திங்கள், 29 ஜூன், 2015

ஆழல்

                                                                                   
நீருக்குள்  அமிழ்வதும்
பெண்ணுக்குள் ஆழ்வதும் இரண்டல்ல;  ஒன்றே
அனுபவம் சாட்சி

எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ
அவ்வளவு அனிச்சையாகவே
அமிழும்போதும் ஆழும்போதும்
அடைத்துக் கொள்கின்றன கண்கள்

இருளின் ஒளியிலேயே பார்த்து
உணர்கிறோம்
நீரில் நீர்மையையும்
பெண்ணில் பெண்மையையும்

பார்ப்பதில் பாதியும்
விளங்காப் புதிர்
உணர்வதில் பாதியும்
தெளியா ஊகம்

ஊகித்த புதிருக்கும்
புதிரான  ஊகத்துக்கும்
இடையில் மூழ்கும்போது
நம்மை இழக்கிறோம்
நீரோடு நீராக
பெண்ணோடு பெண்ணாக

நீர்க் காதலின் விசையிழுப்பில்
வளைந்து நீள்கிறோம்
நீரோட்டக் கைகளைப் பற்றிக் கொள்கிறோம்
குமிழிகளில் அருந்துகிறோம்
சுழிகளில் சுழல்கிறோம்
வளைவுகளில் புரள்கிறோம்
சரிவுகளில் வழிகிறோம்
ஊற்றுகளில் பீறிடுகிறோம்
தலைகவிழ்ந்து ஒடிகிறோம்
ஊகிக்க முடியாப் புதிர்ப்புனலில்
சுற்றிச்சுற்றிச் சுழன்றுசுழன்று வெள்ளமாகிறோம்

எனினும் ஒருபோதாவது
நீர் மேனியின் நிஜப் பரப்பை
நிதானமாகப் பார்த்தோமா?
துல்லியமாய் உணர்ந்தோமா?

அடுத்த முறை ஆகட்டும்
நீரில் ஒளிகரையும் உயிர்க்கூத்தைக் காண
அடையாக் கண்களுடன் ஆழலாம்.

@

வியாழன், 25 ஜூன், 2015

இருண்ட காலத்தின் சாட்சி

இது  நெருக்கடி நிலைக்கால கட்டத்தின் முப்பதாம் ஆண்டு நிறைவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை. உயிர்மை ஜூலை 2005 யில் வெளியானது. பின்னர் ‘தனிமையின் வழி’ தொகுப்பிலும் சேர்க்கப்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகும் குடிமக்களை அச்சத்தின் கைதிகளாக வைத்திருக்க விரும்பும் அரசாங்கத்தின் கீழ் இருக்கிறோம் என்பது தவிர பெரிய ஜனநாயக மாற்றங்கள் நிகழ்ந்து விடவில்லை. இந்தக் கட்டுரை வெளிவந்த சில மாதங்களில் கட்டுரையில் சொல்லப்படும் ஈச்சரவாரியர் காலமானார்.
ல்லூரி நண்பரும் இலக்கியத் தோழருமான விஸ்வநாதனும் நானும் கோவையில் எங்கள் வீடிருந்த ராமநாதபுரம் பகுதியில் பிரதான சாலையை ஒட்டிய டீக்கடை முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.அது ஓர் ஆடிமாத முன்னிரவு என்பது இப்போதும் ஞாபகத்தில் தங்கியிருப்பதன் காரணம் அன்று எங்களைக் கடந்து போன ஊர்வலம்.மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஏந்தி நடந்த பெண்கள்.  அவர்களில் ஒருத்தி கல்லூரிக்குப் போகும் பேருத்தில் அன்றாடம் காணக் கிடைக்கிற சராசரி அழகி. எங்களை நெருங்கிய போது ஊர்வலப்பதுமையாக நேர்ந்த கூச்சத்தில் தலைகுனிந்து கொண்டே போனதும் சற்றுத் தாண்டியதும் நாணம் விலகாமல் திரும்பிப் பார்த்துமான காட்சி அந்த நாளை நினைவின் இடுக்கில் சொருகி வைத்திருக்கிறது.

எங்கள் இலக்கிய ஆர்வத்தின் ஊட்டச்சத்து அதுபோன்ற தெருவோர உரையாடல்களாக இருந்தன.மாலை நான்கோ ஐந்தோ மணிக்கு வீட்டில் தொடங்கும் பேச்சு படியிறங்கி நடந்து தெருவோரத்தில் டீக்கடை வாசல் களில் கால்கடுக்க நின்று தொடரும்.பொழுதைப் பற்றிய கவலையில்லா மல் பலநாட்களும் நள்ளிரவுவரை நீடிக்கும். சில நாட்களில் டீயைக் குடித்துப் பசியாற்றிக்கொண்டு  இலக்கியம் பேசியே பொழுதை விடிய வைத்திருக்கிறோம்.ஆர்வலர்களால்  வெகுவாகப் புகழப்படும் 'காசி' என்ற நெடுங்கதையில் இந்த விடியாத இரவுகள் பற்றி விஸ்வநாதன் (பாதசாரி) குறிப்பிட்டிருகிறார்.

அன்றைய பேச்சு மும்முரத்தில் சாலையில் கொஞ்சம் தள்ளியிருந்த காவல் நிலையத்தின் முன்னால் சலசலப்பும் இரைச்சலும் எழுந்து அடங்குவதைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் நின்றிருந்தோம். சம்பாஷணையின் ஒரு கட்டத்தில் போலீஸ்காரன் ஒருவன் குறுக்கிட்டு அய்யா அழைப்பதாக மிரட்டி அழைத்துப் போனான். காவல்நிலைய வாசலில் நின்றிருந்த ஆய்வாளர் நாங்கள் இருவரும் மணிக்கணக்காக நின்று என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்று விசாரித்தார்.

எங்கள் இலக்கிய சல்லாபத்தைப் பற்றிச் சொன்னோம்.அரை நம்பிக்கையும் அரை சந்தேகமுமாக எங்களை அளந்து பார்த்துவிட்டு இரண்டு மூன்று மணி நேரமாக நடு ரோட்டில் நின்று இலக்கியம் பேசுகிறவர்கள்தானே, இங்கேயே நில்லுங்கள். சொன்ன பிறகு போகலாம் என்று உத்தரவிட்டு விட்டுப் போனார். இரண்டு பேரும் விழித்துக்கொண்டு நின்றோம். சந்தேகத்துக்குரியவகையில் நடமாடிய சிலரையும்  பிடித்துவந்து நிறுத்தியிருந்தார்கள்.நிர்ப்பந்திக்கப்பட்ட மரியாதையும் செயற்கையான அமைதியும் சகல முகங்களிலும் அப்பியிருந்து. இரண்டு பேரும் பேசுவதற்கு  எதுவும் இல்லாதவர்களாக நின்றிருந்தோம். போலீஸ்காரர்கள் பூனையின் நடமாட்டமில்லாத வீட்டுக்குள்  எலிகளைப் போல உள்ளேயும் வெளியேயும்  துள்ளிக்கொண்டிருந்தார்கள். ஜீப்பிலேறிப் போன ஆய்வாளர் திரும்பி வரும் அறிகுறியே இல்லை. காரணமில்லாமல் அவமானப்பட்ட பயத்துடன் இருந்தேன்.

ஒருமணி நேரத்துக்கும் மேலாக நின்றிருப்போம். விஸ்வநாதன் என்னைத் தொட்டு சைகை செய்தார். இருவரும் நின்ற இடத்திலிருந்து நகர்ந்தோம். காவல் நிலைய வாசலிலிருந்து நிதானமாக விலகி  வேகமாக நடந்து சைக்கிளை நிறுத்தியிருந்த  கடையை அடைந்தோம். அவர் சைக்கிளைத் திறந்ததும் ஏறிமிதிக்கத் தொடங்கியதும் நான் அதன் கேரியரில் தாவி உட்கார்ந்ததும் சுற்றுவழிகளில் சைக்கிள் வேகமாகப் பாய்ந்ததும் பாதுகாப்பான இருட்டுச் சந்தில் நான் இறங்கிக்கொண்டதும் ஒரே நொடியில் சம்பவித்தன.

எங்கள் இலக்கிய ஆவேசத்திலும் பேச்சின் லாகிரியிலும் அது நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்ட நாட்களில் ஒன்று என்பதை மறந்து போயிருந்தோம்.

அன்றைய பயத்தை அதன் பின்னர் வெவ்வேறு சாயல்களில் உணர்ந்திருக் கிறேன். இலக்கியக் கூட்டங்களில் வந்தமரும் புலனாய்வுத் துறைக் காவலர் களின் சந்தேகக் கண்களிலிருந்தும் பத்திரிகைப் பக்கங்களின் செய்திகளிருந்தும். அப்போது மொழியைச் செம்மைப்படுத்திக் கொள்வதற் காக வாங்கி வாசித்த மலையாள நாளிதழ்களிலிருந்து கவனத்தில் பதிந்த பெயர் - ராஜன். நக்சலைட் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் என்பது மட்டுமே அன்று தெரிந்துகொண்ட செய்தி. அந்தச் செய்தியின் பின்னணியிலிருந்த தகப்பனின் ஓயாத குமுறல் இன்றும் ஒரு காலகட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கிறது.@

1976 மார்ச் ஒன்றாம் தேதி. கோழிக்கோடு பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவனான ராஜன் கைது செய்யப்பட்டான்.இந்தக் கைது நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னர் காயண்ண என்ற ஊரிலிருந்த காவல் நிலையத்தை நக்சலைட் குழுவொன்று முற்றுகையிட்டு அங்கிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்திருந்தது. அந்தத் துப்பாக்கியை மீட்பதற்காக போலீஸ் நடத்திய வேட்டையின் முதல் இரை ராஜன்.சம்பவத்தில் பங்கேற்ற வேறு ஒரு ராஜனையே போலீஸ் தேடிக்கொண்டிருந்தது.
அரைகுறையான தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குருட்டுத்தனமான விசாரணை ஈச்சரவாரியர் என்ற ஹிந்திப் பேராசிரியரின் ஒரே மகனான ராஜனை குற்றவாளியாக்கியது.

இடதுசாரி ஆதரவுள்ள மாணவர் அமைப்புடன் தொடர்புகொண்டிருந்ததைத் தவிர பிற அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ராஜனுக்குப் பங்கில்லை. அவனுடைய ஆர்வம் கலைத்துறைகள் சார்ந்தவை.கல்லூரியில் பாடகனாக வும் நடிகனாகவும் அவனுக்குப் பிரசித்தியும் இருந்திருக்கிறது. கைது செய்யப்படுவதற்கு முன்தினம் கூட கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள ஃபெரோக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று கலைவிழாவில்  கலந்து கொண்டிருக்கிறான். விழா முடிந்து மறுநாள் காலை சகமாணவர்களுடன் கல்லூரி விடுதி முன்னால் பஸ் இறங்கியபோது ராஜன் கைதுசெய்யப் பட்டான். அவன் போலீஸ் ஜீப்பில் ஏற்றப்படுவதையும் கொண்டு செல்லப் படுவதையும் பார்த்த சாட்சிகளாகப் பலர் இருந்தனர். அதன் பின்னர் ராஜனுக்கு என்னநேர்ந்தது என்பதற்கு சாட்சிகளில்லை. காவல்துறையினரைத் தவிர.

மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஈச்சரவாரியர் நொறுங்கிப் போனார். அந்தக் குடும்பம் அதிர்ச்சியடைந்தது. மகனைத் தேடி தகப்பன் அலைய ஆரம்பித்தார். எல்லாக் கதவுகளையும் தட்டினார்.மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள்,உள்துறை அமைச்சர், மாநில முதலமைச்சர் என்று எல்லாரிடமும் மனுக் கொடுத்து இறைஞ்சினார் பயனில்லை.குடிமக்களின் உரிமைப் பிரச்சனைகள நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தடைசெய்யப் பட்டிருந்த நெருக்கடியான நாட்கள் அவை.

கோழிக்கோடு அருகே கக்கயம் விருந்தினர் மாளிகையில் காவல் துறையின் தற்காலிக முகாம் இயங்கிக்கொண்டிருந்தது.ராஜன் கொண்டு செல்லப்பட்டதும் அங்குதான்.முதலில் அடித்து நொறுக்கப்பட்டான். பின்னர் காயண்ண போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எடுத்த துப்பாக்கி எங்கேயென்று விசாரிக்கப்பட்டான். விசாரணை என்பது இரண்டு மிதிக்கு ஒரு கேள்வி. முதல் தாக்குதலிலேயே ராஜன் துவண்டு போயிருக்கிறான்.நிஜ வாழ்க்கையில் துப்பாக்கி என்ற சாதனத்தைப் பார்த்திராத அந்த இளைஞனி டமிருந்து துப்புத்துலக்க தொடர்ந்து வதைத்திருக்கிறது போலீஸ்.

அவனை பெஞ்சில் கிடத்தி கைகால்களைக் கட்டி தொடைப்பகுதியில் உலக்கையால் அழுத்தமாக உருட்டியிருக்கிறார்கள். (நெருக்கடி நிலைக் காலத்தில் காவல்துறை கண்டுபிடித்த புதிய சித்திரவதை இந்த உருட்டல். தொடை எலும்புகளிலிருந்து சதை பிரிந்துகூழாகும்வரை உருட்டல் நடக்கும். காயமில்லாமல் உடலுறுப்பைச் சிதைக்கும் வதைமுறை).
வலி பொறுக்காமல் அலறியவன் வாயில் துணியைத் திணித்தார்கள். சித்திரவதை தாளாத ராஜன் துப்பாக்கியை எடுத்துத் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறான். உருட்டல் நின்றது. காவல்துறை இயக்குநரான ஜெயராம் படிக்கல்லின் முன்னிலையில் விசாரித்தபோது துப்பாக்கி பற்றித் தனக்குத் தெரியாது என்றும் வேதனையைச் சகிக்க முடியாமல் அப்படிச் சொன்னதாகவும் ராஜன் தெரிவித்தான். ராஜனை விசாரிக்க அமைக்கப் பட்ட படையிலிருந்த புலிக்கோடன் நாராயணன் என்ற துணை ஆய்வாளருக்கு அந்த பதில் வெறியேற்றியது.

கனத்த பூட்ஸணிந்த காலால் ராஜனை ஓங்கி மிதித்தார்.உயிர் பிளக்கும் ஓலத்துடன் மல்லாந்து விழுந்த ராஜன் கைகால்கள் துடிக்க நெளிந்தான். பின்னர் அந்த உடலில் அசைவில்லை. முதலில் திகைத்து நின்ற காவலர்கள் சுதாரித்துக் கொண்டனர். அசைவற்ற உடலை சாக்கில் கட்டி ஜீப்பில் ஏற்றினார்கள். முகாமைவிட்டு வெளியே பாய்ந்த வாகனம் திரும்பி வந்தபோது கழுவிச் சுத்தமாக்கப்பட்டிருந்தது.

ஏதோ காட்டுப்பகுதியில் உடலை எரித்துச் சாம்பலாக்கியிருந்தார்கள். எலும்புகள் மிஞ்சினால் தடயமாகும் என்பதால் சர்க்கரையுடன் சேர்த்து எரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

கைது செய்யப்பட்ட மகனைத் தேடி கக்கயம் முகாமுக்கு வந்த ஈச்சர வாரியர் உள்ளே அனுமதிக்கப்படாமல் திரும்பினார்.அருமையான பிள்ளை என்ன ஆனான் என்று தெரிந்துகொள்ள முடியாமல் அலைக்கழிந்தார். அதிகார பீடங்களிலிருந்த பலரும் அந்தப் பேராசிரியருக்கு முன்னரே பரிச்சய முள்ளவர்கள்.சிலர் அவரால் உதவி பெற்றவர்கள் இடதுசாரிக் கட்சிகளின் அபிமானியான ஈச்சர வாரியர் அப்போது மாநில முதல்வராக இருந்த சி.அச்சுதமேனோனை இக்கட்டான சூழ்நிலையில் முன்பு காப்பாற்றியவரும் கூட.ஆனால் அந்த இருண்ட நாட்களில் வாரியருக்கு அவரும் உதவவில்லை. பிள்ளையைப் பறிகொடுத்த அந்த அப்பாவித் தந்தை தனியொருவனாக அலைந்து தவித்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே மனநிலை பிசகியிருந்த அவரது மனைவியிடம் மகன் இல்லாமற் போனதைச் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். எந்த நேரத்திலும் மகன் ராஜன் வந்துவிடுவான் என்று காத்திருந்த அந்த பைத்தியக்காரத் தாய் காத்திருப்பு முடியாமலே இறந்தும் போனார்.

நெருக்கடி நிலை தளர்த்தப்படும் நாள்வரை ஈச்சர வாரியர் காத்திருந்தார். பின்னர் சட்டரீதியான போராட்டத்தில் இறங்கினார்.உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்தார். அன்றைய உள்துறை அமைச்சர் கே.கருணாகரன், போலீஸ் ஐ.ஜி.,போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோர் பிரதிவாதிகள். கல்லூரி விடுதி வாசலில் ராஜன் கைது செய்யப்பட்டதையும் கக்கயம் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டதையும் பார்த்த எட்டு சாட்சிகள் இருந்தனர். முகாமில் ராஜன் சித்திரவதை செய்யப்பட்டதை உறுதிப் படுத்தும் சாட்சிகளும் இருந்தனர். அவர்களில் சிலர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

ஈச்சர வாரியரின் நியாயயுத்தம் உள்துறை அமைச்சராக இருந்த கருணாகரனின் பொய்யால்  தோல்வியடைந்தது. ராஜன் கைது செய்யப் படவில்லை என்று சட்ட மன்றத்தில் கூசாமல் சொல்லியிருந்தார் கருணாகரன். கைது செய்யப்பட்டதற்கான பதிவுகள் அழிக்கப் பட்டன. மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்த்து சாட்சி சொல்ல முன்வந்த போலீஸ்காரர்களும் ஏமாற்றினர்.வழக்குத் தொடர்ந்து நடந்தது. இறுதியாக தார்மீகவுணர்வு கொண்ட சில நீதிபதிகளால் கருணாகரப் பொய் கலைந்தது. ராஜன் சட்டவிரோதமான முறையில் போலீஸ் காவலில் வைக்கப் பட்டிருந்ததும் சித்திரவதைசெய்து கொல்லப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தன. அப்போது முதல்வராகப் பதவியேற்றிருந்த கருணாகரன் அதிகாரத்துக்கு வந்த  ஒரே மாதத்தில் பதவி விலக நேர்ந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலருக்குப் பதவி பறிபோனது. ஆனால் அப்போதும் ஒரு கேள்வி மட்டும் பதில் கிடைக்காமல் நின்றது. இன்றும் நின்று கொண்டிருக்கிறது. 'ராஜனுக்கு என்ன ஆயிற்று?'
ச்சரவாரியருக்கு இப்போது எண்பத்தி நான்கு வயது. முதுமை அவரது உடலைச் சுருக்கியிருக்கிறது. ஒரு தேசத்தின் அதிகாரப் பேய்க் கூத்தில் மிதித்து அழிக்கப்பட்ட ஒற்றை மகனின் புகைப்படம் மாட்டிய சுவரையொட்டிப் போடப்பட்ட சாய்வு நாற்காலியில் ஒடுங்கி நினைவுகளில் ஆழ்ந்து கிடக்கிறார். அம்மாவுக்கும் இரு சகோதரிகளுக்கும் பாடிக்காட்டிய, அப்பா கேட்கட்டும் என்று ஒலிநாடாவில் பதிந்து வைத்த ராஜனின் பாட்டைக் அவ்வப்போது கேட்கிறார்.

திருச்சூர் திருவம்பாடி கோவிலுக்கருகில் மூந்நுகுற்றியிலுள்ள வீட்டில் ஈச்சர வாரியரைச் சந்தித்தேன்.பகலுணவு நேரம்.உணவருந்திவிட்டு கழிப்பறைக்குப் போயிருந்தார்.அவரது மகள் ரமாதேவி இருக்கை காட்டி உட்காரச் சொல்லி விட்டு உள் அறைக்குப்போனார். கழிப்பறைக் கதவைத் திறந்து வந்தார் முதியவர்.கழிப்பறையிலிருந்து நான்கடி தள்ளியிருக்கும் சாய்வு நாற்காலியை அடையத் துணை தேவைப்படுகிற இயலாமை. அவரது மெலிந்த கைகளைப் பற்றி நானும் எனது சக ஊழியர் ஜெய்சனும் நாற்காலியில் அமர ஒத்தாசை செய்தோம். இந்தக் கிழவரா ஓர் இருண்ட காலத்தில் தீப்பிழம்பாகக் கனன்றவர்?

உடலில்தான் தள்ளாமையே தவிர உள்ளுக்குள் நெருப்பு அணையாம லிருக்கிறது என்பது அவர் பேசும்போது புரிந்தது.

''எந்தத் தகப்பனுக்கும் மகன் செத்துப்போனால் துக்கமாகத்தான் இருக்கும். கொஞ்ச காலம்போனால் அந்த வேதனையைச் சகித்துக்கொள்ளப் பழகிவிடும். ஆனால்,என்னுடைய நிலை அதுவல்ல. என்னுடைய மகனுக்கு என்ன நடந்தது என்று என்னால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. செத்துப் போனான் என்பது உண்மை. எப்படி என்று தெரிய வேண்டாமா? என்றைக்காவது தெரிய வேண்டாமா? சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.ஆனால் சொல்ல மறுக்கி றார்கள். ஏன்? அதைத் தெரிந்துகொள்வதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள்''

நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முப்பது ஆண்டுகள் நிறைவு. ஈச்சர வாரியரின் தேடலுக்கும் அதே வயது.கடந்த முப்பதாண்டுகளாக ஓயாமல் போராடிக் கொண்டிருக்கிறார்.

ராஜன் இல்லை என்று அறிந்த பின்னர் அவரது போராட்டத்துக்கு வேறு உருவம் வாய்த்திருக்கிறது. அடிப்படை மனித உரிமைகளுக்கான செயல் பாடுகளில் தன்னை சமர்ப்பித்திருக்கிறார்.ராஜன் வழக்குக்காக சாதாரண மக்கள் வழங்கிய நிதியில் வழக்குச் செலவுகள் போக எஞ்சிய தொகையை நெருக்கடிநிலைக் கொடுமைக்கு ஆளானவர்களுக்கு வழங்கியிருக்கிறார். சிவில் வழக்கில் கிடைத்த இழப்பீட்டுத் தொகையில் ராஜன் நினைவாக எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் ஒரு பிரத்தியேக வார்டு. 'ஒரு தகப்பனின் நினைவுக்குறிப்புகள்' என்ற நூலின் உரிமைத்தொகையை மனித உரிமை அமைப்புக்கே அளித்திருக்கிறார்.(இந்தப் புத்தகத்துக்கு  கேரள சாகித்திய அக்காதெமி ஆண்டின் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலுக்கான பரிசையளித்திருக்கிறது).

''நெருக்கடி நிலையிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் ஓர் அரசாங்கம் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள என்ன வேண்டுமானலும் செய்யும். பிரஜைகளை மிதித்துக் கொன்றாலும் கேட்க ஆளில்லை என்ற நிலைமையை எமர்ஜென்சி உண்டுபண்ணியது. கொஞ்சமாவது ஜனநாயக உணர்வு இருக்கிறவர்கள் நியாயத்துக்காகப் போராடியே ஆகவேண்டும்  என்பதுதான் என்னுடைய வாழ்க்கைப் பாடம்''

ஓசையெழ மூச்சுவிட்டுக்கொண்டு அவர் சொன்னபோது அனல் வீசுவது போலத் தோன்றியது. சிறிது நேரம் பேசாமலிருந்தார்.பிறகு ''இவ்வளவு காலத்துக்குப் பிறகாவது நெருக்கடி நிலைக்காலக் கொடுமைகளுக்காக அந்தக் கட்சியோ அதைச் சேர்ந்தவர்களோ பொது மக்களிடம் வருத்தம் தெரிவிததிருக்கிறார்களா?  பச்சாதாபப்பட்டிருக்கிறார்களா?'' என்று கேட்டார். அதிகார அரசியலில் அது தேவையில்லாத உணர்வு என்று அவருக்கும் தெரியும்.

அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக நீண்ட போராட்டம் நடத்தியவர் என்ற நிலையில் இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஈச்சர வாரியார் கண்களை மூடினார்.மூடிய  இமைகளுக்குள் விழிக்கோளங்கள் யோசனை யுடன் உருண்டுகொண்டிருந்தன.அதன் மெல்லிய அலையதிர்வுடன் சொன்னார். 'துக்கம் மட்டுந்தான் மிச்சம். ஆட்சிபீடமும் அதிலிருப்பவர் களும் ஒன்றுசேர்ந்து எதிராக நின்றபோதும் உன்மையைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.ஹேபியஸ் கார்ப்பஸ் கொடுத்தேன். சொந்த துக்கங் களையும் குடும்பப் பொறுப்புகளையும் மறந்து ஓடியோடி ஓய்ந்து போனேன். வருத்தம் தரக்கூடிய கதைகளை மட்டும் கேட்டேன். விசாரணை என்கிற பெயரில் நாடகம் நடத்தி என்னைத் தோற்கடித்து விட்டார்கள்.தோற்றுப்போய் நிற்கிறேன்.'

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு யாரெல்லாம் நெருக்கடி நிலையை எதிர்த்தார்களோ, யாரெல்லாம் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டார் களோ அவர்களெல்லாம் முப்பது ஆண்டுகளுக்குப் பின்பு  நெருக்கடி நிலைக்கும் மனித உரிமை பறிப்புக்கும் காரணமாக  எது இருந்ததோ அந்த அமைப்புடன் உறவுகொள்ளத் தயங்காமலிருக்கிறார்கள். ஒருவேளை  உண்மை என்பது தோல்வியின் உடன்பிறப்பாக இருக்கக்கூடும்.

@

(மீள் பிரசுரம்) 

ஈச்சர வாரியர் தனது போராட்டத்தைச் சொல்லும் வகையில் எழுதிய ‘ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்’ நூல் அநேகமாக எல்லா இந்திய மொழிகளிலும் ஐந்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது. தமிழில் வெளியாகியிருக்கும் நூலின் மொழிபெயர்ப்பாளர் குளச்சல் யூசுப்.
செவ்வாய், 23 ஜூன், 2015

திரௌபதி

மேடையில்
திரௌபதி வஸ்திராபகரணக் கூத்து
நடந்து கொண்டிருக்கிறது
சபைக்கு  வரக்கோரும்  சேவகனிடம்
திரௌபதி
சீறிச் சினந்து கொண்டிருக்கிறாள்

கூத்து மேடைக்கு இப்பால்
டீக்கடைப் பெஞ்சில்
அடுத்த காட்சியில் நுழையும் முஸ்தீபில்
பீமனும் துச்சாதனனும்
ஊதி ஊதி அவசரமாய்த்
தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்

இருவருக்குமிடையில் கிடக்கும்
கதாயுதங்கள்
பகைக் காற்றில் உருண்டு உருண்டு
ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்டிருக்கின்றன.

ஆயுதங்கள்
முட்டுவதையும் விலகுவதையும்
மீண்டும் நெருங்கி மோதுவதையும்  பிரிவதையும்
பங்காளிகள்
வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் கைகளில் ஏந்தியிருக்கும்
இருநூறு மி.லி.க் கண்ணாடித் தம்ளர்
வற்றாமல் தேநீர் சுரக்கும் அட்சய கலசமாகட்டும்  என்றும்
அவர்கள் குடிக்கும் தேநீர்
கொஞ்சமும் சூடு தணியாமலே இருக்கட்டும்  என்றும்
நான்
பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன், திரௌபதீ
பதற்றத்துடன்.


 படம்: பீட்டர் புரூக்கின் மகாபாரதத்திலிருந்து. திரௌபதியாக நடித்தவர் மல்லிகா சாராபாய்

திங்கள், 1 ஜூன், 2015

ஒரு புகைப்படக் குறிப்பு

தற்செயல் ஆச்சரியம். பழைய சில புகைப்படங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நடுவே ஃபேஸ்புக்கின் பக்கங்களை மேய்ந்தபோது கிரிக்கெட் பற்றிய ஒரு பதிவு கண்ணில் பட்டது. பகிர்ந்திருந்தவர் வயலின் இசை மேதை டாக்டர். எல். சுப்ரமணியம். என் சேகரிப்பில் இருந்த பழைய படங்களைப் பார்த்து இழந்த கணங்களை நினைவு கூர்ந்து கொண்டிருந்தபோது எல். சுப்ரமணியத்தின்பதிவும் காணக் கிடைத்தது வியப்பளித்தது. ஏனெனில் நான் பார்த்துக் கொண்டிருந்த படங்களில் ஒன்று இங்கே இருப்பது. 2004 அல்லது 2005 கால அளவில் எடுக்கப்பட்டது. அவ்வளவு பெரிய மேதை கால்கடுக்க நின்றபடியே பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அது அரை மணி நேர சங்கீத சொர்க்கம்.
டாக்டர். எல்.சுப்ரமணியத்துடன் ஓர் அற்புத கணம்