திங்கள், 31 டிசம்பர், 2018

காலா பூத்



காலா பூத். நினைவில் நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெயர். ஆனால் அது என்னவென்பது சுத்தமாக மறந்து போயிருந்தது. ஆளின் பெயரா, இடத்தின் பெயரா, பொருளின் பெயரா என்று குழப்பமாக இருந்தது. எங்கிருந்து, எப்படி, எவர் மூலம் இந்தப் பெயர் உள்ளே புகுந்தது என்பதும் வசப்படாமல் இருந்தது. இந்தி தெரிந்த நண்பர்களிடம் பெயரைச் சொல்லி விசாரித்தேன். அவர்களும் பெயருக்கு அர்த்தம் சொன்னார்களே தவிர அது இன்னதென்று விளக்கவில்லை.


அஜ்மீர் தர்கா தெருவிலிருக்கும் அத்தர் கடைக்குள்ளே நின்றிருந்தபோது எவர் துணையும் இன்றி பெயரின் மூலம் விளங்கியது.சிறிதும் பெரிதும் பல வண்ணங்கள் கொண்டவை யுமான  ஆயிரக்கணக்கான கண்ணாடிக் குப்பிகள் அடுக்கியிருந்த அலமாரிகளின் இடையில் பொருத்தியிருந்த  பெரிய அளவு ஓவியம் அதை விளக்கியது. அதில் மகுடம் போன்ற வடிவிலான கண்ணாடிக் குப்பியை முகர்ந்து பார்க்கும் பெண்ணின் உருவம் தீட்டப் பட்டிருந்தது. முகமும் கண்களும் மெல்லிய திரைக்குப் பின்னால் தெரியும்படி முகலாயர் பாணியில் தீட்டப்பட்ட ஓவியம்.அதன் வலதுபக்கக் கீழ் ஓரத்தில் ஒரு பளிங்குக் குப்பியின் படம். அடியில் இந்தியிலும் உர்தூவிலும் ஆங்கிலத்திலுமாக 'காலா பூத்' என்று எழுதப் பட்டிருந்தது.


என்ன வேண்டும்?’ என்று கேட்ட கடைப்பணியாளரிடம் ஓவியத்தைச் சுட்டிக் காட்டினேன். சிறுகுப்பியை எடுத்துத் திறந்து புறங்கையை நீட்டச் சொன்னார். நீட்டிய இடது கையில் ஒரு அடர்பழுப்புத் திவலையை வீழ்த்தினார். முகர்ந்துபார்க்கச் சொன்னார். கையை நாசியருகில் உயர்த்தி முகர்ந்தேன். நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நுகர்ந்த  அந்த வசிய சுகந்தம்  திரும்ப உள்ளே நிறைந்தது.


பீர் என் பள்ளி நண்பன். ஆறாம் வகுப்பு முதல் இருவரும் ஒரே வகுப்பில்  படித்தோம். ஆனால் அப்போதெல்லாம் அவன் என் சக மாணவன் மட்டுமே. ஒன்பதாம் வகுப்பில் முதல் இடைப்பருவத் தேர்வுக்குப் பின்புதான் நண்பர்கள் ஆனோம். அவனுக்குத் திணறலைக் கொடுத்த தமிழ்ப் பாடமும் என்னை எப்போதும் தோற்கடிக்கும் கணக்குப் பாடமும் எங்களை நெருங்கச் செய்தன. வகுப்பில் அவன்தான் கணித மேதை. வகுப்புத் தேர்வுகளிலும் பருவத் தேர்விலும் அவனுக்குத்தான் முதல் மதிப்பெண்கள். பெரும்பாலும் நூற்றுக்கு நூறு. சமயங்களில் ஓரிரண்டு குறையும். என்னால் தேர்ச்சிக்குரியதைவிட  ஒன்றோ இரண்டோ மதிப்பெண்களையே அதிகமாகப் பெற முடிந்தது. ஆனால் அதை ஈடுகட்டத் தமிழ் கைகொடுத்தது. கணக்கு வாத்தியார்போலத் தமிழாசிரியர் பெருந்தன்மை யானவரல்லர். எண்பதிலிருந்து தொண்ணூறுக்குள் தான் மதிப்பெண்களைக் கொடுப்பார். இருந்தும் ஒரு தேர்விலும் கபீரால் என்னை நெருங்க முடியவில்லை. கணக்கில் நான் வாங்கும் மதிப்பெண் களையே அவன் தமிழில் வாங்கினான். முதலாவது பருவத் தேர்வில் நான் கணக்கிலும் கபீர் தமிழிலும் ஒரேபோல மதிப்பெண்கள் எடுத்திருந்தோம். தேர்ச்சி அட்டவணையைக் கொடுத்துவிட்டு வகுப்பு ஆசிரியர் சோமு சார் செய்த அறிவிப்பு எங்கள் இருவரையும் கூசித் தலை குனியச் செய்தது. சாரின் செல்ல மாணவர்களின் பட்டியலில் இருந்துங்கூட எல்லார் முன்னிலையிலும் அவர் எங்களை அம்பலப்படுத்தியது  மிகுந்த அவமானத்தைக் கொடுத்தது. கண்ணீர் உகுக்கச் செய்தது.


அன்று மாலை நாங்கள் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தம் நெருக்கமான தோழமைக்குக் காரணமானது. கபீருக்கு நான் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவன் எனக்குக் கணக்குக் கற்றுத் தர வேண்டும். இது எங்கள் ஒப்பந்தம். எங்கள் வீடு படிப்பதற்குத் தோதான இடமல்ல என்பதால் கபீரின் வீட்டுக்குப் போக ஒப்புக் கொண்டேன். சனி, ஞாயிறுகளிலும் விடுமுறை நாட்களிலும் சேர்ந்து படிப்பதாக முடிவெடுத்தோம். வடகோவை ரயில் நிலையத்துடன் ஒட்டியிருந்த ரயில்வே குவார்ட்டர்சில்தான் கபீரின் வீடு. எங்கள் வீட்டிலிருந்து தொலைவு தான். ஆனால் அவமானத்தைத் துடைத்துக் கொள்ள எவ்வளவு தூரமும் போகத் தயாராக இருந்தேன்.உடனடியாக அதைச் செய்யவும் துடித்தேன்.  'வர்ற சனிக்கிழமைலேர்ந்து சேந்து படிப்போம்டா கபீரு ' என்று நானாகவே சொன்னேன். அவனுக்கும் அதில் மறுப்பு  இல்லை. அவனும் என்னைப்போலவே அவமானத்திலிருந்து விடுபடத் தவித்துக் கொண்டிருந்தான்.


அடுத்த சனிக்கிழமை கபீரின் வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே இரண்டு விஷயங்கள் உடனடியாகப் பிடிபட்டன. ஒன்று : அவனுக்குத் தமிழ் வராததற்குக் காரணம். அவர்கள் வீட்டு மொழி தமிழல்ல. உருது. அவன் பேச்சிலோ அவன் அக்காவின் பேச்சிலோ அது தெரியவில்லை. ஆனால் அவன் அம்மா ஒவ்வொரு வார்த்தையாக மனதுக்குள் யோசித்து அதைத் தான் தமிழில் ஒப்பித்தார். இரண்டாவது : ரயில்வே குடியிருப்பாக இருந்தாலும் அவர்கள் வீடு விசாலமானதாக இருந்தது. பஷீருக்குத் தனியாக ஓர் அறை இருந்தது. படிப்பு மேஜையும் நாற்காலியும் இருந்தன. மேஜை விளக்கு இருந்தது. புத்தகங்களை வைத்துக்கொள்ள கண்ணாடிபோட்ட அலமாரியும் இருந்தது. அந்த ஆடம்பரம் லேசாகப் பொறாமைத் தந்தது. கூடவே படிப்பதற்கு இதைவிட நல்ல இடம் கிடையாது என்ற ஆறுதலையும் கொடுத்தது.


கபீர், அவன் அக்கா, அம்மா மூன்று பேர்தான் வீட்டில். அவனுக்கு அப்பா இல்லை என்பது பின்னாட்களில் தெரிய வந்தது. ரயில்வே ஊழியரான அவர் சில வருடங்களுக்கு முன்பு அகாலத்தில் மரித்திருந்தார். அவருடைய வேலை அக்காவுக்குக் கிடைக்கும் என்று காத்திருந்தார்கள். நியமனம் தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில் குவார்ட்டர்ஸைக் காலிசெய்ய வேண்டியிருந்தது. அப்பாவின் சக ஊழியர் ஒருவருக்குத்தான் அது ஒதுக்கப் பட்டிருந்தது. எப்படியும் வேலை கிடைக்கத்தான் போகிறது. கிடைத்தால் குவார்ட்டர்ஸும் ஒதுக்கப்படும். புதிதாக இன்னொரு இடத்துக்கு சட்டி பானைகளைத் தூக்கிக் கொண்டு எதற்காக அலைய வேண்டும். அதனால் வீட்டைக் காலிசெய்ய வேண்டாம் என்று சக ஊழியர் ஒத்துக்கொண்டிருந்தார். அதனால் அதே வீட்டிலேயே குடியிருந்தார்கள். இவை யெல்லாம் நாள்போக்கில் தெரிந்து கொண்டவை. அந்த வீட்டை விட்டு வெளியேறச் சொன்னால் கபீர் குடும்பத்தினர் உயிரையே விட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அந்த வீடு அவர்களுக்குள் குடியிருந்தது. அதற்கு முழுக் காரணம் கபீரின் அக்கா ரபீக்கா. வீட்டை அத்தனை துப்புரவாக வைத்திருந்தாள். துலுக்க வீடுகளில் எப்போதும் கவிச்சை வாடை வீசும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக அந்த வீட்டுக்குள் சதா காலமும் பன்னீரின் சுகந்தம் படர்ந்திருந்த்து.அரசாங்கக் குடியிருப்புகளில் வசிக்கும் வகுப்புத் தோழர்கள் சிலரது வீடுகளில் தென்பட்ட அசட்டையான மனோபாவத்துக்கு மாறாகக் கபீரின் வீடு ஒழுங்கு குலையாத அழகுடன் இருந்தது. ஜன்னல்களில் மெல்லிய வெண் திரைகள். வாசல் நிலைகளில் பாசி மணிகளால் கோத்த தொங்கட்டான்கள். மேஜை மீது விரிப்புகள். நாற்காலிகளில் உறைபோட்ட குஷன்கள். கூடத்தின் சுவர்களில் பச்சைத் துணியில் ஜரிகை எழுத்துக்கள் பின்னப்பட்ட குரான் வாசகங்கள். சோபா என்ற சொகுசு ஆசனத்தை நான் அங்கேதான் முதலில் பார்த்தேன். அதன் மீதும் உறை போடப்பட்டிருந்தது. 'இதெல்லாம் எங்க அக்காவே தெச்சுப் போட்டதாக்கும்' என்று கபீர் சொன்னான். அவன் அம்மாவால் அதையெல்லாம் செய்திருக்க முடியாது என்று அவர்களைப் பார்த்ததும் புரிந்தது. கனமான சரீரம். அதைச் சுமந்து நடப்பதே கடினமான வேலை என்று அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியும். வெள்ளைச்சேலை கட்டி தலையில் முக்காடு போட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் ரபீ ரபீ என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.  ரபீக்கா 'அம்மி அம்மி' என்று பதில் கொடுப்பார். கபீர் அம்மா அடிக்கடி அல்லாஹ் என்று பெரும்மூச்சும் விடுவார்.


ரபீக்காவுக்கும் கபீருக்கும் நாலு வயது வித்தியாசம். இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம். இருவருக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு. கபீருக்குப் பெண் வேடம் போட்டால் ரபீக்கா போலவும் அக்காளுக்கு ஆண் வேடம் போட்டால் தம்பி போலவும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இருவர் முகத்திலும் பருக்கள் முளைத்திருந்தன. இருவரையும் ஒன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் முகத்தில் குறுகுறுத்துக் கொண்டிருந்த முதல் பருவை அனிச்சையாகக் கிள்ளிக் கொண்டிருந்த்து நினைவில் பிசுபிசுக்கிறது. ரபீக்காவின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாது. அவரை எப்படி அழைப்பது என்று குழம்பியபோது ரபீக்கா என்ற பெயரில் அக்கா இருப்பதால் அப்படியே அழைப்பது எளிதாக இருந்தது. கபீர் அவரை ரபீத்தீ என்று கூப்பிட்டான். ரபீ தீதி என்பதன் சுருக்கமாம். பிற்பாடு விளக்கம் சொன்னான்.


இவையெல்லாம் கபீர் வீட்டுக்குச் சென்று படித்த சில மாதங்களில் அவ்வப் போதாகத் தெரிந்து கொண்டவை. ஆனால் முதல் நாளிலேயே ரபீக்காவும் கபீரம்மாவும் அன்பானவர்கள் என்பது இயல்பாகவே உள்ளிறங்கியது. ரபீக்கா எதாச்சும் சாப்ட்றியா ?’ என்று கேட்டு விட்டு பதிலுக்கு நிற்காமல் பீங்கான் தட்டு நிறையக் குட்டிக் குட்டியான சமூசாக்களைக் கொண்டுவந்து வைத்தார். கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும் தின்னக் கிடைக்காத பதார்த்தம் ஆசையைத் தூண்டியது. சமூசாவெல்லாம் எங்கள் வீட்டுத் தின்பண்டம் இல்லையே. ஆபூர்வமாக்க் கையில் காசு திகையும்போது லக்கி கஃபேயிலோ, ஹோட்டல் தேவியிலோ தின்னக் கூடிய அந்நியப் பண்டம்.


சமூசா ரொம்ப்ப் பிடிச்சிருக்கா?’ என்று ரபீக்கா கேட்டபோதுதான் நான்கைந்தை விழுங்கி யிருந்தது உறைத்தது. லஜ்ஜையுடன் குனிந்து கொண்டேன். வெக்கப் படாத, சாப்டறதுக்குத் தானே வெச்சுது.சாப்டு. ஒங்க வீடா நெனச்சுக்கோ வெக்கம் ஓடிரும். நீயும் எனக்குக் கபீர் மாதிரித்தான். இன்னொரு தம்பிதான். என்னா?’ என்ற ரபீக்காவின் வார்த்தைகள் மிகுந்த ஆறுதலைக் கொடுத்தன.


அநேகமாக எல்லா சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் எங்கள் உடன் படிப்புத் தொடர்ந்தது. திங்கட்கிழமை காலை முதலே சனிக்கிழமை எப்ப வரும்?’ என்று காத்திருக்க ஆரம்பித்தேன். கபீர் இல்லாத நாட்களிலும் அந்த வீட்டுக்குச் சென்று புழங்கும் சுதந்திரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அவன் இருந்தால் கூடத்திலும் அவனுடைய அறையிலுமாக நடைபெறும் படிப்பை அவனில்லாதபோது தனது அறையில் தொடரும் சுவாதீனத்தை ரபீக்கா கொடுத்திருந்தார். அது அம்மாவுக்கும் மகளுக்குமான அறை. ஆனால் ரபீக்காவின் அம்மா அபூர்வமாகவே அந்த அறைக்குள் வந்து போவார். அதிகமும் சமையற்கட்டில் இருப்பார். இல்லையென்றால் முன் திண்ணையில் கம்பிச் சட்டங்களால் அடைத்து உருவாக்கப்பட்டிருந்த அறையில் முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு பச்சைப் பளிங்கு மணி மாலையை உருட்டிக் கொண்டிருப்பார். சில சமயம் குரோஷா ஊசியால் பின்னிக் கொண்டிருப்பார். அறைக்குள் வரும்போது  ‘படிக்றியா, படி படிஎன்றும் வெளியேறும்போது ‘ஜோராப் படிஎன்றும் சொல்வார். முதல் முறை அந்த பிரயோகம் கேட்க விசித்திரமாக இருந்த்து. படிப்பதில் என்ன ஜோர் இருக்கிறது என்று முழித்தபோது ரபீக்காதான் மறுமொழி சொன்னார். ‘அம்மி, அது நல்லாத்தான் படிக்கிது’.


எங்கள் கூட்டுப் படிப்பு ஜோராகத்தான் நடந்த்து. ஜென்மத்துக்கும் வராது என்று நினைத்திருந்த அல்ஜீப்ராக் கணக்குகளுக்கு என்னால் சரியான விடைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. சமன்பாடுகளை நெட்டுருப் போடாமல் நினைவில் பதித்துகொள்ள முடிந்த்து. கபீர் பதினைந்து வயதுக் கணித மேதையாகத்தான் இருந்தான். மேதைக்கு சந்தேகம் எழும் கட்டங்களில் ரபீக்கா நிவாரணியாக இருந்தார். பள்ளியிலும் கல்லூரிப் புகுமுக வகுப்பிலும்  அவருடைய விருப்பப் பாடம் கணக்கு என்பது அப்போதுதான் தெரிந்த்து. ‘பின்ன ஏன் நீங்க டிகிரி படிக்கல?என்று கேட்டேன். கைத்த சிரிப்புடன் என் தலையை வருடி விட்டுப் போனார்களே தவிர பதில் சொல்லவில்லை. காலாண்டுத் தேர்வில் கணக்கில் எனக்குச் சரியாகத் தொண்ணூறு மதிப்பெண்கள். கபீர் நூற்றுக்கு நூறு. அவனுடைய நூறு மதிப்பெண்களுக்குக் கிடைத்த பாராட்டை விட என்னுடைய தொண்ணூறைத்தான் ரபீக்கா அதிகம் சிலாகித்தார். பார்றா, நீ சொல்லிக் குடுத்து அது தொண்ணூறு மார்க் வாங்கீருக்குது. அது சொல்லிக் குடுத்தும் நீ தமிள்ல எளுவது மார்க்தான்என்று கபீரைச் சீண்டவும் செய்தார். ஆனால் கபீரையும் என்னையும் பொறுத்தவரை அவை நல்ல மதிப்பெண்கள்தாம். கஞ்சப் பிசினாறியான தமிழ் அய்யா அவனுக்கு எழுபதும் எனக்கு எண்பதும் மதிப்பெண்கள்அளித்திருந்தார். செய்யுளை அலகிட்டு வாய்பாடு கூறுகவை நீ ஒழுங்கா எழுதியிருந்தா என் மார்க்கும் உன் மார்க்கும் ஒண்ணா இருந்திருக்கும்டா கபீருஎன்று அவனைக் குற்றம் சாட்டினேன். ‘ஆமா, நீயும் பத்து அங்குல உயர பிரமிட்டோட சாய்தளமும் பத்து அங்குல உயரம்னு எளுதாம இருந்தா பத்து மார்க்காவது சேந்து கெட்ச்சிருக்கும்என்று குத்திக் காட்டினான். ரபீக்கா இருவரின் சண்டையையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘போதும் நிறுத்துங்கடா ரண்டுபேரும் நல்ல மார்க்குதானே வாங்கீருக்கீங்க. அதுக்கு என்னாத்துக்க்கு சண்டைஎன்று சமாதானம் செய்தார். சமாதானப் பேச்சில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் உள்ளுக்குள் ஆழமாகப் பதிந்த்து. ‘ அது ஒன்னய வுடவும் நீ அதவுடவும் ஜாஸ்தி மார்க்கு வாங்கீட்டும் நீங்க ரெண்டுபேரும் பொறாமப் படலே பாருங்க. அதான் பெருசு’. கேட்டுப் பல ஆண்டுகள் ஆன பின்னும் அந்த வாக்கியம் என் நாளங்களுக்குள் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ரபீக்கா.


பீர் வீட்டுக்குள் சங்கோஜமின்றிப் புழங்கலாம் என்று ஆன பின்பு ஒரு நாள் ரபீக்காவிடம் சமூசா தயாரிக்க்க் கற்றுக் கொடுக்கும்படிக் கேட்டேன். ரபீக்கா கைகளைக் கொட்டிச் சிரித்தார். ‘அம்மீ இது என்னா கேட்டுது பாருங்க. பொட்டச்சிங்க வேலயெல்லாம் கத்துக்கணுமாம்என்று அம்மாவிடம் சொன்னார். அவர் உர்தூவில் சொன்னது புரிய வில்லை. ‘லக்கி கஃபேலயும் தேவி ஓட்டல்லயும் பேக்கரிங்கள்லயும் ஆம்புளைங்கதானெ ரபீக்கா சமூசா பண்றாங்க. அதெல்லாம் பொட்டச்சிங்க வேலையாமா?என்றேன். யோசனைக்குப் பிறகு ரபீக்கா சிரித்த சிரிப்பில் சம்மதம் இருந்த்து. அவர் சொல்லிக் கொடுத்து ஒருமுறையும் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு ஒருமுறையும் செய்து பார்த்ததில் சமூசா தொழில்நுட்பம் கைவசமானது போலப் பட்டது.


ங்கள் வகுப்பில் பொங்கல் விழாவைக் கொண்டாடத் தீர்மானித்தோம். தலைமை ஆசிரியர் அருட்தந்தை அந்தோணி லாரன்சிடம் அனுமதியும் பெற்றோம். காசு சேர்த்தோம். அதை வைத்துக் கரும்பு மஞ்சள், பூக்கள் என்று பொங்கல் படையலுக்கான பொருட்களை வாங்கினோம். யார் யார் என்னென்ன உணவுப் பண்டங்களைக் கொண்டு வரமுடியும் என்று பட்டியல் போட்டோம். முக்கிய உணவான பொங்கலை எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் சீனிவாசா கபேயில் சமைத்துத் தரச் சொல்வது என்று முடிவு செய்தோம். அதன் உரிமையாளரின் மகனான சீனிவாசன் எங்கள் வகுப்பு மாணவன்.. முதலில் தயங்கினாலும் அப்புறம் ஒப்புக் கொண்டான். அவன் அப்பா தன் பங்காக காப்பியோ டீயோ தருவதாக ஏற்றுக் கொண்டார். ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒரு பொருள் அல்லது உணவுப் பதார்த்தம் என்று ஏற்பாடு. என் வீட்டிலிருந்து எதையும் சமைத்துக் கொண்டு வரும் வாய்ப்பு இல்லை. ஓர் ஆணும் இரு பெண்களுமான எங்கள் மூன்று பேருக்குப் பொங்கிப் போடவும் அப்பாவின் தள்ளாட்ட்த்துக்கு ஈடுகொடுக்கவுமே திணறிக் கொண்டிருக்கும் அம்மாவிடம் எதையும் கேட்க மனம் ஒப்பவில்லை. ஆனால் வெறும் கையனாகச் செல்லவும் கூச்சமாக இருந்த்து. அம்மாவே தீர்வையும் சொன்னார். பொடக்காலியில் நிற்கும் தென்னை மரத்திலிருந்து இரண்டு இளநீர்க் குலைகளை எடுத்துப் போகச் சொன்னார். கையுறை இல்லாமல் சபைக்குப் போகவில்லை என்று ஆசுவாசமாக இருந்த்து.


நான் எங்க வீட்லேர்ந்து சமூசா பண்ணி எடுத்துட்டு வர்றேன்என்று கபீர் சொன்னதும் வகுப்பே சிரித்த்து. விழா அமைப்பாளனாக இருந்த இருதய ஜெயபால் உதடுகளைப் பிதுக்கிப் புர்ரென்று ஒலி எழுப்பினான். வகுப்புத் தலைவன் இஸ்மாயில் சிரிப்பையும் சத்த்த்தையும் அடக்க முடியாமல் திண்டாடினான். எங்கள் பெஞ்சு மாதம்பட்டி சண்முக சுந்தரம் ‘கபீரு நாம் கொண்டாடப் போறது ரம்சானில்ல சாமீ. பொங்கலு. பொங்கலோ பொங்கல் ‘ என்று பொங்கினான். பிரச்சனையை சோமு சாரிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டு போனோம். அதுல என்னடா இருக்கு? பொங்கல் படையல்ல சமூசா வெக்க்க் கூடாதுன்னு சாஸ்தரம் சொல்லியிருக்கா? எல்லாம் வயத்துக்குள்ற போறதுதான, பொங்கலும் சமூசாவும் உள்ளபோனா ஒன்ணு, வெளிய வந்தா பீயி. கபீரு நீ கொண்டுட்டு வாஎன்றார். கபீரின் முகம் சிரித்தது.


வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டாவது மூன்றாவது பிரிவேளைகளில் விழா நடத்த மும்முரமானோம். எங்கள் வகுப்பு ஆசிரியர், எங்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பாடமே எடுக்காதவர்கள் என்று எல்லாரையும் அழைத்தோம். இடையில் கபீரும் நானும் அவன் வீட்டுக்கு ஓடி  சமூசா நிலவரத்தை ஆராய்ந்தோம்.  கூடத்தில் விரித்துப்போட்ட பாய் மீது வட்டமான குட்டிச் சப்பாத்திகள் கிடந்தன. கபீர் அம்மா ‘அல்லாஹ்என்று பெருமூச்சு விட்டபடியே பலகையில் மாவை உருட்டித் தேய்த்துக் கொண்டிருந்தார். ரபீக்கா அவற்றின் மீது மசாலாவை வைத்துச் சின்ன முக்கோணங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். பார்க்கக் கண் ஊறும் காட்சியாக இருந்தது. கணக்குப் போட்டுப் பார்த்தேன். ஆனால் எண்ணிக்கையில் பற்றாக்குறை. நாற்பத்தைந்து மாணவர்கள், பதினைந்து ஆசிரியர்களுக்கும் கொசுறாகக் கொஞ்சமும் தேவை. தோராயமாக எழுபது. ஆனால் அதைச் செய்து முடிக்க இரண்டு பேரால் முடியும் என்று தோன்றவில்லை. ‘கபீரு, நான் மசாலா போட்டுப் புடிச்சுத் தர்றேன். ரபீக்கா எண்ணெயில் போட்டு எடுக்கட்டும். நீ டப்பாலே அடுக்கிடுஎன்றேன். ரபீக்காவும் அம்மாவும் தடுத்தும் களத்தில் இறங்கினேன். மருதாணிச் சிவப்பு முன் நகர்ந்து நக வெளுப்புத் தெரியும் ரபீக்காவின் விரல்களில் நாட்டியத்தைப் பார்த்தேன்.


அன்றைக்கு ஆசிரியர்கள் சிலாகித்த உணவு  பொங்கல் அல்ல. சமூசாக்கள்தாம். சமூசாவுக்குக் கலாச்சார விலக்குக் கற்பித்த சக மாணவர்களும் அதன் ருசியைப் பாராட்டினார்கள். ருசி பார்க்கக் கூடக் கிடைக்காமல் போனது கபீருக்கும் என்க்கும்தான்.


அரையாண்டுத் தேர்விலும் எங்கள் பரஸ்பர கல்விக் கொடை பயனளித்த்து. கபீரும் நானும் ரொம்பவே முன்னேறியிருந்தோம். எனக்குக் கணக்கு இனிக்கத் தொடங்கியது. அவனுக்குச் செய்யுள்கள் புரிய ஆரம்பித்திருந்தன.  நாங்கள் எங்கள் ஒப்பந்தத்தை நீட்டித்தோம். பள்ளி இறுதி வகுப்பு முடிக்கும் வரை சேர்ந்து படிப்பது என்று உறுதி மேற்கொண்டோம். எனவே கபீர் வீட்டுக்கு வார இறுதியில் இரு நாட்கள் போவது என்ற அட்டவணைக் காலம்  மூன்று, நான்கு நாட்கள் என்று ஆனது.


கபீர் பள்ளியில் தேசிய மாணவர் படையிலும் இருந்தான். என் சி சி முகாமுக்காக பொள்ளாச்சி போயிருந்த நாள் மாலை அவன் வீட்டுக்குப் போனேன். வீடு களையிழந்து கிடந்த்து. கூடத்தில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரபீக்காவும் அம்மாவும் எதிரெதிராக உட்கார்ந்து முகத்தைத் தொங்கப் போட்டிருந்தார்கள். என்னை வாவென்று அழைக்கவும் இல்லை. ‘ரபீக்கா என்னாச்சு? என்ற விசாரிப்புக்குப் பதிலும் கிடைக்க வில்லை. இருவரும் நிமிர்ந்து பார்த்தார்களே தவிர பேசவில்லை. பத்ற்றமாக இருந்தது எனக்கு. வரக் கூடாத வேளையில் வந்துவிட்டேனா? திரும்பிப் போய் விடலாமா? என்று யோசித்தேன். எப்போதும் மலர்ச்சியுடன் பார்த்த இரண்டு ஜென்மங்கள் வாடி உட்கார்ந்திருக்கும்போது அப்படிப் போவது சரியா என்று கேள்வியும் எழுந்தது. யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசத் தயாராகாத இடத்தில் நிற்பது சரியும் மணல்மேல் நிற்பது போலிருந்தது.


‘சரிங்க ரபீக்கா, நான் போயிட்டு அப்புறமா வர்றேன்என்றதும் ரபீக்கா எழுந்தார். ‘அவ்ளோ தூரத்திலேர்ந்து வந்தது ஒடனே போய்டறதுக்கா, உக்காருஎன்று பின்கட்டுப் பக்கம் போனார். நான் வெகுநாட்களுக்குப் பிறகு தயக்கத்துடன் நகர்ந்து கபீரின் அறைக்குள் போய் உட்கார்ந்தேன். தோள் பையிலிருந்து புத்தகங்களை எடுக்கத் தோன்றவில்லை. கபீரின் மேஜை மீதிருந்த உலோகத் தாஜ்மகாலையே பார்த்துக் கொண்டிருந்தேன். முகத்தைத் துடைத்தபடி அறை வாசலுக்கு வந்த ரபீக்கா ‘இரு டீ கொண்டு வர்றேன் என்று நடந்தார். அம்மி எளுந்திரிங்க, மூஞ்சியைக் களுவிட்டு வாங்க. டீ போடறேன்என்ற குரலும் கபீர் அம்மாவின்அல்லாஹ்பெருமூச்சும் கேட்டன.


மேஜை மீது தேநீர்க் கோப்பைகளை வைத்து விட்டு கபீரின் கட்டிலில் உட்கார்ந்தார் ரபீக்கா. ‘கபீரு நாளான்னிக்குத்தான் வருமில்லஎன்றார். தலையை ஆட்டினேன். டீயக் குடிஎன்றார். எடுத்துக் குடித்தேன். இரண்டு மிடறு தொண்டைக்குள் இறங்கியதும் செருமிக் கொண்டு ‘என்னாச்சு ரபீக்கா?என்று மீண்டும் கேட்டேன். ‘ஒண்ணுமில்லஎன்றார்.அதுவே ஏதோ இருக்கிறது என்றது. ரபீக்கா வழக்கமான உடையில் இல்லை. வெளியே போகும்போது அணியும் ஜரிகை மின்னும் சல்வார் கமீசில் இருந்தார். என்னவென்று திரும்பக் கேட்கத் தயக்கமாக இருந்த்து. கேட்டு என்ன செய்ய? எதுவாக இருந்தாலும் பதினாலு வயசுப் பையனால் தீர்க்க முடியாது. நிமிர்ந்து பார்த்தபோது ரபீக்கா சிரிக்க முயன்றார். தயக்கத்தை விட்டு ‘ரபீக்கா என்னாச்சு?என்று கேட்டேன். கட்டிலை விட்டு எழுந்து பக்கத்தில் வந்து நின்று ‘ஒண்ணுமில்ல தெரிஞ்சாலும் ஒண்ணும் பண்ண முடியாதுஎன்று என் தலையை வருடி இடையோடு சேர்த்துக் கொண்டார். அவருடைய கமீசிலிருந்து அத்தரின் வாசனை நாசிக்குள் புகுந்தது. என் பார்வை பரவ்சமான வெளிச்சத்துக்குள் இருண்டது. ரபீக்காவின் கைகள் என் முடியை அளைந்து கொண்டிருந்தன. ‘ ரபீஎன்ற கபீர் அம்மாவின் அழைப்பு நெருங்கி வந்த்து. ரபீக்கா ‘கீ  அம்மி?என்று கைகளை விலக்கிக் கொண்டார். வெளியே போனார். அவரும் அம்மாவும் உர்துவில் கிசுகிசுப்பாகப் பேசிக் கொள்வதைக் கேட்டேன்.


ஏழு மாதங்களில் கபீரின் வீட்டிலிருந்து நான் சீக்கிரமாக்க் கிளம்பியது அன்றுதான்.


இரண்டு நாட்களுக்குப் பின் திங்கட்கிழமை முகாமிலிருந்து திரும்பிய கபீர் பள்ளிக்கு வந்தான். வகுப்புகள் தொடங்கியிருக்கவில்லை. என் இருப்பிடம் அருகில் வந்தவனின் முகம் சுண்ணாம்புக் கல்போல இருந்த்து. நான் எதுவும் பேசுவதற்கு முன்பே சொன்னான் ‘ நாம இனுமெ சேந்து படிக்க வேண்டாண்டா. நீ எங்க வீட்டுக்கு வர வேண்டா. அம்மி சொல்லச் சொன்னாங்க’. வழக்கமாக என் அருகில் உட்கார்கிறவன் வேறு பெஞ்சுக்குப் போய் உட்கார்ந்து கொண்டான். அந்த ஆண்டு முடியும்வரை  என் பெஞ்சுக்கு வரவில்லை. என்னுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.மூன்றாவது இடைப் பருவத் தேர்வில் நான் கணக்கில் தோல்வியடைந்தேன். கபீர் தமிழில் நல்ல மதிப்பெண்களை வாங்கியிருந்தான். என்னை விடவும் அதிக மதிப்பெண்கள். ஆனால் ஆண்டிறுதித் தேர்வில் அவனுடையதை நெருங்கும் மதிப்பெண்களை எப்படி நான் வாங்கினேன் என்று இன்றுவரை விளங்க வில்லை. மனசு ஒரு பிடிவாதக்காரக் குரங்கு என்பதனாலாக இருக்கலாம்.


பத்தாம் வகுப்பில் நாங்கள் விருப்பப் பாடமாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதையொட்டித்தான் வகுப்புகள் பிரிக்கப்படும். நான் பௌதிகத்தைத் தேர்ந்தெடுத்தேன். கணித மேதைகள் வேறு அதைத் தேர்ந்தெடுப்பார்கள்? கபீர் கணக்கை விரும்பினான். எங்கள் வகுப்புகள் வேறுவேறு ஆயின. நான் பத்தாவது சி. அவன் பத்தாவது ஏ. ஒரே வளாகத்திலிருந்தாலும் இரண்டு ஆண்டுகளில் அவனை ஒன்றோ இரண்டோ முறைதான் பார்க்க முடிந்த்து. பள்ளி இறுதி வகுப்பு முடிந்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்றோம். கபீர் என்னைவிட மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.கணக்கு வாத்தியார்களின் வள்ளண்மையையும் தமிழாசிரியர்களின் கருமித்தனத்தையும் சபித்தேன். தனியார் கல்லூரியில் புகுமுக வகுப்பில் இயற்கை அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். கல்லூரி வகுப்புகள் தொடங்கிச் சில நாட்களுக்குப் பிறகு அரசுக் கலைக் கல்லூரியிலிருந்து பாதியில் வந்து எங்கள் கல்லூரியில் சேர்ந்த வெங்கடேசன் சம்பிரதாயமான அறிமுகத்துக்குப் பிறகு கபீரைப் பற்றிச் சொன்னான். நீ செகண்ட் குரூப்பாச்சே, கபீர் மாத்ஸில் நெறய மார்க்கு வாங்கினவன். அவனை உனக்கு எப்படித் தெரியும்?என்று அவனிடம் சந்தேகம் எழுப்பினேன். ‘அவனும் செகண்ட் குரூப்தாண்டா, அப்பத்தான எம் பி பி எஸ் போக முடியும்என்றான். அந்தச் செய்தி எனக்கு வியப்பாகத்தான் இருந்த்து.


சில மாதங்களுக்குப் பிறகு கல்லூரியில் காலை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அலுவலகக் கடைநிலை ஊழியர் வந்து கல்லூரி முதல்வர் அழைப்பதாகத் தெரிவித்தார். முதல்வர் அறைக்குப் போனேன். ‘இவங்க உன்னப் பாக்க வந்திருக்காங்க. பாத்துப் பேசீட்டு சீக்கிரம் கிளாசுக்குப் போஎன்றார் முதல்வர். அவர்களைப் பார்த்தேன். கபீரும் ரபீக்காவும். முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்த்தும் கபீர் சொன்னான். அவன் முதலில் எங்கள் கல்லூரியில் தான் புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கிறான். அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்ததும் இதை விட்டிருக்கிறான். மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காக் இப்போது வந்திருக்கிறான். ரபீக்காவும் அதே பகுதியில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் படித்தவர். பட்ட வகுப்பில் மீண்டும் சேர்வதற்காக வந்திருக்கிறார்.  இருவரையும் பார்த்துப் புன்னகைத்தேன். கபீர் முகத்தில் என் முகத்தைவிட அதிகமான பருக்கள் இருந்தன. என் மீசையுடன் ஒப்பிட்டால் அவனுக்கு ரோமமே இல்லாத கரிமீசை முளைத்திருந்த்து. ரபீக்காவின் கண்களில் புன்னகை மினுங்கியது. சல்வார் கமீசில் சம்கிகள் மங்கியிருந்தன. முக்காடு நரைத்திருந்த்து. பார்த்து எத்தினி நாளாச்சுஎன்றார்.


இரண்டு வருடங்கள். இரண்டு வருடங்களில் என்ன நடந்திருக்கும்? கபீர் அம்மா எப்படி இருப்பார்கள்? ரபீக்கா இன்னும் தனியாகத்தான் இருக்கிறாரா? வேலை கிடைக்க வில்லையா? கல்யாணம் ஆகவில்லையா? இரண்டும் இருக்காது.. இல்லையென்றால் வெகுகாலம் கழித்துக் கல்லூரிக்கு வருவாரா? கபீர் என்னை ஏன் வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொன்னான்? அது ரபீக்காவுக்குத் தெரியுமா? இப்போதும் குவார்ட்டர்ஸில்தான் குடியிருக்கிறார்களா? கேள்விகள் செவிக்குள் இரைந்தன. ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்த்து. ‘எப்டி இருக்கீங்க ரபீக்கா?என்று மட்டுமே கேட்க முடிந்த்து. ‘தம்பி, ஆபிசில கூப்டறாங்க?என்று ஊழியர் வந்து கபீரை அழைத்துப் போனார்.


‘ ஆளே மாறிட்டடா, பெரிய ஆம்புள ஆயிட்ட. மீச தாடியெல்லாம் வந்திருச்சு. என்னாச்சு ஏன் வீட்டுக்கே வரல.கபீரு கூட சண்டையா?என்று கேட்டார். என்னிடம் பதில் இல்லை. ரபீக்காவை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டு நின்றேன். அவர் முதன்முதலாக ‘அடாஎன்று சொன்னது உள்ளுக்குள்ளே இனித்த்து. கொஞ்சம் பக்கத்தில் வந்தார். கைப் பையைத் திறந்து உள்ளே துழாவி எதையோ எடுத்து என் சட்டைப் பையில் போட்டார். கபீர் அருகில் வந்து ‘ரபீத்தி, போலாம் சர்டிபிகேட் வாங்கிட்டேன்’ என்றான். என்னைப் பார்த்து ‘வர்றோம்’  என்றான். நான் தலையசைத்தேன். இருவரும் படியிறங்கி மறைவதைப் பார்த்து நின்றேன். திரும்பி வகுப்பை நோக்கி நடந்தபோது சட்டைப் பையிலிருந்த வஸ்துவை எடுத்தேன். கறுப்பு நிறமான சின்னஞ் சிறு அட்டைப் பெட்டி. மூடியைத் திறக்காமலேயே மெல்லிய அத்தர் வாசனை கசிந்த்து. அதன் மேல் பொன்னிற எழுத்துக்களில் பெயர்  அச்சிடப் பட்டிருந்தது ‘காலா பூத்என.



தை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று அத்தர் கடைப் பணியாளர் கேட்டார். இசைவாகத் தலையாட்டினேன். ‘இத்தனையையும் எடுக்கிறீர்களா?அவர் கேட்டபோதுதான் மூன்று காலா பூத் குப்பிகளை ஒதுக்கி வைத்திருந்த்து தெரிந்தது. ‘ஆமாம்என்றேன். காலா பூத் , காலா பூத், காலா பூத் என்று வேகமாக உச்சரித்தபோது சொற்கள் மயங்கி பூத் காலா என்று பொருள் பட்டதை  உணர்ந்தேன். பூத காலம். இறந்த காலம். கடந்த காலம். சென்ற காலம். என்று சொற்களை உருட்டிக் கொண்டிருந்தேன். கடைக்காரர் வேறு ரக அத்தர் குப்பிகளையும் எடுத்துக் காட்டி வேண்டுமா என்றார். ‘ நை சாஹியேஎன்று நிராகரித்தேன். அவற்றுகெல்லாம் நினைவின் வாசனை இல்லை என்பதை இந்தியில் எப்படிச் சொல்வது ?

காலம் ( கனடா ) இதழில் வெளியானது. ஓவியம் : இரானிய ஓவியர் இமான் மலேகி. 









புதன், 26 செப்டம்பர், 2018

(மக்தலேனா) மரியாளின் சுவிசேஷம்





என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப் போகவில்லை.
                                                                              யோவான் 20:17.

ன் என்னை விலக்குகிறீர், ரபூனி?
ஏன் உம்மைத் தொடக் கூடாது என்கிறீர்?
உம் சீடர்களைப் பார்க்கிலும்
வார்த்தையைத் தொடரும் அர்த்தம்போல
உம்மைப் பின்தொடர்ந்தவள் நானல்லவா?

என் பிரியரே,
மரியாள் நான் ஒருத்திமட்டுமே அல்லள்.
உமது வெளிச்சத்தைப் பகிரங்கமாக்கிய நிழலான
ஒவ்வொரு பெண்ணும் மரியாள்தானே?
மகதலேன் எனது மட்டுமான ஊர் அல்ல
உமது பாத்த்தின் வியர்வையில் ஒட்டிய
ஒவ்வொரு ஊரும் மக்தலேன்தானே?

போதகரே,
உம் சீடரைப் பார்க்கிலும்
எங்களிடமே நீர் பிரியங் கொண்டீர்
உம் சீடரைப் பார்க்கிலும்
நாங்களே உம்மிடம் நேசம் கொண்டிருந்தோம்

எனினும்
என்னை ஏன் தள்ளிவைக்கிறீர், ரபூனி?
உம்மை ஏன் பற்றக் கூடாது என்கிறீர்?

திராட்சைரசம் மணக்கும்
உமது அதரங்களால்
நீர் முத்தமிட்டது என்னைத்தானே?
அப்போது
உம் சீடரின் கள்ள முத்தத்தில் நாறிய
புளித்த காடியை உணர்ந்தீரா?

சீமோன் மாளிகை விருந்தில்
உமது பாதங்களைக் கண்ணீரால் கழுவிக்
கூந்தலால் துடைத்து உதடுகளால் உலர்த்திப்
பரிமளத்தைலம் பூசினேனே,
அப்போது
உமது பாதங்களைத் துளைத்த ஆணியின்
காரிரும்பு மணத்தை முகர்ந்தீரா?

அன்பரே,
கற்களை ஓங்கிய கைகளின் மத்தியில்
நடுங்கி நின்றவள் நானே
பாவமற்ற கரம் எறியட்டும் என்று
என்னை மீட்டவர் நீர் - அப்போது
நிலத்தில் நீர் எழுதியது என் பெயரல்லவா?
அப்போது
இலக்கு நானல்ல; நீரே என்று
அறியாமலா இருந்தீர்?

உம் மீது விழுந்த கசையடியில்
துடிதுடித்தவளும்
உம் சிரசிலிருந்து பெருகிய
ரத்த வியர்வையை ஒற்றியவளும்
உமது கடைசிக் கண்ணீர்த் துளியைக்
கையிலேந்தியவழும் நானல்லவா?
அப்போது
உயிரின் ஆரம்பம் பெண்ணின் சரீரம் என்று
உச்சாடனம் செய்யவில்லையா நீர்?

பின்பு ஏன்
உயிர்த்தெழுந்ததும் மாறிப் போனீர்?

ரபூனி,
நான் பற்றிப் பிடித்துக் கொண்டால்
பிதாவிடம் ஏறமுடியாது எனில்
நான்  நாங்கள்   மரியாள்கள்
விலக்கப்பட்ட கனிகளா?

எனில் போதகரே,
மரியாள்கள் தொடாத நீர்
வயற்புலத்தின் விதையல்ல
பாறைமேல் சிதறிய தானியம்.

@



பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஓவியர் டிஷியனின் ‘ என்னைத் தொடாதே ( Noli me tangere ) ஓவியத்தால் தூண்டப்பட்ட கவிதை.

புதன், 29 ஆகஸ்ட், 2018

ஸிண்ட்ஸி மண்டேலாவின் கவிதை





ஸொவேட்டோவில் அறியப்படாத ஒரு நதி இருக்கிறது

அதில் ஓடுவது ரத்தம் என்று சிலர் சொல்கிறார்கள்
அதில்  ஓடுவது கண்ணீர் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்
ஒரு தலைவர் சொல்கிறார்
அதில் ஓடுவது நலமும் வளமுமே என்று.

ஸொவேட்டோவில் யாரும் பருகாத தண்ணீர்


ஸொவேட்டோவில்  அறியப்படாத ஒரு மரம் இருக்கிறது

அதில் காய்ப்பது துக்கம் என்று சிலர் சொல்கிறார்கள்
அதில் காய்ப்பது மரணம் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்
ஒரு தலைவர் சொல்கிறார்
அதில் காய்ப்பது நலமும் வளமுமே என்று.

ஸொவேட்டோவில் யாரும் சுவைக்காத கனி

ஸொவேட்டோவில்  ஒரு அறியப்படாத  நதி இருக்கிறது
ஸொவேட்டோவில்  ஒரு அறியப்படாத  மரம் இருக்கிறது

அந்த உடல்
அந்த ரத்தம்
இரண்டுமே அறியப்படாதவை.

*

ஸிண்ட்ஸி மண்டேலா ( Zindzi Mandela ) , வின்னி - நெல்சன் மண்டேலா தம்பதியரின் இளைய மகள். 


என் பெயர் அருண் கோலாட்கர்





என் பெயர் அருண் கோலாட்கர்

என் பெயர் அருண் கோலாட்கர்
என்னிடம்
ஒரு சின்னத் தீப்பெட்டி இருந்தது

அதை நான் தொலைத்தேன்
பிறகு கண்டுபிடித்தேன்
அதை எனது
வலதுகைப் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்

அது இன்னும் இருக்கிறது அங்கேயே.

ச ரி த ம்



                                                                           சரிதம்



உதிர்ந்து கிடக்கும் சருகுகளைப்
புரட்டிப் புரட்டிக்
காற்று என்ன வாசிக்கிறது?


மரத்தின் நாட்களை.

வெள்ளப் பெருக்கில்...



    தகழி சிவசங்கரப் பிள்ளையின்  புகழ்பெற்ற கதைகளில் ஒன்று வெள்ளப் பொக்கத்தில் 
( வெள்ளப் பெருக்கில் ) . முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை. அந்தக் காலப் பகுதியில் குட்டநாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் அனுபவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. ஓர் ஆர்வத்தால் உந்தப்பட்டு கதையைத் தமிழாக்கம் செய்ய முயன்றேன். மொழிபெயர்க்கும் நோக்கத்துடன் கதையை மறுமுறை வாசித்தபோது ஆர்வம் குன்றிப் போனது. மிகப் பழைமையான மொழி. எதார்த்தமான கதைச் சூழலுக்குப் பொருந்தாத கற்பனாவாத நடை. மனிதாபிமான அக்கறை வெளிப்பட்டே ஆக வேண்டும் என்ற ஆசிரியரின் விருப்பம் காரணமாக உருவாகியிருக்கும் சன்மார்க்க போதனை - இவையெல்லாம் ஆர்வத்தைக் குறைத்து மொழி பெயர்ப்பைக் கைவிடச் செய்தன. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தகழியின் கதையாச்சே என்ற வாஞ்சையில் முழுவதுமாகத் தமிழாக்கி முடித்தேன். எனினும் மொழியாக்கம் நிறைவு தரவில்லை. அப்படியே கிடப்பில் போட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராம்ராஜ் ( தமிழ்த்துறை, பூசாகோ கலைக் கல்லூரி, கோவை ) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தகழியின் இந்தக் கதை பற்றிக் கேட்டார். கேரளத்தில் அண்மையில் நிகழ்ந்த பெருவெள்ளத்தைப் பின்புலமாக வைத்துத், தான் எழுதிக் கொண்டிருக்கும்  நாடகப் பிரதிக்காகக் கதையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். ஞாபகத்திலிருந்த கதையைத் தொட்டுக் காட்டுவதுபோலச் சொல்லிவிட்டுப்  பழைய குறிப்பேடுகளைத் தேடினேன். 94 ஆம் ஆண்டு வாக்கில் மொழியாக்கம் செய்து வைத்திருந்த கதையைக் கண்டுபிடித்து கணிணிப் பிரதியாக மாற்றினேன். அந்த வேளையில் முன்னர் நினைத்ததுபோலக் கதை சோடை போன பிரதியல்ல என்று தோன்றியது. சமீபத்திய வெள்ளக் கொடுமைக் காட்சிகளை விடாமல் பார்த்தது காரணமாக இருக்கலாம் - கதை இன்றைய சூழலுக்கும் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தெரிகிறது.

’வெள்ளப் பெருக்கில்...’ கதையை மறு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளத் தூண்டிய நண்பர் ராம்ராஜுக்கு மிக்க நன்றி.




                                                                                   வெள்ளப் பெருக்கில்...


ருக்குள் உயரமான இடமே  கோவில்தான். அங்கே கடவுளும் கழுத்தளவு வெள்ளத்தில் நிற்கிறார். வெள்ளம். எங்கும் வெள்ளம். ஊர்க்காரர்கள் எல்லாரும் கரையைத் தேடிப் போனார்கள். வள்ளம் இருக்கும் வீட்டில் காவலாள் நிறுத்தப்பட்டான். கோவிலின் மூன்று அறைகள் கொண்ட மாளிகைத் தளத்தில்  67 குழந்தைகள் இருந்தார்கள். 356 ஆட்களும் நாய், பூனை, ஆடு, கோழி முதலான வளர்ப்பு மிருகங்களும் ஒன்றாகக் கழிந்தார்கள்.ஒரு சச்சரவு இல்லை.

சேன்னப்பறயன் ஒரு இரவும் ஒரு பகலும் வெள்ளத்திலேயே நின்றான். அவனுடைய தம்புரான் மூன்னாயி உயிரைப் பிடித்துக் கொண்டு கரையேறிவிட்டார். குடிசைக்குள் முதலில் வெள்ளம் வரத் தொடங்கியதுமே ஓலையையும் கம்புகளையும் வைத்துப் பரண்கட்டியிருந்தார்கள். வெள்ளம் சட்டென்று வடிந்து விடும் என்று நினைத்து இரண்டு நாட்களை அதன்மேல் உட்கார்ந்து ஓட்டினார்கள். போதாக் குறைக்கு கொல்லை வாழை மரத்தில் நான்கைந்து குலைகள் இருக்கின்றன.  வைக்கோல் போரும் கிடக்கிறது.  அங்கிருந்து வெளியேறினால்  ஆம்பிள்ளைகள் அவற்றையெல்லாம் அடித்துக்  கொண்டு போய்விடலாம். குடிசையை வெள்ளம் மூழ்கடிக்க முப்பது நாழிகை கூட ஆகாது என்றும் தனக்கும் தன்னுடைய  குடும்பத்துக்கும் முடிவும் வந்து விட்டது என்றும் அவன் முடிவு கட்டியிருந்தான். பயங்கர மழை விட்டு முன்று நாட்கள் ஆயின. சேன்னன் கூரையின் ஓலையைப் பிரித்து எப்படியோ வெளியேறி நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தான். வடக்காக ஒரு கெட்டு வள்ளம் போகிறது. சேன்னப்பறயன்  உரக்கக் கூவி அவர்களை அழைத்தான். அதிர்ஷ்டவசமாக வள்ளக்காரர்களுக்கு காரியம் புரிந்த்து. வள்ளத்தை குடிசையை நோக்கித் திருப்பினார்கள். குழந்தைகளையும் பெண்டாட்டியையும் நாயையும் பூனையையும் குடிசையின் கூரை விட்டங்கள் வழியாக வெளியில் இழுத்துப் போட்டான். அதற்குள் வள்ளமும் அருகில் வந்த்து. பிள்ளைகள் வள்ளத்தில் ஏறிக் கொண்டிருந்தார்கள். ‘சேன்னச்சோ போறிங்களா?என்று மேற்கேயிருந்து யாரோ கேட்டார்கள். இந்தப் பக்கம் வா’. அது
மடியத்தறை குஞ்ஞேப்பன். அவனும் கூரைமேல் நின்றுதான் கூப்பிடுகிறான். அவசரமாகப் பெண்டாட்டியை வள்ளத்தில் ஏற்றி விட்டான். அந்த இடைவெளியில் பூனையும் வள்ளத்தில் தாவி ஏறியது. நாயின் நிலைமையை யாரும் யோசிக்கக வில்லை. அது குடிசையின் மேற்குச் சரிவில் அங்குமிங்குமாக மோப்பம் பிடித்துக் கொண்டு நடந்தது.



இப்போது பரணுக்கு மேலே முழங்கால்வரையும் வெள்ளம்.
மேற்கூரையின் இரண்டு வரிசை ஓலைகளும் வெள்ளத்துக்கு அடியில் இருந்தன. சேன்னன் உள்ளேயிருந்து  அழைத்தான். அழைப்பை யார் கேட்க? பக்கத்தில் யார் இருக்கிறார்கள்? கர்ப்பிணியான ஒரு பறைச்சி, நாலு குழந்தைகள், ஒரு பூனை, ஒரு நாய் இவ்வளவு ஜீவன்கள் அவனை நம்பி இருக்கிறார்கள்.

வள்ளம் நகர்ந்து தொலைவுக்குப் போனது..

நாய் கூரையின் உச்சிக்கு வந்தது. சேன்னனின் வள்ளம் தொலைதூரம் கடந்திருந்தது. அது பறந்து போகிறது. அந்த ஜந்து மரணவேதனையுடன் ஊளையிடத் தொடங்கியது. ஆதரவற்ற மனிதனின் குரலுடன் ஒப்பிடக் கூடிய ஒலித் தொடர்களை எழுப்பியது. யார் கேட்க? குடிசையின் நான்கு சுவர்கள் மீதும் ஓடியது. சில இடங்களை முகர்ந்த்து. ஊளையிட்டது..

குடிசைக் கூரைமேல் நிம்மதியாக உட்கார்ந்திருந்த ஒரு தவளை எதிர்பாராத இந்த ஆர்ப்பரிப்பைக் கேட்டு நாயின் முன்பாகவே ;தொபீர் என்று வெள்ளத்தில் குதித்தது. நாய் பயந்து திடுக்கிட்டுப் பின்னோக்கித் துள்ளி நீரில் ஏற்பட்ட அதிர்வைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த்து.

அந்த விலங்கு அங்கும் இங்குமாகப் போய் மோப்பம் பிடித்தது உணவைத் தேடியதாலாக இருக்கலாம். ஒரு தவளை அதன் நாசித்துவாரங்களுக்குள் மூத்திரம் பெய்துவிட்டு தண்ணீரில்  குதித்து ஓடியது. நாய் அசௌகரியமாகச் செருமியது தும்மியது தலையை உலுக்கிச் சீறியது முன்னங் கால்களில் ஒன்றால் முகத்தைத் துடைத்தது.

பயங்கரமான பேய் மழை மீண்டும் தொடங்கியது. ஒண்டி ஒடுங்கி உட்கார்ந்து அந்த நாய் அதைப் பொறுத்துக் கொண்ட்து.

அதன் எஜமானன் அம்பல்புழைக்குப் போய்ச் சேர்ந்திருந்தான்.

இரவு ஆனது. ஒரு மூர்க்கமான முதலை நீரில் பாதி மூழ்கிக் கிடக்கும் அந்தக் குடிசையை உரசிக் கொண்டு மெல்லமெல்ல நீந்திப் போனது. பயந்துபோய் வாலைத் தாழ்த்தியபடி நாய் குரைத்தது. எதுவும் தெரியாத பாவனையில் முதலை நீந்திப் போனது.

முகட்டில் உட்காந்திருந்த அந்த மிருகம், கார்மேகங்கள் திரண்ட, அந்தகாரத்தின் பீதிபடர்ந்த ஆகாயத்தைப் பார்த்து ஊளையிட்டது. நாயின் தீனக் குரல் வெகுதூரத்திலிருந்த இடங்களையும் எட்டியது. இரக்கமுள்ளவனான வாயு பகவான் அதைச் சுமந்து கொண்டு பாய்ந்தான். வீட்டைக் காவல் காக்க நின்றிருந்த சில இதயங்கள் ‘அய்யோ குடிசைமேல் உட்கார்ந்து நாய் ஊளையிடுகிறது என்று சொல்லியிருக்கலாம். அதன் எஜமான் இப்போது கடற்கரையில் இரவு உணவு அருந்திக் கொண்டிருக்கலாம். சாப்பிட்டு முடிக்கும்போது வழக்கம்போல இன்றும் அதற்கான ஒரு உருண்டைச் சோற்றை உருட்டிக் கொண்டிருக்கலாம்.


சிறிது நேரம் அதி உச்சமாக நாய் ஊளையிட்டது. பிறகு குரல் அடங்கி மௌனமானது. வடக்கே எங்கோ ஒரு வீட்டிலிருந்து காவலாளி ராமாயணம் வாசிக்கிறான்.அதைக் கவனிப்பதுபோல நாய் அமைதியாக வடக்குப் பார்த்து நின்றது. பின்னர் அந்த ஜீவன் தொண்டை கிழிவதுபோல மீண்டும் நெடுநேரம் ஊளையிட்டது.

அந்த இரவின் அமைதியில் செவிக்கினிய ராமாயண வாசிப்பு மீண்டும் எங்குப் பரவியது. நம்முடைய ஞமலியும் அந்த மனிதக் குரலுக்குச் செவிசாய்த்துச் சற்று நீண்ட நேரம் அசையாமலே நின்றது.

ஒரு குளிர் காற்றில் அந்த இனிய அமைதிப் பாடல் கரைந்தது.
காற்றின் ஓசையையும் அலைகளின் களக் களக் சத்தத்தையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

சேன்னனின் நாய் கூரை முகட்டில் படுத்திருந்தது. அது ஆழமாக மூச்சு விட்டது. இடையிடையே நிராசையுடன் எதையோ முணுமுணுத்த்து. அங்கே ஒரு மீன் துள்ளியது நாய் எழுந்து குரைத்தது. இன்னோரிட்த்தில் தவளை குதித்தது. நாய் அசௌகரியமாக முனகியது..


விடிந்த்து. அடங்கிய குரலில் அது ஊளையிட ஆரம்பித்த்து. இதயம் பிளந்த்துபோன்ற ஒரு ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தது. தவளைகள் அதை உற்றுப் பார்த்தன. நீரில் குதித்து தாவித் தாவி அவை மூழ்குவதை நாய் அசையாமல் பார்த்து நின்றது.


நீர்ப்பரப்புக்கு மேலாகத் தெரிந்த ஓலைக் கூரைகளை அது ஆசையுடன் பார்த்த்து. எல்லாம் வெறிச்சோடியிருந்தன. ஒரு இடத்திலும் நெருப்புப் புகை இல்லை. உடம்பைக் கடித்து சுகமடையும் ஈக்களைக் கடித்துக் கொரித்தது நாய். பின்னங் கால்களால் தாடையை சொறிந்து ஈக்களை விரட்டியது.

சூரியன் சிறிது நேரம் பிரகாசித்த்து. அந்த இளம் வெயிலில் கிடந்து அது மயங்கியது. மந்தமாக அசையும் வாழை இலையின் நிழல் கூரைமேல் நகர்ந்து கொண்டிருந்தது. அது எழுந்து நின்று குரைத்த்து.

கருமேகம் படர்ந்து சூரியன் மறைந்தது. ஊர் இருண்டது. காற்று அலைகளை உலுக்கிவிட்ட்து. நீர்ப்பரப்பின் மீது ஜந்துக்களின் சடலங்கள் மிதந்து போகின்றன. அலைகளில் அசைந்து தாவி மிதக்கின்றன. அவற்றையெல்லாம் அது ஆசையுடன் பார்த்தது. முனகியது.


அதோ தொலைவில் ஒரு சிறு வள்ளம் வேகமாகப் போகிறது. அது எழுந்து நின்று வாலை ஆட்டியது. அந்தப் படகின் திசையைக் கவனித்தது. அது தென்னங் கன்றுகளிடையில் மறைந்தது.

மழை பெய்யத் தொடங்கியது, பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை ஊன்றி உட்கார்ந்திருந்த நாய் நாலு பக்கமும் பார்த்த்து. அதன் கண்களில் யாரையும் அழவைக்கும் ஆதரவின்மை பிரதிபலித்த்து.


மழை விட்ட்து. வடக்கு வீட்டிலிருந்து ஒரு வள்ளம் வந்து தென்னை மரத்தடியை நெருங்கியது. நமது நாய் வாலை ஆட்டி வாய் விட்டு முனகியது. வள்ளக்காரன் தென்னை மரத்தில் ஏறி இளநீர்க் குலையைப் பறித்துக் கொண்டு இறங்கினான். வள்ளத்தில் உட்கார்ந்தே அதை ஓட்டை போட்டுக் குடித்து விட்டு துடுப்பால் துழாவிக் கொண்டு போனான்.


தூரத்து மரக் கிளையிலிருந்து ஒரு காகம் பறந்து வந்து மிதந்து செல்லும் எருமையின் அழுகிய உடல் மீது உட்கார்ந்தது. சேன்னனின் நாய் ஆசையுடன் குரைத்தபோது காகம் யாருக்கும் அஞ்சாமல் மாமிசத்தைக் கொத்தி இழுத்துத் தின்றது. திருப்தியானதும் அதுவும் பறந்து போனது.


ஒரு பச்சைக் கிளி குடிசையை ஒட்டி நிற்கும் வாழையின் இலைமேல் வந்து அமர்ந்து கீச்சிட்ட்து. நாய் பொறுமையிழந்து குரைத்தது. அந்தப் பறவையும் பறந்து போனது.

மலை வெள்ளத்தில் அகப்பட்டு மிதந்து வந்த எறும்புக் கூட்டமொன்று  குடிசையை ஒட்டி ஒதுங்கியது. உணவுப் பொருள் என்று நினைத்த நமது நாய் அதை முத்தமிட்ட்து. கமறித் தும்மி அதன் மென்மையான முகவாய் கன்றிச் சிவப்பானது.


நடுப் பகலுக்குப் பிறகு சிறு வள்ளத்தில் இரண்டு பேர் அந்த வழியாக வந்தார்கள், நாய் ந்ன்றியுடன் குரைத்தது. வாலாட்டியது. மனித மொழிக்கு நெருக்கமான மொழியில் என்னவெல்லாமோ சொன்னது. நீரில் இறங்கி வள்ளத்துக்குள் குதிக்கத் தயாராக நின்றது. ‘தோ, ஒரு நாய் நிக்கிதுஎன்றான் ஒருவன். அவனுடைய இரக்கத்தைப் புரிந்து கொண்டு,  நன்றிக்கு அடையாளமாக அது முனகியது. அது இங்கியே கிடக்கட்டும்என்றான் இன்னொருவன். எதையோ மென்று விழுங்குவதுபோல அது வாயைப் பிளந்து ஒலியெழுப்பியது. பிராத்தனை செய்தது. இரண்டு முறை குதிக்க முற்பட்டது.


வள்ளம் தூரமாகப் போனது. நாய் மீண்டும் ஊளையிட்ட்து. வள்ளக்கார்ர்களின் ஒருவன் திரும்பிப் பார்த்தான்.

அய்யோ

அது வள்ளக்காரனின் கூப்பாடு அல்ல. அந்த நாயின் குரல்தான்.

‘அய்யோ

சோர்வும் இதயத்தைத் தொடுவதுவுமான  தீனப் புலம்பலும் காற்றில் கரைந்தன. மீண்டும் அலைகளின் ஒடுங்காத ஓசை. அப்புறம் யாரும் அதைத் திரும்பிப் பார்க்கவில்லை. வள்ளம் மறையும்வரை நாய் நிலையாக நின்றது. உலகத்திடமிருந்து கடசியாக விடைபெற்றுக் கொள்வதுபோல முணுமுணுத்துக் கொண்டு கூரைமீது ஏறி நின்றது. இனி ஒருபோதும் மனிதர்களை நேசிப்பதில்லை என்று அது சொல்லுவதாக இருக்கலாம்.

நிறையத் தண்ணீரை நக்கிக் குடித்தது அந்த அப்பாவி விலங்கு. மேலே பறந்து செல்லும் பறவைகளைப் பார்த்தது. அலைகளுக்கு இடையில் நெளிந்து ஆடி ஒரு நீர்ப் பாம்பு நெருங்கியது. நாய் தாவி கூரை முகட்டுக்குப் போய் நின்றது. சேன்னனும் குடும்பமும் வெளியேறிய ஓட்டை வழியாக அந்த நீர்ப்பாம்பு குடிசைக்குள்ளே புகுந்தது.நாய் அந்த ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தது. கோபத்துடன் குரைக்கத் தொடங்கியது. பிறகு முணுமுணுத்த்து. உயிர்ப் பயமும் பசியும் அந்த முணுமுணுப்பில் இருந்தன. எந்த மொழிக்காரனுக்கும் எந்தச் செவ்வாய்க் கிரகவாசிக்கும் அதன் அர்த்தம்  புரியும். அந்த அளவுக்கு எங்கும் பரவிய மொழி அது.

இரவாயிற்று.பயங்கரமான சூறைக் காற்றும் மழையும் ஆரம்பித்தன.மேற்கூரை அலையின் மோதலில் ஆடிக் குலுங்கின. நாய் இரண்டு முறை வழுக்கி விழுந்தது. நீருக்கு மேலே ஒரு நீண்ட தலை உயர்ந்தது. அது ஒரு முதலை. நாய் பிராண வேதனையுடன் குரைக்கத் தொடங்கியது. அருகில் கோழிக் கூட்டம் கதறுவது கேட்டது.


நாய் எங்கேருந்து குரைக்குது? இங்கேருந்து ஆளுங்க போகலியா?வைக்கோலும் தேங்காயும் வாழைக்குலையும் நிரம்பிய வள்ளம் வாழை மரத்தடியை நெருங்கியது.

நாய் வள்ளக்காரனை நோக்கித் திரும்பி நின்று குரைத்தது. கோபத்துடன் வாலைத் நிமிர்த்திக் கொண்டு வெள்ளத்தின் அருகில் நின்று குரைத்தது. வள்ளக்காரர்களில் ஒருவன் வாழை மடலில் ஏறினான்.


கூவே, நாய் சாடும்போல இருக்கே


நாய் முன்நோக்கித் தாவியது. வாழை மடலில் ஏறியவன் உருண்டு வெள்ளத்தில் விழுந்தான். மற்றவன் அவைப் பிடித்து வள்ளத்தில் ஏற்றினான். இந்தச் சமயத்துக்குள் நாய் நீந்தி கூரைமேல் ஏறி நின்று உடலை உதறிக் கொண்டு கோபமாகக் குரைத்தது.

திருடர்கள் எல்லாக் குலைகளையும் வெட்டினார்கள். ‘உனக்கு வெச்சிருக்கோம்என்று குரைத்துக் கொண்டிருந்த நாயிடம் சொன்னார்கள். பிறகு வைக்கோல் முழுவதையும் வள்ளத்தில் ஏற்றினார்கள். கடைசியாக ஒருவன் கூரைமேல் ஏறினான். நாய் அவன் காலைக் கடித்தது. வாய்கொள்ளாத சதை அதற்குக் கிடைத்த்து. அவன் அய்யோ என்று அலறிக்கொண்டு வள்ளத்தில் குதித்து ஏறினான். வள்ளத்தில் நின்றிருந்தவன் ஒரு துரட்டியால் நாயின் விலாவில் ஓங்கி அடித்தான். ங்ஙைங்ய் ங்ஙைங்ய் ங்ஙைங்ய். கத்தல் படிப்படியாக்க் குறைந்து வலுவில்லாத முனகலாக ஓய்ந்தது.நாய்க் கடிபட்டவன் வள்ளத்தில் கிடந்து அழுதான். சும்மாருடா யாராவது... என்று அடுத்தவன் அமைதிப்படுத்தினான். அவர்கள் போனார்கள்.

நீண்ட நேரத்துகுப் பிறகு வள்ளம் போன வழியைப் பார்த்து நாய் உக்கிரமாக்க் குரைத்த்து.

நடுநிசி நெருங்கியது. செத்துப் போன பெரிய பசுவொன்று மிதந்து வந்தது.குடிசையருகில் ஒதுங்கியது.நாய் மேலேயிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த்து. கீழே இறங்கவில்லை. அந்த இறந்த உடல் மெல்லமெல்ல விலகுகிறது.நாய் முணு முணுத்தது.ஓலையைப் பிராண்டிக் கிழித்தது. வாலாட்டியது. அகப்பட்டு விடாமல் விலகுவதுபோல சடலம் நகரத் தொடங்கியதும் நாய் மெதுவாகக் கீழேயிறங்கி வந்து அதைக் கடித்துத் தன் பக்கமாக இழுத்துத் திருப்தியுடன் தின்னத் தொடங்கியது. கொடும் பசிக்கு வேண்டுமளவுக்கு உணவு.

படார் ஒரு அடி. நாயைக் காணவில்லை. ஒருமுறை எழும்பித் தாழ்ந்த பசு தொலைவில் மிதந்து போனது.

அப்போது முதல் புயல் காற்றின் அலறலையும் தவளைகளின்
கூச்சலையும் அலையின் ஓசையையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. அங்கே எல்லாம் நிசப்தம். இரக்கமுள்ள வீட்டுக் காவலாளிக்கு நாயின் ஆதவற்ற நிலையை வெளிப்படுத்திய விசும்பல் பிறகு கேட்கவில்லை. அந்த நீர்ப் பரப்பில் அங்கங்கே அழுகிய சடலங்கள் மிதந்து சென்றன. சிலவற்றின்மேல் காகம் உட்கார்ந்து கொத்தித் தின்றன. அதன் நிம்மதியான அமைதியை எந்த ஓசையும் குலைக்கவில்லை. திருடர்களுக்கும் அவர்களின் தொழிலுக்கும் எந்த்த் தொந்தரவும் நேரவில்லை. எல்லாம் சூனியம்.

சற்று நேரம் கழிந்தபோது அந்தக் குடிசை நிலத்தில் விழுந்தது. நீருக்குள் மூழ்கியது. முடிவில்லாத நீர்மட்டத்தை விட  உயரமாக எதுவும் தென்படவில்லை. எஜமானனின் வீட்டை அந்த விசுவாசமான விலங்கு சாகும்வரை காப்பாற்றியது. அதற்காகவே முதலை அதைக் கவ்வும்வரை  குடிசையும் நீர் மட்டதுக்கு மேலாக உயர்ந்து நின்றது. அதுவும் விழுந்தது. முழுவதுமாக நீரில் மூழ்கியது. 

நீரிறக்கம் தொடங்கியது, சேன்னன் தன்னுடைய நாயைத் தேடி நீந்தி வருகிறான். ஒரு தென்னை மரத்தின் அடியில் நாயின் இறந்த உடல் ஒதுங்கிக் கிடக்கிறது. அலைகள் அதை மெல்ல அசைக்கின்றன. கட்டை விரலால் அதைத் திருப்பியும் புரட்டியும் பார்த்தான். அவனுடைய நாய்தானா என்ற சந்தேகமும் தோன்றியது. ஒரு காது கிழிந்திருக்கிறது. தோல் அழுகிப் போயிருந்ததால் என்ன நிறம் என்றும் தெரியவில்லை.

@