நீலமலை ரகசியம்
@
அண்மையில் நான்
வாசித்த நூல் நீலமலை ரகசியம் . ஆசிரியர் சிவராமன் கணேசன். ஜீரோ டிகிரி
பப்ளிஷிங், ZDP – Specifics என்ற முத்திரையுடன் 2026 இல் நூலை வெளியிட்டிருக்கிறது.
எனது நாவல்
‘வெல்லிங்டன்’ இன் வாசகர் என்ற நிலையில் அறிமுகமான
நண்பர் சிவராமகிருஷ்ணன் (பங்களூரு ) நீலமலை ரகசியம் நூலின் வெளியீட்டு விவரங்களை வாட்ஸ் ஆப் வழியே எனக்குப்
பகிர்ந்திருந்தார். வெல்லிங்டன் நாவலின் கதை நீலகிரியின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது.
ஆகவே நீலமலை பற்றிய நூலை என் கவனத்துக்குக் கொண்டுவருவது பொருத்தம் என்ற
கருத்தில் சிவராமகிருஷ்ணன் பகிர்ந்திருந்தார்.
நீலகிரியைக் குறித்த எந்தச் செய்தியும் எனக்கு
ஆர்வமளிப்பது. எனவே குறிப்பிட்ட நூலின் விவரங்களைப் பெற்ற உடனேயே இணைய வழி ஆர்டர் செய்து இரண்டு நாட்களில் நூல் கிடைக்கப்
பெற்றேன். நூலை விரைந்து வாசிக்கவும் செய்தேன்.
வாசிப்பில் சில ரகசியங்கள் பிடிபட்டன.
‘வெல்லிங்டன்’
நாவலின் முதல் எழுபத்தி ஆறு பக்கங்கள் ஜகதளா என்ற படகர் கிராமத்தில் ராணுவப் பாளையம் எப்படி உருவானது, அதையொட்டி உதகமண்டலம்
என்ற நகரம் எப்படி உருவானது, இந்த நகரத்தை உருவாக்க என்னென்ன முயற்சிகள் நடைபெற்றன,
அந்த நாட்களில் கோயம்புத்தூர் ஜில்லாக் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் எப்படி அந்தத்
திட்டத்தை நிறைவேற்றினார் என்பனவற்றைப் பற்றிப் பேசுகின்றன. இதற்கு ஆதாரமான வரலாற்றுத்
தரவுகளை நாவலில் புனைவு நடவடிக்கைகளாக மாற்றியிருந்தேன். கற்பனையான காட்சிகளையும் உரையாடல்களையும்
எழுதியிருந்தேன். ஒற்றைவரியிலும் சிறு ஆவணக் குறிப்பிலும் விரவியிருந்த தகவல்கள் புனைவின்
நோக்கத்துக்கு ஏற்பக் கற்பனை செய்யப்பட்டிருந்தன.
என்னுடைய நாவலில்
இடம்பெற்றுள்ள பல பகுதிகளை ‘நீலமலை ரகசியம்’ நூலில் சிவராமன் கணேசன் எடுத்துத் தன்னுடைய
எழுத்தாகப் பயன் படுத்தியிருப்பது அவரது நூலை வாசித்தபோது தெளிவாகப் புலப்பட்டது. நீலமலை
ரகசியம் நூலின் 102 பக்கங்களில் ‘வெல்லிங்டன்’ நாவலின் 60 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கும் காட்சிகளை,
வர்ணனைகளை, உரையாடல்களை, உணர்வுகளை, தகவல்களை ஏன் ஜோக்கையும் கூட அநாயாசமாக எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.
‘நீலமலை ரகசிய’த்தை
வாசித்து முடித்ததும் இந்த உண்மை தெரிய வந்தது.
உடனே நூலின் பதிப்பாளர் ராம்ஜியைத் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு விஷயத்தைத் தெரிவித்தேன். எழுத்தாளர் சிவராமன் கணேசனிடம் பேசி விட்டுத் தொடர்பு கொள்வதாகத் தெரிவித்தார்.
அதன் படியே உரையாடிவிட்டு மீண்டும் தொடர்புகொண்டார். சிவராமன் கணேசன் ராம்ஜியிடம் சொன்ன பதிலின் பிரதான
அம்சம். ‘சுகுமாரன் எழுதியிருப்பது ஃபிக்ஷன். நான் எழுதியிருப்பது வரலாறு. நான் ஃபிஷன்’
என்பதே.
என்னுடைய எழுத்தை
எடுத்தாண்டார் என்ற தனிப் புகாருடன் ஒரு பொதுப் புகாருக்கும் இங்கே சிவராமன் கணேசன்
ஆளாகிறார். வரலாற்றிலிருந்து எடுத்த ஒரு தரவு நாவலில் புனைவாக மாறுகிறது. புனைவாக்கப்பட்ட
ஒரு தரவை எப்படி மீண்டும் வரலாற்றுத் தகவலாக மாற்ற முடியும்? அது வரலாற்று மோசடியல்லவா?
இந்தியா முழுவதும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி ஈறாகப் பல இடங்களில் ராமனின் பாதம்
பதிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நம்பப்படுகிறது. அதன் பொருள் அந்தந்த ஊர்களுக்கெல்லாம்
ராமன் வந்தார் என்று சொல்வதா? அதற்கு நிரூபணம் உண்டா? அது நம்பிக்கை சார்ந்த கற்பனை
மட்டுமல்லவா? அந்தக் கற்பனையை வரலாற்று உண்மையாக
முன்வைப்பது மோசடி இல்லையா? சிவராமன் கணேசன் செய்திருப்பது அதைத்தான்.
நூலின் பின்னிணைப்பில்
ஆதார நூல்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார் சிவராமன் கணேசன். அதில் ‘வெல்லிங்டன்
– சுகுமாரன்’ என்பதும் இடம்பெற்றுள்ளது. ஆக, என் நாவலை அவர் வாசித்திருக்கிறார் என்பதும் அதிலிருந்து
பகுதிகளை எடுத்தாண்டிருக்கிறார் என்பதும் இதன் மூலம் வெளிப்படுகிறது. அந்தப் பகுதிகளைச் சில இடங்களில் அப்படியேயும் சில
இடங்களில் திருத்தியும் பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள
பெரும்பாலான ஆதார நூல்கள் ‘வெல்லிங்டன்’ நாவலுக்கு நான் எழுதியிருக்கும் ‘சென்ற காலத்தின்
நிலப்படம்’ (பக்கம் 335 ) என்ற பின்னுரையில் கொடுக்கப்பட்டிருப்பவை.
வெல்லிங்டன்
நாவலின் ( முதல் பதிப்பு 2013, காலச்சுவடு பதிப்பகம் ) 35 ஆம் பக்கத்தில் இடம் பெறும்
பகுதி பின்வருமாறு:
மலைத்
தொடரின் இடையிடையே கிடக்கும் உயரமான இந்தப் பீடபூமிப் பிரதேசங்களில்தான் ஜன சஞ்சாரத்தைப்
பார்க்க முடிகிறது. கிராமங்கள் என்று சொல்வது டம்பமான வார்த்தை. நாலோ ஐந்தோ மண்குடில்கள்.
கூரைக்குப் புல்வேய்ந்திருக்கிறார்கள். எல்லாக் குடில்களுக்குப் பக்கத்திலும் தொழுவம்
இருக்கிறது. சராசரியாக ஒரு குடிசைவாசி நாலு எருமைகளையாவது வளர்க்கிறான் என்று அனுமானிக்கலாம்.
சொற்பமாக விவசாயம் செய்கிறார்கள்
இந்தப் பகுதி
நீலமலை ரகசியம் நூலில் ( 5. முதல் சர்வே , பக்கம் 33 ) இப்படி வருகிறது.
இவற்றைக்
கிராமங்கள் என்று சொல்வது சற்று ஆடம்பரமான பிரயோகம். எண்ணி நான்கைந்து வீடுகள்தான்
இருக்கின்றன. அனைத்தும் மண்குடில்கள். புல்லினாலான கூரை வேய்ந்திருக்கிறார்கள். எல்லாக்
குடிகளின் பக்கத்திலும் தொழுவம் இருக்கிறது. சராசரியாக ஒரு குடிசைவாசி நான்கு எருமைகளையாவது
வளர்க்கிறான். சொற்பமாக விவசாயமும் செய்கிறார்கள்
கதையின் காலம்
நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதால் பழைமையான நடை கையாளப்பட்டது. அதைத் தட்டிக் கொட்டி
சிவராமன் கணேசன் தன்னுடையதாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இரண்டையும் பார்க்கலாம்.
வெல்லிங்டன்
நாவலின் 34 ஆம் பக்கத்தில் உள்ள பகுதி இது.
குதிரைமுடியிலிருந்து
ஏழு மைல் தூரத்திலிருக்கிற மேல்கோட்டைக்கு நாங்கள் வந்து சேர்ந்தது ஒன்பதாம் தேதி.
இதற்கு மேல் செங்குத்தான பாதைகள். ஒற்றைக் கால் வைத்து ஜாக்கிரதையாக நடக்க வேண்டிய
குறுகிய தடங்கள். அதைக் கடக்க மூன்று நாட்கள் வேண்டி வந்ததிலிருந்தே வழியின் அபாயங்களைத்
தெரிந்து கொள்ளலாம்.வழி மட்டுமல்ல. பொழுதுகளும் விநோதமானவை. எந்த நேரத்தில் மழை வரும்
, எந்த நேரத்தில் மேகங்களுக்குப் பின்னால் சூரியன் ஒளிந்து கொள்ளும், எந்த நேரத்தில்
மஞ்சு மூட்டம் கவியும் என்று அனுமானிக்க முடியாத விநோதமான சீதோஷ்ணக் கண்ணாமூச்சி. இந்த
மலைப்பிரதேசத்தின் வசியமே இந்தச் சீதோஷ்ணம்தான்.
இந்தப் பகுதி
சிவராமன் கணேசனின் கையாடலில் நூலின் 35 ஆம்
பக்கத்தில் பின்வருமாறு மாறுகிறது.
இதற்கு
மேல் செங்குத்தான பாதைகள். ஒற்றைக் கால் வைத்து ஜாக்கிரதையாக நடக்க வேண்டிய குறுகிய
தடங்கள். அதைக் கடக்க மூன்று நாள்கள் வேண்டியிருக்கிறது
என்பதிலிருந்தே வழியில் அபாயங்களைத் தெரிந்து
கொள்ளலாம்.வழி மட்டுமல்ல. பொழுதுகளும் விரோதமானவை. எந்த நேரத்தில் மழை வரும்
, எந்த நேரத்தில் மேகங்களுக்குள் சூரியன் ஒளிந்துகொள்ளும், எந்த நேரத்தில் மேகக் கூட்டங்கள்
வானிலிருந்து கீழிறங்கி வெண்படுதா போட்டுப் பாதையை மறைக்கும் என்று அனுமானிக்கவே முடியவில்லை.
விநோதமான காலநிலைக் கண்ணாமூச்சி. இந்த மலைப்பிரதேசத்தின்
வசியமே இந்தக் காலநிலைதான்.
வெல்லிங்டன்
நாவலில் 34 ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருப்பவை இவை.
இங்கிருக்கும்
வனத்துக்கு ஒரு பொது சுபாவமிருப்பதை அவதானித்தோம். மலைகளை ஒட்டிய பகுதியில் கானகம்
இயற்கையின் குகைபோல முடிவற்றுப் போகிறது. உயரமான மரங்கள். அடர்ந்த புதர்கள். செழித்து
வளர்ந்திருக்கும் புல்வெளிகள். மலையின் இடைகளில் காட்டுத் தாவரங்கள் வளர்ந்திருக்கின்றன.சில
இடங்களில் குட்டையாக. சில இடங்களில் ஆளுயரத்துக்கு.
அளவு பார்த்து நட்டு வைத்தது போலத் தெரிகின்றன. அதைச் சோலை என்கிறார்கள். இங்கிலாந்தின்
தெற்குக் கடற்கரைப் பகுதியில்தான் இவ்வளவு கிரமமான தாவர வளர்ச்சியைப் பார்க்க முடியும்.
அந்தி வெயில் விடைபெற்று நகர்கிறபோது சோலைகளும் வெளிச்சத்தைப் பின் தொடர்ந்து நடக்கின்றன.
இந்த வரிகள்
நீலமலை ரகசியம் 35 ஆம் பக்கத்தில் இப்படி மாறுகின்றன.
இங்கிருக்கும்
காடுகளுக்கு ஒரு பொதுச் சுபாவமிருப்பதைக் கண்டுகொண்டோம். மலைகளையொட்டிய பகுதியில் கானகம்
இயற்கையின் குகைபோல முடிவேயற்று நீள்கிறது. உயரமான மரங்கள், அடர்ந்த புதர்கள், செழித்து
வளர்ந்திருக்கும் புல்வெளிகள், மலையில் இடைகளில் இன்னவென்று சொல்ல முடியாத காட்டுத்
தாவரங்கள் வளர்ந்திருக்கின்றன. சில இடங்களில் ஓர் ஆள் உயரத்துக்கு நெருக்கமாகவும் இருக்கின்றன.
அதைச் சோலை என்கிறார்கள். அளவு பார்த்து நட்டுவைத்த இறைவன் யாரென்று தெரியவில்லை. அத்தனை
அழகோடு இருக்கிறது.
இங்கிலாந்தின்
தெற்குக் கடற்கரைப் பகுதியில்தான் இவ்வளவு அடர்த்தியான தாவர வளர்ச்சியைப் பார்க்கமுடியும்.
மாலை வெயில் விடைபெற்றுச் செல்லும்போது சோலைகளும் வெளிச்சத்தைப் பின்பற்றித் தொடர்ந்து
நடக்கின்றன.
இது வெல்லிங்டன்
நாவலின் 36 ஆம் பக்கத்திலுள்ள பத்தி.
சமவெளிக்குத்
திரும்புவது என்று தீர்மானமெடுத்தபோதுதான் இந்தப் பூமியைப் பிரிவதை ஏக்கமாக உணர்ந்தோம்.
கூலிகள் சம்மதிக்கத் தயாராக இல்லாதபோதும் மலைமீது இன்னும் சிறிறுது தூரம் ஏறிப்பார்க்க
ஆசைப்பட்டோம். ஏக்கத்துக்கான பரிகாரம். இல்லையென்றால் மலையின் அழைப்பு. அடுத்த நாள்
காலை மலையேற்றம் முன்பு இருந்ததை விட லகுவாக இருந்தது. வழக்கத்தை விட வேகமாக ஏறி தண்டநாட்டை
அடைந்தோம். இங்கேயிருந்து ஒரு தடம் சோலைகளுக்குள்ளாகவும் வனத்தை ஊடுருவியும் போகிறது.
அது முடியும் இடத்தில் படகர்களின் ஊர் இருப்பதாகச் சொன்னார்கள். ஊரின் பெயர் அழகாக
இருக்கிறது. ஜகதளா. சங்கிலித் தொடர்போல செங்குத்தான மலைகளும் உயரமான குன்றுகளும் ஊரைப்
பத்திரப் படுத்துகின்றன. வோட்டகமண்ட் இங்கிருந்தும் வெகுதொலைவில் கானகங்களுக்கு நடுவில்
ஒளிந்திருக்கிறது. அதை அடைவதுதான் உத்தேசம். ஆனால் எங்கள் சேமிப்பிலிருக்கும் ஆகாரங்கள்
மலையிறங்கும் நாட்களுக்குரியவை. வழிகாட்டிகளின்
மனங்களும் கூலிகளின் மனங்களும் சமதளத்திலிருக்கிற அவர்களின் குடியிருப்புகளுக்கு எப்போதோ
போய்விட்டன. வாபசாவதைத் தவிர வேறு மார்க்கமில்லை.
எங்கள் சாமக்கிரியைகளுடன் நாங்கள் இறங்கிய வேகத்தைப் பவானி ஆறு மலையிறங்கும் ஆவேசத்துடன் உபமானம் செய்யலாம். பன்னிரண்டு நாட்களில்
ஏறிய வழிகளை நாலே நாட்களில் பின்வாங்கச் செய்திருக்கிறோம். அலங்காரமாகச் சொல்வதானால்
யுத்தத்தில் பின்வாங்குவது போலத்தான் இதுவும். பின்வாங்குகிறவனுக்குப் பேச எதுவுமில்லை.
அவன் மனம் பூராவும் யுத்த களத்தின் காட்சிகள் மிஞ்சியிருக்கும். எங்கள் மனதிலும் மலையின் தோற்றங்களும் கானகத்தின்
கேலிச் சிரிப்பும் மிஞ்சியிருக்கின்றன. அந்தச் சிரிப்பின் மையத்தில் வெல்லப்படாத ரகசியமாக
இருக்கிறது வோட்டகமண்ட்.
இந்தப் பகுதி
நீலமலை ரகசியத்தின் 6 ஆவது அத்தியாயம், வெல்லப்படாத ரகசியத்தில் பின்னுள்ளவாறு துண்டாடப் பட்டிருக்கிறது. பக்கம் 38, 39.
சமவெளிக்குத்
திரும்புவது என்று தீர்மானித்த போதுதான் இந்தப் பூமியைப் பிரிவதை ஏக்கமாக உணர்ந்தோம்.
இன்னும் மலையின் அழைப்பு எங்களுடனே இருப்பதாகவே உணர்ந்தோம். இன்னும் சில நாள் திட்டமிட்டு
வந்திருக்கலாமோ என்று யோசித்தோம். எங்களையே சபித்துக் கொண்டோம். மலையில் வீழ்ந்து இறந்த
நஞ்சன் என்ற சிறுவனை நினைத்துப் பயந்தோம். ஒருவேளை கிராமவாசிகள் சொல்வதுபோல தெய்வங்கள்
மலையேறி வருவதை விரும்பவில்லையோ என்று விவாதித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழம்பினோம்.
வொட்டகமண்ட்
என்று இந்தக் கிராமவாசிகள் அழைக்கிற அந்த உச்சிச் சமவெளி இங்கிருந்து வெகுதொலைவில்
கானகங்களுக்கு நடுவே காத்திருக்கிறது. ஆனால் நேரமில்லை. மனமில்லை. கூலிகள், வழிகாட்டிகள்
எங்களுக்கு எதிராக மாறிவிட்டார்கள். நஞ்சனின் மரணத்துக்குப் பிறகு எங்களுக்கும் வேறு
வழி தெரியவில்லை. எங்கள் சேமிப்பிலிருக்கும் உணவுகளின் அளவு குறைந்து போயின. மலையிறங்குவதைத்
தவிர எங்களுக்கும் வேறு வழியிருக்கவில்லை.
நாங்கள்
இறங்கிய வேகத்தை பவானி ஆறு மலையிறங்கும் ஆவேசத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். பன்னிரண்டு
நாள்கள் ஏறிய மலையை நான்கே நாள்களில் பின் தள்ளி வெகு வேகமாக இறங்கியிருந்தோம். யுத்தத்தில் பின்வாங்குவது
போலத்தான் இதுவும். பின்வாங்குகிறவனுக்குப் பேச எதுவுமில்லை. அவன் மனம் முழுவதும் யுத்த
களத்தின் காட்சிகள் மிஞ்சியிருக்கும். எங்கள் மனத்திலும் மலையின் தோற்றங்களும் கானகத்தின்
காட்சிகளும் மிஞ்சியிருக்கின்றன. அங்கே எங்கோ தூரத்தில் ஒளிந்துகொண்டு பழிப்புக் காட்டிக்
கொண்டிருக்கிறது வொட்டகமண்ட். இன்னும் வெல்லப்படாத அந்த ரகசியத்தை, காண முடியாத ஏக்கத்துடனே
திரும்பி வந்திருக்கிறோம்’. என்ற கவித்துவமான வாக்கியத்தோடு விஷ்ஷும் கிண்டார்ஸ்லேயும்
அளித்த நீலகிரி சர்வே பற்றிய அறிக்கை நிறைவடைந்திருந்தது.
ஜான் சல்லிவனால்
நீலகிரி மலையில் சர்வே பணிக்காக அனுப்பப் பட்ட அசிஸ்டெண்ட் கலெக்டர்களான ஜே.சி.விஷ்,
என்.டபிள்யூ, கிண்டர்ஸ்லே இருவரும் அளித்த சர்வே ரிப்போர்ட்டின் வாசகங்களாக நான் எழுதியவற்றை
அங்குமிங்கும் தட்டியும் நீட்டியும் சிவராமன் கணேசன் தனது ‘வரலாற்று நூலி’ல் பயன்படுத்தியிருக்கிறார்.
நீலகிரி கெஸட்டியரில் அறிக்கை பற்றிய தரவுகள் உள்ளன. அவற்றை நான் புனைவாக மாற்றியிருக்கிறேன்.
அதில் இடம் பெறும் வர்ணனைகள், உரையாடல்கள் அனைத்தும் நான் கற்பனை செய்து உருவாக்கியவை.
அதை எந்தக் கூச்சமும் இல்லாமல் வரலாற்றுத் தகவல்களாக சிவராமன் கணேசன் களவாடியிருக்கிறார். எந்த நோக்கத்துக்காக நாவலில் அவற்றை முன்னிருத்தினேனோ
அதேபடியே பயன்படுத்துகிறார். அவற்றை ஒற்றை மேற்கோள் குறிக்குள் உரையாடலாகக் கொடுக்கிறார்.
என்ன புத்திசாலித்தனம்!
நாவலின் 45
ஆம் பக்கத்தில் இந்த உரையாடல் இடம் பெற்றிருக்கிறது.
‘’என்னுடைய
பிரித்தானிய நண்பர் மலைப் பிரதேசத்தை ஆராயப் போகிறாரா, ஆக்கிரமிக்கப் போகிறாரா? ‘’
பயணத்துக்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்த்துக் குழு அங்கத்தினரான அசிஸ்டெண்ட்
சர்ஜன் ஜோன்ஸிடம் கேட்கவும் செய்தார்’’
இதுவே நீலமலை
ரக்சியத்தின் 66 ஆம் பக்கத்தில் இப்படி உருமாற்றம் பெறுகிறது.
அதற்குப்
பதில் சொல்லாமல் ஜோன்ஸுக்கு மட்டும் கேட்கும் குரலில் ‘நாம் மலையேற்றம் செய்யப் போகிறோமா
அல்லது மலைமேல் ஏறி ஏதேனும் போர் தொடுக்கப் போகிறோமா?’
உரையாடல் மட்டுமல்ல.
பயண ஏற்பாடு பற்றிய தகவல்களும் அப்படியே உருவப்பட்டிருக்கின்றன.
நாவலின் 49
ஆம் பக்கத்தில் இந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
வெகுசீக்கிரம்
திம்மட்டிவாசியாகக் கூடும் என்று சல்லிவனின் உள்ளுணர்வு முனகியது. உடலெங்கும் பரபரப்புப்
பற்றிக் கொண்டது.தனது சாதனங்களைச் சுமந்து வந்த கூலியைச் சைகை காட்டி அழைத்தார். அவன்
முதுகுச் சுமையை இறக்கினார். மூட்டைக்குள் மடித்து வைத்திருந்த பிரிட்டிஷ் கொடியை வெளியில்
எடுத்தார். சுருக்கங்களை நீவி விரித்தார். பூக்களுடன் குலுங்கிக் கொண்டிருந்த மூங்கில்
புதரிலிருந்து விளைந்த மூங்கிலைச் சிப்பாயிடம் காட்டி வெட்டியெடுக்கச் சொன்னார். அந்தக்
கம்பில் பிரிட்டிஷ் கொடியைக் கட்டினார். தேக பாரத்தைச் சட்டை பண்ணாமல் முன்னாலிருந்த
பாறைமேல் ஏறினார். ஆவேசம் கொப்பளிக்கும் குரலில் பிரகடனம் செய்தார.
‘இந்த
நீலமலைகளின் கடவுள்கள் இன்று முதல் மாட்சிமை தங்கிய பிரித்தானிய மன்னரின் பிரஜைகள்’
இந்தக் காட்சியைச்
சிவராமன் கணேசன் தழுவியிருக்கிறார். நீலமலை ரகசியத்தின் 69 ஆம் பக்கத்தில். அது இப்படி:
லூயிக்கும்
ஜோன்ஸுக்கும் அது பெரும் வியப்பாக இருந்தது. அவ்வளவாகத் தன்னுடைய இறை நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்காதவர்
சல்லிவன். தனது கனச் சரீரத்தின் எடையைப் பொருட்படுத்தாது அவர் மண்டி போட்டு சிரமப்பட்டு
எழுந்ததைப் பார்த்து கைதிக் குழுவினருக்குச் சிரிப்பு வந்தது. சத்தம் வராமல் சிரித்துக்
கொண்டனர்.லூயி நேரே சென்று சல்லிவனை அணைத்துக் கொண்டார். பிரிட்டிஷ் கொடி ஒன்றை முன்னே சென்ற யானைப்
பாகனிடம் கொடுத்து அதை அவன் பீடத்தில் செருகி வைக்கச் சொல்லி ‘புறப்படலாம்’ என்றார்.
வெல்லிங்டன்
நாவலின் 59 ஆம் பக்கத்தில் இங்கிலாந்திலிருக்கும் தனது மனைவிக்கு தாமஸ் மன்றோ எழுதும்
கடிதம் இடம் பெற்றுள்ளது . அதன் வாசகங்களில் ஒரு பகுதி இப்படியுள்ளது.
இது
மலைப்பிரதேசம். ஆனால் குன்றுகளும் முகடுகளும் பசுந்தாவரத்தால் மூடிக் கிடக்கின்றன.
கல் வடிவத்தின் மீது இயற்கை கொடிகளையும் புதர்களையும் மரங்களையும் போர்த்தியிருக்கிறது.
வெறும் கல் ஒன்றைக் கூட நான் பார்க்கவில்லை என்றால் உன்னால் நம்ப முடிகிறதா?
பின்வரும் வரிகள்
நீலமலை ரகசியம் பக்கம் 102 இல் பின்வருமாறு இடம் பெறுகின்றன.
இது
மலைப்பிரதேசம். ஆனால் குன்றுகளும் முகடுகளும் பசுந்தாவரங்களும் மூடிக் கிடக்கின்றன.
வெறும் கல்லென்று இந்த மலையில் ஓர் இடத்தைக் கூட நான் பார்க்கவில்லை என்றால் உன்னால்
நம்ப முடிகிறதா?
நாவலின் 60
ஆம் பக்கத்தில் அதே கடித வாசகங்கள் இப்படி இடம் பெற்றிருக்கின்றன.
இந்தக்
கடிதத்தைக்கூட பெரிய கம்பளிக் கோட்டைப் போட்டுக்
கொண்டுதான் எழுதுகிறேன். அப்படியும் விரல்கள் நடுங்குகின்றன. நீ வாசிக்கும் எழுத்துக்கள்
வடிவமில்லாமலிருந்தால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல. வோட்டகமண்டின் சீதோஷ்ணம் அப்படி.
இதே வாசகங்கள்
சிவராமன் கணேசனின் நூலின் 102 ஆம் பக்கத்தில்
இடம் பெறுகின்றன.
இந்தக்
கடிதத்தை பெரிய கம்பளிக் கோட்டைப் போட்டுக் கொண்டுதான் எழுதுகிறேன். ஆனாலும் விரல்கள்
நடுங்குகின்றன. நீ வாசிக்கும் எழுத்துக்கள் வடிவமில்லாமல் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
வொட்டகமண்டின் சீதோஷ்ணம் அப்படி.
மேலே எடுத்துக்
காட்டப்பட்டுள்ளவை அனைத்தும் என்னுடைய வெல்லிங்டன் நாவலிலிருந்து சிவராமன் கணேசன்
தனது நீலமலை ரகசியம் வரலாற்று நூலில்
திருடிச் சேர்த்திருக்கும் பகுதிகள். இந்தச்
செயல் ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதை உறுதியாகப் பதிவு செய்கிறேன்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளைத் தன்னுடைய நூலில் எடுத்துக் கொண்டிருக்கும் சிவராமன் கணேசன் அதிபுத்திசாலித்தனமாகச் சில திருத்தங்களையும் செய்திருக்கிறார். நாவலின் நடையில் பழைமை தெரிய வேண்டும் என்பதற்காக நான் பயன்படுத்தியிருந்த வடமொழிச் சொற்களைத் தனித்தமிழ்ச் சொல்லாக மாற்றுகிறார். டம்பம் ( ஆடம்பரம் ), சீதோஷ்ணம் ( காலநிலை ), ஜவாப்தாரி ( பொறுப்பு ), மஞ்சு மூட்டம் ( வெண்படுதா ), ஆகாரம் ( உணவு ) – இவை சில உதாரணங்கள். ஒரு புனைவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள இயலாத ஒருவர் செய்யும் குயுக்தி இது. முகத்தில் மச்சத்தை ஒட்ட வைத்துக் கொண்டால் ஆளே அடையாளம் மாறி விடுவார் என்ற சினிமாத் தந்திரம் இது.
இந்தக் களவாடலும்
அதையொட்டிய கைவேலைகளும் ‘தெரியாமல் நடந்து விட்டவை’ என்று சிவராமன் கணேசன் கூறுகிறார்.
@
ராம்ஜியின் அறிவுறுத்தலின் படி சிவராமன் கணேசன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டார். எனது சென்னைப் பயணம் காரணமாக அவருடன் உடனடியாகப் பேச முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவை திரும்புவேன். அன்று பேசலாம் என்று அவருக்குப் பதில் சொன்னேன். இடையில் ‘சிவராமன் பேசினாரா?’ என்று விசாரித்த ராம்ஜிக்கும் விவரங்களைத் தெரிவித்தேன். ‘சிவராமனை உங்களை நேரில் சந்திக்கும்படிச் சொல்லியிருக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.
சென்னையிலிருந்து
கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சிவராமன் கணேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
பயணத்தில் இருப்பதைச் சொல்லி அன்று மாலை கோவையில் என் வீட்டில் சந்திக்கலாம் என்றேன். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீட்டு முகவரியையும் இட விளக்கப் படத்தையும் அனுப்பி
வைத்தேன்.
8. 6.2026 அன்று
மாலை எங்கள் சந்திப்பு நடந்தது. பாதிப்புக்குள்ளானவன் என்பதால் சந்திப்பில் அதிகம்
பேசியது நானே. என் தரப்பிலான வாதங்களை விரிவாகவே
முன்வைத்தேன். தெரியாமல் நடந்து விட்டது என்ற அவரது சமாதானத்தை என்னால் ஏற்க முடியவில்லை.
அவர் வெல்லிங்டன் நாவலை வாசித்திருக்கிறார் என்பதற்கு நீலமலை ரகசியம் நூலின் பின்னிணைப்பே
சான்று. இங்கே பட்டியலிட்டுக் காட்டியிருக்கும்
உருவல்களே அத்தாட்சி. இது தெரிந்தே செய்தது. எனவே பிழை அல்ல. திருட்டு. எனவே குற்றம்.
ஆகவே அவரது மன்னிப்பு இக்கட்டைச் சமாளிக்கும் தந்திரமே தவிர ஆத்மார்த்தமான ஒப்புதல்
அல்ல. இதில் எனக்குக் கோபமில்லை. பெரும் வருத்தமிருக்கிறது.
எழுத்தின் நேர்மை பற்றிய சந்தேகமிருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன். ‘தெரியாமல்
நடந்து விட்டது, மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்பதையே அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் மன்னிக்கிற பெருந்தன்மை எனக்கு இல்லை என்பதையும் உறுதியாகச் சொன்னேன்.
நீலமலை ரகசியம் நூலைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். அது என்னுடைய
விஷயமல்ல. அவர் பிரச்சனை. நூலை வெளியிட்டவர்களின் பிரச்சனை. ஆனால் இந்த முறைகேட்டைப்
பற்றிப் பொது வெளியில் பேசுவேன். எழுதுவேன் என்று அழுத்தமாகவே தெரிவித்தேன். அதன் விளைவே
இந்த நீண்ட விளக்கம். என்னைத் தேடி வரும் ஒரு நண்பரை எந்த அளவுக்கு மதித்து உபசரிப்பேனோ
அந்த மதிப்புடனும் விருந்தோம்பலுடனுமே சிவராமன் கணேசனுக்கு விடை கொடுத்து அனுப்பவும் செய்தேன். ஏனெனில் அவர்
தன்னை எழுத்தாளன் என்று அறிவித்துக் கொள்ள விரும்புபவர். எழுத்தாளனின் பணி கேளிக்கையானதோ
பெயரீட்டும் உத்தியோ பொருளீட்டும் தொழிலோ அல்ல; வாழ்வின் பகுதி என்று நான் நம்புவதுதான்
காரணம். அதைத் தெரிவிக்க விரும்பியதுதான் இந்த ஆதங்கத்துக்கு அடிப்படை.
வெல்லிங்டன் நாவலின் முதல் பதிப்பு 2013 இல் வெளியானது.
இதுவரை ஐந்து பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. சில ஆயிரம் படிகள் விற்பனையாகி இருக்க்
கூடும். இங்கு விற்பனையைக் குறிப்பிடுவது அதன்
வணிக மதிப்பை முன்னிட்டு அல்ல. சில நூறு வாசகர்களாவது நாவலை வாசித்திருப்பார்கள் என்பதை
எடுத்துக் காட்டவே. 2026 இல் வெளிவந்திருக்கும் நீலமலை ரகசியத்தின் பகுதிகளை
2013 லேயே நான் களவாடி விட்டேன் என்று அந்த வாசகர்கள் கருதி விடக் கூடாது என்ற எண்ணமே
இதைப் பொதுவெளியில் பகிரக் காரணம்.
வெல்லிங்டன்
நாவலின் குறிப்பிட்ட
76 பக்கங்கள்- நீலகிரியின் உருவாக்கம் உள்ளிட்டவற்றைக் கொண்ட பகுதிகள் - சில ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு மூலமும் சான்றாதார
நூல்களின் வாசிப்பு மூலமும் நீலகிரி தொடர்பான ஆய்வுகளைச் செய்திருக்கும் வல்லுநர்களுடன்
நடத்திய உரையாடல்கள் மூலமும் பெற்ற தகவல்களைக் கொண்டவை. சான்றாதாரங்கள் பொதுவானவை.
அவை எதுவும் நான் கண்டுபிடித்தவையல்ல. யாரும்
பயன்படுத்தக் கூடியவை. அவற்றின் மீது எனக்கு முற்றதிகாரம் இல்லை. தனிப்பட்ட உரிமை இல்லை.
ஆனால் அந்தத் தகவல்களையும் தரவுகளையும் புனைவில் நான் கையாண்டிருக்கும் முறை எனக்கே
உரியது. அந்த வரிகளும் வர்ணனைகளும் உரையாடல்களும்
சித்தரிப்புகளும் காட்சிகளும் என் கற்பனையில் உருவானவை. என் சிந்தனையில் உருவானவை.
என் உழைப்பின் விளைவு. என்னுடைய அறிவுசார் சொத்து. என் உடைமைப் பொருள்.
அதைத்தான் சிவராமன் கணேசன் ஜேப்படி செய்து
தன்னுடையாக ஆக்கியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது.
@












