ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஹபீஸ் கவிதைகள்


உங்களது கண்ணுக்கும்
இந்தப் பக்கத்துக்கும்
இடையில்
நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

உங்களது காதுக்கும் ஒலிக்கும்
இடையில்
ஒருநாளைக்கு ஆயிரம்முறை
உங்கள் ஆன்மா நடந்துபோகும்
பொற்கூடாரத்தை வேய்ந்திருக்கிறான் நண்பன்.

ஒவ்வொருமுறை நீங்கள்
காபாவைக் கடந்துபோகும்போதும்
உங்கள் உடலிலிருந்து ஒரு பொன் நூலை
நழுவ விடுகிறான் சூரியன்.

ஒவ்வொருமுறை நீங்கள்
எந்தப் பொளுளைக் கடக்கும்போதும்
அதற்குள்ளேயிருந்து வணங்குகிறேன் நான்.

அவனுடைய அண்மைபற்றி
இன்னும் உங்களுக்குச் சந்தேகமிருந்தால்
எப்போதாவது கடவுளுடன் விவாதித்துப் பாருங்கள்.

உங்களது கண்ணுக்கும்
இந்தப் பக்கத்துக்கும்
இடையில்
ஹபீஸ் நின்றுகொண்டிருக்கிறான்.

என்னுள் மோதி நுழையுங்கள்.

@

2


இத்தனை காலங்களுக்குப் பிறகும் கூட
சூரியன் பூமியிடம் சொல்வதில்லை;
'நீ எனக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்'

அதுபோன்ற அன்பால்
என்ன நேர்கிறதென்று பாருங்கள்.
அது முழு ஆகாயத்தையும் சுடரச்செய்கிறது.

@

3

அழகான ஒற்றை பறவைபோல அல்ல

அவருடைய பாதம்
எனக்கு அருகில் பூமியைத் தொட்டதும்
கடவுளால் உலுக்கப்பட்டு
ஒரு கிளையையே முறித்துக்கொண்டு
என் மனதின் பரந்த குன்றுகளுக்கு மேலாக
பெரும் வெண்ணிறக் கூட்டங்களாக
எழுகின்றன இந்தக் கவிதைகள்.

@

4

இறந்த காலத்தை மன்னிக்க முடிகிறபோது
இசைக்கருவி இசைக்கத் தொடங்குகிறது

எதிர்காலத்தைப் பற்றி வருந்துவதை
இசைக்கருவி நிறுத்தும்போது
நீ
போதையேறிய சிரிப்புத் தொல்லையாக மாறுகிறாய்.

பிறகு கடவுள்
குனிந்து தன்னுடைய சிகைக்குள்
உன்னைக் கோதிவிடுகிறார்.

இசைக்கருவி
மற்றவர்களால் ஏற்பட்ட காயங்களை
மன்னிக்கிறபோது

இதயம்
பாடத் தொடங்குகிறது.

@

5

நான் மழையாகப் பொழிகிறேன்

ஏனெனில்
உங்கள் புல்வெளிகள்
கடவுளுக்காகக் காத்திருக்கின்றன.

நான் வெளிச்சத்தைச் சொற்களில் நெய்கிறேன்

உங்கள் மனம் அவற்றை ஏற்கும்போது
ஒரு மெழுகுவர்த்தி இருளுக்குச் செய்வதுபோல
நமக்கும் நிகழும்
எனவே
உங்கள் கண்கள் தமது துக்கத்தை மறுதலிக்கும்
பிரகாசமாய் மாறும்.

பிறந்த நாள் பரிசுபோல
என் சிரிப்பைப் பொதிந்து
உங்கள் படுக்கையருகில் போட்டிருக்கிறேன்

ஆகாயத்தின் ஒவ்வொரு விளக்குக் கம்பத்துக்கும் அருகில்
என் இதயத்தின் ஞானத்தை நட்டுவைத்திருக்கிறேன்.

தனவான் அடிக்கடி கிறுக்கனாகிறான்

தெய்வீகப் பித்தேறிய ஆன்மா
முடிவில்லாக் கருணையாக உருமாறுகிறது

நன்றித் தொகையின் பொன் மூட்டைகளைக் கட்டி
நிலவுகளின் காலடியில்
கோள்களின் காலடியில்
பரவச வெளிகளின் காலடியில்
பாடும் பறவைகளின் காலடியில்
தொங்கவிடுகிறேன்

நான் பேசுகிறேன்
ஏனெனில்
உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும்
கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறது.

@

6

நான்
கடவுளிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்

எனவே
ஒரு கிறித்துவன் என்றோ
ஒரு இந்து என்றோ
ஒரு முஸ்லிம் என்றோ
ஒரு பௌத்தன் என்றோ
ஒரு யூதன் என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக்கொள்ள மாட்டேன்

உண்மை
என்னிடம் ஏராளமானவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது

எனவே
ஓர் ஆண் என்றோ
ஒரு பெண் என்றோ
ஒரு தேவதை என்றோ அல்லது
தூய ஆன்மா என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக்கொள்ள மாட்டேன்

அன்பு
முழுமையாக ஹபீஸுடன் நட்பு கொண்டாயிற்று

என் மனம் இதுவரை அறிந்த
எல்லா எண்ணத்தையும்
எல்லா பிம்பத்தையும் சாம்பலாக்கிவிட்டது.
என்னை விடுதலை செய்து விட்டது.

@

7இன்னும் கூடப் பாதுகாப்பில்லாமல் உணரும்
பொருத்தமற்ற புதுமணத் தம்பதியர்
இருவரில் ஒருவர்போல

கடவுளைத் தேடியபடியே சொல்லிக்கொண்டிருக்கிறேன்
'என்னை முத்தமிடேன்'.
@

6 கருத்துகள்:

 1. அருமையான போதையேற்றும் மொழிபெயர்ப்பு.

  //இத்தனை காலங்களுக்குப் பிறகும் கூட
  சூரியன் பூமியிடம் சொல்வதில்லை;
  'நீ எனக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்'//

  இப்படிப்பட்ட நிபந்தனையற்ற அன்பு இந்த உலகத்தை நிறைக்கக் கூடாதா சுகுமாரன்?

  பதிலளிநீக்கு
 2. அருமையான பகிர்வுக்கு நன்றி. மொழியை தாண்டி உணர்வு பிரதிபலிக்கிறது

  பதிலளிநீக்கு
 3. //நான் மழையாகப் பொழிகிறேன்

  ஏனெனில்
  உங்கள் புல்வெளிகள்
  கடவுளுக்காகக் காத்திருக்கின்றன.// அற்புதமான வரிகள், மீண்டும் வாசித்து மகிழ்கிறேன். , பகிர்விற்கு நன்றி கவிஞர் சுகுமாரன்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி,
  சுந்தர்ஜி
  வேல்கண்ணன்,
  உமா.

  பதிலளிநீக்கு
 5. //இன்னும் கூடப் பாதுகாப்பில்லாமல் உணரும்
  பொருத்தமற்ற புதுமணத் தம்பதியர்
  இருவரில் ஒருவர்போல

  கடவுளைத் தேடியபடியே சொல்லிக்கொண்டிருக்கிறேன்
  'என்னை முத்தமிடேன்'. //

  ஆழம் தோய்ந்த வரிகள். அருமையான எண்ணங்கள். பட்டாம்பூச்சி போல எண்ணங்களையெல்லாம் வர்ணங்களாக வாரி இழைத்துள்ளார், பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு