திங்கள், 30 மே, 2016

செ ன் னை பு த் த க க் கா ட் சி 2016


காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வாசகர்கள் கைக்குச் செல்லவிருக்கும் புத்தகங்களில் பத்துக்கும் மேற்பட்டவற்றுக்கு  முதல் வாசகன் நானாகவே இருக்கிறேன். பதிப்பகப் பணிசார்ந்தும் நட்பு சார்ந்தும் வாய்த்த பெருமை இது. மொழி பெயர்த்தவை, மேலாய்வு செய்தவை, செம்மைப் படுத்தியவை, குறிப்புகள் எழுதியவை, முன்னுரைகள் எழுதியவை என இந்த நூல்களில் என் பங்களிப்பு இருக்கிறது.  சொந்தப் படைப்புகள் வெளிவரக் காத்திருப்பதை விட இந்த நூல்கள் வெளியாகக் காத்திருப்பது சுகமாக இருக்கிறது. 


சொந்தப் படைப்புகள், மொழியாக்கம் செய்பவை, தொகுப்பவை தவிர வேறு புத்தகங்களுக்கு முன்னுரை எழுதுவதில்லை என்ற  பிடிவாதத்தை 
தேவி பாரதியின் நட்பு தளர்த்தியது.  நட்ராஜ் மகராஜ் நாவலுக்கு உற்சாகமாக முன்னுரை  எழுதினேன். மூர்க்கமாக இருந்திருந்தால் அண்மைக் காலத்தில் வெளிவந்த தீவிரமும் ஆழமுமான  படைப்பை முன்மொழியும் நல் வாய்ப்பை இழந்திருப்பேன். 'உங்கள விட்டா  யார் எழுதுவாங்க?' என்று பொய்யுரைத்த நண்பருக்கு நன்றி. ஆ.மாதவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பத்தாண்டுகளுக்கு முன்பே யோசனை செய்யப்பட்ட நூல். அமரர் ராஜ மார்த்தாண்டன் தெரிவித்த யோசனை. அது இப்போதுதான் செயல்வடிவம் பெற்றிருக்கிறது.கதைகளின் தேர்வும் முன்னுரையும் என்னுடையவை. 

இதுவரை தனித்தனிப் புத்தகங்களாக வெளிவந்திருக்கும் வைக்கம் முகம்மது பஷீரின் நாவல்கள்  ஒரே தொகுப்பாக வெளியாகின்றன. நண்பர் குளச்சல் யூசுப் தமிழாக்கம் செய்த ' பால்யகால சகி, எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது, பாத்துமாவின் ஆடு,சப்தங்கள், மூணு சீட்டு விளையாட்டுக் காரனின் மகள் ஆகியவையும் நான் மொழியாக்கம் செய்த மதில்களும் 'பஷீர் நாவல்கள்' தொகுப்பில் உள்ளன. ஐந்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தை முறியடிப்பதற்காக இன்னொரு சிறு நாவலை மொழிபெயர்த்தேன். ' காதல் கடிதம்' . கண்ணனின் பதிப்புத்துறை உத்தியே  அது  தனி நூலாக வெளிவரக் காரணம். கமலா தாஸின் ' என் கதை' யை நண்பர் நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கிறார். ஏற்கனவே ஆங்கிலத்திலிருந்து செய்யப்பட்ட தக்கையான மொழிபெயர்ப்பு 'என் கதை' க்கு இருக்கிறது.  மலையாள மூலத்திலிருந்து செய்யப்பட்டிருக்கும் புதிய மொழிபெயர்ப்பை வாசித்தபோதுதான் வெகுஜன சுவாரசியத்தை மீறிய அதன் இலக்கிய மதிப்புப் புரிந்தது. பதின் பருவத்தில் வாசிப்பில் அனலை மூட்டிய நூலுக்கு அந்த மதிப்பைச் சுட்டியே முன்னுரை எழுத வாய்த்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சக்கரியாவின் சிறு நாவலான 'இதுதான் என் பெய'ரை மொழிபெயர்த்தேன். நண்பர் அன்னம் கதிர் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு வெளியாகிறது. காந்தி படுகொலையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.   முதல் பதிப்பு வெளிவந்த காலத்தை விட இப்போதுதான் அது பொருத்தமான ஆக்கமாகத் தோன்றுகிறது.'நகுலன் கவிதைகள் - தேர்ந்தெடுத்த தொகுப்பு 2012 இல் வெளியானது. நண்பர் யுவன் சந்திரசேகர் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தார். அந்தக் கவிதைகளைப் பற்றி அவரும் நானும் உரையாடி அதன் எழுத்து வடிவத்தை நூலில் சேர்த்திருந்தோம். அந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பு மற்ற முன்னோடிக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளையும் அவை பற்றிய உரையாடலையும் சேர்த்து வெளியிடும் முயற்சிக்கு உந்துதலாக அமைந்தது. இம்முறை 'பிரமிள்  தேர்ந்தெடுத்த கவிதைகள்' வருகிறது. கவிதைகள் என் தேர்வு.

   கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக