சனி, 26 பிப்ரவரி, 2022

நான்கு புத்தகங்களும் நானும்

 

தி.ஜானகிராமன் கட்டுரைகள்



தி.ஜானகிராமன் கதைகளைத் தொகுக்கும் முயற்சியில் அவரது கட்டுரைகளையும் வாசிக்கவும் திரட்டவும் வாய்த்தது. அவரது கட்டுரைகள் பெரும்பான்மையும் இதழ்களிலும் ஓரிரு தொகுப்புகளிலுமாக வெளிவந்தவை. ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி.ஜானகிராமன் படைப்புகள் – தொகுதி 2 இல் அவை இடம் பெற்றிருந்தனவே தவிர, தனி நூலாகத் தொகுக்கப்படவில்லை. புனைபடைப்புகளுடன் ஒப்பிட்டால் மிகக் குறைந்த அளவிலேயே கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்று கருதியிருந்தேன். ஆனால் தொகுப்பாக்கும் நோக்கத்தில் திரட்டியபோது கணிசமான அளவில் கட்டுரைகளையும் எழுதியிருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே கிடைத்த கட்டுரைகளுடன் அவர் முன்னுரைகளாகவும் மதிப்புரையாகவும் தனிக் கட்டுரைகளாகவும் எழுதிய உரைநடை ஆக்கங்களின் திரட்டு இந்த நூல். கடந்த பத்து ஆண்டுகளில் திரட்டியவையும் நண்பர்கள் தேடியளித்தவையும் தொகுப்பில் உள்ளன.

தி.ஜானகிராமனின் புனைவு எழுத்துகளுக்குச் சற்றும் மாற்றுக் குறைந்தவையல்ல அவரது கட்டுரைகள்.

@

மோகப் பெருமயக்கு


நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் மகத்தான கலைஞர்களில் ஒருவராக நான் மதிப்பவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் குறித்து எழுதிய கட்டுரைகளும் குறிப்புகளும் தொகுக்கப் பட்ட நூல் இது. நூற்றாண்டு காணும் முன்னோடிப் படைப்பாளிக்கு அவரது தீவிர வாசகன் செலுத்தும் நன்றிக் கடன்.

தி.ஜானகிராமன் மீதான பற்று பள்ளிப்படுவத்தில் உருவானது. அவரைப் பற்றி எழுதிய முதல் கட்டுரையே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருந்தது. தொகுப்பின் முதல் சங்கதி அந்தக் கட்டுரைதான். கோவை ஞானி தொடங்கிய நிகழ் – காலாண்டு இதழின் முதல் இதழில் வெளிவந்தது. அந்த வடிவமே புத்தகத்திலும் சேர்க்கப் பட்டிருக்கிறது. ஆனால் இவ்வளவு சுருக்கமாக எழுதவில்லை என்பது நினைவில் இருந்தது. எனினும் முதல் வரைவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்மையில் வீடு மாறினேன். எடுத்து வந்த புத்தக, பத்திரிகை, கைப்பிரதிகளின் இடையில் பழைய நோட்டுப் புத்தகம் அகப்பட்டது. அதன் பக்கங்களில் கட்டுரையின் மூல வடிவம் இருந்தது. 19.2.1983 இல் எழுதிய கட்டுரை. ஆறு பக்கங்கள் கொண்டது. அதைப் பார்த்ததும் மனது விம்மியது. கோவை ஞானி நடத்திய மாதாந்திர இலக்கியக் கூட்டத்தில் ஜானகிராமன் மறைவுக்குக் காலம் தாழ்த்தி  அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது வாசித்த கட்டுரை. கூட்டத்தில் அதை முழுக்க வாசிக்க முடியாமல் கண்ணீர் ததும்பக் குரல் இடற நின்றது நினைவுக்கு வந்தது.

@  

த்தனைக் கவனமாகவும் துல்லியமாகவும் மெய்ப்புப் பார்த்தாலும் சில பிழைகள் ஏயத்து விடுகின்றன. தகவல் பிழையாகவும் கவனக் குறைவாகவும். அவை நிம்மதியைக் கெடுத்துத் தூக்கத்தைக் குலைத்து விடுகின்றன.  தி.ஜானகிராமன் கட்டுரைகள் நூலில் தவிர்க்கவியலாமல் நுழைந்த பிழைகள் இரண்டு நாள் தூக்கத்தைப் பறித்துக் கொண்டன.

நூலில் இடம்பெற்றுள்ள ‘மதுர மணி’ கட்டுரையின் வெளியீட்டு விவரத்தில் மதுரை மணி – மணி விழா மலர் என்று  குறிப்பிட்டிருப்பது தவறு.

திருச்சியில் மணி அய்யரின் ரசிகர் குழாமொன்று ‘மணிமண்டபக் கோஷ்டி’ என்றே அழைக்கப்பட்டது. அதன் முக்கியப் பிரமுகரான வி.ஸ்ரீனிவாசனின் முயற்சியால் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் ராம நவமியன்று மதுரை மணி கச்சேரி பாடியிருக்கிறார். 1960 ஆண்டு விழாவிலும் பாடியிருக்கிறார். விழா நிறைவு நிகழ்ச்சியில் அவருக்கு ‘நாதலோல’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அதையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்காகவே ‘மதுர மணி’ கட்டுரையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். மணி விழாக் காணும் வாய்ப்பில்லாமல் மதுரை மணி 56 ஆம் வயதில் மறைந்தார்.

இந்த இரு தகவல்கள் கவனத்தில் இருந்தும் தகவல் பிழை நேர்ந்து விட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது.

நூலின் பின்னிணைப்பாகக் கொடுத்திருக்கும் லால்குடி ஜெயராமனின் ‘ஜானகிராமன் செய்த ஜாலம்’ என்ற குறிப்பு கல்கியில் வெளியானதாக உள்ளது பிழை.  அது வெளியானது குமுதம் இதழில். ‘வாரம் ஒரு பிரமுகர் ஆசிரியராக இருந்து இதழைத் தயாரித்த காலத்தில் லால்குடி தயாரித்த இதழில் இந்தக் குறிப்பு வெளியாகி இருக்கிறது..

பிழைகளைச் சுட்டிக் காட்டியவர் நண்பர் லலிதாராம். மோகப் பெருமயக்கு நூலின் முதல் கட்டுரை ‘ அஞ்சலி’ வெளியானது நிகழ் ஏப்ரல் 1982 என்று உள்ளது. அது பிழை. 1983 என்பதே சரி. இந்தப் பிழையை நண்பர் சுப்பிரமணி இரமேஷ் கவனத்துக்குக் கொண்டு வந்தார். நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

‘தி.ஜானகிராமன் கட்டுரைகள்’ நூலில் நேர்ந்திருக்கும் பிழைகள் அடுத்த பதிப்பில் திருத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். ‘மோகப் பெருமயக்கு’ இன்னொரு பதிப்புக் காணுமானால் அதுவும் களையப்படும். கூடவே அஞ்சலியின் முழு வடிவம் சேர்க்கப்படும். அதற்கு வாசகர்கள் அருள்கூர்வார்களாக.

 @

மார்க்ஸிய அழகியல் – ஒரு முன்னுரை


மார்க்சிய அழகியல் – ஒரு முன்னுரை’ நூலின் முதற்பதிப்பு 1985 டிசம்பரில் வெளியானது. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இரண்டாம் பதிப்பு வெளி வருகிறது. இந்தப் பதிப்பு வெளிவர நண்பர் பரிசல் செந்தில்நாதனே தூண்டுதலும் காரணமும்.

இடைப்பட்ட ஆண்டுகளில் அவ்வப்போது நூலைக் குறித்துச் சிலர் பேசவும் எழுதவும் செய்திருக்கிறார்கள். மறுபதிப்பு வருமா என்று விசாரித்திருக்கிறார்கள். வெவ்வேறு காரணங்களால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அமைந்த ஓரிரு வாய்ப்பு களையும் நூலுக்கான பொருத்தப்பாடு இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகத்தின் பேரில் தட்டிக் கழித்திருக்கிறேன். அது தவறென்று இப்போது தெளிவாகிறது. இந்த நூல் காலப் பொருத்தம் கருதி உருவானதல்ல. கலை இலக்கியத்தை அணுகுவதற்கான நிரந்தர அடிப்படைகளைப் பேச உதவும் நூல்.

என்னுடைய முகநூல் பக்கத்தில் புதிய பதிப்பின் அட்டைப் படத்தைப் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்த நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதி ‘முதல் பதிப்பின் நினைவுகள் எழுகின்றன’ என்று பதிவிட்டிருந்தார். அந்த வரி எனக்கும் பழைய ஞாபகங்களைக் கிளறி விட்டது.

அது சிகைமுதல் கால்நகம் வரை இலக்கியப் பித்துப் ஓடிக்கொண்டிருந்த காலம். சிந்தனையில் மார்க்சியக் கருத்தாக்கங்கள் முட்டிக் கொண்டிருந்த பருவம். படைப்பிலக்கியங்கள் மீது கொண்டிருந்த அதே ஆர்வம் விமர்சன நூல்கள் மீதும்  - குறிப்பாக மார்க்சியப் பார்வை கொண்ட நூல்கள் மீதும் - இருந்தது.

அன்று வாசித்த மார்க்சிய விமர்சகர்கள் அல்லது சிந்தனையாளர்களின் நூல்கள் அடிப்படையான  சில கருத்துக்களை வலுப்படுத்தின. இடதுசாரி விமர்சனமாகத் தமிழில் காணக் கிடைத்தவை கோட்பாட்டின் சட்டகத்துக்குள் படைப்பைச் சுருக்கி விடுகின்றன. படைப்பின் உள்ளிருந்து தரவுகளைக் கண்டடைந்து விமர்சனங்கள் உருவாக்கப் படாமல் சூத்திரங்களின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறை உவப்பானதாக இருக்கவில்லை. மாறாக நான் வாசித்த பிற அயல் விமர்சகர்களின் கண்ணோட்டம் சிந்தனையை ஈர்த்தது. படைப்பை முதன்மையாகக் கொண்டு கோட்பாட்டின் துணையால் அதை மதிப்பிடுவதுதான் சரி என்ற எண்ணத்தைக் கொடுத்தது. அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் ஒன்றாகக் கிடைத்ததுதான் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் எழுதிய மார்க்ஸிய அழகியல் – ஒரு முன்னுரை என்ற நீண்ட கட்டுரை.

கார்ல் மார்க்ஸ் நினைவு நூற்றாண்டையொட்டி  மாத்ருபூமி வார இதழில் 1983 ஜனவரி 2 முதல் பிப்ரவரி 6 வரையான ஐந்து வாரம் தொடராக வெளிவந்தது. வாராவாரம் வாசித்ததும் அதை தமிழில் மொழிபெயர்த்து வந்தேன். அன்று ஊர் ஊராகத் திரியும் விற்பனைப் பிரதி நிதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அலைச்சல் காரணமாகத் தொடர்ந்து மொழிபெயர்க்க இயலவில்லை. பாதியில் நின்றது. தொடர் கட்டுரை பின்னர் தனி நூலாக வெளியானது. அந்தச் சமயத்தில் மீட்சி வெளியீடாகச் சில நூல்களைக் கொண்டுவர நண்பர்கள் தீர்மானித்தார்கள். அவற்றில் ஒன்றாக மார்க்சிய அழகியல் ஒரு முன்னுரை நூலும் அறிவிக்கப்பட்டது. பாதியில் விட்டிருந்த மொழிபெயர்ப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மீட்சி புக்ஸ் வெளியீடாக முன்னரே வலியுணரும் மனிதர்கள் ( கவிதைகள் – பிரம்மராஜன் ), சுயம்வரம் மற்றும் கவிதைகள் ( கலாப்ரியா) ஆகிய நூல்கள் வெளிவந்திருந்தன. அடுத்த தவணையில் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் ( தொகுப்பாசிரியர் ஆர்.சிவகுமார்) , மார்க்ஸிய அழகியல் – ஒரு முன்னுரை இரண்டும் வெளியாயின. அந்த நாட்களில் நிலவிய தோழமையும் உற்சாகமும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. பிரம்ம ராஜன், ஆர்.சிவகுமார், த.பார்த்திபன், மறைந்த மீனா, மணிக்கண்ணன் என முகங்கள் நினைவில் ததும்புகின்றன.

இந்த இரண்டாம் பதிப்பில் பெரிதான மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. சில பிழைகளைத் திருத்தியதும் சில சொற்களை மாற்றியதும் தவிர.  

இன்னொருமுறை சந்திக்க வரும்போது



ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாகக் கவிதைபால் தீராத மோகம் கொண்டவனாக இருந்து வருகிறேன். அதே அளவுக் காலம் கவிதை எழுதுபவனாகவும் இயங்கியிருக்கிறேன். குறிப்பாகக் கவிதையும் பொதுவாக இலக்கியமுமே எனது சாரம் என்று நம்புகிறேன். ஆனால் அந்த நம்பிக்கை மீது எப்போதும் மெல்லிய சந்தேக நிழல் படர்ந்தே இருந்தது. இலக்கியமோ கலையோ அந்தரங்கச் சிக்கல்களுக்கு விடையளிக்குமா என்ற ஐயம் தொடர்ந்து இருந்து வந்தது. உண்மையில் அந்த அந்தத் தத்தளிப்பு நிலைதான் தொடர்ந்து இலக்கியத்தில் செயல் படத் தூண்டுதலாகவும் இருக்கிறது. இந்த இருண்ட காலம் கவிதையையும் இலக்கியத்தையும் ஈடில்லாப் புகலிடமாகக் காட்டியது. அவற்றை ஆறுதலாகவும் ஊக்கமாகவும் நிறுவியது. இருட்டும் ஒரு வெளிச்சந்தான் என்ற அறிவை அளித்தது.

இது என்னுடைய ஒன்பதாவது கவிதைத் தொகுப்பு.

இந்த நான்கு நூல்களில் 'மார்க்ஸிய அழகியல் - ஒரு முன்னுரை' பரிசல் செந்தில் நாதனின் மலர் புக்ஸ் வெளியீடு. பிற மூன்றும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருப்பவை. நூல்கள் வெளியாகக் காரணமாக இருந்த எல்லாருக்கும் மிக்க நன்றி.

@