திங்கள், 30 மே, 2016

பஷீரின் ‘காதல் கடிதம்’ - முன்னுரை


லக்கியத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்து ஆக மொத்தம் முப்பத்தியெட்டு புத்தங்கங்களை வைக்கம் முகம்மது பஷீர் அளித்திருப்பதாக அவரது நூல் விவரப்பட்டியல் உறுதிப்படுத்துகிறது. அவற்றில் முதன்மை யானவை அவரது புனைவெழுத்துக்களே. கதைகளும் நாவல்களும். நூற்றுச் சொச்சம் கதைகள். பன்னிரண்டு நாவல்கள். மூன்று தொடர்கதைகள். இந்த வகைமைகளில் பஷீர் எழுதியவை தனித்துவமானவை. அவரது சிறு கதைகளைப் போலவும் நாவல்களைப் போலவும் அவருக்கு முன்பு எழுதப் பட்டிருக்கவில்லை.

மலையாளத்தில் சிறுகதை, நாவல் ஆகிய இரண்டு வடிவங்களும் அறிமுகமான சில பதிற்றாண்டுகளுப் பின்னர் எழுத வந்தவர் பஷீர். அவரது வருகைக்கு முன்புவரை, ஆரம்பகாலச் சிறுகதைகளின் வடிவங்களிலேயே சிறுகதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. முதல் நாவல்களை அடியொற்றியே நாவல்கள் எழுதப்பட்டன. தனக்கு முன்பிருந்த இந்தப் புனைவெழுத்து வடிவங்களைக் கடந்தவையாகவே அல்லது மீறியவை யாகவே பஷீர் தனது சிறுகதைகளையும் நாவல்களையும் முன்வைத்தார். அவரது படைப்பு வடிவங்களுக்கு அவரே முன்னோடியும் தொடர்ச்சியும். 'மதில்கள்' நாவலில் 'நானே பூங்காவனமும் பூவும்' என்று  சொல்லுவது  அவரது  படைப்புச்  செயல்பாட்டுக்கும் பொருந்தும்.


சிறுகதை, நாவல் ஆகியவற்றுக்கு அன்று வாய்த்திருந்த உருவங்களுடனோ இன்று நடைமுறையில் இருக்கும் உருவங்களுடனோ பஷீரின் ஆக்கங்களுக்கு ஒற்றுமையில்லை. அவை பஷீரின் ' தான் தோன்றித்தன' மான வடிவங்கள். இலக்கிய வழக்கை ஒட்டியே  அவை சிறுகதைகள் என்றோ நாவல்கள் என்றோ பகுக்கப்படுகின்றன. அல்லது வகைப்படுத்தும்  வசதிக்காகவே அப்படிச் சொல்லப் படுகின்றன. குறிப்பாக, நாவல்கள். அவரது சமகாலத்து நாவல்களையும் இன்றைய நாவல்களையும் ஒப்பிட்டால் பஷீருடையவை நாவல்களே அல்ல. தான் எழுதுவது கதையல்ல ; சரித்திரம் என்றே பஷீர்  குறிப்பிட்டு வந்தார். தன்னை எழுத்தாளனாக அல்ல சரித்திரக்காரனாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளவும் செய்தார். சில சமயங்களில் சில பக்கங்களில்  சுருக்கமான வரலாறு. அதுவே சிறுகதை. சில சமயம் அதிகப் பக்கங்களில்  நீளும் சரித்திரம்.  அதுவே நாவல்.  'பாத்தும்மாவின் ஆடு' நாவலைத் தவிர பிற படைப்புகள் எதுவும் நூறு பக்கங்களைத் தாண்டாதவை. பெரும்பாலானவை முப்பது பக்கங்களுக்கு மிகாதவை. இவற்றை நாவல்கள்  என்று அழைப்பது உயர்வு நவிற்சி மட்டுமே. உண்மையில் இன்றைய இலக்கிய அளவுகோலின்படி இவை அனைத்தும் நீண்ட சிறுகதைகள் என்றே சொல்லப்பட வேண்டியவை. அப்படித்தான் அவை சொல்லப்பட்டுமிருக்கின்றன.மூன்றுசீட்டு ஆட்டக்காரனின் மகள், ஆனைவாரியும் பொன்குருசும், உலகப் புகழ் பெற்ற மூக்கு ஆகியவை தொடர் கதைகளாக வெளியானவை. வார இதழ்களில் இரண்டு முதல் நான்குவாரத் தவணைகளாக  நீண்ட சிறுகதைகள் என்ற  தலைப்பின் கீழ்தான்   இந்தப் படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. இதன் மூலம் மலையாள இதழியலில் தொடர்கதை என்ற வகைமைக்குத் தொடக்கமிட்ட பெருமையும் பஷீருக்கு உரியதாகிறது.


தன் படைப்புகள் பக்க அளவில் சிறியதாக இருப்பதன் காரணங்களை  பஷீரே விளக்கியிருக்கிறார். ஆரம்பக் காலத்தில் தனது படைப்புகளைத் தானே அச்சிட்டுப் புத்தகமாக்கினார். அதை அவரே சுமந்து சென்று பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்பனை செய்தார்.  'புத்தகத்தின் விலை  ஓரணாவுக்குள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்தத் தொகையின் மதிப்புக்குரிய புத்தகத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்றால் பக்கங்கள் குறைவாக இருக்கவேண்டும் . பக்கம் கூடினால் விலையும் கூடுமே? அதிக பக்கமுள்ள புத்தகத்தை அதிக விலை வைத்து அச்சிட எனக்கும் வசதியில்லை. இது ஒரு காரணம். குறைவான பக்கமுள்ள புத்தமாக இருந்தால்  வாங்குபவர் பஸ்ஸுக்கோ ரயிலுக்கோ காத்திருக்கும் நேரத்தில் அதை வாசித்து முடித்து விடுவார். அவரிடமிருந்து அதே புத்தகத்தைப் பாதி விலைக்கு வாங்கி மறுபடியும் இன்னோருவரிடம் முழு விலைக்கு விற்று விடுவேன். இந்த வியாபார உத்திதான் இரண்டாவது காரணம்' என்று விளக்கியிருக்கிறார் பஷீர். இது புறக் காரணம். அவரது படைப்பாக்க முறையே இந்தக் குறுவடிவங்களுக்குக்   காரணம்இன்று வாசிக்கக் கிடைக்கும்  பஷீர் படைப்புகள் பலவும் எளிதான தோற்றம் கொண்டவை; சரளமானவை; ஒரே வீச்சில் எழுதி முடித்தவைபோலத் தெரிபவைஆனால் உண்மையில் அவை அனைத்தும் பலமுறை திருத்தியும் மாற்றியும் எழுதப்பட்டவை. பிரயத்தனப்பட்டு சிடுக்குகள்  களையப்பட்டவைஅதன் மூலம் எளிமையான வடிவத்தை எட்டியவை. பஷீரின் செய்நேர்த்தியை இப்படி விளக்கலாம்: பிற எழுத்தாளர்கள் தமது படைப்பு மையத்துக்கு அனுபவத்தின் ஏதுக்களைச் சேர்த்தபோது பஷீர் படைப்புக்காகத் திரட்டியிருந்த கூறுகளை நீக்குவதில் கவனமாக இருந்தார். ஏற்கனவே செதுக்கி முடிக்கப்பட்ட சிலையிலிருந்து தேவையற்ற பகுதிகளை நீக்குவதுபோன்றது பஷீரின் செய் நேர்த்தி. பஷீரின் நாவல்களைப் பொறுத்தவரை இந்த வடிவச் சிக்கனமும் செய்நேர்த்தியும் முதன்முதலில் துலக்கமாக வெளிப்பட்டது  'காதல் கடிதம்' ( பிரேமலேக்கனம் ) நாவலில்தான்
ஷீர் நாவல்களில் ஆகச் சிறியது 'காதல் கடிதம்'. பஷீர் நாவல்களின் பிரத்தியேக இலக்கணத்துடன் பொருந்தும் முதல் நாவலும் இதுவே.பஷீர் எழுதிய முதல் நாவல் 'ஜீவித நிழல்பாடுகள்' . நாவலாகவே எழுதி முழுமையாக்கப்பட்ட படைப்பு. எனினும் 'நவஜீவன்' வார இதழில் தொடராகவே வெளியிடப்பட்டது. பஷீர் நாவலுக்குரிய குணங்கள் எதுவும் இல்லாத வெறும் கதை இது. அதனாலேயே 1939 இல் எழுதி வெளியான நாவல் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1954 இல்தான் புத்தக வடிவம் பெற்றது.
ஆனால் அன்றைய எழுத்தாளர்கள் கையாளத் தயங்கிய கதை மையத்தைப் பஷீர் துணிச்சலாக எடுத்துக் கொண்டார் என்பதே இந்த நாவலை முக்கியமான தாக்குகிறது. கதாநாயகன் முகம்மது அப்பாஸ் வேலைதேடி அலைகிறான். அந்தச் சந்தர்ப்பத்தில் வசந்தகுமாரி என்ற இளம் பெண்ணைச் சந்திக்கிறான். விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவள் என்று தெரிந்ததும் அவள்மேல் அருவெறுப்புக் கொண்டு  விலகுகிறான். வேலை கிடைத்து வாழ்க்கை நிலைப்படத் தொடங்கிய தருணத்தில் அவனுக்கு வசந்தகுமாரியின் நினைவு வருகிறது. அவளுடைய காதல் மிளிரும் கண்கள் அவனை ஓயாமல் பின் தொடர்கின்றன. நண்பன் ஜப்பாரின் உதவியுடன் அவளைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அதுவரைக்கும் அவனுக்காகவே காத்திருந்த வசந்தகுமாரியுடன் இணைகிறான். இதுவே நாவலின் கதை. இன்றைய வாசிப்பில் இந்தக் கதைக்கு எந்தப் புதுமையும் ஈர்ப்பும் இல்லை. ஆனால் இரண்டு காரணங்களுக்காகவே அன்று வரவேற்புப் பெற்றது. ஒரு இளைஞன் பாலியல் தொழிலாளி ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்வதும் முஸ்லிம் இளைஞன் இந்துப் பெண்ணை மணந்து கொள்வதும் அன்று நடைமுறையை மீறிய ஒன்றாக இருந்தது. அந்த மீறலுக்காகவே இந்த நாவல் வரவேற்கப்பட்டது.


'காதல் கடிதம் ' பஷீர் எழுதிய இரண்டாவது நாவல். ஆனால் புத்தகமாக வெளிவந்த அவரது முதல் நாவலும் இதுவே. திருவனந்தபுரம் மத்திய சிறையில் கைதியாக அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சக கைதிகளுக்கு வாசித்துக் காண்பிப்பதற்காக பஷீர் எழுதிய 'வேடிக்கைக் கதை' இது. மூன்று ஆன்டுகளுக்குப் பின்பு  1943 இல் புத்தகமாக வெளியானது. மிகுந்த வரவேற்பைப் பெற்றது.


கேசவன்நாயர் என்ற இந்து இளைஞன் சாராம்மா என்ற கிறித்துவ இளம்பெண்ணைக் காதலிப்பதே கதையின் மையம்.இறுதிப் பகுதிவரை கேசவன்நாயரின் காதலைப் பரிகசித்துக் கொண்டே யிருக்கும் சாராம்மா கடைசியில்தான் அவன் மீதான அன்பை வெளிக்காட்டுகிறாள். அதுவரை அவனைக் கோல்முனைக் குரங்காக ஆட்டி வைக்கிறாள். ஒரு கட்டத்தில்  தலைகீழாகவே நிற்கச் செய்கிறாள். ஒரு நாயர் பையன் நஸ்ராணிப் பெண்ணின் பின்னால்  திரிவதும் அவள் அவனை ஆட்டி வைப்பதும் தங்கள் இனத்தை அவமதிப்பது என்று நாயர் சமூக அமைப்பான என்.எஸ்.எஸ். ( நாயர் சர்வீஸ்  சொசைட்டி )களமிறங்கியது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான அரசு புத்தகத்துக்குத்  தடை விதித்தது. 'இது ஒரு கலைப்படைப்பு. ஒரு தமாஷான கதை. இதன் நோக்கம் வாசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பது மட்டுமே. நாயர்களை இழிவுபடுத்துவது அல்ல' என்று பஷீர் பதில் அறிக்கை வெளியிட நேர்ந்தது.


எளிய வேடிக்கைக் கதைதான் 'காதல் கடிதம்'. ஆனால் ஒருவகையில் பிற்கால பஷீர் நாவல்களுக்கு முன்னோடியானது. பிந்தைய நாவல்களின் பஷீரின் எழுத்தியல்பாகக் காணும் பல அம்சங்களை இந்த முதல் நாவல் கொண்டிருக்கிறது. எளிமையான கதையோட்டம். நேரடியான மொழி. பஷீரே உருவாக்கிய பிரத்தியேகமான சொற்கள். ஒலிக் குறிப்புகள். அசட்டுப் புத்திசாலிகளான ஆண்கள். அதிசாமர்த்தியமான பெண்கள். தன்னைத்தானே எள்ளலுக்கு ஆட்படுத்திக் கொள்ளும் போக்கு. சாதாரணமானதாகத் தென்படும் தருணங்களில் ஒளிந்திருக்கும் அசாதாரமான திருப்பங்கள். இந்த பஷீரிய இயல்புகள் முதன் முதல் வெளிப்படும் நாவல் 'காதல் கடிதம்'. எழுதப்பட்டு ஆறு பதிற்றாண்டுகள் ஆன் பின்னும் இந்தப் படைப்பு அதன் உயிர்ப்பும் ஒளியும் குன்றாமல் வாழ்கிறது என்பது இதைப் புனரெழுத்தாக்கும் தருணத்தில் அலாதியான மகிழ்ச்சியுடன் உணர முடிந்தது. மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆரம்ப அடையாளம் வைக்கம் முகம்மது பஷீரிடமிருந்துதான் புலப்படத் தொடங்கியது என்ற விமர்சன மதிப்பீட்டையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது. அந்த மகிழ்ச்சியையும் இலக்கிய மதிப்பையும் பஷீரைத் தமிழில் நேசிக்கும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவனந்தபுரம்                                                சுகுமாரன்
27 பிப்ரவரி 2016