செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

களம் இலக்கியச் சந்திப்பு

களம் இலக்கியச் சந்திப்பின் 73 ஆவது நிகழ்ச்சி 'சுகுமாரன் படைப்புக'ளைப் பற்றியதாக அமைந்தது. சென்ற ஞாயிறு 17 பிப்ரவரி 2019 அன்று கோவை மாரண்ண கவுடர் உயர்நிலைப் பள்ளியில் கூட்டம் நடந்தது. நண்பர்கள் ஒருங்கமைத்த நண்பர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி. பேசியவர்களும் கேட்டவர்களும் முழுக் கவனத்தையும் செலுத்தினர்.  பல ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்து முகமே மறந்து போன நண்பர் ரத்தினத்தைப் பார்த்தது வியப்பையும் தாமரை டீச்சரின் அறிமுக உரையில் மிளிர்ந்த பிரியம் குதூகலத்தையும் அளித்தன. அவற்றை வெளிக்காட்டித் ததும்பி விடாமலிருக்கப் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

நண்பர் எம். கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். அது முதல் மகிழ்ச்சி. கவிதைகள் பற்றிய  மோகனரங்கன் உரை என் கவிதைகளை எனக்கே புதிதாகத் தோன்றச் செய்தது இரண்டாவது மகிழ்ச்சி.பேராசிரியர்கள் சுனில் ஜோகி, துரைமுருகன், பாரதி பிரகாஷ் மூவரின் கட்டுரை, நாவல்கள் பற்றிய  உற்சாக உரைகளும் கல்லூரி மாணவியான தன்யாவின் 'பெருவலி' நாவல் குறித்த கூர்ந்த பார்வையும் மூன்றாவது மகிழ்ச்சி. இலக்கிய அறிமுகக் காலத்தில் நண்பர்களாக வாய்த்த ஆறுமுகம்.அமரநாதன், அறிவன் மூவரும் தான் நிகழ்வின் காரணகர்த்தர்கள் என்பது நிறைவை அளித்தது. என் படைப்புகள் குறித்து என் ஊரில் நடந்த கூட்டம் என்பது அந்த நிறைவுக்குக் கூடுதல் அர்த்தத்தைக் கொடுத்தது. என்றும் ஞாபகத்தில் வைத்திருக்க ஒரு நாள்.  இது அன்றைய என் ஏற்புரை.


அனைவருக்கும் வணக்கம்.

எழுத்தாளன் பேச்சாளனாக மாறுவது படைப்பு நலத்துக்குத் தீங்கு விளைக்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை. எழுதியவனே  தன் எழுத்தைப் பற்றி விளக்கிச்  சொல்வது கூடாது  என்பது நம்பிக்கையின் இன்னொரு பக்கம்.  சொல்ல ஏதோ இருப்பதால்தான் எழுத்தில் ஈடுபடுகிறான். சொல்ல இருப்பதைத்தான் எழுத்தில்  முன்வைக்கிறான். எழுத்தில் சொல்ல முடியாததை விளக்கத்தால் முன்வைத்து விட முடியாது என்று எண்ணுகிறேன். படைப்பே முதன்மையானது. பேசப்பட  வேண்டியது. படைப்பாளி அல்ல என்பது நம்பிக்கையின் இன்னொரு புறம்.

என் படைப்புகளை முன்னிருத்தி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்த இலக்கியச் சந்திப்புக்குக் காரணமான களம் அமைப்பில் மூன்று பேர் என்னுடைய நீண்ட கால நண்பர்கள். இருந்தும் நட்பைக் கருதாமல் படைப்பை வைத்தே  இலக்கியச்  சந்திப்பை ஒருங்கமைத்திருக்கிறார்கள்.  அப்படிச் சொல்லிக் கொள்ளும்படியான படைப்பில் ஈடுபட்டிருக்கிறேன் என்ற அங்கீகாரம் நம்பிக்கையை வலுவாக்குகிறது. மகிழ்ச்சியளிக்கிறது, அந்தக் கறாரான பார்வைக்கு மிக்க நன்றி. ஒருவகையில் அந்தப் பார்வைதான் எனக்கும் மதிப்பைத் தருகிறது.


பேச்சாளனாகக் கூடாது என்று மனமார ஆசைப்பட்டாலும் , உறுதியைக் கைவிடும்படியான  வாய்ப்புகள் நேர்கின்றன. அப்படியாக நான் விதித்துக் கொண்ட  கட்டுப்பாட்டை மீறி  அதிகப் பிரசங்கியாகவும் ஆகியிருக்கிறேன். நான் தேர்ந்த சொற்பொழிவாளன் இல்லை . ஆனாலும் பேசிச் சமாளித்து வந்திருக்கிறேன். இருந்தபோதும் இங்கே என்  பழைய நண்பர்கள் முன்னிலையில் பொது அரங்கில் பேசக் கூச்சமாகவும் தயக்கமாகவும் சரியாகச் சொன்னால் பயமாகவும் இருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஜனவரி மாதத்தில் ஒருநாள் நண்பர் ஆறுமுகம் தொலைபேசியில் அழைத்தார். நல விசாரிப்புகளுக்குப் பின்னர் அழைத்த  காரணத்தைச் சொன்னார். நண்பர், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் படைப்புகள் பற்றிக் களம் சார்பில்  கூட்டம் நடத்த விரும்புகிறோம்.  நீர் தான் அறிமுக உரை நிகழ்த்த வேண்டும் என்றார். யுவன் சந்திரசேகர் நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் இலக்கியக்கார்ர்களில் ஒருவர். என்னுடைய நண்பர். எனவே மறுவார்த்தை இல்லாமல் சரி என்று ஒப்புக் கொண்டேன். கூட்டம் நடத்தும் நாள், யுவன் சந்திரசேகர்  வந்து போவதற்கான ஏற்பாடுகள்அவருடைய நூல்கள்  பற்றிய விவரங்கள்  எல்லாவற்றையும் பேசினோம். அதையெல்லாம் குறுகுறுப்புடன் தான் பேசினேன். உரையாடலை முடிக்கும் முன்பு ஆறுமுகத்திடம் கேட்டேன். 'சார், நான் யுவன்  சந்திரசேகர் எழுத்துலகுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னாலிருந்து எழுதுகிறேன். உங்கள் நடுவிலிருந்து தான் வளர்ந்து வந்தேன். நானும் முப்பது ஆண்டுகளுக்கு  மேலாக எழுதுகிறேன். என் கணக்கிலும் முப்பது புத்தகங்களாவது வந்திருக்கின்றன. அதெல்லாம்  உங்கள் கண்ணுக்குப் படவில்லையா? '. உலக சமாதானத்  தூதர்களுக்கு உரிய சிரிப்புடன் 'அதனால என்னய்யா, உமக்கும் ஒரு கூட்டம் போட்டுட்டாப் போச்சு' என்று பதில் சொன்னார். 'அப்படி ஒரு கூட்டமொண்ணும்  வேண்டாம்" என்று முறுக்கிக் கொண்டேன். இலக்கிய அங்கீகாரம் கேட்டு வாங்குவது அல்ல என்பதால் அப்படிச் சொன்னேன். அந்த முறுக்கத்தையும் தன்னுடைய ராஜ தந்திரச் சிரிப்பால் தளரச் செய்தார். பின்பு யோசித்தபோது என்னுடைய அசட்டுத்தனம் புரிந்தது. நட்பின் பெயரால் எடுத்துக் கொண்ட உரிமை மீறல்  விளங்கியது.

மேலும் யோசித்தபோது சில விஷயங்கள் பிடிபட்டன. நண்பர்கள் ஆறுமுகம், அமரநாதன், அறிவன் மூவரும் சீரிய இலக்கியத்துக்கு அறிமுகமான நாள் முதலே அறிமுகமானவர்கள். இவர்களுடன் பேசியும் பழகியும் விவாதித்தும் இலக்கிய ருசியை வளர்த்துக் கொண்டவன். இந்த இலக்கியத் தோழமைக்கு மையமாகவும் வளர்ச்சிக்குத் தூண்டுதலாகவும் இருந்தவர் ஞானி என்பதை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். கூடவே அன்று இலக்கியத் தோழராக உடன் இருந்த பாதசாரி விஸ்வநாதனையும் நினைத்துக் கொள்கிறேன். இவர்களுடைய உறவின் மூலம் கற்றுக் கொண்டவைதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன. 

இவர்கள் அறிமுகமானபோது எனக்கு வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது. ஒன்றிரண்டு கவிதைகள் அச்சில் வெளி வந்திருந்தன என்பதைத் தவிர இலக்கியப் பெருமை எதுவும் இருக்கவில்லை. இவர்களுடனான நட்பு ஏற்பட்ட பிறகுதான் இலக்கியத்தின் விரிவு தெரிய வந்தது. ஒரு பொடியன் உற்சாகத்துடன் வாசிக்கிறான், ஆர்வத்துடன் எழுத முயல்கிறான் என்று ஊக்குவித்தவர்கள் இந்த நண்பர்கள்தாம். அதனாலேயே அவர்கள் நினைவில் ஒரு பத்தொன்பது வயதுப் பையனாகவே தீராத இளமையுடன் இருந்திருக்கிறேன் என்பதைப் பின்னர் புரிந்து கொண்டேன். இந்த நிகழ்வின் மூலம் நான் பிராயபூர்த்தி அடைந்திருக்கிறேன்; இலக்கிய வாதியாகப் பக்குவப் பட்டிருக்கிறேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் உணர்கிறேன். இதை ஆதங்கமாகச் சொல்லவில்லை. நிறையப் படிக்கட்டுகள் இருக்கும் இடம். அவற்றின் மேல் தடுமாற்றத்துடன் ஏறிச் செல்லும் சிறுவனைச் சிலர் கை பிடித்து ஏற்றி விடுகிறார்கள். அவர்கள்  துணையால் படிகளில் ஏறியவன் பிறகு தானாகத் தாவி ஏறிவிடுகிறான். மேல் படிக்கட்டில் நிற்கிறான். ஏற்றி விட்டவர்கள் அவனைப் பாராட்டும் முகமாகக் கைதட்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பாராட்டிக் கைதட்டுபவர்களாக இந்த நண்பர்களையும் அவர்களுடைய பொருட்படுத்தலில் மகிழும் சிறுவனாக என்னையும் பார்க்கிறேன்.

நேர்முகமாகவும் மறைமுகமாகவும் இந்த நண்பர்களிடமிருந்து இலக்கியத்தின் சில கூறுகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆறுமுகத்துக்குச் சிறுகதைகள் வாசிப்பதும் அவற்றைப் பற்றிப் பேசுவதும் உவப்பான செயல். அவரிடம் ஒரு துப்பறியும் நிபுணரின் பார்வை இருக்கிறது. எந்தச் சிறுகதையானாலும் அதில் உள்ளிருக்கும் அரசியலைத் துப்புத் துலக்கிக் கண்டுபிடித்து விடுவார். அது குடும்ப அரசியலாகவோ சமூக அரசியலாகவோ இருக்கலாம். அது அவர் பார்வைக்குத் தப்பாது. எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது.ஆனால் எல்லாமும் அரசியல் அல்ல என்ற கருத்து எனக்கு இருப்பதால் அவருடன் விவாதமும் செய்திருக்கிறேன். அவருடைய அந்தப் பார்வை மிக முக்கியமானது என்று இன்று தோன்றுகிறது. படைப்புகளின் அரசியல் சரிகளைப் பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது. அந்த உரையாடல் முறையை வெகு காலத்துக்கு முன்பே ஆறுமுகம் கொண்டிருந்தார் என்பதை இன்று என்னால் அடையாளம் காண முடிகிறது. எழுபதுகளில் புதிய கவிதைகளில் இடதுசாரிச் சிந்தனைகளின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. சமுதாய மாற்றத்துக்கான அறைகூவல்கள் கவிதையின் பொருளாக இருந்தன. நாளை வரவிருக்கும் புரட்சிக்கு இன்றே தயாராக இருப்பது போன்ற உரத்த முழக்கங்களே கவிதை வேடம் தரித்து ஊர்வலம் வந்தன, அந்தக் காலப்பகுதியில் முழக்கங்கள் அல்ல; துயரப்படும் மனிதர்களின்  அனுபவங்களே கவிதைக்கான பொருள் என்று கருதக் கூடிய கவிதைகளை நண்பர் அறிவன் எழுதியிருக்கிறார். அவை என் கவிதையாக்க முறைக்குச் சில அடிப்படைகளைக் கற்றுத் தந்திருக்கின்றன. சத்யஜித் ராய் எனக்கு மிகப் பிடித்த கலைஞர். அவரை ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த விநாடியில் நான் நினைத்துக் கொண்ட்து நண்பர் அமரநாதனைத்தான். திரைப்பட ரசனைப் பயிற்சி முகாமொன்றில் பார்த்த பதேர் பாஞ்சாலி படம் பற்றிய அவருடைய உரையாடல்தான் ராய் மீதான மோகத்துக்கு விதை போட்ட்து. திரைபடத்தின் அழகியல் சார்ந்த அவருடைய பார்வை தனித்துவமானது. ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் கண்ணோட்டத்தை அது எனக்குக் கற்றுத் தந்தது. படைப்பின் அரசியல் சரியைப் பற்றி ஆவலாதிப்படும் சூழலில் ஆறுமுகத்தின் பார்வையும் மேம்போக்கான அரசியல் கவிதைகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் அறிவனின் வாழ்வனுபவத்தை முன்னிருத்திய கவிதை நோக்கும் திரைப்படத்தின் கதையைச் சிலாகிப்பதே சினிமா விமர்சனம் என்றாகியிருக்கும் கட்டத்தில் அமரநாதனின் அணுகுமுறைக்கும் தேவை இருக்கிறது. இவர்கள் இதையெல்லாம் ஏன் செய்யாமல் விட்டார்கள் என்ற கேள்வியும் செய்து தொலைக்கலாமே என்ற ஆதங்கமும் எனக்கு இருக்கிறது. மூன்று பேரும் பணி ஓய்வு பெற்றவர்கள். பேரக் குழந்தைகளைச் சீராட்டுவதைத் தவிர பெரும் கடமை இல்லாதவர்கள் என்பது என் அனுமானம். இனியாவது தங்கள் கைவரிசையைக் காட்ட வேண்டும் என்ற பணிவான வேண்டுகோளை உரிமையுடன் முன்வைக்கிறேன். இவர்கள் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த அரங்கு என்னுடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் நாவல்களையும் கவனத்தில் கொண்டது. விவரமறிந்த சிலர் பொருட்படுத்திப் பேசும் அளவிலான படைப்புகளைச் செய்ய முடிந்திருக்கிறது என்ற நிம்மதியை அவர்கள் பேச்சுக்கள் தந்தன. கூடவே இவற்றிலும் மேலானவற்றை உருவாக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் உருவாக்குவதற்கான உத்வேகத்தையும் அளிக்கின்றன. ‘பெரிதினும் பெரிது கேள்என்ற வாசகத்தை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். எனவே செய்ய முடியும் என்பது என் நம்பிக்கை.

கவிதைகளைப் பற்றி என்னுடைய உயர்ந்த நண்பர்களில் ஒருவரான மோகனரங்கன் பேசியது எனக்குக் கிடைத்த நல் வாய்ப்பு. ஒப்புக்காகச் சொல்லவில்லை. சமகாலக் கவிதைகளைத் தீவிரமாக வாசிப்பவர். அவை பற்றிய கறாரான பார்வையைக் கொண்டிருப்பவர். அதைச் சமநிலை குலையாமல் முன்வைப்பவர் என்பது அவரைப் பற்றிய என்னுடைய மதிப்பீடு. கவிதை தொடர்பான பார்வையில் ஏகதேசம் மோகனுடன் ஒத்துப் போகும் அணுகுமுறைதான் என்னுடையதும். அவர் என் கவிதைகளைப் பற்றிப் பேசியது எனக்கு வாய்த்த பெருமை.  

கவிஞனாக அறியப்படவே ஆசைப்படுகிறேன். அப்படித்தான் அறியப் பட்டிருப்பதாகவும் எண்ணுகிறேன். கவிதைக்குள் அடங்காது என்ற நிலையிலேயே பிற வடிவங்களைக் கையாள நேர்ந்திருக்கிறது. இன்று என்னுடையது  என்று நான் எழுதும் வடிவத்திலான முதல் கவிதை பதினாறாம் வயதில் அச்சேறியது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன்..மிக அதிக எண்ணிக்கையில் எழுதி விடவில்லை என்றாலும் தொடர்ந்து இதில் உழன்று கொண்டிருக்கிறேன். இன்னும் இந்த வடிவத்தின் மேலான ஈர்ப்பு மங்காமலேயே இருக்கிறது. கவிதை என்றால் என்ன? எது கவிதை? என்ற கேள்விகளுக்கு  பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை இதுதான் கவிதை என்று தெரிந்து விட்டால் கவிதை எழுதுவதை நிறுத்தி விடுவேன் என்று நினைக்கிறேன். கடவுளைத் தேடுகிறவன் கண்டுபிடித்து விட்டால் தேடல் முடிந்து விடும். இல்லையா? அது மாதிரித்தான் கவிதையும். கவிதையின் முடிவான இடம் என்று ஒன்று இல்லை. ஆனால் அப்படி ஓர் இறுதியான இடத்தை அடைவதற்கான தேடல்தான் கவித்துவம் மிகுந்த்து. அதில் வாய்க்கும் அனுபவத்தைத்தான் கவிதை என்று நாம் அறிகிறோம். கவிதை முற்றானது. கவிதைக்கான தேடல் வெவ்வேறானது. அதனால்தான் கவிதையில் இத்தனை வகைமாதிரிகளும் போக்குகளும் நிகழ்கின்றன என்று அனுமானிக்கிறேன்.

கவிதை ஆழமானது. செறிவானது. அந்த அடிப்படை காரணமாகவே வரையறைகள் மிகுந்த்து. கவிதை ஒன்றை நுட்பமான படிமமாகக் குறுக்குகிறது. அதைப் பற்றிய விளக்கங்க்களின் மூலமே விரிவடைகிறது. மாறாக உரைநடைப் படைப்புகள், அவை கட்டுரையாகவோ புனைவாகவோ இருக்கலாம்ஒன்றை விரிவாக்கவும் வரலாற்று மயமாக்கவும் முயல்கின்றன. இந்த எண்ணமே என்னைக் கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் நாவல்களுக்கும் சில சமயங்களில் மொழியாக்கங்க்களுக்கும் கொண்டு சென்றிருக்கின்றன. கவிதைக்கு அளிக்கும் அதே கவனத்தையும் உழைப்பையும் இவற்றுக்கும் அளிக்க முயன்றிருக்கிறேன் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

கவிதைக்கான மனநிலை பெரும்பாலும் தன்னெழுச்சியானது. கட்டுரைக்கும் புனைவுகளுக்குமான மனநிலை ஆயத்தங்கள் தேவைப்படுவது என்பது மட்டுமே வேற்றுமை என்று தோன்றுகிறது. கட்டுரைகளை விரிவாகவும் ஆழமாகவும் பேராசிரியர் சுனில் ஜோகி பார்த்திருக்கிறார் என்பது நிறைவளிக்கிறது. அவருக்கு என் நன்றி.

இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறேன். அவற்றைக் குறித்து இங்கே மூன்று பேர் ஆய்வுரை  நிகழ்த்தியிருக்கிறார்கள். பேராசிரியர் துரைமுருகன்வெல்லிங்டன்நாவலையும் பேராசிரியர் பாரதி பிரகாஷ் , தன்யா இருவரும்பெருவலிநாவலையும் பற்றிப் பேசியிருக்கிறார்கள். மூவருக்கும் மிக்க நன்றி.

உண்மையைச் சொன்னால் நான் நாவல் எழுத ஆசைப்பட்டவன் அல்லன்.அது என்னுடைய ஊடகம் அல்ல என்றே நினைப்பவன். முன்னர் குறிப்பிட்டதுபோல கவிதைக்குள் அடங்காத உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவே நாவல் எழுத்தை மேற்கொண்டேன். கவிதைக்குக் கிடைத்திராத வாசக ஏற்பு இந்த நாவல்களுக்குக் கிடைத்ததைக் கொஞ்சம் கூச்சத்துடனும் கொஞ்சம் ஏமாற்றச் சிணுங்கலுடனும்தான் பார்க்கிறேன். ஒருவகையில் கவிதையின் இடத்தை நாவல் பறித்துக் கொண்ட காலத்தின் அடையாளமாகவும் பார்க்கிறேன். இந்த இரண்டு நாவல்களும் எழுதி முடித்த கவிதையொன்றின் விரிவாகவும் எழுத விரும்பிய கவிதையின் மாற்று வடிவமாகவும்தான் என் மனதில் உருவாயின. ‘உதகமண்டலம்என்ற என்னுடைய கவிதையில் சொல்லாமல் விட்ட உணர்வுகளின் நீட்சிதான் வெல்லிங்டன். சூஃபி துறவியாக ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போன  இளவரசியின் ஆதங்க்கத்தைச் சொல்லும் கவிதைதான் என் மனதில் எழுதப்படாமல் இருந்தது. அந்த மன எழுச்சியின் விரிவாகத்தான் பெருவலிநாவல் உருவானது. இந்த நாவல்களுக்கு எழுதியிருக்கும் பின்னுரைகளில் இதை விரிவாகவே சொல்லியிருக்கிறேன். முன்னரே குறிப்பிட்ட்துபோல படைப்புகள் பேசுவதுதான் முக்கியமானது. சரியானது.

இப்போது இந்த இரண்டு நாவல்களுக்கும் எல்லாரையும் போல நானும் ஒரு வாசகன் மட்டுமே. அந்தப் பார்வையில் இந்த நாவல்களை இப்படிப் பார்க்கிறேன். வெல்லிங்டன்இடத்தை முன்னிருத்தி மனிதர்களைப் பேசிய புனைவு. பெருவலிகாலத்தை மையமாக்கி மனிதர்களை எதிர்கொண்ட படைப்பு. இரண்டு நாவல்களையும் குறித்து விரிவாகப் பேசிய துரை முருகனுக்கும் பாரதி பிரகாஷுக்கும் தன்யாவுக்கும் மனமார்ந்த நன்றி.

வரவேற்புரை ஆற்றியவரைப் பற்றிச் சொல்லாமல் விட்டால் என் பங்களிப்புக் குறையுடையது. என் வாழ்க்கையில் , இலக்கியம் சார்ந்தும் தனிப்பட்ட முறையிலும் அவர்கள் அளித்த ஆதரவும் காட்டிய அன்பும் கிடைத்தற்கு அரியவை. தாமரையையும் ஆறுமுகத்தையும் முதன் முதலாகச் சந்தித்த தேதி கூட இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது. 1976 அக்டோபர் 1. அன்று ஆயுத பூஜை தினம். நண்பர் விஸ்வநாதன் அழைத்துச் சென்றார். லாலி ரோடு பகுதியில் அவர்கள் குடியிருந்த வீட்டைத் தேடிச் சென்றோம். அவர்களுக்குத் திருமணம் முடிந்த ஓராண்டு அல்லது முதல் பிள்ளை பிறந்த வேளை என்பது என் ஞாபகம். நாங்கள் போனபோது இருவரும் வீட்டில் இல்லை. ஏமாற்றத்துடன் திரும்பும் வழியில் அவர்களைப் பார்த்தோம். மீண்டும் வீட்டுக்குச் சென்று நீண்ட நேரம் இலக்கிய அரட்டையில் ஈடுபட்டிருந்தோம். அன்று தொடங்க்கிய நட்பு பின்னர் வலுவானது. வாழ்க்கையில் சிக்கலான தருணங்க்கள் பலவற்றிலும் அவர்களது ஆலோசனையும் துணையும் வாய்த்தது என்னுடைய நல்லூழ் என்று உறுதியாக நம்புகிறேன். எனக்குக் கிடைத்த முதலாவது கௌரவமான வேலைக்கு மூல காரணமும் அவர்கள்தாம் என்பதை இங்கே நெகிழ்ச்சியுடன் நினைவுகூர விரும்புகிறேன். அந்த வேலைக்கு காப்புத் தொகை கட்டவேண்டும் என்பது நிபந்தனை. அதைச் செய்யும் நிலைமையில் எங்கள் குடும்பம் இருக்கவில்லை. விவரம் அறிந்த தாமரை என்னை ஒரு நிதி நிறுவனத்துக்குசீனிவாசப் பெருமாள் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்- அழைத்துப் போனார்.கழுத்திலிருந்த சங்கிலியை அடகு வைத்து அந்தத் தொகையைப் பெற்றுத் தந்தார். அன்று அவர்களும் வசதியான நிலையில் இருக்கவில்லை. அந்தச் சங்கிலி அவரது தாலிக் கொடி என்பது என் நினைவு. எனக்குத் தெரியாமல் தாலியை மட்டும் சங்கிலியிலிருந்து கழற்றுவதை அவருக்குத் தெரியாமல்  பார்த்தேன் என்பது எனக்கு மட்டுமான ரகசியம். ஆறுமுகம் அதற்கு மௌனமாக சம்மதம்  கொடுத்திருந்தார் என்பது அவர்களுக்கு மட்டுமான ரகசியம்.

இந்த உறவு நெருக்கத்தின் அடிப்படையில்தான் என் படைப்புகள் ’ஏன் உங்கள் கண்ணில் படவில்லை?’ என்று உரிமையுடன் சண்டைக்குத் தயாரானேன். இந்த நண்பர்களிடமிருந்து கற்றுக்கொண்டவைதாம் என்னை ஆளாக்கியிருக்கிறது என்ற நிலையில் இந்த நிகழ்வு என் அளவில் முக்கியமானது. என் படைப்பு முயற்சிகளின் ஏதோ ஓரிடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். என் இலக்கியச் செயல்பாடுகளில் மறைமுகமாக அவர்கள் அளித்த கொடையின் சாயல்கள் இருக்கின்றன. இது நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இலக்கியம் பயின்ற மண். உண்மையில் நான் கணியன் பூங்குன்றனின் வாரிசு. எந்த ஊர் மீதும் எனக்குத் தனியான பிடிப்பு இல்லை. எனினும் நான் காலார உலவிய மண்ணில் என் படைப்புகள் முதன்முறையாகப் பேசப்படுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதைச் சாத்தியமாக்கிய களம் அமைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இலக்கியம் என்ன செய்யும்? அற்புதங்கள் நிகழ்த்துமா, சமூகத்தைச் சீர்திருத்துமா, புரட்சியைக் கொண்டுவருமா, நீதிக்காகப் போராடுமா, மனிதனைக் குணவானாக்குமா, உறவுகளைப் பேணுமா, சிந்திக்கச் செய்யுமா களியாட்டம் நிகழ்த்துமா?

செய்யலாம். செய்யாமலும் போகலாம். அது இலக்கியத்தை உருவாக்குபவனையும் ஏற்றுக் கொள்பவனையும் பொறுத்தது. ஆனால் இலக்கியம் ஒன்றைச் செய்யும் என்று நான் திடமாக நம்புகிறேன். மனிதர்களின் நிலையைப் பற்றிப் பேசும். மனிதர்களைக் குறித்துப் பரிதவிக்கும். மானுட இணக்கத்தை வலியுறுத்தும். அப்படி எது செய்கிறதோ அதைத்தான் இலக்கியம் என்று நம்ப விரும்புகிறேன்.

அனைவருக்கும் நன்றிவணக்கம்.