ஞாயிறு, 6 டிசம்பர், 2009

காலயந்திரம்

சுகுமாரன்

புது வீட்டு வாசல் நிலையில்
கதவைப் பொருத்திக்கொண்டிருந்தார்கள்.

பொருந்தியதா என்று
முன்னும் பின்னும் கதவை அசைத்தார்கள்
அசைவில் உண்டாயின
வீடும் வெளியும்.

வேடிக்கை பார்த்திருந்த
சித்தாள் பெண்ணின் குட்டிச் சிறுமி
எல்லாரும் நகர்ந்ததும்
கதவில் தொங்கி
முன்னும் பின்னும் அசைத்தாள்.

பாதி மூடிய கதவு
உள்ளே திறந்தது. சொன்னாள்:
‘பாட்டி வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு வந்தாச்சு.’

இன்றிலிருந்து பிதுங்கிய ஒரு நொடி
காலத்தை மீறி
விரிந்தது
விரிகிறது
விரிந்துகொண்டேயிருக்கிறது

5 கருத்துகள்:

  1. தோழரே வணக்கம்...பாதி மூடிய கதவு
    உள்ளே திறந்தது. சொன்னாள்:
    ‘பாட்டி வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு வந்தாச்சு.’....மிகவும் அருமையான வரிகள் எனக்குள் பல அர்த்தங்களை பொதித்துச் சென்ற வரிகள்

    பதிலளிநீக்கு
  2. இளவேனில்,வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கவிதையில் எனது முன்னோடிகளில் ஒருவராக உங்களைச் சொல்ல நான் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். வலைப்பதிவில் நீங்கள் எழுதுவது மிக்க மகிழ்ச்சி.

    பிரியத்துடன்,
    மணி

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கவிதைகளை அச்சுப்பிரதியில் வாசித்து மகிழ்ந்தது உண்டு. இப்போது இணையத்திலும் தங்களைக் கண்டு மனம் மகிழ்கிறது. மேலும் புதிய கவிதைகள் தங்களிடமிருந்து படிக்க விரும்பி...

    சென்ஷி

    பதிலளிநீக்கு
  5. மணிகண்டனின் பெருமைக்கும் சென்ஷியின் விருப்பத்துக்கும் பாத்திரனாகத் தொடர்ந்து இருப்பது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

    இருவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு