வெள்ளி, 30 ஏப்ரல், 2010

என்ன வேண்டும் உங்களுக்கு?
உங்கள்
அன்றாடக் கடன்களுக்குத் தேவையானவையெல்லாம்
இந்த மூலையில் இருக்கின்றன

கழிப்பிடம், நீர்க்குழாய்,சவர்க்காரம்,துவாலை,
வாசனைத் திரவியங்கள்,ஒப்பனைப் பொருட்கள்
முகம் மூடும் கவசங்கள்

நீங்கள்
பசியாறுவதற்கானவையெல்லாம்
இந்த உணவு மேஜையில் இருக்கின்றன

அவித்தவை, பொரித்தவை, வதக்கியவை,
காய்கள்,பழங்கள், உலர் கனிகள்,
பித்தம் கசியும் எட்டிக்காய்.

உங்கள்
தாகம் தணிப்பதற்கான பானங்களெல்லாம்
இந்தக் குவளைகளில் இருக்கின்றன

பால், குடிநீர், தேநீர், பழச்சாறு,
கண்ணாடிக் கோப்பையில் கலப்படமற்ற நஞ்சு.

நீங்கள்
இளைப்பாறவும் புத்துணர்வுபெறவுமானவையெல்லாம்
இந்த அறையில் இருக்கின்றன

படுக்கை, நாற்காலி, குடிநீர்ப் பானை,
சங்கீதம், புத்தகம்,
அவமதிப்பின் கனத்த சுவர்கள்.

தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்
என்னதான் உங்கள் தேவை?

கவிதையின் கை


1993 டிசம்பர் மாதத்தின் கடைசி நாட்கள் வாழ்நாள் முழுமைக்குமான சுகந்தத்தைத் கொண்டிருந்ததாக இப்போதும் ஞாபகத்தில் மணம் வீசுகிறது. இந்தியக் கவிதைச் சங்கமும் சாகித்திய அக்காதெமியும் ஒருவாரம் நீண்டு நின்ற கவிதை விழாவுக்கு அழைத்திருந்தன. சாகித்திய அக்காதெமி இந்திய மொழிக் கவிதைகளை ஹிந்தியில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடும் நோக்கில் ஒரு மொழிபெயர்ப்புப் பட்டறையையும் கவிதைச் சங்கம் கவிதா 93 என்ற பெயரில் கவிதைத் திருவிழாவையும் தில்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்தன. மொழிக்கு ஒருவராகப் பத்து இந்திய மொழிகளிலிருந்து தேர்ந்து அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். பட்டறையில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்து சாகித்திய அக்காதெமி பின்னர் 'சப்தசேது' என்ற பெயரில் நூலாக வெளியிட்டது. இந்த நிகழ்வுகளெல்லாம் மகிழ்ச்சியளித்தவை.அந்த வாய்ப்பில் பிற இந்திய மொழிக் கவிஞர்களுடன் கலந்துரையாடவும் வாசித்துத் தெரிந்து கொண்டிருந்த கவிஞர்களுடன் நட்பை உருவாக்கிக் கொள்ளவும் முடிந்தது என்பதுதான் அதிக மகிழ்ச்சியளித்தது. அன்று தொடங்கிய நட்பு இன்றும் சிலருடன் அறுபடாமல் தொடர்கிறது. வங்கக் கவிஞரான அஞ்சென் சென், கன்னடக் கவிஞரான எச்.எஸ்.சிவபிரகாஷ், மராத்திக் கவிஞரான சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோருடனான தோழமை இன்றும் உற்சாக மளிப்பதாகவே நீடிக்கிறது.

கவிஞர்கள் விநோதப் பிறவிகளாக இருக்கிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அப்படித் தோற்றம ளிக்கவாவது ஆசைப்படுகிறார்கள் என்று பட்டது. அசாமியக் கவிஞரான ஹிரேன் பட்டாச் சார்யா அப்படி மனதில் பதிந்தார். மனைவியையும் அழைத்துக்கொண்டு கவிதை விழாவுக்கு வந்திருந்த ஹிரேன் தா வின் பேச்சில் வயோதிகக் குறும்பு துள்ளிக் கொண்டிருந்தது. அவருடனான ஒரு பகலுணவுக்குப் பிந்தைய உரையாடல் இப்போதும் நினைவிருக்கிறது.

'' நீ எந்த மொழியில் எழுதுகிறாய்?''
''தமிழில்''
''அதை எவனாவது படிக்கிறானா?''
''தெரியாது''
''உனக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமல் யாருக்காக எழுதுகிறாய்?''
''வாசகர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக எழுதுகிறோம் என்பதுபோலவே வாசகனை முன்னிருத்தியும் நாம் எழுதுவதில்லைதானே? ஒரு வாசகனாவது படிப்பான் என்ற எண்ணத்தில்தானே எழுதுகிறோம். அப்படியான ஒரு வாசக கரிசனைதானே முக்கியம். அது ஒருவனாகவோ அல்லது ஒற்றை முகத்துக்குப் பின்னாலிருக்கிற ஒரு நூறுபேராகவோ இருப்பதைப் பற்றி கவிஞன் கவலைப்படுவது அவசியமா?''

''ஹூர்ரே பாப், உன் கவிதையை எடுத்து வா, வாசித்துப் பார்த்து விட்டு. உனக்கு எத்தனை வாசகர்கள் இருப்பார்கள் என்றுசொல்கிறேன்.அது முக்கியம். இருபத்தைந்து வயது வரைக்கும் நீ மற்றவர்களைப் படிக்கவேண்டும். அதற்குப் பிறகு மற்றவர்கள் உன்னைப் படிக்க வேண்டும். அப்போதுதான் நீ கவிஞன். என்ன வயதாகிறது உனக்கு?''

''முப்பத்தியாறு''

''சான்சே இல்லை.நீ சும்மா எழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான். சரி. ஹிந்தியில் மொழிபெயர்த்திருப்பதைக் கொடு, வாசிப்போம்.''

கையிலிருந்த தாள்களைக் கொடுத்தேன்.ஹிரேன் பட்டாச்சாரியா அதைக் கவனமாக வாசித்தார். இடையிடையே 'வாரே, வாஹ்' என்று சிலாகிக்கவும் செய்தார். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த பத்துக் கவிதைகளையும் வாசித்துத் தீர்த்தார். ''பையா, உனக்கு நிச்சயம் மூன்று வாசகர்கள் இருப்பார்கள். உறுதி. ஒன்று நீ, இரண்டாவது -உனக்குத் திருமணமாகி விட்டதா? அப்படியென்றால் உன் மனைவி, மூன்றாவது அசாமியக் கவிஞனான ஹிரேன் பட்டாச்சார்யா''

சற்றுக் கூச்சமாகவும் சற்றுப் பெருமிதமாகவும் சிரித்தேன். ஹிரேன் தாவின் மனைவி வந்து அழைத்ததில் உரையாடல் முடிந்தது.எழுந்து நின்றபோது ஹிரேன்தா இறுகக் கட்டியணைத்தார். டிசம்பர் குளிருக்கு அந்த அணைப்பு இதமாக இருந்ததும் கிழவரின் முகம் நெருக்கத்தில் வந்தபோது அதற்குள்ளிருந்து முந்திய நாள் அருந்திய மதுவின் நெடியும் சற்று முன் புகைத்த சாக்லெட் புகையிலையின் மணமும் என் மூக்கில் பரவியதும் நினைவிருக்கிறது.

கவிதையாக்கத்தில் ஒருவகையான பித்துநிலை உண்டு.அதே நிலையில் தங்களைத் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கும் விருப்பம் எல்லாருக்கும் உண்டு.ஆனால் சிலருக்கே அது கை கூடுகிறது.அப்படிப்பட்ட மனப்பாங்குள்ளவர் ஹிரேன் தா என்று நினைத்திருந்தேன். அன்று மாலை வந்து சேர்ந்த அருண்கொலாட்கரை அடுத்த நாள் பார்த்துப் பேசும்வரைக்கும் அந்த நினைப்பு இருந்தது. கவிஞன் என்ற முறையில் யாரைப் போலவும் ஆகி விடக் கூடாது என்ற மூர்க்கம் எனக்கு உண்டு. அப்படி ஆவது என்றால் கொலாட்கரைப்போல ஆகிவிட வேண்டும் என்று நப்பாசை அந்த நாளில் தோன்றியது. அவருடைய மரபணுவும் என்னுடையதும் வெவ்வேறானவை என்ற ஞானம் அந்த தில்லி நாட்கள் முடியும் முன்பே உருவானது.எனினும் அவ்வப்போது நான் வாசிக்கும் கவிஞர்களில் ஒருவராகியிருந்தார் அருண்கொலட்கர் .

@

கவிஞர்கள் தங்கியிருந்த இந்தியா இண்டர்நேஷனல் செண்டருக்கு மாலை நேரம் வந்து சேர்ந்தார் கொலாட்கர். அவருடைய வருகை ஏதோ திரை நட்சத்திரத்தின் பிரவேசம்போல விமரிசையாகக் கடைப்பிடிக்கப் பட்டது. பெரும்பாலும் வட இந்திய மொழி எழுத்தாளர்களும் தில்லிவாழ் ஆங்கிலக் கவிதை வாசகர்களும் அவரை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அருண்கொலாட்கர் முகத்தில் இறுக்கமான எதிர்வினையே தென்பட்டது. இடையிடையே கட்டாயச் சிரிப்பு மட்டும் நெளிந்தது.

அசலான நாடோடித் தோற்றத்திலிருந்தார் கொலாட்கர். சராசரியை மிஞ்சியதாகத் தோன்றும் உயரம்.நரையும் கருமையும் கலந்த அடர்ந்த சிகை. புருவங்கள் இரண்டும் வெளுத்திருந்தன. அது அவருடைய பார்வையைக் கூர்மைப்படுத்துவதுபோல இருந்தது. கூட்டத்துக்குள்ளும் தனியனாக இருந்தார். அவருக்க்கு மிக நெருக்கமானவர்கள் தவிர வேறு யாருடனும் அரைச் சிரிப்புக்கு அதிகமாகவோ இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு மேலாகவோ எதிர்வினை காட்டவில்லை. ஆசாமி எல்லாரையும் விட முற்றிய கிறுக்கு என்ற அபிப்பிராயமே எனக்கு அப்போது ஏற்பட்டது. அன்று இரவு நண்பர் சந்திரகாந்த் பாட்டீல் மராத்திக் கவிதையில் கொலாட்கரின் இடம் பற்றி விளக்கினார்.

மூன்று தலைமுறைகளாக மராத்தியக் கவிதையுலகில் காத்திரமான பாதிப்பை ஏற்படுத்தி வருபவர் அருண் கொலாட்கர். எழுதியது குறைவு.எனினும் அதன் வீச்சு தீவிரமானது. ஒரு நவீன மனிதன் மராத்திக் கலாச்சாரத்துடன் எந்த விதமாகவெல்லாம் இடையீடு நிகழ்த்த முடியுமோ அந்த எல்லா விதத்திலும் செயல்பட்டவர்.மராத்திக் கவிதையின் பிரதான வடிவங்களை கலைத்துப் போட்டும் உருமாற்றியும் கவிதையில் சோதனை செய்தவர். இலக்கிய வழக்க்குக்குப் பதில் கச்சாவான மராத்தியில் கவிதையை எழுப்ப முடியும் என்று நிரூபித்தவர். அந்த வகையில் அவருக்கு வாசகர்கள் அதிகம். எந்த சித்தாந்தத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதவர்.ஆனால் எல்லா சித்தாந்தங்களும் அவர் கவிதைக்குள் ஊடாடுகின்றன. நீண்ட காலமாக எழுதுபவர். எனினும் அவரது மொத்த கவிதைகளின் எண்ணிக்கை குறைவு.
ஆங்கிலத்திலும் எழுதுகிறார். ஆங்கிலத்தில் எழுதும் முக்கியமான இந்தியக் கவிஞர்களில் கொலாட்கரும் ஒருவர்.

கொலாட்கரைப் பற்றி அன்று இரவு இலக்கிய நண்பர்களுடன் உரையாடித் தொகுத்த விவரங்கள் இவை.கொலாட்கரின் கவிதைகளை விட அவரது வாழ்க்கை சுவாரசியமானதாகத் தோன்றியது. பிரசித்தி பெற்ற ஜே.ஜே.ஓவியக் கல்லூரியில் பயின்றவர். பின்னர் விளம்பர நிறுவனமொன்றில் டிசைனராகவும் கிராபிக் ஓவியராகவும் பணியாற்றினார். அந்தப் பணிகளையும் விருப்பமிருந்தால் மட்டுமே செய்திருக்கிறார். நான் சந்தித்த கால கட்டத்தில் அவருடைய மராத்திக் கவிதைகளின் தொகுப்பு மட்டுமே வெளியாகியிருந்தது. ஆங்கிலக் கவிதைகள் தொகுக்கப் பட்டிருக்கவில்லை. கவிதையைத் தன்னுடைய முதன்மையான ஊடகமாகக் கருதியிருந்த போதும் அவை பற்றி கொலாட்கர் பேசமாட்டார். பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்க மாட்டார். அவரைத் தொடர்புகொள்ளத் தொலைபேசி கூடக் கிடையாது.ஆசாமி
ஒரு நாடோடி.தாந்தோன்றி. ஆங்கிலத்தில் கௌரமாகச் சொன்னால் மாவரிக்.

நண்பர்களின் வர்ணனைகள் ஏதோ சுவாரசிய்த்தைத் தந்தன.அன்று மாலை அவருடைய கவிதை வாசிப்பு இருந்தது. ஜெஜூரி என்ற வரிசையில் அவர் எழுதியிருந்த
கவிதைகளில் சிலவற்றை அவர் வாசித்தார். முதலில் மராத்தியில் தொடங்கிய அவரது வாசிப்பு ஆங்கிலக் கவிதைகளுக்கு மாறியது. கவிதைக்கு அவ்வளவு வாஹ்...
வாஹும் ...கைதட்டலும் கிடைக்கும் என்று கண்டது அன்றுதான்.அவர் வாசித்த மராத்திக் கவிதைகளை பார்வையாளர் கூட்டத்திலிருந்து பல குரல்கள் எதிரொலித்தன.
ஒரு அட்சரமும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலத்துக்கு மாறியதும் காது இளகியது. ஜெஜூரி கவிதைகளிருந்து ஒரு கவிதையை வாசித்தார்.சிரமப்படுத்தாத ஆங்கிலம். எளிமையான காட்சிப்படுத்தல். அடக்கமான நையாண்டி. முடிவாக ஒரு கனத்த மௌனம். அந்தக் கவிதை இன்றும் நினைவிலிருப்பதன் காரணம் அந்த மௌனந்தான். சிதலமடைந்த ஜெஜூரி ஆலயத்தை மையமாகக் கொண்டு நிகழும் சம்பவங்கள்தாம் கவிதையாக ஜெஜூரியில் இடம் பெறுகின்றன. அங்கு வீற்றிருக்கும் தந்தோபா என்ற கடவுளும் கிண்டலடிக்கப்படுகிறார்.

அன்று கவிதை வாசிப்பு முடிந்து இரவுணவுக்குப் பின்னர் இலக்கியவாதிகள் குழுக்களாக அமர்ந்து இலக்கிய விவாதம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இந்தியா இண்டர்நேஷனல் செண்டர் வளாகத்தில் டிசம்பர்ப் பனி விழுந்து மெல்ல மெல்ல ஈரமாகிக் கொண்டிருந்த புல்வெளியில் உட்கார்ந்திருந்தேன். சற்றுத் தள்ளி அருண் கொலாட்கர். கையில் பிடித்திருந்த பளிங்குக் கிண்ணத்தில் பழுப்புத் திரவம் விளக்கொளிபட்டு மின்னிக் கொண்டிருந்தது. அவரை நெருங்கலாமா கூடாதா? என்று யோசித்து முடிப்பதற்குள் அவரே அருகில் வந்தார். 'உன்னுடைய கோப்பை எங்கே? என்றார். பழக்கமில்லை என்றேன். 'பிறகு என்ன கவிஞன்?' என்று சிரிக்காமல் சொல்லி உற்றுப் பார்த்தார். பேச்சை மாற்றுவதற்காக 'உங்கள் கவிதை எனக்குப் பிடித்திருந்தது' என்றேன். 'நன்றி. ஆனால் எந்தக் கவிதை?' ' கோவிலுக்கு அழைத்துப் போவதாக அடம் பிடிக்கும் கிழவியைப் பற்றிய கவிதை'.

சின்னச் சின்னக் கேள்விகளாக நான் என்னென்னவோ கேட்டுக்கொண்டிருந்தேன். அவரும் ஒற்றை அல்லது இரட்டை வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்த உரையாடலின் துணுக்குகள்தான் இப்போது ஞாபகத்தில் மிஞ்சியிருக்கின்றன. ' என்னுடைய தனித்தன்மை என்பது எல்லாவற்றுக்காகவும் திறந்த மனநிலையுடன்
இருப்பது. ஒரு கவிஞனுக்கு இது முக்கியம். இது ஒரு மனநிலையல்ல. இயல்பு. (not a mood an attidue). என் கவிதை ந்ன்றாக இருக்கிறது என்று நீ சொல்லுவது எனக்கும்
உவப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் கவிதையைப் பற்றிப் பேசுவதில் எனக்கு ஒரு பயம் இருக்கிறது. ஏனென்றால் கவிதையை வியாக்கியானம் செய்யும் அருஞ்சொற்கள்
என்னிடம் இல்லை' என்ற வாச்கங்கள் மட்டும் பதிந்திருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நேர்காணல் தொகுப்பில் இதே கருத்தை கொலாட்கர்
சொல்லியிருந்தார்.

நாமும் கொலாட்கர்கர்போல தான் தோன்றித்தனமான கவிஞனாக ஆக முடியுமா? என்று அன்றிரவு முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

@

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலை நேரம் . திருவனந்தபுரத்தில் நான் அப்போது வசித்து வந்த வீடு பத்மநாப சுவாமி ஆலயத்துக்கருகில் இருந்தது. கோவிலின் பின் வாசலையொட்டிய வழியில்தான் பெருமபாலும் என் பயணம். சமயங்களில் ஆல்யத்துக்கு முன்னாலிருக்கும் பத்மதீர்த்தக் குளத்தையொட்டிய வழியில் போக நேரும். அப்போதெல்லாம் ஒரு மூதாட்டி வழியை மறிப்பார். ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதாக மற்ற சுற்றுலாப் பயணிகளிடம் இறைஞ்சுவதுபோலவே என்னிடமும் கெஞ்சுவார். மறுத்து நடக்கும் போதெல்லாம் கையைப் பற்றிக் கொள்வார். இப்படி ஓரிரு முறைகள் நடந்திருக்கின்றன. அந்த மூதாட்டி கையை பற்றும்போதெல்லாம் அந்தத் தொடுகை பழக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இதற்கு முன்னரும் இதே போல ஆலய முற்றத்தில் யாரோ பற்றியிழுத்ததுபோல
உணர்ந்திருக்கிறேன்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு காலை நேரத்தில் அந்த வழியாகக் கடந்து சென்றபோது குளக்கரை வேலிக்கருகில் ஒரு மூட்டை கிடந்தது. நடையை மட்டுப்படுத்திப் பார்த்தேன். மூட்டையல்ல. சடலம். 'ரெண்டு ச்க்கரம் கொடு' என்று இறைஞ்சி அலைந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியின் சடலம். அந்த நொடியில் யாரோ என் கையைப் பிடித்திழுப்பதுபோல உணர்ந்தேன். கூடவே அந்த மூதாட்டி தொட்டபோதெல்லாம் யாரோ தொட்டதாகத் தோன்றியதன் காரணமும் விளங்கியது. அது ஜெஜூரியில் வாசித்த கிழவியின் தொடுகை. கொலாட்கர் பார்த்த கிழவியை நான் பார்த்த்தில்லை. நான் பார்த்த கிழவியை அவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.இருந்தும் கவிதையின் கை எல்லாரையும் தொடக்கூடியதுதானோ?

@