வியாழன், 16 ஜனவரி, 2020

காற்றில் எழுதல் ( காற்றில் எழுதுதல் )


                                           சேரன் கவிதைகள் - மலையாளத்தில்


2017 இல் மறைந்த கவிஞர் ஓ என் வி குரூப்பின் பெயரில் துபாய் மலையாளிகள் கவிதைக்கான சர்வதேச விருது ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். முதல் விருது பெறும் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நண்பர் சேரன். அதையொட்டி விழாவில் வாசிக்கவும் அறிமுகக் குறி்ப்பில் இடம் பெறவும் எனச் சேரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருடைய கவிதைகள் சிலவற்றை மலையாளத்தில்  மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன். நான்கோ ஐந்தோ கவிதைகளை மொழியாக்கம் செய்தேன். அவற்றுள் விருது விழா மேடையில் வாசிக்கப்பட்ட கேள்வி என்ற கவிதைக்கான மொழிபெயர்ப்பு எல்லார் கவனத்தையும் ஈர்த்தது. அதைக் கருத்தில் கொண்டு மேலும் சில கவிதைகளை மொழிபெயர்த்து மலையாளத்தில் ஒரு தொகுப்புக் கொண்டுவருவது சாத்தியமா என்று சேரன் கேட்டிருந்தார். அன்றைய  மனநிலையில் சாத்தியம் என்று ஒப்புக்கொண்டேன்.


ஆனால் அது நடைமுறையில் எளிதாக இருக்கவில்லை. முன்பே ஏற்றுக் கொண்டிருந்த பணிகள், ‘பெருவலி’ நாவலுக்கான தரவுச் சேகரிப்பு, களப்பயணம்,  கொரியாவில் எழுத்தாளர்  உறைவிட வாசம், நாவல் எழுத்து என்று தொடர்ந்த வேலைகளால் மலையாள மொழியாக்கம் பின்னுக்குச் சென்றது.  இது தொடர்பாகச் சேரன் விசாரித்த சந்தர்ப்பங்களிலெல்லாம் குற்ற உணர்வு மேலிட்டது. அதை மறைத்துக் கொண்டு இந்த மாத இறுதிக்குள் முடித்து விடலாம்,. இந்த ஆண்டு முடிவதற்குள் முடித்து விடலாம் என்று சாக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். எனினும் திட்டம் ஓர் அங்குலம் கூட முன்னேறவில்லை. சேரன், அம்புலிமாமாக் கதையில் வரும் விக்கிரமாதித்தியனைப்போல மனம் தளராமல் காத்திருந்தார்.


இதற்கிடையில் கோழிக்கோடு கடற்கரையில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் பங்கேற்க வந்து நட்புவலை வீசிக் கணிசமான மலையாளக் கவிஞர்களைப் பிடித்து வைத்திருந்தார் சேரன். அனிதா தம்பி, ஓ பி சுரேஷ், டி அனில்குமார் போன்ற கவித் தோழர்களின் ஒத்துழைப்புடன் சில கவிதைகளுக்கு மலையாள உருமாற்றம் பெற்றிருந்தார். அவை உதிரி எண்ணிக்கையிலானவை; ஒரு தொகுப்பாகத் தேறும் அளவு இல்லாதவை. எனவே மீண்டும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட நேர்ந்தது. இந்த முறை அனிதா தம்பி துணைக்கு வந்தார். ‘கவிதைகளை ஒருவரே மொழியாக்கம் செய்வது விரைவான பலனைத் தராது. தோழமைக் கவிஞர்கள் சிலரைத் துணைக்கு அழைப்போம். கவிதைகளைப் பங்கிட்டு அளிப்போம். மலையாள மொழிபெயர்ப்புக் கைக்குக் கிடைத்ததும் இருவரும் மேற்பார்வை யிட்டுச் செம்மைப்படுத்தி இறுதி வடிவத்தை உருவாக்கலாம்’. இப்படித் திட்டமிட்டதும் காரியம் சீக்கிரம் கைகூடி விடும் என்று தோன்றியது. அனிதா தம்பி ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். பிற கவிஞர்களும் அவரவர் நிலையில் பணி நெருக்கடி மிகுந்தவர்கள். திட்டம் மீண்டும் சண்டிக் குதிரையானது. இரண்டு ஆண்டுகள் பாய்ந்து ஓடின.  பதிப்பாளரான டி சி புக்ஸிடம் தொகுப்பைத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்த சேரன் இருதலைக் கொள்ளி எறும்பானார்.  


ஆனாலும்  இருவருக்குமான தொலைபேசி உரையாடல்களில் ‘சுகு, அவசரமொண்டும் இல்லை. எப்போ முடியுமோ அப்போ வரட்டும்.ரவி டி சி, சச்சிதானந்தன் ரெண்டு பேரிடையும் நான் சொல்லிக் கொள்ளுகிறேன்’ என்று சொல்வது குற்ற உணர்ச்சியைக் கிளப்பும்; சேரனின் ராஜதந்திரமும் விளங்கும். ஒரு தேசத்தின் ராஜ தந்திர நிபுணர் ஆக இருக்க வேண்டியவர் பேராசிரியராக இருக்கும்  துரதிர்ஷ்டத்தை யோசித்து வருத்தமும் ஏற்படும். இதை முடித்து விட்டுத்தான் அடுத்த ஜோலி என்று சபதம் மேற்கொள்ளத் தூண்டும். அதுவும் எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை. எனக்கு வேலைப்பளு இல்லாதபோது அனிதா அகப்பட மாட்டார். அவர் தேடும்போது நான் சிக்க மாட்டேன். இந்த இழுபறி நிலையை இருவரும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில்  சந்தித்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வந்தோம். முன்பே மொழியாக்கம் செய்யச் சொல்லிக் கேட்டிருந்த கவிஞர்களிடமும் புதிதாகச் சிலரிடமும் பொறுப்பை ஒப்படைத்தோம். விளைவு உற்சாகம்
அளிப்பதாக அமைந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் மலையாள வடிவம் பெற்றன.


ஒரு தொகுப்புக்கு ஐம்பது கவிதை தாராளம் என்று எண்ணியிருந்த நிலையில் மேலும் கவிதைகள் மொழியாக்கம் பெற்றன. பி.ராமனும் வி என் கிரிஜாவும் அன்வர் அலியும் அபார வேகத்தில் புதிய மொழியாக்கங்களை அளித்தனர். ஏறத்தாழ எழுபத்தைந்து கவிதைகள் மலையாளத்தில் பெயர்க்கப்பட்டன. அது தொகுப்புப் பணியை மேலும் சிக்கலாக்கியது. ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த கவிதையையே ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் மொழியாக்கம் செய்திருந்தார்கள்.  யாருடைய மொழிபெயர்ப்பைச் சேர்ப்பது, யாருடையதை நீக்குவது? கவிஞர்களின் சாபத்துக்கு ஆளாகாமல் எப்படி இதைச் சமாளிப்பது? எண்ணிக்கையை எப்படிச் சீராக்குவது?  இந்தக் கேள்விகள் குழப்பத்துக்குள்ளாக்கின? மூத்த கவிஞர்களான ஆற்றூர் ரவிவர்மாவும் சச்சிதானந்தனும் ஏற்கனவே சேரனின் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தார்கள். தமிழ்க் கவிதைகளின் மொழிமாற்றத் தொகுப்பான புது நானூறுக்காக சேரனின் நான்கு கவிதைகளை ஆற்றூர் மலையாளப் படுத்தியிருந்தார்.’ பல லோக கவிதை’ திரட்டில் சச்சிதானந்தன் 22 கவிதைகளை மொழிபெயர்த்திருந்தார். இந்தக் கவிதைகளைத் தொகுப்பில் சேர்க்க வேண்டுமா? என்ற யோசனை முளைத்தது.


ஆற்றூரும் சச்சி மாஷும் மூத்த கவிஞர்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்வந்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சச்சிமாஷின் கவிதையில் சம்ஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கம் இருந்தது. ஆற்றூரின் கவிதையில் தமிழுக்கு இணையான மலையாளச் சொற்கள் இருந்தன. சச்சிதானந்தன் மொழியாக்கத்தில் சேரன் பறக்கவிட்ட வண்ணத்துப் பூச்சி ‘சித்ர சலப’மாக வளைய வந்தபோது ஆற்றூர் ரவிவர்மாவின்  மொழிமாற்றத்தில் அது ‘பூம்பாற்ற’யாகச் சிறகடித்தது. இவற்றில் மொழிச் சீர்மையைக் கொண்டு வருவது இயலுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.


எனினும் ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன் இருவரின் மலையாள மொழிபெயர்ப்புகள் இல்லாமல் சேரன் தொகுப்பைக் கொண்டு வருதல் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டோம்.சேரனை மலையாள வாசகர்களிடம் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆற்றூர் ரவிவர்மா. அவரைச் சர்வதேசக் கவிஞராக முன்வைத்தவர் சச்சி மாஷ். அவர்களது பங்களிப்பு அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு அனிதாவும் நானும் வந்தோம். இதிலும் சிக்கல் இருந்தது. மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  சச்சிதானந்தனின் பல லோக கவிதை தொகுப்பில் இருபத்திரண்டு கவிதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு கவிதைகள் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறாகவே மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அதாவது இரண்டு கவிதைகளுக்கு நான்கு மொழிபெயர்ப்பு வடிவங்கள். அவற்றில் இரண்டை மட்டும் தேர்ந்தெடுத்தோம். சச்சிதானந்தன் சில கவிதைகளைச் சேரனுடன் கலந்து பேசியும் சிலவற்றை ஆங்கிலத்திலிருந்து அப்படியேயும் மொழிபெயர்த்திருந்தார். அவற்றைத் தமிழ் மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது பொருட் பேதங்கள் தெரியவந்தன. அதை அவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தது. மொழிபெயர்ப்பின் சீரமைப்புக்கு அதை எடுத்துச் சொல்வது தவிர்க்க இயலாததாகவும் இருந்தது. நேர்ச் சந்திப்பில் இதைச் சுட்டிக் காட்டியதும் சச்சி மாஷ் வெளிப்படுத்திய பெருந்தன்மை நெகிழச் செய்தது. தமிழ் மூலத்தை வாசித்துக் காட்டச் செய்தார். பொருளை உள் வாங்கினார். ஆங்கிலம் வழி மேற்கொண்டதால் புகுந்து விட்டிருந்த மொழிக்குறைகளைத் திருத்திக் கொடுத்தார். அவ்வாறு ஒன்பது கவிதைகள் இறுதி வடிவம் பெற்றன. இந்த மொழியாக்கப் பணியின்போது அனிதாவுக்கு எனக்கும் கிடைத்த மறக்க முடியாத அனுபவம் சச்சி மாஷின் இந்த வாத்சல்யம் நிறைந்த ஒத்துழைப்பு.


சச்சிதானந்தனின் செயல், மொழியாக்கத்தின் சீரமைப்புக்குத் துணை செய்தது. ஆற்றூர் ரவிவர்மா தமிழ் மூலத்திலிருந்தே சேரன் கவிதைகளை மலையாளத்துக்கு மாற்றியிருக்கிறார். இப்போது சச்சிதானந்தனின் திருத்தப்பட்ட மொழியாக்கங்களும் தமிழ் மூலத்தை ஒட்டியே மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே சேரனின் இதர கவிதைகளையும் தமிழ் மூலத்தை ஒட்டியே சீரமைப்பது என்று முடிவு செய்தோம். மலையாளக் கவிஞர்களான அன்வர் அலி, பி.ராமன், வி.எம், கிரிஜா, பி.பி.ராமச்சந்திரன் ஆகியோருடன் தொடர்ந்து நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களும் மின் அஞ்சல், வாட்ஸ் ஆப் பரிமாற்றங்களும் கவிதைகளைச் செம்மைப் படுத்த உதவின. இந்தக் கவிஞர்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் பார்த்தபோது அடுத்த கவிதையைத் தமிழில் எழுதுவார்களோ என்று எனக்குச் சந்தேகம் வந்தது.


ஏற்கனவே மலையாளத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்த ஐந்து கவிதைகளில் நான்கை என்னால் மீட்க முடியவில்லை. முன்சொன்ன கேள்வி என்ற கவிதை மட்டும் கணினிச் சேமிப்பில் கிடந்தது. அத்துடன் அனிதாவுடன் அமர்ந்து உரையாடி இருவருமாகச் சேர்ந்து 8 கவிதைகளை மலையாளத்துக்கு மாற்றினோம். இதில் பெரும் பங்கு அனிதாவுடையது. இருவரும் ஏழெட்டு முறைகளுக்கு மேல் பல மணி நேரங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி 63 கவிதைகளைத் தேர்ந்தேடுத்துத் தொகுத்தோம். அவற்றை மொழிபெயர்ப்பாளர்களின் மொழி நடை சிதையாமல் செம்மைப் படுத்தினோம். அவற்றின் இறுதிப் படியைப் பார்வையிட்ட சச்சிதானந்தன் ‘ பலர் மொழிபெயர்த்தவை என்று சொல்ல முடியாதவகையில் மலையாள மொழியாக்கம் அமைந்திருக்கிறது’ என்று மின் அஞ்சலில் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது.


சேரன் கவிதைகள் மலையாளத் தொகுப்புப் பணி, மொழிபெயர்ப்ப தொடர்பாகச் சில அம்சங்களை, மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கவனத்துக்குக் கொண்டு வந்தன. மொழியாக்கம், மொழிபெயர்ப்பு என்பவறை விடவும் மொழிமாற்றம் என்ற வினைப்பெயரே பொருத்தமாகப் பட்டது. தமிழிலும் மலையாளத்திலும் இன்றும் புழக்கத்திலிருக்கும் சொற்களை அப்படியே வைத்துக் கொண்டோம். மலையாளத்தில் வாசித்தாலும் தமிழ் வாசிப்பின் பொருளைத் தரும் சொற்களைத் தமிழாகவே பயன்படுத்தினோம். சம்ஸ்கிருத வார்த்தைகளைக் கூடுமானவரை தவிர்த்தோம். கவிதை வரிகளையும் தமிழில் உள்ளவைபோலவே எடுத்தாண்டோம். இந்தச் செயல்கள் மூலத்திலிருந்து அதிகம் விலகி விடாத மொழியாக்கப் பிரதியை அளித்தன.


தமிழ் மலையாள மொழிபெயர்ப்பில் இந்த முயற்சியை முன்னெடுத்தவர் ஆற்றூர் ரவிவர்மா. மொழியாக்கம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக மொழிமாற்றம் என்பதை முன் மொழிந்தவரும் அவரே. எனவே அவருக்கு மறைமுகமான அஞ்சலியாகவும் இந்த முயற்சி அமைந்தது. இந்நூலுக்கு சச்சிதானந்தன் எழுதிய முன்னுரைக் குறிப்பு ஆற்றூரின் கவிதை – மறுவிளி – உடன் தொடங்குகிறது. அந்தத் தற்செயல் ஒற்றுமை மகிழ்ச்சியளித்தது. அந்த மகிழ்ச்சியின் விளைவாகவே நூலுக்கான தலைப்பையும்  சேரன் கவிதை ஒன்றுக்கு அளித்த மொழிமாற்றத்திலிருந்து எடுத்துக் கொண்டோம். ‘காற்றில் எழுதல் ( காற்றில் எழுதுதல் ). இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது நண்பர் சேரனின் சமர்ப்பணம். தனது கவிதைகளின் மலையாள மொழியாக்கத் தொகுப்பை அவர் ஆற்றூர் ரவிவர்மாவின்  நினைவுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார். அது மிகவும் பொருத்தமானது. ஈழத்தின் மானுட அவலம் பற்றி மலையாளத்தில் எழுதிய முதல் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா. அந்த வகையில் இது ஒரு கைம்மாறு காட்டலும்தான்.


ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன், சி.எஸ்.வெங்கிடேசுவரன், வி.எம்.கிரிஜா, அன்வர் அலி, பி.பி.ராமச்சந்திரன், பி.ராமன், அனிதா தம்பி, ஓ.பி.சுரேஷ், டி.அனில்குமார், சுகுமாரன் ஆகிய பதினொரு மொழிபெயர்ப்பாளர்களின் உற்சாகக் கூட்டுறவுடன் சேரனின் அறுபத்து நான்கு கவிதைகள் ‘காற்றில் எழுதல்’ மலையாளத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மலையாள ஆக்கங்கள் உருவாயின. இந்த நூலாக்கத்தில் ஒவ்வொருவருடைய பங்கும் முக்கியமானது. நூலை டி சி புக்ஸ் வெளியிடுகிறது. தமிழ்க் கவிஞர் ஒருவர் மலையாளத்தில் இத்தனை இயல்பாகவும் மதிப்புடனும் வரவேற்கப்படுவது இது முதன்முறை என்று எண்ணுகிறேன். மொழியைக் கடந்தது கவிதை என்பதற்கு இது அசலான எடுத்துக் காட்டு.

@


திங்கள், 13 ஜனவரி, 2020

பாப்லோ நெரூதா கவிதைகள் --- இரண்டாம் பதிப்பின் முன்னுரைபாப்லோ நெரூதாவின் மறைவுக்கு பின்பு எழுதிய நினைவுக் குறிப்பில் கவிஞரும் நெரூதாவின் மாணவரும் நண்பரும் அண்டை வீட்டவருமான நிக்கனார் பாரா இவ்வாறு எழுதினார்: ‘ நான் நெரூதாவின் திடீர் வாசகன் அல்லன். பகுத்தறியக் கற்றுக்கொண்டது முதலே நெரூதா என்னை ஈர்த்திருந்தார். ஒருமுறையாவது அவரைப் பற்றிச் சிந்திக்காமல் ஒருநாளும் கடந்து சென்றதில்லை’.பாராவின் தகுதியோ நெரூதாவுடன் அவருக்கிருந்த அணுக்கமோ எனக்கு இல்லை. எனினும் மேற்கோள் வாசகங்களை என்னுடையவையாகவும் சொல்லிக் கொள்ளும் உரிமை இருப்பதாக நம்புகிறேன். இந்த நூலின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் ‘கவிஞனாக எனது ஆதார அக்கறைகளைப் பக்குவப்படுத்தியதிலும் மனிதனாக எனது தார்மீக உணர்வுகளைக் கூர்மைப்படுத்தியதிலும் செல்வாக்குச் செலுத்திய ஆளுமைகளில் நெரூதாவும் ஒருவர்’ என்று உரிமை பாராட்டிக் கொண்டதும் அந்த நமபிக்கையில்தான். பாராவைப்போல ஒரு நாளைக்கு ஒருமுறை நினைக்கிறேனோ இல்லையோ கவிதையெழுத்தின் தருணங்களிலும் கவிதை பற்றிச் சிந்திக்கும் வேளைகளிலும் கவிதை மீதான உரையாடல் பொழுதுகளிலும் நெரூதா நினைவு எழாமல் இருந்ததில்லை.இந்த நூலின் முதல் பதிப்பு 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதுவரை நெரூதா மீதும் அவர் கவிதைகள் மீதும் கொண்டிருந்த மோகம் மொழியாக்கப் பணிக்குப் பின்னர் முன்னை விடவும் அதிகமாயிற்று. எப்போதும் தொடர்ந்து வாசிக்கும் ஆசைக்குரிய கவிஞராக  நிலைபெற்றார். இது என் தனியனுபவம் மட்டுமல்ல. உலகெங்குமுள்ள கவிதை வாசகர்களின் பொது அனுபவம்.2004 இல் நெரூதாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது பெயர் இலக்கிய முக்கியத்துவம் பெற்றது. அவரது கவிதைகள் புதிய பதிப்புகளைக் கண்டன. புதிய மொழிபெயர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. மறைவுக்குப் பின்னான கவிதைகள் தொகுக்கப்பட்டன. அதுவரை வெளியாகியிராத கவிதைகள் கண்டுபிடிக்கப் பட்டன. நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு ‘பாப்லோ நெரூதா – வாழ்வுக்கான வாஞ்சை’  ஆடம் ஃபெயின்ஸ்டீனால் எழுதி வெளியிடப்பட்டது. நெரூதாவின் மனைவி மெட்டில்டே உருஷியா எழுதிய ‘பாப்லோ நெரூதாவுடன் என் வாழ்க்கை’ என்ற தன் வரலாற்று நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது. நெரூதாவின் மரணத்தைத் துப்பறியும் கதையோட்டமாக விவரிக்கும் ராபர்ட்டோ அம்புயேரோவின் நாவல் – ‘தி நெரூதா கேஸ்’ – வெளியிடப் பட்டது. 2004 - 2019 ஆண்டுகளின் இடைவெளியில் எனக்கு வாசிக்கக் கிடைத்தவை இந்த நூல்கள். இவற்றின் உள்ளடக்கங்கள் நெரூதா மீதான என் பித்தை முற்றச் செய்தன.மானுடப் பெருவாழ்வின் ஒவ்வொரு அணுவையும் உயிர்ப்புடன் சித்தரித்த, முடிவற்ற காலத்தின் ஒவ்வொரு நொடியையும் கவிதையின் ஓயாத் துடிப்பாக்கிய, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவையும் தனது அசைவாக மாற்றிக் காட்டிய பேராளுமையின் பிடிக்குள் சிக்குண்டு கிடப்பது பேறல்லவா? அந்தப் பேறு வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்பதே என் பேராசை. இந்த இரண்டாம் பதிப்புக்கான தூண்டுதல் அந்தப் பேராசையே.‘எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்’ என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிட்டார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல;  இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர். நெரூதா மறைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆகிறது. இந்தக் கால அளவில் அவர் அளவுக்கு உலகளாவிய செல்வாக்குப் பெற்ற ஒரு கவிஞரின் பெயரைக் கேள்விப்படவில்லை. அவரை விடவும் தேர்ந்த மொழியிலும் நுண்ணிய தளங்களிலும் புதுமை நோக்கிலும் எழுதிய  கவிஞர்களும் எழுதும் கவிஞர்களும்  வெவ்வேறு மொழிகளில் இருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதும் கொண்டாடும் கவிஞராக ஒருவரும் இல்லை. இது அவரைக் காலத்தின் கொடையாகப் போற்றச் செய்கிறது.

பைபிள் தொகுப்பாசிரியர்களுக்குப் பின்னர் மிக அதிகமான மொழிகளிலும் மிக அதிகமான முறையும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி நெருதாவாகத்தான் இருக்க முடியும். இன்று கிடைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மேலோட்டமாகப் பார்த்தாலேயே இது விளங்கும். குறைந்தது நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இலான் ஸ்டாவன்ஸ் தொகுத்துப் பதிப்பித்திருக்கும் ‘பாப்லோ நெரூதாவின் கவிதை’ பெருந்திரட்டில் முப்பத்தேழு மொழிபெயர்ப்பாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களில் தொண்ணூற் றொன்பது வீதமானவர்களும் கவிஞர்கள். கவிஞர்கள் என்ற தகுதியால் புகழ்பெற்றவர் கள். கவிஞர்களால் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் பாப்லோ நெரூதாவாக  இருக்கலாம். இது அவரது கவியிருப்புக்கு மதிப்பைக் கூட்டுகிறது. கூடவே கவிதை களுக்குப் பல வண்ணங்களையும் அளிக்கிறது. தனது கவிதைகளுக்குப் பலருடையதும் பலவகையுமான  மொழியாக்கங்கள் வருவதை நெரூதாவும் மனமுவந்து அனுமதித்திருக்கிறார். சில கவிதைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆங்கில ஆக்கங்கள் உருவாகியுள்ளன. அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டிருப்பதும் கவனத்துக்குரியது.‘நான் சில விஷயங்களை விளக்குகிறேன்’ என்ற நெரூதாவின் பரந்த கவனம் பெற்ற கவிதையை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஸ்பானிய உள்நாட்டுப் போரின் கொடூர விளைவைச் சித்தரிக்கும் இந்தக் கவிதையை அவர் 1947 இல் எழுதினார். அதே ஆண்டு மூல மொழியில் வெளியான ‘மூன்றாவது வசிப்பிடம்’ ( டெர்ஸெரா ரெசிடென்சியா ) தொகுப்பில் இடம் பெற்றது. இதன் முதலாவது ஆங்கில மொழியாக்கம் நதானியேல் தார்னால் மேற்கொள்ளப்பட்டது. நெரூதாவின் சரிபார்ப்புக்குப் பின்னர் 1970 இல் வெளிவந்த பென்குவின் கவிதை வரிசை – ‘பாப்லோ நெரூதா கவிதைகள்’ நூலில் சேர்க்கப்பட்டது. ‘நான் சில விஷயங்களை விளக்குகிறேன்’  ( I am explaining a few things ) என்று தலைப்பிட்ட கவிதையின் தொடக்க வரிகள் இவ்வாறு:

‘நீங்கள் கேட்கப் போகிறீர்கள்
எங்கே போயின லைலாக் மலர்கள்?
எங்கே பாப்பி மலரின் இதழ்கள் கொண்ட ஆன்மீகம்?
எங்கே மீண்டும் மீண்டும் சொற்களைச் சிதறடித்து
அவற்றில் துளையிட்ட மழை?
எங்கே பறவைகள்?

பாப்லோ நெரூதா அறக்கட்டளையுடன் இணைந்து, 2004 ஆம் ஆண்டு, மார்க் எய்ஸ்னெர் வெளியிட்ட தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பிலும் இதே கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மொழிபெயர்ப்பு புதிது. தலைப்பும்  ‘நான் சிலவற்றை விளக்குகிறேன்’ ( I explain some things ) என்று மாற்றம் கண்டது. முன்னர் குறிப்பிட்ட அதே வரிகள் புதிய மொழிபெயர்ப்பில் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.


நீங்கள் கேட்பீர்கள்: லைலாக் மலர்கள் எங்கே?
பாப்பி மலர்களால் நகாசு செய்யப்பட்ட ஆன்மீகம் எங்கே?
எப்போதும் வீசியடிக்கும் மழை
துளைகளாலும் பறவைகளாலும் நிரப்பும்
அவனது சொற்கள் எங்கே?

இந்த எடுத்துக்காட்டு ஒரே கவிதைக்கு வாய்த்திருக்கும் இரண்டு மொழியாக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் ஒரே ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்த்தபோதும் கவிதை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக அமைந்தி ருப்பதை அலசிப் பார்ப்பது சுவாரசியமாக இருந்தது.இந்த அலசல் சில சிந்தனைகளைத் தூண்டின. எந்த மொழிபெயர்ப்பும் இறுதியானது அல்ல; மூலப் பிரதிக்கு ஈடுநிற்பதும் அல்ல. நெரூதாவின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அலெய்ஸ்டர் ரெய்ட் குறிப்பிடுவதுபோல ‘மொழிபெயர்ப்பு மூலப் படைப்பை நெருங்குவதற்கான நடைமுறை; ஒருபோதும் மூலத்தை நெருங்கிவிட முடியாது என்று தெரிந்தே மேற்கொள்ளப்படும் நடைமுறை’ என்பதை நெரூதா மொழிபெயர்ப்பு எனக்குக் கற்றுக் கொடுத்தது. கூடவே இத்தனை மொழிபெயர்ப்பு களுக்குப் பின்னரும் அடியும் முடியும் துலக்கமாகக் காட்டாத கவிதையின் புதிரான அழகை வியக்கவைத்தது. ஒவ்வொரு மொழியாக்கமும் இன்னொரு தனிப் படைப்பாக மாறும் உயிர்வினையைப் புரிந்துகொள்ளச் செய்தது. ஒவ்வொரு கவிஞரின் மொழியாக்கத்திலும், கண்ணாடிப் பேழை மீது அதைப் பற்றியிருக்கும் விரல்களின் ரேகை பதிவதுபோல, அந்தக் கவிஞரின் அடையாளம் பதியும் விந்தை இயல்பை உணர்த்தியது.எனது மொழியாக்க நூல் – பாப்லோ நெரூதா கவிதைகள் – வெளிவந்த வேளையில் சிறிதும் பெரிதுமாகப் பலரது மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. அவற்றுடன் ஒப்பிட்டு எனது மொழிபெயர்ப்பும் பேசப்பட்டது. கணிசமாக விமர்சிக்கப்பட்டது. அதே சமயம் வெகுவான பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உள்ளானது. நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன் அல்லன். என்னைக் கவர்ந்த படைப்பை மேலதிகமாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் இலக்கிய மேன்மை காரணமாக  சக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன். சுயநலம் நிறைந்த பொதுச் செயல்பாடு இது.  எனவே முன்சொன்ன விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் சுணங்கவோ பூரிக்கவோ இல்லை. ஆனால் உறுதியான ஆசை இந்த மொழியாக்கத்தில் எனக்கு இருந்தது. அழுக்குப் படிந்ததோ சீரற்றதோ ஆக இருந்தாலும் என்னுடைய விரலடையாளமும் அந்தக் கண்ணாடிப் பேழையில் பதிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதற்குக் காரணம் பாப்லோ நெரூதா மீதான எனது குறையாக் காதல்.நூலின் முதல் பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது.மனுஷ்யபுத்திரன் அளித்த உற்சாகமும் ஊக்கமுமே நெரூதா கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல் வடிவம் பெற உதவியவை. அவரது தூண்டுதல் இல்லாமலிருந்தால் இவை என் தனி வாசிப்புக்கான கைப்பிரதியாகவே எஞ்சியிருக்கும். முதல் பதிப்புக்கு மெய்ப்புப் பார்த்துச் செம்மையாக்கம் செய்தவர் நண்பர் யுவன் சந்திரசேகர். மொழியாக்க வேளையில் கடலுக்கு அப்பாலிருந்து இருவர் உதவினார்கள். முதலாமவர் - ‘ தி எசென்ஷியல் நெரூதா: செலக்டட் போயம்ஸ்’ நூலைத் தொகுத்துப் பதிப்பித்த மார்க் எய்ஸ்னெர். அந்த நூலை இந்தியாவுக்கு அனுப்பபடும் முதல் பிரதி என்று குறிப்பிட்டு அனுப்பினார். சில சந்தேகங்களுக்கு மின் அஞ்சல் வழியாக உடனுக்குடன் பதில் அளித்தார். பாப்லோ நெரூதா நினைவாகத் தொடங்கிய ரெட் பாப்பி ஆர்ட் ஹௌஸின் சுற்றிதழில் தமிழ் மொழிபெயர்ப்புப் பற்றிக் குறிப்பையும் வெளியிட்டார். இரண்டாமவர் – பிரசீலைச் சேர்ந்த ஜாஸ் இசையமைப்பாளரும் பாடகியுமான லூசியானா சோஸா. நெரூதா கவிதைகளுக்கு இசையமைத்துப் பாடியிருப்பவர். அவர் அனுப்பி உதவிய ஒலிவட்டு கவிதையின் புதிர் அமைப்பை விளங்கிக் கொள்ள உதவியது. இரண்டாம் பதிப்பு வெளிவரும் தருணத்தில் இவர்கள் அனைவரையும் மிக்க நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.


முதல் பதிப்பு வெளிவந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. அச்சில் இல்லாமலும் ஏறத்தாழ அதே அளவு காலம் ஆகியிருக்க வேண்டும். தொடர்ந்து பலரும் நூல் கிடைக்கவில்லை என்று குறையாகவும் கிடைக்குமா என்று சந்தேகத்துடனும் விசாரித்து வந்தார்கள். இரண்டாம் பதிப்புக்காகப் புதிய பதிப்பாளரை அணுகவும் தயக்கமாக இருந்தது. குறையைத் தீர்க்கவும் சந்தேகத்தைப் போக்கவும் தாமாக முன்வந்தவர் பரிசல் செந்தில்நாதன். புத்தகங்களின் அருங்காதலரான அவரை விட இந்தப் பதிப்பை வெளியிடத் தகுதியானவர் இல்லை. என்னிடமே இல்லாமற் போன நூலை ‘மீட்டெடுத்து’ வெளியிடுகிறார். மெய்ப்புப் பார்த்து உதவியவர்கள் தி. பரமேசுவரியும் கிருஷ்ண பிரபுவும். அண்மைக் காலமாக எனது புத்தகங்கள் அனைத்தையும் மேற்பார்வையிட்டுச் பிழை நீக்கி அளிப்பவர் செல்வராஜ் ஜெகதீசன். இந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

திருவனந்தபுரம்
31 டிசம்பர் 2019                                                    சுகுமாரன்மேற்கோள் நூல்கள்:
1.        Pablo Neruda – A Passion for Life, Adam Feinstein,  Bloosbury, Great Britain, 2004
2.        My Life with Pablo Neruda – Matlde Urrutia ( Alexandra Giardino Tr ), Stansford University Press, California, 2004
3.        The Neruda Case – Roberto Ampuero, Riverbend Books, New York, 2012
4.        Pablo Neruda: Selected Poems – Nathaniel Tarn Ed., Penguin Books, Great Britain, 1975
The Essential Neruda – Mark Eisner Ed., City Lights Books, San Francisco, 2005