ஞாயிறு, 7 ஜனவரி, 2024

 
பாலஸ்தீனக் குழந்தைக்கு ஒரு தாலாட்டு

@

ஃபெய்ஸ் அஹம்மத் ஃபெய்ஸ்

@

 

அழாதே, என் குழந்தையே,

உன் அம்மா இப்போதுதான் இமை மூடினாள்

அவள் உயிர் அலறி வெளியேறியது.

 

அழாதே, என் குழந்தையே,

உன் அப்பா

கொஞ்சம் முன்புதான்

அவரது துயரங்களைக் களைந்தார்.

 

அழாதே, என் குழந்தையே,

உன் சகோதரன்

எங்கோ தொலைவில்

அவனுடைய கனவுகளில்

வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தான்.

 

அழாதே, என் குழந்தையே,

உன் சகோதரியின் பல்லக்கு

அந்நிய நிலத்துக்குப் புறப்பட்டாயிற்று.

 

அழாதே, என் குழந்தையே,

அவர்கள் இறந்த சூரியனை நீராட்டினார்கள்

ஒரு வினாடி முன்புதான்

உன் முற்றத்தில்

நிலவைப் புதைத்தார்கள்.

அழாதே, என் குழந்தையே,

நீ அழுதால்

உன் அப்பாவும் அம்மாவும் சகோதரியும் சகோதரனும்

நிலவும் நட்சத்திரங்களும்

உன்னை இன்னும் அழவைப்பார்கள்.

 

நீ சிரித்தால்

ஒரு நாள் மாறுவேடத்தில் வருவார்கள்

வந்து உன்னுடன் விளையாடுவார்கள்.

@

 

பெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ்  ( 1911 – 1984 )

உர்துக் கவிதையில் கற்பனைவாத மிகைகளை மாற்றி எதார்த்தவாத நோக்குக்கும் அரசியல் சார்புக்கும் வழியமைத்த முன்னோடி. பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த பஞ்சாபில் பிறந்தார். தேசப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானில் குடியேறினார். பாகிஸ்தான் டைம்ஸ் இதழின் ஆகிரியராகப் பணியாற்றினார். அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றஞ் சாட்டப் பட்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலை பெற்றும் லெபனானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பாகிஸ்தானில் தொழிலாளர் இயக்கத்தை உருவாக்கினார்.

ஃபெய்ஸின் இந்தக் கவிதை அனிசூர் ரஹ்மான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தொகுத்த ‘ஹஸார் ரங்க் ஷாயிரி’ ( ஆயிரம் நிறங்களுள்ள கவிதை – 2022 ) நூலில் இடம்பெற்றுள்ளது.

                                                              @@@@@@ஒரு குழந்தையை இரண்டு முறை கொல்ல முடியாது.

@

டாலியா ரவிகோவிட்ச்

 

@

 

ஸாப்ரா, ஷாட்டிலா கழிவு நீர்க் குட்டைகளுக்கு அருகில்

எண்ணிலடங்கா மனிதர்களை

உயிர்ப்புள்ள உலகிலிருந்து   ஒளிப்பிழம்புக்கு

எடுத்து வந்து போட்டீர்கள்.

இரவோடு இரவாக.

 

முதலில் அவர்களைச் சுட்டீர்கள்

அவர்களைத் தூக்கிலிட்டீர்கள்

பின்னர்

வாள்களால் வெட்டினீர்கள்

 

வெருண்டுபோன பெண்கள்

மண்சாரத்தின் மீது ஏறினார்கள்

பேரச்சத்துடன் ஓலமிட்டார்கள்

‘ஷாட்டிலாவில் எங்களை வெட்டிக் கொல்கிறார்கள்’

 

முகாம்களின் மீது நிலவின் மென் பிறை

அந்த இடமே

பகல்போல ஒளிரும்வரை

தேடுவிளக்குகளைப் பாய்ச்சுகிறார்கள்

எங்கள் படைஞர்கள்.

 

புலம்பிக் கொண்டிருக்கும் 

ஸாப்ரா, ஷாட்டிலாப் பெண்களிடம்

கட்டளையிடுகிறான் ஒரு படைஞன்.

‘முகாமுக்குத் திரும்புங்கள்’.

 

ஆணைக்குப் பணிந்து கொண்டிருந்தான் அவன்.

 

ஏற்கெனவே

சகதிக் குட்டைகளில் கிடைக்கும் குழந்தைகள்

அமைதியாக

வாயால் மூச்சுவிட்டுத் திணறுகிறார்கள்

அவர்களை இனி யாரும்

துன்புறுத்த முடியாது

ஒரு குழந்தையை நீங்கள்

இரண்டுமுறை கொல்ல முடியாது

 

பொன் வட்ட ரொட்டியாக மாறுவரை

நிலவு முழுதாகிறது. முழுதாகிறது.

 

எங்கள் இனிய படைவீரர்கள்

தங்களுக்கென்று எதையும் விரும்பவில்லை

எப்போதும் அவர்கள் கேட்பது

பாதுகாப்பாக வீடு திரும்புவோமா?

@


டாலியா ரவிகோவிட்ச்  (1936 – 2005 )

ஹீப்ரு மொழியில் எழுதியவர். யூதர். எனினும் பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் இடைவிடாது குரல் கொடுத்தவர். ஸாப்ரா, ஷாட்டிலா முகாம்கள் மீது 1982 ஆம் ஆண்டு இஸ்ரேலியத் துணைப்படையினர் நடத்திய கூட்டக் கொலையில் பெண்களும் சிறார்களும் இறந்தனர். அந்தச் சம்பவத்தின் எதிர்வினையே டாலியாவின் கவிதை. போஓர் எதிர்ப்புக் கவிதைகளில் குறிப்பிடத்தக்கதாகச் சொல்லப்படுகிறது.

  ஜே டி மக் க்ளாட்சி தொகுத்த THE VINTAGE BOOK OF CONTEMPORARY WORLD POETRY  ( 1996 ) நூலிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை இது. ஆங்கிலத்தில்: சானா பிளாச், ஏரியல் பிளாச்.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக