செவ்வாய், 23 ஜூன், 2015

திரௌபதி

மேடையில்
திரௌபதி வஸ்திராபகரணக் கூத்து
நடந்து கொண்டிருக்கிறது
சபைக்கு  வரக்கோரும்  சேவகனிடம்
திரௌபதி
சீறிச் சினந்து கொண்டிருக்கிறாள்

கூத்து மேடைக்கு இப்பால்
டீக்கடைப் பெஞ்சில்
அடுத்த காட்சியில் நுழையும் முஸ்தீபில்
பீமனும் துச்சாதனனும்
ஊதி ஊதி அவசரமாய்த்
தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்

இருவருக்குமிடையில் கிடக்கும்
கதாயுதங்கள்
பகைக் காற்றில் உருண்டு உருண்டு
ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்டிருக்கின்றன.

ஆயுதங்கள்
முட்டுவதையும் விலகுவதையும்
மீண்டும் நெருங்கி மோதுவதையும்  பிரிவதையும்
பங்காளிகள்
வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் கைகளில் ஏந்தியிருக்கும்
இருநூறு மி.லி.க் கண்ணாடித் தம்ளர்
வற்றாமல் தேநீர் சுரக்கும் அட்சய கலசமாகட்டும்  என்றும்
அவர்கள் குடிக்கும் தேநீர்
கொஞ்சமும் சூடு தணியாமலே இருக்கட்டும்  என்றும்
நான்
பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன், திரௌபதீ
பதற்றத்துடன்.


 படம்: பீட்டர் புரூக்கின் மகாபாரதத்திலிருந்து. திரௌபதியாக நடித்தவர் மல்லிகா சாராபாய்

3 கருத்துகள்:

  1. நண்பன் இசை உங்களை இந்த அளவுக்கு பாதித்திருக்கக்கூடாது என்று உரிமையோடு வருந்துகிறேன் சார்.(என் போன்றவர்களிடம் அவன் தாக்கம் இருக்குமேயானால் ஒருவகையில் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முத்துவேல். இசையை நான் பாதித்திருக்குக்போது அவர் என்னைப் பாதிக்கக் கூடாதா என்ன? அப்புறம் நானும் உங்களைப் போன்றவன் தானே!

      நீக்கு