கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

 


                                             ஐ ம் ப து 


                                                          

என் இலக்கிய வாழ்க்கையின் ஐம்பதாவது ஆண்டு இது. 

பதினாறு பதினேழாவது வயதில் எழுதிய கவிதைகளும் கதைகளும் கண்ணதாசன், தாமரை, தீபம்  இதழ்களில் வெளிவந்தன. பள்ளி இறுதி வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தபோதே இலக்கியத்தின் மீதான மாளாத காதல் முளைவிட்டிருந்தது. அது துளிர்த்து வந்த பருவத்தில்  கதையாகவும் கவிதையாகவும் எழுதிய பிள்ளைக்கிறுக்கல்களை ஆசிரியர்களும் சில நண்பர்களும் சில பெண்களும் பாராட்டிச் சொன்னார்கள். அவற்றில் சில பத்திரிகைகளிலும் வெளியாயின. கவிதைப் போட்டிகள் சிலவற்றிலும் பங்கேற்றேன். அப்படி வாசித்த ஓரிரு செய்யுள்கள் பள்ளி ஆண்டு மலரிலும் உள்ளூர் நாளிதழின் ‘கலைப் பூங்கா’விலும்  வெளிவந்தன. அவை மகிழ்ச்சியளித்தாலும் அன்று மூர்க்கமாக ஈடுபட்டிருந்த வாசிப்பும் இலக்கியம் அறிந்தவர்களின் ஆலோசனைகளும் அந்தச் சொல்வித்தைகளின் ஆழமின்மையையும் கச்சாத்தனத்தையும் சுட்டிக் காட்டின. அவற்றைக் களைவதற்காக வாசிப்பில் மேலும் தீவிரமாக மூழ்கினேன். அதிலிருந்து பாடங்களைப் பயின்றேன். ‘உனக்கே உனக்காகச் சொல்ல எதுவும் இல்லையென்றால் எழுதாதே’ என்ற எச்சரிக்கையைக் கற்றுக் கொண்டேன். அதுவரை எழுதிய சரக்குகளைக் கைவிட்டேன். ‘சொல் எளிது, பொருள் வலிது , புலன் புதிது’ என்று எழுத்துக்கான வரையறையைத் தீர்மானித்துக் கொண்டேன். அதன் பின்னர் எழுதியவை இதழ்களில் வெளியாயின. பாராட்டையும் பெற்றன. அவையும் அத்தனை சிலாக்கியமானவையல்ல; எனினும் என்னுடைய விரலடையாளம் பதிந்தவை என்பது ஆறுதலாக அமைந்தது.

 

இன்று கவிதை என்று நான் நம்பும் வடிவத்தில் எழுதிய கவிதைகளில் சில எழுபதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் ஓர் இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்து கொண்டிருந்த கண்ணதாசன் இதழில் வெளியாயின. அது 1974 ஆம் ஆண்டு என்று மனதில் பதிந்து போயிருந்தது. அந்த மனப் பதிவின் அடிப்படையில் ‘சுகுமாரன் கவிதைகள்’ மொத்தத் தொகுப்பில் அவற்றைச் சேர்த்தேன். தொகுப்பின் தலைப்பில் 1974 – 2019 என்றும் குறிப்பிட்டிருந்தேன். நாகர்கோவில் சுந்தர ராமசாமி நூலகத்தில் பார்க்கக் கிடைத்த கண்ணதாசன் இதழ்களிருந்து அந்த வருடத்தைக் கண்டுபிடித்திருந்தது நினைவிலிருந்தாலும் அதைச் சரி பார்க்க விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக நான் பார்வையிட்ட அந்த இதழ்களைத் திரும்பப் பார்க்க இயலவில்லை. நூலக வருகையாளர் எவரோ அவற்றைத் திரும்ப ஒப்படைக்க மறந்திருக்க வேண்டும்.

 

என்னுடைய இலக்கியப் பிறப்பு ஆண்டு தொடர்பான சந்தேகத்தை நண்பர் பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷிடம் பகிர்ந்து கொண்டேன். ‘கவலையை விடுங்க, கண்டுபிடித்து விடலாம்’ என்றார். தளரா முயற்சியுடன் வெவ்வேறு நூலகங்களை அணுகியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணதாசன் இதழில் வெளிவந்தவற்றிலிருந்து  தேர்ந்தெடுத்த ஆக்கங்களை ஒரு தொகுப்பாகக் கண்ணதாசன் பதிப்பகம்  சில ஆண்டுகளுக்கு முன்பு  வெளியிடப்பட்டது. அந்தத் திரட்டில் என் கவிதையோ கதையோ இல்லை. பதிப்பகத்தாரின் சேகரத்திலுள்ள இதழ்களைப் பார்வையிட  அனுமதி கோரியும் பலனளிக்கவில்லை.

 

ஆண்டு 74 ஆக இருந்தால் என்ன 75 ஆக இருந்தால் என்ன? எழுத வந்த ஐம்பது வருடங்கள் ஆயிற்று என்றிருந்தால் போதாதா? துல்லியமாக நிரூபிக்கவும் என்று யாராவது கட்டாயப்படுத்தினார்களா?  இது என்ன சரித்திர ஆவணமா? இல்லை , இலக்கியச் சேவைக்கு  ஓய்வூதியம் கொடுக்கப் போகிறார்களா? என்ற கேள்விகள் உள்ளுக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. கடைசியில் வரலாறே பிழைகளின் தொகுப்புத்தானே, அதில் 74லோ 75 எதுவானால் என்ன? அதுவும் உபரிப் பிழையாக இருக்கட்டும் என்று அமைதியானேன். விவகாரத்தை மறந்தும் போனேன்.

 

பணி நிமித்தம் நாகர்கோவிலுக்குப் போன மாதம் சென்றிருந்தபோது நண்பர் சீனிவாச கோபாலனைச் ( அழிசி பதிப்பகம் ) சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க.நா.சுப்ரமண்யத்தின் காணக் கிடைக்காத எழுத்துக்களைத் தேடி சுந்தர ராமசாமி நூலகத்துக்கு வந்திருந்தார். அவருடைய தேடலுக்கு இடையே என்னுடைய ஆரம்பக் காலக் கவிதை ஒன்றையும் கண்டுபிடித்துத் தந்தார். தீபம் 1975 ஜனவரி இதழில் கவிதை வெளிவந்திருந்தது. அவர் அதைக் காண்பித்தபோது  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு அந்தக் கவிதையின் தோற்றுவாய், வெளியீடு பற்றிய நினைவுகள் மேலெழுந்தன. அந்த உந்துதலில் நண்பரைத் தொடர்பு கொண்டு அவர் கண்டுபிடித்துப் படமாகப் பதிவு செய்திருந்த அந்தக் கவிதையை அனுப்பித் தரும்படிக் கேட்டுக் கொண்டேன். வாட்ஸ் அப் வழியாக அனுப்பித் தந்தார்.


                                                                                                   தீபம் ஜனவரி 1975

 

நீண்ட கவிதையொன்றின் நான்கு வரிகள் தீபம் இதழில் வெளிவந்திருந்தன. அதுவும் பெட்டித் துணுக்காக இடம் பெற்றிருந்தது. ( ( நா.பார்த்தசாரதி நல்ல எடிட்டர்தான் ) .  உண்மையில் அது கவிதைக்குரிய எந்தக் குணத்தையும் கொண்டிருக்கவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது கலந்து கொண்ட கவிதைப் போட்டி ஒன்றில் வாசிப்பதற்காக தயார் செய்த சரக்கு. போட்டியில்  இரண்டாம் பரிசாக அறிவிக்கப்பட்ட 75 ரூபாய் பரிசையும் பெற்றது. அந்தக் கவிதையை எழுதிய மிகக் குறுகிய காலத்திலேயே நான் என்னுடைய கவிதையாக்க  முறையைக் கண்டறிந்திருந்தேன். அந்த முறையில் எழுதிய கவிதைகள் தாம் கண்ணதாசன் இதழில் வெளிவந்தவை. கவியரங்கக் கவிதையை அனுப்பினேன் என்று நினைவிருந்ததே தவிர எந்த இதழுக்கு என்பது பதியவில்லை. அதுதான் தீபம் இதழில் வெளியாகியிருந்தது. அதே கவிதையின் இன்னொரு துண்டு  மற்றொரு இதழில் வெளிவந்ததும்  ஞாபகத்திலிருக்கிறது.

 

1974இல் அல்லது 75 இல் இலக்கியவாதியாகப் பிறப்பெடுத்தேன் என்று நானாகக் கணித்துக் கொண்ட ஜாதகத்தின்படி என் இலக்கிய வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் அதிகமாக எழுதிக் குவித்து விடவில்லையென்றாலும் தொடர்ச்சியாக இயங்கியிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது. கலையின் பாதையிலான பயணம் இறுதி நிறுத்தம் இல்லாதது என்ற பிரக்ஞை தொடக்கத்திலேயே உறுதியாகியிருந்தது. என் எழுத்து எனக்குக் கழிவிரக்கம் ஏற்படுத்தி விடக் கூடாத ஒன்றாக இருக்க வேண்டும், என்னை வெட்கித் தலைகுனியச் செய்யாததாக இருக்கவேண்டும், தளுக்கானதாகவோ பொய்யானதாகவோ இருக்கக் கூடாது  என்ற வீம்புகளை இன்று வரை கடைப்பிடிக்க முடிந்திருக்கிறது என்பதும் மகிழ்ச்சியின் இன்னொரு பக்கம்.

 

எழுத வந்து ஐம்பது ஆண்டுகளாகி விட்டன என்று தற்செயலாக நண்பர் ஒருவரிடம் சொன்னேன். பதிலுக்குக் கேள்விகளை எய்ய ஆரம்பித்தார். ‘திரும்பிப் பார்த்தால் என்ன தொன்றுகிறது? இத்தனை கால எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்? எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?’ நண்பரின் எந்தக் கேள்விக்கும் என்னிடம் உடனடியான பதில் இருக்கவில்லை. பின்பு யோசித்தபோது இப்படிச் சொல்லியிருக்கலாம்  என்று தோன்றியது.

 

சூசன் சாண்டாக்கின் புகழ் பெற்ற வாசகம் ஒன்று உண்டு.  ‘நான் எழுத்தாளர் ஆகவேண்டும் என்று எழுத வரவில்லை. இலக்கியம் என்று ஒன்று இருப்பதனால்தான் எழுத்தாளர் ஆனேன்’. என்பதுதான் எப்போதும் என்னுள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வாசகம். தவிர, ஓர் எழுத்தாளனின்  எழுத்துக்களை மதிப்பிட வேண்டியது அவற்றை வாசித்தவர்களும் காலமும்தான். ஏதோ ஒன்றைத் தமது இருப்பின் அடையாளமாக விட்டுச் செல்ல எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள். நான் இங்கே இருந்தேன் என்பதற்கும் என்னவாக இருந்தேன் என்பதற்குமான தடயம் என் எழுத்து. இருப்பின் பொருள் அங்கீகாரமோ புகழோ அல்ல. இருப்பதுதான்.

 

இந்த பதிலைச் சொன்னது நண்பரிடமல்ல, என்னிடமே. எனினும் ஐம்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் உழன்று கொண்டிருப்பதற்கான இருப்பு நியாயம் இங்கே இருக்கிற வளமான இலக்கியம். முப்பத்து ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து பதினேழு ஆண்டுகள் மட்டுமே இலக்கியப் பணியில் ஈடுபட்ட பெருங்கவிஞனும் நாற்பத்திரண்டு வயதுவரையே ஜீவித்து,  பதினைந்து ஆண்டுகள் மட்டுமே எழுத்தில் செயல்பட்ட பெருங்கலைஞனும் உயிர் கொடுத்த  மொழிக்குள் நாமும் இருக்கிறோம் என்ற பெருமிதமே அந்த இருப்பு நியாயத்தின் உட்கிடக்கை. இதைப் புரிந்து கொள்ளத்தான் ஐம்பது ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கின்றன.

@

நன்றி: சீனிவாச கோபாலன் ( அழிசி ), சுப்பிரமணி இரமேஷ்


 

 

 

 

 


வியாழன், 10 ஏப்ரல், 2025

குளிர் தருவின் நிழல்

                                                          குளிர் தருவின் நிழல்

என்னுடைய கணினிக் கோப்புகளை அண்மையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். முன்பு எழுதிய சில கட்டுரைகளும் கவிதைகளும் அங்கங்காகச் சிதறி ஒளிந்திருந்தன. அவற்றை வரிசைப்படுத்தவும் விலக்கவும் ஒருமுறை வாசித்துப் பார்ப்பது நல்லது என்று வாசிப்பில் ஈடுபட்டேன். சில கட்டுரைகள் வாசிப்புக்குச் சேதாரம் விளைவிக்காதவையாக இருந்தன. அவற்றில் ஒன்று என்னுடைய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். கமலேசுவரனைப் பற்றி எழுதிய கட்டுரை. பேராசிரியரின் எண்பத்தைந்தாம் வயது நிறைவையொட்டி அவரது நண்பர்களும் நலம் விரும்பிகளும் மாணவர்களும் பங்கேற்ற  மலருக்காகக் கட்டுரையை எழுதினேன். மலர் வெளிவந்திருந்தும் காணக் கிடைக்கவில்லை. வெளிவந்திருந்தாலும் பரவலாக வசிக்கப்படும் வாய்ப்பில்லை. எனவே கட்டுரையைப் பத்திரப்படுத்தி வைக்கும் நோக்கிலும் பேராசிரியரின் மாணவர்கள் எவராது அவரை நினைவுகூரலாம் என்ற ஆசையிலும்  எவருக்காவது சின்ன அளவிலாவது பயன்படலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இங்கே பகிர்கிறேன்.





                            டாக்டர்  கே எஸ் கமலேசுவரன் துணைவியாருடனும் மாணவர்  பெருமாள் முருகனுடனும்  


 

தன்னிடம் பயின்ற மாணவர்களைக் குறிப்பாக நினைவில் வைத்துக் கொள்வது ஓர் ஆசிரியருக்கு இயலாத செயல். ஆனால் தங்கள் மீது நல்லாதிக்கம் செலுத்திய ஆசிரியரை மாணவர்கள் எப்போதும் நினைவுகூர்வது இயல்பு. எனக்குக் கற்பித்த ஆசிரியர்களில் நினைவில் அகலாது நிற்கும் தகுதியுடையவர்களில் பேராசிரியர் டாக்டர். கே. எஸ். கமலேசுவரனும் ஒருவர். அவரிடம் பயின்றவன், அவரது ஆளுமையால் பாதிப்படைந்தவன் என்ற நிலைகளில் அவர் எனக்கு மறத்தற்கு அரியவர்.

 

எனது கல்லூரிப் படிப்பைக் கோவை,  பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் மேற்கொண்டேன். புகுமுக வகுப்பு, பட்ட வகுப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் தமிழ்ப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தவர்களில் கமலேசுவரனும் ஒருவர். செய்யுட் பகுதிகளைக் பேராசிரியர். பாஸ்கரதாசும் உரைநடை, துணைப்பாடப் பகுதிகளைக் கமலேசுவரனும் கற்பித்தார்கள். அவர்களிடம் கற்ற தமிழ்தான் இன்று ஓர் எழுத்தாளனாகவும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வம் கொள்பவனாகவும் வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானது. சரியாக அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்னரும் அந்த நினைவுகள் பசுமை மங்காமல் மிளிர்கின்றன. அந்தப் பாடங்கள் காலாவதியாகாமல் தொடர்கின்றன.

 

புகுமுக வகுப்பில் முதல் தமிழ்ப் பாடவேளையிலேயே டாக்டர். கமலேசுவரன் அறிமுகமானார். நான் பயின்றது உயிரியல் பிரிவில். அந்தப் பிரிவின் தலைவரான தாவரவியல் பேராசிரியர் ராஜாராம் முதலில் அறிமுகமானார். இரண்டாவது அறிமுகமானவர் தமிழ்ப் பேராசிரியரான கமலேசுவரன் அவர்கள்.  கறுத்த குள்ளமான உருவம். அரைக் கை சட்டையும் கால் சராயும் அணிந்த தோற்றம். வகிடெடுத்து ஒழுங்குபடுத்தினாலும் ஒதுங்காமல் நெற்றியில் விழும் கோரை முடி, அதை அடிக்கடி ஒதுக்கி விட உயரும் கைகள். தடித்த கண்ணாடி. இந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த முதல் நொடி இன்னும் நினைவில் இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு அவரைப் பற்றிய எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. ஆனால் மாணவர்களைத் தோழமையுடன் ‘குஞ்சுகளா’ என்று அழைத்த பாங்கு என்னை அவர்பால் ஈர்த்தது. அவருடைய மாணவனாக இருந்த நாள்கள் அனைத்திலும்  அந்த அழைப்பைக் கேட்கும்  வாய்ப்பு அமைந்தது.

 

அன்று புகுமுக வகுப்புப் பாடத்திட்டத்தில் புதுமைப் பித்தன், அகிலன், ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், அறிஞர் அண்ணா ஆகியோர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இடம் பெற்றிருந்தது. தொகுப்பின் முதல் கதை புதுமைப் பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’. கமலேசுவரன் முதல் வகுப்பில் பேசியதும் அதைப் பற்றித்தான். மாணவர்களுடனான அறிமுகத்துக்கும் ஆசிரியரின் தன்னறிமுகத்துக்கும் பிறகு கதையைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். கதையை முன்னிருத்தியதற்குக் காரணம் அறிமுக  வகுப்பிலேயே மாணவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்க வேண்டும். ஆனால் அது எல்லா மாணவர்களுக்கும் உகந்ததாக இல்லை. அந்தப் பேச்சு  நான் ஏற்கனவே அறிந்த உலகத்துக்கு என்னை மீண்டும் அழைத்து செல்லும் வாசலாக இருந்தது. ‘புதுமைப் பித்தன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்ற அவருடைய கேள்விக்குத் தயக்கத்துடன் எழுந்து உற்சாகத்துடன் புதுமைப்பித்தன் தொடர்பாகச் சில வார்த்தைகளைச் சொன்னேன். அப்போது அந்தத் தடித்த கண்ணாடிக்குப் பின்னால் அவருடைய விழிகள் விரிந்து சிரித்ததைக் காண முடிந்தது. பிந்தைய ஆண்டுகளில் அந்த விழிநகையைப் பல முறை பார்க்க முடிந்தது.

 

அன்றைய பாடவேளை முடிந்ததும் தமிழ்த் துறைக்கு வந்து பார்க்கும்படிச் சொன்னார். போனேன். என்னைப் பற்றி விசாரித்தார். என்னுடைய இலக்கிய ஆர்வத்தைக் குறித்துக் கேட்டார். ‘புதுமைப்பித்தன் யார்னு கேட்டா எம்ஜியார் படத்தைப் பற்றித்தான் சொல்றாங்க. என்ன பண்றது? நீ சொன்னது ஆச்சரியமா இருந்ததுப்பா’ என்று பாராட்டினார். ஓர் இளம் இலக்கிய ஆர்வலனுக்கு அது பெரும் ஊக்கம். பின்னர் அவ்வாறு பல முறை ஊக்கமூட்டியிருக்கிறார்.

 

அப்போது கல்லூரியில் ‘மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும்  மாணவர்’ இதழ் ஒன்று வெளியிடப்பட்டது. பெயர் ‘புது வெள்ளம்’. மாணவர் இதழ் எனினும் பொறுப்பாளராகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் முத்துராமலிங்கம் இருந்தார். அதன் முதல் இதழிலேயே என்னுடைய கதை ஒன்று வெளிவந்தது. இரண்டாம் இதழில் கவிதையும் கதையும் வெளியாயின.  அவற்றை ஒட்டித் தமிழ்த்துறைக்கு அடிக்கடி செல்லும் தேவையும் வாய்ப்பும் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் அதிகமும் சந்தித்தது டாக்டர். கமலேசுவரனைத்தான் என்பது தற்செயல்  அல்ல. துறையின் பிற பேராசிரியர்களுடன் உரையாடுவதை விட அவருடன் உரையாடுவதன் மூலம் புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது என்பதே காரணம். அந்தப் போக்குவரத்தில் நவீனச் சிற்றிதழ்களையும் புதிய புத்தகங்களையும் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்த்துறை நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துச் சென்று வாசிக்கும் சலுகையையும்  அளித்திருந்தார்.

 

புகுமுக வகுப்புக்குப் பிறகு எனது படிப்பில் ஓர் ஆண்டு இடைவெளி விழுந்தது. வெறும் பட்டப்படிப்புக்குப் பதிலாக வேறு படிப்பை விரும்பினேன். குடும்பப் பொருளாதாரச் சூழலால்  அந்தக் கனவு நிறைவேறாமல் போனது. ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே கல்லூரியின் இளம் அறிவியல்- வேதியியல் பட்ட வகுப்பில் சேர்ந்தேன். அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் பார்த்து வியந்த அற்புதமான கல்லூரி நூலகத்துக்குச் செல்லவும் என் தமிழைச் செம்மைப்படுத்த உதவும்  தமிழாசிரியர்களைச் சந்திக்கவும் மீண்டும் கிடைத்த வாய்ப்பு அந்த மகிழ்ச்சியின் பின்னணி.

 

இடைவெளி ஏற்பட்டிருந்த ஓராண்டில் நிறைய வாசிக்கவும் கவனத்துடன் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன். அதை எனக்கு உணர்த்தியவரும் டாக்டர். கமலேசுவரன் அவர்கள்தான். பட்ட வகுப்பின் முதலாம் ஆண்டைப் பெரும்பாலும் கல்லூரி நூலகத்திலேயே செலவழித்தேன். பாடத்துக்குத் துணையாகும் புத்தகங்களை வாசித்ததை விட இலக்கிய நூல்களை வாசித்ததே அதிகம். அப்படி ஒரு நாள் நூலகத்தில் நான் வாசித்துக் கொண்டிருந்தேன். வாசித்துக் கொண்டிருந்தது ஓர் ஆங்கில நூல். பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவவாதியுமான சார்த்தரின் ‘ எக்சிஸ்டென்ஷியலிசம் ( Exisitentialism ? ) என்ற நூல். வாசிப்பில் மூழ்கியிருந்தபோது புத்தகத்தின் மீது நிழல் விழுவதை உணர்ந்தேன். என் முதுகுப் பக்கமாக இருந்து நான் வாசித்துக் கொண்டிருந்த நூலின் பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் பேராசிரியர். வகுப்பு நடக்கும் நேரத்தில் ஒருவன் அத்துமீறலாக நூலகத்தில் இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்து விட்டார் என்ற அச்சத்தில் எழுந்து நின்றேன். அவர் புத்தகத்தை எடுத்து முகப்பைப் பார்த்து விட்டு மேசைமீதே வைத்தார். ‘அடே குஞ்சு நீ இதையெல்லாம் படிக்கிறியா என்ன? ‘ என்று கேட்டு விட்டு நகர்ந்தார். அச்சம் நீங்கிப் பெருமூச்சு விட்டேன். அந்த நாளின் சுப விளைவு மறுநாள் தெரிந்தது.

 

அடுத்த நாள் உயிர் வேதியியம் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அறை வாசலில் பேராசிரியர் கமலேசுவரன் வந்து நின்றார். வகுப்பை நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுதாகரிடம் அனுமதி கோரி என்னை வெளியே அழைத்தார். போனேன். கையிலிருந்த கனமான புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ‘நீதான் எக்சிஸ்டென்ஷியலிசம் படிக்கிறியே, இதையும் படி’ என்று அவர் கொடுத்த புத்தகம் சார்த்தரின் ‘இருப்பும் இன்மையும்’ ( Being and Nothingness ). அவர் கொடுத்தது என்பதனாலேயே அந்தப் புத்தகத்தை விழுந்து விழுந்து படித்தேன். அவரிடம் திரும்பக் கொடுத்தபோது ‘படிச்சேன் சார், ஆனா ஒண்ணும் புரியல’ என்றேன். ‘சரி , புரியவரைக்கும் படி. அதை நீயே வெச்சுக்கோ’ என்றார். மிக நீண்ட காலம் அந்தப் புத்தகம் என் புத்தகச் சேகரிப்பில் இருந்தது. பேராசிரியரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. இருப்பிடம், ஊர் மாற்றங்களில் அந்த நூல் காணாமற் போனது. ஆனால் அந்த இன்மை பேராசிரியரின் இருப்பைப் பற்றிய உணர்வைப் போக்கி விடவில்லை.

 

பேராசிரியர் கமலேசுவரனின் வகுப்புகள் ஆர்வமுள்ள மாணவருக்கு சுவாரசியம் அளிப்பவை. பாடப் பொருளைச் சார்ந்து தீவிரமாக அமைந்தவை. மையப் பொருளை விட்டு விலகாத பயிற்று முறை அவருடையது . மையப் பொருளை ஒட்டிய வெளி விவரங்கள், சம காலத் தகவல்கள் இடம் பெறும் . இவையெல்லாம் பாட வேளையின் ஒரு மணி நேரத்தின் முக்காற் பங்கில் நிறைவேறும், எஞ்சிய கால் மணி நேரம் ஏறத்தாழ அரட்டைப் பொழுதுதான். ஆனால் அந்த அரட்டையிலும் பயனுள்ள தகவல்களும் புதிய பார்வைகளும் நிச்சய்ம் இருக்கும். சமயங்களில் நகைச்சுவையும் ததும்பும். அந்த நகைச்சுவை காலமெல்லாம் நினைத்துச் சிரிக்கவைப்பதாகவும் . இலக்கியத்தில் இடம் பெறும் வருணனைகளப் பற்றி ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்தார். ‘புலவர் சொல்கிற வர்ணணைகளை ஆராய்ந்து பார்த்தால் வில்லங்கமாக இருக்கும் . அன்ன நடைன்னு சொல்றாங்க இல்லையா, அதைப் பார்த்திருக்கீங்களா? சகிக்காது. பொச்ச ஆட்டீட்டு நடக்கறதப் பார்த்தா நல்லாருக்குமா?’ என்று கேட்டதும் வகுப்பே அதிர்ந்து சிரித்தது. இன்றும் அந்த கூட்டுச் சிரிப்பு ஞாபகத்தில் முழங்குகிறது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குச் செம்மொழித் தகுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் , அ.ராமசாமியின் முன்னெடுப்பில் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். நண்பர் பெருமாள் முருகனும் கலந்து கொண்டிருந்தார். அவரது உரை கேட்க அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவனாக நானும் அமர்ந்திருந்தேன். உரை இயல்பாகத் தொடங்கி வகுப்பறைப் பாட வேளையாக மாறியது. மெல்ல மெல்லத் தகவல்கள் கோக்கப்பட்டு வளர்ந்து உச்சத்தை எட்டியது. முடியும்போது தீவிரமான வகுப்பறையில் பாடம் கேட்ட உணர்வு எழுந்தது. கூடவே இதே போலப் பாடம் நடத்துவதை முன்பே கேட்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஓடியது. சற்று நேரம் யோசித்த பின்னர் மூலம் பிடிபட்டது. அது பேராசிரியர் கமலேசுவரனின் பயிற்று முறை. முருகனும் அவர் மாணவர் என்பது நினைவுக்கு வந்ததும் பேராசிரியரின் பாதிப்புப் புலப்பட்டது.

 

என்னுடைய கல்லூரி நாட்களில் கமலேசுவரனை இளநிலை பட்ட வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கற்றுத்தரும் வாத்தியாராக மட்டுமே அறிந்திருந்தோம். ஏனெனில் அன்று முதுநிலைப் பட்ட வகுப்பில் மட்டுமே தமிழ் தனிப்பாடமாக இருந்தது. அவருக்கு அணுக்கமான மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே அவரது ஆளுமையின் இன்னொரு பக்கத்தை அறிந்திருந்தார்கள். மொழியியலாளராக அவரது பங்களிப்பைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அவரை ஒரு மொழியியல் ஆய்வாளராக நான் அறிந்து கொண்டதும் எதிர்பாராத செயல். அது அவரும் பங்களிப்புச் செய்து வந்த ‘புலமை’ இதழ் மூலம் நிகழ்ந்தது. அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த இதழ்களில் புலமையும் இருந்தது. ஆனால் அது என்னுடைய வாசிப்புக்காகக் கொடுக்கப் பட்டதல்ல. எனது இன்னொரு ஆசிரியரான கோவை ஞானியிடம் சேர்ப்பிக்க என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. எல்லா இதழ்களையும்புரட்டிப் பார்ப்பதுபோல அதையும் புரட்டிப் பார்த்ததில் பேராசிரியரின் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. வாசிப்பில் எழுந்த ஐயங்களை அவரிடம் கேட்டேன். ‘இன்னிக்கு சாயங்காலம் வகுப்பு முடிந்ததும் துறைக்கு வா’ என்றார். சென்றேன். ‘ராத்திரி வீட்டுக்கு வரலேன்னா தேட மாட்டங்கன்னா என் கூட வா’ என்றார். எங்கள் பகுதியிலிருந்து வந்து படிக்கும் சக மாணவரிடம் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கச் சொல்லி விட்டு அன்று மாலை அவருடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அன்றைக்கு அவர் மட்டுமே இருந்தார். தயாராக இருந்த உணவை அருந்தி முடித்த பின்பு அவரது மொழியியல் வகுப்பு நடைபெற்றது. புதிய திசையின் கதவுகளைத் திறந்து விட்ட சிறப்பு வகுப்பு அது. அன்று அதன் பயன் தெரியவில்லை. இலக்கியத்தில் மும்முரமாக ஈடுபட்ட காலத்தில் புதிய பேசுபொருளாக மொழியியலும் இடம் பெற்றபோது அவர் எடுத்த தனி வகுப்பின் பொருத்தம் விளங்கியது.

 

டாக்டர். கமலேசுவரன் மரபான தமிழ்ப் பேராசிரியர் அல்லர் என்பது என் கருத்து. பிற தமிழாசிரியர்களிடம் காணப்பட்ட தமிழ் வெறி அவரிடம் காணப் பட்டதில்லை. அவரிடம் கண்டது தமிழ் மீதான பற்றும் அதை அறிவியல் சார்ந்து பார்க்கும் அணுகுமுறையும். அவரது ஒப்பாய்வுகளிலும் மொழி ஆய்வுகளிலும் ஓர் இலக்கியப் பயிற்சியாளனாக எனக்குத் தேவையானதாக எடுத்துக் கொண்டது அந்தப் பார்வையைத்தான். கல்லூரிப் பருவத்துக்குப் பின்பு அவரை அனேகமாகச் சந்தித்ததில்லை. அது விட்டகுறையாக இப்போது உறுத்துகிறது. தொடர்பில் இருந்திருந்தால் இன்னும் திட்பமான எல்லைகளை இலக்கியத்திலும் எட்டியிருக்க முடியும். முடியாமற் போனது பேரிழப்புத்தான்.

 

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அவருக்கு என்னையும் எனக்கு அவரையும் அடையாளம் தெரியவில்லை. நினைவூட்டல் அவருக்குப் பயனளிக்கவில்லை என்பது உரையாடலில் விளங்கிற்று. அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் கடந்திருந்தன. உடல் தளர்ந்திருந்தது. நினைவு அந்தி வெளிச்சத்தை அடைந்திருந்தது. இரண்டு விஷயங்கள் அன்று சட்டென்று புலப்பட்டன. ஒன்று; முன்னாள் மாணவனை பன்மையில் அழைத்தார். இரண்டு : குஞ்சு என்ற வாஞ்சையான முகமனை மறந்திருந்தார். அவற்றை அவரும் அவரது துணைவியாரும் உபசரிப்பால் ஈடுகட்டினார்கள். முதிய வயதிலும் இளமை மிளிர அவர்கள் காட்டிய விருந்தோம்பல் என்றும் நினைவில் சுவை குன்றாமலிருக்கும்.

 

இந்தச் சந்திப்புக்குப் பிறகும் ஏனோ அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற முனைப்பு உருவாகவில்லை. அதையும் பேராசிரியரே நிறைவேற்றினார். சென்ற ஆண்டு ( 2023 ) இதய நோய் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானேன். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் அது பொருட்படுத்தப்பட வேண்டாதது  என்பதால் அதைப் பற்றி யாருக்கும் தெரிவிக்கவும் விரும்பவில்லை. ஒரு நாள் காலை தொலைபேசி அழைத்தது. ‘’ நான் கமலேசுவரன் பேசுகிறேன். அறுவைச் சிகிச்சை பற்றிக் கேள்விப்பட்டேன். நலமாக இருக்கிறீர்களா?’’ என்று விசாரித்தார். விசாரிப்புக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியாதபடி குரல் தழுதழுத்தது. கண்கள் நிறைந்தன. அந்தப் பெருந்தன்மைக்கு முன் பேச்சு வரவில்லை.

 

பெருமரங்கள் நிழல் கொடுக்கின்றன. அந்தக் கொடையை மரங்கள் நினைவில் கொள்வதில்லை. ஆனால் நிழலை உணர்ந்தவன் அந்தக் கொடையை மறப்பதில்லை. பேராளுமையான கமலேசுவரனின் நிழலில் இளைப்பாறிய ஆயிரக் கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்பது கிடைத்த வாய்ப்பு அல்ல; கிட்டிய பேறு.

                                                                                    @

புகைப்படத்துக்கு நன்றி: பெருமாள் முருகன்

 


 


 

 

 

 

 

 

 

வெள்ளி, 3 ஜூலை, 2020

இரு மேதைகளுக்கு நூற்றாண்டு










என் ரசனையில், வாழ்வில், எழுத்தில் குறிப்பிடத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திய இரண்டு ஆளுமைகளின் நூற்றாண்டு இது. அவர்கள் தி.ஜானகிராமனும் சத்யஜித் ராயும். இருவரும் ஒரே ஆண்டுடில் அடுத்தடுத்த மாதங்களில் பிறந்தவர்கள். மாணிக்தா 1921 மே மாதத்தில். தி.ஜா. 1921 ஜூனில்.

இலக்கியம், கலை பற்றிய அடிப்படையான தெளிவு உருவாகி வந்த பருவத்தில் வாசித்தும் பார்த்தும் அவர்கள்மேல் ஏற்பட்ட ஆராதனை உணர்வு இன்றும் கலையாமலேயே இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு முறை அவர்களது படைப்புகளை எதிர்கொள்ளும்போதும் அவர்கள் மீதான மதிப்புக்கு மாற்றுக் கூடிக்கொண்டே போகிறது. ஆராதனை உணர்வும் அதிகரித்தவாறே இருக்கிறது.

எனக்கு வாய்த்த நல்லாசிரியர்களின் உபயத்தால் உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே நவீன இலக்கியப் படைப்புகளுடன் உறவு ஏற்பட்டது. சோம சுந்தரம் என்ற சோமுசாரால் ஜெயகாந்தன் கதைகள் அறிமுகமாயின. என் இலக்கிய வாசிப்பின் குவிமையம் அதுதான். அதிலிருந்தே நவீன இலக்கியத்தின் முன்னோடிகளையும் அன்றைய சமகால ஆளுமை களையும் கண்டடைந்தேன். அவர்களில் மிகவும் வசீகரித்தவர்களில் ஒருவராக இடம் பிடித்தார் தி.ஜானகிராமன். 1970 ‘கல்கி’ தீபாவளி மலரில் வெளியாகி இருந்த அவருடைய ‘கடைசி மணி’ என்ற கதைதான் அவரது உலகத்துக்குள் நுழைய ஒலித்த முதல் மணி. பதின்மூன்று வயதுப் பையனாக அந்தக் கதையில் பெற்ற வாசிப்பனுபவம் அறுபதைக் கடந்த இந்த வயதிலும் தொடர்கிறது. அந்தச் சிறுகதை தி.ஜானகிராமனின் மொத்த உலகத்துக்கும் இட்டுச் சென்றது.

அன்று சுவாரசியமும் இன்பமும் அளிப்பவையாக வாசித்த படைப்புகள் வயது ஏறஏற நுட்பங்கள் கொண்டவையாகவும் அனுபவம் திரளத்திரள வாழ்வின் தருணங்களைக் கற்பிப்பவையாகவும் மாறின. இன்று வாசிக்கும் போது இதுவரை புலனாகாத பலவற்றையும் அவை வெளிப்படுத்துகின்றன. புதிய கண்டுபிடிப்பு மனநிலைக்குக் கொண்டு செல்கின்றன. ‘உயிர்த்தேன்’ நாவலை முதலில் வாசித்தபோது, தி.ஜானகிராமனின் சிறந்த நாவல் அல்ல என்ற எண்ணமே மேலோங்கியது. அறுபதுகளில் நடைமுறையிலிருந்த இலட்சிய வாத நாவல்களைப் போல இவர் ஏன் எழுதினார்? என்ற ஏமாற்றமே எழுந்தது. பலமுறை, பல தருணங்களில் உயிர்த்தேனை வாசித்தும் ஆரம்பக் கருத்து மாறவில்லை. ஓர் இடைவெளிக்குப் பின்னர் அண்மையில் மீண்டும் வாசித்தபோது இதுவரை பார்க்காத பல கூறுகளை வியப்புடன் காண முடிந்தது.

திரை அரங்கின் இருளில் ஓடிய ஆவணப்படம். தமிழ் நாடு அரசு செய்தித் துறையின் படம். படத்தின் தலைப்பு ‘பாலா’. வெள்ளித் திரையில் எழுத்து, குரல், இயக்கம் என்ற ஒற்றை வரிக்குக் கீழே பார்த்த பெயர் சத்யஜித் ராய். மகத்துவம் தெரியாமல் கவனத்துக்கு வந்த பெயர் மனதில் பதிந்தது.

பின்னர் மாற்றுச் சினிமா மீது ரசனை திரும்பியபோது அவரது படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பு அவரை ஆகச் சிறந்த திரைக் கலைஞராக ஏற்கச் செய்தது. ராயின் படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பதும் அவற்றைப் பற்றியும் அவரைப் பற்றியுமான விஷயங்களை வெளியிட்ட இதழ்களையும் நூல்களையும் சேகரிப்பதும் இயல்பானது. காலப்போக்கில் எல்லாப் படங்களின் பிரதிகளையும் வாங்கிப் பாதுகாக்கவும் தொடங்கினேன். ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதுவரை காணாத கோணமும் பொருளும் புதிதாக மேலெழுந்து வரும் அனுபவத்தை உணர்கிறேன்.

உணர்ச்சி பொங்கி வழிகிற வார்த்தைகளில் உயர்வுநவிற்சியாக எழுதுவதிலும் பேசுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. சில சந்தர்ப்பங்கள் உடன்பாட்டை மீறச் செய்திருக்கின்றன. தி.ஜானகிராமனையும் சத்யஜித் ராயையும் நேரில் சந்தித்துப் பேசிய தருணங்களை, வாழ்நாளில் கிடைத்த பேறு என்று உயர்வு நவிற்சியாகத்தான் சொல்ல முடிகிறது. அவர்களது படைப்புகளில் தோய்ந்து பெற்ற அனுபவமே அவர்களை ஆராதனைக்கு இலக்காக்கி இருந்தன. எனினும் முதல் சந்திப்பில் காட்டிய வாஞ்சையும் இணக்கமும் பெருந்தன்மையும் அவர்கள் ஆராதனைக்கு உரியவர்கள் என்பதை அழுத்தமாகத் தெரிவித்தன. அந்தச் சந்திப்புகள் நினைவில் இன்னும் பசுமை குன்றாமல் மிளிர்கின்றன. அன்று தோன்றிய மதிப்பு இம்மியளவும் குறையாமல் நிலைத்திருக்கிறது.

இருவரையும் சந்தித்த இடமும் நாளும் பொழுதும் இப்போதும் புத்தியில் துல்லியமாகப் பதிந்திருப்பது அந்த மதிப்பின் காரணமாகத்தான். கிடைத்தற்கரிய தருணங்களை மனம் அவ்வளவு எளிதாக மறந்து விடாது அல்லவா?

1982 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி சென்னை, திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தி.ஜானகிராமனைச் சந்தித்தேன். சந்தித்தோம் என்பதுதான் சரி. சிறு பத்திரிகைகளின் கூட்டமைப்பான இலக்கு அமைப்பின் கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் ஜனவரி 2, 3 தேதிகளில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காகக் கோவையிலிருந்து நண்பர் ஆறுமுகம், கோவைவாணன் என்ற துரை ஆகியோருடன் சென்னை சென்றிருந்தேன். நாங்கள் தங்கியிருந்தது கணையாழி அலுவலகத்துக்கு நான்கு கட்டடங்களுக்கு அப்பால் இருந்த ஆசிரியர்கள் சங்கக் கட்டடத்தில். காலை உணவுக்குப் பிறகு ‘பக்கத்தில்தான் கணையாழி அலுவலகம். ஜானகிராமன் தானே இப்போது பத்திரிகை ஆசிரியர். போனால் அவரைப் பார்க்கலாம், இல்லையா?’ என்று அகத் துள்ளல் வெளியில் தெரிந்து விடாதபடி சாதாரணமாகச் சொல்வதுபோலச் சொன்னேன். நண்பர்களும் இலக்கிய ஆர்வலர்கள். எனவே இசைவு தெரிவித்தார்கள். பத்து மணி அளவில் அலுவலகம் சென்று விசாரித்துக் கொண்டிருக்கும் போதே தி.ஜானகிராமன் உள்ளே வந்தார். அறிமுகங்களுக்குப் பின்பு அலுவலகத்திலேயே அமர்ந்து பேசினோம். சற்றுக் கழித்துக் காப்பி சாப்பிட அழைத்ததும் தயக்கமில்லாமல் உடன் வந்தார். தெருவின் மறுகோடியிலிருந்த முரளி கபேயில் இரண்டாவது சுற்றுக் காப்பி அருந்தும் வரையிலான இரண்டு மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அன்று அவர் அலுவலகப் பணியைத் தொடங்கியது பன்னிரண்டு மணிக்குத்தான். விடைபெற்றுக் கொண்டபோதுதான் இலக்கு கூட்டம் பற்றி விசாரித்தார். விவரங்களைச் சொன்னோம். காலையிலேயே ஆரம்பமாகி விட்ட கூட்டத்துக்கு உணவு இடைவேளையின்போதுதான் எங்களால் போய்ச் சேரமுடிந்தது. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நிகழ்ச்சிகள் தொடர்ந்தபோது நுழைவாயிலில் தி.ஜானகிராமன் நிற்பதைப் பார்த்தேன். ஓடிப் போய் அவர் கைகளைப் பற்றி – காலையிருந்து அவர்தான் மிகவும் நெருக்கமாகி விட்டாரே – உள்ளே அழைத்து வந்து அமரவைத்தேன். பழகிய, புதிய இலக்கியவாதிகளுடன் அவர் பேசுவதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தேநீர் இடைவேளையில் கல்லூரி நண்பன் சீனிவாசன் என்னைப் பார்க்க வந்தான். அவனும் ஜானகிராமன் வாசகன்; இசைப் பித்தன். ‘காலையில் ஜானகிராமனைப் பார்த்தேன்’ என்றதும் அவன் கண்களில் சின்னப் பொறாமை மின்னியது. ‘இங்கே வந்திருக்கிறார்’ என்று அவரைச் சுட்டிக் காட்டினேன். பொறாமைக் கனல் அப்போது பரிவுச் சுடராகக் கண்களில் பளபளத்தது. தேநீருக்காகக் கூட்டம் கலைந்ததும் தி.ஜானகிராமனும் எழுந்தார். வாசலை ஒட்டி நின்றிருந்த என்னையும் சீனியையும் நெருங்கினார். ‘நான் புறப்படறேன். திருவான்மியூர் போகணும். இப்பப் போனால்தான் இருட்டுவதற்குள் வீடு சேர முடியும்’ என்றார். சீனிவாசனை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அதுவரை என்னை ஒட்டி நின்றிருந்த சீனிவாசன் முன்னால் போனான். தி.ஜானகிராமன் எதிரில் நின்று ‘அபிவாதயே’ என்று தொடங்கி முணுமுணுத்து விட்டு நெடுஞ்சாண் கிடையாகக் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தான். அவன் தலையில் இரு கைகளாலும் வருடி விட்டு வரட்டுமா?’ என்று புன்னகையுடன் படியிறங்கினார் தி.ஜானகிராமன். அதி நவீனர்களும் கருத்துப் போராளிகளுமான இலக்கியவாதிகளும் வாசகர்களும் குழுமியிருக்கும் இடத்தில் சீனிவாசன் அப்படிச் செய்தது என்னைக் கூச்சத்தில் நெளிய வைத்தது. கூடவே அந்த படவாப் பயலுக்கு கிடைத்த ஏதோ ஒன்று எனக்கு வாய்க்காமல் போன ஏக்கமும் கவ்வியது.

சத்யஜித் ராயுடனான சந்திப்பு ஜானகிராமனைச் சந்தித்ததுபோல எளிதாகக் கைகூட வில்லை. தொழில் நிமித்தமாகக் கல்கத்தாவுக்குப் போவது என்ற முடிவின் பின்னணியில் ராயைப் பார்க்கும் மறைமுகத் திட்டமும் இருந்தது. ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்கவில்லை. கல்கத்தாவில் இருந்த ஒரு வாரக் காலத்தில் பலமுறை முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கடைசியில் ஊர் திரும்பும் நாளுக்கு முன் தினம் சந்திப்புக்கான நேரம் கொடுக்கப்பட்டது. மாலை நான்கு மணி.

அன்று 1988 நவம்பர் 20. கல்கத்தா லாஸோ ராய் சாலையிலிருந்த அவரது வீட்டில் சந்தித்தேன். ‘சென்னையிலிருந்து ஒருவன் மாணிக்தாவைப் பார்க்க இத்தனை தூரம் வந்திருக்கிறான்’ என்ற பச்சாத்தாப அடிப்படையில் அனுமதிக்கப்பட்டேன். புகைப்படங்களில் பார்த்துப் பழகியிருந்த விசாலமான அறையில், சாய்வு நாற்காலியில் அமர்ந்து மடியில் ஓர் எழுது பலகையை வைத்து அதன் மீது வங்காள மொழியில் அச்சிட்ட பிரதிகளைத் திருத்திக் கொண்டிருந்தார். முன்னால் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டு கால், அரை வார்த்தைகளில் பேசினேன். அவரும் ஒற்றை, இரட்டை வார்த்தைகளில்தான் பதில் சொன்னார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு இடமும் மனிதரும் பழகி விட்ட தெம்பில் கொஞ்சம் நீளமாகப் பேச முடிந்தது.

‘அவருக்கு உடல் நலம் சரியில்லை. விருந்தினர்கள் யாரையும் சந்திக்க அனுமதிப்பது இல்லை. வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். நான்கைந்து நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் அனுமதிக்கிறோம். பத்தே பத்து நிமிடங்கள்தான்’ என்ற நிபந்தனையின் பேரில்தான் சந்திக்க முடிந்தது. அரை மணி நேரத்துக்குப் பின்னர்தான் அந்த நிபந்தனை நினைவுக்கு வந்தது. எழுந்து கொண்டேன். கைகளைக் குவித்து விடைபெற முன்னால் நின்றேன். சத்யஜித் ராய் எழுதுபலகையை கொஞ்சமாக முன்னால் நகர்த்தி உட்கார்ந்த நிலையிலேயே அவரது இரு கைகளையும் நீட்டி என்னுடைய புறங்கைகள் இரண்டையும் தொட்டார். அவர் கைகளை விலக்கியதும் ஒரு கணம் யோசித்தேன். யாருடைய கால்களிலும் விழுந்து வணங்குவது கூடாது என்ற பகுத்தறிவுப் பிடிவாதம் மனதில் இருந்தது. அவர் என் கைகளைத் தொட்ட நொடியில் அந்தப் பிடிவாதம் காணாமற் போனது. குனிந்து சாய்வு நாற்காலியைத் தாண்டி நீட்டியிருந்த அவரது பாதங்களைத் தொட்டு நிமிர்ந்தேன். அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் நடந்தபோது மனது விம்முவதை உணர்ந்தேன்.

சத்யஜித் ராயைச் சந்தித்தபோது இருந்த மனநிலை தி.ஜானகிராமனைச் சந்தித்தபோது ஏன் இல்லாமல் போனது? என்று பிந்தைய ஆண்டுகளில் பலமுறை யோசித்திருக்கிறேன். அன்றைய கூச்சமும் பிடிவாதமும் சரியானவைதானா என்று எனக்குள்ளேயே கேட்டிருக்கிறேன். நண்பன் சீனிவாசனுக்குக் கிடைத்த ஜானகிராமப் பரிவு என் தலைமீது ஏன் சொரியவில்லை என்று குமைந்திருக்கிறேன். தி.ஜானகிராமனின் இரு நாவல்களுக்கு முன்னுரை எழுதவும் மொத்தக் கதைகளைத் தொகுக்கவும் இதுவரை தொகுக்கப்படாத கதைகளைத் தேடித் திரட்டித் தொகுக்கவும் கட்டுரைகளைத் திரட்டவுமான பணிகள் என்னிடம் கொடுக்கப்பட்டபோது இந்தக் குமைச்சல் விடைபெற்றது. அவரது பாதங்களைத் தொட்டு வணங்கும் மன நிலைதான் இந்தப் பணிகளுக்கு உந்துதல் என்பது புலனாகிறது.

தி.ஜானகிராமன், சத்யஜித் ராய் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசியது ஒரு சில மணி நேரங்கள்தாம்.அந்தக் குறுகிய பொழுதுகள் வாழ்நாள் முழுவதும் பேணிக் கொண்டிருக்கும் அளவு மகத்தானவை. ஒரு குடம் அமுதம் மட்டுமா, ஒரு சொட்டு அமுதமும் ஆயுளுக்கும் நீடித்திருக்கும்.

தி.ஜானகிராமன் ஓவியம் : நன்றி - சுந்தரன்

வெள்ளி, 25 ஜனவரி, 2019

செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல - முதல் பார்வை

புதிய கவிதைத் தொகுப்புக்கு வந்த முதல் எதிர்வினை இது. நண்பர் சிவராஜ் பாரதிக்கு மிக்க நன்றி.






அளவு என்பது எண்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. அளவு என்ற வரையறை விரிவானது, ஆழமானது. கவிஞர் சுகுமாரனின் எழுத்துகளுக்கும் இது பொருந்தும். கவிதை என்பது உணர்வல்ல, அது ஒரு அனுபவம். படைப்புகள் உருவாவதில்லை, அவை வெளிப்படுகின்றன. கவிஞனின் மொழியாளுமையையும் கற்பனாவாதத்தையும் கருவியாகக் கொண்டு படைப்பு தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது. அதில் கவிஞனுக்கான இருப்பையும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்கிறது. அப்படியொரு கவிதானுபவம் தான் "செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல".


அன்பிற்கும் மதிப்பிற்கும் மட்டுமல்ல கவிதைக்குமுரிய கவிஞர். சுகுமாரனின் ஏழாவது கவிதைத் தொகுப்பு இது. 46 கவிதைகளின் அரூப கணங்களைச் சுமக்கின்ற சிற்றுரு  நூல். "ஜியார்ஜியா ஓ' கீஃபி"யின் ஓவியம் கொண்ட அட்டை வடிவமைப்பே முழுமையான கவிதானுபவத்திற்கு வரவேற்பாய் அமைகிறது. நூல் முழுதும் கவிஞரின் கவிதாதிகாரம் தான்! ' சொற்கள் சுடர்க!' எனும் முன்னுரைக் கரையிலிருந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று 'கவிதை'க்குள் கால்நனைத்து, மெல்ல கடலுக்குள் இறக்கி, மூழ்கவைத்து நம்மை தனியே விட்டுவிட்டு அவர் மாயமாய் மறைந்துவிட்ட உணர்வு. நல்ல கவிதைக்கு தொடக்கம் இருக்கலாம், முடிவு இருக்கிறதா என்று தெரியவில்லை. சுகுமாரனின் கவிதைகள் முடிவதில்லை, அது மௌனமாய் (அ) ' செவி துளைக்கும் ஈனப்புலம்பலாய்' நமக்குள் பயணித்துக் கொண்டே இருக்கிறது.


"செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல" என்ற தலைப்பே என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. முதன்முதலில் தலைப்பை படித்ததும், இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் கவிஞர் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கிழமைகளுக்கு நாம் அந்த பெயர் வைத்துவிட்டோம் என்பதனாலேயே அதை அந்தப் பெயரைக் கொண்டுதான் அழைக்கத் தேவையில்லை  என்று சொல்ல  வருகிறாரா? அல்லது செவ்'வாய்' என்பதைக் குறிக்கிறாரா என்று குமைந்து கொண்டிருந்தேன். கவிதையை படித்ததும் வேறு விதமாக புரிந்து கொண்டேன். மனிதனின் மரணத்துக்குப் பிறகு அவன் சூட்டிய கிழமைகளின் பெயர் என்னவாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் கவிஞர் என்று தோன்றியது. இது சரியான புரிதலா என்றுகூட தெரியவில்லை. சுகுமாரனின் மொழி என்னை ஏளனமாகப் பார்க்கிறது. உன் அறிவுக்கெல்லாம் என் பொருள் எட்டிவிடும் என்று நீ நினைக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதா என்று புலம்புவது என் காதில் விழுகிறது.


தாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதையை மேற்கோளாக காட்டி தன்னை விளக்க முற்படுகிறார் கவிஞர் சுகுமாரன். ஆனால் சுகுமாரனின் கவிதைகள் அவரை ஒதுக்கவோ வெளியே தள்ளவோ முயலவில்லை. அது அவருக்குள்ளேயே விதைந்து, முளைத்து, நெறித்து, தெறித்து விழுகிறது. வெளியே 'நிகழ்கால' கவிதையாய் விழாமல் உள்ளேயே 'வருங்கால' கவிதைக்கான விதையாய் விழுந்தது தான் அதிகம் என்று தோன்றுகிறது. 'கவிஞர் இசைக்கு' என்ற குறிப்புடன் அவர் எழுதியிருக்கும் கவிதையில், மகாகவி இசை நடைபெயர்ச்சி செய்கிறார், அவரோடு காற்றும் ஒளியும், புல்லும் புழுவும், புள்ளும் நாயும் பூனையும், மனிதர்களும் நடைப்பயிற்சி செல்கின்றன. அவ்வப்போது பிசாசும் கடவுளும் மகாகவி இசையுடன் நடைப்பயிற்சி செல்வதாக எழுதுகிறார். 

"......
வீடு திரும்பும்போது
கூட வந்தது பிசாசென்றால்
மகாகவி கவிதை எழுதுகிறார்
தெய்வமென்றால்
இசை சண்டை போடுகிறார்."

என்று முடிக்கிறார். நான் இதை இப்படியும் புரிந்து கொள்கிறேன். புனைவு என்பது பிசாசின் செயல், நேரடியான விவாதம் (சண்டை) என்பது கடவுளின் செயல். ஒரு கேள்வியும் எழுகிறது. பிசாசும் கடவுளும் அல்லாமல் பூனையுடனோ நாயுடனோ திரும்பி வந்தால், மகாகவி இசை என்ன செய்திருப்பார்? கவிஞர் சுகுமாரனுக்கே வெளிச்சம்! 


"ஹைக்கூ"வின் அழகியலை ஆச்சரியத்தை சுகுமாரன் தான் கட்டமைக்கும் அனைத்து வடிவமைப்புக்குள்ளும் கச்சிதமாக பொருத்துகிறார். அவருடைய கவிதைகள் முடிவதேயில்லை. ஒன்று அது எல்லையற்ற வெளிக்குள் நம்மை உலவவிடும் அல்லது மீண்டும் தொடக்கத்துக்கே அழைத்துவந்து அந்தாதி விளையாட்டு ஆடும். கவிதைகளின் இறுதி வரிகள் இத்தகைய அனுபவத்தைத் தான் தரும்.  'ஒரு சொல் இருந்தால்' என்ற கவிதையை, 
".....
ஆனால் 
அந்த சொல் இருக்கிறதே
கரைக்குக் கடல் தூரத்தில்..."

என்று முடித்திருக்கிறார். அந்தக் கரைக்கும் கடலுக்குமான தூரத்தில் நான் நெடுநேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். அதேபோல் "ஆழல்" என்ற கவிதையை ' அடையாக் கண்களுடன் ஆழலாம்' என்று முடித்திருப்பார். மொழி இவரது செல்லக் குழந்தையாகி, மிக அழகாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. 'ஆழல்' என்ற சொல்லுக்காகவே சுகுமாரனைக் கொண்டாடலாம். 


படைப்பு தன்னை சாதாரணமாய் வெளிப்படுத்த முனைந்தாலும், சுகுமாரனின் அசாதாரணம் விட்டுவிடவில்லை. "எனினும்" கவிதை எளிமையாக சாதாரணமாக தொடங்குகிற போதே, இப்படி தான் முடியும் என்பதும் ஊகிக்க முடிகிறது. ஆனால் இறுதிவரிக்கு முந்தைய வரியில் வெளிப்படுகிறது சுகுமாரனின் அசாதாரணம். முன்னுரையின் இடையிலும், பின்னட்டைக் குறிப்பின் கடையிலும் வரும் வரிகளோடு, "எனினும்" கவிதையின் இறுதிப்பகுதியை ஒப்பிட்டுப் பார்த்த நொடியில் சுகுமாரனின் அசாதாரண ஒளி பளிச்சிட்டது.


கவிஞரின் மீமெய்மையில் நம்முடைய பல கோட்பாடுகள், புரிதல்கள் எல்லாம் கட்டுடைகின்றன. எல்லா காலத்துக்குமான உண்மை என்ற ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. "வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுள் போல" உண்மை நம் அறிவுக்கு சிக்காமல் காலத்துக்கேற்ற வடிவத்தை மாற்றிக் கொண்டு அலைகிறது. இதை புரியாதவர்கள் தேங்கிவிடுகிறார்கள், புரிந்தவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள். "கடக்க முடியாமல் உறைந்தது நான்காம் காலம்", "நாளையை மறந்துவிட்ட நேற்றைய நேற்று", "செவிக்குத்தலின் அரை வெண்மை", "குடலிறக்கத்தின் வெளிர் மஞ்சள்", "திரைக்கடலாகும் குமிழ்", "பாயுமொளியாகும் வான்சுடர்" என பல்வேறு உண்மைகளைத் தேடி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் சுகுமாரன்.


எல்லா கவிதைகளையும் பற்றிச் சொல்வது நியாயமல்ல. ஒவ்வொருவருக்குமான உண்மைகளை, என் ஒருவனால் கண்டடைய முடியாது. அவரவர் உண்மைகள் அவரவருக்குத் தான் புலப்படும். கவிதை என்பது நேரடி உரையாடல் அல்ல, மனதுக்குப் பிடித்த எதிர்பாலினத்தவரை மறைமுகமாக ரசிக்கும் கலையே கவிதை (என்பது என் கருத்து).

".........
முந்தானைக் குடைநிழலும் தணிக்காத
வெயிலில் துவண்ட இடுப்புச் சிசு..." வை நான் ரசித்தது போன்று வேறு யாரும் மறைமுகமாக ரசித்தார்களா என்பது  எனக்குத் தெரியாது, மேலும் 'ஜகன்மோகினி' என்ற கவிதை காதலும் காமமுமாக வெளிப்படுவதும் எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை! இத்தனைக்கும் அது ராகத்தைப் பற்றிய கவிதை என்ற குறிப்பும் தந்திருக்கிறார் கவிஞர். இப்படி ஒவ்வொருவரும் கவிஞர் சுகுமாரனின் படைப்புலகுக்குள் மூழ்கி திளைக்கும் தருணங்கள் பல உண்டு.


காதல், தத்துவம், தனிமை, பொறுப்பு, தன்னிலை என உணர்வுகளுக்குள் நீந்தவிடும் கவிஞருக்கு என் சொற்களும் என் மொழியும் தக்க மரியாதையைச் செய்துவிடுமா என்றுத் தெரியவில்லை. என்னைவிட சிறந்த மொழியில் பாராட்டுகளும் மதிப்புரைகளும் விமர்சனங்களும் நிறைய அவர் நினைவுப் பைக்குள் நிறைந்திருக்கும், ஆனால் என் மொழியில் இதுவரை வந்திருக்காது என்பது உறுதி! (சமாதானம் செய்து கொள்கிறேன்)


"வாழ்க நீ" என்று கவிஞர், காந்தியைக் கொண்டாடும் போது மெலிதாக எழும் எதிர்நிலைக் குரல், "மரியாளின் சுவிசேஷ'த்தில் சற்று ஆறுதல் அடைகிறது (சபரிமலை சர்ச்சையையும் தொடர்புப்படுத்திக் கொண்டேன்). அவருடைய வரிகளை சற்று மாற்றி இந்த உரையை(!) நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்,

"சுகுமாரன் 
ஒன்றும் செய்வதில்லை
சரி
சுகுமாரனையும்
ஒன்றும் செய்வதற்கில்லை!"


சிவராஜ் பாரதி  

                                                                      சிவராஜ் பாரதி








திங்கள், 31 டிசம்பர், 2018

காலா பூத்



காலா பூத். நினைவில் நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெயர். ஆனால் அது என்னவென்பது சுத்தமாக மறந்து போயிருந்தது. ஆளின் பெயரா, இடத்தின் பெயரா, பொருளின் பெயரா என்று குழப்பமாக இருந்தது. எங்கிருந்து, எப்படி, எவர் மூலம் இந்தப் பெயர் உள்ளே புகுந்தது என்பதும் வசப்படாமல் இருந்தது. இந்தி தெரிந்த நண்பர்களிடம் பெயரைச் சொல்லி விசாரித்தேன். அவர்களும் பெயருக்கு அர்த்தம் சொன்னார்களே தவிர அது இன்னதென்று விளக்கவில்லை.


அஜ்மீர் தர்கா தெருவிலிருக்கும் அத்தர் கடைக்குள்ளே நின்றிருந்தபோது எவர் துணையும் இன்றி பெயரின் மூலம் விளங்கியது.சிறிதும் பெரிதும் பல வண்ணங்கள் கொண்டவை யுமான  ஆயிரக்கணக்கான கண்ணாடிக் குப்பிகள் அடுக்கியிருந்த அலமாரிகளின் இடையில் பொருத்தியிருந்த  பெரிய அளவு ஓவியம் அதை விளக்கியது. அதில் மகுடம் போன்ற வடிவிலான கண்ணாடிக் குப்பியை முகர்ந்து பார்க்கும் பெண்ணின் உருவம் தீட்டப் பட்டிருந்தது. முகமும் கண்களும் மெல்லிய திரைக்குப் பின்னால் தெரியும்படி முகலாயர் பாணியில் தீட்டப்பட்ட ஓவியம்.அதன் வலதுபக்கக் கீழ் ஓரத்தில் ஒரு பளிங்குக் குப்பியின் படம். அடியில் இந்தியிலும் உர்தூவிலும் ஆங்கிலத்திலுமாக 'காலா பூத்' என்று எழுதப் பட்டிருந்தது.


‘என்ன வேண்டும்?’ என்று கேட்ட கடைப்பணியாளரிடம் ஓவியத்தைச் சுட்டிக் காட்டினேன். சிறுகுப்பியை எடுத்துத் திறந்து புறங்கையை நீட்டச் சொன்னார். நீட்டிய இடது கையில் ஒரு அடர்பழுப்புத் திவலையை வீழ்த்தினார். முகர்ந்துபார்க்கச் சொன்னார். கையை நாசியருகில் உயர்த்தி முகர்ந்தேன். நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நுகர்ந்த  அந்த வசிய சுகந்தம்  திரும்ப உள்ளே நிறைந்தது.


கபீர் என் பள்ளி நண்பன். ஆறாம் வகுப்பு முதல் இருவரும் ஒரே வகுப்பில்  படித்தோம். ஆனால் அப்போதெல்லாம் அவன் என் சக மாணவன் மட்டுமே. ஒன்பதாம் வகுப்பில் முதல் இடைப்பருவத் தேர்வுக்குப் பின்புதான் நண்பர்கள் ஆனோம். அவனுக்குத் திணறலைக் கொடுத்த தமிழ்ப் பாடமும் என்னை எப்போதும் தோற்கடிக்கும் கணக்குப் பாடமும் எங்களை நெருங்கச் செய்தன. வகுப்பில் அவன்தான் கணித மேதை. வகுப்புத் தேர்வுகளிலும் பருவத் தேர்விலும் அவனுக்குத்தான் முதல் மதிப்பெண்கள். பெரும்பாலும் நூற்றுக்கு நூறு. சமயங்களில் ஓரிரண்டு குறையும். என்னால் தேர்ச்சிக்குரியதைவிட  ஒன்றோ இரண்டோ மதிப்பெண்களையே அதிகமாகப் பெற முடிந்தது. ஆனால் அதை ஈடுகட்டத் தமிழ் கைகொடுத்தது. கணக்கு வாத்தியார்போலத் தமிழாசிரியர் பெருந்தன்மை யானவரல்லர். எண்பதிலிருந்து தொண்ணூறுக்குள் தான் மதிப்பெண்களைக் கொடுப்பார். இருந்தும் ஒரு தேர்விலும் கபீரால் என்னை நெருங்க முடியவில்லை. கணக்கில் நான் வாங்கும் மதிப்பெண் களையே அவன் தமிழில் வாங்கினான். முதலாவது பருவத் தேர்வில் நான் கணக்கிலும் கபீர் தமிழிலும் ஒரேபோல மதிப்பெண்கள் எடுத்திருந்தோம். தேர்ச்சி அட்டவணையைக் கொடுத்துவிட்டு வகுப்பு ஆசிரியர் சோமு சார் செய்த அறிவிப்பு எங்கள் இருவரையும் கூசித் தலை குனியச் செய்தது. சாரின் செல்ல மாணவர்களின் பட்டியலில் இருந்துங்கூட எல்லார் முன்னிலையிலும் அவர் எங்களை அம்பலப்படுத்தியது  மிகுந்த அவமானத்தைக் கொடுத்தது. கண்ணீர் உகுக்கச் செய்தது.


அன்று மாலை நாங்கள் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தம் நெருக்கமான தோழமைக்குக் காரணமானது. கபீருக்கு நான் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவன் எனக்குக் கணக்குக் கற்றுத் தர வேண்டும். இது எங்கள் ஒப்பந்தம். எங்கள் வீடு படிப்பதற்குத் தோதான இடமல்ல என்பதால் கபீரின் வீட்டுக்குப் போக ஒப்புக் கொண்டேன். சனி, ஞாயிறுகளிலும் விடுமுறை நாட்களிலும் சேர்ந்து படிப்பதாக முடிவெடுத்தோம். வடகோவை ரயில் நிலையத்துடன் ஒட்டியிருந்த ரயில்வே குவார்ட்டர்சில்தான் கபீரின் வீடு. எங்கள் வீட்டிலிருந்து தொலைவு தான். ஆனால் அவமானத்தைத் துடைத்துக் கொள்ள எவ்வளவு தூரமும் போகத் தயாராக இருந்தேன்.உடனடியாக அதைச் செய்யவும் துடித்தேன்.  'வர்ற சனிக்கிழமைலேர்ந்து சேந்து படிப்போம்டா கபீரு ' என்று நானாகவே சொன்னேன். அவனுக்கும் அதில் மறுப்பு  இல்லை. அவனும் என்னைப்போலவே அவமானத்திலிருந்து விடுபடத் தவித்துக் கொண்டிருந்தான்.


அடுத்த சனிக்கிழமை கபீரின் வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே இரண்டு விஷயங்கள் உடனடியாகப் பிடிபட்டன. ஒன்று : அவனுக்குத் தமிழ் வராததற்குக் காரணம். அவர்கள் வீட்டு மொழி தமிழல்ல. உருது. அவன் பேச்சிலோ அவன் அக்காவின் பேச்சிலோ அது தெரியவில்லை. ஆனால் அவன் அம்மா ஒவ்வொரு வார்த்தையாக மனதுக்குள் யோசித்து அதைத் தான் தமிழில் ஒப்பித்தார். இரண்டாவது : ரயில்வே குடியிருப்பாக இருந்தாலும் அவர்கள் வீடு விசாலமானதாக இருந்தது. பஷீருக்குத் தனியாக ஓர் அறை இருந்தது. படிப்பு மேஜையும் நாற்காலியும் இருந்தன. மேஜை விளக்கு இருந்தது. புத்தகங்களை வைத்துக்கொள்ள கண்ணாடிபோட்ட அலமாரியும் இருந்தது. அந்த ஆடம்பரம் லேசாகப் பொறாமைத் தந்தது. கூடவே படிப்பதற்கு இதைவிட நல்ல இடம் கிடையாது என்ற ஆறுதலையும் கொடுத்தது.


கபீர், அவன் அக்கா, அம்மா மூன்று பேர்தான் வீட்டில். அவனுக்கு அப்பா இல்லை என்பது பின்னாட்களில் தெரிய வந்தது. ரயில்வே ஊழியரான அவர் சில வருடங்களுக்கு முன்பு அகாலத்தில் மரித்திருந்தார். அவருடைய வேலை அக்காவுக்குக் கிடைக்கும் என்று காத்திருந்தார்கள். நியமனம் தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில் குவார்ட்டர்ஸைக் காலிசெய்ய வேண்டியிருந்தது. அப்பாவின் சக ஊழியர் ஒருவருக்குத்தான் அது ஒதுக்கப் பட்டிருந்தது. எப்படியும் வேலை கிடைக்கத்தான் போகிறது. கிடைத்தால் குவார்ட்டர்ஸும் ஒதுக்கப்படும். புதிதாக இன்னொரு இடத்துக்கு சட்டி பானைகளைத் தூக்கிக் கொண்டு எதற்காக அலைய வேண்டும். அதனால் வீட்டைக் காலிசெய்ய வேண்டாம் என்று சக ஊழியர் ஒத்துக்கொண்டிருந்தார். அதனால் அதே வீட்டிலேயே குடியிருந்தார்கள். இவை யெல்லாம் நாள்போக்கில் தெரிந்து கொண்டவை. அந்த வீட்டை விட்டு வெளியேறச் சொன்னால் கபீர் குடும்பத்தினர் உயிரையே விட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அந்த வீடு அவர்களுக்குள் குடியிருந்தது. அதற்கு முழுக் காரணம் கபீரின் அக்கா ரபீக்கா. வீட்டை அத்தனை துப்புரவாக வைத்திருந்தாள். துலுக்க வீடுகளில் எப்போதும் கவிச்சை வாடை வீசும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக அந்த வீட்டுக்குள் சதா காலமும் பன்னீரின் சுகந்தம் படர்ந்திருந்த்து.அரசாங்கக் குடியிருப்புகளில் வசிக்கும் வகுப்புத் தோழர்கள் சிலரது வீடுகளில் தென்பட்ட அசட்டையான மனோபாவத்துக்கு மாறாகக் கபீரின் வீடு ஒழுங்கு குலையாத அழகுடன் இருந்தது. ஜன்னல்களில் மெல்லிய வெண் திரைகள். வாசல் நிலைகளில் பாசி மணிகளால் கோத்த தொங்கட்டான்கள். மேஜை மீது விரிப்புகள். நாற்காலிகளில் உறைபோட்ட குஷன்கள். கூடத்தின் சுவர்களில் பச்சைத் துணியில் ஜரிகை எழுத்துக்கள் பின்னப்பட்ட குரான் வாசகங்கள். சோபா என்ற சொகுசு ஆசனத்தை நான் அங்கேதான் முதலில் பார்த்தேன். அதன் மீதும் உறை போடப்பட்டிருந்தது. 'இதெல்லாம் எங்க அக்காவே தெச்சுப் போட்டதாக்கும்' என்று கபீர் சொன்னான். அவன் அம்மாவால் அதையெல்லாம் செய்திருக்க முடியாது என்று அவர்களைப் பார்த்ததும் புரிந்தது. கனமான சரீரம். அதைச் சுமந்து நடப்பதே கடினமான வேலை என்று அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியும். வெள்ளைச்சேலை கட்டி தலையில் முக்காடு போட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் ரபீ ரபீ என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.  ரபீக்கா 'அம்மி அம்மி' என்று பதில் கொடுப்பார். கபீர் அம்மா அடிக்கடி ’அல்லாஹ்’ என்று பெரும்மூச்சும் விடுவார்.


ரபீக்காவுக்கும் கபீருக்கும் நாலு வயது வித்தியாசம். இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம். இருவருக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு. கபீருக்குப் பெண் வேடம் போட்டால் ரபீக்கா போலவும் அக்காளுக்கு ஆண் வேடம் போட்டால் தம்பி போலவும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இருவர் முகத்திலும் பருக்கள் முளைத்திருந்தன. இருவரையும் ஒன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் முகத்தில் குறுகுறுத்துக் கொண்டிருந்த முதல் பருவை அனிச்சையாகக் கிள்ளிக் கொண்டிருந்த்து நினைவில் பிசுபிசுக்கிறது. ரபீக்காவின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாது. அவரை எப்படி அழைப்பது என்று குழம்பியபோது ரபீக்கா என்ற பெயரில் அக்கா இருப்பதால் அப்படியே அழைப்பது எளிதாக இருந்தது. கபீர் அவரை ரபீத்தீ என்று கூப்பிட்டான். ரபீ தீதி என்பதன் சுருக்கமாம். பிற்பாடு விளக்கம் சொன்னான்.


இவையெல்லாம் கபீர் வீட்டுக்குச் சென்று படித்த சில மாதங்களில் அவ்வப் போதாகத் தெரிந்து கொண்டவை. ஆனால் முதல் நாளிலேயே ரபீக்காவும் கபீரம்மாவும் அன்பானவர்கள் என்பது இயல்பாகவே உள்ளிறங்கியது. ரபீக்கா ‘எதாச்சும் சாப்ட்றியா ?’ என்று கேட்டு விட்டு பதிலுக்கு நிற்காமல் பீங்கான் தட்டு நிறையக் குட்டிக் குட்டியான சமூசாக்களைக் கொண்டுவந்து வைத்தார். கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும் தின்னக் கிடைக்காத பதார்த்தம் ஆசையைத் தூண்டியது. சமூசாவெல்லாம் எங்கள் வீட்டுத் தின்பண்டம் இல்லையே. ஆபூர்வமாக்க் கையில் காசு திகையும்போது லக்கி கஃபேயிலோ, ஹோட்டல் தேவியிலோ தின்னக் கூடிய அந்நியப் பண்டம்.


‘சமூசா ரொம்ப்ப் பிடிச்சிருக்கா?’ என்று ரபீக்கா கேட்டபோதுதான் நான்கைந்தை விழுங்கி யிருந்தது உறைத்தது. லஜ்ஜையுடன் குனிந்து கொண்டேன். ‘வெக்கப் படாத, சாப்டறதுக்குத் தானே வெச்சுது.சாப்டு. ஒங்க வீடா நெனச்சுக்கோ வெக்கம் ஓடிரும். நீயும் எனக்குக் கபீர் மாதிரித்தான். இன்னொரு தம்பிதான். என்னா?’ என்ற ரபீக்காவின் வார்த்தைகள் மிகுந்த ஆறுதலைக் கொடுத்தன.


அநேகமாக எல்லா சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் எங்கள் உடன் படிப்புத் தொடர்ந்தது. திங்கட்கிழமை காலை முதலே ’சனிக்கிழமை எப்ப வரும்?’ என்று காத்திருக்க ஆரம்பித்தேன். கபீர் இல்லாத நாட்களிலும் அந்த வீட்டுக்குச் சென்று புழங்கும் சுதந்திரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அவன் இருந்தால் கூடத்திலும் அவனுடைய அறையிலுமாக நடைபெறும் படிப்பை அவனில்லாதபோது தனது அறையில் தொடரும் சுவாதீனத்தை ரபீக்கா கொடுத்திருந்தார். அது அம்மாவுக்கும் மகளுக்குமான அறை. ஆனால் ரபீக்காவின் அம்மா அபூர்வமாகவே அந்த அறைக்குள் வந்து போவார். அதிகமும் சமையற்கட்டில் இருப்பார். இல்லையென்றால் முன் திண்ணையில் கம்பிச் சட்டங்களால் அடைத்து உருவாக்கப்பட்டிருந்த அறையில் முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு பச்சைப் பளிங்கு மணி மாலையை உருட்டிக் கொண்டிருப்பார். சில சமயம் குரோஷா ஊசியால் பின்னிக் கொண்டிருப்பார். அறைக்குள் வரும்போது  ‘படிக்றியா, படி படி’ என்றும் வெளியேறும்போது ‘ஜோராப் படி’ என்றும் சொல்வார். முதல் முறை அந்த பிரயோகம் கேட்க விசித்திரமாக இருந்த்து. படிப்பதில் என்ன ஜோர் இருக்கிறது என்று முழித்தபோது ரபீக்காதான் மறுமொழி சொன்னார். ‘அம்மி, அது நல்லாத்தான் படிக்கிது’.


எங்கள் கூட்டுப் படிப்பு ஜோராகத்தான் நடந்த்து. ஜென்மத்துக்கும் வராது என்று நினைத்திருந்த அல்ஜீப்ராக் கணக்குகளுக்கு என்னால் சரியான விடைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. சமன்பாடுகளை நெட்டுருப் போடாமல் நினைவில் பதித்துகொள்ள முடிந்த்து. கபீர் பதினைந்து வயதுக் கணித மேதையாகத்தான் இருந்தான். மேதைக்கு சந்தேகம் எழும் கட்டங்களில் ரபீக்கா நிவாரணியாக இருந்தார். பள்ளியிலும் கல்லூரிப் புகுமுக வகுப்பிலும்  அவருடைய விருப்பப் பாடம் கணக்கு என்பது அப்போதுதான் தெரிந்த்து. ‘பின்ன ஏன் நீங்க டிகிரி படிக்கல?’ என்று கேட்டேன். கைத்த சிரிப்புடன் என் தலையை வருடி விட்டுப் போனார்களே தவிர பதில் சொல்லவில்லை. காலாண்டுத் தேர்வில் கணக்கில் எனக்குச் சரியாகத் தொண்ணூறு மதிப்பெண்கள். கபீர் நூற்றுக்கு நூறு. அவனுடைய நூறு மதிப்பெண்களுக்குக் கிடைத்த பாராட்டை விட என்னுடைய தொண்ணூறைத்தான் ரபீக்கா அதிகம் சிலாகித்தார். ’பார்றா, நீ சொல்லிக் குடுத்து அது தொண்ணூறு மார்க் வாங்கீருக்குது. அது சொல்லிக் குடுத்தும் நீ தமிள்ல எளுவது மார்க்தான்’ என்று கபீரைச் சீண்டவும் செய்தார். ஆனால் கபீரையும் என்னையும் பொறுத்தவரை அவை நல்ல மதிப்பெண்கள்தாம். கஞ்சப் பிசினாறியான தமிழ் அய்யா அவனுக்கு எழுபதும் எனக்கு எண்பதும் மதிப்பெண்கள்அளித்திருந்தார். ’செய்யுளை அலகிட்டு வாய்பாடு கூறுக’ வை நீ ஒழுங்கா எழுதியிருந்தா என் மார்க்கும் உன் மார்க்கும் ஒண்ணா இருந்திருக்கும்டா கபீரு’ என்று அவனைக் குற்றம் சாட்டினேன். ‘ஆமா, நீயும் பத்து அங்குல உயர பிரமிட்டோட சாய்தளமும் பத்து அங்குல உயரம்னு எளுதாம இருந்தா பத்து மார்க்காவது சேந்து கெட்ச்சிருக்கும்’ என்று குத்திக் காட்டினான். ரபீக்கா இருவரின் சண்டையையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘போதும் நிறுத்துங்கடா ரண்டுபேரும் நல்ல மார்க்குதானே வாங்கீருக்கீங்க. அதுக்கு என்னாத்துக்க்கு சண்டை’ என்று சமாதானம் செய்தார். சமாதானப் பேச்சில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் உள்ளுக்குள் ஆழமாகப் பதிந்த்து. ‘ அது ஒன்னய வுடவும் நீ அதவுடவும் ஜாஸ்தி மார்க்கு வாங்கீட்டும் நீங்க ரெண்டுபேரும் பொறாமப் படலே பாருங்க. அதான் பெருசு’. கேட்டுப் பல ஆண்டுகள் ஆன பின்னும் அந்த வாக்கியம் என் நாளங்களுக்குள் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ரபீக்கா.


கபீர் வீட்டுக்குள் சங்கோஜமின்றிப் புழங்கலாம் என்று ஆன பின்பு ஒரு நாள் ரபீக்காவிடம் சமூசா தயாரிக்க்க் கற்றுக் கொடுக்கும்படிக் கேட்டேன். ரபீக்கா கைகளைக் கொட்டிச் சிரித்தார். ‘அம்மீ இது என்னா கேட்டுது பாருங்க. பொட்டச்சிங்க வேலயெல்லாம் கத்துக்கணுமாம்’ என்று அம்மாவிடம் சொன்னார். அவர் உர்தூவில் சொன்னது புரிய வில்லை. ‘லக்கி கஃபேலயும் தேவி ஓட்டல்லயும் பேக்கரிங்கள்லயும் ஆம்புளைங்கதானெ ரபீக்கா சமூசா பண்றாங்க. அதெல்லாம் பொட்டச்சிங்க வேலையாமா?’ என்றேன். யோசனைக்குப் பிறகு ரபீக்கா சிரித்த சிரிப்பில் சம்மதம் இருந்த்து. அவர் சொல்லிக் கொடுத்து ஒருமுறையும் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு ஒருமுறையும் செய்து பார்த்ததில் சமூசா தொழில்நுட்பம் கைவசமானது போலப் பட்டது.


எங்கள் வகுப்பில் பொங்கல் விழாவைக் கொண்டாடத் தீர்மானித்தோம். தலைமை ஆசிரியர் அருட்தந்தை அந்தோணி லாரன்சிடம் அனுமதியும் பெற்றோம். காசு சேர்த்தோம். அதை வைத்துக் கரும்பு மஞ்சள், பூக்கள் என்று பொங்கல் படையலுக்கான பொருட்களை வாங்கினோம். யார் யார் என்னென்ன உணவுப் பண்டங்களைக் கொண்டு வரமுடியும் என்று பட்டியல் போட்டோம். முக்கிய உணவான பொங்கலை எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் சீனிவாசா கபேயில் சமைத்துத் தரச் சொல்வது என்று முடிவு செய்தோம். அதன் உரிமையாளரின் மகனான சீனிவாசன் எங்கள் வகுப்பு மாணவன்.. முதலில் தயங்கினாலும் அப்புறம் ஒப்புக் கொண்டான். அவன் அப்பா தன் பங்காக காப்பியோ டீயோ தருவதாக ஏற்றுக் கொண்டார். ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒரு பொருள் அல்லது உணவுப் பதார்த்தம் என்று ஏற்பாடு. என் வீட்டிலிருந்து எதையும் சமைத்துக் கொண்டு வரும் வாய்ப்பு இல்லை. ஓர் ஆணும் இரு பெண்களுமான எங்கள் மூன்று பேருக்குப் பொங்கிப் போடவும் அப்பாவின் தள்ளாட்ட்த்துக்கு ஈடுகொடுக்கவுமே திணறிக் கொண்டிருக்கும் அம்மாவிடம் எதையும் கேட்க மனம் ஒப்பவில்லை. ஆனால் வெறும் கையனாகச் செல்லவும் கூச்சமாக இருந்த்து. அம்மாவே தீர்வையும் சொன்னார். பொடக்காலியில் நிற்கும் தென்னை மரத்திலிருந்து இரண்டு இளநீர்க் குலைகளை எடுத்துப் போகச் சொன்னார். கையுறை இல்லாமல் சபைக்குப் போகவில்லை என்று ஆசுவாசமாக இருந்த்து.


’நான் எங்க வீட்லேர்ந்து சமூசா பண்ணி எடுத்துட்டு வர்றேன்’ என்று கபீர் சொன்னதும் வகுப்பே சிரித்த்து. விழா அமைப்பாளனாக இருந்த இருதய ஜெயபால் உதடுகளைப் பிதுக்கிப் ’புர்’ரென்று ஒலி எழுப்பினான். வகுப்புத் தலைவன் இஸ்மாயில் சிரிப்பையும் சத்த்த்தையும் அடக்க முடியாமல் திண்டாடினான். எங்கள் பெஞ்சு மாதம்பட்டி சண்முக சுந்தரம் ‘கபீரு நாம் கொண்டாடப் போறது ரம்சானில்ல சாமீ. பொங்கலு. பொங்கலோ பொங்கல் ‘ என்று பொங்கினான். பிரச்சனையை சோமு சாரிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டு போனோம். ‘அதுல என்னடா இருக்கு? பொங்கல் படையல்ல சமூசா வெக்க்க் கூடாதுன்னு சாஸ்தரம் சொல்லியிருக்கா? எல்லாம் வயத்துக்குள்ற போறதுதான, பொங்கலும் சமூசாவும் உள்ளபோனா ஒன்ணு, வெளிய வந்தா பீயி. கபீரு நீ கொண்டுட்டு வா’ என்றார். கபீரின் முகம் சிரித்தது.


வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டாவது மூன்றாவது பிரிவேளைகளில் விழா நடத்த மும்முரமானோம். எங்கள் வகுப்பு ஆசிரியர், எங்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பாடமே எடுக்காதவர்கள் என்று எல்லாரையும் அழைத்தோம். இடையில் கபீரும் நானும் அவன் வீட்டுக்கு ஓடி  சமூசா நிலவரத்தை ஆராய்ந்தோம்.  கூடத்தில் விரித்துப்போட்ட பாய் மீது வட்டமான குட்டிச் சப்பாத்திகள் கிடந்தன. கபீர் அம்மா ‘அல்லாஹ்’ என்று பெருமூச்சு விட்டபடியே பலகையில் மாவை உருட்டித் தேய்த்துக் கொண்டிருந்தார். ரபீக்கா அவற்றின் மீது மசாலாவை வைத்துச் சின்ன முக்கோணங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். பார்க்கக் கண் ஊறும் காட்சியாக இருந்தது. கணக்குப் போட்டுப் பார்த்தேன். ஆனால் எண்ணிக்கையில் பற்றாக்குறை. நாற்பத்தைந்து மாணவர்கள், பதினைந்து ஆசிரியர்களுக்கும் கொசுறாகக் கொஞ்சமும் தேவை. தோராயமாக எழுபது. ஆனால் அதைச் செய்து முடிக்க இரண்டு பேரால் முடியும் என்று தோன்றவில்லை. ‘கபீரு, நான் மசாலா போட்டுப் புடிச்சுத் தர்றேன். ரபீக்கா எண்ணெயில் போட்டு எடுக்கட்டும். நீ டப்பாலே அடுக்கிடு’ என்றேன். ரபீக்காவும் அம்மாவும் தடுத்தும் களத்தில் இறங்கினேன். மருதாணிச் சிவப்பு முன் நகர்ந்து நக வெளுப்புத் தெரியும் ரபீக்காவின் விரல்களில் நாட்டியத்தைப் பார்த்தேன்.


அன்றைக்கு ஆசிரியர்கள் சிலாகித்த உணவு  பொங்கல் அல்ல. சமூசாக்கள்தாம். சமூசாவுக்குக் கலாச்சார விலக்குக் கற்பித்த சக மாணவர்களும் அதன் ருசியைப் பாராட்டினார்கள். ருசி பார்க்கக் கூடக் கிடைக்காமல் போனது கபீருக்கும் என்க்கும்தான்.


அரையாண்டுத் தேர்விலும் எங்கள் பரஸ்பர கல்விக் கொடை பயனளித்த்து. கபீரும் நானும் ரொம்பவே முன்னேறியிருந்தோம். எனக்குக் கணக்கு இனிக்கத் தொடங்கியது. அவனுக்குச் செய்யுள்கள் புரிய ஆரம்பித்திருந்தன.  நாங்கள் எங்கள் ஒப்பந்தத்தை நீட்டித்தோம். பள்ளி இறுதி வகுப்பு முடிக்கும் வரை சேர்ந்து படிப்பது என்று உறுதி மேற்கொண்டோம். எனவே கபீர் வீட்டுக்கு வார இறுதியில் இரு நாட்கள் போவது என்ற அட்டவணைக் காலம்  மூன்று, நான்கு நாட்கள் என்று ஆனது.


கபீர் பள்ளியில் தேசிய மாணவர் படையிலும் இருந்தான். என் சி சி முகாமுக்காக பொள்ளாச்சி போயிருந்த நாள் மாலை அவன் வீட்டுக்குப் போனேன். வீடு களையிழந்து கிடந்த்து. கூடத்தில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரபீக்காவும் அம்மாவும் எதிரெதிராக உட்கார்ந்து முகத்தைத் தொங்கப் போட்டிருந்தார்கள். என்னை வாவென்று அழைக்கவும் இல்லை. ‘ரபீக்கா என்னாச்சு? என்ற விசாரிப்புக்குப் பதிலும் கிடைக்க வில்லை. இருவரும் நிமிர்ந்து பார்த்தார்களே தவிர பேசவில்லை. பத்ற்றமாக இருந்தது எனக்கு. வரக் கூடாத வேளையில் வந்துவிட்டேனா? திரும்பிப் போய் விடலாமா? என்று யோசித்தேன். எப்போதும் மலர்ச்சியுடன் பார்த்த இரண்டு ஜென்மங்கள் வாடி உட்கார்ந்திருக்கும்போது அப்படிப் போவது சரியா என்று கேள்வியும் எழுந்தது. யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசத் தயாராகாத இடத்தில் நிற்பது சரியும் மணல்மேல் நிற்பது போலிருந்தது.


‘சரிங்க ரபீக்கா, நான் போயிட்டு அப்புறமா வர்றேன்’ என்றதும் ரபீக்கா எழுந்தார். ‘அவ்ளோ தூரத்திலேர்ந்து வந்தது ஒடனே போய்டறதுக்கா, உக்காரு’ என்று பின்கட்டுப் பக்கம் போனார். நான் வெகுநாட்களுக்குப் பிறகு தயக்கத்துடன் நகர்ந்து கபீரின் அறைக்குள் போய் உட்கார்ந்தேன். தோள் பையிலிருந்து புத்தகங்களை எடுக்கத் தோன்றவில்லை. கபீரின் மேஜை மீதிருந்த உலோகத் தாஜ்மகாலையே பார்த்துக் கொண்டிருந்தேன். முகத்தைத் துடைத்தபடி அறை வாசலுக்கு வந்த ரபீக்கா ‘இரு டீ கொண்டு வர்றேன்’ என்று நடந்தார். ’அம்மி எளுந்திரிங்க, மூஞ்சியைக் களுவிட்டு வாங்க. டீ போடறேன்’ என்ற குரலும் கபீர் அம்மாவின்’ அல்லாஹ்’ பெருமூச்சும் கேட்டன.


மேஜை மீது தேநீர்க் கோப்பைகளை வைத்து விட்டு கபீரின் கட்டிலில் உட்கார்ந்தார் ரபீக்கா. ‘கபீரு நாளான்னிக்குத்தான் வருமில்ல’ என்றார். தலையை ஆட்டினேன். ’டீயக் குடி’ என்றார். எடுத்துக் குடித்தேன். இரண்டு மிடறு தொண்டைக்குள் இறங்கியதும் செருமிக் கொண்டு ‘என்னாச்சு ரபீக்கா?’ என்று மீண்டும் கேட்டேன். ‘ஒண்ணுமில்ல’ என்றார்.அதுவே ஏதோ இருக்கிறது என்றது. ரபீக்கா வழக்கமான உடையில் இல்லை. வெளியே போகும்போது அணியும் ஜரிகை மின்னும் சல்வார் கமீசில் இருந்தார். என்னவென்று திரும்பக் கேட்கத் தயக்கமாக இருந்த்து. கேட்டு என்ன செய்ய? எதுவாக இருந்தாலும் பதினாலு வயசுப் பையனால் தீர்க்க முடியாது. நிமிர்ந்து பார்த்தபோது ரபீக்கா சிரிக்க முயன்றார். தயக்கத்தை விட்டு ‘ரபீக்கா என்னாச்சு?’ என்று கேட்டேன். கட்டிலை விட்டு எழுந்து பக்கத்தில் வந்து நின்று ‘ஒண்ணுமில்ல தெரிஞ்சாலும் ஒண்ணும் பண்ண முடியாது’ என்று என் தலையை வருடி இடையோடு சேர்த்துக் கொண்டார். அவருடைய கமீசிலிருந்து அத்தரின் வாசனை நாசிக்குள் புகுந்தது. என் பார்வை பரவ்சமான வெளிச்சத்துக்குள் இருண்டது. ரபீக்காவின் கைகள் என் முடியை அளைந்து கொண்டிருந்தன. ‘ ரபீ’ என்ற கபீர் அம்மாவின் அழைப்பு நெருங்கி வந்த்து. ரபீக்கா ‘கீ  அம்மி?’ என்று கைகளை விலக்கிக் கொண்டார். வெளியே போனார். அவரும் அம்மாவும் உர்துவில் கிசுகிசுப்பாகப் பேசிக் கொள்வதைக் கேட்டேன்.


ஏழு மாதங்களில் கபீரின் வீட்டிலிருந்து நான் சீக்கிரமாக்க் கிளம்பியது அன்றுதான்.


இரண்டு நாட்களுக்குப் பின் திங்கட்கிழமை முகாமிலிருந்து திரும்பிய கபீர் பள்ளிக்கு வந்தான். வகுப்புகள் தொடங்கியிருக்கவில்லை. என் இருப்பிடம் அருகில் வந்தவனின் முகம் சுண்ணாம்புக் கல்போல இருந்த்து. நான் எதுவும் பேசுவதற்கு முன்பே சொன்னான் ‘ நாம இனுமெ சேந்து படிக்க வேண்டாண்டா. நீ எங்க வீட்டுக்கு வர வேண்டா. அம்மி சொல்லச் சொன்னாங்க’. வழக்கமாக என் அருகில் உட்கார்கிறவன் வேறு பெஞ்சுக்குப் போய் உட்கார்ந்து கொண்டான். அந்த ஆண்டு முடியும்வரை  என் பெஞ்சுக்கு வரவில்லை. என்னுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.மூன்றாவது இடைப் பருவத் தேர்வில் நான் கணக்கில் தோல்வியடைந்தேன். கபீர் தமிழில் நல்ல மதிப்பெண்களை வாங்கியிருந்தான். என்னை விடவும் அதிக மதிப்பெண்கள். ஆனால் ஆண்டிறுதித் தேர்வில் அவனுடையதை நெருங்கும் மதிப்பெண்களை எப்படி நான் வாங்கினேன் என்று இன்றுவரை விளங்க வில்லை. மனசு ஒரு பிடிவாதக்காரக் குரங்கு என்பதனாலாக இருக்கலாம்.


பத்தாம் வகுப்பில் நாங்கள் விருப்பப் பாடமாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதையொட்டித்தான் வகுப்புகள் பிரிக்கப்படும். நான் பௌதிகத்தைத் தேர்ந்தெடுத்தேன். கணித மேதைகள் வேறு அதைத் தேர்ந்தெடுப்பார்கள்? கபீர் கணக்கை விரும்பினான். எங்கள் வகுப்புகள் வேறுவேறு ஆயின. நான் பத்தாவது சி. அவன் பத்தாவது ஏ. ஒரே வளாகத்திலிருந்தாலும் இரண்டு ஆண்டுகளில் அவனை ஒன்றோ இரண்டோ முறைதான் பார்க்க முடிந்த்து. பள்ளி இறுதி வகுப்பு முடிந்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்றோம். கபீர் என்னைவிட மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.கணக்கு வாத்தியார்களின் வள்ளண்மையையும் தமிழாசிரியர்களின் கருமித்தனத்தையும் சபித்தேன். தனியார் கல்லூரியில் புகுமுக வகுப்பில் இயற்கை அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். கல்லூரி வகுப்புகள் தொடங்கிச் சில நாட்களுக்குப் பிறகு அரசுக் கலைக் கல்லூரியிலிருந்து பாதியில் வந்து எங்கள் கல்லூரியில் சேர்ந்த வெங்கடேசன் சம்பிரதாயமான அறிமுகத்துக்குப் பிறகு கபீரைப் பற்றிச் சொன்னான். ’நீ செகண்ட் குரூப்பாச்சே, கபீர் மாத்ஸில் நெறய மார்க்கு வாங்கினவன். அவனை உனக்கு எப்படித் தெரியும்?’ என்று அவனிடம் சந்தேகம் எழுப்பினேன். ‘அவனும் செகண்ட் குரூப்தாண்டா, அப்பத்தான எம் பி பி எஸ் போக முடியும்’ என்றான். அந்தச் செய்தி எனக்கு வியப்பாகத்தான் இருந்த்து.


சில மாதங்களுக்குப் பிறகு கல்லூரியில் காலை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அலுவலகக் கடைநிலை ஊழியர் வந்து கல்லூரி முதல்வர் அழைப்பதாகத் தெரிவித்தார். முதல்வர் அறைக்குப் போனேன். ‘இவங்க உன்னப் பாக்க வந்திருக்காங்க. பாத்துப் பேசீட்டு சீக்கிரம் கிளாசுக்குப் போ’ என்றார் முதல்வர். அவர்களைப் பார்த்தேன். கபீரும் ரபீக்காவும். முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்த்தும் கபீர் சொன்னான். அவன் முதலில் எங்கள் கல்லூரியில் தான் புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கிறான். அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்ததும் இதை விட்டிருக்கிறான். மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காக் இப்போது வந்திருக்கிறான். ரபீக்காவும் அதே பகுதியில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் படித்தவர். பட்ட வகுப்பில் மீண்டும் சேர்வதற்காக வந்திருக்கிறார்.  இருவரையும் பார்த்துப் புன்னகைத்தேன். கபீர் முகத்தில் என் முகத்தைவிட அதிகமான பருக்கள் இருந்தன. என் மீசையுடன் ஒப்பிட்டால் அவனுக்கு ரோமமே இல்லாத கரிமீசை முளைத்திருந்த்து. ரபீக்காவின் கண்களில் புன்னகை மினுங்கியது. சல்வார் கமீசில் சம்கிகள் மங்கியிருந்தன. முக்காடு நரைத்திருந்த்து. ’பார்த்து எத்தினி நாளாச்சு’ என்றார்.


இரண்டு வருடங்கள். இரண்டு வருடங்களில் என்ன நடந்திருக்கும்? கபீர் அம்மா எப்படி இருப்பார்கள்? ரபீக்கா இன்னும் தனியாகத்தான் இருக்கிறாரா? வேலை கிடைக்க வில்லையா? கல்யாணம் ஆகவில்லையா? இரண்டும் இருக்காது.. இல்லையென்றால் வெகுகாலம் கழித்துக் கல்லூரிக்கு வருவாரா? கபீர் என்னை ஏன் வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொன்னான்? அது ரபீக்காவுக்குத் தெரியுமா? இப்போதும் குவார்ட்டர்ஸில்தான் குடியிருக்கிறார்களா? கேள்விகள் செவிக்குள் இரைந்தன. ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்த்து. ‘எப்டி இருக்கீங்க ரபீக்கா?’ என்று மட்டுமே கேட்க முடிந்த்து. ‘தம்பி, ஆபிசில கூப்டறாங்க?’ என்று ஊழியர் வந்து கபீரை அழைத்துப் போனார்.


‘ ஆளே மாறிட்டடா, பெரிய ஆம்புள ஆயிட்ட. மீச தாடியெல்லாம் வந்திருச்சு. என்னாச்சு ஏன் வீட்டுக்கே வரல.கபீரு கூட சண்டையா?’ என்று கேட்டார். என்னிடம் பதில் இல்லை. ரபீக்காவை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டு நின்றேன். அவர் முதன்முதலாக ‘அடா’ என்று சொன்னது உள்ளுக்குள்ளே இனித்த்து. கொஞ்சம் பக்கத்தில் வந்தார். கைப் பையைத் திறந்து உள்ளே துழாவி எதையோ எடுத்து என் சட்டைப் பையில் போட்டார். கபீர் அருகில் வந்து ‘ரபீத்தி, போலாம் சர்டிபிகேட் வாங்கிட்டேன்’ என்றான். என்னைப் பார்த்து ‘வர்றோம்’  என்றான். நான் தலையசைத்தேன். இருவரும் படியிறங்கி மறைவதைப் பார்த்து நின்றேன். திரும்பி வகுப்பை நோக்கி நடந்தபோது சட்டைப் பையிலிருந்த வஸ்துவை எடுத்தேன். கறுப்பு நிறமான சின்னஞ் சிறு அட்டைப் பெட்டி. மூடியைத் திறக்காமலேயே மெல்லிய அத்தர் வாசனை கசிந்த்து. அதன் மேல் பொன்னிற எழுத்துக்களில் பெயர்  அச்சிடப் பட்டிருந்தது ‘காலா பூத்’ என.



இதை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று அத்தர் கடைப் பணியாளர் கேட்டார். இசைவாகத் தலையாட்டினேன். ‘இத்தனையையும் எடுக்கிறீர்களா?’ அவர் கேட்டபோதுதான் மூன்று காலா பூத் குப்பிகளை ஒதுக்கி வைத்திருந்த்து தெரிந்தது. ‘ஆமாம்’ என்றேன். காலா பூத் , காலா பூத், காலா பூத் என்று வேகமாக உச்சரித்தபோது சொற்கள் மயங்கி பூத் காலா என்று பொருள் பட்டதை  உணர்ந்தேன். பூத காலம். இறந்த காலம். கடந்த காலம். சென்ற காலம். என்று சொற்களை உருட்டிக் கொண்டிருந்தேன். கடைக்காரர் வேறு ரக அத்தர் குப்பிகளையும் எடுத்துக் காட்டி வேண்டுமா என்றார். ‘ நை சாஹியே’ என்று நிராகரித்தேன். அவற்றுகெல்லாம் நினைவின் வாசனை இல்லை என்பதை இந்தியில் எப்படிச் சொல்வது ?

காலம் ( கனடா ) இதழில் வெளியானது. ஓவியம் : இரானிய ஓவியர் இமான் மலேகி.