சனி, 26 ஜூன், 2010

சொற்குற்றம்
யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்

நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்

ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?
ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?

சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல.

10 கருத்துகள்:

 1. உயிர்மெய்யிலேயே படித்தது. ரொம்ப நல்லா இருக்கு ஐயா (புகைப்படமும்).
  (என்னவோ சொல்ல வர்றீங்க, யாரைன்னுதான் தெரியலே)

  பதிலளிநீக்கு
 2. செல்வராஜ் ஜெகதீசன், என்னவோ சொல்ல இருந்தது
  என்பதுதான் கவிதைக்கான உந்துதல். அது யாரையும் ஆகலாம்.

  கருத்துரைக்கு நன்றி,ஜெகதீசன், முத்துசாமி பழனியப்பன்.

  பதிலளிநீக்கு
 3. //எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
  எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது//
  இங்கிருக்கும் (இலக்கிய?) சூழலில் இது மிகப் பொருத்தமாக உள்ளது. தேர்தெடுத்த சொற்களைப் பேசுவதற்கு பேசாமல் இருப்பதே உத்தமம் எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 4. இசை, இளங்கோ கிருஷ்ணன்,உமாஷக்தி - நன்றி.

  போட்டோவில் நடப்பவர் உங்களுக்கும் தெரிந்தவர்தான் டங்கு டிங்கு டு.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்.நீரடி நோக்கி நகரும் வேராய் உங்கள் கவிதையெனும் மாயக்கரத்தை நோக்கி என் நேசம் நகர்ந்துகொண்டேயிருக்கிறது. அங்கனம் நகர்ந்ததின் அதிகபட்சமாய் கோவையில்( கலாப்பிரியாவின் பாராட்டு விழாவில் ) 10 நிமிடம் பேசக் கிடைத்த வாய்ப்பு.அதெனக்கு உங்களின் சத்யஜித்ராயின் சந்திப்புக்கு சமாணம்.

  காந்தியை பஷீர் தொட்டார்.பஷீரை தொட்டதின் மூலம் ஜெயமோகன் காந்தியையும் சேர்த்தே தொட்டார்.

  நான் சு.ரா,ஆத்ம நாமை உங்களின் மூலமாக...

  சொற்களை சொல்பவனைப் பாம்பு பிடாரனுடனும்,யானைப் பாகனுடனும், வெடிகுண்டு செய்பவனுடனும் பொருத்தியது அற்புதம்..எந்த நொடி நமக்கெதிராகத் திரும்பும் என்று சொல்ல இயலாது..அதற்காக நம் அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்க இயலாது..வாயிலிருந்து உதிர்ந்த சொல் பாம்பே..விளைவைப் பொருத்து நல்லதாகவும்,தீயதாகவும்.

  மெட்டுக்கேற்றப் பாடல் போல உடைந்த பாலத்தின் மீதான உங்கள் நடை..கவிதைக்கு முத்தாய்ப்பு..

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. சுகுமாரன் சார்..

  இப்போதுதான் உங்கள் வலைப்பூவிற்கு வந்திருக்கிறேன்.
  எதையும் சொல்ல பயமாயிருக்கிறது கவிதை அற்புதம். தொடர்ந்து மற்ற கவிதைகளையும் படித்துவிட்டு எழுதுவேன். வீடு பரிவற்றது வெளி எல்லையற்றது எனும் உங்கள் வரிகளில் இன்றைக்கும் மயங்கும் உறரணி.

  பதிலளிநீக்கு