சனி, 13 ஏப்ரல், 2019

என் தேசமே, அழு, கதறிப் புலம்பு.











               
என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

நாங்கள்
மூட மந்தைகளாகப் போனோம் என்பதற்காக
கசாப்புக்காரர்களை
மேய்ப்பர்களாகப் பணிந்தோம் என்பதற்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

பொய்யர்களின் கெக்கலிப்பு காற்றிலேறி
விண்ணைத் துளைக்கிறது என்பதற்காக
நியாயவான்களின் குரல்வளைகள்
நெரிக்கப்படுகின்றன என்பதற்காக
இரண்டையும் கண்டும்
நாங்கள் முனகவும் முடியாமலிருப்பதற்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

எங்கள் அடிவயிற்றில் குத்தியவர்களைப்
புகழ்ந்து பாடுகிறோம் என்பதற்காக
எங்கள் சிரமறுத்தவர்களை
நாயகர்கள் என்று போற்றுகிறோம் என்பதற்காக
வெறுப்பை விதைத்தவர்களைக்
கடவுளராக ஏத்துகிறோம் என்பதற்காக
எங்களைப் புதைகுழியில் தள்ளியவர்களிடம்
இறைஞ்சுகிறோம் என்பதற்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

ஆணையைத் தவிர வேறு மொழி புரியாத
எங்கள் மூடத்தனத்துக்காக
அடிபணிதலைத் தவிர வேறு பண்பாட்டை அறியாத
எங்கள் நல்லொழுக்கத்துக்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாவதை
வேடிக்கை பார்க்கும் எங்கள் சகிப்புணர்வுக்காக
சொந்த மண் காலடியிலிருந்து பறிபோவதை
உணராத எங்கள் முக்தி நிலைக்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.

உன்னைக் கூறுபோடும் அசுர வேட்கையின் முன்னால்
உன்னை வன்புணர்ந்து குதறும் வெறியின் முன்னால்
கை பிசைந்து வாய் பொத்தி நிற்கும் எங்களுக்காக

என் தேசமே
குமுறி அழு,  கதறிப் புலம்பு.




                                                  ( கலீல் கிப்ரான், லாரன்ஸ் ஃபெர்லிங்க்கெட்டி இருவரின் பாதிப்பில் )





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக