புதன், 30 ஜூன், 2010

கழுமரத்துக்குச் செல்பவனின் தனிமொழி

























ழுமரத்தை நோக்கிச் செல்லும்
என்னைப் பாருங்கள்
பத்து நிமிடங்களில்
கனவுகள் காலியான என் சிரம்
ஆசையொழிந்த உடலிலிருந்து துண்டிக்கப்படும்
நான் கொலைசெய்தவனின் உதிரம்
எனது அன்புக்காக அலறுவதைக் கேட்டேன்
அவனுடைய குடும்பத்தினரிடமும் கூட்டாளிகளிடமும்
நான் மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது
அந்த முற்றத்து மாமரத்தைக் கட்டியணைத்து
நான் அழ வேண்டியிருந்தது
மண்ணில் புரண்டு சகல உயிர்களுக்கும் உடைமையான
பூமியிடம் மன்னிப்பை யாசிக்க வேண்டியிருந்தது
பாதி கடித்து வைத்த பழத்துக்கும்
பாதி பாடிய பாட்டுக்கும்
பாதி கட்டிய வீட்டுக்கும்
பாதி வாசித்த புத்தகத்துக்கும்
பாதி சிநேகித்த சிநேகத்துக்கும்
பாதி வாழ்ந்த வாழ்க்கைக்கும்
நான் திரும்ப வேண்டியிருந்தது
நதியைக் கடந்துபோய்ப் பூரம் கொண்டாட வேண்டியிருந்தது
குன்றைக் கடந்துபோய்ப் பெருநாளையும்.
'நான் வந்துவிட்டேன்' என்று நண்பர்களிடம் சொல்ல
நெரிசலான பேருந்திலேறி
பட்டணத்துக்குப் போகவேண்டியிருந்தது
மகள் தன்னிச்சையான பெண்ணாகவும்
மகன் அழத் தெரிந்த ஆணாகவும்
ஆகியிருப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது
குளிரிலும் கண்ணீரிலும்
துணைக்குத் துணையாக வேண்டியிருந்தது
இலைகளை விடவும் பூக்களுள்ள
வேனிற்கால வாகைமரம்போல
எனக்கு நினைவுகளை விடவும் கனவுகளிருந்தன
நேற்றை விடவும் வெளிச்சமுள்ள
ஒரு நாளை இருந்தது
கதை சொல்லி மரணத்தை ஒத்திப்போட
நான் ஒரு ‘ஷெஹர்ஜாத்’ அல்ல
கதைகளின் விருட்சம் இலைகளுதிர்ந்து கழுமரமாயிற்று
’கடைசி ஆசை ஏதேனும் உண்டா? ' என்று
அவர்கள் என்னிடம் கேட்டார்கள்
புல்வெளியில் உட்கார்ந்து காது நிமிர்த்தும்
ஒரு முயலாக வேண்டுமென்று
ஒளிந்திருந்து கீச்சிடும்
ஓர் அணிலாக வேண்டுமென்று
வானவில் பறவையும் தலைமுறைகளின் நதியும்
பூக்காலத்தின் காற்றுமாக
ஆகவேண்டுமென்று
நான் சொல்லவில்லை
அவர்கள் எனக்குக் கொடுத்த இனிப்பில்
மரணத்தின் துவர்ப்பிருந்தது
கழுமரத்திலிருந்து தப்பிப் பிழைக்கும்
பூனையின் கண்களுள்ள கடுந்துவர்ப்பு
சட்டமியற்றுபவர்களே சொல்லுங்கள்,
தீர்ப்பெழுதுபவர்களே சொல்லுங்கள்
இரங்கக் கூட முடியாத
இந்தத் தீர்ப்புக்காக
நீங்கள் இரங்குகிறீர்கள் இல்லையா?
கொலைக்குற்றத்தின் வெக்கையான தர்க்கத்திலிருந்து
தூக்குத் தண்டனையின் குளிர்ந்த தர்க்கத்துக்கு
எவ்வளவு தூரம்?
கேள்விகளை
பூமியின் பசுமையில் விட்டுவிட்டு
அபராதிகளும் நிரபராதிகளும்
ரத்த சாட்சிகளும் நடந்துபோன
குருதி படர்ந்த இதே வழியில்
நானும் போகிறேன்
நாளையேனும்
ஒருவரும் இந்த வழியில் வரவேண்டியிராத
நா ளை உருவாகட்டும்.
நான் போகிறேன்
@
சச்சிதானந்தன் (மலையாளம்)

@
ஒன்னராடன் (கைதிகளின் உரிமைக்கான இதழ்) மே - ஜூன் 2010 இல் வெளியான கவிதையின் தமிழாக்கம் ‘காலச்சுவடு’ ஜூன் 2010 இதழில்
இடம் பெற்றது. ஓவியம் - ரவி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
பெருநாள் - கிறிஸ்துமஸ்
‘ஷெஹர்ஜாத்’ - ‘1001 அரேபிய இரவுக’ளின் கதைசொல்லி.

செவ்வாய், 29 ஜூன், 2010

மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்

















அக்காவின் பைபிள்


அக்காவின் பைபிளில் இருப்பவை:
தையல் விட்ட ரேஷன் கார்டு
கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்
கந்துவட்டிக்காரர்களின் அட்டை
திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்
அண்ணன் குழந்தையின் போட்டோ
குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்
ஒரு நூறு ரூபாய் நோட்டு
எஸ்எஸ்எல்சி புத்தகம்.



அக்காவின் பைபிளில் இல்லாதவை:
முன்னுரை
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
நிலப்படங்கள்
சிவப்பு மேலட்டை.


மீன்காரன் / பக். 20/ 2003
****

காதலிக்கும்போது...

ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது
அவளுடைய மணம்,
நிறம், சிரிப்பையெல்லாம்
வெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது
எப்போதும்



அவளுடைய பவுடர்
சுவர்க்கண்ணாடியில் அசையும் மரக்கிளை
அவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்
கதைப் புத்தகங்கள்
அவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்
வெளியில் ரோஜா
பலரகமானவை.



ஜன்னலினூடே இருளும் அந்தியை
வெறுமே அவள் பார்த்தபடியிருப்பதையெல்லாம்
மனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது

எப்போதும்
அவள் எப்போதும் இறந்துபோகலாம்
அவள் இல்லாத ஒரு பெரும் உலகம்
இங்கிருக்கும் எப்போதும் இதுபோலவே.



அவளில்லாமலும் வழிகள் நீளும்
திறந்திருக்கிறது ஒப்பனைப் பொருள்
சுவர்க்கண்ணாடியில் மரமசைகிறது

வழக்கம்போல இதோ
பறவைகள் வந்து
செடிகளுக்கு மேலே
சலசலத்து நிற்கின்றன



அப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்
ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது
அவளை நினைத்து அவன் தலை குனிந்து
நசிந்தவனைப் போல நடக்க நேரும்



இருட்டுக்குள் அவன் ஜன்னலாவானே
அவளை எப்போதும் கனவில் காண்பானே
கனவினூடவன்
அவளையும் தேடி
மரணத்தை நோக்கி
நடந்து போவானே.


மீன்காரன் / பக். 47 / 2003
**

படகைப் பற்றி ஒரு கவிதை


புத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்
எடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.



கடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ?
குடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ?
அவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே?
அவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ?
தோணியில் அவர்கள் எங்கே போக?



ஏனென்றால்
ஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்
எழுதிப் போட்டிருக்கிறேன்
கடையிலிருந்து மிளகாயும் வெங்காயமும்
பொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்
எழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்
தங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்
தோணியில் அவர்கள் ஏறியதுமில்லை.



புத்தகத்தில் எழுதிவைத்த கவிதை
எதைப் பற்றியதாக இருந்தது?
எதைப் பற்றியதாக இருக்க வேண்டும்?
படகைப் பற்றி.

சரி, அது படகைப் பற்றியதுதான்.


மீன்காரன் / பக். 37 / 2003
**



மீன்காரன்


கொஞ்சமே நீரோட்டமுள்ள வாய்க்காலில்
மீன்காரன் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தான்.

தாழைகள் தென்படவில்லை
வாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்
ஒரு ஒர்க்ஷாப்பாக இருந்தது.
அதன் கற்சுவரும் தெரியவில்லை.

வாய்க்காலுக்கு இணையாக
தெற்கும் வடக்குமாக
எம்.சி.ரோடு பாய்ந்து போனது.

நாங்கள், குழந்தைகள்தாம் பார்த்தோம்
அரையடிகூட உயரமில்லாத நீரில்
கவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்
பாத்திரம், தராசும் படிக்கல்லும்.

இவனை வலிப்பு சுழற்றிப்போட்டிருக்கிறது
தலையில் தண்ணீர் விளையாடுகிறது
தண்ணீரில் தாழை மடல்
குத்திக் கிழித்து விளையாடுகிறது.
வாய்க்காலின் ஓய்ந்துபோன மூலையில்
நீர்ப்பூச்சி சுழல்கிறது.

இப்போது அதே இடத்தையடையும்போது
தெரிபவை:
ஒரு கோழிக்கடை
சிமெண்ட் பூசிய ஒர்க்ஷாப்
மண்கொட்டி உயர்த்திய வயல்

மீன்காரனைப் பார்க்கவே முடிவதில்லை.


மீன்காரன் / பக். 54 / 2003

**

இந்த வரிகளுக்கிடையில்

இந்த வரிகளுக்கிடையில்
சில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்
இல்லாமற் போகலாம்.
நமக்கிடையில் அறிமுகமில்லை.
பட்டணத்திலோ கடற்கரையிலோ பார்த்திருக்கலாம்
பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு
கீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது
நீங்களாக இருக்கலாம்
அல்லது
இறைச்சியோ மருந்தோ வாங்கப்
போகும்போது பார்த்திருக்கலாம்
நாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா?
அசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்

நீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்
அல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்
பரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்
நான் கவிதைகள் எழுத முயல்கிறேன்
நமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்
எழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்
வாசிப்புக்கிடையில் நீங்களும்.


ஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005
**


ஐடென்டிட்டி கார்டு

படித்துக்கொண்டிருந்த காலத்தில்
ஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்
அவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக
எங்களுடைய கைகள் குழைந்தன
நாங்கள் ஒரே பெஞ்சில்
இந்து கிறித்துவக் குடும்பமானோம்
நான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்
அதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனது

நான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:
சிவப்புப் பேனாவால் குறித்திருக்கிறதே
ஸ்டைபெண்ட் வாங்கிய கணக்கு.

இந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து
தம்மை மறப்பதைப் பார்ப்பதேயில்லை
சற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்
இனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை
அவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.



ஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005
***


நிலவை நேசித்த பெண்

வீடுவாசல் பெருக்கி, செருப்பணிந்த
கோழிக்குத் தீனிவைத்து, சிரிக்கின்ற
பூனைக்குப் பால்வார்த்து, காலையுணவுண்டு
நேசம் பரிமாறி நிலவை நேசித்து
இரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ?

சோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்
கவிதைக் குருவிகள் எல்லாமும்.

நிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்
உருவாக்கப்பட்டாயோ நீ, பள்ளியின்
வாசலில் கூட்டாளிகள் ஓடியாட
பேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,
பேசாதிருப்பதேன் பசித்ததோ?

கூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ
பாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி
காற்றிலவிழ்த்து வட்டமிட்டு நீ
விழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்
தனக்குத்தானே மெதுவாகப் பேசி
மெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.

வீட்டருகில் ஒருமுறை காணாமற்போக
வாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய
நீ வளர்க்கும் நாய், குரைத்தபடி
கேட்டதென்ன? பதிலுக்கு என்ன சொன்னாய் நீ?

ஆந்தைகள் முனகும் இரவில்
பெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்
பிரார்த்தனைபோல குறுக்கும் நெடுக்குமாய்.

குட்டிச் சிறுத்தைகள்போல வெய்யில்
துள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்
வீட்டின் கதவை விரியத் திறந்து நீ
சிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.

தாயிழந்த குழந்தாய், உனக்கு நான்
என்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்?
என் கை வெறுமை, இதயம் விஷமயம்
இல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.

என் கவிதை காட்டு நாவல் பழம்
என் கவிதை தாயின் உதடுகள்
என் கவிதையின் ஞானஸ்நானத்தால்
உன்னைச் சகோதரியாக்குகிறேன் நான்.

துக்கங்களையெல்லாம் கவிதைகளாக்க
துக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.


கறுத்த கல் / பக். 16 / 2000

கறுத்த கல்

கறுத்த கல்லின் மேலமர்ந்து
சிறுவயதில் விளையாடியதை நினைக்கிறேன்.
எனக்கு முன்பே பிறந்த கல்லிது
கறுத்தவன் என் கடுமையுள்ள கல்
வெய்யிலிலும் கொடும் மழையிலும்
ஒரு வருத்தமுமில்லாமல்
உணர்ச்சியில்லாமல் கிடந்திருந்த கல்
அதன் யானைமுதுகிலமர்ந்து
சடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.

அரண்ட காற்றின் சன்னலில்
அம்மா வருவதைப் பார்த்து
கறுத்த கல்லின் தாழ்வாரத்தில்
தனித்திருந்தேன்
மகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ
தலையில் ரேஷனும் பயிறுமாக
தூரத்து நாற்சந்தியிலிருந்தோ
அம்மா வருகிறாள்.

பசிக்கு மேலாகச் சாரல் மழை.
இருள் மூடிய விளைநிலங்கள்
இருட்டில் பாடும் மலைப் பறவை
இருட்டினூடே வரும் அண்டை வீட்டான்
ஓரினச் சேர்க்கையாளனுக்கு நிறமில்லை.

இவையெல்லாம் பால்யத்தின் குப்பைக்கூடை
இவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்

எனினும்
ஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.

கறுத்த பாதைகள்
கறுத்த வேசிகள்
கறுத்த குழந்தைகள்
கறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்
கறுப்புக்கு என் கறுப்புக்கு
நான் திரும்பி வருகிறேன்.
கருங்கல் உடைத்து எனக்கு
உணவு தந்த தகப்பனை
மரணத்திலிருந்து அழுகையால்
நாங்கள் மீட்ட அன்னையை
சிரட்டை எரித்து
உடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை
மறந்தாலும் உன்னை மறவேன் நான்.


போதாது எனக்கு, கருங்கல்லே,
உன் உள்ளம் குடைந்து போகணும் நான்
தூர வனங்களில்
இறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்
மூடி திறந்து பார்க்கணும் நான்
தெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்
அவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்
வானில் ஒரு புலியை
விழிகளால் தோண்டி வரையணும்.

கடும் குளிரில் கறுத்த வெறுமை
அதற்குள்ளிருக்கிறது கல்
கதவு மூடாத மௌனத்துக்குள்ளே
மறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ?
கருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ?
முடிவின்மைக்குள்ளே உருண்டு போகுமோ?


கறுத்த கல் / பக்.36 / 2000

@

எஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார்.


தொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.

நன்றி : காலச்சுவடு (மாத இதழ்) / எட்டுத்திக்கும் (இணைய தளம்)

சனி, 26 ஜூன், 2010

சொற்குற்றம்
























யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்

நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்

ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?
ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?

சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல.

வெள்ளி, 25 ஜூன், 2010

ஆப்பிள்



















'துக்கம்
பாதி உரித்த ஆப்பிள்
அது
ஓர் உருவகமோ
ஒரு கவிதையோ அல்ல
அங்கே
அது
இருந்து கொண்டிருக்கிறது'

என்றார் தனிக்காவா.

'இங்கே
இரண்டு ஆப்பிள்கள் இருக்கின்றன
ஒன்று குளிர்பதனப் பெட்டியில்
இரண்டாக நறுக்கப்பட்ட மற்றொன்று உணவு மேஜையில்.

குளிர்ந்த ஆப்பிள் பாதுகாப்பாக வியர்த்திருக்கிறது
நறுக்கிய ஆப்பிள் நிறம் பிறழ்ந்து கிடக்கிறது '

இதில்
எது துக்கம்? எது மகிழ்ச்சி?'

தனிக்காவாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்.

'அட, போங்கப்பா,
பசித்திருக்கிறேன் இப்போது
எதைத் தின்ன?
துக்கத்தையா? மகிழ்ச்சியையா?'

எங்களைக் கேட்கிறாய் நீ.

@

உடன்படுக்கை விதிகள்
























ரட்டைக் கட்டிலில் கிடக்கும்
ஒற்றை நுரைமெத்தை நடுவில்
வரையப்பட்டிருக்கும் எல்லைக்கோடு
கண்ணுக்கு ஒருபோதும் புலப்படுவதில்லை
எனினும்
படுக்கையின் எல்லை விதிகள்
நாமறியாமல் நம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன

உறக்கக் கடலின் இருளாழத்தில் துளாவிக்
கைகால்களோ உடலோ பெயர்ந்து
எல்லை தாண்டுகிறோம்.
உடனே
கடலோடியின் நீரியல் எச்சரிக்கையுடன்
அவரவர் எல்லைக்குப் புரண்டு துயில்கிறோம்

கடலோடிக்கு
நீர்வெளியின் எல்லைகள் தெரிவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் புலப்படுகின்றன.

காமத்தின் வானில் வேட்கையுடன் பறந்து
உடல்களைப் பகிர்ந்து
எல்லையைத் தாண்டுகிறோம்
உடனே
விமானியின் சாதுரியத்துடன்
அவரவர் எல்லையைப் புறக்கணித்துக் கூடுகிறோம்

விமானிக்கு
ஆகாய சுதந்திரத்தில் எல்லைகள் இயல்பாவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் மறக்கின்றன.

எனினும்
உடன்படுக்கை எல்லைகளில்
மீற முடியாத விதியொன்று -
ஈருடல் ஓருயிர் என்று பீற்றிக்கொண்டாலும்
ஒரே சிதையில் எரிக்கப்படவோ
ஒரே சவப்பெட்டியில் அடக்கப்படவோ முடியாது.

புதன், 23 ஜூன், 2010

அக்ஞேயா கவிதைகள்



















இந்தப் பதிவிலுள்ள அக்ஞேயா கவிதைகளின் மொழியாக்கம் இருபது ஆண்டுகளுக்குப் பின்பான மறு வருகை அல்லது மீட்டெடுப்பு.

நண்பர் கோணங்கியின் 'கல்குதிரை' ஆறாம் இதழில் வெளியானவை இந்தக் கவிதைகள். இதழில் அக்ஞேயாவின் 'அர்த்தமும் அர்த்தமினமையும்' நாவலும் 'முகமூடிக் கோயில்' கட்டுரையும் வெளியாகியுள்ளன. இரண்டையும் தமிழாக்கம் செய்தவர்: சா.தேவதாஸ்.

உண்மையில், கோணங்கி இந்த இரண்டு மொழியாக்கங்களுடன்தான் இதழைக் கொண்டுவரும் எண்ணத்திலிருந்தார்.நண்பர் சி.மோகன் நடத்திவந்த மிதிலா அச்சகத்தில் வைத்து இதழ் அச்சுக்குப் போகவிருந்த வேளையில்,தயக்கத்துடன் கோணங்கியிடம் அக்ஞேயாவின் சில கவிதைகளை மொழிபெயர்த்து வைத்திருப்பதைச் சொன்னேன். 'ஏ, சரியான ஆளாருக்கியேப்பா, ஒடனே அதைக் குடு' என்றார். வீட்டிலிருக்கிறது, மறுநாள் எடுத்து வருகிறேன் என்றேன். கோணங்கி அதற்குள் படியிறங்கி அச்சக வாசலில் நின்று , 'வா வா, வீட்டுக்குப் போய் எடுத்து வரலாம்' என்று செருப்பை மாட்டிக் கொண்டு நகர ஆரம்பித்தார். ஆடி மாத வெயிலில் மயிலாப்பூரிலிருந்து மந்தைவெளிவரை வியர்வை வழிய நடந்து போய் வீட்டிலிருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன். மொழியாக்கம் எழுதிய பக்கங்களைக் கொத்தாகப் பிய்த்தெடுத்துக் கொண்டு கோணங்கி சொன்னார்: ' அக்ஞேயா சிறப்பிதழ்னு போட்ருவம்யா'.

எண்பத்தியெட்டு பக்கங்களுடன் வெளிவந்த கல்குதிரை இதழில் 'நம் காலத்தின் குரல்' என்ற மணிமேகலை (யார் அது?)யின் கட்டுரையைத் தவிர ஏனைய பக்கங்கள் அக்ஞேயாவுக்கு.

கவிதைகளின் மொழியாக்கத்தில் ஈடுபட்டதும் தற்செயலானது. மொழிபெயர்ப்புக்குச் சில வருடங்கள் முன்பு மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனைப் பார்க்க அவருடைய ஊரான இரிஞ்ஞாலக்குடா சென்றிருந்தேன். 'சமகால ஹிந்திக் கவிதைகள்' என்ற மலையாள மொழியாக்கத் தொகுப்பின் இறுதி வரைவில் மும்முரமாக இருந்தார் சச்சி மாஷ். அவர் வீட்டு வரவேற்பறை டீபாய்மேல் கவிழ்ந்து கிடந்த 'அக்ஞேயாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்' இந்தித் தொகுப்பைப் புரட்டிப் புரட்டி வாசித்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த மாஷ் 'ஹிந்தி படிக்கத் தெரியுமா?' என்று கேட்டார். 'ஓரளவுக்குப்
படிக்க முடியும்' என்றேன். அப்போது அவர் சொன்ன யோசனைதான் அக்ஞேயா மொழிபெயர்ப்புக்குத் தூண்டுதலாக இருந்தது. பிடித்த கவிதைகளைத் தமிழில் தோராயமாக மொழிபெயர்ப்பது. பின்னர் சச்சி மாஷ் அதன் சரியான அமைப்பையும் பொருளையும் சொல்லுவார். அதையொட்டித் திருத்தங்கள் செய்து செம்மைப்படுத்துவது என்பது யோசனை. இரண்டு மணி நேரத்தில் ஐந்து இந்திக் கவிதைகள் தமிழ் வடிவம் பூண்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 'கல்குதிரை'யில் அச்சேறின.


@

அக்ஞேயா என்ற எஸ்.எச்.வாத்ஸ்யாயா என்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயா 1911 இல் பிறந்தார். கவிஞர், நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், விடுதலைப் போராட்ட வீரர், உலகம் சுற்றி.

நவீன இந்திக் கவிதையின் மூன்று தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தவர். அவர் தொகுத்து வெளியிட்ட 'தார் சப்தக்' என்ற நூலே இந்திக் கவிதையின் திசை மாற்றத்துக்குத் தயாராக சிறகுக¨ளைக் கோதிக் கொடுத்தது. இந்தப் புதிய கவிதைகளின் கண்ணோட்டம், புதிய உருவகங்கள், படிமங்கள் ஆகியவை விமர்சக வட்டத்தில் பெரும் எதிர்ப்பைப் பெற்றன. கருத்தளவில் இவை மேற்கத்தியச் சாய்லைக் கொண்டவை; தனிநபர் வாதத் தன்மையுள்ளவை; புதியாதவை என்பவையே முக்கியக் குற்றச் சாட்டுகள். இத் தொகுதி மூலம் அக்ஞேயாவும் முக்திபோதும் புதிய இந்திக் கவிதையின் முன்னோடிகளாகத் தெரிய வந்தனர். 1951 இல் அக்ஞேயா தொகுத்த இரண்டாவது தொகுப்பும் வெளிவந்தது. இந்திக் கவிதை புதிய திசையில் சிறகுகளை வீசிப் பறக்கத் தொடங்கியது. தொடர்ந்து வந்த வருடங்களில் அக்ஞேயா மானுட இருப்பின் பிரச்சனைக்குரிய உள் உலகங்களில் சஞ்சரிக்கத் தொடங்கினார்.

1964 இல் சாகித்திய அக்காதெமிப் பரிசும் 78 இல் பாரதிய ஞானபீடப் பரிசும் அக்ஞேயாவுக்கு வழங்கப் பட்டன. இதய நோய் பாதிப்பால் 1987 இல் மறைந்தார்.


@

வீடுகள்

1

இரண்டு கதவுகளை ஒன்றிணைக்கும்
அறை என் வீடு
இரண்டு கதவுகளுக்கு இடையேயிருக்கும்
காலியிடம் என் வீடு

எப்படிப் பார்த்தாலும்
நீங்கள் வீட்டைக் கடந்து பார்க்கலாம்
மறு பக்கத்துக் காட்சியைப் பார்க்கலாம்
ஆனால் வீட்டைப் பார்க்க முடியாது

நான் தான் என் வீடு
என் வீட்டில் எவரும் வசிக்கவில்லை
என் வீட்டில் நான் வசிக்கிறேனா?
எப்படிப் பார்த்தாலும்...

2

உங்கள் வீடு
அங்கே சாலைமுடியுமிடத்தில்

ஆனால் நான் எப்போதும் போய்க்கொண்டேயிருக்க வேண்டும்
அப்படியானால் சாலை எங்கே முடிகிறது?
உங்கள் வீடு...

3

மற்றவர்களின் வீடுகள்
உள்நோக்கித் திறக்கின்றன
அவை வெளியிட முடியாத ரகசியங்களுக்குள் திறக்கின்றன
மற்றவர்களின் வீடுகள் நகரங்களில்
நகரங்கள் மற்றவர்களின் வீடுகளில்...

4

வீடுகள், நாம் செல்லும் வீடுகள் எங்கே?
வீடுகளைப் பற்றிய எல்லாப் பேச்சுக்களும்
வீடுகளைப் பொறுத்தவரை புதிர்கள்தாம்
பிறரிடம் நாம்
வீடுகளைப் பற்றிப் பேசுவதில்லை
பிறரிடம் நாம் பேசுவது
வீடுகளைப் பற்றியுமல்ல.

@

திசைகள்

என்றும் காலையில் கொஞ்ச நேரம்
நான் இறந்த காலத்தில் வாழ்கிறேன்
ஏனெனில்
என்றும் மாலையில் கொஞ்ச நேரம்
நான் எதிர் காலத்தில் சாகிறேன்.

@

தேநீரை உறிஞ்சிக்கொண்டே...

தேநீரை உறிஞ்சிக்கொண்டே
நான் அப்பாவைப் பற்றி யோசிக்கிறேன்
நீங்களும் தேநீரை உறிஞ்சிக்கொண்டே
உங்கள் அப்பாவைப் பற்றி யோசிப்பதுண்டா?

அப்பாவைப் பற்றிய இந்தச் சிந்தனை
நல்லதற்கல்ல
நாம் வேறு எவரோவாக ஆகியிருக்கலாம்
ஆனால் அத்தோடு
நமது அசல் குணம் வெளியே வந்து விடும்
நாம் வேறு எவரோவாகியிருக்கலாம்
வேறு எவரோவாக முடிந்திருந்தால்
நாம் அப்பாவை நெருங்கியிருப்போம்
ஏறத்தாழ அப்பாவைப் போலாகியிருப்போம்
இதைக் கண்டுபிடித்து விடுகிறோம்
யோசனையின் கோளாறு இதுதான்

அப்பாவைப் போலாக வேண்டுமென்றால்
அப்பாவிடமிருந்து எவ்வளவோ விலகிப் போகவேண்டும்

அப்பாவும் காலையில் தேநீர் அருந்துவார்
அப்போது
அவரும் அவருடைய அப்பாவைப் பற்றி யோசித்திருப்பாரா?
அது
அப்பாவுக்குப் பக்கத்திலிருந்தா அல்லது
அப்பாவிடமிருந்து விலகியா?

@

எல்லைப் புறத்தில் சோதனை

முகங்கள் திருத்தமானவை
எந்திரங்களைப்போல மென்மையானவை
அவை வெளிப்பூச்சில் மின்னுபவை
அவை மறைத்து வைப்பதற்காகவே பேசுபவை
கைகள் மட்டும் இப்போதும் இணக்கமற்றவை
அவற்றின் தழும்புகள் மௌனமாக
உண்மையைச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றன
சிலசமயம், சிலசமயம் மட்டுமே
கண்ணீர்த் துளிகளும்...

அவை மட்டுமே இப்போதும் பாடுகின்றன

@

ஹிரோஷிமா

இன்று ஒரு சூரியன் உதித்தெழுந்தது
இல்லை
தொடுவானத்துக்கு மேலாக மெல்லமெல்ல உதித்தெழவில்லை

நகரத்தின் மத்தியில்
ஒரு வெளிச்சவாணம் தெறித்துச் சிதறியதில்
இன்றைய சூரியன் உதித்தெழுந்தது
இல்லை
ஆகாயத்திலிருந்தல்ல
வெடித்துப் பிளந்த பூமியிலிருந்து

எல்லாத் திசைகளிலும்
பேதலிப்பின் நிழல்கள்
இழப்பின் நிழல்கள்
மனித நிழல்கள்

இல்லை
கிழக்கிலிருந்து எழுந்து வரவில்லை

மரணத்தின் அதிவேக சூரிய ரதத்திலிருந்து
கழன்று சுழன்று
ஒரு பெருஞ்சக்கரம் கீழே விழுந்தது
நகரத்தின் இதயத்தில் விழுந்து உடைந்தது
எங்கும் சிதறியது

ஒரே நொடியில்
ஒரு சூரியன் உதித்து மறைந்தது
குறுகிய உச்சிவேளிஅயின்
கண்பிடுங்கும் ஒளிப் பிரவாகம்.

பிறகு
நீண்டு வந்ததும் வெளிறி இறந்ததும்
மனித நிழல்களல்ல
மனிதர்கள்
ஒற்றை நொடியில் மூடுபனியாகி மறைந்தனர்
நிழல்கள் மட்டும் மிஞ்சின

பாறைகளில்
காலியான இந்தத் தெருக் கற்களில்
எரிந்து கருகிய நிழல்கள்

மனிதர்கள் உருவாகிய சூரியன்
மனிதர்களையே துகள்களாக்கியது
சூனியமாக்கியது

கறுத்த பாறைகளில் கையொப்பமிட்ட வெள்ளை நிழல்கள்
குற்றப் பத்திரிகை வாசிக்கின்றன -
மனிதர்களுக்கு எதிராக.



நன்றி: கல்குதிரை - ஜூன் ஜூலை ஆகஸ்ட் இதழ் (1990)