தொன்மத்தின் நவீனம்
நசிகேதன்
நசிகேதனிடம்
எமன் உரைத்தான்:
இங்கு உள்ளது எதுவோ
அதுவே அங்கும்
அங்கு உள்ளது எதுவோ
அதுவே இங்கும்.
இங்கு
பலவற்றையும் காண்பவன்
மரணத்திலிருந்து மரணத்துக்குச் செல்கிறான்1
•
பிறவிகளின்
தொட்டிலில்
நசிகேதன் கண்விழிக்கிறான்
ஒரு தாலாட்டில் கரையச்
செவிகூர்ந்து கிடக்கிறான்
சுக்கில
சுரோணித சங்கமமாகத்2
திரவ வடிவில்
ஒன்றாம் மாதம் கடந்தது
இலவம்
பஞ்சு முகையனைய
பிண்டமாக
இரண்டாம் மாதம் கடந்தது.
சிரசுக்கும்
கை, கால்களுக்கும்
ஐந்து முளைகள் கிளைத்தன
சிரசின்
முனையில்
கழுத்து
காதுகள்
கண்கள்
மூக்கு
வாய் அரும்பின
கைகளின்
முனையில்
தோள்
புயம்
மணிக்கட்டு
விரல்கள் உருப்பெற்றன
கால்களின் முனையில்
தொடைகள்
குறி
மூட்டுகள்
கணுக்கால்கள்
விரல்கள்
உருப்பெற்றன
மூன்றாம் மாதம் கடந்தது.
அங்கங்கள்
மேலும் துலங்க
நான்காம் மாதம் கடந்தது.
இதயம்
துடிக்க
சிந்தை தெளிய
தசை திரளக்
குருதி வலுவூற
ஐந்தாம் மாதம் கடந்தது.
சூக்கும
நரம்புகள்
எலும்புகள்
நக சிகை ரோமங்கள்
எல்லாம் உருப்பெற
ஆறாம்
மாதம் கடந்தது
கால்கள் ஒடுங்கி
கைகள் ஒடுங்கி
கைகள்கொண்டு காதுகள் பொத்தி
நரகக் குறுகலில்
ஏழாம் மாதம் கடந்தது.
ஓசைகளின்
வருகைக்கு
அஞ்சி நடுங்கி
எட்டாம் மாதம் கடந்தது.
எண்ணிலா
மாந்தரின்
எரியும் நினைவுகளில்
ஏகாங்கியாய் எரிந்து
எதையும் தாளாமல்
சிரசின் மேல் கைகூப்பி
ஒன்பதாம் மாதம் கடந்தது.
பூமியைத்
தொட்ட நொடியில்
எல்லாமும்
மறதியில் ஆழ்ந்தன
பிறவிகளின்
தொட்டிலில்
நசிகேதன் கண்விழிக்கிறான்
ஒரு தாலாட்டில் கரையச்
செவிகூர்ந்து கிடக்கிறான்
•
இவ்விழியை
இன்று
திறப்பது எதற்கோ
இம்முலை உறிஞ்சிப்
பருகுவது எதற்கோ
இம் முடியைக் கோதி
மினுக்குவது எதற்கோ
இவ்வழகு மாலையைச்
சூடுவது எதற்கோ?
இம்
மணித் தூளியில்
ஆடுவது எதற்கோ
இத் திலகம் நுதலில்
சார்த்துவது எதற்கோ
இப் பட்டை இடையில்
உடுப்பது எதற்கோ
இக் காற்சிலம்பை
குலுக்குவது எதற்கோ
இச்சிரிப்பு இதழில்
உறைவது எதற்கோ
இப் பாட்டைக் கேட்டு நீ
உளைவது எதற்கோ?
•
படைப்புக்கு
முன்னர் இங்கே எதுவும் இல்லை பசித்த மரணத்தால் எல்லாம் சூழப் பட்டிருந்தன3
•
மரண
தரிசனத்தில்
பிரக்ஞை மரத்து
உதிரம் குளிர்ந்து உறைந்து
அசைவற்றிருக்கும்
எலியின் கண்களில் உயிரின் நடுக்கம்
மறைவிடம் தேடித் தாவும்
முயலின் பிராணப் பாய்ச்சல்
அசையாத நீர்த் தொலைவுகளில்
திசையின்றி நீந்தும் தலைப்பிரட்டைகள்
பிறவிகளின்
அழுக்குப் பொதிகள் சுமந்து
அனாதியான காலத்தில் துணுக்குற்று
அந்தமில்லா
இடத்தில் திகைப்புற்று
வழி மறக்கும் கழுதைகள்.
வலியவை
வலுவில்லாதவற்றை உண்கின்றன
உயிர்
உயிரைத் தின்று வாழ்கிறது.4
•
எறும்பின்
கண்களில்
காலம்
இருண்ட நினைவாய் உறைகிறது.
கால்களில்
இடம்
வேதனையாக விம்முகிறது.
ஒரு
பாதி நெல்மணியை
உயிரால் உந்தியும்
விழுந்தும் புரண்டும் நடுங்கியும் வெருண்டும்
எங்கோ மறைவதற்காக
மீண்டும்
துயரமாய் வந்து பிறப்பதற்காக.
மீண்டும்
ஒரு பாதி நெல்மணியைத் தேட
மீண்டும்
சின்னஞ்சிறு மோகங்கள் ஊற்றெடுக்க…
காலம்
நினைவாக உறைய
இடம்
வேதனையாக விம்ம . . .
•
சென்றடைவது
எங்கு என்று அறியாமல்
போகின்றன
சென்றடைவது எக் காலம் என்று அறியாமல்
போகின்றன
சென்றடைவது எதற்கு என்று அறியாமல்
போகின்றன
சென்றடைவோமா என்று அறியாமல்
போகின்றன.
எங்கோ
மறைவதற்காக
மீண்டும்
துயரமாய் வந்து பிறப்பதற்காக.
•
கற்பனைகள் நீங்கிய போதத்தில்,
ஆடியில் தெரியும் பிம்பமாக எந்தப் பயனும் இல்லாமல் பிரதிபலிக்கிறது இந்தப் பிரபஞ்சம்.5
•
அப்போதும்
பாட்டி
இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்
மாட்டு
வண்டிகள்
மந்தகதியில் நகர்கின்றன
மாடுகளின் கழுத்து மணியோசை
விலகிவிலகிச் செல்கிறது
வழி
ஆளற்றும்
அரவமற்றும் நீள்கிறது
மலைமுகட்டில்
எரிந்து நின்ற
விளக்கும்
அணைந்து போகிறது
அப்போதும்
பாட்டி
இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்
வியர்த்தமும்
வேதனையும்
கொடூரமுமான
கர்ம பந்தங்களின்
பகல்கள்
இரவுகள்
பருவங்கள்
ஆண்டுகள்
பிறப்புகள்
பிறப்பின்மைகள்
அப்போதும்
பாட்டி
இருட்டைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள்
உதிரம்
சுண்டி
உலர்ந்து வறண்ட சக்தியின்
இறுதித் துளியும்
வடிந்து போன
எலும்புகள் உந்திய
விகாரமான நடுங்கும் கரங்களால்
மலைகளை நகர்த்தும் அலுப்புடன்
பாட்டி
பொழுதைத் தள்ளி நகர்த்துகிறாள்.
காலம்
எங்கும் செல்வதில்லை
எங்கிருந்தும் வருவதுமில்லை
காலம்
அஸ்தமி்ப்பதில்லை
உதிப்பதுமில்லை.6
•
வெளியில்
பனிபொழிந்து கொண்டிருக்கிறது
எண்ணெய் விளக்கில் எரிகிறது
அசையாச் சுடர்.
அசையாச்
சுடரின்
நிழல் வட்டம்
நிழல் வட்டத்தின்
நிறையமைதியில்
ஒரு கரப்பான்
சமாதி பூண்டிருக்கிறது.
சராசரங்கள்
எல்லாம்
நித்திரையில் ஆழ்ந்திருக்கின்றன
ஒருவன் மட்டும்
விழித்திருக்கிறான்.
அவன்
குப்பை கூளங்கள் சேர்த்துத்
தீ மூட்டுகிறான்.
அவன்
கனன்றெரியும் தீக் கொழுந்துகளைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஓ,
இதோ சிறு சாளரத்தினூடே வரும்
கதிரொளிக் கதிரில்
மிதந்து புரளும் தூசிபோல
அண்டகோடிகள் அலைகின்றன7
நான்
நிலைத்திருக்கிறேன்
எண்ணற்ற பிரபஞ்சங்கள் தோன்றி
எனக்குள் சுற்றிச் சுழல்கின்றன
நான் நிலைத்திருக்கிறேன்.8
குருவே
மன்னர் நகருள் பிரவேசிக்கிறார்
குடிகள் மன்னரைக் காணக் கூடுகிறார்கள்9
நாம்
வழியொதுங்கி நிற்போம்
நிதாகா,
இதில் மன்னர் யார்?
மக்கள் யார்?
யானைமேல் வீற்றிருப்பவர் மன்னர்
மற்றவர் மக்கள்
யானையையும்
மன்னரையும்
ஒன்றாகத்தானே
நீ எனக்குக் காண்பிக்கிறாய்
இரண்டுக்கும்
அடையாளங்கள் சொல்வாயாக
இதில்
எது யானை?
எது மன்னர்?
கீழிருப்பது
யானை
யானைமேலிருப்பது மன்னர்
கீழ்
என்பது எது?
மேல் என்பது எது?
திடுமென
நிதாகன்
இருபுவின் சிரசில்
ஏறியமர்ந்து உரைக்கிறான்:
இப்போது
நான்
மன்னரைப்போல மேலே
நீங்கள்
யானையைப்போலக் கீழே.
நிதாகா,
நீ மன்னரைப்போல மேலும்
நான் யானையைப்போல கீழும் எனில்
இதையும் எனக்குச் சொல்வாயாக.
நீ
யார்?
நான் யார்?
மகனே
நீ உனது
கர்மங்களை மறந்து விடுகிறாய்.
புற்கொடிகளையும்
புழுக்களையும்
பட்சிகளையும்
புனல்களையும்
அந்தியையும்
விண்மீனையும்
நிலவையும் பார்த்துத்
தன்னை மறந்திருக்கிறாய் நீ.
மகனே
எப்போதும் சிந்தனையில்
எரிந்து கொண்டிருக்கிறாய் நீ.
தந்தையே,10
கர்மச் சுழற்சியின்
எண்ணில்லா ஆதிப் பிணிகளில்
அகப்பட்டு நொந்து
இவ்வாறு
விலங்குகள்போல
வாழ்வைப் பாழாக்க
என்னால் இயலாது.
வெட்டுபவன் பின்னே
ஆதரவற்று
அநாதையாக
மௌனமாக
அதி தீனமாக
நொண்டி நொண்டி நகரவே…
பசு
மெல்லத் தலை திருப்பி
இறுதியாக என்னைப் பார்த்தது.
அப்போது
அந்தக் கண்களில் நிறைந்த
பெரும் பீதியை
முற்றிலும் மறைத்துச்
சட்டென்று ஒளிர்ந்த
அந்த மினுக்கம்.
கடவுளே,
அது என்னை வேட்டையாடுகிறது.
என்
புலன்களை
என் இதயத்தை
என் பிரக்ஞையை
என் ஞானத்தை
என் புண்ணியத்தை
என் பூமியை
என் ஆகாயத்தை
என் இருப்பை
நொடிதோறும்
அது
எரித்துக் கொண்டிருக்கிறது.
நான்
விடைபெறும் நேரமாயிற்று.
•
காகபுசுண்டா
காகபுசுண்டா
காகபுசுண்டா
பறந்து வா.
உன்
சிறகின் கருமையால்
என் காட்சிகளை மூடு
உன்
நீள்கரைச்சல் பேய்க்குரலால்
என் சொற்களை ஒடுக்கு
உன்
அலகின் வலிமையால்
என் சித்தத்தைக் கொத்தி உடை
உன்
கண்ணின் தீக் கனலால்
என் மாயங்களை நீறாக்கு
உன்
அழிவின்மையால்
என் வாழ்வைச் சட்டென்று அவிழ்.
•
இரண்டு
எருமைகள்
இருண்ட வழியில்
உன்மத்தம் முற்றிப் பாய்கின்றன
எருமைகள்
பூட்டிய வண்டியில்
ஒருவன் மறைந்திருக்கிறான்.
இரண்டு
தூதர்கள்
இரண்டு கால்களையும்
பிணித்துப் பின்னிக் கட்டுகிறார்கள்
குளிர்ந்த
கைகளை
இடைக்குப் பின்னால்
இழுத்து இறுக்கிக் கட்டுகிறார்கள்.
கறுத்த
துணியால்
என் இரு கண்களையும் மூடுகிறார்கள்.
•
‘அன்பு
மகனே,
நீ எங்களைக் கைவிட்டுச் செல்கிறாயா?
இனி யாரிருப்பார் எங்களுக்கு?
நீயல்லவா எங்களுக்கு
எல்லாமாக இருந்தாய்?’11
கர்மத்தின் பொருட்டு
தேவர்,மானிடர்,மிருகம், விருட்சம், கொடிகளின் யோனிகளில்
பிறவியெடுத்துச்
சுற்றி அலையும் ஜீவன் நான்.
கடந்து போயின எண்ணற்ற பிறவிகள்
காத்திருக்கின்றன எண்ணற்ற பிறவிகள்
இந்தப் பிறவிகள் ஒன்றில்
உங்கள் மகனாகப் பிறந்தேன்.
ஒருவன்
மற்றவனுக்குப்
பொன்னையும் பிற திரவியங்களையும் விற்கிறான்
இன்னொருவன்
அவனிடமிருந்து வாங்குகிறான்
இவ்வாறாக
இந்தச் செல்வங்கள்
பலரை அடைகின்றன; பிரிகின்றன.
இதுபோன்றே
ஜீவனும்
பெற்றோருள் புகுந்தது
பிரிந்தும் போகிறது.
எனக்கு
நேரமாயிற்று
இதோ, நான் செல்கிறேன்.
•
காசி
கங்கை
அடங்காத அலைகள்
மணிகர்ணிகையில்
பிணங்கள் எரிகின்றன
பாதி வெந்த பிணங்கள்
கங்கையில் மிதக்கின்றன
மணிகர்ணிகையில்
சிதை நெருப்பு
ஒருபோதும் அணைவதில்லை.
நரக
தரிசனத்தின்
கருணையில்லாக் காட்சிகள்.
•
அந்நியனின்
தனத்தையும் சந்தானத்தையும்12
மனையாளையும் அபகரித்தவன்
அதிபயங்கர எமதூதர்களால்
காலபாசத்தால் பிணைக்கப்பட்டு
தாமிஸ்ரம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான்.
அவனுக்கு உணவோ நீரோ கொடுப்பதில்லை
பலவித சித்திரவதைகளைச் செய்கிறார்கள்
அச்சுறுத்துகிறார்கள்
அவன் உணர்விழக்கிறான்.
உடைமையாளனை
வஞ்சித்து அவன் மனைவியையும்
செல்வத்தையும் துய்த்தவன்
எமதூதர்களால் அந்ததாமிஸ்ரம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான்.
கொடும் வேதனையால் உணர்விழந்து
கண் கெட்டு
வேரோடு பெயர்ந்த விருட்சம்போல
அவன் கிடக்கிறான்.
உடம்பைத்
தனதென்றும்
மனைவி, மக்கள், செல்வம் தன்னுடையதென்றும்
அகந்தை கொண்டு
அவர்களைப் பேண
உயிர்களை வதைத்துக் குடும்பம் நடத்தியவன்
எல்லாவற்றையும் பூமியில் விட்டு
சுயபாவ கர்மத்தால்
இங்கே
ரௌரவம் என்ற நரகத்தில் வந்து வீழ்கிறான்.
இவன் பூவுலகில் வதைத்த உயிர்கள்
பாம்புகளைவிடக் கொடிய
ருருக்கள் என்ற பிராணிகளாகி
இவனை இங்கே வதைக்கின்றன.
உயிர்க்கொலை
செய்து உடல்வளர்த்தவன்
மகா ரௌரவம் என்ற நரகத்தில் வீழ்கிறான்
கிரவ்யாதங்கள் என்ற ருருக்கள்
இவனது மாமிசத்தைப் புசித்து
இவனைத் துன்புறுத்துகின்றன.
விலங்குகளையும் பறவைகளையும்
உயிருடன் வேகவைத்துத் தின்ற கொடும்பாவியை
எமதூதர்கள்
கும்பீபாகம் என்ற நரகத்தில்
கொதிக்கும் எண்ணெயிலிட்டு வறுக்கிறார்கள்.
பெற்றோரையும்
ஞானியரையும் துன்புறுத்தியவனை
காலசூத்திரம் என்ற நரகத்தில்
அளவிலாத் தூரம் விரிந்ததும்
கீழே அக்கினியும்
மேலே தகிக்கும் சூரியனும்
ஓயாது பொசுக்கும்
செப்புத் தகடு பாவிய
சமநிலத்துக்குக் கொண்டுவருகிறார்கள்.
கொடும் வெம்மையில்
அகமும் புறமும் ஒருபோலத் தகிக்க
அவன்
நாற்புறமும் ஓடுகிறான்.
நிரபராதிகளைத்
தண்டித்த
கொடிய பாவியான அரசனை
சூகரமுகம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள்.
அங்கே
உடல்வலுத்தவர்கள்
இந்த அரசனின் அவயவங்களைக்
கரும்பை ஒடிப்பதுபோல ஒடிக்கிறார்கள்
அவன் ஓலமிட்டலறி மயங்கி விழுகிறான்.
இறை
ஆணைக்குப் பணிந்து
இரைதேடும் எறும்பு, பறவைகள் போன்ற உயிர்களை
சித்திரவதை செய்தவன்
அந்தகூபம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான்.
மற்றெவர்க்கும்
பங்கிடாமல்
ஒற்றையாய் உணவுகொண்டவன்
கிருமிபோஜனம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான்.
நூறாயிரம் யோஜனையுள்ள
அந்தக் கிருமி குண்டத்தில்
அவன் கிருமியாகிறான்
கிருமிகளையே தின்கிறான்.
அந்நியனின்
சொத்தைக் களவாடியவனை
வழிப்பறி செய்தவனை
எமதூதர்கள் சந்தம்சம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள்
கனல்துண்டுபோலப் பழுத்த
இரும்புத் தண்டுகளால்
அவன் உடலைப் பொசுக்குகிறார்கள்.
பேதாபேதமில்லாமல்
எல்லாப் பெண்களுக்குள்ளும் நுழைந்தவன்
வஜ்ரகண்டக சால்மலி என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான்
அவன் வஜ்ஜிரம்போன்று கூர்முட்கள் நிறைந்த
சால்மலி மரத்தில்
நிரந்தரமாக ஏற்றி இறக்கப்படுகிறான்.
அறம்
பிறழ்ந்த அரசனும்
அரச மாந்தரும்
வைதரணி என்ற நரகத்தில் வீழ்கிறார்கள்.
இங்கே வைதரணி என்ற நதி ஓடுகிறது.
மலம், சிறுநீர், சலம், குருதி,
தலைமயிர், நகங்கள், எலும்புகள்,
தோல், மாமிசம், நிணம் நிறைந்தது வைதரணி.
இதில் விழுந்த
அரசனையும் அரசமாந்தரையும்
நீர்வாழ் உயிர்கள் முற்றுகையிட்டு விழுங்குகின்றன.
அப்போது அவர்கள்
தமது பாவச் செயல்களை நினைக்கிறார்கள்.
நாணமற்று
விலங்குகள்போலக்
காமத்தில் புரண்டவர்களை
பூயோதம் என்ற நரகத்தில் இடுகிறார்கள்.
சலம், மலம், சிறுநீர், கோழை நிறைந்த
அந்தக் கடலில் விழுந்தவர்கள்
அந்தப் பொருள்களையே புசிக்கிறார்கள்.
வேட்டையை
விரும்பி
விலங்குகளைத் துன்புறுத்தியவர்கள்
பிராணரோதம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள்.
எமதூதர்கள் அம்பெய்து
அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.
வேள்விகளில்
மிருகங்களை வதைத்தவர்கள்
விசஸனம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள்.
எமதூதர்கள் அவர்களது உறுப்புகளைத்
துண்டுதுண்டாக வெட்டுகிறார்கள்.
வீடுகளைக்,
கிராமங்களை, மக்கள் கூட்டத்தைத்
தீவைத்தும்
விஷமூட்டியும் அழித்த
கள்வர்களையும் அரசர்களையும் படைவீரர்களையும்
சாரமேயாதனம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள்.
வஜ்ஜிரக் கோரைப் பற்களுடன்
நாய்கள் உருவிலிருக்கும் எமதூதர்கள்
கடுங்கோபத்துடன் இவர்களைக்
கடித்துக் குதறுகிறார்கள்.
சாட்சிமொழியிலும்
கொடுக்கல் வாங்கலிலும்
பொய்யுரைத்தவனை
எமதூதர்கள்
அவீசி என்ற நரகத்தில் தள்ளிவிடுகிறார்கள்.
நூறு யோஜனை உயர மலைச் சிகரத்திலிருந்து
தலைகீழாகத் தள்ளிவிடுகிறார்கள்.
அவனது அங்கங்கள் எள்மணிபோல நொறுங்குகின்றன
எனினும் அவன் இறப்பதில்லை.
மீண்டும் அவனைத்
தலைகீழாகத் தள்ளிவிடுகிறார்கள்.
மனிதர்களைப்
பலியிட்டு
அவர்கள் மாமிசத்தைப் புசித்தவர்கள்
ரக்ஷோகணபோஜனம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள்.
அவர்களை
ராட்சதகணங்கள்
ஆயுதத்தால் பிளப்பதுபோலப் பிளந்து
ரத்தம் குடித்து உன்மத்தம் பூண்டு
பாட்டுப்பாடிக் களிக்கிறார்கள்.
ஒருபோதும்
ஓரிடத்தும்
ஒன்றுக்கும் துன்பமிழைக்காத
உணவு கிடைக்குமென்று நம்பி
நெருங்கும் களங்கமற்ற உயிர்களை
தந்திரத்தால் கவர்ந்து சூலங்களில் கோர்த்து
விளையாட்டுப் பொருட்களாக்கிக்
கொல்லாமல் கொல்பவர்கள்
சூலப்ரோதம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள்.
சூலங்களில் கோர்த்துத் தண்டிக்கப்படுகிறார்கள்.
பசி தாகத்தால் துவண்ட அவர்களைக்
கழுகுகள் கொத்திக் கிழிக்கின்றன
அப்போது அவர்கள்
தாம் செய்த பாவங்களை நினைவுகூர்கிறார்கள்.
காலம்
முழுவதும் பிராணிகளை வெருட்டிய
கொடூர மனிதர்கள்
தந்தசூகம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறார்கள்.
வளை எலிகளை விழுங்குவதுபோலக்
கொடும் பாம்புகள் அவர்களை விழுங்குகின்றன.
பிராணிகளை
மூச்சுவிட முடியாத
இடுங்கிய பொந்துகளிலோ
குகைகளிலோ
தானியக் குதிர்களிலோ
அடைத்துத் துன்புறுத்தியவனை
அவட நிரோதம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள்
அங்கே
இடுங்கிய பொந்துகளிலும்
குகைகளிலும் அவனைப் புகச்செய்து
விஷப்புகை எழுப்பும் அக்கினியால்
தண்டிக்கிறார்கள்.
வீடேறி
வந்த விருந்தினரை
எரிப்பதுபோல
வெறுப்புடனும் வன்மத்துடனும் பார்த்தவனைப்
பரியாவர்த்தனம் என்ற நரகத்தில் தள்ளுகிறார்கள்.அவனுடைய பாவ விழிகளைக்
கழுகுகளும் காக்கைகளும்
வஜ்ஜிரபலமுள்ள அலகுகளால்
வன்மையாகக் கொத்திப் பிடுங்குகின்றன.
தனவான்
என்று அகந்தைகொண்டும்
ஒவ்வொரு நொடியும் செல்வத்தைக் குவித்தும்
எல்லாரையும் ஐயுற்றும்
இரப்பவர்களுக்கு எதுவும் கொடுக்காமலும்
தன்னுடைய செல்வம் பாழாகுமோ என்று
ஓயாமல் பதறிக் கொண்டும்
பூதம்போலப் புதையலைக்
காத்துக்கொண்டுமிருப்பவன்
சூசிமுகம் என்ற நரகத்தில் தள்ளப்படுகிறான்.
யமதூதர்கள் தையற்காரர்களைப்போல
அவனுடைய அங்கங்கள் அனைத்திலும்
இண்டு இடுக்கில்லாமல் ஊசியால் குத்தி
நூலால் வரிந்து கட்டுகிறார்கள்.
•
நரக
நினைவுகளின்
கருணையில்லா இரவுகளில்
பசியும்
தாகமும்
உறக்கமும் மறந்து
நசிகேதன்
எமனுக்காகக் காத்திருந்தான்.
‘உலகில்
அசைவதும் அசையாததும் எல்லாம்
துயரத்தில் தவிப்பது ஏன்?’13
‘மனிதனுக்கு
இச்சையில்லாத போதும்
அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப்
பாவம் செய்விப்பது யாது?’14
‘பிறப்பு,
வளர்சிதைவு, பிணித்துயர்கள், மரணம்
இவற்றினூடே கடந்து செல்லும்
இந்த வாழ்வின் பொருள் என்ன?’
நசிகேதா,
நீ கேட்பது
இருப்பின் ரகசியத்தை.
எமன்
சிசுவை
முத்தமிடுவதுபோல
எமன்
நசிகேதனின் சிரத்தில் முத்தமிட்டான்.
நசிகேதன் ததும்புகிறான்
அழுகிறான்
கருணையின்
பெருவெள்ளமாகிறான்
நிலம்
நீர்
நெருப்பு
வளி
வான்
அனைத்தும் அதில் மூழ்குகின்றன.
அந்திக்
கதிர்களில்
மின்னும்
புராதனப் பாறைகள்
பாறைகளுக்கு
இடையில்
காற்றிலாடும்
தளிர் இலைகள்
தளிர்களின் செந்நரம்புகள்.
பெருங்கடலின்
அபாரமான ஜலராசிக்குள்
சூரியன் மறைந்தது.
பெருமலைத்
தொடரில்
முழு நிலவு உதித்தது
பெருங் கானகம் ஒளிர்ந்தது.
•
காசி
கங்கை அமைதியாக
தன்னியல்பாய் ஓடுகிறது
கங்கையில்
நிலவொளி படர்கிறது
மணிகர்ணிகையில்
பிணங்கள் எரிகின்றன
சிதை
நெருப்பு
பேருருவாய்
வெளிச்சம் பொழிகிறது.15
சிவபூத
கணங்கள்
டமருகம் முழக்கி
ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றன.
இறுதியாய்
எரிந்த
சிதைச் சாம்பல்
மகா காலனுக்கு
அபிஷேகமாகிறது
மகா
பிரவாகினியான
கங்கையினூடே
எரியும் மண் அகல்கள்
காலத்தின் மறுகரைக்கு
மிதந்து மறைகின்றன…
•
பிருகதீசுவரத்தின்
மீதே
ஆகாயம் கனிவுடன் சுரந்தது.
மழையின் முதல் துளி
நசிகேதனின்
நெற்றியில் விழுந்தது.
அதி
விளம்ப காலத்தில்
பெய்கிறது மழை.
அதி அதி விளம்ப காலத்திலிருந்து
அதி விளம்ப காலத்துக்கு
அதிவிளம்ப காலத்திலிருந்து
மத்தியம காலத்துக்கு . . .
பார்த்து நிற்கும்போதே
கனக்கிறது மழை.
ஆயிரங்கால்
மண்டபம் நனைகிறது
காவல்தேவியர் நனைகிறார்கள்
நந்திகேச்வரச் சிலைகள் நனைகின்றன
மகா கோபுரங்கள் நனைகின்றன
கோபுர வாசலில்
யானைகள் நனைகின்றன.
பசுக்கள்
மழையில் குளித்து
தலைதாழ்த்தி
இன்பக் கிறக்கத்தில்
அசையாது நிற்கின்றன.
கழுதைகள்
அகண்ட நீர்த் தாரையில்
தன்னினைவு இழக்கின்றன.
கருங்கற்களின்
ஊடே மழைபெய்து இறங்குகிறது.
கருங்கல்லைத் துளைத்து இறங்க்குகிறது.
இடைவிடாமல்
ஏக தாளத்தில் பெய்யும் மழையில்
பிருகதீசுவரம்
தியானத்தில் ஆழ்கிறது . . .
கடலில்
மழைபெய்கிறது
கடல் மழையில் மூழ்குகிறது
வனங்களில் மழைபெய்கிறது
வனங்கள் மழையில் மூழ்குகின்றன.
முடிவில்லாது
பெய்கிறது
மழை.
இப்போது
மழையின்
ஆதியந்தமில்லாத
அகச் சுருதி மட்டும்.
இடமும்
காலமும்
இல்லாது போகின்றன.
நசிகேதன்
போதத்தின் கனவுகளிலிருந்து
விழி்க்கிறான்.16
பந்தத்தையும்
மோட்சத்தையும் துறந்து
இன்பத்தையும் துன்பத்தையும் துறந்து
உண்டு இல்லை என்ற சிந்தனையையும் துறந்து
எல்லாம் ஒன்றே என்ற திடமாகி
அசையாப் பெருங்கடலாக
நசிகேதன் விழிக்கிறான்.17
கண்ணில்
தெரியும் இவை எல்லாமும்
விளக்க முடியாதவையாகின்றன18
இது
மைவித்தைக்காரனின் மசியில் தெரியும்
தேவதைபோல் இருக்கிறது.
இதன் பிம்பம் இறைவனிடமிருக்கிறது
இது நிழல்மட்டுமாகிறது
இப்போது
கண்ணில் தெரியும் இதுவும்
கடவுளும் நானுமாக இருக்கும்
இவை எல்லாமும்
கடவுளுக்குள் அடங்கும்போது
கடவுளே ஆகின்றன.
இது
கடவுளின் விரிநிறைவைக் குலைப்பதில்லை
நிழலுக்கு
எதன் விரிவையும் மாற்ற இயலாது.
அதுமட்டுமன்று
எந்த விரிவும் நிழலை இழப்பதுமில்லை.
ஓ,
இதோ
இவையெல்லாம் மனோவேகமுள்ள
ஒரு கடிகையைப்போல
ஆதியந்தமில்லாமல் சுழல்கின்றன.
அற்புதம்
நான் என் கண்களைப் பார்க்கிறேன்
என்னைக் கடவுள் பார்க்கிறார்
நான் என் குரலைக் கேட்கிறேன்
கடவுள் என்னைக் கேட்கிறார்.
நான் என் தோலைத் தொடுகிறேன்
கடவுள் என்னைத் தொடுகிறார்
நான் என் நாவால் சுவைக்கிறேன்
கடவுள் என்னைச் சுவைக்கிறார்
நான் என் மூக்கால் முகர்கிறேன்
கடவுள் என்னை முகர்கிறார்
நான்
வாக்கைத் தள்ளிவிடுகிறேன்
வாக்கு என்னைத் தள்ளிவிடுவதில்லை
கடவுள் தள்ளிவிடுகிறார்.
நான் கையை இயங்கச் செய்கிறேன்
கை என்னை இயக்குவதில்லை
கடவுள் இயங்கச் செய்கிறார்
நான் காலை நடத்துகிறேன்
கால் என்னை நடத்துவிப்பதில்லை;
கடவுள் என்னை நடக்கச் செய்கிறார்.
நான் குதத்தை கழிக்கச் செய்கிறேன்
என் குதம் என்னைக் கழிப்பதில்லை
கடவுள் கழிக்கச் செய்விக்கிறார்
நான் கடவுளைக் கழிப்பதில்லை
நான் உபஸ்தத்தை மகிழ்விக்கிறேன்
உபஸ்தம் என்னை மகிழ்விப்பதில்லை
கடவுள் மகிழ்விக்கிறார்
நான் கடவுளை மகிழ்விப்பதில்லை.
ஓ,
இதோ கடவுளின் புருஷ இலட்சணம் காட்சியளிக்கிறது
கடவுள்
கண்ணில்லாமல் காணும்
செவியில்லாமல் கேட்கும்
தோலில்லாமல் உணரும்
நாசியில்லாமல் முகரும்
நாவில்லாமல் சுவைக்கும்
சித் புருஷனாகிறார்.
நான்
கடவுளின் மறு வடிவமாகிறேன்
என் உடல் ஜடமாகிறது
கனன்றிருக்கும் இரும்புக்கோளம் ஒளிமயமாவதுபோல
நான் கண் திறந்து பார்க்கும்போது
என் உடல் ஒளிமயமாகிறது.
ஓ,
என் கடவுள்
ஒளிமயமான புனித சமுத்திரமாகிறார்
இவை யாவும்
அலையற்ற அந்தக் கடலில்
அலையாகின்றன
ஓ,
இவை யாவும் ஓடை மீறிப் பொங்கும்
வெள்ளமாகின்றன
கடவுள் ஓடையாகிறார்
ஓ,
நான் இதுவரை வெளிமுகத்தனாக இருந்தேன்
இனி
உள்முகத்தனாக மாறுகிறேன்
ஆ,
எவ்வளவோ திவ்வியம் இங்கே
நான் இதுவரை நின்றிருந்தது
ஒரு திவ்வியக் கண்ணாடியில்.
இதுவே
என் கடவுள்
இதை நான் இதற்கு முன்பு கண்டதில்லை
இப்போது
எனக்கு இங்கே மறைவும் இல்லை
நானும் கடவுளும் ஒன்றாகியிருக்கிறோம்
இனி
எனக்குச் செயல் கடினமில்லை
ஓ,
இதோ நான் கடவுளுடன் ஒன்றாகிறேன்.
•
*****************************************************************************************************************************
குறிப்புகள்
1
. யதேவஹ ததமுத்ர
யதமுத்ர ததன்விஹ
ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமாப்னோதி
ய இஹ நாவேன பச்யதி - கடோபநிஷத் 4: 10
2.
பாகவதம் - திரிதீய ஸ்கந்தம் , சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரம்,
கர்போபநிஷத்
3.
ப்ருஹதாரண்யக உப நிஷத் – பிராமணம் 2: 1
4.
பாகவதம் – முதலாம் ஸ்கந்தம் அத்தியாயம்
13, சுலோகம் 46
5. யோகவாசிஷ்டம் – ஸ்திதிபிரகரணம், பார்கவோபாக்கியானம்
63
6. யோகவாசிஷ்டம் – சர்க்கம் 23, கலாபவாதம் 32
7.
ஸ்ரீ நாராயண குருவின் ஆத்ம விலாசம்
8. ரிபு கீதை
9.
விஷ்ணுபுராணம்
10.
யோகவாசிஷ்டம் – உபசமபிரகரணம்
11. பாகவதம் – சஷ்டஸ்கந்தம்
12.
பாகவதம் – பஞ்சமஸ்கந்தம்
13.
லோகம் சோகஹதம் ஸ சமஸ்தம் – பஜகோவிந்தம், ஆதி
சங்கரர்
14. பகவத் கீதை ( பாரதியார் உரை ) 3: 36
15. முண்டகோபநிஷத் 1: 2
16. யோகவாசிஷ்டம்
17. யோகவாசிஷ்டம்
18.
ஸ்ரீ நாராயணகுருவின் ஆத்ம விலாசம்.
ஓவியங்கள்: கானாயி குஞ்ஞிராமன், தாணு குமாரதாஸ்
@