திங்கள், 7 டிசம்பர், 2009

வனவாசி

அண்ணத்தில் ஒட்டிய மீசைத்துணுக்கைத்
துழாவி வெளியேற்றியதும்
படியிறங்கி அவன் போனதும்
தற்செயலல்ல;
நீண்ட யுகமாகக் காத்திருந்த தருணம்.

தாழிட்ட கதவுக்கு இப்பால்
அவள் மட்டுமானாள் அவள்

உடலில் கனத்த ஆடைகள் களைந்து
கொடியில் எறிந்தாள்
அவை
கசங்கி விரிந்து பசுந்தழைகளாயசைந்தன

நிலைக்கண்ணாடி
உருகிக் கரைந்து தரையில் தேங்கி
நீர்நிலையாகத் தளும்பி
அவள் பார்க்கச்
சிலிர்த்து நெளிந்தது

உலோகக் குழாய் அகன்று
முடிவற்ற அருவியாய்ப் பொழிய
நனைந்த உடலில் மிஞ்சிய துளிகளை
துவட்டி நீக்கியது காற்று

பாரமே இல்லாத நீர்க்குமிழிகள்போல
துள்ளி நடக்கையில் ததும்பின மார்புகள்

அறைக்குள் அலைந்த வெளிச்சம்
மழிக்கப்படாத உறுப்பில் கைவீசி அளைந்தது

யாருமற்ற பொழுதில் புலர்ந்துகொண்டே இருந்தாள்
யாருமற்ற இடத்தில் பரவிக்கொண்டே இருந்தாள்

அழைப்புமணி வெருட்டியதும்
எறிந்த தழைகளை மீண்டும் அணிந்து
தாழிட்ட கதவை நெருங்கும் முன்னர்
ஈர உடைகள் கனத்து எரிந்தன

வெளியேற்றியதாய் மறந்த
மீசைரோமம் பற்களுக்கிடையில் நெருடியதும்
திறந்த கதவுக்கு இப்பால்
அவன் வந்து நின்றதும்
தற்செயலல்ல.

'கதவைத் திறக்க ஏனிந்தத் தாமதம்'
கேட்டான் அவன்
'வீட்டுக்கு அப்பால்
வெகுதொலைவில் இருக்கிறதே என் கானகம்'
சொன்னாள் அவள்.