புதன், 21 டிசம்பர், 2011

திங்கள், 19 டிசம்பர், 2011

பசியின் வாசனை








திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து
சென்னை சென்ட்ரல்வரை செல்லும்
12624 சென்னை மெயில்
பத்தொன்பது மணி பதினைந்து நிமிடத்துக்கு
எர்ணாகுளம் டவுன் சந்திப்பைக் கடந்ததும்
கூட்டம் நிரம்பிய பொதுப் பெட்டிக்குள்
வாசனைகளின் மாநாடு ஆரம்பமானது.

விறைப்போ குழைவோ இல்லாமல்
பதமாகக் கிளறப்பட்ட புளியோதரை
சம்புடத்தைத் திறக்கச் சொல்லி
மூடி வழியாகக் கசிந்து கொண்டிருந்தது.

சிட்டிகைப் பெருங்காயம் கூடிப்போன
கத்தரிக்காய் சாம்பார்
பிளாஸ்டிக் கலத்துக்குள்ளிருந்து
வழியத் தயாராகிக் கொண்டிருந்தது

ஒட்டி நின்ற இன்னொரு கலத்துக்குள்
மூழ்கி மிதந்து கொண்டிருந்த கொத்துமல்லி
இனியும் உடம்பில் ரசமில்லை என்று
ஒப்புதல் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தது.

தருணம் இது; விட்டால்
மறுதரப்புக்கு மாறிவிடுவேன் என்று
தியாகத்தால் வாடிய இலையின் ஆதரவுடன்
தயிர் சாதம்
புளித்த அறிக்கையைத் தயாரித்துக் கொண்டிருந்தது.

அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து
சப்பாத்திகளில் புரண்டெழுந்த லவங்கக் கும்மாளம்
மின்விசிறியை ஒருமுறை வட்டமிட்டு
பல்லேபல்லே என்று இருக்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது

இணையைப் பிரிந்த கோழிக்கால்
வெள்ளி மினுக்கும் அலுமினிய உறையை
உதைத்துக் கிழித்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது

குடம்புளியும் உப்பும் சொன்ன
அந்தரங்க நகைச்சுவைக்குக் கெக்கலித்த சாளைமீன்
நகைச்சுவையின் அர்த்தத்தை யோசித்துப்
பிளாஸ்டிக் உறைக்குள் குழம்பிக் கொண்டிருந்தது

கொஞ்சம் கூட அடக்கமில்லை என்று
செய்தித்தாள் பொதிக்குள்ளிருந்த அயிரைக் கருவாடு
உரத்த குரலில் அதட்டிக் கொண்டிருந்தது

இருக்கைகளில் இருந்தபடியும்
எழுந்தபடியும் நடந்தபடியும்
வாசனைகள்
ஒன்றோடு ஒன்று கைகுலுக்கிக் கொண்டன
வாசனைகளின் சகவாசனைகளும்
எல்லா வாசனைகளையும் அணைத்துக் கொண்டன

வாசனைகளின் சந்தடிக்கிடையில்
பார்வையற்ற பாடலொன்று
எந்த வாசனை மேலும்
மோதி விடாமல் தள்ளாடியபடியே
'கண்ணு திறக்காத தெய்வங்களே,
களிமண் பொம்மைகளே' என்று
தாவணி ஏந்திப் போய்க் கொண்டிருந்தது


சென்னை மெயிலை அங்கமாலி ரயில் நிலையம்
பத்தொன்பது மணி நாற்பத்தேழு நிமிடங்களுக்கு
வரவேற்று நிறுத்தியது
எல்லா வாசனைகளும் இருக்கையில் அமர்ந்தன

வாசலைத் துளாவி நடந்த
பார்வையற்ற பாடல்
'இன்றும் ஒன்றுமில்லை' என்ற
சொற்களை மென்று விழுங்கி
ஏப்பத்தை ரயில் பெட்டிக்குள் விட்டுவிட்டு
இறங்கிப் போனது

பத்தொன்பது மணி நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு
அங்கமாலியை ரயில் கடந்ததும்
உள்ளே திரும்பிய பார்வையற்ற ஏப்பம்
ஒவ்வொரு வாசனையையும் முகர்ந்து கொண்டிருந்தது
ஏக்கத்துடன்.