செவ்வாய், 24 டிசம்பர், 2019





மிக நெருக்கமானவர் அல்லர்; முற்றிலும் அந்நியரும் அல்லர். இந்த இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட ஒன்றாகவே ஜி.நஞ்சுண்டனுடன் நிலவிய  நட்பைச் சொல்ல முடியும். அடிக்கடியான சந்திப்புகள் நேர்ந்ததில்லை. தற்செயல்  சந்திப்புக்களில் சொல்லும் கருத்தோ, பகிர்ந்துகொள்ளும் அனுபவமோ ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும். தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்களும் மேற்கொண்டதில்லை. ஒன்றோ இரண்டோ மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் குறுகிய உரையாடல்களிலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும். இதை நஞ்சுண்டனுடனான என்னுடைய நட்பின் தனி அனுபவம் என்று எண்ணியிருந்தேன். தன்னுடன் தொடர்பு கொண்டிருந்த எல்லாருடனும் இப்படித்தான் பழகியிருக்கிறார் என்பதை அவரது மறைவை ஒட்டிப் பலரும் எழுதியிருக்கும் முகநூல் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. நஞ்சுண்டனின் இலக்கிய ஆளுமையின் இயல்பாக இந்த இணக்கத்தைக் காண விரும்புகிறேன். இந்த இயல்பின் காரணமாகவே பல இளம் எழுத்தாளர்களுக்கு தூண்டுதல் அளிப்பவராக இருந்தார்; தமிழில் மட்டுமல்ல கன்னடத்தில் எழுதும் புதிய தலைமுறையினர் சிலரும் அவரது ஈர்ப்பு வட்டத்தில் இருந்தார்கள்.



தொண்ணூறுகளில் வெளிவந்த ‘சிமெண்ட் பெஞ்சுகள்’ என்ற கவிதைத் தொகுப்பின் வாயிலாக நஞ்சுண்டன் அறிமுகமானார். அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த வார இதழில் மதிப்புரைக்காகப் புத்தகத்தை அனுப்பியிருந்தார். அதிலிருந்த ஒரு கவிதையை இதழில் வெளியிட்டிருந்தேன். அதற்கு நன்றி சொல்லத் தொலை பேசியில் அழைத்ததுதான் நட்பின் தொடக்கம். தமிழ்க் கவிதை நூலுக்கு அந்தத் தலைப்பு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்ற கருத்தையும் தொடர்ந்து  கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆலோசனையையும் அந்த உரையாடலில் தெரிவித்தேன். ‘எழுதி விட்டால் போயிற்று; நீங்களே சொல்லும்போது ஒரு கை பார்த்து விடுகிறேன்’ என்று  உற்சாகமாகச் சிரித்தார். ஆனால் அவரால் கவிதைக்குள் தொடர்ந்து செயல்பட இயலவில்லை. சொந்தமாகக் கவிதைகள் எழுதுவதைத் தொடரவில்லையே தவிர கவிதை மொழியாக்கங்களிலும் கவிதையின் நுட்பங்களை விரிவாகப் பேசும் கட்டுரைகள் எழுதுவதிலும் ஈடுபாட்டார். நவீன கவிதையியலுக்கு அவருடைய பங்களிப்பு அது.


ஆழமான வாசகனும் நுட்பமான ஆய்வாளனும் இணைந்த கலவை நஞ்சுண்டன். வாசகனாக ஒரு படைப்பின் உயிரை அவர் உணர்ந்திருந்தார். ஆய்வாளனாக அதன் உருவக் கூறுகளை அறிந்திருந்தார். இரண்டும் ஒன்றாகிச் செயல்படும் இயக்கப் புள்ளியையும் கணித்திருந்தார். இதுவே அவரை மொழிபெயர்ப்பாளராகவும் செம்மையாக்குநராகவும் மாற்றியது என்று எண்ணுகிறேன். ஒரு படைப்பின் உயிர், துடிப்புடனும்  உருவம் ஆரோக்கியத்துடனும்  இருப்பதே சிறப்பு என்ற சிந்தனையில் தான் அவரது மொழியாக்கங்களும் செம்மையாக்கங்களும் அமைந்தன. ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு அந்த மொழியின் ஆதார இயல்புகளுடன் இருப்பது அவசியம் என்பது அவரது மொழியாக்கம், செம்மையாக்கம் ஆகிய இரு செயல் பாடுகளுக்கும் மையம். அவர் மொழியாக்கம் மேற்கொண்டது பெரும்பாலும் கன்னட மொழிப் படைப்புகளில்தான். யூ ஆர். அனந்தமூர்த்தியின் ‘பவ’ நாவலை  ‘பிறப்பு’ என்றும் ‘அவஸ்தை’  நாவலை அதே பெயரிலும் தமிழாக்கம் செய்தார். கன்னடப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய ‘அக்கா’ என்ற தொகுப்பையும் கன்னட நவீன தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட’ மரணம் மற்றும்’ தொகுப்பையும் கொண்டு வந்தார். இந்த மொழியாக்கங்களை வாசிக்கும் எளிய வாசகருக்கும் அவரது கன்னடமொழித் தேர்ச்சியும் தமிழ்ப்புலமையும் புலனாகும். அவை வெறும் மொழி பெயர்ப்பாக இல்லாமல் பண்பாட்டுப் பெயர்ப்பாக  இருப்பதும் தென்படும்.. மொழிபெயர்ப் பாளர்களுக்குச் சவாலாக அமையும் இந்தச் சிக்கலை நஞ்சுண்டனின் தமிழாக்கங்கள் எளிதாக வெற்றி கொள்கின்றன.


நஞ்சுண்டனின் முதன்மையான கவனமும் கனவும் ஒரு படைப்பின் செம்மையாக்கம் என்று சொல்லலாம். ஒரு படைப்பில் மொழி பிழையின்றிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில்  எச்சரிக்கை கொண்டிருந்தார். ‘பதினைந்து குதிரைகள் ஓடியது’ என்ற வாசகத்தை அவரால் ஏற்கவே முடியாது. ‘அவன் டில்லியில் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்’ என்ற சித்தரிப்பை சகித்துக்கொள்ள இயலாது. ‘பெருமாள் கோவிலிலிருந்து குருக்கள் வெளியே வந்தார்’ என்ற குறிப்பு அவருக்கு மண்டையிடியைக் கொடுத்து விடும். ‘பதினைந்து குதிரைகள் ஓடின என்பது தானே பிழையற்ற வழக்கு’; டில்லியில் கடல் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஒருவன் ஏன் கதை எழுதுகிறான்? பட்டருக்கும் குருக்களுக்கும் வித்தியாசம் இல்லையா? என்று அவரது செம்மையாக்க மனம் திருத்தம் செய்து கொண்டிருக்கும். இதுபோன்ற செம்மையாக்கக் குணம் ஒரு கட்டத்தில் அவரிடம் ஆவேசமாகவே மாறியது. எழுத்தாளர்களிடையில் அவர் மதிக்கப்படவும் விமர்சிக்கப்படவும் இதுவே காரணமும் ஆனது. அவர் தொடர்ந்து கவிதைகள் எழுதாமற் போனதற்கும் இந்தச் செம்மை மனநிலையே காரணம் என்று கருதுகிறேன். அவரது இந்த மனநிலை முற்றிலும் தன்னலமில்லாதது என்று உறுதியாகச் சொல்லலாம். செம்மையாக்கம் தொடர்பாக மூன்றோ நான்கோ முகாம்களை நடத்தியிருக்கிறார். அவை அவரது சொந்தப் பணத்தில் நடத்தப் பட்டவை. அவற்றின் வாயிலாக தமிழைத் தமிழாக எழுத கணிசமான இளைஞர்கள் ஊக்கம் பெற்றார்கள். அவர் விரும்பியதும் அதைத்தான். அந்த அளவில் நவீனத் தமிழ் இலக்கிய உலகம் அவருக்குக் கடமைப்பட்டதுதான்.


தமிழில் எழுத்து, பதிப்பு, இதழியல், ஆகிய துறைகளில் இன்று ஒரு செம்மையாக்குநரின் – எடிட்டரின் - தேவை இன்றியமையாதது. மிக முக்கியமான படைப்புகள் கூட இன்னும் செம்மையாக்கப் பட்டிருக்கலாமோ என்ற ஏக்கத்தை வாசிப்பவரிடம் ஏற்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில் நஞ்சுண்டனின் பணி முக்கியமானது; அவரது இடையீடு அவசியமானது. படைப்புக்கும் வாசகருக்கும் இடையிலான உறவில், அந்த உறவை வலுப்படுத்தும் மூன்றாவது பார்வை எடிட்டருடையது. அது படைப்பை மேலும் காத்திரமானதாக்குகிறது. பெருமாள் முருகனின் முதல் நாவலான ‘ஏறு வெயி’லுக்குச் செய்யப்பட்ட செம்மையாக்கத்தை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நான்கு பதிப்புகள் வெளிவந்த பின்பே நாவலை நஞ்சுண்டன் செம்மைப்படுத்தினார். நாவலின் காலக்குழப்பத்தைச் சரிசெய்து ஒரே காலநடையில் கொண்டுசெல்ல உதவினார். உரையாடல் தவிர்த்த பகுதிகளைப் பொது வாசகருக்கும் புரியும் மொழிக்குத் திருத்தினார் .தகவல் பிழைகளை நீக்கினார். இவ்வாறு நஞ்சுண்டன் மேற்கொண்ட  செம்மையாக்கம்  நாவலுக்கு மேலும் மெருகூட்டியது.


இந்தத் தன்னலமற்ற பணியில் ஈடுபடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய பிடிவாதம் நஞ்சுண்டனுக்கு இருந்தது. சற்று அதிகமாகவே இருந்தது என்றும் சொல்ல வேண்டும். தமிழைத் தவிரப் பிற மொழிகளில் வெளியாகும் புனைவுகளும் கவிதைகளும் பிற ஆக்கங்களும் செம்மையாக்கப்பட்டே வெளியாகின்றன. ஆக்கியவர்களின் அணுக்கமான நண்பர்களோ தொழில்முறை எடிட்டர்களோ அதைச் செய்கின்றனர். அதை எழுதியவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழில் அந்த நிலைமை அநேகமாக இல்லை. ‘நான் எழுதியதை இன்னொருவர் திருத்துவதாவது?’ என்ற இலக்கியத் தன்முனைப்பு செம்மையாக்கத்துக்குத் தடையாகிறது. நஞ்சுண்டனின் செம்மைப் பிடிவாதம் அந்த மனநிலையைக் கணக்கில் கொள்ள வில்லை என்றே சொல்லலாம். ‘நான் செய்வது அவர்களின் நன்மைக்குத்தானே, அது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?’ என்று ஒருமுறை தொலைபேசி உரையாடலில் குறைப்பட்டுக் கொண்டார். ‘ நீங்கள் சொல்வது சரி. ஒரு படைப்பு மேலானதாகப் போற்றப்பட்டாலும் சரியில்லை என்று உதாசீனப்படுத்தப்பட்டாலும்  இரண்டும் அந்தப் படைப்பாளியைத்தானே சேரும். எடிட்டருக்கு அதில் எந்தப் பங்கும் கிடையாது. படைப்பாளியின் முழு இசைவு இல்லாமல் எடிட்டிங்க் சாத்தியமில்லை என்பதுதானே பொன் விதி’ என்று பதில் சொன்னேன். கூடவே சொன்னேன்: ‘ நான் ஒரு எடிட்டராக இருந்து இப்படிக் குறைப்பட்டுக் கொண்டால் நியாயம். நீங்கள் ஆதங்கப்படுவது சரியில்லை?’ பதற்றத்துடன் ‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்றார். ‘நஞ்சுண்டன் என்ற பேருக்குப் பொருத்தமாக இல்லை. எல்லாக் கசப்பையும் விழுங்கி விடும் கண்டமல்லவா உங்களிடம் இருப்பது’ என்றதும் அவர் சிரித்த சிரிப்பு அலாதியானது.


இலக்கியம் தவிர வேறு எதைப் பற்றியும் அவரிடம் பேசியதாக நினைவில்லை. அவரும் அப்படித்தான். ‘வீட்டிலே நல்லாருக்காங்களா?’ போன்ற சம்பிரதாயமான விசாரிப்புக்கு அப்பால் தனி வாழ்க்கை பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்ததில்லை. அவருடனான  கடைசி இரு தொலைபேசி உரையாடல்கள் மனதில் எதிரொலிக்கின்றன. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தொலைபேசியில் அழைத்தார் ‘இப்போதே துண்டைப் போட்டு வைக்கிறேன். அடுத்த இதழில் மூன்று பக்கங்களை எனக்காக ஒதுக்கி விடுங்கள். காந்தியைப் பற்றிக் கன்னடத்தில் வெளியாகியிருக்கும் சிறந்த கவிதைகளின் தொகுப்பு ஒன்றைக் கொடுக்கிறேன்’ என்றார். அவரது அண்மைக் கால வாக்குறுதிகள் உத்தரவாதமற்றவை என்று அனுபவத்தில் தெரிந்து கொண்டிருந்தேன். எனினும் காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே கன்னட காந்தி வரவில்லை. டிசம்பர் முதல் வாரத்தில் நானே அவரை அழைத்தேன். பலமுறை முயன்ற பின்பு அழைப்புக்குச் செவி சாய்த்தார். ‘ உயிர்மை இதழில் உங்கள் மொழியாக்கத்தில் வந்திருக்கும் போளுவார் மகம்மது குஞ்ஞியின் கன்னடக் கதை இத்தத்தை வாசித்தேன். நல்ல கதை. சேதாரமில்லாத மொழிபெயர்ப்பு. காந்தி கவிதைகளைத் தராமல் ஏமாற்றியதற்குப் பதிலாக இதை எனக்குக் கொடுத்திருக்கலாம் ‘ என்றேன். குழறாலான  பதில் வந்தது.


’ கவலையே படாதீங்க, இப்ப கொஞ்சம் பணிச்சுமை குறைந்திருக்கிறது. ஜனவரி முதல் ஒவ்வொரு இதழுக்கும் எழுதுகிறேன்’ என்று சிரித்தார். ‘ இதை நான் எந்தத் தண்ணீரில் எழுதி வைக்கவேண்டும், நஞ்சுண்டன், காவிரித் தண்ணீரிலா, கரமனையாற்றுத் தண்ணீரிலா? ‘ என்றேன். அப்போது அவரிடமிருந்து வெளிப்பட்ட சிரிப்பில் கேட்டது நீரின் கடைசித் தளும்பல் என்பது இப்போதுதான் புரிகிறது.


டிசம்பர் 23, 2019 இந்து தமிழ் திசை நாளிதழின் கருதுப் பேழை பகுதியில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். எழுதக் கேட்டுக் கொண்ட த. ராஜனுக்கும் வெளியிட்ட நாளிதழுக்கும் நன்றி.



புதன், 9 அக்டோபர், 2019

திருப்பி வந்த நாட்களும் ஒரு நேர்காணலும்




காலம் 1981 – 82. கவிஞர் பிரம்மராஜன் திருமணமாகி இடமாற்றம் பெற்று மனைவி மீனாவுடன் உதகமண்டலம் வந்து வசிக்கத் தொடங்கி இருன் தார். னார். நவீன இலக்கியத்தலமாக உதகை மாறிய காலம். அவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் வாயிலாக இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகம் ஆனார்கள். பிரம்மராஜனின் பள்ளி, கல்லூரி சகாக்களான ஆர்.சிவகுமார், அகிலன் எத்திராஜ், அவரது மாணவர்களான எம்.வி.சத்யன், அ. தமிழ்ஒளி, த.பார்த்திபன் ஆகியோர் பட்டியலில் இருந்தவர்கள். அந்த அறிமுகத்துக்குப் பிறகு சிலர் நண்பர்களும் சிலர் நெருங்கிய நண்பர்களும் ஆனார்கள். சுற்றுலாப் பயணிகளாகவோ பிரம்மராஜனைச் சந்திக்க வந்த இலக்கிய வாதிகளாகவோ மலையேறிய சிலரும் பழக்கமானார்கள். வண்ணதாசன், சாரு நிவேதிதா, பழமலய், ஆகியோரை முதலில் சந்தித்தது அப்போது தான். முன்னரே அறிமுகமாகியிருந்த ஆத்மாநாம் அவ்வப்போது வந்து சென்றதில் நெருக்கமானார். 

இவர்கள் தவிர அந்த மலைநகரத்தில் இலக்கியம் பேசி அலைந்து கொண்டிருந்த சிலருடன் நட்புக்கொள்ளவும் வாய்த்தது. இந்துஸ்தான் போட்டோபிலிம் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த கார்த்திகா ராஜ்குமார், தொலைபேசித்துறையில் பணியாற்றிய சுப்ரபாரதி மணியன், உதகை மார்க்கட்டில் மளிகைக்கடை வைத்திருந்த பு.வ. மணிக் கண்ணன், தேயிலை விற்பனை முகவாண்மை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த நிர்மால்யா மணி, மருந்தாளுநர் பட்டயத்துக்காகப் படித்துக் கொண்டிருந்த நந்தலாலா என்ற இளங்கோ அவரது மாமா ப்ரியதர்சன், தனியார் நிதிநிறுவனத்தில் வேலைபார்த்த ப்ரதிபா ஜெயச்சந்திரன் என்று இளமைக் கனவுகளும் துள்ளலும் துடிப்பும் நிறைந்த ஓர் இலக்கிய வட்டம் இயல்பாகவே உருவானது. ஓரிரு ஆண்டுகளில் மலையேறி வந்த ஜோசப் தயாளனும் விமலாதித்த மாமல்லனும் கொஞ்ச காலம் நீலகிரிவாசிகளாக இருந்தார்கள். எல்லாரும் இலக்கிய வேட்கையில் ஆளுக்கொரு காரியத்தைச் செய்து கொண்டிருந்தார்கள். காலம் முன்நகர ஆட்களும் நகர்ந்து மலையிறங்கி வேறு திசைகளுக்குப் போனார்கள். 

சிலருடன் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்தது. சிவகுமாரும், பார்த்திபனும், நிர்மால்யாவும் அன்றுமுதல் இன்றுவரை தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். சுப்ரபாரதிமணியன், சாரு நிவேதிதா ஆகியவர்களை அவ்வப்போது சந்திக்கிறேன். பல வருடஇடைவெளிக்குப் பிறகு அகிலன் மீண்டும் கையெட்டும் நெருக்கத்துக்கு வந்தார். ஆத்மாநாமும் மணிக் கண்ணனும் அந்த எழுச்சியான நாட்களிலேயே கைவிட்டுப் போனார்கள். மற்றவர்கள், இன்று பார்த்தால் நினைவுகூர்ந்து புதிதாக அறிமுகப் படுத்திக்கொள்ள  வேண்டிய தொலைவில் இருக்கிறார்கள்.

அந்தப் பழைய உற்சவ காலத்தைச் சில நாட்களுக்கு முன்பு நினைவுகூரத் தொடங்கி இன்றும் திரும்ப மனதுள் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியவர் ப்ரதிபா ஜெயச்சந்திரன். உதகையில் அறிமுகமான இலக்கிய நண்பர்களில் ஒருவர். மேற்சொன்னவர்களில் ஊரைவிட்டு முதலில் கிளம்பியவர் அவர்தான் என்று ஞாபகம்.தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தவருக்கு நாட்டுடைமை வங்கியில் கிடைத்த பணி மலையை விட்டு இறங்கச் செய்தது. அபூர்வமாக சிற்றிதழ்களில் அவருடைய சில கவிதை களையும் கதைகளையும் பார்க்கவும் வாசிக்கவும் முடிந்தது. எனினும் அவரைத் தொடர்பு கொள்ள எண்ணியதில்லை. அவரும் ஒதுங்கிய நபராகவே இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நிர்மால்யா தொலைபேசியில் அழைத்து ப்ரதிபா ஜெயச்சந்திரன் பேச விரும்புவதாகச் சொன்னார். அறுந்தே போனது என்று நினைத்திருந்த இழை மீண்டும் வசப்பட்டது. பேசினார். பேசினேன். பேசினோம்.ஏறத்தாழ நாற்பது, சரியாகச் சொன்னால் முப்பத்தெட்டு, ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்த உரையாடல்கள்.


இவற்றையெல்லாம் இங்கே பதிவுசெய்யக் காரணம் பின்வருமாறு: பாரதி புத்தகாலயம் வெளியிடும் புதிய புத்தகம் பேசுது மாத இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார் ப்ரதிபா. அவருடைய விருப்பமும் நிர்மால்யாவின் பரிந்துரையும் ஒரு நேர்காணலுக்கு வழியமைத்தன.  புத்தகம் பேசுது அக்டோபர் 2019 இதழில் நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அது வெளி வந்திருப்பதன் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது பழைய நண்பர் ஒருவர் திருப்பக் கிடைத்ததில் உருவாகும் இன்றைய  குதூகலம். சென்றுபோன தினங்களை மீண்டும் நினைவுகூரக் கிடைக்கும் தருணம் எப்போதும் வாய்ப்பதல்லவே. ப்ரதிபா ஜெயச்சந்திரன், நிர்மால்யா இருவருக்கும் நன்றி புதிய புத்தகம் பேசுது இதழுக்கு மிக்க நன்றி.






சனி, 31 ஆகஸ்ட், 2019

இரு நூல்கள் இரு முன்னுரைகள்


   ஈடுபடுபவனுக்கு ஒருபோதும் முழு நிறைவு அளிக்காத வேலைகளில் பதிப்புப் பணியும் ஒன்று.எத்தனை விழிப்பாகச்செய்துமுடித்தாலும் முடித்தபின்பு விடுபட்டவை கவனத்துக்கு வந்து தூக்கத்தைக்கெடுக்கும்.ஆனால் இதைப் பயனாளிகள் அறியமாட்டார்கள்.  அதையும் மீறிச் சில நூல்களின் பதிப்பாக்கம், பணிமகிழ்வைத் தரும். அண்மையில் என் கைவழியாகப் போனவற்றில் அப்படி மகிழ்ச்சியளித்த இரண்டு நூல்கள் இருக்கின்றன. ஒன்று: உமா வரதராஜனின் திரைப்பட ஆய்வுநூல் - மோகத்திரை. மறைந்த மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா பற்றிய சிறுதொகுப்பான கவிமொழி மனமொழி மறுமொழி மற்றொன்று. இரண்டுக்கும் கொஞ்சம் நீளமான முன்னுரைகளை எழுதினேன். மோகத்திரை முன்னுரை நூலில் இடம்பெற்றுள்ளது. ஆற்றூர் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையைச் சேர்க்கவில்லை. நூலுக்கான முன்னுரை என்பதைத் தாண்டி ரொம்பவே சுயபுராணமாகி விட்டதால் அதைத் தவிர்த்தேன். ஆற்றூர் தொகுப்பு மதுரைப் புத்தகக்காட்சியை ஒட்டி வெளியாகிறது. உமா வரதராஜனின் நூலுக்கு இலங்கையில் அறிமுகவிழா நடைபெற்றிருக்கிறது. இப்போது முன்னுரைகளைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமென்று தோன்றுகிறது.    

     


                           ரசிகனின்  திரைநோட்டம்



மா வரதராஜனின் மோகத் திரை வாசிப்பின் உடன்நிகழ்வாக இரு எண்ணங்கள் எழுந்தன. சினிமா பற்றிய எழுத்துக்குக் கற்பிக்கப்பட்டிருந்த இலக்கிய விலக்கும் இன்று அந்தத் தீண்டாமைக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றமும். இவை நூலுடன் நேரடித் தொடர்பில்லாதவை.எனினும் வாசிப்பில் இடையீடாகத் தோன்றியவை. மறைமுகத் தொடர்புள்ளவை. காலத்துடனும் எழுத்தாளருடனும் தொடர்பு கொண்டவை. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘மோகத் திரை’ போன்ற நூல் எழுதப்படுவது அரிது; அதுவும் உமா வரதராஜன் போன்ற இலக்கியவாதி ஒருவர் எழுதியிருக்க முடியாது என்பவையே அந்த எண்ணங்கள்.


எண்பதுகளின் இடைக்காலத்துக்கு முன்னர் தமிழ் ஜனரஞ்சக சினிமாவைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் தீவிர இலக்கியவாதியின் தகுதிக்குக் குறைவான செயல்களாகக்  கருதப்பட்டன.  கலைச் சினிமா தொடர்பாக எழுதுவது மட்டுமே கௌரவமான நடவடிக் கையாகப் போற்றப்பட்டது. இப்போது யோசிக்கும்போது இதில் ஓர் இனிய முரண் ஒளிந்திருப்பது புலப்படுகிறது.


தீவிர இலக்கியச் செயல்பாடுகளும் கருத்துகளும் கொண்ட எழுத்தாளர்கள் பலரும் திரையுலகுடன் குறிப்பாக, வெகுஜன சினிமா உலகுடன் உறவாடியவர்களே. மகாகவி பாரதியின் சமகாலத்தவரும் மறுமலர்ச்சித் தமிழ் உரைநடையின் முன்னோடியுமான வ.ரா.வை இந்த உறவுத் தொடரின் முதற்கண்ணியாகச் சொல்லலாம். ‘ராமானுஜர்’ (1938 ) படத்துக்குக் கதை உரையாடலை எழுதியவர் வ.ரா. பாடல்களை இயற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன். நடித்தவர்களில் ஒருவர் புதுக்கவிதை முன்னவர் ந. பிச்சமூர்த்தி. (‘படத்தின் கதை உரையாடல்கள் நன்றாக இருந்தன. நடிகர்களின் நடிப்பு படுமோசம்’ என்பது ஜனரஞ்சக எழுத்தாளரான கல்கி எழுதிய விமர்சனம்).வ.ரா. தொடங்கி வைத்த வரிசையைப் பின்னர் பல இலக்கிய எழுத்தாளர்கள் தொடர்ந்தார்கள். பி.எஸ். ராமையா ( பூலோகரம்பை 1940), புதுமைப்பித்தன் ( காமவல்லி 1948 ). தி.ஜானகிராமன் ( நாலுவேலி நிலம் 1959 ) ஆகியோரைச் சட்டென்று நினைவுக்குவரும் உதாரணங்களாகச் சொல்லலாம். இலக்கியவாதிகளாக அவர்களுக்குக் கிடைத்த புகழும் எழுத்தில் கொண்டிருந்த வலுவும் சினிமாவையும் ஒரு கை பார்க்கத் தூண்டியிருக்கலாம். அவர்களது முயற்சிகள் பெரும்பான்மையும் தோல்விகளாகவே முடிந்தன என்பது வரலாறு.


இந்த முன்னோடிகள் எவரும் தமது திரையுலக அனுபவங்களையோ திரைப்படக் கலை பற்றிய பார்வைகளையோ  நேரடியாக முன்வைத்தது இல்லை. எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்ட இலக்கிய எழுத்தாளர்களான மேற்சொன்ன மூவருடன் ஒப்பிட்டால் ‘அவ்வளவு இலக்கியத் தீவிரர் அல்ல’ என்று நான் கருதும் எழுத்தாளரான விந்தன் ஒரு விதிவிலக்கு. எம்.ஜி. ஆரும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான ‘கூண்டுக் கிளி’ ( 1954 ) க்குக் கதை, வசனம் எழுதியவர் அவர். ‘எம்கேடி பாகவதர் கதை’ என்ற தலைப்பில் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலில் திரையுலகம் பற்றிய தனது கண்ணோட்டத்தை ஓரளவுக்கு விந்தன் முன்வைக்கிறார். ஆனால் அதுவும் தியாகராஜ பாகவதரின்  வீழ்ச்சிக்குத் திரையுலகக் கீழறுப்புகள் எப்படித் துணைபோயின என்பதை அந்த உலகில் தனக்கு நேர்ந்த அனுபவக்  கணிப்புகளின் வழியாக மறைமுகமாகவே சொல்கிறார். இவை தவிர நான் வாசித்தும் கேட்டும் அறிந்தவரையில் மூத்த இலக்கிய வாதிகளின் திரையுலகப் பதிவுகள் பெருமளவு இல்லை. திரையுலகுடன் உறவாடிய போதும் சினிமாவை இலக்கியத்தை விடவும் மாற்றுக் குறைவான ஊடகமாகவே தீவிர இலக்கியவாதிகள் கருதினார்களோ என்ற ஐயத்தை இந்தப் பொருட்டின்மை எழுப்புகிறது. வெகுஜன சினிமாவை இணக்கமாகக் காணத் தயங்கிய  மேட்டிமைப் பார்வை இலக்கிய வாதிகளிடன் நிலவியது என்ற விமர்சனத்துக்கும் வழிகோலுகிறது. இந்த விமர்சனத்தைச் செயலால் கடந்தவர்களாக ஜெயகாந்தனையும் அசோக மித்திரனையும் காணலாம். ஒருவர் வெகுஜன சினிமாவுக்கு மாற்றான  படத்தை (உன்னைப்போல் ஒருவன் – 1965 )  எழுதி இயக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். மற்றவர் வெகுஜன சினிமா உற்பத்தி சாலையில் பணியாற்றியவர். இவர்கள்தாம் வெகுஜன சினிமா பற்றிய பார்வையையும் அந்த உலகம்சார்ந்த அனுபவங்களையும் விரிவாகப் பதிவுசெய்தவர்கள், வெகுஜன சினிமாவை இணக்கத்துடன் அணுகியவர்கள் என்று தோன்றுகிறது.இந்த அணுகு முறையே வெகுஜன சினிமாவுடனான இலக்கியத் தீண்டாமையை அகற்றியது.


வேறு எந்த மக்கள்திரளையும்விட, சினிமாவை  முழுமையாக வரித்துக் கொண்டிருக்கும் கூட்டமாகத் தமிழ்ச் சமுதாயத்தைச் சொல்லலாம். திரைப்படம் என்ற தொழில்நுட்பம் அதன் வளர்ச்சிப் போக்கில் கலையாகவும் மாற்றம் பெற்றது.கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நவீன கலையாக நிலைத்திருக்கிறது. எல்லாக் கலைகளும் நியாயமான அளவில் கேளிக்கையாகவும் பொழுதுபோக்குச் சாதனமாகவும் அமைந்தவைதாம். ஆனால் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் சினிமா கேளிக்கையாகவும் பொழுதுபோக்குச் சாதனமாகவும் மட்டுமல்ல, ஏறத்தாழ மக்களின் பிரதி வாழ்க்கையாகவே பெருமளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது;  நிலைபெற்றிருக்கிறது. பெருவாரியான மக்களின் சமூக இடையீட்டுக்கும் அந்தரங்க உணர்வுகளுக்கும் சினிமாவே ஆதாரமாக இருக்கிறது. நடித்து வெளியான நாலு படங்களில் பிரபலாமாகும் நடிகர் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் விற்பன்னராகிறார். திரைப்பட உரையாடல்களும் பாடல்களும் அந்தரங்கப் பரிமாற்றத்துக்குரிய  மொழியாக மாறுகின்றன. சமூகப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் திரைப்படக் காட்சிகளின் வடிவில் கடைப்பிடிக்கப்படுகின்றன. திரைப்பிரபலங்களின் உடல் மொழியே தமது சரீர பாஷையாகக் கணிசமானவர்களால் பின்பற்றப்படுகின்றன. இவற்றையெல்லாம் விடவும் சினிமா செல்வாக்கே தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தி ஆனது.தமிழ்ச் சமுதாயத்தின் பொதுக் கலையாக திரைப்படம் மாறியது.


எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் வெகுஜன சினிமாவிலும் மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டன. இலக்கிய வட்டங்களிலும் சிற்றிதழ்ச் சூழலிலும் மேற்கொள்ளப்பட்ட கலைச் சினிமா விவாதங்களும் வெகுஜன சினிமா பற்றிய கறாரான விமர்சனங்களும் மாற்றத்துக்கான காரணங்களின் பகுதியாக இருந்தன. அதுவரை தீவிர இலக்கிய சூழலில் பேசப்படாமலிருந்த வெகுஜன சினிமா தவிர்க்க இயலாத பேசுபொருள் ஆனது. வெகுஜன சினிமாவைப் புதிய கோணத்தில் பார்க்கும் அணுகுமுறை உருவானது. உலக அளவில் சினிமாவை வெகுஜனப் பண்பாட்டின் கூறாக ஏற்றுக் கொண்டு நடந்த கருத்தாடல்கள், கலாச்சார ஆய்வுகள் இங்கும் புழக்கத்துக்கு வந்தன. ‘இனி’ என்ற இடைநிலை இதழில் ( அக்டோபர் 1986 ) வெளிவந்த சக்ரவர்த்தியின் ‘பாரதிராஜாவின் சினிமா’ என்ற கட்டுரையை இதன் முதல் உதாரணமாகச் சொல்லலாம். பாரதிராஜாவின் திரைப்படங்களை ‘படைப்பாளி கோட்பாடு’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அலசிய முயற்சி அந்தக் கட்டுரை. அடுத்த இதழிலிலேயே படைப்பாளி கோட்பாட்டின் அடிப்படையில் பாரதிராஜா படங்களை அணுகுவதன் பொருத்தமின்மையைச் சுட்டிக் காட்டி பாப்பாண்ணன் மகன் எழுதிய எதிர்வினைக் கட்டுரையும் வெளியானது. அதே பத்திரிகையின் ஜனவரி 87 இதழில் புராணங்களைப் பகுப்பாய்வு செய்யும் விமர்சன முறையைக் கடன்பெற்ற பார்வையில் பாக்யராஜ் படங்கள் குறித்து முத்துக்குமாரசாமி  எழுதிய  (பாக்யராஜ்: புராணங்களின் மறுபிறப்பு ) கட்டுரையும் வெளியானது தமிழ் வெகுஜன சினிமாவைக் கோட்பாடு சார்ந்து விவாதிக்கும் முறைக்கு இந்தக் கட்டுரைகள் தாம் தொடக்கம் என்று எண்ணுகிறேன். இன்றும் இந்தப் போக்குத் தொடர்கிறது. காலத்துக்கு ஏற்பக் கோட்பாட்டுக் கருவிகளின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. கோட்பாட்டு அளவுகோல்களால் மதிப்பிடப்படும்போது சினிமா பார்வையாளனுக்கு அளிக்கும் அனுபவம் பின்தள்ளப்படுகிறது. கோட்பாட்டின் சட்டகங்களுக்குள் சினிமாவை முடக்கி, அந்த முடங்கிய ரூபமே சினிமா என்று சிலாகிக்கப்படுகிறது. வெகுஜன சினிமாவில் கையாளப்படும் சூத்திரங்கள் போலவே இதுவும் மேம்போக்கானது. 


இந்த சூத்திரப் பிரயோகத்தை உமாவரதராஜனின் பார்வை மறுதலிக்கிறது என்பது  புத்தகத்தின் முதன்மையான சிறப்பு. சினிமாவை அதற்குள்ளிருந்து பார்த்தே அதன் நிறையையும் குறையையும் முன்வைக்கிறார். வெளியிலிருந்து கருத்துகளைப் புகுத்தி அதை வியாக்கியானம் செய்வதில்லை. அப்படியான அணுகுமுறையை உமா வரதராஜன் கேலியாகவே எண்ணுகிறார். ஞான ராஜசேகரனின் ‘முகம்’ படம் பற்றிய குறிப்பு இதற்கு எடுத்துக்காட்டு. ‘முகமூடி அணிந்தவுடன் நாசரின் முகம் அழகாக மாறுகிறது. முகமூடி ஒன்றினால் முகமாற்றம் அவ்வளவு எளிதா எனக் கேட்டால் முகமூடி ஒரு குறியீடு என நமது திரைப்பட ‘அறிஞர்கள்’ கூறக் கூடும்’ என்ற வரி கேலியின் வெளிப்பாடுதான். வெளியிலிருந்து கருத்துக்களை ஒட்டவைத்து ஒரு சினிமாவை மதிப்பிடுவதே விமர்சனப் பார்வை என்றால் அந்த ஆயத்தப் பார்வையை முற்றிலும் புறக்கணிக்கிறது உமா வரதராஜனின் திரை நோட்டம். அதேசமயம், ரசனை என்ற நோக்கில் சினிமாவை அசட்டு உருக்கத்துடன் – மெலோ டிராமாவாக-அணுகும் பார்வையையும் தவிர்க்கிறார். சினிமாவின் கதையைச் சுருக்கிச்சொல்லி சில காட்சிகளை வியந்து பாராட்டி, ஒளிப்பதிவையும் இசையையும் சிலாகித்து எழுதப்படும் ‘விமர்சனங்க’ளையும் ஏற்பதில்லை. அவை திரைப்படப் பார்வையாளனின் தரப்பல்ல என்று அவர் கருதுவதை நூலிலுள்ள கட்டுரைகளில் எளிதாகக் கண்டுகொள்ள முடியும். அவை விசிறிகளின் வாய் பிளப்பே தவிர, பார்வையாளனின் ( ரசிகன் என்று சொல்லலாமா? ) அனுபவமல்ல என்பதைக் கட்டுரைகள் வரையறுக்கின்றன. உமா வரதராஜனின் திரை நோட்டம் அழகியல் தர்க்கம் சார்ந்தது. ஆனால் அது கோட்பாடுகளின் பின்துணையால் ஆனதல்ல. ரசனையை அடிப்படையாகக் கொண்டது.. ஆனால் அந்த ரசனை  வெகுஜன அசட்டு உணர்ச்சியிலிருந்து உருவானதல்ல. திரைப்பட அறிஞர்களின் வலிந்து பொருள் கொள்ளும் பார்வைக்கும் விசிறிகளின் பொருள் உணராமல் விழுங்கும் பார்வைக்கும் இடையிலான  கண்ணோட்டமே அவருடையது.


எல்லா இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் குடிமக்களையும் போலவே, பால்ய காலம் முதல் இன்றுவரை பார்த்துப் பார்த்துத் திரட்டிய திரைப்பட அனுபவங்களின் பின்புலத்திலேயே உமாவரதராஜன் தனது சினிமாக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவருக்கு சினிமா ‘ மனக்கடலின் உள் நதி நீரோட்டம்’. வாழ்க்கையின் இனிய தருணங்களிலும் துயர நிமிடங்களிலும் பிணைந்து நின்ற ஒன்று. சினிமா தந்த அனுபவங்களே அதைப் பற்றிய ரசனையையும் அதன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களே அதைப் பற்றிய நுட்பங்களையும் அதன் மூலம் வசப்படுத்திக் கொண்ட பட்டறிவே விமர்சனங்களையும் அவருக்கு வழங்கியிருக்கிறது. இந்த நூலிலுள்ள எந்தக் கட்டுரையிலும் தனது கருத்தை வலுப்படுத்திச் சொல்ல வெளியிலிருந்து எந்த மேற்கோளையும் அவர் எடுத்தாள்வதில்லை என்பதை வியப்புடன் அவதானித்தேன். சொந்த அனுபவங்களின் வலுவில்மட்டுமே தனது கண்ணோட்டத்தை வெளிப் படுத்துகிறார். உமாவரதராஜனுடைய  திரையெழுத்தின் தனித்துவம் இது.


முன்குறிப்பிட்ட இலக்கியத் தீண்டாமை இன்று இல்லை. மாறாக சினிமா பற்றி எழுதாத இலக்கியவாதி காலத்துடன் ஒட்டாதவனாகக் கருதப்படுகிறான். புதிய ஊடகங்கள் பெருகிவரும் நிலையில் சினிமா தமிழ் வாழ்க்கையை மேலும் ஆற்றலுடன் ஊடுருவுருகிறது. அதிலிருந்து இலக்கியவாதி மட்டும் தப்ப முடியுமா? தீவிர இலக்கியம் பேசும் பலரும் இன்று குறைந்த பட்சம் ஒரு கட்டுரை முதல் அதிக பட்சம் நாலு தனிப் புத்தகங்கள்வரையாவது சினிமாவைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அநேகமாக எவரும் விதிவிலக்கில்லை; இந்த முன்னுரையாளர் உட்பட. சினிமா இணக்கம் பரவலாகி யிருக்கும் சூழலில் உமாவரதராஜனின் மோகத் திரை வெளியாவது காலத்தின் இயல்பு.


தமிழ் வெகுஜன சினிமா, தமிழ்ப் பொதுச் சமுதாயத்துக்குள் அழுத்தமாக நிழல் வீழ்த்தத் தொடங்கிய  அறுபதுகள் முதல் இன்றுவரையிலான திரைப்படங்களில் சிலவற்றையும் அவற்றைச் சாத்தியமாக்கிய கலைஞர்கள், இயக்குநர்கள் சிலரையும் முன்னிருத்தி எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. அறுபது முதல் தொண்ணூறு வரையான காலகட்டத்தை லயிப்புடனும் பிந்தைய காலகட்டத்தை விமர்சனத்துடனும் உமாவரதராஜன் அணுகுகிறார். முந்தைய காலத் திரைப்படங்களை ஏறத்தாழ ஒரு திரைப்பட விசிறியின் மனோபாவத்திலேயே பார்த்திருக்கிறார். ‘ என்னுடைய பதினைந்து வயதுவரை நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகனாக இருந்தேன்’ என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறார். ஆனால் தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்து வரித்துக்கொண்ட  ‘அனுபவ ஞானம்’ அவரை விசிறி மனோபாவத்திலிருந்து விடுவித்து பார்வையாளனின் ( ரசிகனின் ? ) நிலைக்கு உயர்த்துகிறது. அந்த மனப்பாங்கே திரைப்படங்களையும் திரைக் கலைஞர்களையும் ‘பரவசம்’ கலவாமல் அணுகும் பார்வையைப் பெருமளவுக்கு அவருக்கு அளித்திருக்கிறது என்று தோன்றுகிறது. ‘மோகத் திரை’ நூலிலில் இடம் பெற்றிருக்கும் எல்லாக் கட்டுரைகளும் இந்தப் பார்வையின் விளைவுகளே. பரவச நிலையில் பார்த்தவற்றை மதிப்பிடும்போதும் உமாவரதராஜன் பக்குவமான பார்வையாளனின் கண்ணோட்டத்தையே முன்னிருத்துகிறார். தமிழில் இன்று எழுதப்படும் திரைப்படக் கட்டுரைகள், நூல்கள் சிவற்றில் வெளிப்படும் புளகாங்கிதமும் நினைவேக்கமும் நினைவுக்கு வந்து உமா வரதராஜனின் திரை நோட்டத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன. சமநிலை கொண்ட இந்தப் பார்வை ஒரு படத்தின் நிறையைப் பாராட்டும் அதே துல்லியத்துடன் குறையையும் எடுத்துச் சொல்ல உதவுகிறது. சிவாஜி கணேசனின் அற்புதமான நடிப்புக் கணங்களையும் கன்னத்துச் சதை பிதுங்கச் செய்துகாட்டும் சேஷ்டைகளையும் எடுத்துக் காட்டுகிறது. எவ்வளவு அருமையான பாடல்கள் என்று டி.எம்.சௌந்தர்ராஜனை மெய்மறக்கும் நிலையையும் அதே பாடகர் சாய்வு நாற்காலியில் கிடந்தபடி பாடிய பாட்டுகளையும் வகைப்படுத்துகிறது. ‘நீதிபோதனை, ஒழுக்கம் என்ற பெயர்களால் நூற்றாண்டுப் பழமையான கிளைகளில் குரங்குபோலத் தொங்க்கிக் கொண்டிருக்காமல் நடப்புலகத்தின் மீதான வெளிப்படையான மதிப்பீடுகளைத் துணிச்சலுடன் முன்வைத்தவர்’ என்று இயக்குநர் கே. பாலசந்தரை வியக்கும் அதே பத்தியில்தான் ‘காலப்போக்கில் தான் வித்தியாசமாகச் செய்வதாக எண்ணி உருவாக்கிய பலவும் பிள்ளையாருக்குப் பதிலாகக் குரங்குகள்’ என்ற எதிர்வினையும் காணக் கிடைக்கிறது. மோகத்திரைக் கட்டுரைகளின் வலிமை இந்தப் பார்வையே. ‘காலம் அதற்கேற்ற தாளகதியுடன் காட்சிகளை மாற்றிக் கொண்டிருக்கிறது’ என்ற உமாவரதராஜனின் வரியைப் பொருத்தம் கருதி இங்கே மேற்கோளாக யோசிக்கிறேன்.


உமாவரதராஜன், கோட்பாட்டுக் கருவிகளால் சினிமாவை அணுகுபவர் அல்லர் என்பது வெளிப்படை. எனினும் திரைப்படம் என்பது ஒரு படைப்பாளியின் ஆக்கம் என்ற படைப்பாளி கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருப்பவர் என்பதை அவரது திரை எழுத்து காட்டுகிறது. எடுக்கப்படும் திரைப்படத்தின் முதல் பார்வையாளன் அதன் இயக்குநர் என்பதுபோல பார்க்கப்படும் திரைப்படத்தின் மறைமுக இயக்குநர் அதன் பார்வையாளன் என்பதும் நினைவுக்கு வருகிறது. மோகத் திரையின் கணிசமான பக்கங்கள் திரைப்பட இயக்குநர்களைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டவை. அந்த இயக்குநர்களின் மறைவை யொட்டி அஞ்சலியாக எழுதப்பட்டவை.எனினும் அவை வெறும் புகழஞ்சலிகளாக இல்லை. இயக்குநர்களின் பங்களிப்பை மதிப்பிடும்வகையில் எழுதப்பட்டவை. அவர்களின் இழப்பு ஏற்படுத்தும் பச்சாத்தாபத்தை மீறி பார்வையாளனின் சமரசமற்ற நோக்கில் அமைந்தவை. ‘நாடகபாணியை விட்டுவிடாத ஆனால் முற்றிலும் அதில் அமிழ்ந்து போகாத இடைநிலைப் பாணியில் படங்களை எடுத்தவ’ராக ஸ்ரீதரைக் காண்கிறார் உமாவரதராஜன். அவரே அரைகுறைப் படங்களையும் எடுத்தார் என்றும் சுட்டிக் காட்டுகிறார். துருவ நட்சத்திரமாகப் பிரகாசித்த கே.பாலசந்தர் தனது பழைய படங்களையே மீண்டும் வெள்ளையடித்தவர் என்று மதிப்பிடுகிறார். ‘வீடு சந்தியா ராகம், தலைமுறைகள் ஆகிய படங்களைத் தவிர்த்து பாலு மகேந்திரா எடுத்தவை தழுவல்களும் வணிகக் குப்பைகளும்தாம் என்று சுட்டிக் காட்டுகிறார்.‘மகேந்திரன் இயக்கியவை எல்லாம் தமிழின் மகத்தான படங்க்கள் என்பது மிகை மதிப்பீடு. அதே வேளை தமிழ் சினிமாவுக்கு அவர் பெரிய அளவிலான தீ்ங்கெதையும் திட்டமிட்டுச் செய்ததில்லை’ என்று துணிச்சலாகச் சொல்கிறார். இந்தக் கருத்துகளை அந்தக் காலத் திரையுலகச் சூழலையும் விரிவான தகவல்களையும் ஆதாரமாக வைத்தே சொல்கிறார். இந்த வழிமுறை நூல் வாசிப்பில் மேலதிக கவனத்தை வலியுறுத்துகிறது.


தன்னுடைய சிறுகதைத் தொகுதியான ‘உமாவரதராஜன் கதைக’ளுக்கு எழுதிய முன்னுரையில் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘என்னுடைய பார்வையில் ஏளனமும் நையாண்டியும் கலந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் எனது நகைச்சுவை உணர்வை வக்கரிப்பு என்று வசை பாடிக் கொண்டிருப்பதும் உண்டு’ ( உமா வரதராஜன் கதைகள் 2011 பக் 12 ). இந்த இரு குணங்களையும் அவரது திரைப்படக் கட்டுரைகளிலும் பார்க்கலாம். அவை வெறுமனே பகடியாக நின்று விடுவதில்லை. யோசிக்கத் தூண்டும் கூர்விமர்சனங்களாகவே இடம் பெறுகின்றன. ‘என் வாழ்வின் திரை வானவில்’  என்று குறிப்பிடப்படும் நடிகை காஞ்சனாவைப் பற்றிய ‘என்ன பார்வை  கட்டுரையில் வரும் இந்த இடம் ஓர் உதாரணம். ‘மறக்க முடியுமா? ‘ படம் பற்றியது இது. ‘அவசர அவசரமாக அளவு குறைவாக எஸ்.எஸ்.ஆருக்குத் தைக்கப்பட்ட காற்சட்டை யொன்றை காஞ்சனாவுக்கு இதில் அணிவித்திருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆருடன் சேர்ந்து ‘எட்டி எட்டி ஓடும்போது என்றொரு பாடலை மாடிப்படிகளின் கைப்பிடியில் வழுக்கியபடி காஞ்சனா பாடுவதுபோல் பாவனை காட்டுவார். கைப்பிடியில் உராய்ந்தும் படிகளில் உருண்டு புரண்டும் அழுக்கை ஒருவழியாகச் சுத்தம் செய்தபோதும் இந்தப் பாடல் காட்சி அவருக்குக் கண்ணியம் சேர்த்ததாகச் சொல்லவில்லை’. இந்த அவதானிப்பு சிரிக்க மட்டுமா தூண்டுகிறது?

குறுக்கீடாக ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. 1966 இல் கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி முரசொலி மாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘மறக்க முடியுமா?’ கலைஞரின் திரைப் பங்களிப்புகளில் சிறப்பித்துச் சொல்ல வேண்டிய ஐந்து படங்களில் ஒன்றாக பிரபல சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் இந்தப் படத்தைக் குறிப்பிடுகிறார் ( பிலிம் கம்பானியன் இணைய தளம் 8 ஆகஸ்ட் 2018 ). படத்தின் தலைப்புப் பட்டியலிலும் திரைக்கதை, வசனம் கலைஞர் மு. கருணாநிதி என்றே காட்டப்படுகிறது. இந்திய சினிமாவின் மகத்தான இயக்குநர்களில் ஒருவரான ரித்விக் கட்டக்கின் ‘சுபர்ணரேகா’ வின் அலங்கோலத் தமிழாக்கமே அது என்பதை மறக்க முடியுமா? . இந்தத் தகவல் நினைவு மீளக் காரணமும் உமாவரதராஜனின் நூல்தான். பாலு மகேந்திரா, பால சந்தர் ஆகிய இயக்குநர்கள் வழிப்பறி செய்த மூலப்படங்கள் பற்றி எழுதப்பட்டவையே இந்தக் குறுக்கீட்டுக்குக் காரணம்.


விரிவான தகவல்கள், நுட்பமான அவதானிப்புகளைச் சார்ந்தே உமாவரதராஜன் தனது சினிமாக் கட்டுரைகளை எழுதுகிறார் என்பது இந்த நூலின் பலம். டி.எம். சௌந்தர்ராஜன் பாடல்கள், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் உருவான பாடல்கள் என்று நீளும் பட்டியல்கள் தகவல் விரிவுக்கு எடுத்துக்காட்டுகள். ஜெயலலிதாவை அவரது சம காலத்தவர்களான சரோஜாதேவி, கே ஆர் விஜயா அளவுக்குக் கூடக் கூறமுடியாது’ என்று குறிப்பிடுகிறார். சிறந்த நடிகைஅயாகவோ வெற்றிகரமான நடிகையாகவோ சொல்ல முடியவில்லை என்று அவதானிக்கும்  உமாவரதராஜனின்  முதுகுத்தண்டு எஃகு இரும்பால் வார்க்கப்பட்டதாக இருக்குமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. சாவித்திரி, தேவிகா போன்ற நடிகைகளுக்குப் பொருத்தமானது என்று பி.சுசீலாவின் கண்ணியமான குரலைப் பயன்படுத்திய சினிமா ஜெயலலிதாவுக்கு எல்.ஆர். ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த குரலைக் கொடுத்தது என்ற அவதானப்பும் புதிது. பொருள் பொதிந்ததும் கூட.


அறுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரையிலான மூன்று பதிற்றாண்டுகளில் தமிழ் வெகுஜன சினிமாவை விரிவாகவும் அண்மைக் காலம் வரையிலான திரைப்பட முயற்சிகளை ஆழமாகவும் பார்க்கிறார் உமாவரதராஜன். சினிமாவை வெறும் கேளிக்கை யாக அல்லாமல் வெகுஜனக் கலைவடிவமாகவே ஏற்கிறார். பரந்த தகவல்கள், நுண்மை யான அவதானிப்புகள், கலைத்தன்மை மிளிரும் தருணங்கள் மீதான உற்சாகமான கவனப்படுத்தல்கள் என்று அமைந்திருக்கும் நூல் மோகத் திரை.வெகுஜன மட்டத்திலேயே மாற்று சினிவாவுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் காலப் பகுதியில் உமாவரதராஜனின் திரை நோட்டம் தீவிர கவனத்துக்கும் ஆழ்ந்த விவாதத் துக்கும் பொருளாக வேண்டும்.அப்படி அமையுமானால் அதன் நேர்மறை விளைவுகள் தமிழ்ச் சினிமாவுக்குரியவை. இந்த ரசனையுணர்வைத் தவிர பக்குவமான திரைப்பட மோகி சினிமாவுக்கு வேறு எதைத் திருப்பித் தர இயலும்?

திருவனந்தபுரம்                                                        சுகுமாரன்
11 ஜூன் 2017







கவிமொழி  மனமொழி மறுமொழி
(தொகுப்பு)


லையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா கடந்த ஜூலை 26 அன்று மறைந்தார். இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் கண்ணனும் நானும் திருச்சூர் சென்றோம். அவரை வழியனுப்பி வைத்தபின் மாலை ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். பயணவேளை உரையாடலின்போது ‘ஆற்றூரைப் பற்றி ஒரு சிறுவெளியீட்டைக் கொண்டுவரலாமா?’ என்ற கண்ணனின் கேள்விக்கு உடனடியாக ஆமோதிப்பைத் தெரிவித்தேன். ஆனால் உள்ளுக்குள் சில கேள்விகள் எழுந்தன. மலையாளக் கவிஞர் ஒருவருக்குத் தமிழில் சிறப்பு வெளியீடு கொண்டு வருவது பொருத்தம்தானா? அவரது கவி ஆளுமையைத் தமிழ் வாசகர்கள் பொருட்படுத்தியிருக்கிறார்களா? தமிழிலிருந்து மலையாளத்துக்குக் குறிப்பிடும்படியான படைப்புகளை அவர் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அதுபற்றிய கடன் பாட்டுணர்வு நம்மிடம் இருக்கிறதா?இந்தக் கேள்விகளைக் கண்ணனிடம் சந்தேகங்களாகக் கேட்கவும் செய்தேன். ‘இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலாகத்தான் அந்த வெளியீடு’ என்பது அவருடைய பதில்.

அடுத்த சில நாட்களிலேயே நூலுக்கான பணிகள் தொடங்கின. காலச்சுவடு இதழில் முன்னர் வெளியான ஆற்றூரின் விரிவான நேர்காணல், எழுதிய சில குறிப்புகள், சுந்தர ராமசாமி மொழியாக்கம் செய்த ஆற்றூர் கவிதை, ஆற்றூருக்கு கேரள சாகித்ய அகாதெமி விருது வழங்கிய விழாவில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரை - இவை திரட்டப்பட்டன. ஆற்றூருக்கு அஞ்சலியாக சேரன் எழுதிய குறிப்பும் பா. அகிலன் எழுதிய கவிதையும் கிடைத்தன. மலையாளக் கவிஞர் அனிதா தம்பி ஆற்றூரின் மறைவுக்குச் சில மாதங்கள் முன்பு எழுதி வெளியான கவி்தை தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆற்றூரின் ஒன்பது கவிதைகளை உற்சாகமாக மொழிமாற்றிச் சேர்த்தேன். எல்லாம் சேர்ந்த தொகுப்பின் கரட்டுவடிவத்தைப் பார்வையிட்டபோது கண்ணன் சொன்னதுபோல என் பொருத்தமற்ற சந்தேகங்களுக்குக் கிடைத்த பொருத்தமான விடை என்பது புலப்பட்டது.


ஆற்றூர் ரவிவர்மா என்ற மலையாளக் கவி ஆளுமையின் வரைகோட்டுச் சித்திரத்தை இந்த நூல் முன்வைப்பதை உணர முடிந்தது.அந்த உணர்வில் ஆற்றூருக்கும் எனக்குமான பழக்கத்தையும் மானசீக நெருக்கத்தையும் யோசித்துப் பார்த்தேன். இதுவரை கவனத்தில் மேலெழந்து வராமலிருந்த நினைவுகளும் எண்ணங்களும் மனதுள்ளே திரண்டன.


மலையாள மொழியை ஊன்றிக் கற்கத்தொடங்கி, கவிதைகளை அறிமுகம் கொள்ள ஆரம்பித்த நாட்களில் என்னை ஈர்த்தவர்களில் ஆற்றூரும் ஒருவர். 1977 இல் கேரள கவிதா கிரந்தவரி – கேரள கவிதை நூல் வரிசை – என்ற பொதுப் பிரிவில் நவீன மலையாளக் கவிஞர்கள் 12 பேரின் கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டன. அவை அன்று மலையாளக் கவிதை வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றன. கவிதை என்ற ஒரே தலைப்பின்கீழ் வெவ்வேறு கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்புகள். கவிதை – எம்.கோவிந்தன், கவிதை – கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் என்று நீண்ட வரிசை அது. கல்லூரிப் பருவ தரித்திரத்தையும் மீறி பன்னிரண்டு தொகுப்புகளுக்கும் பணம் செலுத்தினேன். ஆனால் எனக்குக் கிடைத்தவை கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், குஞ்ஞுண்ணி, ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன், காவாலம் நாராயணப் பணிக்கர், ஜி. குமார பிள்ளை ஆகிய ஆறு கவிஞர்களின் நூல்கள் மட்டுமே. மற்றவையெல்லாம் சூடப்பம்போல விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் மறுபதிப்பு வந்தால் அனுப்பி வைக்கப்படும் என்றும் கேரள கவிதா பப்ளிகேஷன்ஸ் பொறுப்பாளரான எம். கங்காதரன் (மலையாளத்தின் முக்கியமான சிந்தனையாளர் ) கடிதம் போட்டிருந்தார். என் வாசக துரதிர்ஷ்டம் மறுபதிப்பு வரும்முன்பு அந்த வெளியீட்டு முயற்சியே கைவிடப் பட்டது.


மேற்சொன்ன ஆறு கவிஞர்களில் பலரது கவிதைகள் நான் விரும்பி வாங்கி வாசித்த மலையாளச் சிறு,பெரும் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவந்து கொண்டிருந்தன. சச்சிதானந்தன் கவிதைகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்தன. அவை என் வாசிப்பைத் தீவிரமாக்கின. என் கவிதையெழுத்தின் மீதும் செல்வாக்குச் செலுத்தின. அதிகம் வாசிக்கக் கிடைக்காதவையாக  இருந்தவை ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதைகள். கவிதை – ஆற்றூர் ரவிவர்மா என்ற கேரள கவிதா கிரந்தவரித் தொகுப்பே அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது. திரும்பத் திரும்ப வாசித்த அந்தக் கவிதைகள் நீர்க் கசிவுபோல என்னுடைய  உணர்வுக்குள் ஊறியிருந்ததை வெகுகாலங்களுக்குப் பின்னரே அறிந்தேன். அந்த அறிவைத் தந்ததும் ஆற்றூர்தான்.



தமிழ்க் கவிஞர்கள் ( ஈழக் கவிஞர்கள் உட்பட ) 59 பேரின் கவிதைகளை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் ஆற்றூர். என்னுடைய கவிதை ஒன்றைப் பற்றிய விளக்கம் கேட்பதற்காகத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அதற்கு ஓரிரு நாட்களுக்குள்ளேயே திருச்சூரில் அவரது வீட்டிலேயே சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த உரையாடலில் கவிதைக்குள் இடம்பெறும் மலையாளப் பண்பாடுசார்ந்த குறிப்புகளும் பெயர்களும் தமிழ் வாசகர்களுக்கு ஏற்புடையவையாக இருந்ததா என்று தனக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகச் சொன்னார். அடிக்குறிப்பு இல்லாமல் அவை புரிந்திருக்குமா என்று கேட்டார். ‘மாஷே, அது எனக்காக எழுதிக் கொண்ட கவிதை. அது வாசகருக்குப் புரியவில்லை எந்பதற்காக என்னால் வருத்தப்பட முடியாது’ என்று அகங்காரமாகவே பதில் சொன்னேன். அவருடைய பிரசித்தமான ‘ஹாஹ்ஹாஹ்ஹா’ என்ற ரீங்காரச் சிரிப்புக்குப் பின்னர் கறாரான குரலில் சொன்னார். ‘அது பாடில்லா. வசிப்பவனுக்கு ஒரு கவிதை புரியாமல் போக வேறு காரணங்கள் இருக்கலாம். கவிஞன் அதற்குக் காரணமான இருக்கக் கூடாது’. கையெழுத்துப்படிகளில் கவனமான இருந்தார். எனவே என் அவமானக் குறுகுறுப்பை அவர் கண்டிருக்க முடியாது என்று  அமைதியடைந்தேன். ‘ தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன். நான் மொழிபெயர்ப்பது மலையாளத்தில்தானே, மலையாள வாசகர்களுக்கு நன்றாகப் புரியும்’ என்று உற்சாகப் படுத்தினார். ஆனால் அவர் கவிதையின் தலைப்பை தமிழ்த் தலைப்பாகவே விட்டிருந்தார். ‘மாஷே, பாட்டி மணம் என்ற தலைப்பு தமிழுக்குச் சரி.மலையாளத்தில் மாற்றலாமே? பாட்டியுடே மணம் என்பதை அம்மும்மயுடே மணம் என்று மாற்றினால் மலையாளப் பொருத்தம் வருமில்லையா? என்று தயக்கத்துடன் கேட்டேன். ‘ மலையாள அடையாளங்கள் இருந்தாலும் இதில் இருப்பது மலையாளி உணர்வல்ல; தமிழ் சுபாவம். அது அப்படியே இருக்கட்டும். நிங்ஙள்க்குப் பாட்டி மதி. அம்மும்ம வேண்டா, எந்தா?’ என்றார். ஒப்புதலாகச் சிரித்தேன்.


அதற்கு முன்னரும் ரவிவர்மாவின் இதுபோன்ற கண்டுபிடிப்பை வியந்து ஒப்புதலாகச் சிரித்திருக்கிறேன். அதுவும் கவிதை பற்றிய உரையாடலை ஒட்டித்தான். அய்யப்ப பணிக்கர் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியில் கேரள கவிதை இதழின் வெளியீட்டையும்  கவிதை வாசிப்பு நிகழ்ச்சியையும் ஒழுங்குபடுத்தியிருந்தார். தமிழ்க் கவிஞன் என்ற தகுதியில் நானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆற்றூரும் வந்திருந்தார். நாள் முழுக்க நிகழ்ந்த கவிதை வாசிப்பு முடிந்த மாலை உரையாடலில் ஆற்றூர் நான் வாசித்த கவிதைகளைப்பற்றிச் சொன்னார்.சொன்னதில் பலவும் மறந்து போனாலும் ஓர் அவதானிப்பு நினைவில் ஆணிவேர் வலுவுடன் ஊன்றியிருக்கிறது. ‘ கவிதையை வார்த்தைகளின் கச்சிதமாக மாற்ற விரும்புகிறீர்கள் என்பது தெரிகிறது. அதுதான் நல்லது.கவிதைக்கும் மொழிக்கும்’. அதைக் கற்றுக் கொண்டது பலரிடமிருந்தும். அவர்களில் ஆற்றூரும் ஒருவர். இதைச் சொன்னதும் அவரிடமிருந்து சிரிப்பின் ரீங்காரம் எழுந்தது. அந்த ஆமோதிப்பை ஒப்புதல் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டேன்.


‘ஆற்றூர் ரவிவர்மாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் என்று ஒன்றைத் தொகுக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு கவிதையையும் தேர்ந்தெடுத்ததாகவே எழுதுகிறார்’ என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார்.கவிதையில் மட்டுமல்ல;அவரது எல்லா இலக்கியச் செயல் பாடுகளிலும் இந்தத் தேர்ந்தெடுப்பைப் பார்க்கிறேன். இசையில், வாசிப்பில், மொழி யாக்கத்தில், புதிய மலையாளக் கவிஞர்களில்- அவரது தேர்ந்தெடுப்பு கறாரானது. முன்னுதாரணமாக அமைவது. அதுவே ஆற்றூர் ரவிவர்மா சொல்லிவிட்டால்  சரியானது என்ற மதிப்பீட்டை உருவாக்கியது.அந்த மதிப்பீட்டைப் பெற நான் ஏங்கிய தருணம் ஒருபோதும் மங்காத நினைவாக இருக்கிறது.


என்னுடைய நாவல் ‘வெல்லிங்டன்’ 2014 இல் வெளிவந்தது. பலரும் வாசித்துக் கருத்துச் சொன்னார்கள். அவற்றில் பாராட்டிச் சொன்னவையும் மாறாகச் சொன்னவையும் இருந்தன. அவை எவையும் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை. இன்னும் மேலான அபிப்பிராயத்துக்காக மனம் காத்திருந்தது. ஆற்றூர் வாசித்துச் சொன்னால் என்னைக் குதூகலமாக்கிக் கொள்ளக்கூடும் என்று தோன்றியது. ஆனால் தயக்கமும் சங்கோஜமும் அவருக்குப் புத்தகத்தை அனுப்ப விடாமற் செய்தன. நண்பர், கவிஞர் பி. ரவிகுமார் ஆற்றூருடன் தொடர்பில் இருந்தவர். நாவலைப் பற்றி முதலில் நல்ல அபிப்பிராயம் சொன்னவரும் அவர்தான். நட்பு கருதி மிகையாகச் சொல்லுகிறார் என்று சந்தேகப்படும் அளவுக்குப் பாராட்டிச் சொன்னார். ‘இவ்வளவு சொல்லியும் சந்தேகப்படுகிறானே இவன்’ என்று நினைத்திருப்பார்போல. அவருக்குக் கொடுத்த பிரதியை ஆற்றூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஒருநாள் காலை ஆற்றூரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அந்த ரகசியத்தை விண்டு வைத்தது. ‘சுகுமாரன், ரவிகுமார் உங்கள் நாவலை அனுப்பி வைத்தார். வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். முடித்த பின்பு அழைக்கிறேன்’ என்றார். முதலில் பதற்றத்துடன் நாட்கள் நகர்ந்தன. பின்னர் நகர்வில் பதற்றம் காணாமற்போக வழக்கமான காரியங்களில் ஈடுபட்டேன். ஆற்றூரிடமிருந்து கடிதம் வரும்வரை நாவல் பற்றிய நினைப்பே எழவில்லை.

காலச்சுவடு முகவரிக்கு ஆற்றூர் கடிதம் எழுதியிருந்தார்.கடிதத்தின் தேதி 20 – 7 – 14. இன்லாண்ட் அஞ்சல்தாளில் கைப்பட எழுதிய ஏழு வரிக் கடிதம்.

பிரியப்பட்ட சுகுமாரன்,
தங்களின் நாவல் ‘வெல்லிங்டன்’ வாசித்தேன். ரவிகுமார் சொன்னவற்றுடன் எனக்கும் உடன்பாடு தோன்றியது.எழுத்தின் எல்லா நன்மைகளும் இருக்கின்றன; ஒரு நாவலுக்கு உரியவையும்.

பாராட்டுகள்.

இப்போது நான் ‘கொற்கை’ யைத் தொடங்கியிருக்கிறேன். டி குருஸின் நாவல்.

அன்புடன்
ஆற்றூர் ரவிவர்மா

கடிதத்தை வாசித்து முடித்ததும் உரக்கச் சொல்லிக் கொண்டேன். ‘இனி யார் என்ன சொன்னால் என்ன, ஆற்றூர் சொல்லி விட்டார். அதுபோதும்’. போதாதா என்ன?

                                                 ஆற்றூரின் கடிதம்

கேரள கவிதாகிரந்தவரித் தொகுப்பான கவிதை–ஆற்றூர் ரவிவர்மா நூலை வாசித்துவிட்டு 1982 இல் அவரைத் தேடிச் சென்று பார்த்தது முதல் 2015 இல் மலையாளக் கவிஞர், நண்பர் அன்வர் அலி ஆற்றூரைப் பற்றி எடுத்த ஆவணப்படம் மறுவிளியில் பங்கேற்கச் சென்றதுவரையிலுமான ஆண்டுகளில் அவ்வப்போது ஆற்றூர் ரவிவர்மாவைச் சந்திக்கவும் பிந்தைய ஆண்டுகளில் அரிதாகத் தொலைபேசி வாயிலாக உரையாடவும் வாய்த்திருந்தது. ஒவ்வொரு சந்திப்பும் ஒவ்வொரு உரையாடலும் கிடைத்தற்கு அரிய ஏதோ ஒன்றை எனக்கு அளித்திருக்கிறது. அது நினைவில் ஆழ ஊன்றியிருக்கிறது.அந்த மகத்தான நினைவைத் தந்தவருக்கு என் எளிய கைம்மாறு இந்தத் தொகுப்பு.


திருவனந்தபுரம்                                                                   சுகுமாரன்
22 ஜூலை 2017




வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

கான மூர்த்தி




                                 கான மூர்த்தி 





பாடகர் பாடுகிறார்
இரு வினைகள் நிகழ்கின்றன

ஆழ்ந்து மூழ்கி
சமுத்திரத்தின் ஆதி அலையைத் தேடுகிறார்
அதுவோ
அநாதிகாலமாக
வற்றாத ஊற்றில் குமிழியாக முகிழ்த்து
ரீங்கரித்துக் கொண்டேயிருக்கிறது

எவ்விப் பறந்து
ஆகாயத்தின் முதல் விண்மீனைத் துளாவுகிறார்
அதுவோ
இருளின் வெளியில்
மின்னிமின்னி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

பாடகர் திரும்புகிறார்
இரு கொடைகள் கிடைக்கின்றன

கொண்டுவந்த குமிழி கடலாக அலைகிறது
கொண்டுவந்த விண்மீன் வானாக விரிகிறது

அந்தக் கொடைப் பொழுதில்
பாடகர்  மண்ணில் கடலாகிறார்
கேட்பவன் குமிழியாகிறான்
அவர் நிலத்தின் விசும்பாகும்போது
கேட்பவன் நட்சத்திரமாகிறான்
பாடகர் மௌனமாகும் வசிய கணத்தில்
நெரித்த திரைக்கடலாகிறது குமிழி
பாயுமொளியாகிறது வான்சுடர்.








திங்கள், 29 ஜூலை, 2019

ஆற்றூர் ரவிவர்மா




                             ஆற்றூர் ரவிவர்மா (1930 – 2019)



லையாளக் கவிதையில் ஆற்றூர் ரவிவர்மா எல்லா வகையிலும் அபூர்வமானவர். ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகக் கவிதையாக்கத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும் மிக அரிதாகவே எழுதினார். அவ்வாறு எழுதப்பட்டவற்றில் பெரும்பான்மையும் அவற்றின் அருமை கருதி தனித்துப் பேசப்பட்டன. கேரளத்தின் பண்பாட்டுத் தலைமையகமான திருச்சூரில் நீண்ட காலம் வாழ்ந்தவர். இருந்தும்  அபூர்வமாகவே இலக்கியக் கூட்டங்களிலும் கவியரங்கங்களிலும் பங்கேற்றார். அந்தப் பங்கேற்பை என்றென்றும் நினைவில் நிற்கும் ஒன்றாக மாற்றும் கலைத் தகுதி அவருக்கு இருந்தது. மிக மெல்லிய குரலில் அவர் வெளிப்படுத்தும் கருத்துக்களும் புதிய சொற்தெறிப்புகளும் இதமான புன்னகையும் அதைச் சாதித்தன. அவருடைய சமகாலக் கவிஞர்கள் கைப்பழக்கம் காரணமாக கவிதைகளாகக் குவித்துத்தள்ளிய போதும் ரவிவர்மா நிதானமாகத் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு தனித்து நடந்தார். எனவே அவரது ஒவ்வொரு கவிதையும் புதுமையின் மெருகுடனேயே வெளிவந்தது. ‘தனித்து நடக்கிறேன் நான், காலி வீடுகள்கொண்டு நீளும் நிசப்தத் தெருவொன்றில்’ என்ற  கவிதை வரியில் வெளிப்படுவது அவரது தனித்துவமும்  கவிதையின் தனித்துவமும்தான்.


1960 களையொட்டிய காலப்பகுதியில் மலையாளக் கவிதையில் நவீனத்துவம் நுழைந்தது. இந்த நுழைவுக்குக் காரணமாக இருந்தவர்களில் ஆற்றூர் ரவிவர்மாவும் ஒருவர். அதுவரை மலையாளக் கவிதை இறுகப் பற்றிக் கொண்டிருந்த கருத்துகளையும் காட்சிகளையும் நவீன கவிதை கைவிட்டது. சமகால வாழ்வை அதன் சிக்கல்களுடனும் மொழியுடனும் முன்வைக்கத் தொடங்கியது. கவிதையின் வடிவில் புதுமையைக் கைக்கொள்ளத் தொடங்கியது. அந்த மாற்றத்துக்குத் துணை நின்றவர்களில் ஆற்றூர் முக்கியமானவர். அவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘கான்ஸர்’ அதன் தொடக்கவரி காரணமாகவே அதிர்ச்சியை ஊட்டியது. ‘கல்லூரிக்கு இரண்டு வாசல்கள், வாயும் மலத்துவாரமும்போல’ என்ற வரியைத் தொடந்து வந்த கவிதை அன்றுவரையிலான  மலையாளக் கவிதையுணர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் நவீனத்தொனி வாசகனை உலுக்கியது. இந்த உலுக்கல் மேலோட்டமானதல்ல என்பதை தொடர்ந்து வெளிவந்த ரவிவர்மாக் கவிதைகள் மெய்ப்பித்தன. வடமொழியிலும் மலையாள மரபுக்கவிதையிலும் அவர் பெற்றிருந்த ஆழ்ந்த புலமை அதற்குத் துணைசெய்தன. ஒவ்வொரு கவிதையும் புதுமையிலிருந்து மேலும் புதுமையை நோக்கி முன் செல்பவையாகவே இருந்தன. தனது ஒரு கவிதைபோல இன்னொன்றை ஆற்றூர் எழுத முற்பட்டதில்லை.


மலையாளக் கவிதை மரபின் விரிவான ஞானம் கொண்டிருந்தவர். எனினும் சமகாலத்தின் துடிப்புகளைக் கவிதையில் கொண்டுவந்தவர் ஆற்றூர். தனது கவிதைக்குத் தேர்ந்தெடுத்த பொருளிலும் அதை வெளிப்படுத்தும் சொற்களிலும் இயங்கும் வரிகளிலும் மிகக் கவனமாக இருந்தவர். தேவையில்லாத  சொல்லோ அநாவசியமான  காட்சியோ இடம்பெற வாய்ப்பில்லாமல் கச்சிதமான மொழியில் கவிதைகளை உருவாக்கினார். கிட்டத்தட்ட அரட்டையின் இயல்பும் தேவையை மீறிய நீளமும் அழுத்தமும் கொண்டிருந்த மலையாளக் கவிதையில் சிற்பச் செதுக்கலுக்கு இணையான சொற்செதுக்கலைக் கொண்டவை ரவிவர்மாக் கவிதைகள். அவரது கவிதைகளை முன்னிருத்தியே ‘ ஆற்றிக் குறுக்கிய கவிதை’ ( குறுகத் தரித்த கவிதை ) என்ற பிரயோகம் நவீன மலையாளக் கவிதையில் புழக்கத்துக்கு வந்தது. இன்று பின்பற்றப்படும் கவிதையாக்க முறைகளில் ஒன்றாகவும் நிலைத்திருக்கிறது. பிந்தைய தலைமுறைக் கவிஞர்களான கல்பற்றா நாராயணன், பி.ராமன். அனிதா தம்பி ஆகியோரின் கவிதைகளை ஆற்றூரின் கச்சிதமுறைக் கவிதைகளுக்கு உதாரணங்களாகக் காணலாம்.


மரபின் ஆணிவேரில் கிளைத்த விருட்சம் என்று ஆற்றூரின் ஆளுமையைச் சொல்லலாம். அதில் காலமாற்றத்தின் அடையாளங்கள் துலக்கமாகத் தென்படுகின்றன. மலையாளத்தின் தந்தையான எழுத்தச்சனை முன்னிருத்தும் ஆற்றூர் கவிதை ‘ துஞ்சத்து எழுத்தச்சனுக்கும் எனக்குமிடையில் மூன்று நான்கு நூற்றாண்டு தூரம்’ என்று தன் காலத்தைச் சொல்லுகிறது கேரள வரலாற்றையும் கலைகளையும் பண்பாட்டையும் பகட்டின்றிப் பேசுகிற குரல் அவருடையது. அந்தப் பண்பாட்டின் ஏற்கத் தகுந்த கூறுகளை வியக்கும் அதே குரல் காலத்தின் தூண்டுதலை ஏற்று விமர்சிக்கவும் செய்கிறது. ‘உதாத்தம்’ ( மகத்துவம் ) என்ற கவிதையில் மலையாள மொழியின் பக்திக் கவிஞர்களான பூந்தானமும் மேல்பத்தூரும் காந்தியுகக் கவிஞரான வள்ளத்தோளும் பாரம்பரியத்தின் பால் பாயசம் அருந்தும்போது வெளியில் கஞ்சிக் கலயத்துடன் நிற்கும் சிறுவன் ஒருவனைப் பற்றிப் பேசுகிறார். அவனுக்குப் பாயசம் மிச்சம் வைக்காத வெண்கல பானையைத் தூக்கியெறியச் சொல்லி முடிகிறது கவிதை. ஆற்றூர் கவிதைகளில் உள்ளூர இயங்கும் மானுடச் சார்பின் எடுத்துக்காட்டு இது. அவருடைய கவிதைகளின் மையமும் இதுவே.


ஆற்றூர் ரவிவர்மா 1930 ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டம் ஆற்றூரில் பிறந்தார். பிரசித்தி பெற்ற நம்பூதிரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘ ஆனால் வாழ்க்கையில் ஒருபோதும் நம்பூதிரியாக இருந்ததில்லை’ என்று ஒருமுறை குறிப்பிட்டார். மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் நம்பூதிரிகளில் போராளிகளாக இருந்த வி டி. பட்டதிரிப்பாடு, ஈ எம் எஸ் நம்பூதிரிப்பாடு போன்றவர்கள் உருவாக்கிய சீர்திருத்தவாதத்தின் நிழலில் வளர்ந்தவர். மலையாள இலக்கியத்தில் முதுகலை பயின்று வெவ்வேறு கல்லூரிகளில் ஆசிரியப் பணிபுரிந்தார். தலைச்சேரி பிரண்ணன் கல்லூரியில் அவரிடம் பயின்ற மாணவர்களில் ஒருவர் இன்றைய கேரள முதல்வர் பிணராயி விஜயன்.


சென்னையில் சில காலம் வாழ்ந்தவர் ரவிவர்மா. அந்தக் காலத்தில் முளைவிட்ட இசைப்பித்து அவரைத் தமிழ் கற்றுக்கொள்ளத் தூண்டியது. ‘திருவையாறு தியாகராஜ உற்சவத்துக்குப் போக விரும்பும் நீங்கள் பேருந்தில் போட்டிருக்கும் ஊர்ப் பெயர் கூடத் தெரியாமல் எப்படி அங்கே போக முடியும்? என்ற சிந்தனையாளர் எம்.கோவிந்தனின் கேள்வியால் உசுப்பப்பட்டுத் தமிழ் கற்றுக் கொண்டார். அது தமிழுக்கு ஒரு கொடையாக மாறியது. சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’, ‘ஒரு புளியமரத்தின் கதை’, ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’, சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆகிய நாவல்களை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தார். அவை வெறும் மொழியாக்கப் பணியாக நின்று விடவில்லை. மலையாளத்துக்கும் தமிழுக்குமான நெடுஞ்சாலையைத் திறந்துவிட்ட செயலாக அமைந்தது. அகிலனும் ஜெயகாந்தனும் சிவசங்கரியும் வாசந்தியும்தான் நவீன தமிழ் எழுத்தாளர்கள் என்று நம்பிக்கொண்டிருந்த மலையாள இலக்கிய உலகின் பார்வையை தமிழின் அசலான நவீன முயற்சிகளை நோக்கித் திருப்பிவிட்டார். மகாகவி பாரதி முதல் மகுடேசுவரன்வரை – ஈழக் கவிஞர்கள் சிலரையும் உள்ளடக்கிய – தமிழ்ப் புதுக் கவிஞர்களின் திரட்டொன்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டார். மலையாளக் கவிஞர்களிடையே தமிழ்க் கவிதையைப் பற்றிய வலுவான அறிமுகமாக அமைந்தது ‘புது நானூறு’ என்ற அந்தத் தொகுப்பு. தமிழ் பக்தி இலக்கியத்தைப் பற்றிய அ.அ. மணவாளனின் நூலுக்கு ஆற்றூர் மேற்கொண்ட மலையாள மொழியாக்கம் நுட்பமும் நேர்த்தியும் கொண்டது. அது தந்த உந்துதலில் கம்பராமாயண மொழியாக்கத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் காலம் அவரை முடக்கிப் போட்டு இப்போது பறித்துக் கொண்டு விட்டது.


ஈழப் பிரச்சனையின் தீவிரமும் பாதிப்பும் சராசரி மலையாளிக்குப் பிடிபடாத ஒன்று. இதற்கு மலையாள இலக்கியவாதிகளும் விலக்கல்ல. ஈழச் சிக்கலைப் பொருளாக்கி மலையாளத்தில் எழுதப்பட்ட முதல் கவிதை ஆற்றூர் ரவிவர்மாவின் ‘மறுவிளி’ என்ற கவிதைதான். இந்தப் புரிந்துணர்வு ஒன்றுக்காகவே  ரவிவர்மாவைத்  தமிழ் இலக்கிய உலகம்  மறவாமலிருக்குமாக.


தனது முன்னோடியாக ஆற்றூர்  கருதியது பி.குஞ்ஞிராமன் நாயரை. ‘மேகரூபன்’ என்ற கவிதையில் அவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். ‘ சஹ்யனைவிடத் தலைநிமிர்வு; நிளாவை விட ஆழ்கருணை’. அந்தப் புகழ்மொழி எழுத்துப் பிசகாமல் ஆற்றூர் ரவிவர்மாவுக்கும் பொருந்தும். அவரது கவியாளுமை மேற்குத் தொடர்ச்சி மலையைக் காட்டிலும் உயரமானது; நிளா நதியை விடவும் ஆழமானது.




(இந்து தமிழ் திசை 29 ஜூலை 2019 யில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
நன்றி: இந்து தமிழ் திசை                   ஓவியம்: நன்றி மாத்ருபூமி நாளிதழ்)









சனி, 13 ஏப்ரல், 2019

என் தேசமே, அழு, கதறிப் புலம்பு.











               
என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

நாங்கள்
மூட மந்தைகளாகப் போனோம் என்பதற்காக
கசாப்புக்காரர்களை
மேய்ப்பர்களாகப் பணிந்தோம் என்பதற்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

பொய்யர்களின் கெக்கலிப்பு காற்றிலேறி
விண்ணைத் துளைக்கிறது என்பதற்காக
நியாயவான்களின் குரல்வளைகள்
நெரிக்கப்படுகின்றன என்பதற்காக
இரண்டையும் கண்டும்
நாங்கள் முனகவும் முடியாமலிருப்பதற்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

எங்கள் அடிவயிற்றில் குத்தியவர்களைப்
புகழ்ந்து பாடுகிறோம் என்பதற்காக
எங்கள் சிரமறுத்தவர்களை
நாயகர்கள் என்று போற்றுகிறோம் என்பதற்காக
வெறுப்பை விதைத்தவர்களைக்
கடவுளராக ஏத்துகிறோம் என்பதற்காக
எங்களைப் புதைகுழியில் தள்ளியவர்களிடம்
இறைஞ்சுகிறோம் என்பதற்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

ஆணையைத் தவிர வேறு மொழி புரியாத
எங்கள் மூடத்தனத்துக்காக
அடிபணிதலைத் தவிர வேறு பண்பாட்டை அறியாத
எங்கள் நல்லொழுக்கத்துக்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாவதை
வேடிக்கை பார்க்கும் எங்கள் சகிப்புணர்வுக்காக
சொந்த மண் காலடியிலிருந்து பறிபோவதை
உணராத எங்கள் முக்தி நிலைக்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

உன்னைக் கூறுபோடும் அசுர வேட்கையின் முன்னால்
உன்னை வன்புணர்ந்து குதறும் வெறியின் முன்னால்
கை பிசைந்து வாய் பொத்தி நிற்கும் எங்களுக்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.




                                                  ( கலீல் கிப்ரான், லாரன்ஸ் ஃபெர்லிங்க்கெட்டி இருவரின் பாதிப்பில் )