வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

மோகத்தின் நிழல்


















'ம்மா வந்தாள்ஒன்றைத் தவிர தி. ஜானகிராமன் எழுதிய பிற நாவல்கள் எல்லாமும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. 'ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் 'கணையாழி' போன்ற சிறு பத்திரிகை களிலுமே அவை தொடராக வெளியாகியிருக்கின்றன. பிற்காலத்தில் வெகு ஜனப் பிரபலமுள்ள எழுத்தாளர்கள் உருவாக்கிய தொடர் கதை இலக்கணம் எதற்கும் தி.ஜாவின் நாவல்கள் உட்படாதவை. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசக எதிர்பார்ப்புக்காக ஏற்படுத்திய திடீர் திருப்பங்களோ சுவாரசியச் சிக்கல்களோ இல்லாமல் எழுதப்பட்டவை.  எனவே தான் இந்த நாவல்களைத் தொடர்கதைகள் என்று சொல்லாமல், தொடர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

தி.ஜானகிராமனின் மாஸ்டர் பீஸான 'மோக முள்'ளும் தொடராக வெளி வந்த நாவல்தான். 1955 - 56 ஆண்டுகளில் 'சுதேசமித்திரன்' நாளிதழின் வாரப் பதிப்பில் தொடராக வெளிவந்தது. ஜானகிராமனின் நாவல்களிலேயே அளவில் பெரிய நாவல் இது. மிக அதிகமான  பாத்திரங்கள் கொண்ட நாவலும் இதுதான். அவரது நாவல்களில் அதிக அளவு வாசகர்களைப் பெற்றதும் இதுவாகவே இருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் காரணம் அது பத்திரிகைத் தொடராக வெளிவந்ததுதான். ஆணின் விடலை மனப் பாங்குக்கு உகந்ததாக நாவலின் கதைப் போக்கு இருந்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். பதின் வயதில் தைக்கும் முள்ளின் நோவு காலம் கடந்தும் தீராத மோகமாகவே எஞ்சியிருக்கச் செய்யும் ரசவாதம் அதில் இருக்கிறது.

பதினேழாம் வயதில், கல்லூரிப் பருவத்தில் 'மோக முள்'ளை முதன் முதலாகப் படித்தேன். கல்லூரி நூலகத்தில் இரண்டு நாட்கள் அடைந்து கிடந்து எண்ணூறு பக்கங்களையும் படித்து முடித்தேன். அந்த வாசிப்பில் அடைந்த பரவசத்தின் புதுக் கருக்கு இன்றும் களிம்பேறாமல் மனதுக்குள் இருக்கிறது. அந்தப் பரவசத்தை  ஜானகிராமனின் வார்த்தைகளிலேயே சொல்லலாம். ' காதல் செய்கிற இன்பம் அதில் இருந்தது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிபோதல், வேதனை எல்லாம் அதில் இருந்தன.

இந்த எல்லா உணர்வுகளும் மையப் பாத்திரமான யமுனாவைச் சார்ந்தே இருந்தன. அது மனதும் உடலும் பெண்ணின் ரகசியத்தை அறிந்து கொள்ளத் தவித்துக் கொண்டிருந்த வயது. அந்தத் தவிப்பைச் சமன் செய்து கொள்ளவும் கற்பனைகளில் வாழவும்  ஜானகிராமன் சித்தரித்த யமுனா உதவினாள். மெல்ல மெல்ல அந்தக் கற்பனைப் பாத்திரம் அசலானது என்றும்  எங்கோ கண்ணுக்குத் தட்டுப்படும் தொலைவில் நடமாடிக் கொண்டிருக்கிறது என்றும் உயிர் பெற்றுக் கூடவே தொடர்ந்தது. ஆண் பாத்திரமான பாபுவை விட வயதில் மூத்தவள் யமுனா என்பது வெளிப் படையான சலுகையாகத் தெரிந்தது அந்த வயதுக்கு. சம வயதுப் பெண்களுடன் பேசத் தயக்கமும் துணிவின்மையும் கொண்டிருந்த மனதுக்கு பெரிய பெண்ணிடம் சகஜமாகப் பேசலாம் என்ற சுதந்திரத்தைக் கொடுத்தது. அந்த விபரீத சுதந்திரம் பாடத் திட்டத்திலேயே மகா அலுப்பூட்டும் பாடமான வேதியியலைக் கற்பிக்க வந்த தற்காலிகப் பேராசிரியையை யமுனாவாகக் கற்பனை செய்து ரசிக்கச் செய்தது. அவரை மட்டுமல்ல வேறு பல அக்காள்களையும் யமுனாவாக ஆக்கியது.

பாபுவின் பார்வையில்தான் தி.ஜானகிராமன் யமுனாவைச் சித்தரிக்கிறார். 'இவளிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அணுக முடியாத தொட முடியாத ஒரு முழுமை. பொலிவு. சந்தனக் கட்டையின்  வழவழப்பு,நீண்ட விரல்கள் நீண்ட கைகள் நீண்ட பாதம்'. இது ஆராதனை சார்ந்த மனநிலை. அதையும் மீறிய ஒருத்தியாகவும் யமுனா காட்டப் படுகிறாள். 'இவளும் ஒரு கணத்தில் ஒளி மங்கிய முக்கால் இருளில் தனிமையின் கை மறையும் அந்தி மங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும்' என்ற ஆண் தவிப்பின் இலக்காகக் காணும் மனநிலை. இந்த இரண்டு மனநிலைகளையும் மீறிய ஒருத்தியாக யமுனாவைப் பார்த்ததும் பார்க்கவைத்ததுமே நாவலின் வெற்றி. தன்னை விட இளையவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள்; உடலையும் தருகிறாள். இது மட்டுமே யமுனா என்றால் அவளை மறந்து விடுவது சுலபம். ஆனால் 'இதுக்குத்தானே? என்ற முகத்தில் அறைகிற கேள்வியையும் கேட்டு அவனை உடலின்பத்தைக் கடந்த அனுபவத்தை நோக்கித் தள்ளி விடுகிறாள்; இசையில் தேர்ச்சிபெற அனுப்பி வைக்கிறாள். இந்த ஆளுமைத் திருப்பமே யமுனாவை மறக்க இயலாத பாத்திரமாக, இன்றும் என்னால் காதலிக்கப்படும் ஜீவனாக மாற்றுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் யமுனாவுக்கு ஒவ்வொரு முகத்தையும் தோற்றத்தையும் கற்பனை செய்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போதும் அவள் மனதுக்குள் முக விவரங்கள் இல்லாத ஒருத்திதான். நாவலைப் புத்தக வடிவில் வாசித்ததால் எனது கற்பனைக்குத் தோதான முகத்தைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. இது தொடராக வந்த சமாச்சாரம் ஆச்சே? அப்படியானால் வெளிவந்த காலத்தில் யமுனாவின் தோற்றம் சித்தரிக்கப்பட்டிருக்குமில்லையா? என்று நாவலை முதன் முதலாகப் படித்து முடித்த காலத்தில் ஏக்கம் வந்தது. ஜானகிராமனின் நெருங்கிய நண்பரும் மோகமுள் நாவலில் ஒரு பாத்திரமாகவே இடம் பெறுபவருமான எழுத்தாளர் எம்.வி. வெங்கட் ராமிடம் விசாரித்தேன். அப்போது சிறிது காலம் அவர் எங்களூர் கோவையில் இருந்தார். வங்கி ஊழியரான மகனுடன் வசித்து வந்தார். அவரிடம் 'மோக முள்' வெளியான 'சுதேசமித்திரன்' இதழைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன். அவரிடம் ஓரிரு இதழ்கள் மட்டுமே இருந்தன. அதுவும் கும்பகோணத்தில் இருக்கிறது என்று கையை விரித்தார். ஏமாற்றமாக இருந்தது. அதை உணர்ந்த எம்.வி.வி. முடிந்தால் யாரையாவது விட்டு அதைக் கொண்டு வரச் செய்வதாகச் சொன்னார். சொன்னதுபோலச் செய்தார். சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் மோக முள் அத்தியாயங்கள் இடம் பெற்ற இரண்டு இதழ்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் என் தீயூழ். ஒரு அத்தியாயத்தில் பாபுவும் நண்பன் ராஜமும் ஆற்றங்கரையில் உட்கார்ந்திருக்கும் படம். இன்னொன்றில் ரங்கண்ணாவும் பாபுவும் இசைப்பயிற்சியில் ஈடு பட்டிருக்கும் படம். பார்த்ததும் மனது பொருமியது. ஆனால் மகிழ்ச்சி யாகவும் இருந்தது. என் யமுனா எனக்கு மட்டுமான யமுனாவாகவே இருக்கிறாள் என்ற ரகசிய சந்தோஷம்.

ஓவியர்கள் சித்தரிப்பை விட தி.ஜாவின் வார்த்தைச் சித்தரிப்பே மேலானது. அவரது எல்லாப் பெண்பாத்திரங்களும் அப்பழுக்கில்லாத அழகிகள். அதே சமயம் அகத் துணிவு கொண்டவர்கள். இந்து (அம்மா வந்தாள் ), பாலி ( மலர் மஞ்சம் ), அனசூயா, செங்கா ( உயிர்த்தேன்), அம்மணி ( மரப்பசு), குஞ்சம்மாள் ( செம்பருத்தி ) எல்லாரும் ஒரேபோன்ற உயிர்ப்பும் ஒளியும் கொண்டவர்கள்.அவர்களில் இன்னும் திடமானவள், இன்னும் பிரகாசமானவள் யமுனா. மனம் அப்படித்தான்  நம்ப விரும்புகிறது;  இல்லை, நம்புகிறது.

இந்தப் பாத்திரங்கள் அனைத்தும் ஆண்மைய நோக்கின் வெளிப்பாடுகளே. ஆண் மனம் தன்னை முழுமையாக்கிக் கொள்ள விரும்பும் பால்விழைவின் கற்பனைகள்தாம். ஆனால் ஜானகிராமன் இந்தப் பெண் பாத்திரங்களை ஆணுக்கு இணையாகவே உருவாக்க விரும்பியிருக் கிறார். சமயங்களில் ஆணுக்குச் சமமானவர்களாக; சில சமயம் ஆணை மீறியவர்களாக; இவர்களில் யமுனா மட்டுமே ஆணைத் தன்னைக் கடந்து செல்ல வலியுறுத்துகிறவளாக உருவாக்கப்பட்டிருக்கிறாள். அவள் விட்டு விலகாத மோகத்தின் நிழல்; ஆனாலும் தனியள். கதைப் பெண்களில் யமுனாவே என் நாயகியாக மாற அதுதான் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.


 ( அந்திமழை இதழில் வெளியான கட்டுரை)





மதுவை விலக்கும் கேரளம்





யேசுவின்   போதனைகளைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்தவர் புனித தாமஸ்.  மலபார் கடற்கரையில் வந்து இறங்கிய தோமையார் அங்கிருந்த மக்களிடம் யேசு கிறிஸ்துவின் உபதேசங்களை எடுத்துச் சொன்னார். யாரும் அசையவில்லை. தண்ணீர்மேல் நடந்து காட்டினார். அப்போதும் இருந்த இடத்தை விட்டு யாரும்  நகரவில்லை. இறந்து போன ஒருவனுக்கு உயிர் கொடுத்து நடக்கச் செய்தார். அப்போதும் எல்லாரும் சலனமில்லால் இருந்தார்கள். ஒரு வாளியில் நீரை எடுத்து அதை மதுவாக மாற்றிக் காட்டினார். மக்கள் அவரை மொய்த்துக் கொண்டார்கள். அப்போதே எல்லாரும் ஒட்டுமொத்தமாக மதம் மாறினார்கள்.

மலையாளிகளின் குடிப் பழக்கதைப் பற்றிச் சொல்லப்படும் கதை இது. கதையிலிருக்கும் கற்பனை சரக்கை மீறிய உண்மை நடைமுறையில் இருக்கிறது. இந்திய மாநிலங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமிருப்பது கேரளத்தில் என்கிறது ஒரு ஆய்வுக் கணக்கு. மொத்த தேசிய மது உற்பத்தியில் பதினாறு சதவீதத்தைக் கேரளம் குடித்துத் தீர்க்கிறது. மிக அதிக அளவில் மதுவை உட்கொள்பவர்களும்  மலையாளிகள்தாம் என்கிறது. பிற மாநிலங்களில் ஒரு தனி நபர் அருந்தும் மதுவின் அளவை விட  ஒற்றை மலையாளி குடித்துத் தீர்க்கும் மதுவின் அளவு அதிகம். வருடத்துக்கு 8.3 லிட்டர். பிற மாநிலங்களில் ஒருவன் பதினேழை ஒட்டிய  வயதில் முதன் முறையாக மதுவை ருசிபார்க்கிறான். ஆனால் கேரளத்தில் பன்னிரண்டு வயதிலேயே ஒருவனுக்கு மது அறிமுகமாகி விடுகிறது.

கேரளத்தின் பெரும்பான்மையான கிறித்துவக் குடும்பங்களில் வீட்டிலிருந்தே மது அருந்துவதும் குடும்பத்துடன் அருந்துவதும் கலாச்சாரப் பழக்கமாகவே இருப்பது. அது பிற சமூகங்களுக்கும் பரவி இருக்கிறது. எனவே இந்தப் புள்ளி விவரங்கள் இயல்பானவையாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதனாலேயே கேரளத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் மது விலக்கை அமல்படுத்துவது எளிதானதாக இருந்ததில்லை. கேரள முதல்வர் உம்மன் சாண்டி கேரளத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டுவதாக அறிவித்து மாநிலத்தில் நடத்தப்பட்டு வந்த 312 பார்களின் லைசென்சைப் புதுப்பிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளார். மீதமிருக்கும் 418  பார்களும் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டு மூடப்படும்  என்று அறிவித்துள்ளார். மாநில அரசின் மது விநியோக அமைப்பான பிவரேஜஸ் கார்ப்பரேஷனின் 300க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களும் படிப்படியாக மூடப் படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மதுவிலக்கு இல்லாத எல்லா மாநில அரசுகளையும் போலவே கேரளத்துக்கும் அதிக வருவாய் திரள்வது மது விற்பனை மூலமே. சுமார் 9000 கோடி ரூபாய். இந்தப் பெரும் வருமானம் இல்லாமல் போகும். கூடவே வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் கணிசமாகக் குறையும். அதுவும் நிதி இழப்புக்கு இட்டுச் செல்லும். மாநிலத்துக்கு நிதி ஆதாரமாக உள்ள  இந்த இரண்டையும் கைவிட்டு விட்டு மது விலக்கை அமல்படுத்த உம்மன் சாண்டி அரசு தீர்மானம் எடுத்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. 'இந்த மாநிலம் மது  அடிமைகளின் இருப்பிடமாக மாறி விடக் கூடாது. இனி வரும் தலைமுறை பாதுகாப்பான, ஆரோக்கியமான , சமாதானமான  வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த  நடவடிக்கை. இது ஒரு தொடக்கம் மட்டுமே. படிப்படியாக  விலக்கு ஏற்படுத்தப்படும். பத்து ஆண்டுகளில் மாநிலத்தில் முழு மது விலக்கு நடைமுறைக்கு வரும்.' என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் உம்மன் சாண்டி. மது எதிர்ப்பாளர்களிடமிருந்து வாழ்த்துகளும் குடியர்கள் தரப்பிலிருந்து சாபங்களும் உம்மன் சாண்டிக்கு வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

ஒரு பத்திரிகையாளனாகவும் கேரளத்தில் வாக்குரிமை உள்ள குடி மகனாகவும் முதல்வர் உம்மன் சாண்டி மீது கடும் விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றன. கேரள முதல்வர்களின் மோசமான முதல்வர் அவரே என்ற கருத்தும் அழுத்தமாக இருக்கிறது. ஆனால் மதுவிலக்கை அமல் படுத்துவேன் என்ற அவருடைய சவாலான நிலைப்பாட்டுக்கு மனப் பூர்வமான  வாழ்த்துகளைத் தெரிவிக்கவே விரும்புகிறேன். மதுப் பழக்கத்தால் சீர் குலைந்த ஒரு குடும்பத்தின் உறுப்பினன் என்ற முறையில் அதை எதிர்க்கும் மன நிலையிருந்து அந்த வாழ்த்துகளைச் சொல்வேன். இதே மன்நிலையில்மதுப்பழக்கமே இல்லாமலிருந்த ஒரு தலைமுறைக்கு போதையின் ருசியைக் காட்டிப் பின் வந்த தலைமுறை களை நரகத்தில் தள்ளியவர் என்று கருணாநிதியைக் குற்றம் சாட்டவும் செய்வேன். இந்த மனநிலை மதுவை அருந்துபவர்களை அருவருப்பாகவும் இளப்பமாகவும் பார்க்கும் பார்வையை  முன்பெல்லாம் எனக்கு அளித்திருந்தது. குடிப்பவர்கள் எல்லாரும் குடிகாரர்கள் என்ற ஒவ்வாமையைக் கொடுத்திருந்தது. இன்று அந்த மனநிலை மாறியிருக் கிறது. குடிப்பவர்களும் குடிகாரர்களும் வேறு என்று புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்திருக்கிறேன்.

உம்மன் சாண்டி அரசின் இந்தத் தீர்மானத்துக்குப் பின்னால் அவரது அரசியல் விளையாட்டும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் மது விலக்குத் தீர்மானம் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான வி. எம்.சுதீரன் முன்வைத்தது. கடந்த மூன்று வருடங்களாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் மேலிடத்துக்கு நல்ல அபிப்பிராயம் இருக்க வில்லை. வெறும் பதவிப் போட்டியும் குழு அரசியலும் கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கு - குறிப்பாக, முஸ்லிம் லீக் கட்சியின் இழுப்புக்கு வளைந்து கொடுப்பதும் மக்கள் பிரச்சனைகளைப் புறக்கணித்ததும் ஆட்சிக்கு அவப் பெயரையே பெற்றுத் தந்திருந்தன. அதைச் சரி செய்வதற்காக அன்றைய தலைவர் ரமேஷ் சென்னித்தலைக்கு வேண்டா வெறுப்பாக உள்துறை அமைச்சர் பதவியைக் கொடுத்தது மேலிடம். கூடவே காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கறை படியாதவர் என்று புகழப்பட்ட வி.எம் சுதீரனை கட்சியின் தலைவராகவும் நியமித்தது. சுதீரனின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றுதான் மார்ச் 31 ஆம் தேதியுடன் காலாவதியான 312 பார்களின் லைசென்சைப் புதுப்பிக்கக் கூடாது என்று அரசைக் கட்டுப்படுத்தியது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கட்சித் தலைவர் ஆட்சியில் மூக்கை நுழைப்பதா என்று பொருமலுடன் காத்திருந்தார்  உம்மன் சாண்டி. நம்மை விட சுதீரன் பெரிய காங்கிரஸ்காரரா? என்று நினைத்திருக்க வேண்டும். கடந்த  மாதம் நடந்த ஆளும் கட்சிக் கூட்டணிக் கூட்டத்தில் மிச்சமிருக்கும் 418 பார்களும் விரைவில் மூடப்படும் என்று அறிவித்து விட்டார். சுதீரன் எட்டடி பாய்ந்தால் உம்மன் சாண்டி முப்பதிரண்டடி முன்னால் தாவிவிட்டார். சுதீரனின் 'மகாத்மா' இமேஜை அநாயசமாகத் தட்டிப் பறித்துக் கொண்டார். உண்மையில் காந்தியை விடப் பெரிய காந்தியாக உருமாறி இருக்கிறார் உம்மன் சாண்டி.

இந்தப் பிரச்சனைக்கு இன்னொரு கோணமும் இருக்கிறது.

கேரளத்தில் பரம்பரையாகக் கள் இறக்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டவர்கள் ஈழவர்கள். அவர்களை மாபெரும் சமுதாய சக்தியாக மாற்றிய நாராயண குருவின் உபதேசங்களில் ஒன்று: ' கள்ளு செத்தருது. கள்ளு குடிக்கருது' ( கள் இறக்கக் கூடாது; குடிக்கக் கூடாது). எல்லா மகான் களின் வாக்கும் பொய்ப்பிக்கப்படுவது போலவே அவரது வாக்கும்  பொய்யாக்கப் பட்டது. ஈழவர்களின் சமுதாய அமைப்பான எஸ் என் டி பி 
( ஸ்ரீ நாராயண தர்மபரிபாலன சபை) யின் இன்றைய தலைவர் கேரளத்தின் பெரும் மது வியாபாரியான  வெள்ளாப்பள்ளி நடேசன் என்பது சுவாரசியமான முரண்.  அது ஒரு புறம் இருக்கட்டும்.

கள்ளுக் கடை வருமானம் மூலம் பெரும் செல்வந்தர்களாக மாறிய ஈழவர்கள் அரசியலில் மறுக்க முடியாத சக்தியாக ஆனார்கள். எந்தக் கட்சியும் உதாசீனம் செய்ய முடியாத ஓட்டு வங்கி அவர்களிடமிருந்தது. சமூக மட்டத்திலும் அவர்கள் செல்வாக்கு உச்சமடைந்தது. இது அதுவரை அரசியல் நிணய சக்தியாக இருந்த கிறிஸ்தவ சபைகளுக்குத் தலை வலியானது. சபையின் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்ட மதச்சார்பற்ற கிறிஸ்தவரான ஏ.கே.ஆண்டனி தனது ஆட்சிக் காலத்தில் கள்ளுக் கடைகளுக்கு விலக்கு ஏற்படுத்தினார்.  ஈழவ சமுதாயத்தின் செல்வாக்கு ஆட்டம் கண்டது. கள்ளுக் கடைகளுக்குப் பதிலாக அறிமுகமான சாராய ஷாப்புகள் கிறிஸ்தவ முதலாளிகளின் கைகளில்தழைத்து வளர்ந்தன. அதேசமயம் தோற்கடிக்கப் பட்ட ஈழவ சமுதாயம் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட வெளிநாட்டு மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டது. பார் கலாச்சாரம் செழிக்கத் தொடங்கியதும்  சாராயக் கடைகள் மூடப்பட்டன. அதையும் ஆண்டனியே நடத்தினார். அப்போது அவர் சொன்ன காரணமும் உம்மன் சாண்டி இப்போது சொல்லும் காரணமும் ஒன்றேதான்.  'படிப்படியாக மதுவிலக்கு அமல் படுத்தப்படும்'. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது இப்போது தெளிவாகிறது. மூடப்பட்ட பார் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தடை  பெற்றிருக்கிறார்கள். இனிமேல் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே பார் லைசென்ஸ் வழக்கப்படும் என்ற அரசின் முடிவை கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். மறைமுகமாகவேனும் அரசு தங்கள் சமுதாயத்துக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். இவை உம்மன் சாண்டியை ' ஓட்டு வங்கி அரசியல் முக்கியமா? நாட்டு மக்கள் நலம் என்ற 'காங்கிரஸ் இலட்சியம்' முக்கியமா? ' என்ற கேள்வியின்  நிழலில் நிறுத்தியிருக்கிறது.

மது விலக்கை அமல் படுத்துவதனால் கேரள அரசுக்குப் பெருமளவு நிதிப் பற்றாக்குறை ஏற்படும். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வருவாய் அளவும் குறையும். மதுபானத் தயாரிப்பு, விநியோகப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ள பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அவர்களது மறு வாழ்வுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டி வரும். இதுவரை குடித்து ருசி கண்ட மக்களைச் சமாதானப்படுத்த காத்திரமான திட்டங்கள் தீட்ட வேண்டி இருக்கும். இத்தனை சவால்களை யும் மீறி கேரள அரசு மது விலக்கை நடைமுறைப்படுத்த முடியுமா? நடைமுறைப்படுத்த வேண்டுமா? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. மது விலக்கை அமல் படுத்துவதன் மூலம் குடிப்பழக்கம்  மறைந்து போகுமா? என்று கேட்கப் படுகிறது. உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு எதிர்மறையான பதிலையே சொல் கிறார். 'மதுவிலக்கின் மூலம் குற்றங்கள் பெருகும் வாய்ப்பும் கள்ளச் சாராயச் சாவுகள் அதிகரிக்கும் சூழ்நிலையும் உருவாகும் ' என்று எச்சரிக்கிறார். 'கவனமில்லாத, பொறுப்பில்லாத குடிதான் குடும்பப் பிரச்சனைகளுக்கும் உணர்ச்சிகரமான செயல்களுக்குக் காரணம். மதுவைத் தடை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது' என்கிறார் பிரபல எழுத்தாளரான சக்கரியா. 

அரசியல் தந்திரமாகவோ அல்லது சமுதாயச் செல்வாக்கைச் சமாளிக்கும் நடவடிக்கையாகவோ தீர்மானம் எடுத்திருத்திருந்தாலும் அதில் உறுதியாக நிற்பாரென்றால் உம்மன் சாண்டி வரலாற்று முன்னோடி ஆவார் என்பது நிச்சயம். கேரளத்தில் ஆட்சி பீடமேறும் அரசியல் முன்னணி எதுவானாலும் மதுபான வருவாயைத் தமிழ் நாட்டைப்போல விரயம்  செய்யவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. மதுபான விற்பனையை வானளவு உயர்த்தி அதன் மூலம் ஒரு பெரும் மக்கள் திரளை போதை நோயாளிகளாக்கவில்லை. அவர்களை நிரந்தரக் குடிகாரர்களாக்கி, தாய்மைக் கருணையுடனோ தந்தைமைக் கருணையுடனோ இலவசப் பொருட்களைக் கொடுத்து இரவலர் சமுதாயத்தை உருவாக்கவில்லை. எந்தத் தொழில் செய்யவும் லாயக் கில்லாத உழைப்பு விரோதக் கூட்டத்தை உற்பத்தி செய்யவில்லை. கேரளத்தில் மதுவிலக்கு நடை முறைக்கு வருமானால் அதிலிருந்து கற்றுக் கொள்ளத் தமிழகத்துக்கும் சில பாடங்கள் உருவாகும்.

கேரள அரசு இந்தத் தீர்மானத்தை எப்படி நிறைவேற்றப் போகிறது என்று  பிற மாநிலங்கள் எல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. 'முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எவ்வளவு பெரிய செலவு செய்ய வேண்டி வந்தாலும் அந்தச் செலவு எந்த வகையிலும் அதிகமானதே அல்ல' என்று 1927 ஆம் ஆண்டு காங்கிரஸ்காரர் ஒருவர் சொன்னதை இன்றைய காங்கிரஸ் முதல்வரான உம்மன் சாண்டி கடைபிடிப்பாரா என்பதே அந்தப் பார்வையில் தொக்கி நிற்கும் கேள்வி. அப்படி முடியாத சூழ்நிலை வருமானால், ( அதுபோன்ற துரதிர்ஷ்டம் வராமலிருப்பதாக ) ‘ நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரமாக இருக்கிறது கேரளம்என்று கவித்துவமாகச் சாக்குச் சொல்ல மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

(அந்திமழை மாத இதழில் வெளியான கட்டுரை )