திங்கள், 7 டிசம்பர், 2009

இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்

@

பூமியே, என் இரத்தத்தை மூடிப் போடாதே, என் அலறலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.

யோபு (16:18)
பரிசுத்த வேதாகமம்


@

எந்த மொழியில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளனவோ அந்த மொழிபேசும் இனத்தவர் இன்று வேற்றுக் கிரகவாசிகளாக அந்நியப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களது நிலம் பறிக்கப்பட்டிருக்கிறது. அதில் வேரோடியிருந்த அவர்களது வாழ்வு பெயர்த்தெறியப் பட்டிருக்கிறது. அவர்களது பண்பாடு அழிக்கப்பட்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் விளைவாக அந்த இனம் சிதறிப் போயிருக்கிறது. தலைமுறைகளாகத் தொடர்ந்த போர், அகதிகளையும் அநாதைகளையும் ஊனமுற்றோரையும் மட்டுமே மிச்சமாக்கியிருக்கிறது. இடுகாடுகளை வரலாறாக்கியிருக்கிறது. பதுங்கு குழிகளை இறந்த காலமாகவும் அகதி முகாம்களை நிகழ் காலமாகவும் அடையாளப்படுத்தியிருக்கிறது.யுத்தம் மென்று துப்பிய சடலங்களுக்கிடையில் சாக மறுத்துத் தப்பிய ஓர் உயிரின் ஓலம் இந்தக் கவிதைகள். தன்னைப்போலத் தப்பிய சக உயிர்களின் அவலக் குரல்களும் இந்தக் கவிதைகளில் கேட்கின்றன.

இலக்கியத்தின் மேலான செயல்பாடுகளில் ஒன்று சூழலின் அனுபவத்தை வரலாறாக்குவது. தீபச்செல்வன் இந்தக் கவிதைகளில் மேற்கொண்டிருப்பது அந்தச் செயல்பாட்டைத்தான். ஆனால் இவை வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமல்ல; அனுபவத்தின் இடம் காலம் காரணங்களை மீறி வரலாற்றுச் சொல்லாடலின் பன்முக உண்மைகளாகச் சொல்லுவதற்கு ஏராளமான சாட்சியங்களை முன்வைக்கின்றன. அதனால் இவை கவிதையாகின்றன. இந்தக் கவிதைகளை எந்தத் தமிழ் வாசகனும் குற்ற உணர்வில்லாமல் எதிர்கொள்ள முடியாது என்று கருதுகிறேன். 'சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாகக்கண்டும் சிந்தையிரங்காமல்' கை பிசைந்து நின்றதன் குற்ற உணர்வு. இந்தக் கையறு நிலையே நமது மொழியைப்பேசும் இனத்தை உலகப் பார்வையில் அந்நியர்களாக்கியிருக்கிறது.

இன்னொரு நிலையிலும் நாம் குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டியவர்கள். தமிழுக்கு ஒரு பண்டிதப் பெருமை உண்டு.நமது பழம் இலக்கியங்கள் தமிழ் வாழ்வை காதல் வீரம் என்று பகுத்து வியந்து கொண்டிருந்தன. போர் வெற்றி குறித்துபெருமிதம் கொண்டிருந்தன. நாம் பார்த்திராத அந்த அதிகார வெற்றியின் ரசத்தை என்ன சுவையென்று தெரியாமல் ருசித்துக்கொண்டிருந்தோம். ஈழத்துப் போர் நமக்கு அந்த ருசியை அடையாளம் காட்டிவிட்டது. அது ரத்தத்தின் ருசி.சக மனிதனின் மண்டையோட்டில் பரிமாறப்படும் சக உதிரத்தின் ருசி.இந்தத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வரியும் அந்த ருசியை உணர்வில் புகட்டுகிறது. இதுவரை ஈழத்துப் போர்ப் பின்னணியில் எழுதப்பட்டவற்றில் எதார்த்தத்தின் கொடூரம் அதிகம் வெளிப்பட்ட கவிதைகளில் தீபச்செல்வனுடையவையும் ஒன்றாக இருக்கலாம்.

தீபச்செல்வன் ஈழத்தின் இருண்ட காலத்தின் மூன்றாம் தலைமுறை சாட்சி. முந்தைய தலைமுறைகளுக்கு எப்படியாவது போர் முடிந்து விடும் என்ற நம்பிக்கையிருந்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகளும் தென்பட்டன. ஆனால் மூன்றாம் தலைமுறையினரின் காலத்தில் போர் தீவிரமடைந்தது. தமிழ் பேசும் ஒவ்வொரு ஜீவனும் அரச பயங்கரவாதத்துக்கும் போராளிக் குழுவுக்கும் இடையில் சிக்குண்டு தவித்தது. இறுதி யுத்தத்தில் எல்லாம் அழிந்தன. அழிவின் நேர்சாட்சியாக இருக்கிறார் தீபச்செல்வன்; அந்தப் பேரவலத்தின் வாக்குமூலங்களாக அமைகின்றன இந்தக் கவிதைகள்.கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த 2009 ஆம் ஆண்டு மே வரையிலான அன்றாட யுத்தக் கொடுமைகளையும் மக்களின் அலைமோதல்களையும் உயிருக்கு அஞ்சி ஓடிய ஓட்டங்களையும் அதற்குப் பின் வந்த நாட்களின் மனிதத் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஒரு நாட் குறிப்புப்போலவே பதிந்திருக்கிறார். எல்லா நாட்களும் இருண்ட நாட்களே. எல்லா வெளிச்சமும் இருட்டின் சாயலே என்ற எதார்த்த நிலைமையை இந்தக் கவிதைகள் சொல்லுகின்றன. பெரும்கொடுமைகளுக்குள்ளான தினங்களிலும் கவிதை தீபச் செல்வனுக்கு ஆறுதலும் ஆயுதமுமாக இருந்திருக்கிறது என்பதை எப்படி எடுத்துக் கொள்ள?

கவிதைக்கான நாசூக்குகள் இவற்றில் இல்லை. சொற்களுக்கு மெருகேற்றவோ அனுபவத்துக்குச் செறிவூட்டவோ இந்தக் கவிதைகளில் அவகாசமில்லை. நீண்ட வரிகளில் நெடுந்துயரங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகள் செப்பனிடப்பட்டவையாக இருக்குமானால் அவை காட்டும் நரகம் அழகியல் பொருளாகவே இருக்கும். ஆனால் பேரிழப்பின் நிஜத்தை கவிதைகள் காட்டுகின்றன. வரலாற்றை இலக்கியம் வெல்வது இங்கேதான் என்று குரூரமாக மகிழ்ச்சி கொள்ள நேர்கிறது. தமிழுக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம் என்ற மனப் பதைப்பும் ஏற்படுகிறது.

இன்று ஈழத்தின் கதியற்ற நிலைக்குக் காரணம் அரசபயங்கரவாதம் மட்டுமல்ல; ஆயுதப் போராளிகளின் தந்திரோபாயங்களின் தோல்வி மட்டுமல்ல; உலக அதிகாரங்களின் தீராப் பெரும் பசியும் அதை எதிர்க்க இயலாத மக்கள் மனோபாவமுமே முதன்மையான காரணம். இந்த எல்லாக் காரணிகளையும் தீபச்செல்வன் கவிதைகளில் பகிரங்கப்படுத்துகிறார்.உள்ளூர் அரசியல், தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக நாடுகளின் அரசியல் எல்லாம் இணைந்துதான் இந்த நூற்றாண்டின் மாபெரும் இன அழித்தொழிப்பை நடத்தியிருக்கின்றன. ஈழத்தின் ஒவ்வொரு நாளையும் விடிவற்ற நாளாக ஆக்கியிருக்கின்றன என்பதை இந்தக் கவிதைவரிசை புலப்படுத்துகிறது. 'எனினும் நீயும் நானும்/நமது சனங்களைப்போலவே/ இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்' என்று வெளிச்சத்துக்கு ஏங்குகிறது.

நிலத்திலிருந்தும் காலத்திலிருந்தும் ஏறத்தாழ முற்றிலும் பெயர்த்து வீசப் பட்ட ஓர் இனத்தின் வாதையைச் சொல்லும் கவிதைகளை வியாக்கியானிப்பது கடினம். ஏனெனில் அவை இலக்கிய வடிவமாக மட்டும் நிற்பவையல்ல. வரலாற்றின் வடுக்களாக நிலைத்திருப்பவை.மானுட நினைவில் குற்ற முட்களாகத் தைத்திருப்பவை. தலைமுறைகளைக் கடந்து எச்சரிக்கையாக இருப்பவை. ஓர் இலக்கியவாதி வரலாற்றாளனின் பாத்திரத்தை மேற்கொள்ளும் இந்தத் திருப்பத்தை தீபச்செல்வன் உண்மையுணர்வுடன் கடமையாற்றியிருக்கிறார். ஆனால் அது தன்னை அழித்துக் கொண்டு நிறைவேற்றும் கடமை.

இரண்டாம் உலகப் போரின் அழிவுகளைப் பதிவு செய்த இலக்கியங்கள் உலக இலக்கியத்தில் அதிகம். அதில் பெர்டோல்ட் பிரக்டின் வரியும் ஒன்று. 'இருண்ட காலத்தில் பாடல் இருக்குமா? இருக்கும். இருண்ட காலங்க¨ளைப் பற்றியதாக இருக்கும்'. தீபச்செல்வனும் ஓர் இனத்தின் இருண்ட காலத்தைக் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.இருண்ட காலம் விலகும். வெளிச்சம் வரும் என்று நம்புகிறார்.அந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டு ஒளிவரக் காத்திருப்பதுதான் நாமும் செய்யக் கூடியது.

*

(உயிர்மை பதிப்பகம் வெளியிடும் தீபச்செல்வனின் ‘ ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)

5 கருத்துகள்:

  1. வணக்கம் தோழரே என் ஆருயிர் நண்பனின் படைப்புக்கு உங்களின் அற்புதமான முன்னுரைக்குக் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  2. இணையத்தளத்தில் சில கவிதைகளைப் படித்திருக்கிறேன். தொகுப்பாக வாசிக்கும்போது அதிக உணர்வெழுச்சிக்கு ஆளாகுவோமென்று நினைக்கிறேன்.சமகாலத்தின் இரத்தமும் சதையும் முள்வேலியுமான பதிவுகள் தீபச்செல்வனின் கவிதைகள். அவர் உங்களால் முன்னுரை எழுதப்பெறும் பேறு பெற்றார்:)

    பதிலளிநீக்கு
  3. நன்றி.ஒரு கவிதைத் தொகுப்பு என்னை எந்த
    விதமாகப் பாதித்தது என்று அதை வாசிக்கப் போகிற
    வாசகனிடம் சொல்ல விரும்பியிருக்கிறேன். முன்னுரை என்பது அதுதானே?

    முன்னுரை எழுதப் பெறும் பேறு - என்பதெல்லாம்
    சற்று மிகையாகத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்.
    நீண்ட நாட்களுக்கு பிறகு கோடைகால வெம்மையை உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு