரண்டு மூன்று நாட்கள் வீட்டுக்கு வரமாட்டார். ஒருமுறை அப்படிப் போனவர் நாலைந்து நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவே  இல்லை. இரண்டு நாள் பொறுத்த அம்மா மூன்றாம் நாளிருந்து அலுவலகத்தில் விசாரித்து எங்கே என்று போய்ப் பார்க்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். வந்து விடுவார் என்று சமாதானப்படுத்தி இரண்டு நாட்களைக் கடத்தினேன். பிறகு அம்மாவின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அரை மனசுடன் சம்மதித்தேன். அலுவலகத்தில் விசாரித்து இடத்தைத் தெரிந்து கொண்டேன். அரை அடி உயரத் தூக்குப் போசியில் சோற்றையும் மீன் குழம்பையும் அடைத்துக் கொடுத்தாள் அம்மா. அதை எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏற வெட்கமாக இருந்தது. நடந்தே போனேன்.  வீட்டிலிருந்து ஐந்தாறு கிலோ மீட்டர் தாண்டியிருக்கும் இடத்தில் பெரிய டிரான்ஸ்பார்மர் அருகில் அப்பாவின் குழு கூடாரம் போட்டிருந்தது. அருகிலேயே இன்னும் ஒன்றிரண்டு கூடாரங்கள். பார்த்ததும் தெரிந்தது கூடை, முறம் பின்னுகிறவர்களின் தற்காலிக ஜாகை. அப்பாவின் சைக்கிள் கூடாரத்தை இழுத்துக் கட்டிய கயிற்றையொட்டி நின்றிருந்தது. ஆடி மாதக் காற்று பாயந்து கூடாரம் ஆடியதில் கயிறும் சேர்ந்து ஆடி சைக்கிளின் ஹாண்டில்பாரை அசைத்தது. நானும் குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக் கொள்ள உதவிய சைக்கிள் ஆச்சே. என்னை வரவேற்கத் தான் அந்தத் தலையாட்டல்.

அப்பாவுக்குத்தான் வரவேற்கத் தோன்றவில்லை. ''வேலைக்காக வந்திருக்கிறேன். முடிந்ததும் வரமாட்டேனா? அதற்குள் ஏன் தேடி வந்தாய்?'' என்றார். நான் மௌனமாக இருந்தேன். கூடாரத்துக்குள் பார்த்தேன். வேலை எல்லாம் முடிந்து ஏறக் கட்டி வைத்திருந்தது. கொண்டு போன சாப்பாட்டை அப்பா பாதி சாப்பிட்டார். மிச்சத்தை கூடைமுடையும் பெண் ஒருத்தியிடம் எடுத்துப் போகச் சொன்னார். அவள் வந்து 'இது யாரு ஒங்க பையனா?' என்று  என் நெற்றி முடியைக் கலைத்து விட்டுப் போனாள். 'தே கண்ணு இங்க பாரு ஒரு அண்ணன் வந்திருக்கு' என்ற குரல் கூடாரத்துக்குளிருந்து வெளியேறும் முன் அழுக்குப் பாவாடை மட்டும் அணிந்த  மூன்று வயது மாநிறக் குழந்தை அருகில் வந்தது. நெருங்கி நின்று பார்த்தது. அதன் உடம்பிலிருந்து மரிக்கொழுந்து வாசனை துளைப்பதுபோல வீசியது. எப்படி வந்தேன் என்று கேட்டார் அப்பா. நடந்து வந்ததைச் சொன்னேன். 'இந்த வேகாத வெயிலில் ஏன் நடந்து வந்தாய்? பஸ்ஸில் வருவதற்கென்ன?' நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். அப்பா லேசாகச் சிரித்தார். 'பாத்திரத்தை நான் கொண்டு வருகிறேன். நீ பஸ்ஸிலேயே போ. சாயங்காலம் வந்து விடுவேன்' என்றார். வலது கையில் சோற்று மிச்சம் காய்ந்து கொண்டிருக்க இடது கையால் பனியனுக்குள் துளாவி முதலில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தார். 'அம்மாவிடம் கொடுத்து விடு' என்று நீட்டினார். யோசித்து மறுபடியும் பனியனுக்குள் கைவிட்டு பத்து ரூபாய் நோட்டுகள் இரண்டை எடுத்து நீட்டினார். இதை பஸ்ஸுக்கு வைத்துக் கொள்'. அது பேருந்துக் கட்டணத்தை விடப் பத்து மடங்கு அதிகம். ரூபாய்த் தாள்களை வாங்கிச் சட்டைப்பைக்குள் வைத்தபோது அவற்றிலும் மரிக் கொழுந்து வாசமடித்தது.

வீட்டில் அம்மா இல்லாத ஒரு நாள். நானும் பெரிய தங்கையும் இருந்தோம். வேலைக்குப் போயிருந்த அப்பா அரை நாளிலேயே திரும்பி வந்தார். நடையில் தள்ளாட்டமிருந்தது. வழக்கமானதுதான் என்று விட்டேற்றியாக உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். பின் பக்கமிருந்து ஓக்காளமும் 'அப்பா என்னாச்சு?' என்ற தங்கையின் குரலும் கேட்டன. கவலைப்படாமல் புத்தகத்தில் புதைந்திருந்தேன். பின்கட்டு சந்தடி வாசிப்பை முறித்தது. அலுத்துக் கொண்டு எழுந்து போய்ப் பார்த்தேன். அப்பா வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. தங்கை விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். தரையில் வாந்திக் கசடு சிந்தியிருந்தது. டிச்சுக் குழியைத் தோண்டி விட்டதுபோன்ற நாற்றம். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அப்பா மறுபடியும் ஓக்காளத்துடன்  குனிந்து வாந்தி யெடுத்தார். அஜீரண வஸ்துக்கள் வாயிலிருந்து வழிந்து  சட்டையின் மார்பிலும் கைகளிலும் கால்களிலும் ஒட்டிக் கிடந்தன. அருவெருப்பாக இருந்தது. தங்கை மூக்கைச் சுருக்கிக் கொண்டு நின்றாள். சில விநாடிகளில் என்னுடைய அருவெருப்புக் கலைந்து இரக்கம் ஊறியது. தங்கையை உள்ளே போகச் சொல்லி விட்டு அப்பாவைக் கைத்தாங்கலாகக் குளியல் அறைக்குள் கொண்டு போனேன். அவர் உடைகளைக் களைந்து தண்ணீரை மொண்டு ஊற்றிச் சுத்தப்படுத்தினேன். சமர்த்துக் குழந்தையாக அம்மணக் கோலத்தில் என் முன்னால் உட்கார்ந்திருந்தார் அப்பா. தலையைத் துவட்டிய துவாலையை அவருடைய இருப்பில் சுற்றி விடக் குனிந்தபோது என் இடது தோள்மேல் அப்பாவின் ஈரக் கை பதிந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அப்போது அவர் கண்களில் மின்னிய கனிவை அதற்கு முன்போ பின்போ கண்டதில்லை.தகப்பனுக்கு அப்பாவாக நான் உணர்ந்த அபூர்வ விநாடி அது. அவரை அணைத்துப் பிடித்துத் திரும்ப வீட்டுக்குள் அழைத்துப் போனபோது வெயிலில் வதங்கிய வெற்றிலையின் மணத்துடன் இருந்தார் அப்பா. ஒருவேளை அதுதான் அப்பாவின் இயற்கை வாசனையா? தெரியவில்லை.

காலமாவதற்குச் சில மாதங்கள் முன்னால் படுக்கையில் கிடந்த அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். தீராத வயிற்று நோவால் உடம்பு ஒடுங்கியிருந்தது. மல்லாந்தோ சாய்ந்தோ படுக்க முடியாமல் கால்களை மடக்கி வைத்துக் குழந்தைபோலக் குப்புறப்படுத்திருந்தார். அவரிடமிருந்த நல்ல வாசனைகளும் துர் வாசனைகளும் காணாமற் போயிருந்தன. மருந்துகளின் மொச்சை வாடை மிஞ்சியிருந்தது. நானும் அவருமாகத் தனித்து விடப்பட்ட நேரத்தில் கேட்டார். 'நான் ஒனக்கு வேணுங்கிறதப் பண்ணலேன்னு தோணுதாடா?' குழப்பமாக அவரைப் பார்த்தேன். ஏன் அப்படிக் கேட்கிறார். 'இல்ல, ஒம் புஸ்தகத்துல எளுதீருக்கியே அதான். ஒனக்குத்தான் எம் மேல அன்புமில்ல விரோதமு மில்லயே' என்றார். அப்பாவின் வார்த்தைகள் என்னைச் சுட்டன; குத்திக் குதறின. குற்ற உணர்வுடன் தலைகுனியச் செய்தன. அவர் சொன்னது நான் எழுதிய கவிதை வரியின் ஞாபகச் சாயல். சரியான வரிகள் இவை. 'அப்பா, எனக்கு உன்மேல் அன்பில்லை;  பகையைப் போலவே'. அந்த வரிகளை யோசித்த மூளையைப் பிடுங்கி எறியலாம் என்றும் எழுதிய விரல்களை நசுக்கி முறித்து விடவும் தோன்றியது. மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் இடையில் ஊசலாடினேன். நான் எழுதியிருப்பதை அப்பா வாசித்திருக்கிறார். நாளிதழ் தவிர வேறு வாசிப்பு வாசனையில்லாதவர் என் கவிதையை எப்போது படித்தார்? தெரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னைக் குற்றம் சாட்டும் அந்தக் கவிதையை அவரை எவ்வளவு நோகச் செய்திருக்கும் என்பதில் வேதனையாக இருந்தது. மனதுக்குள் குமைச்சலாக இருந்தது. மனிதர்களைக் காயப்படுத்தி என்ன இலக்கியம்? என்று வெறுப்பாகவும் இருந்தது. ஆனால் எழுதியது எழுதியதுதானே.எழுதும்போது இருந்த அப்பாவின் நிலையும் எழுதிய என் மனநிலையும் வாஸ்தவமானவை. இப்போது அப்பா காட்டும் பெருந்தன்மையும் என்னைத் தவிக்க வைக்கும் குற்ற உணர்வும் கூட வாஸ்தவமானவை.

எல்லா சராசரித் தகப்பன்களைப் போலத்தான் அப்பாவும். ஐந்து பிள்ளைக ளைப் பெற்றார். அவர்கள் வளர்வதைப் பார்த்தார். தன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டதாக நம்பினார். எல்லா சராசரித் தகப்பன்களின்  நன்மை களும் கெடுதிகளும் அப்பாவிடமும் இருந்திருக்கின்றன. இல்லாமலிருந்தது தன்னுடைய மனசைப் பகிர்ந்து கொள்கிற விருப்பம். என்றைக்காவது மனம் திறந்து பேசியிருந்தால் எங்கள் இருவருக்கும் நடுவில் நிகழ்ந்த குளிர்ப் போர் நடக்காமலே இருந்திருக்கலாமோ என்னவோ? ஆனால் நான் நெருங்கியபோது அப்பா விலகிப் போனார். விலக விலக அவரை விரோதியாக நினைத்தேன். அப்பாவின் உலகமும் யோசனைகளும் என்னவென்று அறிந்து கொள்ள அந்தப் போலிப் பகை தடையாக இருந்ததை அவரில்லாத இப்போது உணர முடிகிறது. இழந்த பின்பு வருவதுதானே ஞானம்.

அப்பாவின் உடம்பு கிடத்தப் பட்டிருந்தது. நோயில் குலைந்த உடம்பு என்பதால் ஆடைகளை மட்டும் அகற்றி மாற்றுத் துணியை அணிவித்தார்கள். மாலை போட்டார்கள்.  உடம்பு வேனுக்குள்  ஏற்றப்பட்டது.  நானும் தம்பியும் உறவினர்களும் ஏறிக் கொண்டோம். மயானத்துக்குப் போகும் பாதையின் குண்டு குழிகளில் வண்டி ஏறி இறங்கியபோது ஸ்ட் ரெச்சரிலிருந்து அப்பா விசுந்து விடக் கூடாது என்று உடம்பைப் பிடித்துக் கொண்டேன். உயிர் வெளியேறிய அப்பாவின் பாதி திறந்த கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடம்பில் சார்த்தியிருந்த செவ்வந்தியும் ரோஜாவும் தழைகளும் வாடிய மரிக்கொழுந்தும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலையைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். வண்டி குழியில் குதித்தபோது கையோடு ஒட்டிக் கொண்ட மரிக் கொழுந்தைத் திரும்பவும் மாலைக்குள் சொருகினேன்.அப்பா எரிந்து கொண்டிருக்கத் திரும்பி நடந்தோம். வியர்வையைக் கையால் துடைத்தபோது மரிக்கொழுந்தின் வாசனை நாசிக்குள் புகுந்தது. 'நானும் நீங்களும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாம். பரஸ்பரம் புரிந்து கொள்ள முயன்றிருக்கலாம். உங்களுக்கு என்னை விட்டாலும் பிரியத்தைக் கொட்ட நான்கு பிள்ளைகள். எனக்கு ஒரு  அப்பாதானே?' என்று அந்த வாசனையிடம் அரற்றிக் கொண்டிருந்தேன்.

@

அந்திமழை இதழில் வெளிவந்தது.


























3 கருத்துகள்:

  1. நான் நெகிழ்சி அடைந்தேன். கிட்டத்தட்ட என் அப்பாவை நினைவூட்டியது. அடிக்கடி படித்துப் பார்க்கத் தூண்டுகிறது .

    பதிலளிநீக்கு
  2. என்ன சொல்லன்னு தெரியல, இதுவரை நான்கு முறை படித்துவிட்டேன். இரண்டு விஷயங்கள் எனக்கு பகிர் உண்டு:
    1. நமக்கெல்லோருக்கும் பரிச்சயமான இடைவெளியுடன் அன்பும் மிளிரும் அப்பாக்களின் தெளிந்த சித்திரம்.
    2. நடை, தங்களின் சமீபத்திய மொழிபெயர்ப்பான பட்டுவின் நடையை ஞாபகப்(படுத்தியது).

    பதிலளிநீக்கு